நம் குரல்

தெரு விளக்குஉடலைத் தெருவில் கிடத்திப் பார்ப்பதில் நிபுணன் அவன். எரியும் தெருக்கம்ப விளக்காக்கி அவன் புறப்பட்டுச்சென்றான் வழிநெடுக இருள் பரவ. ஆகவே அவனுடல் தந்த இன்பங்களையும் தொலைக்கமுடியாது அதன் நாவுகள் அந்த இன்பத்திற்கான தாகங்களால் நீள்கின்றன துடிக்கின்றன அலைகின்றன. நல்லவேளை பாறையாக இறுகிய சொற்கள் சில என்னிடமுமுண்டு. அவற்றின் வழியாக வெடித்துக்கொள்கிறேன். என் கண்களின் கிணறுகளில் சுடரும் நிலவை எங்கெங்கும் விரவிநின்ற இருளால் வளரச்செய்த இரவே என் தூக்கத்தால் ஒருபோதும் உன்னை இழக்கமாட்டேன். காதலை ஒரு தீராத நோய்க்கு இழுத்துச் செல்லும் திட்டத்தில் ஆழ்ந்திருக்கிறான் எனக் கண்டதும் என் இமைகள் சேராததாகிவிட்டன. என் உறுப்புகளின் வளர்ச்சியெல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. பொழுதுகளும் ஒன்றோடொன்று கலவாமல் தனித்த கதவுகளுடன் திறந்தன. நிந்திப்பது என்றால் எந்தக் குற்றத்திலிருந்து தொடர்வது யாருடையது முதலின் என்பதும் காலத்தின் கைப்பிடியிலிருந்து மணலைப் போல நழுவி மறைகிறது துல்லியமாக அறியமுடியாமல். பழுத்து வீழ்ந்த பின்னும் இலைகளின் உரத்தால் கால் ஊன்றி நிற்கும் மரத்தைப் போல தினவுற்று இருக்கும் பழையகாலங்களின் நிகழ்வுகள். அடர்ந்து செறிந்த மரங்களால் ஆன காடுபோல தெளிவற்ற வெளி அக்காலம். தெருவிளக்கென எரிந்து கொண்டிருக்கிறது நிலவு பகல் விரிந்த பின்னும்.
குட்டி ரேவதி

நன்றி: எதிர்முனை


கருத்துகள் இல்லை: