நம் குரல்

கூழாங்கல் கவிதைகள் - 2
மீனுக்குள் கடல்


என் மனக்குரங்குக்கு

உடைகள் தைத்தே கை சலித்தோய்ந்தது

என் யாக்கையின் காலம்.

நேற்றிரவு வரை

மடங்காக் கத்தி

குரங்கின் கையில்

ஆப்பிள் நறுக்க என்றோ ஒரு

ஆதாம் கொடுத்தது.

மீனுக்குள் கடலின் அலை ஓய்ந்த மோன இரவு

ஏதோ விதமாய் ஓர் அசதியில்

கத்தி கை நழுவ குரங்கது

மெய் புதைத்துத் தூங்குகிறது

ஒரு விழிப்பின் தருணம் திடுமென

குரங்கின் கனவில் புகுந்துவிட நான்

கண்டேன் ஒருத்தியை

திரை இன்றி

இலை தழை கூட மேலின்றி நிறை

நிர்வாணத்தில் ஒளிரக் கண்டேன்

அவளே என் அம்மாவும் அவளே என்

தங்கையும் அவளே என் மனைவியும் அவளே

என் குழந்தையும் அவளே…

1987 – ல் வெளிவந்த ”மீனுக்குள்” கடல் என்ற பாதசாரியின் கவிதைத்தொகுப்பில் இடம்பெற்ற அத்தலைப்பிலே ஆன கவிதை இது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ’தமிழினி’ கலை இதழில் எழுத வந்தார், ’மன நிழல்’ எனும் தொடர்வழியாக. மேற்கண்ட கவிதையில் கண்ட அதே நயமும் தன்மையும் மாறாமல் இன்றும் தன் எழுத்தின் வன்மை சிறிதும் குறையாமல் எழுதுகிறார்.


என்னைப் பொறுத்தவரை, எவ்வளவு தான் பிற படைப்பாளிகளின் ஆக்கங்களை நாம் விரும்பி வாசித்தாலும் அவற்றின் மொழியோ கருத்தோ நம்மிடம் ஏற்படுத்தும் தாக்கத்தை விட, அதில் பொதிந்து கிடக்கும் இலைமறை காய்மறையான அறத்தெளிவுகள் தாம் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், நம் நாளங்களில் தங்கியும் போகின்றன. இத்தகைய திறனில் வல்லவர் பாதசாரி எனும் என் நம்பிக்கை இன்று இன்னும் கூடுதலாய் ஆகியிருக்கிறது.‘அறம்’ என்பதை எப்படி சித்திரப்படுத்துவது? சமகால எல்லா நவீன எழுத்தாளர்களின் நோக்கங்களும் பாதைகளும் சிதறுண்டு இருக்கும் போது பாதசாரி மட்டும் அதில் அதே கவனத்துடனும் பேணுதலுடனும் இருக்கிறார் என்று நம்புகிறேன்.இதை வேறு எந்த எழுத்தாளரிடமும் என்னால் கற்றுக்கொள்ளமுடிந்ததில்லை. அறத்திற்கும் எழுத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம். வேறு தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் எழுத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் இடையே உள்ள ஒரு முக்கியமான வேறுபாடு இது: உற்பத்தி உறவு. எழுத்துப் பணியில் ஈடுபடுபவன் எங்கேயோ அதன் நியாயத்தையும் தன்னிடம் வளர்த்துக் காட்டவேண்டியிருக்கிறது.


அறம் பாராட்டாத எழுத்துகள் காலத்தின் முன்னும், அநீதிகளின் முன்னும் உருத்தெரியாது போகின்றன. ஆனால் அந்த அறத்தைப் பேணும் வழிகளைக் கற்றுக்கொள்ள, கற்றுக்கொடுக்க பாதசாரியின் எழுத்து முயல்வதை ‘மனநிழலில்’ உணரலாம். (தமிழினி இதழில் ‘பாதசாரி’ எழுத்தைத் தவிர வேறெதைப்படிக்கும் போதும் பேராசிரியர்களின் போதனையை வாசிப்பது போன்று தோன்றும்.)ஆண்மை – பெண்மை என்ற பாலின பேதங்களின் முட்கள் இவரிடம் மீசையாவதில்லை. அதை ஓயாத தன் அறச்சீற்றத்தாலும் புதிய புதிய சொற்கோர்வைகளாலும் வென்றெடுத்துக் கொண்டே வருகிறார். நாம் காணத்தவறிய நெறிகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அதற்கான நிகழ்வுகளைப் பொருத்தமான சொற்களால் விவரிக்கிறார்.இரு பாலினத்திற்குமான பொதுவான நியாயங்களை ஊடுருவிப் பார்க்கும் கண்களையும் தெளிவுகளையும் இவர் தனக்குப் பழக்கிக் கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது.’மீனுக்குள் கடல்’ கவிதையில் கத்தி நழுவும் அந்தக் கணம் எனக்கு மிகவும் பிடித்தமான தருணம்.
குட்டி ரேவதி

3 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

கவிதையுடன் உங்கள் கருத்துப் பதிவும் சிறப்பாக இருந்தது... வாழ்த்துக்கள்

குட்டி ரேவதி சொன்னது…

நன்றி, சரவணனன்!


சமயம் வாய்க்கும்பொழுதெல்லாம் இன்னும் நிறைய கவிதைகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.

தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

Shubashree சொன்னது…

குட்டி ரேவதி - நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.