நம் குரல்

ஒரு பெண் ஆணுக்குத் தன் எழுத்தை விற்கலாமா?



எழுத்தின் மீது அசுரத்தனமான நம்பிக்கைக் கொண்டவள் நான். அதற்காக, அதை முழுதும் தனதேயென உரிமை கொள்ளும் சுயநலம் எனக்கு அவசியம் இல்லை. எவரும் எழுத வரவேண்டும் என்பதும் அவ்வெழுத்துகளுக்கு மத்தியில் அறம் சார்ந்த பாகுபாட்டினால் முன்மொழியப்படும் எழுத்தும் மொழியும் சமூக மாற்றத்திற்கு உதவும் என்பதும் அடிப்படையான என் நம்பிக்கைகள். பல வருடங்களுக்குப் பின்னும் எனது இந்நம்பிக்கைகள் மாறாதவையாக இருக்கின்றன.



சமீபத்தில் எனக்குத் தெரியவந்தது இது. என்னை மிகவும் வேதனைக்கும் கவலைக்கும் உள்ளாக்கியது. அந்தப் பெண் எழுத்தாளரை சிலவருடங்களாக எனக்குத் தெரியும். மொழி ஆளுமையும் அழகியலும் மிக்க நிறைய படைப்புகளைத் தொடர்ந்து அளிப்பவர். புத்துணர்ச்சி மிக்க நவீன இலக்கிய உரைநடையில் அவரைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு எழுத்தின் மீது தீவிரமான முனைப்பும் பெண்ணியச் சிந்தனைகளில் தெளிவும் மிக்கவர். இத்தகைய படைப்பாளி, இன்னோர் ஆண் எழுத்தாளருக்கு படைப்புகள் எழுதித் தருவதாகவும், அப்படி எழுதப்படும் படைப்புகள் ஆண் எழுத்தாளரின் பெயரால் அடையாளம் பெறுவதாகவும் அங்கீகாரம் பெறுவதாகவும் தெரிய வந்தது.


இது யாருக்கு நட்டம், தோழியரே? ஓர் அரங்கில் குழுமியிருக்கும் முன்னூறுக்கும் மேலான மாணவியரிடையே, எத்தனை பேரின் தாய்மார்கள் பள்ளி சென்று படித்திருக்கிறார்கள் என்று கேள்வியெழுப்பிய போது, அதில் ஆறுதலுக்குக் கூட ஒருவரும் கை உயர்த்தவில்லை. அத்தகைய தாய்மார்களுக்கெல்லாம் கிடைக்காத ஒரு வாய்ப்பைத் தானே, நாம் மொழியாகவும் எழுத்தாகவும் எட்டியிருக்கிறோம். இந்நிலையில் ஒரு பெண் ஏன் தன் எழுத்தை இன்னொருவருக்கு விற்கவேண்டும்?


உடலை பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்தும் பெண்களுக்குச் சாதகமான நியாயங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், ஒரு பெண் எதன் பொருட்டென்றாலும் தன் எழுத்தை இன்னொருவருக்கு வழங்குவதை கொடுமையானதொரு சமூக அவலமாகப் பார்க்கிறேன். இந்தியா போன்றதொரு நாட்டில் ஒரு பெண்ணுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைப்பதே அரிது. அதிலும் அத்தகைய கல்வியை வெறுமனே பொருளீட்டவும், திருமணம் - குடும்பம் மதம் போன்ற பெண்ணை ஒடுக்கும் நிறுவனங்களைக் கட்டியமைக்கவும் தன்னால் இயன்றவரை உழைத்துப் பங்களிப்பு செய்யும் மற்ற பெண்களுக்கு மத்தியில் ஒரு பெண், ‘எழுத்துஎன்பதை தனக்கேயானதொரு சமூகச் செயல்பாடாக ஏற்பது என்பதை மிக முக்கியமான சமூக, அரசியல், பண்பாட்டு நிகழ்வாக நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இந்நிலையில் ஒரு பெண் தன் எழுத்தை விற்பது என்பதை எவ்வாறு நாம் நியாயப்படுத்துவது?


காலங்காலமாக, தம் அறிவை, அறிவு முதலீட்டை ஆண்களுக்காக ஒத்திவைத்த, பொத்திவைத்த சமூகத்தில் பெண்கள் தங்கள் எழுத்து வழியாக அறிவாக்கப் பணியில் ஈடுபடுவது என்பது ஒரு புதிய சமூக எழுச்சி என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் எவருக்கும் இருக்க முடியாது. ஓர் ஆண் எழுத்தாளர் தன் அதிகாரத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக எழுத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார் என்றால், பெண் எழுத்தாளர் அந்த அதிகார ஏற்றத் தாழ்வுகளை நொறுக்குவதற்காகப் பயன்படுத்துவது அவசியம். தான் பெறும் அதிகாரத்தில் அந்தப் பெண் எழுத்தாளருக்கும் பகிர்ந்தளிக்கிறேன் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளும் பெண் படைப்பாளியின் கையில் எழுத்து என்பது அவருக்கே கூட எந்தக் களிப்பையும் விடுதலை உணர்வையும் ஈட்டித் தரப்போவதில்லை என்பதை நான் திடமாகப் பதிவுசெய்து கொள்கிறேன். இன்னொருவருக்கு விற்கும் படைப்பில் தன் உண்மையான உணர்ச்சிகளையும் நியாயங்களையும் பொதிந்து கொடுத்தால் அவை யாரின் நியாயங்களாக அர்த்தம் பெறும் தோழியரே?


தர்மசங்கடமாக இருக்கிறது, எனக்கு. இனி அந்தத் தோழியின் படைப்பில், நான் மேற்குறிப்பிட்ட ஆளுமையையும் அழகையும் ரசிக்க முடியாது. அதிகாரப் பகிர்விற்காக சமரசம் செய்து கொண்ட பெண்ணின் எழுத்தில் எந்தவொரு பெண்ணுக்குமான, ஏன் அவருக்கேயான உலகைக் கூட என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. அது அவரால் குறுக்கப்பட்ட, சுருட்டப்பட்ட ஓர் உலகாகவே மீண்டும் மீண்டும் சுழன்று வரும். பெண்ணின் கையில் விடுதலையின் குறியீடாய் துலங்கும் எழுத்தை, அதிகாரச்சுகத்தைக் காட்டி மடக்கும் ஓர் ஆணுக்கு விற்கலாமா, நீங்களே சொல்லுங்கள்?



குட்டி ரேவதி

6 கருத்துகள்:

ANKITHA VARMA சொன்னது…

பெற்ற பிள்ளையை பணத்துக்காக விற்கலாமா .. அப்படித்தான் இதுவும்.....

Unknown சொன்னது…

அந்த ஆண், பெண் எழுத்தாளர் யார் என்று சொல்லி இருந்தால தெளிவா புரிந்திருக்கும்...

a.maleek சொன்னது…

இதுவரையில் கேள்விப்படாத வியாபாரம்

தமிழ்நதி சொன்னது…

அன்புள்ள ரேவதி,

உங்கள் கருத்தோடு முற்றுமுழுதாக உடன்படுகிறேன். விற்கும் - வாங்கும் எழுத்தாளர்கள் யார் என்பதை அறிய ஆவலோடு இருக்கிறேன். நன்றி.

a சொன்னது…

தங்கள் கோபம் ஞாயமானதே.....

அப்பாதுரை சொன்னது…

'ghost writing' என்பது நேர்மையான தொழில் தானே? நீங்கள் குறிப்பிட்டுள்ளவர் அப்படிச் செய்கிறாரா?
எந்த காரணத்துக்காக இன்னொருவருக்கு எழுதுகிறார் என்பது தெரியாத நிலையில், "எழுத்தை விற்பது" கொச்சை பொருளைக் கொடுக்கிறதே?