நம் குரல்

பொது வெளி



பொது வெளி எது என்பதை ஆண்களை மையமிட்ட சமூகம் தான் தீர்மானிக்கிறது என்பது பழைய தகவல் தான். ஆனால் பெண்களுக்கு அது என்றுமே புதிய செயல்பாட்டைக் கோருவது. அதை முறியடிக்க வேண்டி அவ்வெளியுடன் முதன் முதலாக மோத வேண்டியிருக்கும் பெண்களும், அதை படைப்பாக்க வெளிக்குள் கொண்டு வர வேண்டிய பெண்களும் தாம் போராடவேண்டியிருக்கிறது. இதை ஆண்களின் அறிவுத் திமிர் அல்ல, எல்லாம் அறிந்ததான திமிர்! பெண்ணைக் கேளிக்கைப் பொருளாக்கி வாழ்வதென்பது இன்று நேற்றைய பணி அன்று. ஆக, பொது வெளியை நாம் நமதாக்கலாம்.

பெண்ணுக்குக் கல்வி என்பதே முதல் பொதுவெளியை ஏற்படுத்தித் தந்தது. அது புற அளவிலான வெளியாக இருந்தது போல வாசிப்பு என்பது கற்பனையான அக வெளியாக விரிந்தது. பெண்கள் தம் வாசிப்பிற்கான நூல்களை கண்டடைவது புற வயமான பயணத்தைக் கோருவது. வாசிப்பின் வழியாக தம் எண்ணத்திற்கு ஒத்த சிந்தனைகளைக் கண்டுபிடித்து மொழியாக்குவது அக வயமான பயணமாகும். இவ்வாறு அகவெளியையும் புறவெளியையும் மீறி பொது வெளிக்குள் நுழைவதற்கு சிறிதளவேனும் அதிகாரமும் முயற்சியும் தேவைப்படுவதாகும்.

மரத்தடி, தேநீர்க்கடை, சாலைப் புறங்கள், மைதானங்கள், வரவேற்பறைகள், திரை அரங்கங்கள், கருத்தரங்க வெளிகள் எனப் பொது வெளிகளில் தம்மை இருத்திக் கொள்வதற்கான வசதிகள் இருந்த போதும் வாய்ப்புகளை பெண்கள் பெறுவது சாத்தியமில்லை தான். அந்த அளவிற்கு அறிவாக்கத் துறை பெண்ணின் மீது அளவிலா வெறுப்பைத் திணித்துக் கொண்டிருக்கிறது. அது வெறுமனே போட்டி உணர்வினால் எழுந்தது மட்டுமே என்று தோன்றவில்லை. பெண்களை இயல்பாகவே கேலி செய்யும் மனோபாவமும் உடனுக்குடன் அதைச் செயல்படுத்தும் சுதந்திரமும் ஆண்களுக்கு இனாமாகக் கிடைத்தது. என்பதாலும் பொதுவெளியில் அந்தவெளிக்குள் தன்னை இருத்திக் கொள்ள விரும்பும் பெண் அந்த கேலியின் தாக்குதலுக்கு நேரடியாகத் தன்னை ஒப்படைப்பதாக எண்ணி ஆணின் எல்லாம் அறிந்த மனோபாவம் தன் கேலியை மொழியாக்குகிறது. ஆகவே தான் பெண்கள் தம் மொழியை இருப்பிற்கான அவசியமாக்க வேண்டியிருக்கிறது. பெண்களுக்கு மொழி என்பது விடுதலைக்கான ஆயுதம் மட்டுமன்று. அது அறிவாக்கப் பணிக்கான ஆயுதமும். தம் இருப்பின் அடையாளம். தம் திறனைச் செயல்பாடாக்கும் அரசியல். ஆக, இத்தகைய பெண்கள் ஆண்களை வெறுப்பவர்கள் பொத்தாம் பொதுவாக கூறுவதெல்லாம் பொதுவெளியில் பெண்களை கேலியின் நுகர்வாளர்களாக்கி இன்புற்ற ஆண்களின் முழக்கங்கள்.

பெண்கள் பொதுவெளிக்குள் வருவதை ஆர்வத்தோடும் குறுகுறுப்போடும் நோக்கும் கண்களுடையவர்கள், எரிச்சல்களால் இன்புறுகிறார்கள் என்பதே என் உளவியல் புரிதல். நடுத்தர வர்க்கம் இதில் இன்னும் அதிகமாய் ஆரோக்கியமற்ற சிந்தனையுடன் இயங்குகின்றது. அதாவது, தம் வீட்டுப் பெண்களை இப்படித்தான் வைத்திருக்கிறோம் என்ற இறுமாப்பும் அதே இறுமாப்பின் நியதிகளில் மற்ற பெண்களையும் ஒப்பிட்டு நோக்கும் இயல்புடையவர்களாயும் இந்தக் கணவான்கள் இயங்குவார்கள். தம் வீட்டுப் பெண்களை பிற ஆண்கள் கேலி செய்ய நேர்கையில் இயன்றால் ஓர் அடி தம் வீட்டுப் பெண்களையும் அடித்துத் துன்புறுத்துபவர்கள். பொதுவெளி, பாலியல் விஷயங்களை மறைத்து வைப்பதற்கானது என்பதை இவர்கள் தாம் முதலில் பிரசங்கிப்பவர்கள். இன்று அரவாணிகள் பற்றிய விவாதமும் முன்னெடுப்பும் இத்தகைய மனச்சிதைவுற்ற சமூகத்திலிருந்து பிதுங்கி வெளிவந்து துருத்தி நிற்பதற்குக் காரணமானவர்கள். இயல்பான வெளியுடன் தம்மைப் பொருத்திக் கொள்ள எந்த வித நியதியுமற்ற, விடுதலையற்ற ஒரு சமூகத்தின் மீது துப்பப்படும் எச்சிலாகக் கூட இவர்கள் இருக்கலாம். இதற்குப் பதிலாக சமையல் குறிப்புகள் எழுதலாம், நவீன உடைகள் குறித்த அக்கறையில் ஈடுபடலாம், கோலங்கள் எழுதலாம் என்ற சிந்தனைகளை ஒப்புக்காய் ஏற்கும் மனநிலையைப் பெண்களுக்குக் கொடையளிக்கும் மறைமுகமான அறிவார்ந்த பணியை இவர்கள் மேற்கொண்டிருக்கின்றனர் என்பது தான் இதன் அர்த்தம்.

பேருந்துகளில் எல்லோரும் தன்னையே நோக்கிக்கொண்டிருக்கத் தனியே மீண்டும் மீண்டும் பயணம் செய்வது, பெண் ஆரோக்கியம் பற்றிய எந்த அக்கறையுமற்ற ஒரு நாட்டில் பொதுக் கழிவறைகளைத் தேடி அலைவது இவை போன்ற செயல்பாடுகளுடன் ஒரு பெண் இணையத்தள வெளியில் இயங்குவதையும் ஒப்பிடலாம். இன்று வரை ஒரு பெண்ணின் படைப்பாக்கம் ஆரோக்கியத்தைத் தரும் அருமருந்தாக இல்லாமல் ஒவ்வோர் ஆணும் தானும் உள்நுழைந்து, மனம் பிறழ்ந்த விருப்பத்துடன் நோக்கும் உளவியல் நோயுற்று, பின் பொதுவெளியில், ‘அய்யகோ!’ என்று முறையிட்டு அழுவதாகத் தான் இருந்து வருகிறது. காகிதத்திற்கு இருந்த வெறுமனே மலத்தைத் துடைக்கும் உபயோகத்தைப் பெண்கள் மாற்றி வைத்தது கூட காரணமாக இருக்கலாம்.
இவர்களை எல்லாம் யார் அழைக்கிறார்கள் எமது படைப்புகளைப் படிக்க வேண்டி?














குட்டி ரேவதி

விமர்சனம் ஒரு சொல்


விமர்சனத்தின் ஆழம் மறுத்த வெளியில்


கவிதை சிகை மழிக்கிறது உருவழிகிறது


ஒரு சொல்லும் பொறுக்காதது கவிதை இல்லை

இது கண்டவன் தனதையே கல்லால் நொறுக்குவான்



மின்னூட்டம் பெற்ற கண்ணாடிக் குப்பிகளில் கவிதை
குழல்வழி ஆக்சிஜனில் நீந்தி மகிழ விரும்புவதில்லை
திரைப்பதிப்பில் உயிருறும் தம்மைக் கொஞ்சும்
குழந்தைகளிடமும் முத்தம் பெறா
கண்ணீர்க் கசியும் வாசகனின் உஷ்ண மூச்சு
மேல் மோதியதும் வாரி அணைத்துக் கொள்ளும் கவிதை
நிகழ்வுகளுடன் மோதி உள்சிராய்ப்புகள் பூத்து
அது அழுவதுமில்லை பதறுவதுமில்லை
காற்றில் எழும் விமர்சனங்கள்
அதன் திக்கு எட்டும் புரவிகளாய்ச் சீற

கல்லடி தாங்கிய கவிதையோ ஒரு போதும்

பிணவறையை நோக்கிப் பயணிப்பதேயில்லை
சொல்லப்போனால் நிகழ்வுகளின் முகத்தில் கரியைப் பூசும்








குட்டி ரேவதி

எதன் பொருட்டுத் தொலையும்?



முப்பது வருடங்களிலேயே கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கும் ஒரு நிலைமையும் காலத்தின் வேகமும் கூடிவிட்டது. அதில் புதியதைப் புரட்டிப் போடுகையில் பழைய மனிதர்களும், ஏன் மிகவும் முக்கியம் என்று நாம் மதித்திருந்த பொருட்களுமே கூட தொலைந்து போவது தான் கண் முன்னால வந்து நிற்கின்றன. நாம் உறுதியான பற்றும் நம்பிக்கையும் வைத்திருந்த மனிதர்களும் மிகச் சிறிய அசந்தர்ப்பமான காரணங்களால் தொலைந்து போயிருக்கிறார்கள். வனஜாவைப் போல. எப்படி ஏன் வாழ்க்கையிலிருந்து தொலைந்து போனாள் என்று யோசித்துப் பார்க்கையில் கொசுவர்த்திச் சுருள் போல ஒன்று கண் முன்னே சுழல்கிறது. சமீபத்தில் ஜகன் மோகினி திரைப்படம் பார்த்த விளைவு தான்!

அந்தச் சிற்றூரில் நானும் அவளும் மட்டும் தான் முதன் முதலாக சைக்கிள் வாங்கிய பெண்கள். ஒருவரையொருவர் சந்திக்கும் போதே இருவரும் சொந்தமாக சைக்கிள் வைத்திருந்தோம். பள்ளி நாட்கள் தவிர மற்ற நாட்களில் காலையிலேயே எங்கு செல்வது என்று திட்டமிட்டு விடுவோம். வீட்டிலிருந்து கிளம்பி அந்த ஊரின் புறப் பகுதியில் இருக்கும் கோவிலைச் சுற்றி ஐந்து மைல்கள் தாண்டி இருக்கும் கல் குவாரியையும் அதைச் சுற்றியும் உள்ள கிராமங்களையும் கடந்து திருச்சி – தஞ்சை நெடுஞ்சாலை வரைத் தொட்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்புவோம். வெளியை விரிக்கும் எங்கள் உடல் கட்டுக்கடங்காத ஆற்றலுடனும் ஊக்கத்துடனும் இருந்தது. குண்டுச் சட்டிக்குள்ளே குதிரை ஓட்டும் பெண்களாக எங்களிருவரால் வளைய வரமுடியவில்லை. எங்கள் சைக்கிள்களின் சக்கரங்களில் காலத்தின் இறக்கைகளைக் கட்டிக் கொண்டிருந்தோம். எங்கள் எதிர்கால வாழ்க்கை பற்றிய கற்பனைகளை நாங்கள் சிறிதும் குறைத்துக் கொள்ளத் தயாராக இல்லை. திருமணம் செய்து கொள்ளாமல் சமூகப் பணிகள் ஆற்றுவது என்று இருபது வருடங்களுக்கு முன்னேயே முடிவெடுத்திருந்தோம். அம்மாதிரியான அபத்தங்கள் இன்றைய பிடிமானமற்ற தனிமையில் சுவரைப் பார்த்து முட்டி முட்டிப் புன்னகைக்க வைக்கின்றன.

எங்கள் சைக்கிள் பயணங்கள் பாதையறுந்த நாட்களில் பேருந்தேறி காவிரிக் கரை அடைவோம். எங்களுக்குப் பிடித்தமான நிழலார்ந்த குளிரடைந்த இடம் மலைக்கோட்டையிலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் உள்ள மிகப் பெரிய பாலம். அதன் அடியில் சூரிய மினுமினுப்புடன் பாயும் காவிரி கரை மோதும் இடம். நாங்கள் அங்கு காவிரிக்குள் இறங்கி அதன் மத்தியப் பகுதி வரை நடந்து உள்ளே சென்று நீரில் மிதப்பது போல தோன்றும் பாறைகளைத் தேர்ந்தெடுத்து அமர்வோம். மாலை சூரியன் நீருக்குள் மூழ்கும் வரை அமர்ந்து விட்டு நீர் பொன்னாகக் கரைந்து ஒழுகியோடும் வரை காத்திருந்து விட்டு வீடுகளுக்குத் திரும்புவோம். தொலைந்து போய் விட்டன அந்த நாட்களும். வனஜாவும். காலம் காவிரியைப் போல நினைவுகளைத் தேக்கும் சக்தியற்றது போல.

அப்பாவின் மரணம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஓர் அறுவை சிகிச்சை நடப்பதாக இருந்தது. அதில் அப்பா பிழைப்பதற்கான வாய்ப்பு இரு சதவிகிதமே இருப்பதாக மருத்துவர் கூறியிருந்தார். அப்பாவை அதற்கான அறையில் அழைத்துச் செல்லும் முன் அவர் அணிந்திருந்த சட்டைப் பையில் அவர் எப்போதும் வைத்திருக்கும் பேனா மற்றும் சில நினைவடர்ந்த பொருள்களான பர்ஸ், உபயோகித்த மர சீப்பு, முக்கியமான சிறிய புகைப்படங்கள், இரவு ஒரு மணி வரை அம்மாவும் அப்பாவும் கேட்டு மகிழ ஏன் ஒருவரையொருவர் கேட்டுக் கொஞ்சிக்கொள்ள பயன்படுத்திக் கொண்ட வானொலி, நுட்பமான மரவேலைப்பாடுகள் செய்யப் பயன்படுத்திய உளிகள் என எல்லாமும் அடங்கிய சிறு கைப்பை என்னிடம் கொடுக்கப்பட்டன. அதை நித்தமும் என் பையில் வைத்திருந்தேன். ஒரு முறை வண்டியில் என் வேகமான பயணத்தின்பொழுது நழுவி வீழ்ந்துவிட்டது. அதைக் கண்டெடுக்கவே முடியாத படிக்குத் தொலைந்து போனது. தொலைந்த அப்பொருட்கள் இன்றும் கனவின் மாயாலோகத்தில் சுழன்று மிதந்து கொண்டிருக்கின்றன.

நாட்கள். மிகுந்த வெளிச்சம் சிறகடிக்கும் அந்த நாட்கள் எங்கோ பழுத்து உதிர்ந்து விட்டன. நீருக்குள் மூர்க்கமாய் மூழ்கித் திளைத்த நாட்களும் மலையின் உச்சம் நோக்கி மூச்சிளைக்க நடந்த நாட்களும் காடுகளில் நெடிதுயர்ந்த மரங்களினூடே திடீர்த்திருப்பங்களுடன் புதிர்விளையும் வெளியை நுகர்ந்த நாட்களும் தொலைதூரத்திலேயே தொலைந்து போய்க் கொண்டிருக்கின்றன. அந்த நாட்களில் கண்ட அனுபவங்கள் இரத்தத்தில் சேர்ந்து கரைந்து சிவப்பாகிக் கொண்டிருக்கின்றன. முதல் முத்தத்தை எப்படிப் பொத்தி வைப்பது? அதைப் போலத்தான்.

மேலும் எதையும் தொலைந்த இடத்தில் போய்த் தேடிக் கண்டுபிடிக்க இயலாத படிக்கு வெளி என்பது நினைவுகளின் சுவரிடிந்த அறைகளில் ஓவியமாய் தொங்கிக் கொண்டிருக்கிறது. அவற்றைக் குடைந்து நம்மால் அங்கு செல்ல முடியாத படிக்கு அவை முற்றிலும் கற்பனை வெளியாக இருக்கின்றன. தொலைந்த பொருட்கள் வேறு வேறு உருவமெடுத்துக் கொண்டே இருக்கின்றன என்பதும் அவை ஒரு கட்டத்தில் அந்நியமாகி விடுகின்றன என்பதும் உறைந்து போன உண்மைகளாக இருக்கின்றன.
ஆனால் என்னுடைய அனுபவத்தில் ஒரு பொருள் தொலைந்து போகும் முன்னர் ஒரு முறை பொய்யாகவேனும் தொலைந்து காட்டுகிறது. நம்மை மூர்ச்சிக்க வைக்கிறது. எண்ணங்கள் எல்லாமே புகையாகக் குழம்பி என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற திக்கற்ற வெளியில் நம்மைக் கொண்டு போய் நிறுத்தி விடும். எண்ணாயிரம் பொருட்கள் நிறைந்த வெளியில் எந்தப் பொருளைத் தேடுகிறோம் என்று தெரியாத சிந்தனைக் கொம்பில் தன்னந்தனியே நம்மை விட்டுவிடும்.


குட்டி ரேவதி

அவன் பாடுகையில்

அந்தக் குரலை என்தொண்டைக்குள் அடை காக்கும்
வழியறியா வேதனையில் கொழுந்து விட்டெரியும்
மெய்மையின் நெருப்பில் வெந்தழிகிறேன்

மடிந்த நீளமான இதழ்களுக்கிடையே
ஒரு புகையைப் போல கமழ்ந்திடும் அக்குரல்
பரவும் திசையெலாம் தோகை போல
ஒயிலாய் நடனமாகி நகரும்
முழுநிலவைக் கவ்வி இழுத்து வருகின்றதோ
துயர் கனிந்த ஆரஞ்சுப் பழத்தின் சுளைகளை உரித்து
தின்னச் சொல்லிக் கொடுக்கிறதோ
உதடுகள் சுழித்துச் சுழித்து அவன் பாடுகையில்
இழக்க விரும்பா உரிமைகளின் வேர்களிலிருந்து
எழும்பி வரும் சிட்டுக்குருவிகள் எதிர்வெயிலில் மின்னும்
பாடலற்ற இதயப் பாலையின் தீய்ந்த சூரியனைச்
சுமந்தலையச் சம்மதியான்
ஒருபொழுதும் என்கின்றனவோ வேர்க்குருவிகள்










குட்டி ரேவதி

கவிதைக்குத் தலைப்பு




கவிதைக்குத் தலைப்பு அவசியம் என்பது பற்றிப் பல சமயங்களில் என் கவித்தோழிகளுடன் வாதாட வேண்டியிருக்கிறது. கவிதைக்குத் தலைப்பு அவசியமில்லை என்பது அவர்கள் வாதம். தலைப்பில்லாமல் கவிதை முழுமை பெறுவதில்லை என்பது எனது. சிறுகதைக்கோ நாவலுக்கோ இம்மாதிரியான கேள்வியின் அவசியமே இருந்திருக்காது. இந்நிலையில் அவர்கள் கூறுவது: கவிதை எழுதி முடித்த பின்பு சடங்கார்த்தமாக அல்லது கவிதை வரியிலிருந்து ஒரு வார்த்தையை அல்லது வரியை தலைப்பாய் இடுவது முற்றிலும் செயற்கையானது என்று. ஆனால், எனக்கோ, கவிதை என்பது ஒரு குறியீட்டுக் கலை வடிவமெனில் அதற்குக் குறியீட்டுத் தன்மையைத் தருவதே அதன் தலைப்பு தான். வடிவம் சம்பந்தப்பட்ட நியாயங்களும் உடன் உண்டு.

உணர்ச்சிகளின் தீப்பிழம்பு தோன்றும் இடத்தை, காலத்தை அல்லது அந்தத் தீநாக்கு நோக்கிச் செல்லும் திசையைப் பெயரிட்டுக் குறிப்பிடுவது தான் தலைப்பு. இந்த நிகழ்வு கவிதையில் தான் ஏற்படுகிறது. இதன் க்ஷண வேகத்தைப் பெயரிட்டு விடுவது அவசியத்திலும் அவசியம். ஏனெனில் அதே வேகத்தில் கவிதை முடிந்தும் போகிறது. அது முடிந்து போகும் முன் பெயரிட்டு அதை அழைத்து விடுவது தான் கவிதைக்குக் கொடுக்கும் மரியாதை என்று தோன்றுகிறது. கடலின் ஆழத்தைத் துளாவி முத்துக் குளித்து எழும் மீனவன், கண்டடையும் கடலுக்கு வெளியிலான ஆசுவாசம் போலவும் தலைப்பு உருக்கொள்கிறது. சிற்பி, படைப்பின் வளைவுகளையும் நுணுக்கங்களையும் கூர்மைப்படுத்திய பின்பு கண் திறப்பதைப் போலும். வாசகனை படைப்புக்குள் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் திறவுகோலாகவும் இருக்கலாம். படைத்தவனுக்கு படைப்பிலிருந்து தன்னையே வெளியே உந்திப் படைப்பைப் பொதுவுடைமை ஆக்கும் வாயிலும் அதுவே.


கவிதை என்பது கதை விடுவது அன்று. ஒரு நிகழ்வைச் செய்தியாக்குவதுமில்லை. அது ஒரு பெயர்ச் சொல்லும் அன்று. உணர்ச்சியின் பருப்பொருள் தன்மையைச் சொற்கள் மற்றும் அதன் அர்த்தங்கள் வழியாக வரைந்து காட்டி, மழுங்கற் தன்மையால் நுண்மைகளைக் கேட்டுணரும் சக்தியிழந்த சாமானியனுக்கு விளக்க முயல்வது போல. கவிதையில் நிகழும் யதார்த்தத்தின் சிதைவைத் தலைப்பு என்பது குறியிட்டுக் காட்டுகிறது. தலைப்பிடுவதும் கவிதை எழுதும் திறனுடன் சேர்ந்தது தான். கவிதை பேசும் அழகியலை நிறைவு நிலைக்குக் கொண்டுவருவது. கவிதையின் தலைப்பு என்பது அந்தக் கவிதையின் வரிச்சுவர்கள் எங்கும் எதிரொலித்து ரீங்கரித்துக் கொண்டேயிருப்பது. வாசகருக்கு அந்தக் கவிதையை அதன் உண்மையான அர்த்தத்தில் அடையாளம் கண்டறிய உதவுவது. ஒரு துப்பறியும் நாவலில் எழுத்தாளன் என்பவன், துப்பைத் தேடிச் செல்லும் வழியில் எல்லாம் ஆங்காங்கே ஆவலை, புதிரை, தவிப்பை, ஊசல் நிலைகளை வாசகனுக்கு ஏற்படுத்திச் செல்வது போல கவிதையும் தன் இறுதி வரியில் சுமந்திருக்கும் துப்புக்கான புதிரைத் தலைப்பிலேயே சுட்டுகிறது. தாயின் கருவுக்குள் துடிப்புடன் காத்திருக்கும் சிசுவைப் போன்றது தலைப்பு.

குட்டி ரேவதி

’ஏகாந்தம் ஏதுக்கடி?’



பெண்கள் எல்லோரும் வாழ்வியல் பெருஞ்சுமையினால் தமது தனிமையின் இருள் வெளியில் உழன்று கொண்டிருக்கும் சமயத்தில், அதையே நான் வேண்டி விரும்பிப் பெற்றுக் கொள்வதன் காரணம் தனிமை என்பது எனக்குத் தரும் உல்லாசமும் ஆசுவாசமும். தமிழ் மொழியில் ஒன்றுக்கொன்று எதிரான ஆனால் ஒரே மாதிரியான இரண்டு மனித நிலையைக் குறிப்பிடுவதற்கான சொற்களுண்டு; ஏகாந்தம் மற்றும் தனிமை. ஏகாந்தம் நேர்மறையான அழுத்தமற்ற பொருளுடனும், தனிமை துக்கத்தின் சாயல்களுடனும் ஒலிக்கின்றன. கூட்டத்திற்கு மத்தியில் இருந்தாலும், நெருங்கிய உறவினர் குடும்பத்தினர் மத்தியில் இருந்தாலும் எவருமே தொட்டுப்பார்த்து உணர முடியாத தனிமை என்னும் தோடால் (தோலால்) பெண்கள் மூடப்பட்டுள்ளனர். இந்தத்தனிமை எந்த வகையிலும் இனிமையானது அன்று. ஆண்களால் எப்பொழுது வேண்டுமானாலும் தங்களுக்கான ஏகாந்தத்தை அதிகாரத்தாலும் உரிமையாகவும் ஏன், இயல்பாகவும் ஏற்படுத்திக் கொள்ள முடியும். வெட்டவெளி, சிதம்பரம், விண், அந்தரம் போன்ற சொற்கள் எல்லாமே உணர்த்தும் வெளிசார்ந்த அர்த்தங்கள் ஆண்களின் வாழ்வியலுடன் தான் நெருங்கியவையாக இருக்கின்றன. இவையெல்லாம் பெண்கள் பிரவேசிக்க முடியாத வெளிகளாக நிறுவப்பட்டிருப்பதும், பெரும்பாலும் சமயங்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதும், தம் உடலை விட்டு வெளியேற முடியாதவர்களாகப் பெண்கள் இயக்கப்படுவதும், தாம் காரணம்.


பெண்கள், தனிமை என்ற அழுத்தமான வெளியிலிருந்து வெளியேறி எப்பொழுதாவது ஏகாந்தம் என்பதை நுகர்கிறார்களா என்று நான் யோசித்ததுண்டு. கைக்குழந்தையுடன் இருக்கும் தாய்மார்கள் இந்த சமகால, யதார்த்தமான வெளியிலேயே தாங்கள் இல்லை என்பது போல நடந்து கொண்டிருப்பதை பல சமயங்களில் நான் பார்த்திருக்கிறேன். குழந்தையின் பூவுடலின் மீது கொண்டிருக்கும் பேரன்பும் அதைப் பேணும் சகல உரிமைகளும் அதிகாரங்களும் பெற்றுள்ள தாய்மை நிலையில், அவர்கள் தங்களைச் சுற்றி இயங்கும் இந்த உலகத்தையே மறந்து வேறு ஒரு கற்பனை அல்லது மீமெய் வெளிக்குள் சஞ்சரிப்பது போல அவர்கள் முகத்தில் சிற்சில சொற்பக் கணங்கள் பேரொளி வீசக் கண்டதுண்டு. ஆனால் குழந்தை வளர வளர அந்த ஏகாந்த உலகமும் உருவழிந்து அவர்கள் மீண்டும் தனிமைக்குள் தள்ளப் படுகின்றனர்.

தனிமை என்பது பெண்ணை எப்பொழுதும் சூழ்ந்திருக்கிறது. தான் தனிமையில் இருக்கிறோம் என்று அறிய முடியாத அளவுக்கு அவள் அதனால் அழுத்தப் பட்டிருக்கிறாள். மூச்சடைக்கச் செய்கிறது அவளின் வீடு. பெரும்பாலான சமயங்களில் தனது சுயத்தேவைகள் குறித்த சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் பெண்கள் நிர்க்கதியாய் நிற்பதன் காரணம் தனிமை குறித்த அவர்களின் கற்பனையான பயம் தான். ஏதோ அவர்கள் ஏற்கெனவே தனிமைக்கு வெளியே தப்பித்து நின்றவர்களைப் போல. காலங்காலமாய் ஆண்மைய தத்துவங்கள் எல்லாம் வாழ்வியலின் விளிம்புகளில் பெண்ணுக்கான தனிமையையும் நிரந்தரமின்மையையும் வரைந்து அதை நோக்கி அவளைத் தள்ளிக் கொண்டேயிருக்கின்றன.

தங்கும் விடுதிகளில் நாட்களைக் கழிக்க நேரும் போதோ அல்லது எழுதுவதற்கான காலத்தைத் தேர்ந்தெடுத்துத் தனியாக அமரும் போதோ இந்தத் தனிமையின் அடுத்த ஆரோக்கியமான கட்டமான ‘எல்லா தற்கால அழுத்தங்களிலிருந்தும் விடுபட்ட நிலை’யை உணர்கிறேன். தொலைபேசிகளின் அலைகளால் நான் அவ்வப்பொழுது கவனம் சாய்க்கப்படாத நிலை அது. காலம், என் கையில் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து ஓடும். என் சுவாசத்தின் காற்று மட்டுமே வீசும் சப்தத்தின் பின்னணியில் நான் ஏதோ மலையின் உச்சியில் நிற்பதைப் போல உணர்ந்ததுண்டு. அந்த அளவிற்கு சுகமும் அதே சமயம் விட்டு விடுதலையாகி இயங்குவதற்கான ஆர்வமும் என் கைகளிலேயே இருக்கும். மரங்கள் கூட்டமாக தோட்டங்களில் தோப்புகளில் வாழலாம். ஆனால் தனிமையைத் தாங்கி தனியே வளரும் மரம் தான் உறுதியாக வளர்கின்றது.


‘சாகாமல் தாண்டித் தனி வழி போவோர்க்கு
ஏகாந்தம் ஏதுக்கடி? – குதம்பாய்
ஏகாந்தம் ஏதுக்கடி?’, என்பது குதம்பைச் சித்தரின் வரிகள். இதில் கூறப்பட்டுள்ள ஏகாந்தம் என்பதின் பொருள்கனம் மிகையானதாகவோ நான் மேலே இயம்பியிருக்கும் விவாதத்திற்கு அதிகமாகவோ இருக்க வேண்டும். சித்தர்கள் தாம் அதிகமான ஆண் மையச் சொற்களை உருவாக்கியவர்கள். இதையெல்லாம் புறம் தள்ளி, தனிமைக்கும் ஏகாந்தத்திற்கும் கருத்து மயக்கம் உள்ள நிலையில் நானே விரும்பி ஏற்கும் தனிமை என்பது என்னை மூதாதையரின் அகாலமான சிந்தனைவெளியோடும் முக்காலத்தோடும் என்னைத் தொடர்புப்படுத்தி இயங்கத் தூண்டுகிறது, வெகு தற்காலிகமான கணத்திற்கே என்றாலும்...




‘ஏகாந்தம் ஏதுக்கடி?’ – குதம்பைச் சித்தரின் பாடல் வரி.




குட்டி ரேவதி

இன்று எனது 120-வது பயண நாள்!

இன்றைய வருடத்தின் என்னுடைய நூற்றி இருபதாவது பயண நாள். ஏதேச்சையாக டைரியைப் புரட்டி இந்த வருடம் பயணம் செய்த நாட்களை எண்ணிப்பார்த்த போது ஏறத்தாழ நான்கு மாதங்கள் அளவிற்கு பயணம் செய்திருக்கிறேன். சென்ற வருடம் இதைக் காட்டிலும் அதிகமாயிருக்கும். எழுத்தாளர் சிவகாமி அவர்களுடன் இணைந்து தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பயணித்து பெண்களிடையே அவர்களின் அடிப்படை உரிமைகள் பற்றிய பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தோம். எங்களை ஒரு மூர்க்கமான நல்விசை அவ்வாறு பயணிக்கச் செய்தது என்றே சொல்ல வேண்டும். இவ்வாறு பயணிக்கவில்லையெனில் என் கூடு நூலாம்படை படர்ந்து வீச்சமடிக்கத் தொடங்கிவிடும் என்று நம்புகிறேன். எண்ணங்களைத் தீர்க்கவும் உடனுக்குடன் கருத்துக்களைப் புதிப்பிக்கவும் முக்கியமாக மனோபாவத்தை ஆரோக்கியமானதாகப் பேணவும் ஒவ்வொரு மனிதனுக்கும் பயணம் அவசியம் என்பது என் கருத்து. இந்த மாதத்தில் இன்னும் பன்னிரண்டு நாட்கள் பயணிக்க வேண்டியிருக்கிறது.

இன்று சேலத்தில் வந்து இறங்கியிருக்கிறேன். பாலின சமத்துவம் பற்றிய விழிப்புணர்வுக்கான பயிற்சிகள் அளிப்பதற்காக. தொலைதூரக் கிராமத்துப் பெண்களைச் சந்தித்து அவர்களுடன் சிந்தனைப் பரிமாற்றம் செய்ய வேண்டும். பாலின சமத்துவம் பற்றிய அவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதுடன் என்னுடைய கருத்துக்களை அவர்களுடன் பரிமாறிக் கொள்ள வேண்டும். இன்னும் நான்கு நாட்களுக்கு இதுவே என் பணி. பெண்களை அதுவும் கிராமத்து, அடித்தட்டுப் பெண்களைச் சந்திப்பதை எனக்கே நான் அளித்துக் கொள்ளும் பயிற்சியாக வைத்துக் கொள்கிறேன். ஓர் அளவுமானி போல. பெண்ணியம் என்பது அதரப் பழசான வார்த்தை தான். என்றாலும் என்னளவில் அது தொடர்ந்து இயங்க வேண்டிய தேவையையும் எவர் மறுத்தாலும் அதன் பாதையில் நான் சீராகப் பயணப்படுவதில் என்னுடைய முழு கவனத்தையும் கோருவதாகவும் உணர்கிறேன்.

சேலத்தில் பெண் சிசுக் கொலை நிகழ்வது அன்றாடச்செயல்களில் ஒன்று. இன்று காலையிலும் செய்தித் தாளில் ஒரு செய்தி உண்டு: ஒரு பெண் தனது எட்டு மாதக் குழந்தையை மருத்துவமனையில் உட்கார்ந்திருந்த ஒரு முதிய பெண்ணிடம் கொடுத்து, ‘கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள்! பாத்ரூம் போயிட்டு வந்துர்றேன்’, என்று சொல்லிவிட்டுச் சென்றவர் திரும்பவும் வரவே இல்லை. பெண் சிசுக் கொலை முன்பை விட இப்பொழுது குறைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் பிரசவத்திற்குத் தாய்வீட்டுக்குச் சென்றவர் திரும்பி வரும்போது பிரசவத்தில் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறுவார். மேலும், பெண் குழந்தைகள் வளர்ப்பில் தொடரும் அலட்சியமும் வெறுப்பும் வேதனையை அளிக்கக் கூடியது. முதல் குழந்தை பெண் என்றால் தப்பித்தது. முக்கியமான இன்னொரு விஷயம் இளம் வயதுத் திருமணம். பெண்கள் தங்கள் பதினைந்து வயது வரைக் கூடத் தாமதிப்பதில்லை. அரை குறையான கல்வி. கல்வி துண்டிக்கப்படுவதன் காரணத்தைக் கேட்டால் வறுமை என்று கூறும் பெற்றோர் உடனே நடத்தப்படும் திருமணத்திற்குச் செலவு செய்யத் தயங்குவதில்லை. தான் ஒரு காவல் அதிகாரியாக ஆக வேண்டும் என்ற கனவைக் கொண்டிருந்த ஒரு பெண், காதல் திருமணம் செய்து கொண்ட கணவனே படிக்கக் கூடாது என்று தடையிட்டதைக் கூறி அழுதார். பெண்களுக்கு எதையும் விட திருமண ஆசை இளம்பருவத்திலேயே தாயாலும் சுற்றியுள்ள பெண்களாலும் நாடி நரம்பெல்லாம் ஊட்டப்படுகிறது. அது ஒரு சொர்க்கம் என்பது போலத்தான் கழுத்தில் மாலையை வாங்கிக் கொள்கின்றனர். பின்னர் தான் அது பலி கொடுப்பதற்கான நிகழ்வு என்று விளங்குகிறது. இத்தகைய திருமணங்கள் ஆண்களையும் கண்டிப்பாய் வாட்டி வதைக்கத் தான் செய்யும்.

இன்று அத்தகைய பெண்களுடன் ஏழு மணி நேரம். நீண்ட உரையாக இல்லாமல் உரையாடலாக எல்லோரின் வாழ்வையும் பிளப்பாய்வு செய்வதான வேலையை எளிதாகவும் வருத்தமில்லாமலும் செய்து பார்த்தோம். கொஞ்சம் கொஞ்சமாய் வலி மருந்தை ஏற்றிப்பார்ப்பது போல. தொடர்ந்து கண்ணீர் முட்டும் விழிகள் சுடரும் வரை உடனிருக்க வேண்டியிருக்கும். கல்வி, வேலை, வருமானம், ஆரோக்கியம் என்பதெல்லாம் பெண்களுக்கு யாரோ வந்து கொடுக்கப் போவதில்லை. அதைப் பெறுவதற்கான ஊக்கமும் பிடிவாதமும் அவர்களே தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதை ஏதும் பெற முடியாத பெண்கள் அன்றாட வாழ்வோடும் வறுமையோடும் கணவனோடும் நோயோடும் படும் பாடுகள் வேகவேகமாய் முதுமையைக் கூட்டி வருகின்றன. மேற்கண்ட எனது அனுபவத்திற்குப் பிறகு சேலம் என்ற நகரம் ஒளி மங்கிய தூங்குமூஞ்சி நகரத்தின் தோற்றம் கொள்கிறது என் நினைவில். கூட்டங்களில் கலந்து கொண்ட பானுமதியும் கீதாவும் ஒருவரோடொருவர் கை கோர்த்து சிரித்து சிரித்துக் களித்தது அவர்களின் நாற்பது வயதுக்கான அழகாகவும் இன்றைய நாளின் வெளிச்சமாகவும் தோன்றியது! மாலையினை இரவுக்குள் அழைத்துச் சென்ற பெருமழையும் இன்றைய நாளுக்கான வரவு தான்.


குட்டி ரேவதி

சக்கரங்கள்


இனி எல்லாமும் முதலிலிருந்து தொடங்கப்படவேண்டும் இல்லையெனில் நிகரற்ற இவ்வாழ்வின் பெருங்கிணறு எந்நேரமும் தூர்ந்து போகலாம் கண்கூசும் வெயிலின் பதாகையின் கீழ் நிரந்தரமானதோர் ஒற்றைப் புறாவாகலாம் காட்டின் திக்கற்ற வெளியில் ஒரு மதம் கொண்ட யானையாகலாம் அவரற்ற உலகில் காலத்தை மெல்ல மெல்ல கொன்று தின்னும் கரையான் ஆகலாம் இரவழியாத பொழுதுகளால் என் வீடு வழிந்து நிறையலாம் மழை சாரை சாரையாய் கண்ணின் வீதிகளை நனைக்கலாம் புற்களின் மென்படுகையில் நுனிப்பாதங்களை ஊன்றியது போல் இனி எல்லாமும் முதலிலிருந்து தொடங்கப்படவேண்டும் ஆனால் ஏனோ தொடங்கப்பட்ட இடத்திலேயே நெடுஞ்சாலைகளை அரைக்கின்றன சக்கரங்கள்.

குட்டி ரேவதி

கதை நெய்தல்

ஆறு மாதங்களாக ஒரு திரைப்படத்திற்குக் கதை நெய்யும், வசனம் எழுதும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். மிகவும் உவப்பான அனுபவமாக இருந்தது. கதை உருவாகும் போதே பல கதாபாத்திரங்கள் தோன்றுவதும் மறைவதும் தங்கள் கைகளை நம் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்வதும் என புது விதமான அனுபவத்தைக் கொடுத்தது. கதையின் போக்குகள் நாளுக்கு நாள் மாறியவாறே இருக்கும். கதாபாத்திரங்கள் முழுமையாக உருப்பெறுவது படத்தின் முதல் திரைப்பதிப்பு உருவாகும் வரையிலும் தொடரும். அந்தப் படம் தந்த அனுபவத்திலும் ஊக்கத்திலும் இப்பொழுதும் சென்ற மாதம் முதல் மற்றுமொரு திரைப்படத்திற்குக் கதை எழுதும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.

தற்காலத் தமிழ் சினிமாவின் சம்பிரதாயங்களுக்கும் நியாயங்களுக்கும் உட்பட்டு அந்தக் கதா பாத்திரங்களின் தலை சீவப்படும். பொட்டு வைக்கப்படும். குணச்சித்திரங்கள் கதையின் வழியாக உருவேற்றப்படும். நடிகர்கள் அந்தக் கதா பாத்திரங்களுக்குள் புகுந்து கொண்டு அவற்றின் கண்களைத் திறந்து விடுவர். நம் சிந்தனையின் இடைப்பட்ட நினைவு வெளிகளிலிருந்தெல்லாம் அக்கதாபாத்திரங்கள் தோன்றும் தருணம் மிகவும் உற்சாகம் கொப்புளிக்கக் கூடியது. இன்னொரு கதாசிரியருடன் எனது இப்பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவர் தினம் தினம் கதையை தொடக்கத்திலிருந்தே சொல்லத் தொடங்குவார். கதையின் போக்குகள் சீர்ப்படுமாறு அவர் சொல்வதும் இன்னும் இன்னும் கற்பனையைச் செழுமையாக்குவதும் உற்சாகமான பணியாக இருக்கும். கதைப் போக்கைச் செதுக்குதல் என்று சொல்லலாம். மாறி மாறி கதாபாத்திரங்களின் உள்ளுலகை உருவாக்குவதில் எங்கள் இருவருக்கும் உண்டாகும் ஈடுபாடும் வேகமும் எங்களைக் கதைக்குள் தலைகுப்புற விழச்செய்வது போல் நாங்கள் நிற்கும் தரையை இழுப்பதையும் உணர்வோம். கதைக்குள் பாய்ச்சலுடன் குதித்து மூள்கித் திளைப்பதும் எதிர் நீச்சலடிப்பதும் எனக்குப் பிடித்தமானதாய் இருப்பதால் மீண்டும் மீண்டும் இந்தப் பணியைத் தேடித் தேடித் தொடர்கிறேன்.

அவரும் நானும் அதிகாலையிலேயே ஒரு பெரிய உணவு விடுதியில் சந்திப்போம். அவர் வீட்டிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அந்த உணவு விடுதிக்கு ஓட்ட கதியில் வருவார். தினமும் ஓடுவதைப் பழக்கமாகக் கொண்டவர். ஓட்டப் பழக்கம் கற்பனையின் ஊற்றுக்கு ஆரோக்கியமானது என்று கூறுவார். நிறைய கதைக் காட்சிகளை அவ்வாறு ஓடி வரும் போது தான் கண்டடைவதாகக் கூறுவார். எனக்கு நீண்ட தூரம் நடந்து செல்வது அம்மாதிரியான அனுபவத்தைக் கொடுப்பதாக உணர்ந்திருக்கிறேன்.


கதை நெய்தல் கடுமையான உழைப்பையும் மனம் குவிந்த நிலையையும் வேண்டுவது. கற்பனையின் பாய்ச்சலும் யதார்த்தத்துடனான தொடர்ச்சியும் பேணவேண்டுவது. இந்நிலையில் உருவாகும் கதை வெறும் கதை சொல்லலை மட்டுமே பணியாகக் கொண்டிருப்பதில்லை. இயக்குநர் அல்லது கதாசிரியர் உணர்ந்த அனுபவத்தை பார்வையாளர்க்கு வாசகர்க்கு கடத்துதலாகவும் இருக்கலாம். அப்படியான மெய்ம்மையான திரைப்படங்கள் தமிழில் மிக மிகக் குறைவு. கதைக்காக ரூம் போட்டு யோசிப்பவர்களிடம் அனுபவ விளைச்சலும் குறைவாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை.


தீவிரமான ஈடுபாட்டைக் கோரும் எந்தப் பணியும் உலோகாயத சம்பவங்களில் இருந்து நம்மை விடுவிக்கின்றன. அப்பொழுது புனைவுக்கும் யதார்த்தத்திற்கும் இடையே கூடுபாயும் நிலையை அடைகிறோம். முந்தைய திரைப்படத்திற்கு ஒரு வசனகர்த்தாவுடன் இணைந்து வேலை செய்யும் அனுபவம் கிடைத்தது. அவர் ஒவ்வொரு கதாபத்திரத்தையும் பக்கம் பக்கமாக வசனங்களால் நிறைப்பவர். அவருடைய பாத்திரங்களால் அமைதியாக ஒரு விஷயத்தை வெளிப்படுத்தவே முடியாது. கேட்டால் சொல்வார், ‘தியேட்டர் சென்று தமிழில் வரும் எல்லா திரைப்படங்களையும் பாருங்கள். வசனங்களால் தான் வசூல் பெட்டிகள் நிறைகின்றன’, என்று. ஆனால் மனித மனங்களை வசனங்கள் அற்ற உறவு நிலைகள் எப்படி வெல்லுகின்றன என்பதைத் திரைக்குக் கொண்டு வருவது தான் சினிமா விடுக்கும் சவால் என்பதே நான் புரிந்து கொண்டது.



குட்டி ரேவதி