நம் குரல்

கவிதைக்கான பண்பாட்டு வெளி

சென்னையின் பண்பாட்டு வெளிகள் பற்றிய ஒரு விவாதத்தையும் கூட்டத்தையும் நிகழ்த்தியது சென்னை மாக்ஸ் முல்லர் பவன். எப்பொழுதேனும் இப்படிக் கூட்டங்களில் கலந்து கொண்டு ஒரு மன நிறைவோடு திரும்ப முடிவது ஆச்சரியமான விஷயம் தான். எட்டு உறுப்பினர் கொண்ட குழுவின் விவாதம் மூன்று மணி நேரம் நீடித்தது. ஆங்கிலத்தில் எழுதும் தமிழ்க் கவிஞர்களும், நாடக இயக்குநர்களும், கட்டிடக்கலைஞர்களும் என தமிழர்களும் ஜெர்மானியர்களுமாக இருந்த அக்கூட்டத்தில் தொடங்கிய விவாதம் இரவு உணவின் போதும் நீடித்தது.


பண்பாட்டு வெளி என்பது சென்னையில் நீங்கள் உங்கள் கலை அடையாளங்களையும் வெளிப்பாடுகளையும் நிகழ்த்துவதற்கான வெளி என்ற அர்த்தத்திலே தொடங்கியது. கவிதை வாசிப்பதற்கான வெளி என்பதைக் கண்டடைய சென்னையில் கவிஞர்களின் முயற்சிகள் எந்தெந்த வடிவில் இருக்கின்றன என்பதாகவும் அரசின் ஆளுகைக்குள் எப்படி அவை சிதைவுற்றும் பொருந்தா வடிவம் கொண்டும் எழுகின்றன என்பதும் என்னுடைய விவாதப் பொருளாக இருந்தது. நகரத்தின் மையத்திலிருந்து புறப்பட்டு தொலைதூர வெளிகளுக்கு இலக்கிய நுகர்வுக்காகச் செல்லும் இலக்கியவாதிகள் தம் சுயப்பிரச்சனைகளால் எப்படி இலக்கிய விவாதம் என்பது ஒரு பண்பாட்டு வெளியைக் கண்டடையாமலேயே போகிறது என்பதும் அதன் உட்பொருள். வேறுவேறு கவிதை வாசிப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அந்நிகழ்வுகளின் போதாமை என்பதை கவிதை குறித்த நம் சமூகத்தின் அவமதிப்பைச் சுட்டுவதாகவே உணர்ந்தேன். சில சமயங்களில் பிரபல புத்தகக் கடைகளிலும் நவீன உணவகங்களிலும் காபிக் கடைகளிலும் நிகழ்த்தப்பட்ட கவிதை வாசிப்புகள் கூட அந்தந்த சூழலுக்குப் பழக்கமான ஓசைகளுடன் கரைந்து போயின.
கவிதையை எழுதுவதும் அக்கவிதையை பிறிதொரு கவிஞருக்கு வாசித்துக்காட்டுவதும் அதன் இயலில் உட்புகுந்து திளைத்து அதன் சிக்கல்களைக் களைவதுமான அனுபவத்திற்காக நான் மிகவும் ஏங்கியிருக்கிறேன். என்றாலும் தமிழகத்தில் கவிதை என்பது ஒரு மலிவான, நடுவாந்திரமான இலக்கிய வகையாக திரிபுற்று அரசியல் நாற்காலிகளுக்குக் கால்களாகி நிற்கின்றது. அவ்வண்ணமே அதிகாரத்தின் இருக்கையைப் பிடிக்கவும் ஏதுவாகிறது. இந்நிலையில் வெகுஜனப் புலத்திலிருந்து விலகி நின்று எல்லாவற்றையும் உள்வாங்கும் மனோபாவமே செவ்வியதொரு கவிஞனின் மனோபாவமாக இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். இதற்கு நிறைய மூத்த கவிஞர்களின் வாழ்க்கை முறையும் அவர்களின் படைப்பாக்கத் தீவிரமும் எனக்கு உந்துசக்திகளாக இருக்கின்றன.


கவிதை வாசிப்பு இன்று எல்லா இலக்கிய அரசியல் நிகழ்வுகளிலும் கட்டாயமான ஒரு நிகழ்வாக இருப்பதே அதைக் காயடிக்கும் விஷயமாக மாறுவதையும் உணரமுடிகிறது. கவிதையை வாசித்தல் என்பது அது நிகழும் வெளிக்கேற்ற அர்த்தங்களை எடுப்பதாகவும் உணர்கிறேன். இந்நிலையில் அரசியல் கூட்டங்களின் கவியரங்கங்கள் துதிபாடல்களாக வார்த்தைத் தோரணங்களாக தொங்குகின்றன. கவிதையியல் என்பது ஒரு விவாதமாகவும் உரையாடலாகவும் எழும்பாத சமூகத்தில் இப்படி கவிதை என்பதும் கவிஞர் என்பவரும் மலிந்த அர்ததங்களோடு தான் அணுகப்படுவர் என்றும் எண்ணுகிறேன்.சமீபத்தில் ‘உள்ளுறை’ என்ற கவிதை இதழை வாசிக்க நேர்ந்தது. கவிதையியல் குறித்த தொடக்கப்புள்ளிகளை அதில் பதிவு செய்துள்ளதைக் கண்டு மிகவும் உற்சாகமானேன். அதில் இடம்பெற்றிருந்த கவிதையியல் பற்றிய சீரிய மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் ஒரு பெரிய அனுபவத்தையும் இன்னும் இன்னும் மைய நீரோட்டத்திலிருந்து விலகி எழுத வேண்டும் என்ற உந்துதலையும் தந்தன. கவிதையின் அகழாய்வு தீராதது என்பதும் உறுதியாயிற்று. அந்த இதழைத் தேடிப்படித்துப் பாருங்களேன். எனது அபிமானத்திற்கு உகந்த கால. சுப்ரமணியனும் மோகன ரவிச்சந்திரனும் அதன் ஆசிரியர் குழுவில் இருக்கிறார்கள். இந்த இதழின் வழியாகக் கூட கவிதைக்கான ஒரு புதிய பண்பாட்டு வெளி விரிவதாக நான் உற்சாகமாகிறேன்.
குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: