நம் குரல்

கடவுளை இல்லாமல் ஆக்கினேன்


எல்லாம் அறிந்தவனான ரோஹித்தும் அந்த நீலக்கயிற்றின் சுருக்கில் தலையை இறுக்கிக் கொண்டான் நட்சத்திரங்களைக் கண்களிலிருந்து உதிர்த்துவிட முடிவெடுத்தவன் சில நட்சத்திரங்களைத் தந்து போகப் போராடினான் செட்டைகளைத் தன் மீதே மீண்டும் மீண்டும் அடித்துக் கொண்டான் உடலுக்கும் இதயத்திற்கும் இடையே பயணம் தூரமாகிப் போக அவன் சூரியனைத் தன் தலைமீதே சுமந்து நடந்தான் விடுதலையின் பதாகை வானமாகி மேலே எழும்பிக் கொண்டேயிருந்தது
ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு அவன் கனவுக்கோட்டை எதையும் வாங்கவிரும்பவில்லை புதிய வீடும் சாளரங்களும் கட்டவிரும்பவில்லை கடனும் பசியும் சில நூல்களும் அவன் தனக்கான கூரையைத் தேடினான் உயரமான கூரைக்கு ஏறிப்போக ஏணியைத் தேடினான் ஏணியின் மீதேறும்போதெல்லாம் கூரை மேலெழும்பிச் சென்றது எழும்பி மேலே சென்று கொண்டே இருந்தது ஏணியின் தேவையின்றி கூரையின் கீழ் வாழ்ந்தவர்கள் அவனுக்கு ஏணி அவசியமற்றது என்றனர் ஏணியைப் பறித்து மடித்து உடைத்தனர்
கூரை உடையவர்களுக்கு ஏணி அவசியப்படாதவர்களுக்கு கடவுள் எதுக்கென அவனை இல்லாமல் ஆக்கினேன்
(ரோஹித் வெமூலாவிற்கு)
குட்டி ரேவதி


* (சென்னையில் சனவரி 24, 2016 அன்று, Pranjya ஒருங்கிணைத்திருந்த Zero Apologies கவிதை வாசிப்பு நிகழ்வில் வாசிக்கப்பட்டது.)

கருத்துகள் இல்லை: