நம் குரல்

'தி இமிடேஷன் கேம்' - கடிக்கப்பட்ட ஆப்பிளும் ஹோமோசெக்சுவலின் வரலாறும்!



இரண்டாம் உலகப்போரின் பொழுது, கணிதவியலாளன் ஆலன் டூரினின் அசாதாரண செயலை அவருடைய வாழ்க்கையினூடாகப் பார்க்கும் ஒரு படம். ஹோமோசெக்சுவலாக இருந்த ஆலன் டூரின், ஹிட்லர் போருக்குப் பயன்படுத்திய குறியீடுகளின் அர்த்தங்களை ஆராய்ந்து கண்டறிந்ததே, இந்தப்படத்தின் ஒட்டுமொத்தக்கதை.
கதையினூடாக, ஆலன் டூரினின் வாழ்வும், ஹோமோசெக்சுவலாக இருந்ததால் உண்டான போராட்டங்களும் சொல்லப்படுகிறது. அதேசமயம், இந்த நூற்றாண்டின் மனிதக்கண்டுபிடிப்புகளில் முதன்மையானதும் முக்கியத்துவம் உடையதுமான, கணினி உருவாக்கத்தில் ஆலன் டூரினினின் பங்கு முழுமையும் இந்தப்படத்தின் வழியாக உணரப்படுகிறது.

நாஜிக்களின் படைகள், பிரிட்டன் மீது எங்கு எவ்வாறு குண்டுகள் இடப்படவேண்டும் என்பதை, குறியீட்டுத்தகவலாகப் பரிமாறிக்கொண்டிருந்த பொழுது, அந்தக் குறியீடுகளைப் பிரித்து அறியும் சாதனையைச் செய்கிறார், டூரின். இந்தத்தனிமனிதரின் செயலால், இரண்டு வருட காலப் போர் குறைப்பு நிகழ்ந்ததாகவும், லட்சக் கணக்கான மக்களின் உயிரும் வாழ்வியலும் பாதுகாக்கப்பட்டதாகவும் சொல்கின்றனர். ஒரு மனிதனின் அறிவு, வரலாற்றையும் அரசியலையும் நல்வழியில் புரட்டிப்போடமுடியும் என்பதற்குக் காலகாலமான ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது, ஆலன் டூரினின் வாழ்வு. ஒரு தனிமனிதனின் பாலியல் போராட்டமும், அறிவார்ந்த சவாலை எதிர்கொள்ளும் விதமும், இருபக்கக் கதைகளாக இப்படத்தில் விரிகின்றன.

அப்பொழுது, பிரிட்டனில், ஹோமோசெக்சுவலாக இருப்போர் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். ஆலன் டூரினின் பாலியல்பின்புலம் அறியநேர்ந்த அரசு, அவருடைய சாதனைகளையும் மறந்து சிறை தண்டனை அல்லது, ஈஸ்ட்ரோஜென் என்ற பெண்ணய ஹார்மோனை உடலுக்குள் செலுத்துதல் என்ற இரண்டு தண்டனைகளைப் பரிசீலித்தபொழுது, ஆலன் டூரின் ஹார்மோனை உடலுக்குள் செலுத்தும் தண்டனையை ஏற்றுக்கொண்டார்.
ஆனால், குறைந்த காலத்திலேயே அவர் நஞ்சூட்டப்பட்ட ஆப்பிளைக் கடித்துத் தற்கொலை செய்து கொண்டார் அல்லது, அது சயனைட் தடவப்பட்ட ஆப்பிளை தற்செயலாகக் கடிக்க நேர்ந்ததில் நிகழ்ந்த விபத்து என்றும் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. ராணி எலிசபெத், அவரது ஹோமோசெக்சுவல் அடையாளத்தைத் தண்டித்ததற்காக, மரணத்திற்குப் பின்பான அரசு மன்னிப்பை அறிவித்தார்.
இன்று புகழ்மிக்க, ஆப்பிள் மற்றும் ஐஃபோன்களின் லோகாவாக இருக்கும், 'கடிக்கப்பட்ட ஆப்பிள்' என்பதை ஸ்டீவன் ஜாப்ஸ், ஆலன் டூரின் இறக்கக் காரணமான அந்த நஞ்சூறிய ஆப்பிளிலிருந்து தான் எடுத்துக்கொண்டார் என்ற தகவல் உண்டு.

கணிதவியலாளன் ஆலன் டூரினின் வாழ்வு, ஒரு கவிஞனின் வாழ்வைப் போன்றே குறியீடுகளுடனும் வெளிப்படையான அரசியலுடனும், அறியாமைகளுடனும் இருப்பதாக உணர்ந்தேன். இந்தப்படத்தில், கதை சொல்லப்பட்டிருக்கும் விதத்தில், சூழும் சமூகப் பாதிப்புகளை எல்லாம், தன் மார் மீதே வாங்கிக்கொள்ளும் ஒரு கலைஞனாக ஆலன் டூரின் நிமிர்ந்தெழும் பரவசத்தைப் படம் காணும்பொழுது உணரமுடியும்.
அதே சமயம், ஒரு சரியான சினிமா எப்படி தன் கலைவாய்ப்பை ஒரு சாக்காகக் கொண்டு, மனிதஇனத்தின் சாதனைகளையும் அவற்றின் துல்லியங்களையும் அழகாகப் பதிவுசெய்துவிடுகிறது என்பதையும் இப்படத்தில் உணரமுடிகிறது.

குட்டி ரேவதி

சினிமாவை எவரும் விமர்சிக்கலாம்!



தமிழ் சினிமாவின் சமூகத்தாக்கம் அளவிடமுடியாதது. இன்னும் சொல்லப்போனால், சமீப காலங்களில், அது சமூக மையம் நோக்கித் தன்னை வேகமாக நகர்த்திக்கொண்டு வரும் போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஒரு நிரந்தரமில்லாத கொந்தளிப்பான நிலையில், இன்னும் முடிவெடுக்க முடியாத ஒரு தத்தளிப்பான, தன்னை சீரமைத்துக்கொள்வதற்கான நிலையில் இருக்கிறது.

மேட்டுக்குடித்தன்மையையும் மேல்சாதியாதிக்கத்தையும் சரளமாகக்கொண்டிருந்த பழைய சினிமா போக்கிலிருந்து நகர்ந்து, பாமரனின், ஒடுக்கப்பட்டவனின் குரலாக, நவீனத்தின் அடையாளமாக மாறிக்கொண்டே இருக்கிறது.
இதில் பல தனிமனித கலைமுயற்சிகளும், எவரும் சினிமாவை விமர்சனம் செய்யக்கிடைத்த வாய்ப்பும், டிஜிட்டல் புரட்சியும், இணைய வீச்சும் மிகப்பெரிய பங்குகளை வகிக்கின்றன.
இன்னும் சினிமா பெருவாரியாக மாறும். சினிமாவிற்கான முதலீடு மீது இருக்கும் அதிகாரமும், குறிப்பிட்ட பணபலம் மட்டுமே இருப்பவர்களுக்கான வாய்ப்பும் மாறும் போது, தற்பொழுதைய சூழலும் மாறும்.


உலக சினிமாவுடனும், பிற மாநில மொழி சினிமாக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து நாம் தமிழ் சினிமாவைப் புரிந்து கொண்டாலும், சீர்தூக்கிப் பார்த்தாலும் கூட, தனித்துவப் போக்கில், தமிழ் சினிமா தனக்கென புதிய உருவாக்கங்களை, உள்ளடக்கங்களை, தாக்கங்களை ஏற்படுத்திய வண்ணம் இருக்கிறது.
மாற்று சினிமா, கலை சினிமா, வணிக சினிமாவுக்கு எதிரான சினிமா என்பதையெல்லாம் இன்றைய இளைய தலைமுறையின் சினிமா தன் புறங்கையால் உதறி, முற்றிலும் புதிய இடத்திற்கு நகர்த்திச் செல்ல முயற்சிசெய்த வண்ணம் உள்ளது.

நித்தமும் தன் அதிகார வரையறைகளை மாற்றும் தமிழ்சினிமாவுடன் ஓட்டம் பிடிக்க முடியாதவர்கள், அதன் மீது ஒவ்வாமையை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். வெறுப்பை உமிழ்ந்திருக்கிறார்கள். ரகசியமாக, நேசித்திருக்கிறார்கள். சினிமா மீது பேதலிப்புடன், காதலுடன் திரிந்திருக்கிறார்கள். தம் வாழ்வைப் பணயம் வைத்திருக்கிறார்கள்.

சினிமா என்னும் கலை ஊடகத்தின் மீதான மக்கள் விமர்சனம் கூர்மையாக, கூர்மையாக, அது இன்னும் அதிகமாகத் தன்னைச் செம்மையாக்கிக் கொள்ளும். சமூகத்திற்கானதாக ஆக்கிக்கொள்ளும். அதிகாரத்தின் கைகளிலிருந்து பிதுங்கி வெளியேறி எப்பொழுதும் தன்னை நவீனமாக்கிக்கொள்ளும், விடுதலையாக வைத்துக்கொள்ளும் சினிமாவின் தாக்கத்தை யாரும் புறக்கணிக்க முடியாது. சினிமா தான் இன்றைய நம் கை ஆயுதம்!

குட்டி ரேவதி

கவிதை என்றால், எனக்கு பிரமிளை நினைவூட்ட ஒரு சாக்கு!



கவிதை என்றால் என்ன என்பது குறித்த தெளிவான விவாதக்களத்திற்கு இன்னும் நாம் வந்து சேரவில்லை.
தமிழ்நவீனக்கவிதை எழுத வரலாறு, தத்துவம், மொழி எல்லாம் அவசியம் என்று பதிவிட அறிந்தவர்கள், நவீனத்துவம் நிறைந்த ஒரு கவிதையை எழுத, சமகால மொழியின் அரசியல், சமூக அரசியல் அறிந்திருக்கவேண்டும் என்பது முக்கியமாகத் தோன்றவில்லை.

கவிதைகள் குறுகிய வட்டத்திற்குள்ளேயே எழுதப்படவேண்டும், எழுதியவராலே எழுதப்பட்டதாக இருக்கவேண்டும், அங்கீகாரம் பெற்றவராலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற மனநிலை, வழக்கமான 'சிற்றிதழ் மனநிலை'.
சிற்றிதழ் மனநிலை, இன்று மேட்டிமை மனநிலையாக, மேலாதிக்க மனநிலையாக, ஏன் ஆதிக்கசாதி மனநிலையாக நன்கு வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அதற்கென்று ஓர் அதிகாரம் தேவைப்படுகிறது என்பதையும் நீங்களே பார்க்கலாம்.

ஆதிக்க சாதிவெளிப்படைப்புகளுக்கு பொதுவெளியின் அங்கீகாரமும் அதிகாரமும் தாராளமாக வழங்கப்பட்டிருப்பதும் நாம் அறியாதது அல்ல.
தனக்கான அங்கீகாரத்திற்கு மட்டுமே பொறுப்பேற்கும் தனிமனித மனநிலையிலிருந்து தீவிர இலக்கியம் என்று சொல்லிக்கொள்ளப்படும் 'சிற்றிதழ் இலக்கியவெளி' இன்னும் விடுபடவே இல்லை.
கவிதை இயக்கம், ஒரு தீப்பந்தம் போல. தொடர் ஓட்டத்தில் அது கைகளை மாற்றிக்கொண்டே இருக்கிறது. அவ்வளவே.

சமகால கவிஞர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதில், நிறைய அசெளகரியங்களும், கருத்தியல் பிழைகளும், முரண்பாடுகளும் நிகழ்ந்துவிடுவதாலும்,
பிரமிளின் கவிதை வீச்சும் அரசியல் தெளிவும் பொதுச்சமூகத்தைச் சென்று சேருவதன் அவசியம் இன்னும் அதிகமானது என்பதை இந்நாளில் உணர்வதாலும்,
என் கவிதை வாழ்வுக்கான முழு எழுச்சியையும் பிரமிளின் கவிதை ஆக்கங்கள் தரும் தீரா கொந்தளிப்புகளிலிருந்தே நான் பெற்றுக்கொள்வதாலும்,
கவிதையென்றால், பிரமிளை நினைவூட்டிப்பேச அவருடைய பிறந்த நாள் நல்லதொரு சாக்கே என்பதாலும் இன்று, இங்கே பிரமிள்!

குட்டி ரேவதி

தாலியின் சரித்திரம் - பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன்


கி.பி.10ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலி
என்ற பேச்சே கிடையாது
தாலி கட்டுதல், திருப்பூட்டுதல், மாங்கல்ய தாரணம் ஆகிய சொற்கள் பெண்ணின் கழுத்தில் ஆண் தாலி அணிவிப்பதைக் குறிக்கின்றன. தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கும்போது மணமக்களுக்குப் பின்னால் மணமகனின் சகோதரி அல்லது சகோதரி முறை உள்ளவர்கள் கட்டாயம் நிற்க வேண்டும். மணமகனுக்குத் தாலி முடிச்சுப் போட அவள் உதவி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பெருவாரியாக நிலவி வரும் வழக்கம் இதுவே.
மணவறையில் அல்லாமல் ஊர் மந்தையில் நின்றுகொண்டு தாலி கட்டும் வழக்கமுடைய ஜாதியாரிடத்திலும் சகோதரி மணமகனுக்குத் தாலி கட்டத் துணை செய்கிறாள். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒன்றிரண்டு ஜாதியாரிடத்தில் இரண்டு வீடுகளுக்கு இடையில் உள்ள சந்து அல்லது முடுக்குக்குள் சென்று மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டுவது சில ஆண்டுகளுக்கு முன்வரை வழக்கமாக இருந்தது. இது வன்முறையாகப் பெண்ணை வழிமறித்துத் தாலிகட்டிய காலத்தின் எச்சப்பாடாகும்.
ஒரு நூற்றாண்டு முன்வரை சில ஜாதியாரிடத்தில் மணமகள் திருமண நிகழ்ச்சிக்கு வர முடியாதபோது மணமகனை அடையாளப்படுத்த அவன் வைத்திருக்கும் பொருள்களில் ஒன்றைக் கொண்டுவந்து மணமகளின் பக்கத்தில் வைத்து மணமகனின் சகோதரி தாலி கட்டுகிற வழக்கம் இருந்திருக்கிறது.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் வாழும் அம்பலக்காரர்களிடத்தில் மணமகனுக்குப் பதிலாக அவனுடைய வளைதடியைக் (வளரியை) கொண்டுபோய் அவனுடைய சகோதரி மணப்பெண்ணுக்குத் தாலி கட்டுகிற வழக்கம் இருந்துள்ளது. மணமகன் இல்லாமலேயே மணமகளுக்குத் தாலி கட்டும் வழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாகும்.
தாலி என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை. ஆனால், தாலி தாலாட்டு ஆகிய சொற்களைக் கொண்டு தால் என்பது தொங்கவிடப்படும் அணி (காதணி, மூக்கணி, விரலணி போல) என்று கொள்ளலாம்.
நமக்குக் கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து (சங்க இலக்கியங்கள் சிலப்பதிகாரம்) அக்காலத்தில் ஆண் பெண்ணுக்குத் தாலி கட்டும் வழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.
தமிழர் திருமணத்தில் தாலி உண்டா? இல்லையா? என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954இல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தவர் கவிஞர் கண்ணதாசன். தாலி தமிழர்களின் தொல் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. மட்டுமே.
கி.பி.10ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலி என்ற பேச்சே கிடையாது என்கிறார் கா. அப்பாத்துரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும், தமிழ் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனாரும் பழந்தமிழர்களிடத்தில் மங்கலத்தாலி வழக்கு கிடையாது என உறுதியுடன் எடுத்துக் கூறினர்.
தொல் பழங்குடி மக்கள் பிள்ளைகளைத் தீயவை அணுகாமல் காப்பதற்குப் பிள்ளைகளின் இடுப்பில் அரைஞாண் கயிற்றில் சில பொருள்களைக் கட்டும் வழக்கம் இருந்தது. அவ்வழக்கம் மிக அண்மைக்காலம்வரை கூட நீடித்தது. இவ்வாறு அய்ந்து பொருள்களைப் பிள்ளைகளின் அரைஞாண் கயிற்றில் கட்டுவதை சங்க இலக்கியங்கள் அய்ம்படைத் தாலி என்று குறிப்பிடுகின்றன. மிக அண்மைக்காலம் வரையிலும்கூட கிராமப்புறங்களில் குழந்தைகளின் அரைஞாண் கயிற்றில் நாய், சாவி, தாயத்து ஆகிய உருவங்களைச் செய்து கட்டுவது வழக்கமாயிருந்தது.
நந்தனின் சேரிக்குழந்தைகள் அரைஞாண் கயிற்றில் இரும்பு மணி கட்டியிருந்ததாகக் குறிப்பு பெரிய புராணத்தில் உள்ளது.
எனவே, தாலி என்னும் சொல் கழுத்துத்தாலியைத் தொடக்க காலத்தில் குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது.
கி.பி. 7ஆம் நூற்றாண்டில் திருமணச் சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பற்றிய பேச்சே கிடையாது. மாறாக, தான் கொன்ற புலியின் பல்லை எடுத்து வீரத்தின் சின்னமாக ஆண் தன் கழுத்தில் கோர்த்துக் கட்டிக் கொண்டால் அதைப் புலிப்பல் தாலி என்று குறிப்பிட்டுள்ளனர்.
புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி (அகநானூறு) புலிப்பல் தாலிப் புன்தலைச் சிறார் (புறநானூறு)
இரும்புலி எயிற்றுத் தாலி இடையிடை மனவுகோத்து (திருத்தொண்டர் புராணம்)
தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.
தமிழ்நாட்டில் இப்போது பயன்படுத்தப்பட்டுவரும் தாலிகளில் சிறுதாலி, பெருந்தாலி, பஞ்சார(கூடு)த் தாலி, மண்டைத் தாலி, நாணல் தாலி (ஞாழல் தாலி) பார்ப்பாரத் தாலி, பொட்டுத் தாலி ஆகியவை பெருவாரியான மக்களால் பயன்படுத்தப்படுபவை ஆகும்.
ஒரு ஜாதிக்குள்ளேயே அதன் உள்பிரிவுகள் சிறுதாலி, பெருந்தாலி வேறுபாட்டால் அடையாளப்படுத்தப்பட்டன. ஒரு காலத்தில் உணவு சேகரிப்பு நிலையில் வாழ்ந்த சில ஜாதியார் இன்றுவரை கழுத்தில் தாலிக்குப் பதிலாகக் காரைக்கயிறு எனும் கருப்புக்கயிறு கட்டிக் கொள்கின்றனர். கழுத்தில் காரை எலும்பை ஒட்டிக் கட்டப்படுவதால் அது காரைக்கயிறு எனப் பெயர் பெற்றது. பார்ப்பாரத் தாலியில் ஒரு வகை, பெண்ணின் மார்புகள் போன்ற இரண்டு உருவத்திற்கு நடுவில் ஒரு உலோகப் பொட்டினை வைத்துக் கொள்வதாகும். இது மனித குல வரலாற்றில் ஏதோ ஒரு தொல் பழங்குடியினரின் கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும்.
கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாகக் கொள்ளலாம். அதன் பின்னரே, கோவில்களிலும் பெண் தெய்வங்களுக்குத் தாலி அணிவிக்கப்பட்டது. திருக்கல்யாண விழாக்களும் நடத்தப்பட்டன. நாளடைவில் தாலி மறுப்பு அல்லது நிராகரிப்பு என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. தம் குலப் பெண்களுக்கு மேலாடை அணியும் உரிமைகோரி குமரிப்பகுதி நாடார்கள் நடத்திய தோள்சீலைப் போராட்டத்தை ஒடுக்க அன்று நாயர்கள், நாடார் பெண்களின் தாலிகளை அறுத்தனர். அந்த இடம் இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று வழங்கப்படுகிறது.
இந்தியச் சிந்தனையாளர்களில் தந்தை பெரியார்தான் முதன்முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும் எழுதவும் தொடங்கினார்.
அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின. ஆணுக்குப் பெண் தாலி கட்டும் அதிர்ச்சி மதிப்பீட்டு நிகழ்ச்சிகளும் சில இடங்களில் நடந்தன. பின்னர், 196இல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லாத் திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது.
கடைசியாக ஒரு செய்தி, சங்க இலக்கியங்களில் தாலி மட்டுமல்ல, பெண்ணுக்குரிய மங்கலப் பொருள்களாக இன்று கருதப்படும் மஞ்சள், குங்குமம் ஆகியவையும்கூட பேசப்படவே இல்லை.

புத்தகங்கள் உறங்குவதே இல்லை!


புத்தகங்களுடன் புழங்குவதற்கான நெருக்கமும், அவற்றை வாசிப்பதற்கான வாய்ப்பும் அதிகரிக்க, அதிகரிக்க புத்தகங்கள் மீதான அளவுக்கதிகமான உடைமை உணர்வு மாறியே விட்டது.
ஆனால், பிடிவாதமான சில விடயங்கள் இன்னும் மாறவே இல்லை.
இன்றும் ஒரு நண்பருக்கு அல்லது குறிப்பிட்ட நிகழ்விற்கு, தருணத்திற்கு அன்பளிப்பாக செய்ய புத்தகத்தினும் உன்னதமானதும், பொருத்தமானதும் வேறு இல்லை.
நம் அடிமனதில், எந்த விடயத்தின் மீது அதிகமான ஆர்வமும் ஈடுபாடும் உள்ளதோ, அதுகுறித்த முக்கியமான நூலைத் தேடிச்செல்லும் வாய்ப்பு அல்லது அந்த நூலே உங்கள் கைகளுக்கு வரும் வாய்ப்பு மிகவும் குறைந்த தூரத்தில் இருக்கிறது. அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் தான், அம்பேத்கரின் புத்தரும் அவர் தம்மமும் நூல் எனக்கு நிகழ்ந்தது.
மேலும், ஒரு நூலை மிக விருப்பத்துடன், அட்டை முதல் அட்டை ஒவ்வொரு சொல்லையும் வாசித்து அதன் அர்த்தத்தை உறிஞ்சிய பின்னும், நூலை கீழே வைக்க மனமில்லாமல், உடன் தூக்கிச் சுமக்கும் மனநிலையும் மாறவில்லை.
ஒவ்வொரு நூலுக்காகவும் நீண்ட காலம் உழைத்து, அதனுடன் பொறுமையானதொரு காலம் செலவழித்த பின்னும், அச்சான அந்த நிமிடத்தில், நூலுக்கு இறக்கை முளைத்தது போல் அது என்னிடமிருந்து பறந்துவிட்ட உணர்வே ஏற்படுகிறது. அந்த நூல் மீது, பின் எந்த ஒட்டுதலும் இருப்பது இல்லை.
உண்மையில், சரியான நோக்கத்துடன் எழுதப்பட்ட எவருடைய ஒரு நூலும், அது கவிதையோ, கட்டுரையோ, நாவலோ, ஒரு விசித்திரமான மாயக்கம்பளம் தான். அது, தன்னுள் எல்லாவிதமான மந்திரவித்தைகளையும் கட்டுகளாகக் கொண்டிருக்கிறது.
மனிதர்களை விட, புத்தகங்களே மேலானவையாக இருக்கின்றன என்ற கருத்தை எப்பொழுதும் மாற்றிக்கொள்ளவேண்டியிருக்காது என்றும் மனம் உறுதியாக நம்புகிறது.
புத்தகங்கள் உறங்குவதே இல்லை. நிரப்பப்பட்ட சொற்களின் முழு உணர்வெழுச்சியுடன் எப்பொழுதும் விழித்திருக்கின்றன.
புத்தகங்கள் ஒரு தனிமனிதனுடன் கொண்டிருக்கும் இடத்தை வேறெந்த ஊடகமும் எடுத்துக்கொள்ளமுடியாது என்றே நினைக்கிறேன்.

குட்டி ரேவதி