நம் குரல்

மாட்டுக்கறி - எங்கள் வாழ்வு (தெலுங்கு கவிதையின் தமிழாக்கம்)









மாட்டுக்கறி எங்கள் பண்பாடு
மாட்டுக்கறி - எங்களது வாழும் பசுமை
வாழ்க்கையின் பன்முகம்
எங்கள் ஆன்மாவின் உயிர்மூச்சு
"மாட்டுக் கறி உண்ணாதீர்கள்"
நான் உன்னை கேட்கிறேன் - "எப்படி உண்ணாமல் இருப்பது?"
நீ யார் எனக்கு அறிவுரை கூற, எங்கிருந்து வந்தவன்?
எனக்கும் உனக்கும் என்ன உறவு?
நான் கேட்கிறேன்.
இன்று வரைக்கும்
நீ ஒரு ஜோடி காளை மாடுளை வளர்த்திருப்பாயா?
ஒரு ஜோடி ஆடுகளையாவது?
ஒரிரண்டு எருமைகளை?
அவைகளை மேய்த்த அனுபவமுண்டா?
குறைந்தபட்சம் கோழியாவது வளர்த்ததுண்டா?
இவைகளுடன் ஆற்றில் இறங்கி
அவற்றை தேய்த்துக் குளிப்பாட்டியதுண்டா?
காளையின் காதை அறுத்து துளையிட்டதுண்டா?
இல்லை, அவற்றின் பற்களைப் பிடித்து பார்த்திருக்கிறாயா?
அவற்றுக்கு பல்வலி வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?
அவற்றின் கால் குளம்புகள் புண்ணானால்?
உண்மையில் உனக்கு என்னதான் தெரியும்?
"மாட்டுக் கறி உண்ணாதே" என்று சொல்வதை தவிர?
பாலூட்டும் தனது மகளுக்கு, பிள்ளைப் பெற்று
கொஞ்சநாட்கள் கூட ஆகாத அவளுக்கு
எப்படியாவது
நன்கு பதப்படுத்தப்பட்ட மாட்டிறைச்சித் துண்டுகளை
சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று
கவலையுடன் அலைகிறாள் யெல்லம்மா.
மாட்டின் ஈறல் சுரக்கும் சாறு - அது லேசில் கிடைக்காது
அதைப் பெற மாலா செட்டம்மாவின் கூரை பலகை
மாடிகா எல்லம்மாவின் எறவானம்
என்று வீடுவீடாகச் தேடிச் செல்வாள்.
குழந்தையின் வயிற்று கடுப்பைத் தணிக்க
பெரியவர்களின் கைகால் வலியை போக்க
மாட்டீறல் சுரக்கும் கடுஞ்சாற்றையே
அவர்கள் நம்பி இருப்பர்.
அப்படிப்பட்டவர்களைப் பார்த்து
"மாட்டுக் கறி உண்ணாதே" என்று சொல்ல
உனக்கு எத்தனை துணிச்சல்?
ஜாக்கிரதை - அவர்கள் செருப்பாலேயே அடிப்பார்கள்.
ஓடு, அவர்கள் வருவதற்குள்...
மாலா மக்களும் மாடிகா மக்களும்
மாட்டுக் கறி உண்பவர்கள் மட்டுமல்ல, தம்பி.
மண்ணை உழுவதற்காக
காடுகளை பராமரிப்பவர்கள்
எருமைகளை, ஏர் ஒட்டிச் செல்லும் எருதுகளை
பழக்குபவர்கள்
யுகயுகமாக அவர்கள் இந்த பசும் வயல்களை உழுதுள்ளனர்
தலைமுறை தலைமுறையாக கன்றுகளை வளர்த்து வந்துள்ளனர்.
எமது மாட்டுச் சந்தைகள் - அவற்றின் பண்பாடு
பத்து மைல்களுக்கு ஒரு சந்தை
இந்த தக்காணம் முழுக்கவும்
தெலுங்கானா, ஆந்திரம், மகராட்டிரம், கர்நாடகம்
மலநாடு, மங்களூரு, சித்தூரு, நெல்லூரு,
ஓங்கோளு, அவுரங்காபாத் -
போய் நின்று பார் -
கண்ணுக்கு எட்டும் திசைகளிசெல்லாம் சந்தைகள்
பசுமாடுகள், கன்றுகள், காளைகள், எருதுகள்
அமெரிக்க திரைப்படங்கள் கொண்டாடும்
மாடு பிடிக்கும் குதிரை வீரர்களை உலகமறியும் -
ஆனால் இந்தச் சந்தைகளை?
அவற்றுக்காக வேர்க்க விறுவிறுக்க உழைப்பவர்களை?
ஓங்கோளு காளைகள், தீட்டிவிட்ட கொம்புகளைக் கொண்ட எருதுகள்
பிறைச் சந்திரனைப் போன்ற வளைந்த கொம்புகளுடைய மாடுகள்
தக்கணத்துக்குப் பெருமைச் சேர்க்கும் பன்னிரண்டு அடி காளைகள்
இவற்றை பற்றியெல்லாம் உனக்குத் தெரியுமா?
நாங்கள் மேய்த்துக் கொண்டிருந்த மாடுகளை பிறர் ஓட்டிச் சென்றது,
வளர்த்த கைகளிலிருந்து மாடுகள் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்ட சம்பவங்கள் -
இவை பற்றியெல்லாம் தெரியுமா, தெரியாதா?
அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை,
எருது பூட்டிய வண்டிகள் போய்
குதிரைகள் பூட்டப்பட்ட வண்டிகள் வந்த நாளை
எங்களால் மறக்க முடியுமா என்ன?
பசுக்களை, காளைகளை
நாங்கள் காடு, கரைகளில் ஓட்டிச் செல்வோம்
மண்ணை அவை உழுது போட வேண்டுமானால்
உணவு வேண்டுமே -
எங்களுக்கு இதைச் செய்ய தெரியும் -
ஒன்றை மறந்து விடாதே
மண்ணை உழுவதற்கே மாடுகளை வளர்க்கிறோம்.
மண்ணை விட்டு, மந்தைவெளியை விட்டு நீங்கியும்
மாட்டுக் கறித் தின்னும் கூட்டம் என்று எங்களை ஏசுகிறாய்-
பழைய பாட்டையே திரும்பத் திரும்ப பாடுகிறாய்
உனது ஊத்தைபற்களைக் காட்டி காட்டி.
இப்படி அங்கலாய்க்கும் நீ, நீ என்னதான் செய்கிறாய்?
கோமாதா என்று கும்பிடுகிறாய்
பாலை கறந்து கறந்து பலகாரம் செய்கிறாய்.
நாங்கள் பசுவை கறப்பதில்லை.
கோமாதா என்று வணங்குவதுமில்லை
கோமூத்திரத்தை குடிப்பதுமில்லை.
கன்றை கட்டி வைத்து
பசுவை கறக்கும் ஆட்கள் அல்ல நாங்கள்.
பசுவின் மடியில் கன்று - அது குடித்து
நன்றாக வளர வேண்டும்
மண்ணை உழுவதற்கு அதற்கு வலிமை தேவை
வேளாண்மை செழிக்க எங்களுடைய மாடுகள்
யானைகள் போல்
குன்றுகளாக
நிற்க வேண்டும்.
காளை ஈனும் பசுவை மதிப்பவர்கள் நாங்கள்
பச்சை புற்கட்டுகள், சோளத் தட்டு, அரிய புண்ணாக்கு
கன்று ஈன்ற பசுவுக்கு இவற்றை நாங்கள் அளிப்போம்
அதனை வேலை வாங்கமாட்டோம் -
பசுக்களை உன் வீட்டுக்கு கூட்டி வந்து
வாசலில் நிறுத்தி வித்தைக் காட்டி
பிழைப்பவர்கள் இல்லை நாங்கள்.
அவற்றை நன்றாக மேய்த்து வளர்ப்போம்
அவை நல்ல கன்றுகளை ஈன்றளிக்க,
மண் செழிக்க அவற்றை பராமரிப்போம்.
அவ்வபோது நாங்கள் இளைபாறும் போது
ஆனந்தமாக இருக்கையில் -
இந்த நாளை கொண்டாடினால் என்ன என்று
பணம் வசூல் செய்து
சந்தைக்கு செல்வோம்.
ஆரோக்கியமான, நல்ல பசுவை தேர்ந்தெடுத்து வருவோம்
அதை வெட்டி, கறியாக்கி பகிர்ந்துண்ண -
நாங்கள் விருந்துண்ணும்
அந்த மாலை வேளையில்
எங்கள் ஊரை
களிப்பின் வாடை குளிப்பாட்டும்.
தலைமகனுக்கு தரப்படும் மரியாதையும் பொறுப்பும்
எங்கள் வீட்டு எருதுகளுக்கும் - அவற்றுக்கு
பிடித்தமான பெயர்கள் சூட்டி மகிழ்வோம்
ராமகாரு, அர்ஜூனகாரு, தருமகாரு...
பசுக்கள், எருமைகள், கன்றுகள் - இவற்றுடன் குடும்பமாக வாழ்வோம்
அழகுப் பெயரிட்டு அழைப்போம் -
ரங்கசானி, தம்மரமோக, மல்லெச்செண்டு...
ஏன் மாடுகளுக்காக திருவிழா எடுப்போம் - யெரோன்கா
கேள்விபட்டதுண்டா?
தெரியுமா உனக்கு -
அந்த திருநாளில்
எங்களுடைய காளைகளை, எருதுகளை, பசுக்களை
தெளிந்த நீரோடைகளுக்கும் குளங்களுக்கும் ஓட்டிச் சென்று
தேய்த்து தேய்த்து குளிப்பாட்டுவோம்.
ஆண் எருமைகளையும் பசுவின் கன்றுகளையும்தான்.
அவற்றின் வேறு வேறு வண்ணங்களுக்கும் நிறங்களுக்கும் ஏற்ப
கோலம் தீட்டி அழகு செய்வோம்
சாயம் தோய்த்த சணல் கயிறுகளாலான
குஞ்சங்களை நெற்றிகளில் கட்டி
அவை அசைந்தாட பார்த்து மகிழ்வோம்.
மணிகள் அடுக்கிய மாலைகளை
அவற்றின் கழுத்துகளில் அணிவிப்போம்.
கம்பு, அரிசி, வெல்லம் என்று உணவளிப்போம்
பச்சை முட்டைகளையும் கள்ளையும் அவற்றின் வாய்களில் ஊற்றுவோம்.
ஊர் முழுக்க ஊர்வலமாக அழைத்துச் செல்வோம்.
நீ எப்போதும் பசுவை பற்றி மட்டும் பேசுகிறாய்.
உனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?
எருதுகளை பற்றி பேசுவதில்லை
அவை மண்ணை உழுவதைப் பற்றி பேசுவதில்லை
களி மண் குவியல்களை மிதித்து மிதித்து
எங்கள் வீட்டுச் சுவர்களை பூச தேவையான மண்ணை
எங்களுக்கு பதமாக ஆக்கித் தருவதைக் குறித்து பேசுவதில்லை.
ஒரு காலத்தில் கோட்டைகளை கட்ட தேவைப்படும் களிமண்ணைக்கூட
இவைதான் மிதித்தளித்ததாக வரலாறு உண்டு -
யார் தந்த அதிகாரத்தில் "மாட்டுக் கறி உண்ணாதே?" என்று கூறுகிறாய்?
"எருதுகளை கொல்லாதே" என்கிறாய்,
ஆனால் செத்த மாட்டை உண்ணச் செய்கிறாய்-
எங்களை தீண்டத்தகாதவர்கள் என்கிறாய்
நிலமற்றவராக வைத்திருக்கிறாய்
நீ செய்யத் தயங்கும் அழுக்கான வேலைகளை
எங்களைச் செய்ய சொல்கிறாய்
ஊர்த் தெருக்களில் விழுந்து கிடக்கும் செத்த மாடுகளை
அகற்றச் சொல்கிறாய்.
மாடுகன்றுகளை பராமரித்து
அளவாக அவற்றை கட்டி வளர்த்து
எருதையும் காளையையும் அம்மனுக்கு படையலிட்டு உண்பது
எங்கள் பண்பாடு
எங்களை தடுத்து நிறுத்த நீ யார்?
பௌத்தர்கள் பேசுவது போல நீ பேசப் பார்க்கிறாய்.
எங்களுக்கு என்ன பௌத்தம் தெரியாதா?
"மனிதர்களை கொல்லாதே" என்று சொன்னது பௌத்தம்.
நீயோ, "ஆட்டுக்கறி, மாட்டுக் கறி, வெங்காயம், பூண்டு உண்ணாதீர்கள்"
என்று சொல்லிக் கொண்டு மனிதர்களை வெட்டிச் சாய்க்கிறாய்.
விலங்குகளை பற்றி பேச நீ யார்?
மனிதம், நாகரிகம் தெரியாத நீ?
எருது, பசு, காளை, எருமை
எங்கள் குடும்பத்தினர்.
அவற்றின் தேவையறிந்து வளர்ப்போம்
வலியறிந்து மருந்தளிப்போம்
காயடித்து வேலைக்கு தயாராக்குவோம்.
போ, மாலா, மாடிகா மக்களிடம் போய்க் கற்றுக் கொள்ள
நாங்கள் நாகரிகம் உருவாக்கியவர்கள்
எமது தேசம் எங்கள் இருப்பிடங்களில்தான் பிறந்தது
என்பதை மறந்துவிட்டாயா?
சுற்றுச்சூழல், நாகரிகம் - எங்களுக்கு இயல்பானவை
போர், அழிவு - உனது பண்பாடு
பசுவுக்கும் உனக்குமான உறவு லேசானது -
பால், இனிப்பு, மரக்கறி உணவு, இவ்வளவுதான்.
ஆத்தாவை கும்பிடும் திருநாளில்
காளையையும் கிடாவையும் காணிக்கையாக செலுத்தி உண்போம்.
எங்கள் வழியில் குறுக்கிட்டால் ...
எங்களுடைய மைசம்மா, ஊரெட்டம்மா, போச்சம்மா, போலெரம்மா எல்லாம்
"ஏய், எனக்கு எருது வேண்டும்... காளை வேண்டும், கிடா வேண்டும்"
என்பார்கள்.
அவர்களுக்கு நேர்ந்து விடுவதற்காக இவற்றை பார்த்து பார்த்து வளர்ப்போம்
இது நாங்கள் செலுத்த வேண்டிய கடன்.
நீ யார் எங்களுக்கிடையே வருவதற்கு?
தன் பாதையில் குறுக்கிடுபவனை மைசம்மா சும்மா விடமாட்டாள்.
மாட்டுக்கறி எங்களது பண்பாடு. ஜாக்கிரதை.
- கோகு ஷியாமளா


(ஆந்திராவின் முக்கியமான தற்கால தலித் பெண் கவிஞர், சிறுகதையாசிரியர், பெண்ணிய ஆய்வாளர், செயற்பாட்டாளர். சாதி/எதிர்ப்பு, தெலுங்கானா போராட்டங்களில் தொடர்ந்து செயலாற்றி வருபவர்
ஆங்கிலம் வழி தமிழில் - வ. கீதா
(இந்தக் கவிதை இடம் பெற்ற சஞ்சிகை: தற்கால அரசியல் செய்தி மடல், செப்டம்பர் 2012, பெண்ணிய படிப்புக்கான அன்வேஷி ஆய்வு மையம், ஹைதராபாத் வெளியீடு)
(இக்கவிதை "பூவுலகு" மார்ச் - ஏப்ரல் 2013 பெண்கள் சிறப்பிதழில் இடம் பெற்றுள்ளது)


Painting: Damien Hirst's 'a thousand years'

2 கருத்துகள்:

வலிப்போக்கன் சொன்னது…

"ஆட்டுக்கறி, மாட்டுக் கறி, வெங்காயம், பூண்டு உண்ணாதீர்கள்"
என்று சொல்லிக் கொண்டு மனிதர்களை வெட்டிச் சாய்ப்பவர்களுக்கு
விலங்குகளை பற்றி பேச அருகதை இல்லை..

தேவன் மாயம் சொன்னது…

போர், அழிவு - உனது பண்பாடு
பசுவுக்கும் உனக்குமான உறவு லேசானது -// மிக அருமையான வாழ்வியலும் அது சார்ந்த உணர்வுகளும் மிக அருமை!!