நம் குரல்

'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை முன் வைத்து! - 1


பாரதத்தாயின் புதல்வர்கள்!'இந்தியாவின் மகள்' என்ற ஆவணப்படத்தைக் காரணமாக வைத்து, நிறைய விவாதங்களை எழுப்பலாம். அந்த அளவிற்கு, அந்தப்படம் தூண்டுதல்களையும் இடைவெளிகளையும் தன்னிடத்தில் கொண்டுள்ளது.
முதலில், 'இந்தியாவின் மகள்' என்ற டைட்டிலுக்குப் பதிலாக, 'பாரதத்தாயின் புதல்வர்கள்' என்று வைத்திருக்கலாம். அந்த அளவிற்கு, திரையில் தோன்றும் முதல் ஆண் மகன் முதல் கடைசியாகத் தோன்றிய ஆண்மகன் வரை, சமூகத்தில் பெண்கள் குறித்த தம் அரைகுறையான புரிதல்களைக் கூட மிகத் தெளிவாக, எந்த அளவும் தயக்கமில்லாமல் முன் வைத்துள்ளனர்.
நிர்பயா, வன்புணர்வு செய்யப்பட்ட நிகழ்வு, திரையிலும், செய்தித்தாள்களிலும் விவரிப்பாக வந்து இரத்தம் உறையச் செய்த அந்த முதல் நாள் இன்னும் நினைவிருக்கிறது.
ஆனால், இந்தப்படத்தில் ஒரு களப்பணியாளர் சொல்வது போலவே, இந்தியாவில் தினம் தினம் பாலியல் வன்புணர்வு நிகழ்வுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் முக்கியமானவை, வேறுபட்டவை, சமூகத்தின் கண்ணாடியாக இருந்து யதார்த்தத்தைப் பிரதிபலிப்பவை.
குற்றவாளிகள் எனப்படுவோருக்காக வழக்காடுபவர் ஏ.பி. சிங், சொல்லும் இரண்டு விடயங்கள் மிக மிக முக்கியமானவை: ஒன்று, "என் மகள் இப்படி எல்லை தாண்டி சென்றிருந்தால், என் சமூகத்தின் முன்னேயே, பெட்ரோலை ஊற்றி எரித்திருப்பேன்".
இரண்டு: "பார்லிமெண்டில் இன்று நுழைந்து அமர்ந்து பேசிவரும் உறுப்பினர்களில், 250 நபர்கள் மீது பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன" என்று கூறுவது.
மேற்சொன்ன, இவை இரண்டுமே இந்தியச்சமூகத்தின் அவலத்தை இரண்டு துருவங்களிலிருந்து படம்பிடித்துக் காட்டுபவை.

கடந்த இரண்டாயிரம் வருடங்களாக, சமூகத்தில் கொல்லப்பட்ட, தாக்கப்பட்ட, இருண்ட அறைகளில் மடிந்துபோன பெண்களின் வரலாறுகள் சொல்லி மாளாதவை. அந்த ஓலத்தின் கூக்குரல்கள் தாம் அவ்வப்பொழுது இப்படியான பெண் குரலாக எழும்பித் தேய்ந்து போகின்றனவோ என்று தோன்றுகிறது.
பிபிசியின் இந்த ஆவணப்படம், இந்தியாவின் காட்டுமிராண்டித்தனத்தை, பகிரங்கப்படுத்துகிறது. அதில், நிறைய பொத்தல்கள் இருந்தாலும், விவாதங்களைத் தூண்டிவிடுவதன் பொருட்டு இந்தப்படத்திற்கு இருக்கும் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவது ஒன்றும் எதற்கும் பாதகமாகாது.
அதற்காக, சர்வதேச நாடுகளில், லண்டனில், அமெரிக்காவில் பாலியல் வன்புணர்வு நடைபெறவில்லை என்று அர்த்தமில்லை.

ஆனால், இந்தியாவில் போல், இவ்வளவு மூடத்தனமாக, ஆண்களும் பெண்களும் ஆண்கள் செய்யும் குற்றத்தைச் சமூக நியாயமாக முன்வைப்பதில் ஒரு தயக்கமேனும் இல்லாமல் இருக்காது என்பதை நம்புகிறேன்.
'அந்தப்பெண்ணை உயிருடன் விட்டது தான் பிரச்சனை. கொன்றிருந்தால், இவ்வளவு பெரிய விவகாரமாகி இருக்காது!' என்பதே நீதியாகிவிடுமோ என்ற அச்சமும் தோன்றாமல் இல்லை.
இன்னும், பதிவுக்கு வராத, சென்ற ஆண்டு மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட, ஒடுக்கப்பட்ட, தலித் மற்றும் பழங்குடிப் பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, மரங்களில் கட்டிவிடப்பட்டப் பெண்களின் வரலாறுகளையும் ஓலங்களையும் சொல்லி, 'இந்தியாவின் மகள்கள்' என்று தலைப்பிட்டிருந்திருக்கலாம்.


குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: