உணவில் தேர்ந்த ரசனை உண்டு எனக்கு, என்று நம்புகிறேன். இதற்கு வெறுமனே சுவை மட்டுமே காரணமில்லை. இந்திய உணவு முறையின் அடிப்படையாக இருக்கும் அரசியலும் கூட ரசனையை வடிவமைப்பதில் மிக முக்கியப்பங்கு வகித்திருக்கிறது என்று சொல்லவேண்டும். என்னுடன் வாழும் நண்பர்கள் குழாமும் அப்படி. ஒரு தேர்ந்த வகை உணவிற்காக எந்தத்தொலைவும் சென்றுவருவார்கள். எந்தச்சிரமமும் எடுப்பார்கள்.
நாளுக்குநாள் சாதி மறுப்பு அரசியல் சிந்தனையும், கருத்தாக்கமும் தீவிரமடைய, இந்தியாவின் சைவ வகை உணவின் அரசியல் குறித்த விழிப்புணர்வும் அதன் நுட்பங்களும் புலப்பட்டது. 'மாட்டிறைச்சி' என்பதன் பண்பாட்டு முக்கியத்துவம் அவசியம் எனப்பட்டது. அதுவரை சைவ உணவின் மீது இருந்த உன்னதத்துவம் எல்லாம் கட்டமைக்கப்பட்டது என்று அறிந்ததும் உணவின் மீதான தூய்மைப் பிம்பங்கள் குலைந்தே போனது.
இதற்கிடையில், 'இருளர்' பழங்குடி மக்களுடன் களப்பணி செய்யக் கிடைத்தவாய்ப்பு உணவுத்தேர்வின் மீதான முன்முடிவுகளை இல்லாமல் செய்தது. அவர்களுடன் செங்கல்பட்டு, விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில் திரியும் போது, எலிக்கறி, உடும்புக்கறி என்று எது கொடுக்கப்படுகிறதோ எது கிடைக்கிறதோ அதுவே உணவாயிற்று. 'மரியான்' படப்பதிவின் போது நமீபியாவில் கண்ட உணவு வகை அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையைச் சொல்வதாக இருந்தது. உருளைக்கிழங்கு வறுவல் போல இறைச்சித்துண்டங்களைப்பொறித்து பொட்டலமாகப் பொதிந்து விற்பார்கள். எப்பொழுதும் கையில் அதை வைத்துக்கொண்டு பசியாறுவார்கள்.
ஸ்பெயினில், ஒரு பெரிய தாம்பளம் நிறைய, தோழி மரியாவுடன் 'கடல் வகை உயிர்களை' மட்டுமே உணவாக வைத்து உண்டது நினைவுக்கு வருகிறது. அதிலும் அவை பார்ப்பதற்கு பச்சையான உயிர்களைப் போன்றே இருக்கும். வெறுமனே வேகவைக்கப்பட்டு, கடல் உயிரின் உப்புத்துவம் இயல்பாகவே இறங்கியவையாக இருக்கும். உண்ணக்கிடைத்த எதையும் அதன் சுவையின் உட்கூறுகள் நோக்கி நகரும் மனநிலைக்கு 'இனவரைவியல்' சிந்தனையும் பயிற்சியும் முக்கியம் என்று தோன்றுகிறது. பேராசிரியர் சத்யபால் அவர்களிடம் தான் இதன் முழுமையைப் பார்க்கமுடியும். எந்த வகையான பழங்குடி உணவையும் ரசித்துப் பொறுமையாக உள்வாங்குவார். எந்த உணவின் மீதும் அவருக்குக் குற்றச்சாட்டுகள் கிடையாது. அதே போல், எல்லா வகையான சூழலையும் அவர் எதிர்கொள்ளும் விதத்தை உண்ணும் உணவின் வழியாகத்தான் கற்றுக்கொண்டிருந்திருக்கிறார் என்பதையும் அறிந்தேன்.
சமீபத்திய லண்டன் பயணத்தின் பொழுது, ஒரே ஹோட்டலில் ஒரு வாரம் தொடர்ந்து தங்கவேண்டியிருந்தது. அந்த நட்சத்திர ஹோட்டலில், ஆங்கில, ஸ்பானிய, ஆப்பிரிக்க வகை உணவுகளே கிடைத்தன. அதிலும் இறைச்சி சார்ந்த வகைகள் கொண்டாடப்பட்டன. அப்பொழுது, 'அரிசி' உணவை மனம் கொஞ்சமும் தேடவில்லை.
லண்டன் தமிழ் உறவுகள் எனக்கு 'தமிழ் உணவு' கிடைக்காதது குறித்து கவலைப்பட்டார்கள். ஓவியர் கே.கே.ராஜா, லண்டனில் இருக்கும் அஞ்சப்பர் உணவு விடுதிக்கு அழைத்துச்சென்று பிரியாணி விருந்து கொடுத்தார். யமுனா வீட்டில், அவர் மனைவி கங்கா, சிவப்பரிசிச் சோறு அளித்தார். மாதவி சிவலீலன் அவர்கள் வீட்டில் அவர் குழந்தைகளுடன் பிட்சா. இந்த ஆண்டின் ஈகைப் பெருநாள் கொண்டாட்டம், பெளசர் அவர்கள் வீட்டில் அவர் மனைவி ஷாமிலாவின் கைப்பக்குவத்தில் பிரியாணி, மட்டன் கறி, வட்டிலப்பம் என்று வெவ்வேறு வகை உணவுகள் நிரம்பியதாக இருந்தது. லண்டனில் நான் சரியாகச் சாப்பிட்டிருக்கமாட்டேன், என்ற எண்ணத்தில் சென்னை வீட்டில் இரு நாட்கள் தொடர்ந்து விருந்து. கேமராமேன் எம்.ஆர்.சரவணக்குமார் கைவண்ணத்தில் நேற்று இறால் - முருங்கைக்காய் குழம்பு, இன்று நாட்டுக்கோழி உப்புக்கறி, தக்களிரசம், சிவப்பரிசிச்சோறு. பசியும் ருசியும் ஒன்றையொன்று சவால் விட, அருமையான உணவாக இருக்கிறது.
உணவுகள் தரும் பண்பாட்டு அழுத்தமும், தனிமனித ருசியைத் தேடி அலையும் அவசியமும் இன்று இல்லாமல் போவதற்கு கடந்து வந்த பாதையின் ஒட்டுமொத்த சமூகக்காரணங்களையும் அவை கற்றுக்கொடுத்த அரசியல் பக்குவத்தையும் தாம் சொல்லமுடிகிறது. எந்த வகை உணவையும் குறிப்பிட்ட பண்பாட்டின் செறிவாக உட்கொள்ளமுடியும் என்றும் தோன்றுகிறது.
குட்டி ரேவதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக