('நிழல் வலைக் கண்ணிகள்' என்ற என் கட்டுரை நூலுக்கு எழுதிய முன்னுரை)
சிந்தனையை எழுத்தாக்குவதிலும் எழுத்தைக் களப்பணியாக்குவதிலும் என்னைத் தீவிரமாய் ஈடுபடுத்திய
படைப்பாளியும் சமூகப்போராளியும் என் தோழியுமான சிவகாமிக்கு….
முன்னுரை
தோழியரே, தோழர்களே! தமிழகத்தில் ஆதிக்கச் சிந்தனை ஓங்கியிருக்க அதே சமயம் அதற்கெதிரான மக்கள் திரட்சி ஓங்கியிருக்கும் காலகட்டத்தில் தான் இதை எழுதுகிறேன். பெண்ணுரிமைக்கான தளங்கள் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களாக ஒடுங்கிவிட்ட இத்தருணத்தில், அதற்கான காரணங்களை ஆராயுமிடத்து மேற்கொண்ட என் பயணம் என்னை இங்கு கொண்டு வந்து சேர்ந்திருக்கிறது என்பதற்கான வெளிப்பாட்டுப் பதிவே இந்நூல்.
'சாதி மறுப்புப் பெண்ணியத்தை'த் தொடர்ந்து வலியுறுத்தி வரும் என்பாதையில் இந்த நூலின் மீது எனது வேறு எந்த நூலையும் விட நான் வலுவான நம்பிக்கையும் அக்கறையும் கொண்டிருக்கிறேன். கரையானின் புற்றில் வந்து பாம்பு ஏறிக் குடியிருப்பது போல, 'பெண்ணடிமைத்தனம்' அல்லது 'பெண்ணுரிமை' இவற்றிற்காக நாளும் போராடி, உயிரை இழந்து, தம் ஆற்றலை இழந்து, காலத்தை இழந்து, கற்பனைகளையும் கனவுகளையும் இழந்து போயிருக்கையில் அதன் செங்கோலைத் தம் கைகளுக்குப் பறித்துக் கொண்ட ஆதிக்கசாதிப் பெண்டிருக்கும், சாதியின் வழியாக மக்கள் எதிர்ப்புக் குசும்பை அவர்களுக்குள்ளும் விதைத்துக் கொண்டிருக்கும் ஆதிக்க சாதி ஆண்களுக்கும் எதிரானது என் எழுத்து!
பார்ப்பனப் பெண்கள் மட்டுமல்லாது, பிற ஆதிக்க சாதிப் பெண்களும், தமிழை, மொழியை அதன் பெண்களை வெறுப்புணர்வுடன் கசப்புணர்வுடன் நோக்கி தம் ஆதிக்க மாயைகளில் குதூகலிப்பதற்கான காரணங்களை நான் கண்டு கொண்டேன் என்பதற்கு இந்த நூலே ஓர் அசைக்கமுடியாத ஆதாரம். இதில் குறிப்பிடப்படுகின்ற ஆள் நான் இல்லை என்று தன்னை நிரூபிக்க விரும்புபவர்கள் 'தான்' என்னும் சாதி நிறம் படர்ந்த சுய நெருப்பு அகழியைக் கடந்து வர வேண்டும், இந்நூலின் வாதங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது மெளனமாகப் புறக்கணித்துச் செல்ல வேண்டும்! அது அது அவரவர் முதுகெலும்பின் வலுவைப் பொறுத்தது!
சிமோன் - தி - போவா, ஜெர்மைன் க்ரீர், ஈவ் என்ஸ்லெர், சூசன் சாண்டாக், காயத்ரி ஸ்பைவேக், ரோஸா லக்ஸம்பர்க், விரிஜினியா வுல்ஃப் என அகில உலகப் பெண்ணிய வாதிகளை எல்லாம் இறக்குமதி செய்த பின்னும் இந்தியாவில் பெண்ணுரியமையை வெற்றிகரமாகச் சாத்தியப்படுத்தமுடியாதபடிக்கு நம் பெண்களுக்கும் இந்தப் பெண்ணிய வாதிகளுக்கும் இடையே திரை இருந்து கொண்டே இருக்கிறது. அந்தத் திரை என்பது சாதியம் தான்!
ஆனால், இந்தச் சாதியத்தைப் பெண்ணிய விவாதம் ஆக்குவதற்கு குறைந்தது இன்னும் நமது ஒரு தலைமுறைப் பெண்களையேனும் காவு கோரும், இந்தியா என்னும் நமது தீண்டப்படாத தேசம். சிவகாமியினுடான சமூக இயக்கக் கட்டுமானத்தின் போது ஏற்பட்ட அனுபவங்கள் அதிர்ச்சி அளிக்கக் கூடியன. நீங்கள் எத்தகையதோர் ஆளுமையுடயவராக இருந்தாலும், நீங்கள் ஒடுக்கப்பட்ட, பட்டியல் இனப் பெண்ணாக இருந்தீர்களென்றால், இயக்கத்திற்குத் தலைமை ஏற்கவோ, அல்லது ஒரு கருத்தியலை இயக்கமாக்கவோ தகுதியில்லாதவராகவே கருதப்படுவீர். ஆனால், எந்தச் சமூக விழிப்புணர்வும் அக்கறையும் அற்ற ஓர் ஆதிக்க சாதிப்பெண், குறைந்தபட்சம் தன் பாலியலைக் கொண்டே கூட அதிகாரத்தையும் தலைமைத்துவத்தையும் அங்கீகாரத்தையும் கோரமுடியும். பிற பெண்கள் கண்களில் மண் தூவ முடியும்!
பல சமயங்களில், ஆதிக்க சாதி ஆணுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் புரையோடிப் போன தம் மன அதிகாரத்தையும் அவலத்தையும் தமது ஆதாயங்களாக முன் வைத்து ஒடுக்கப்பட்ட பெண்களை இன்னும் அதிகமாய் ஒடுக்கியுள்ளனர், ஆதிக்க சாதிப் பெண்கள். ஒரு சிறிய குழுவாக இயங்கும் போது கூட அவர்கள் மனதின் அடியில் கசியும் ஆதிக்க மனதை, வன்மத்தை, ஏய்ப்பை, அழுக்கை அவர்களால் கண்காட்சியாக ஆக்க முடியாமல் இருந்ததே இல்லை. 'அதிகாரப் பகிர்வு' என்று வந்து விட்டால் அவர்களின் செயலூக்க நரம்புகள் அதிக விசையுடன் செயல்பட்டு, ஒட்டுமொத்த அதிகாரத்தையும் கூட கபளீகரம் செய்து விடும்!
கடந்த வருடங்களில், 'சாதி மறுப்புப் பெண்ணியத்தின்' மீது நம்பிக்கையும் ஊக்கமும் கொண்டு நான் எழுதிய கட்டுரைகள் இவை! தனி மனித இயக்கத்தின் தொனி இவற்றின் அடியில் ஓங்கியிருப்பதை உணரமுடிந்தாலும் அது எனக்கு விருப்பமில்லாத, வருத்தமான ஒன்று தான்! ஆனால், இந்த நூலின் மீது ஏற்கெனவே குறிப்பிட்டிருப்பது போல அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன்! என் பாதை இது தான் என்பதைத் தெளிவாக்கியும் வைத்திருக்கிறேன்! ஆகவே இதனால் நான் கூறிக் கொள்வது என்னவென்றால் உங்கள் எல்லோரின் இலக்கிய அங்கீகாரப் பந்தல்களிலும் ஏதோ ஒரு மாலையோ, புகழுரையோ அல்லது விருதோ கூட வேண்டாமெனச் சொல்லிக் கொள்கிறேன்! உங்களின் நவீன இலக்கியப் பந்தயத்தில் நானும் உங்களுக்குச் சமதையாகப் போட்டியிட்டு உங்கள் அங்கீகாரத்தில் பங்கு கேட்பேன் என்று நீங்கள் அஞ்சத் தேவையில்லை! அஞ்சவே தேவையில்லை!
இந்நூலில், சாதியை மறுக்கும் என் பெண்ணிய அரசியல், நவீன தமிழ்க்கவிதையில் ஆதிக்க அரசியல், ஈழ அரசியல் கட்டுரைகள் என்று மூன்று வகைக் கட்டுரைகள் பதிவாகியுள்ளன. இதைத் தொகுத்தப் பின்பு, இதை இன்னும் விரிவான நூலாக்குவதற்கான எழுத்துப் பணியில் ஈடுபடவேண்டும் என்னும் உற்சாகம் பிறந்திருக்கிறது!
செய்வேன்!
இந்த நூலில் இதுவரை ஒலிக்கும் என் தனிமனிதக் குரல் மட்டுமே இந்த நூல் உருவாக முழுப்பொறுப்பும் இல்லை! வெவ்வேறு காலத்தில், என் வெவ்வேறு பயணத்தில் இன்று பெயர் நினைவில்லாத நூற்றுக் கணக்கான பெண்கள் தம் எழுச்சியினால் என்னைத் தீண்டி விட்டிருக்கின்றனர்! என்னைத்
தூண்டி விட்டிருக்கின்றனர்! அவர்கள் எல்லோருக்கும் என் நன்றிகள்! 'வம்சி பதிப்பகத்தின்'
கே.வி. சைலஜாவிற்கு என் அன்பும் நன்றிகளும்! ஓர் எழுத்தாளராய் இருந்து எழுத்தாளர் மீது பதிப்பகங்கள் செலுத்தும் அதிகார துஷ்பிரயயோகத்தின் வடிவத்தையும் மூர்க்கத்தையும் மிக நுட்பமாய் நான் அறிவேன்!பதிப்பகங்களின் அதிகார வேட்டைக்கு இடையில், தனியொரு பெண்ணாய் நின்று அறம் பாராட்டுவது எளிது அன்று! போராட்டத்தில் களைக்காது தன் சுவாசத்தின் உஷ்ணத்துடன் நூல்களை நெய்து வழங்கும் சைலஜாவின் கைகளால் இந்த நூல் உருப்பெறுவது என்பது நிறைந்த மகிழ்ச்சியைத் தருகிறது! அவரது வேட்கையின் அளவிற்கு அவர் இன்னும் மிக நீளமான பயணத்தைத் தன் எதிரே கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது! அவருக்கு என் வாழ்த்துக்களும்! இந்த நூல் எழுத்தாளர் சிவகாமிக்கு! அவரினும் என் மன எழுச்சிக்குப் பொருத்தமானவர் எவரும் இல்லை! அவர் அன்பு, நிறைய பெண்களுக்குப் போலவே எனக்கும் நிறைய செய்திருக்கிறது! என்னிடம் அவருக்காக இந்த நூல் மட்டுமே இருக்கிறது!
என் கட்டுரை மொழியை ஒரு பொருட்டாகக் கருதி என்னுடன் இணைத்துக் கொண்ட நண்பர்களையும் நான் இவ்விடம் நினைத்துக் கொள்கிறேன். 'கீற்று ரமேஷ்', இனியொரு யோகன் அசோகன், பொன்னி பதிப்பகத்தின் வைகறை, ஆழி பதிப்பகத்தின் செந்தில்நாதன், பொதியவெற்பன், தமிழ் ஸ்டூடியோ அருண், இணைய நண்பர்கள் சாத்தப்பன் மற்றும் வேல்கண்ணன் ஆகியோருக்கும் என் நன்றிகள்!
என் மின்னஞ்சல் முகவரி kuttirevathi@gmail.com
எழுதுங்கள்!
அன்புடன்,
குட்டி ரேவதி
2.1.2012
1 கருத்து:
சாதியத்திற்கெதிரான தங்கள் பயணம் தொடரட்டும். சாதிகள் இல்லாமல் போகும் ஒரு நாள் வரட்டும். பகிர்விற்கு நன்றி.
கருத்துரையிடுக