மக்கள் நலனுக்காக நிற்கும் அரசியல் இயக்கங்களும், சமுதாய அமைப்புகளும் தங்களது பாதையில் எதிர்கொள்ளும் முக்கியமான முட்டுக்கட்டை பண்பாட்டு சவால்கள்தான். இந்தியச் சூழலில் பண்பாட்டு சவாலின் மூலதாரம் என்ன? இதனை வெல்வது எப்படி? தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் பேராசிரியர் ஆர். சந்திரா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க துணைத் தலைவர் சிகரம் ச. செந்தில்நாதன், கவிஞர் குட்டி ரேவதி ஆகியோர் இங்கு விவாதிக்கிறார்கள்
செந்தில்நாதன்: பண்பாட்டுத் தளப் பிரச்சனைகளை மூன்று கண்ணோட்டங்களில் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒன்று, தமிழ்நாட்டில் பிராமணீயமயமாக்கல், சமஸ்கிருதமயமாக்கல் இரண்டும் மையமாக நடந்துகொண்டிருக்கின்றன. இரண்டாவதாக இந்திய அளவில் பெண்கள், தலித்துகள், மதச் சிறுபான்மையினர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டவர்களுடைய எதிர்ப்புக் குரல். மூன்றாவதாக, சர்வதேச அளவில் உலகமயமாக்கலோடு இணைந்து வருகிற தாக்குதல், ஏகாதிபத்திய கருத்தாக்கங்கள் நம்முடைய கருத்தாக்கங்களாக மாற்றப்படுதல்.
குட்டி ரேவதி: படைப்பாளிகளைப் பொறுத்தவரையில் இதற்கு முன்பு பிராமணீயக் கருத்தியல் கொண்டவர்களாகவும், பிராமணர்களாகவும் இருந்தார்கள். ஒரு இலக்கியப் படைப்பின் வடிவம், அதன் உள்ளடக்கம் பற்றிய சில நெறிகளை ஏற்படுத்தி வைத்துக்கொண்டார்கள். வேறு தளத்திலிருந்து, புதிய கண்ணோட்டங்களுடன் ஒரு படைப்பு வருகிறது என்றால், அந்த நெறிகளோடு ஒப்பிட்டுப் பார்த்து அது சிறந்த படைப்பில்லை என்று தள்ளிவிடுகிறவர்களாக அவர்கள் இருந்தார்கள். தலித் அரசியல் எழுச்சி என்பது உருவான பிறகு தலித் எழுத்தாளர்கள் கணிசமான அளவிற்கு உருவானார்கள். ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிஞர்கள், நாவலாசிரியர்கள் உருவாகி அவர்களுடைய பிரச்சனை, இடவரைவியல், வாழ்க்கை முறைகள், போராட்டங்கள் எல்லாவற்றையும் படைப்புகளாக்கினார்கள். உடனே, அதை என்ன செய்தார்கள் என்றால், அதை தலித் இலக்கியம் என்று பெயர் சூட்டிப் பிரித்து, ஒரு பொதுமைத் தளத்திலிருந்து விவாதிக்காமல் ஒதுக்கி வைக்கிற போக்கு ஏற்பட்டது. அவர்களுடைய கட்டமைப்பிற்குள் நுழைந்து உடைப்பது என்பதைவிட, ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்குவது எப்படி என்பதே ஒரு படைப்பாளியாக என் முன் வருகிற சவாலாக இருக்கிறது. பூலே, அம்பேத்கர் ஆகியோர் புதிய அமைப்புகளை உருவாக்கியது போல, அந்தப் பழைய நெறிகளை குலைக்காமல் புதிதாகக் கட்டமைக்க வேண்டியிருக்கிறது. புதிய தளத்திலிருந்து படைக்கிறபோது நீங்கள் படைப்பாளியாக அங்கீகரிக்கப்பட மாட்டீர்கள்! மாற்றுச் சிந்தனைகளை முன் வைக்கிற படைப்பாளி பெண்ணாக இருந்துவிட்டால், கருத்தின் மீதான தாக்குதலாக அல்லாமல், அந்த பெண்ணைப் பற்றிய, அவரது சொந்த வாழ்க்கை பற்றிய தாக்குதல்களும் தொடுக்கப்படுகின்றன. இந்த நிலைமையில் இப்போது மாற்றம் வரத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, இணையத்தளம் என்பது அறிமுகமான பிறகு, புத்தகம் வெளியிட்டுச் சொல்ல முடியாத கருத்துகளை இணையத்தளத்தில் பதிவு செய்யமுடிகிறது. ஆனால், அங்கேயும் கருத்தை வெளியிட்ட பெண்ணுக்கு எதிரான அவதூறுகள் பல முனைகளிலிருந்தும் கிளம்பத்தான் செய்கின்றன.
ராசேந்திரன்: பார்ப்பணீயமயமாக்கல், சமஸ்கிருதமயமாக்கல் பற்றிச் சொன்னார் செந்தில்நாதன். ஆனால், சமஸ்கிருதமயமாக்கல் என்பது ஒரு தனிப் பண்பாடல்ல. மொழி சார்ந்த திணிப்புகள் இருக்கின்றன என்றாலும், அது மொழிக்கான செயல்பாடாக நடப்பதில்லை. அங்கேயும் சாதி சார்ந்த நடவடிக்கையாகத்தான் அமைகிறது. ஆகவே சமஸ்கிருதமயமாக்கல் என்பதற்கு பதிலாக பார்ப்பணீயமயமாக்கல் என்று மட்டுமே அதைக் குறிப்பிடலாம். பழைய கட்டமைப்பிற்குள் செல்லாமலே புதிய கட்டமைப்பை ஏற்படுத்துவது பற்றி ரேவதி சொன்னார். இதில் இயக்கவாதிகளுக்கு ஏற்படுகிற பிரச்சனை என்னவென்றால், ஏற்கெனவே உருவாக்கப்பட்டு கெட்டிப்படுத்தப்பட்டிருக்கிற பண்பாட்டைத்தான் மக்கள் தங்களுடைய பண்பாடாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடையே பழைய பண்பாடு எப்படிப்பட்டது என்பதை விளக்கி அதிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டியிருக்கிறது. அதன் பிறகுதான் புதிய பண்பாட்டைக் கட்டமுடியும். அடிமைப் பண்பாட்டை ஏற்றுக்கொண்டிருக்கிற நிலையில், அதற்கு எதிரான உளவியல் ரீதியான, அறிவியல் ரீதியான ஒரு பண்பாட்டு யுத்தத்தை நடத்த வேண்டியிருக்கிறது. அதன் ஊடாக மாற்றுப் பண்பாட்டையும் வைத்து, இரண்டையும் இணைத்துக்கொண்டு போகிறபோதுதான் புதிய பண்பாட்டை நிலைநாட்ட முடியும். அந்த அடிப்படையில் இந்துமதப் பண்பாடு, சாதிப்பண்பாடு, இவற்றின் அடிப்படையிலான சடங்குகள், பண்டிகைகள் போன்றவற்றை எதிர்த்து ஒரு எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
சந்திரா: பார்ப்பணீயமயமாக்கல், சமஸ்கிருதமயமாக்கல் என்று எந்த வார்த்தையைப் பயன்படுத்தினாலும், அந்தக் கருத்தாக்கங்கள் யார் ஆட்சியதிகாரத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே உருவாகின்றன. ஆளும் வர்க்கமாக, ஆதிக்க சக்தியாக யார் இருக்கிறார்களோ அவர்களுடைய தேவைகளை அடிப்படையாகக் கொண்டே இத்தகைய கருத்தாக்கங்கள் ஆட்சியதிகாரத்தின் மூலமாகவும் பண்பாட்டுச் சாதனங்கள் மூலமாகவும் கீழ்நோக்கிப் பரவுகின்றன. அப்படி கீழ்நோக்கி வருகிற கருத்தாக்கங்கள் மக்கள் மனங்களில் ஆழமான, உறுதியான இடத்தை பிடித்துக்கொள்கின்றன. காலங்காலமாக, தலைமுறை தலைமுறையாக, கொள்ளுத் தாத்தா, கொள்ளுப் பாட்டி என்று வழிவழியாக வந்து இன்றைய தலைமுறையினரையும் அந்த கருத்தாக்கங்கள் கவ்வியிருக்கின்றன. ஆகவேதான், இன்று தகவல் தொழில்நுட்பத் துறையில் ஈடுபட்டிருக்கிற நவீன இளைஞர்களிடையே கூட முற்போக்குக் கருத்துகள் எளிதில் வேர் பிடிக்கமுடிவதில்லை. குறிப்பாக, பெண்ணுரிமை பிரச்சனைகளில் இதைக்காண முடியும். இன்னொரு பக்கம், எந்த மதமானாலும் எளிய மக்களிடையே தங்களுடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கட்டப்பட்டிருக்கிறது. கிராமங்களுக்குச் சென்று பெண்களிடையே பணியாற்றும்போது, நீங்கள் ஏன் இப்படியே இருக்கிறீர்கள், என்று கேட்டால், என்ன செய்யிறது, எங்க தலையில இப்படித்தான்னு அழுத்தமா எழுதியிருக்கே, என்று அவர்கள் பதில் சொல்கிறார்கள். இதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிக மிக அவசியமாகிறது.பழமைக் கருத்துகளை நவீன முறையில் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதில் ஊடகங்களின் செயல்பாட்டையும் நாம் விமர்சிக்க வேண்டியிருக்கிறது. மதம் சார்ந்த விசயங்களையும் மூடநம்பிக்கைகளையும் வளர்ப்பதில் மட்டுமல்ல, பெண்ணுரிமைச் சிந்தனைகளைத் தாக்குவதிலும் ஊடகங்கள் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
செந்தில்நாதன்: இந்தியச் சூழலில் மொழியைத் தவிர்த்துவிட்டு பண்பாட்டுப் போராட்டத்தை நடத்த முடியாது. உதாரணமாக, பிராமண ஆதிக்கத்தை எதிர்க்கிறவர்கள் கூட, தங்கள் வீட்டு விழாக்களில் சமஸ்கிருதம் சார்ந்த சடங்குகளைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். பிராமணர் அல்லாதவர்களும் கோவிலுக்குச் செல்லும்போது, தங்களுக்கான பூசைகள் சமஸ்கிருதத்தில் செய்யப்பட்டால்தான் அது கடவுளிடம் போய்ச் சேரும் என்று நினைக்கிறார்கள். அலுவலகத்தில் தங்களுடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது பிராமணர்கள்தான் என்கிற அளவில்தான் அவர்களுடைய எதிர்ப்பு இருக்கும்.
ராசேந்திரன்: இதற்குக் காரணம், மேல்நோக்கிச் சென்று ஆதிக்கம் செலுத்துகிற நிலையில் இருக்கிற பண்பாடுதான் சிறந்த பண்பாடு என்று அதைப்பற்றிய ஒரு சமூக மதிப்பீடு இருக்கிறது. அதிகாரத்துடன் இருப்பதால் அதை நோக்கிச் செல்கிற நோக்கம் அடித்தட்டு மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், மேல்நோக்கி செல்லவிரும்புகிற ஒவ்வொரு சமூகமும் தனக்கு கீழே உள்ள சமூகங்களை அடக்கி வைத்திருக்கக் கூடாது என்று எண்ணுவதில்லை. தான் இன்னொருவரை அடிமைப்படுத்தி வைத்திருக்க வேண்டும், ஆனால், தான் இன்னொருவருக்கு அடிமையாக இருக்கக் கூடாது என்ற அடிப்படையான பார்ப்பணீய எண்ணப்போக்கு இது. அதிலிருந்து மக்களை விடுவிக்க தீவிரமான ஒரு கலாச்சாரப் போராட்டத்தை நடத்தியாக வேண்டும்.
சந்திரா: மொழி என்பது ஒரு இனத்தையும் அதன் பண்பாட்டையும் அடையாளப்படுத்துகிறது. ஆனால், முதலாளித்துவத்தின் இன்றைய வளர்ச்சியில், உலகமயச் சூழலில் மொழியும் பண்பாடும் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஏராளமான மொழிகள் இன்று அழிந்து வருகின்றன என்பதை ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது. ஒரு மொழி அழிகிறது என்றால் ஒரு இனம், அதன் பண்பாடு அடையாளம் அழிக்கப்பட்டுவிட்டது என்றுதான் அர்த்தம். இந்தியாவில் கூட உலகமயமாக்கலோடு இணைந்ததாக, வட்டார மொழிகளை விழுங்கிக்கொண்டு ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துவதை பார்க்கத் தவறக் கூடாது. ராசேந்திரன் சொன்னது போல கீழ்நிலையில் உள்ள சமூகங்களைச் சேர்ந்த மக்கள் மேல்நோக்கி செல்ல முயல்கிறபோது ஆங்கிலத்தின் ஆதிக்கத்திற்கு உடன்பட்டு தங்கள் மொழியை இழக்கிறார்கள் என்பதும் நடப்பு உண்மை.
ராசேந்திரன்: அதிகாரத்திற்கு வருகிறவர்கள் கூட பார்ப்பணீயக் கலாச்சாரத்திற்கு உட்பட்டு அதன் கருத்தாக்கங்களையே பரப்புகிறார்கள். ராஜராஜ சோழன் பிறந்த ஆயிரமாண்டு விழா கொண்டாடப்படுகிறது. அவர் பார்பணீயப் கருத்துகளைத்தானே பரப்பினார்? இன்று ஒரு திராவிடக் கட்சியின் ஆட்சி இருக்கிறது என்றாலும், பார்ப்பணீயப் பண்பாட்டைத்தானே வளர்க்கிறது?
பண்பாட்டுச் சீர்குலைவுகளுக்கு ஊடகங்களை மட்டும் பொறுப்பாக்குவது எளிதான இலக்காகிவிடும் என்று நினைக்கிறேன். அந்த ஊடகங்களுக்குப் பெண்ணடிமைக் கருத்துகளைக் கற்பிப்பது பார்ப்பணீயம்தான்.
செந்தில்நாதன்: அந்த ஊடகங்களை முதலாளித்துவக் கட்டமைப்பிலிருந்தோ, வர்க்கப் பின்னணியிலிருந்தோ பிரித்துப் பார்க்க முடியாது. வர்க்கச் சுரண்டலுக்குப் பார்ப்பணீயம் மிகவும் சாதகமாக இருப்பதால்தான், ஆளும் வர்க்கங்களின் கருவியான ஊடகங்கள் இந்த வேலையைச் செய்கின்றன. பண்பாட்டு யுத்தம், மொழிப் பாதுகாப்பு, சாதிய எதிர்ப்பு இவற்றை வர்க்கப்போராட்டத்திலிருந்து பிரித்து வைக்க முடியாது. ஆனால், தலித் எழுத்தாளர்கள் சிலர், வர்க்கப் போராட்டம் பற்றி எழுதினாலே நீ தலித்தியவாதி அல்ல என்று நிராகரிக்கிற போக்கு இருக்கிறதே! ஒரு தலித் எழுத்தாளரே, தன் மக்களின் வாழ்க்கையை எழுதுகிறபோது வர்க்கப் பிரச்சனையையும் எழுதிவிட்டால், அவரை இவர்கள் தலித் எழுத்தாளர் வரிசையிலிருந்து விலக்கிவிடுகிறார்கள்.
குட்டி ரேவதி: ஆதிக்கப் பண்பாட்டோடு மோதிக்கொண்டிருப்பதை விட, அடையாளம் அழிக்கப்பட்ட பண்பாடுகளை மீட்டெடுத்து அதுதான் நம் பண்பாடு என்று உயர்த்திப்பிடிக்க வேண்டும் என்பது என் கருத்து. புதிய பண்பாடு என்பதை நான் இவ்வாறு மீட்டமைப்பதோடு இணைத்தே சொல்கிறேன். அரசுக்கு எதிராகப் போராடுவது என்பதை விட, அடித்தட்டு மக்களுக்காக அவர்களோடு இணைந்து போராடுவது, அவர்களுடைய பண்பாட்டை முன்னிலைப்படுத்துவது இரண்டுமே முக்கியம். வர்க்கப் போராட்டம் பற்றி எழுதுகிறவர்களை தலித் எழுத்தாளர்கள் சிலர் ஏற்பதில்லை என்பதற்குக் காரணம் இடதுசாரிகள் வெகு காலமாக தலித் பிரச்சனைகளைக் கையில் எடுக்கவில்லை என்பதால் இருக்கலாம்... அண்மைக் காலமாகத்தான், தலித் அரசியல் மேலோங்கி வந்ததற்குப் பின்னர்தான் இடதுசாரிகளும் தலித் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கினார்கள்...
சந்திரா: அண்மைக்காலத்தில்தான் கம்யூனிஸ்ட்டுகள் தலித் பிரச்சனைகளுக்காகவும் போராடுகிறார்கள் என்பது தவறான பிரச்சாரம். தஞ்சை மண்ணில் விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளிகளையும் திரட்டி நடத்திய போராட்டங்கள், அங்கே சாதியத்துக்கு எதிரான வலுவான போராட்டங்களாக இருந்தன என்பதை மறுக்க முடியுமா?
ராசேந்திரன்: ஒரு காலத்தில், வர்க்கம் அடிக்கட்டுமானம், சாதி மதம் போன்றவை மேல் கட்டுமானம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அடிக்கட்டுமானத்தைத் தகர்த்துவிட்டால் மேல்கட்டுமானம் தகர்ந்துவிடும் என்று கருதிய நிலை இருந்தது. இன்று மார்க்சிஸ்ட் கட்சி தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்றே ஒரு தனி அமைப்பை ஏற்படுத்தி, சாதியக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டத்தை ஒரு மையப் பொருளாக்கியிருப்பது சிறப்பானது. ஆனால் தஞ்சையில் அன்று சாதியத்துக்கு எதிராகவும் ஆற்றல் மிக்க போராட்டங்களை நடத்தியவர்கள் இடைக்காலத்தில் பொருளாதாரப் போராட்டங்களோடு நிறுத்திக்கொண்டார்கள்தானே...
செந்தில்நாதன்: சாதிப் பிரச்சனை எங்கேயெல்லாம் கூர்மையாக வந்ததோ அங்கேயெல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் போராடி வந்திருக்கிறார்கள் என்பதே வரலாறு. இன்னொரு புறம், இந்து மதக் கலாச்சாரத்துக்கு எதிரான பிரச்சாரத்தில் இறங்கிய திராவிட இயக்கம், அந்த அளவுக்கு வலுவாக வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான பொருளாதாரப் போராட்டங்களை நடத்தவில்லை. இந்தியச் சூழலில் இந்த இரண்டு போராட்டங்களும் பிரிக்க முடியாதவை, சமதளத்தில் நடைபெற வேண்டியவை என்பதே மார்க்சியவாதிகளின் நிலைபாடு.
சந்திரா: அரசுக்கு எதிரான போராட்டத்தை ஒதுக்கிவிட்டு பண்பாட்டுப் போராட்டத்தை நடத்திவிட முடியாது... மதவாதச் சிந்தனைகள் எந்த அளவிற்கு மீண்டும் மீண்டும் கிளப்பப்படுகின்றன, அதற்கு நமது நிர்வாக அமைப்புகள் எப்படி உடன்படுகின்றன என்பதற்கு உதாரணம்தான் அண்மையில் மும்பை பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம். ஒரு புத்தகத்தை பாடத் திட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்று இந்துத்துவா ஆட்கள் ரகளை செய்கிறார்கள். பல்கலைக்கழகத் துணை வேந்தரும், எந்த விதிமுறைகளையும் பின்பற்றமால் அந்தப் புத்தகத்தை விலக்க ஆணையிடுகிறார். எந்த அளவிற்கு கல்விக்கூட வளாகத்திற்குள் பிற்போக்குச் சிந்தனைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதைத்தானே இது காட்டுகிறது?
குட்டி ரேவதி: அரசுக்கு எதிரான போராட்டம் தேவையில்லை என்று நான் அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற பொருளில் சொல்லவில்லை. ஆனால் இன்று எல்லா ஊடகங்களும் அரசின் பிடியில் இருக்கிறபோது, அந்தப் பெரிய சக்தியோடு நேரடியாக மோதிக்கொண்டிருப்பதை விட, அடித்தட்டு மக்கள் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக நடத்துகிற போராட்டங்களோடு இணைவதற்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றே சொல்கிறேன். ஆதிக்கப் பண்பாட்டிற்கு எதிராக கிராமக் கோவில்களின் பாரம்பரியமான வழிபாட்டு உரிமைகளுக்கான போராட்டங்களோடு இணைந்திருக்க வேண்டும் என்கிறேன்.
சந்திரா: கம்யூனிஸ்ட்டுகளுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும், தலித் மக்களின் வழிபாட்டு உரிமைக்காகப் பல இடங்களில் ஆலய நுழைவுப் போராட்டங்கள் உட்பட நடத்தியிருக்கிறார்கள். தொடர்ந்து நடத்திவருகிறார்கள்.
ராசேந்திரன்: கிராமக் கோவில்களின் வழிபாட்டு உரிமைகளுக்கான போராட்டங்களை ஆதரிப்பது பார்ப்பணீய எதிர்ப் பண்பாட்டுக்கான போராட்டம்தான் என்பதை ஒப்புக்கொள்ளலாம். ஆனால், அந்த வழிபாட்டு உரிமைகளுக்கான போராட்டங்களும், வழிபாட்டு உரிமைகளும் எதிர்ப் பண்பாடு என்ற கருத்தாக்கத்தை அந்த மக்களிடையே உருவாக்கியிருக்கிறதா என்பதுதான் என் கேள்வி. கிராமக் கோவில் என்று ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனியாகத்தானே இருக்கிறது?
செந்தில்நாதன்: சாதியப் பிடிப்பு வலுவாக இருப்பதற்கு, இங்கே நிலப்பிரபுத்துவம் தகர்க்கப்படவில்லை என்பதும், அதனோடு முதலாளித்துவம் சமரசம் செய்துகொண்டது என்பதும் ஒரு முக்கியக் காரணம். ஆகவே ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான போராட்டத்திலிருந்து சாதிய எதிர்ப்புப் போராட்டத்தைப் பிரிக்க முடியாது. மாற்றுப் பண்பாடு பற்றிப் பேசுகிறபோது, அதற்காகப் போராடுகிறவர்களுக்கிடையே ஒரு குறைந்தபட்ச ஒருமித்த கருத்துடன்பாடு என்பது தேவை. முதலிலேயே நான் சொன்னது போல, வர்க்கப் பிரச்சனை பற்றிப் பேசுகிறவரை தலித் எழுத்தாளராக ஏற்க மறுப்பது போன்ற போக்குகள் மாற வேண்டும்.
சந்திரா: படைப்பு சார்ந்த பிரச்சனையில் மட்டுமல்ல, சமூக இயக்கத் தளத்திலும் இந்தப் பிரச்சனை வருகிறது. தலித் மக்கள் பிரச்சனைகளுக்காக கம்யூனிஸ்ட்டுகள் ஏன் போராடவில்லை என்று கேட்கிறார்கள்; அப்படியொரு பிரச்சனையைக் கையிலெடுத்தால் நீ ஏன் வருகிறாய் என்று கேட்கிறார்கள்!
குட்டி ரேவதி: என்னைப் பொறுத்தவரையில், தலித் போராட்டம் வர்க்கப் போராட்டம் இரண்டும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒரே போராட்டத்தின் வேறு வேறு கிளைகள்தான். ஏனென்றால் ஒடுக்கப்பட்டவர்கள் யாரென்று பார்த்தால் அவர்கள் ஏழைகளாகவும் தாழ்த்தப்பட்டவர்களாகவும்தான் இருப்பார்கள்.கிராமங்களில் சாதிக்கொரு கோவில் இருப்பது உண்மை. ஆனால், கிராமத்துக் கலைகளில் ஆதிக்க எதிர்ப்பு என்ற கருத்து அடியிழையாக இருக்கும். இன்று சென்னை சங்கமம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு கிராமக் கலைஞர்கள் வரவழைக்கப்படுகிறபோது, அந்த எதிர்ப்புக்கூறை அழித்துவிட்டே மேடையில் ஏற்றப்படுகிறார்கள். அந்தக் கலைகளின் உண்மைத் தன்மைக்காகப் போராட வேண்டிய தேவை எழுகிறது.
செந்தில்நாதன்: மார்க்சியம் என்பது வளர்ந்துகொண்டே இருக்கிற விஞ்ஞானம். அதை அடுத்த கட்டத்திற்கு வளர்த்தவர்களில் ஒருவர் கிராம்ஸ்கி. அவர் மேல் கட்டுமானத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறியிருக்கிறார். அதை உள்வாங்கிக்கொண்டதன் வெளிப்பாடுதான் தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற இயக்கங்களின் வளர்ச்சி.
ராசேந்திரன்: எங்களுடைய கள அனுபவங்களிலிருந்து கிடைத்த அனுபவம் என்னவென்றால், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களில் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த பிற சமூகங்களின் மக்களும் எந்த அளவுக்குத் தங்களை இணைத்துக் கொள்கிறார்களோ அந்த அளவுக்கு அங்கே நல்ல தாக்கத்தை ஏற்படுத்த முடிந்திருக்கிறது என்பதுதான். அதே போல் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை நடத்துவது தலித்துகள் மட்டும்தான் என்றில்லாமல், அந்தந்தப் பகுதியின் ஜனநாயக அரசியல் இயக்கங்கள் அந்தப் போராட்டங்களை நடத்துகிற நடத்துகிற நிலை வரவேண்டும். இத்தகைய உணர்வுகளை வளர்க்கவும் ஒருங்கிணைக்கவும் இடதுசாரி-பெரியார்-தலித் இயக்கங்களுக்கிடையே ஒரு புரிதல் என்பது தேவைப்படுகிறது.
செந்தில்நாதன்: அது காலம் நமக்கிட்டிருக்கிற கட்டளை.
நன்றி: ’தீக்கதிர்’
தொகுப்பு: அ. குமரேசன்