ஒப்பனை அற்ற தேவதைகளின் தரிசனம்
பெண்களின் உலகுக்குள் பயணமாவது அவ்வளவு எளிதல்ல.
அதற்கு முதலில் பெண்களுக்கென்று ஒரு உலகம் இருக்கக் கூடும் என்கிற நம்பிக்கையும் புரிதலும் அவசியம்.அதற்கும் மேல் தேவை நிறைய திடம் உள்ள ஒரு மனம்.ஏனெனில்,ஆண்களின் உலகம் போல அத்தனையும் வெளிச்சமிட்டுக் கிடக்கும் தீம் பார்க் அல்ல பெண்களுடையது.இருள் கவிழ்க்கப் பட்ட,மறைந்தே அறியப்பட்ட,பெருமூச்சுகள் சூழும் கண்டறிந்திராத வனாந்திரம் அது.
ஒரு கர்ப்பக் கிரகத்தின் அமானுஷ்யமும்,பிசுபிசுக்கும் எண்ணெயின் வாசம் காற்றில் நிரந்தரமாகத் தங்கியிருப்பதுவும் ஆன உணர்வுகளை ஏற்படுத்தக் கூடிய பெண்களின் மனவெளிகளுக்குள் நம்மை இட்டுச் செல்கிறதாய் இருக்கிறது குட்டி ரேவதியின் நிறைய அறைகள் உள்ள வீடு சிறுகதைத் தொகுப்பு (பாதரசம் வெளியீடு).
இவை தேவதைக் கனவுகள் குறித்து இல்லை.தேவதைகளின் ஒப்பனையற்ற மனம் மற்றும் நிஜம் குறித்து.தேவதைகளின் வாதை மற்றும் வாஞ்சை குறித்து.தேவதைகளின் சாபங்கள் குறித்து.ஏக்கங்கள் குறித்து.உயிர் மீட்டெடுக்க அலையும் திக்கற்ற நாட்களைக் குறித்து.நெடும் சாபமென அவர்களின் மேல் என்றென்றும் கவிந்து கிடக்கும் இரவுகள் குறித்து.
காமம் நீண்ட ஒரு ஒளிக் கீற்றாக,பொது இருண்மை நிறைந்த குட்டி ரேவதியின் இந்தச் சிறுகதைகள் அத்தனையிலும் ஊடுருவி அமைகிறது.சில கதைகள் மெலிதாக நமது செவிகளில் கிசுகிசுக்கின்றன.சில கதைகள் நமது முகத்தில் அறைகின்றன.புரிந்து கொள் என்பது குட்டி ரேவதியின் எல்லாச் சிறுகதைகளுக்குள்ளும் ஒளிந்திருக்கும் ஒளியாய் இருக்கிறது.இருளும் ஒளியுமாய் அமையும் உலகொன்றின் பயணத்தில் மாஇசக்கி என்றொரு அம்மனைச் சந்திக்க வேண்டி வருகிறது.
கும்பிடுதல்களும்,வேண்டுதல்களும்,படையல்களும் நிறைந்த திருவிழா இரவொன்று கழிந்த மிச்சமிருக்கும் பகலின் வெறிச்சோடிய தருணமொன்றில் தனது கருவறையில் இருந்து வெளியே வந்து அங்கே விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பிக்கிறாள் மாஇசக்கி. க்விஜா (quija)அட்டையின் கட்டங்களில் நகரும் விரல்களைப் போல அசாத்திய வேகமும் தாண்டுதலும் நிறைந்த மொழியில் மா இசக்கியின் அந்தப் பயணத்தை விவரித்திருக்கிறார் குட்டி ரேவதி.
மனித உடலுக்கான இயல்பான அவஸ்தைகளுடன் நடந்தே பயணிக்கும் மாஇசக்கியின் பயணத்தினூடே அவளைத் தேடி வரும் பக்தர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆன திருமணம் ஆகாத இளம்பெண்களின் மன ஏக்கங்கள்,வேண்டுதல்கள்,அவர்கள் எதிர்கொள்ளும் சமூக முரண்கள் ஆகியன பற்றிய மன ஓட்டம் வெளிச்சமாகிறது.
இருளும்,ஒளியும்,வனமும்,ஒத்தையடிப் பாதைகளும்,மரங்களும்,செடிகளும்,பனைமரங்கள் நிறைந்த நிலமும்,பெண்களைக் குறித்த மாஇசக்கி யின் அக்கறையின் குறியீடுகள் ஆகி செவ்வரிகளாக ஓடுகின்றன கதையில்.
அவள் தேடிச் செல்லும் வயதுக்கு வந்த சிறுபெண்ணின் அழுகுரல் அவளை இப் பயணத்திற்கு உந்திய விசயமாய் இருக்கிறது.அந்த அழுகுரலைச் சூழ்ந்திருக்கும் அவலமொன்றை அழிக்கும் பணியொன்றை மிக நேர்த்தியாக மாஇசக்கி நிறைவேற்றுவதுடன் பயணம் முடிகிறது.நிறைய அறைகள் உள்ள வீடு தொகுப்பில் உள்ள மிக முக்கியமான சிறுகதை என இதைக் கொள்ளலாம்.இக் கதையின் நடை அசாதாரணமான உள்ளுணர்வுகளை அளிக்கக் கூடியதாக இருக்கிறது.கவிஞர்களுக்கு உரைநடை கைகூடாது என்கிற அபத்தமான கூற்றை உடைப்பதாகவும்.பேசப் படப் போகும் சிறுகதை மாஇசக்கி.
பெண்கள்,பெண்களின் மனம்,உடல் குறித்தான ஒப்பனையுடன் கூடிய செயற்கையான ஆண்களின் புரிதலை கழுத்தைப் பிடித்து கேள்வி கேட்கிற விதமாய் அமைந்திருப்பது தான் குட்டி ரேவதியின் இச் சிறுகதைத் தொகுப்பின் பொது அம்சம்.பிங்க் வோட்கா,யோனியின் உதடுகள்,குளிர் ஆகிய கதைகள் பெண்களை அணுகுவதில் உள்ள ஆண்களின் ஒப்பனையைக் கலைக்கக் கூடியவை.அதிர்ச்சி தரக் கூடியவையும் கூட.தைலக்காரி சிறுகதை பூடகமான,புரிந்து கொள்ள இயலாத பெண்களின் இயல்பான மனதை அதன் மர்மங்களுடன் வெளிப் படுத்தி அமைகிற ஒன்று.காமத்தின் மலர் சிலையென உறைந்திருக்கும் ஆணொருவனை முகிழ்க்கும் மலரொன்றின் அனுபவம்.
மிகவும் செறிவான மொழியை குட்டி ரேவதியின் இச் சிறுகதைத் தொகுப்பு தன்வசம் கொண்டிருக்கிறது.அது,மிகவும் ஒப்பனையற்ற மொழியும் கூட.
பெருவெள்ளம் பாயும் அகண்ட நதியை மூட்டுகள் நழுவி எந்த நேரமும் சிதிலமாகக் கூடிய பலவீனமான ஒற்றையடி மரப் பாலத்தின் மீது நடந்து கடக்கும் உணர்வுடன் இதை முடிக்கிறேன் என்று தனதுஇத் தொகுப்பு குறித்தான முன்னுரையின் கடைசிப் பகுதியில் குட்டி ரேவதி எழுதுகிறார்.
பெண்களின் உலகை கண்டுகொள்ளாத,அவர்களின் மனங்களுக்குள் பயணம் செய்ய அக்கறையற்ற ஆண்கள் இச் சிறுகதைகளை வாசிக்க நேர்ந்தால் அவர்களுக்கு மேற்சொன்ன உணர்வு தான் எஞ்சியிருக்கும்.
எனினும்,அதைக் கடப்பதற்கான வெளிச்சத்தை அளிப்பவர்களும் நிறைய அறைகள் உள்ள வீட்டின் தேவதைகள் தாம்.
குமரகுருபரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக