1. தேன் கூடு
இலட்சம் அறைகளாய் பெருக்கம் பெற்றிருக்கிற
தேனீக்களின் கூட்டில் இனிமையின் ரசம் பேருருக் கொண்டு
அடையாய்க் கூடாய் அந்தரக் கிளையில் தொங்குகிறது
கீழே அதை மாந்து நிற்பவனின் நெஞ்சில்
எட்டாத உயரத்தின் ஓர் ஆசையாய் ஊசலாடுகிறது
இத்தேன் கூட்டைச் சுமந்து அலையும்
என் பேருவகையை ருசிக்க வந்தவனையும்
கூட்டில் ஓர் அறையாக்கி அணைத்துக் கொள்கிறது
அவன் மகரந்தத்தையும் தேனாக்கித் தின்கிறது
அவன் வியர்வையையும் நாநுனியில் இனிப்பாக்கிக் களிக்கிறது
உயிரைக் கோதும் இலட்சம் ஈக்களின் எண்ண மூட்டத்தில்
கூட்டின் அறைகள் பெருகிக் கொண்டே இருக்க
எலும்புகளுக்கு இடையே புகைச்சுருள்களாய்
அவனுக்கான பாடல் கூவலுடன் எழும்புகிறது
உயிரின் இனிய வேதனை சொட்டுச் சொட்டாய்
காலத்தின் பாறைகளில் துளிர்க்கிறது
அதன் அனுபவத்தை கையேந்திப் பருகிட
அருகில் வந்தவனுக்கு கையில் அள்ளித் தருகிறது
ஒவ்வொரு அறையையும் நிமிண்டும் சுவையின் குறுகுறுப்பில்
கசியும் தேனை சேகரமாக்கும் கனவுகளின் பேரீசல்கள்
சுழன்று சுழன்று பறக்கும் நினைவின் பெருவண்டுகள்
2. ஆடை
பரந்த நிலவெளியை நீரில் நனைந்த உடையென
வாரிச் சுருட்டி எழுந்த இவ்வுடலின்
நீல வண்ணப்பட்டாடை அவன் பார்வை விரித்த வானம்
எனைத் தன்னிரு கரங்களால் சுழற்றி இழுத்த விசையில்
எம்முடல்கள் நிலமொன்று விரித்து
கொத்துக் கொத்தாய்க் கொன்றைப் பூக்கள் முளைத்தெழும்
பூ உதிர்ந்த வெளியில் காற்று சரசரத்துப் போகும்
உயிரைக் கவர்ந்து தந்த முத்தத்தில்
பாறைகள் மீதாய்ச் சீறியேறி பெருமுழக்கத்துடன் வீழும்
பேரருவி பெருநிலவெளிகளில் பெருக்கெடுத்தோடும்
இடையறா முயக்கங்கள் இடையனின் கிடையோட்டிய
மேய்ச்சல் வெளிகளில் பசும்புற்களைப் பரப்பும்
மழை பெய்த நிலத்தை உழுதுழுது நடந்த
பயிர்க்கால்கள் போல யாக்கையெங்கும் வேரோடிய
ரோமங்கள் அவனைத் தேடித் தேடி அழைக்கும்
நிலவொளி வீசும் வானத்தை
உடையாக்கித் தரும் ஈர அணைப்புகளில்
உடலின் உயிர்ப்பிராணிகள்
கர்ச்சித்தெழும் கானகமாகும் கனவுகள் பெருகும்
3. உப்புக்கண்ணீர்
அந்தக் கடலாகி நிற்கும் அவள் கண்ணீரில்
எத்தனை ஆயிரம் அலைகளாய் எழும்பி நிற்கின்றன
அவளின் வேட்கைகளும் கேவல்களும்
என்று அவள் அறியவே இல்லை
உப்பு நீரிலும் மடியா தாவரங்களை விளைவிக்கிறாள்
சப்தங்கள் அடங்கிய அவள் உலகத்தில்
புற வெளி அறியாத உயிர்களை உலவ விடுகிறாள்
பாறைகளை மோதி அறையும் அவள் கைகள்
கரையேறத் துடிக்கும் அவளின் மதலைகளை
கடலுக்குள் இழுத்து ஆழம் விளையாட அனுப்புகின்றன
தன் எல்லா பொக்கிஷங்களின் வண்ணங்களையும் மறுத்து
தன்னிடம் ஏதுமில்லை ஏதுமில்லை என கைவிரிக்கிறாள்
அவள் உறங்காமல் இயங்கிக் கொண்டே இருக்கிறாள்
உப்பாகிக் கரிக்கும் அவளை
இரத்தமாக்கி புரவிகளாக்கி எட்டுத்திக்குகளாக்கி
எழும் சூரியனை
தினம் தினம் பிரசவிக்கிறாள்
4. வீட்டிற்குள் வளரும் மரம்
அகத்தின் சுவர்களில் இதயத்தின் தரையில்
சுயவரலாற்றுப் புத்தகம் ஒன்று
நூலாம்படை பூத்து வேர்களோடி கிடக்கிறது
அதை விரித்துப் பார்க்கும் துணிவில்
வேர்களைப் பிய்த்தெடுக்கும் வன்முறை இல்லை
புத்தகம் தன் இலட்சம் கைகளை விரித்துக் கொண்டு
நிமிர்ந்தெழுந்து நிற்கிறது கூரையை முட்டி மோதி
கைவிரித்த கிளைகளில் நான் கையூன்றி நகர்ந்த சம்பவங்கள்
சில குறிப்புகள் துளிர்த்து இலைகளாகி சில சருகுகளாகி
அந்தகாரத்தில் மிதந்தலைகின்றன
காற்று ஒரு பொழுதும் அதைத் தூக்கிச்செல்லாது
அதன் ஒரு கனியையும் எந்த அம்பும் வீழ்த்தாது
கூரை இடிந்து போகும் வரை மரம் வளரட்டும்
5. உப்புநீர்ச் சமுத்திரம்
அந்தச் சிட்டுக் குருவி செம்மாந்து திரிகிறது
நிறைய வானங்களை அது நீந்தி விட்டதாம்
இறைந்து கிடக்கும் நிலத்தின் பெருமூச்சுகளைத்
தன் சிறு அலகால் கொத்தித் தின்றிருக்கிறதாம்
வேடனின் அம்புகள் வரைந்த ஆகாய அகழிகளை
லாகவாய்ப் பாய்ந்து கடந்து
சிரிப்பு கொப்புளிக்க திசை திரும்பியிருக்கிறதாம்
கதவுகளற்ற அதன் அரண்மனையில்
சூரியனின் கூச்சம் கூட தரை வீழ்வதில்லை
தன் ஒற்றை இறக்கையால் வானின் கூரைபிடித்து சுழற்றி
அதை ஓர் நீர்க் குட்டையில் எறிந்துவிடவும் முடியும்
இப்பொழுதைய அதன் தாகமெல்லாம்
உப்புநீர்ச்சமுத்திரத்தை அப்படியே குடித்துவிடுவது
நீண்ட நேரமாக கடலின் மேலே
நின்ற இடத்திலேயே சிறகை விரித்து நின்று
தலைகுப்புறப் பாய தயாராய் இருக்கிறது என்றாலும்
கடல் ஒன்றும் அதன் மீது கோபித்துக் கொள்வதில்லை
6. நீர்நிலை
கரைவிரிந்த அந்த நீர்நிலை எப்பொழுதோ
தன்னை ஒரு கண்ணாடிப் பாளமாக்கிக் கொண்டது
தேக்கத்தையும் குழப்பத்தையும் துறந்த
நிசப்தமான ஓர் ஆடையை அணிந்து கொண்டது
அகண்ட வானத்தை அதன் சிறகு விரிக்கும் மேகங்களை
நட்சத்திர விழிகளை ஏன் காயும் நிலவைக் கூட
தன்னில் பிரதிபலித்தது தண்ணீராய் நிறைந்தது
ஒரு பருந்து அதன் மேலே பறந்து செல்கையில்
தன் வழியாகப் பறக்க இன்னொரு வானம் தந்தது
சூரியன் முன் தன் பொற்காசுகளை வெளிப்படுத்தினாலும்
எவராலும் களவு கொள்ள முடியாத பொற்கலமென
அது தன்னை ஆழம் ஆக்கிக் கொண்டது
அதன் மீது நீளும் மரங்களின் கிளைகளில்
ஊஞ்சல் ஆடும் பறவைகள் கால் நனைத்துக்கொள்கையிலும்
ஒரு கற்பனையான மீனை நகங்கொத்திப் போகையிலும்
சிரிப்பின் சிற்றலைகளால் நீர்நிலையை நிறைத்துக் கொள்கிறது
தன் அழகையே தான் பார்த்துக் கொள்ள
தன் அத்தனைக் கைகளாலும் தாமரைகளை உயரே நீட்டுகிறது
அக அழுக்குகளை இரையென தின்னும் மீன்களால்
அதன் அந்தரங்கம் நீரின் அரண்மனையாகிறது
தன் கரை வந்து சுமைகளை இறக்கி வைத்து
ஒரு சிரங்கை நீரள்ளிப் பருகப் போகும் பயணிக்காகத்
தன்னை எதனாலும் பழுது படுத்திக் கொள்ளாமல் காத்திருக்கிறது.
குட்டி ரேவதி
நன்றி: பஷீர், சுதீர் செந்தில்
1 கருத்து:
உப்புக்கண்ணீர்..... நெருடுகிறது.
கருத்துரையிடுக