நம் குரல்

குறியீட்டுக் கவிதைகள்








1.
தாமரை மலர் நீட்டம்

தடாகத்தில் கண்ணகியின் உடல்
ஒரு செந்தாமரையாகித் தவிக்கக் கண்டாள்
காமத்தின் நீர் மட்டம் உயர உயர
தன் தாமரையின் ஒற்றைக்காலில் நின்ற
தவ வேளையும் உயரக்கண்டாள்
சேற்றின் வேகாத மண்ணில் நின்று தவித்த
தன் தாளாத இலை உடலை
அந்நீரில் விரித்து சூரியன் பரவக் கொடுத்தாள்
சூரியனோ அவளைக் காணாமல் கடக்கிறது
தணலாய்த் தகித்தது உள்ளும் புறமும்
நீர்த்தடாகம் அவளைச் சுற்றிப்
பெருகிக் கொண்டே இருந்தது
தன் இலையுடல் நோவும் கனத்த மலராகத்
தான் இருப்பதை அவள் விரும்பாமலும் இல்லை
சுற்றிப் பறக்கும் தேனீக்களுக்குத் தேன் கொடுக்க
விரியும் தன் முகத்தை முத்தமிட்டு முத்தமிட்டுச்
சிரிக்கின்றன தேனீக்கள்
தடாகம் தரை தங்காமல் கரையெட்டித் தளும்ப,
மலருடன் வாடும் முன் எனைக் கொய்யச் சொல்லுங்கள்
இல்லை, தடாகத்தைக் கடந்து போகும் சூரியனைக்
கண நேரம் என்னில் பரவச்சொல்லுங்கள்
எனக்கூவுகிறாள் விடிகாலைப் பொழுதுகளில்.




  
2.
இனி வேட்டை என்முறை

அது ஒரு வேட்டையின் கணம் என்று
சொல்லத் தேவையில்லை
அவன் என்னுடல் நிலத்தின் மேலிருந்தான்
அவன் எடையின் அழுத்தமும்
மூச்சின் விசைக்கும் கீழிருந்தேன்
நானங்கே நரம்புகளால் நாண் இழுத்த வேகத்தில்
அவன் மல்லாந்து எதிரே விழுந்தான்
இப்பொழுது வேட்டையின் என் முறை
நான் அவனை மூர்ச்சிக்கச் செய்தேன்
அம்புகள் தீர்ந்து போயிருந்த  அம்பாரியில்
மூர்ச்சிக்கச் செய்யும் முத்தங்களின் கனிகளுடன்
நிணம் பெய்யும் வானத்தைப் போல  இருந்தேன்
ஒரு மிருகமாய் மாற்றி அவனைத் தூக்கிச்சுமந்து
வனத்தைச் சுற்றி வந்தேன்
இனி இறைச்சியின்றி ஒரு கணமும்
என் வேட்கை தணியாது


 



3.
மதுத்தாழி

என் உடலொரு மதுத்தாழி
நுரைத்த மதுவை விளிம்பின் தருணம் வரை
நிறைத்து வைத்திருப்பவள்

தேனடையாய்த் தொங்கும் நிலவினும்
கனம் நிறைந்த அதன் போதத்தைத்
தூக்கிச் சுமக்கும் இனிய பருவம் என் இரவு

மரத்தின் தேகத்தில் தனியே தொங்கும்
அணிலின் நீண்ட நேர காத்திருப்பில்
என் மதுத்தாழி நிறையும்

தாழிக்குள் அடைந்து கிடக்கும் ஆழியை
குடிக்க முடியாதெனும் திகைப்பில்
அணில் நீண்ட நேரம் தனியே தலைகீழே

மதுத்தாழி நிறையட்டும்
போதையை ஏற்றிக்கொள்ள முடியாத அணில்
தலைகீழே தொங்கட்டும்

உருவத்தை ஒரு பகையாக்கி
அணில் எனைப் பார்த்தவண்ணமே
மண் கிடந்ததொரு கொட்டையை எடுத்துக்
கொறித்துக் கொண்டிருக்கிறது







4.

விதை முளையும் யோனி

விதையுடன் கூடிய சிறு செடியொன்று
யோனியில் முளைத்து வந்த அம்முத்திரையை*
வரலாறு தன் அகண்ட பூமியின் வயிற்றிலிருந்து
எமக்கு எடுத்துக் காட்டியது எதேச்சையானது அன்று
சூரியன் தன் பழுக்கக் கொதித்த நரைத்த கரங்களை
வரலாற்றின் மண் கிளறி நம் காட்சிக்கு
ஒரு சித்திரம் வரைந்து கொடுக்கிறது
அதைத் தொடரச் சொல்கிறது
மறைதொனியில் இச்சிக்கிறது நம் தேடலை
காலத்தின் பாதையைத் திறந்து கொடுக்கிறது
இன்னும் உறையாத இரத்தத்தை
அது தன்னில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது
இன்னொரு நாளை எப்படித் தொடங்குவது
என்று அந்தக் காட்சி நினைவுறுத்துகிறது
சூரியனை நிதம் தின்று செரிக்கும் கலை கற்ற
தாவரத்தைப் பிரசவிக்கும்
பலமுலைப் பெண்கள் நாமென்று
 
தன் இரு கைகளால் தொடைகளின் இடுக்கிலிருந்து
அத்தாவரத்தைப் பெயர்த்துத் தனியே எடுக்க

அவள் கைகளில் சிரிக்கிறது ஒற்றைச்செடி.




சிந்து சமவெளியில் கிடைத்த முத்திரை வடிவம்





  
5.
அணிலாகி நின்ற மரம்

அதிகாலை மரத்தில் தன் குரல் சப்தத்தை
கிளையெங்கும் பூத்துக்குலுங்கும் பூக்களாக்கிய
அணில் ஒரு மழையால் அடங்கியது

வானம் தன் இசையை ஒரு பெருமழையாக்க
பூக்களை உதிர்த்த கிளையிலும் இலையிலும்
வந்து தங்கியது நீரின் குரல்

அணிலாகி நின்ற மரத்தில்
எப்பொழுது பூக்கள் மீண்டும் குலுங்குமென
எல்லோரும் காத்திருக்க
சுள்ளென்று வெயில் வந்து மர உச்சியில் அமர,
காலம் ஒரு மரமாய் நின்றது

பூக்களற்ற மரம்
மதிய வேளையின் சாபம்.





  
  
6.

சோழிகள் ஆக்கிய உடல்

உருட்டிவிடப்பட்ட சோழிகளால் ஆன
இப்பெருஉடலின் நற்சோழிகள் உமது
நீவிர் உருட்டி விளையாட
உருண்டோடி விளையாடும் நண்டுகளின்
மத்தியில் நவ சோழிகளின் பொலிவு
உம் கண்களைத் திருடும்
கைப்பற்றி உருட்டி விளையாட இம்சிக்கும்
சோழிகளை அலை வந்து கலைக்க
வழி மறந்து திணறி நீருக்குள் உருளும்
சோழிகளற்ற கடலாகா கரையை
என் உடலென்று ஆக்கினால்
தன்னைத் தானே இயக்கும் மகிழ்ச்சியறியா
கூழாங்கற்களே மிஞ்சும் உமக்கு




குட்டி ரேவதி
நன்றி: ’சாளரம்’ இலக்கிய இதழ்

3 கருத்துகள்:

நேசமித்ரன் சொன்னது…

பிரமாதம் !

குட்டி ரேவதி சொன்னது…

நன்றி, நேசமித்ரன்! நன்றி!

குட்டி ரேவதி

rishvan சொன்னது…

அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...www.rishvan.com