நம் குரல்

இரை




மின்னும் செதில்களுடனும் துருத்திய விழிகளுடனும்
அலைகடல் கரையின் பொன்மணலில்
ஒற்றைக் கால் உந்திஉந்தி நீ துடித்துக்கொண்டிருக்கிறாய்
ஆகாயத்தில் விசையுடன் சுழலும் அவ்வேகத்திலேயே
என்னுடல் கணையால் அக்கரைபாய்ந்து
என் இரை உன்னைக் கொத்திப்போகும் தருணம் மீதில்
சலனம் கலைத்த பறவையாய் பறத்தலில் மிதக்கிறேன்  
வானம் பூமி இடைவெளிப் பாய்ச்சல் பழக்கமெனக்கு
என்றாலும் கடைசிச் சுவாசமும் சீற விழிபிதுங்கக் காட்சிதரும்
பரிதாபமான இரையை ஏனோ நான் விரும்பவில்லை



நீர்ச்சுழலில் துள்ளியோடி  நீந்தி நீ ஆர்ப்பரிக்க
சர்ரென்று பாய்ந்து உன்முதுகில் என் நரம்பிறக்கிக் கவ்வி
அம்பாய் வானேகும் என் கம்பீரத்தில்
நீர்ப்பரப்பில் நெளியும் என் பிம்பத்தைத்தான்
ரசிக்கிறேன் இன்னும் அதிகமாய்
ஆகாயத்தை முட்டிக் கிளைக்கும் ஒரு மரக்கிளையில்
என் கால்நகங்களுக்கிடையே உனை விருந்தென இருத்தி
எனை நோக்கும் உன் கண்களை அலகால் தோலுரித்து
நீ தரும் சுவையை உதாசீனப்படுத்தி
உன்னை இன்னுமொரு முறை உயிர்நீக்கி எறியலாம்
இன்னொரு பறவைக்கு இரையாய்




குட்டி ரேவதி

தோழி சந்திராவிற்குப் பரிசாக இரு கவிதைகள்


கரையேதுமில்லை


மீன்கள் அள்ளிய வலையாய்க் கடலை
கரையிழுத்து வந்த அதிகாலைப் பெண்டிர் நாம்


இரவின் ரகசியங்களைக் கிழிக்கும்  மூர்க்கத்துடன்
நம்மிருவரின்  கணக்கற்ற இயக்கங்களாலான உடல்களால்
இரவின் நீலவர்ணத்தை அளந்தவர்கள்  தோலுரித்தவர்கள் நாம்
ங்கே தந்திரங்கள் ஏதுமில்லை
கடலை அளக்க நீந்திய இரு மீன் குஞ்சுகளைப் போல
அளந்து நடக்கப்பணித்த கால்களைத் துறந்தோம்
நீந்தி நீந்திக் கரை  மறந்தோம்
ஆழக்கடலில் சூரியன் தெரிந்தது


மெலிந்த உதடால் மழைநீரின் ஒவ்வொரு துளியையும்
கவ்விச் சுவைத்த முத்துச்சிப்பியைப் போல்
உன் காமத்தின் பெருமழையைத் துளித்துளியாய்க் குடித்தேன்
உன் காதல் என்னிடம் மண்டியிட்டது
என் காதல் உன்னிடம் முறையிட்டது
எத்தனை முறை கரை எழுப்பினாலும்
அதை அழிக்கும் அலை வேகத்துடன் புரண்டெழுந்தது
கரையில் சூரியன் எழுந்தது



நம் காதலர்  தலைமீது
நாம் சவுட்டிய பாதங்களை
அவர்கள் தம் உள்ளங்கைகளில் வாங்கினார்கள்
பருகினார்கள் நம் காதலின் கன மழையை
கரையேறிக்கிடந்தோம் ஆழம் துளைத்த வாகையுடன்
மழை தீர்ந்து சிவப்பேறிய அதிகாலை
நமக்கு மேலே நீர்ப்பறவைகள் பறந்து போயின
பேரின்பக் கூவலிட்டு


மணமேடை ஏறி நின்று 
கருத்த திண்முலைகளைப் பரிசளிக்கத் தயாரானாய்
என் முத்தங்களால் தொடுத்திருந்த அம்மணமாலை
உதிர்த்து ஒவ்வொன்றையும் நட்சத்திரம் ஆக்குபவனுக்கு


ப்பொழுதும் உனக்காய் வானத்தை விரிப்பேன்
ன் மடியில் கடலலைகள் ஆர்ப்பரிக்க







கண்காட்சி


வீட்டின் கூரை மீது விரிந்த வேப்பமரம்
தங்க நிறப்பழங்கள் சொரிய
கோடைப்பகலில் உன்வீடு தீச்சட்டியாய் கனன்றது

அறைகளின் சுவர்களில் உலர்ந்த பூக்களென
பட்டாம்பூச்சிகள் ஒட்டியிருந்த வண்ணம் காட்டி 
பரவசம் கண்டாய்
நிழலின் தோகைகள் இருளென படர்ந்து
தாபங்கள் எழுந்த வேளை
தனிமையை நீருற்றி வளர்த்த உன் கண்கள்
வேகமாய் இன்னோர் அறைக்கு வாசல் திறந்தன

அறைகள் பெருகி
தாழுடன் தவிப்புடன் இறுகியிருந்தன
வீசும் வெக்கையை குயிலின் பூக்கள் பாடி ஆற்றின
கிளைகளின் பாதையில் பந்தயம் வென்ற
அணில்களின் சீழ்க்கைகள் தனிமையைக் களைத்தன
வீட்டின் அழகை நீ வியக்கும் போது
இரும்புக்குறி தீயாகச் சிவந்து
உடலின் தசைநார் புடைத்து எழுந்தன

வெக்கை வீறெடுத்திருக்க வீடு எப்படி என்றாய்
காதலியின் யோனியை கண் காட்சி ஆக்கியவனே!
வீடாகும் முன்னர் அது ஒரு பெருங்காடு
திக்குகளாய் விரிந்த இறக்கைகளுடன்
நாங்கள் வெறியாற்றிய குளிர் வனம் என்றேன்

உன்மீதே வழிந்திருந்த தோல்வியின்
திரவத்தைத் துடைத்துக்கொண்டாய்

வேம்பின் கவனம் நிழல் விரிந்த
பாறைகளாலான மொட்டை மாடியில்
நினைவுகளின் விசிறி அசைந்து
அவ்விடம் குளிர்ந்தது
வேப்பம்பூக்கள் ஒன்றிரண்டாய் உருண்டோடி
வீட்டினுள்ளே விளையாடின.



(தோழி சந்திரலேகாவின் பிறந்தநாள் பரிசாக…!)