நம் குரல்

'முள்ளிவாய்க்காலுக்குப் பின்’ நூலுக்கு எழுதிய முன்னுரை

சிறிய அவகாசம் எடுத்துக்கொள்கிறேன்...



கனலும் உண்மையின் மீது போர்த்தியிருக்கும் சாம்பலை ஊதிப்பறக்கச் செய்யும் பணி கவிஞனுடையது. அரசியல்வாதியைப் போல நிலைப்பாடு எடுப்பது அன்று. உண்மைக்குச் சார்பான நிலைப்பாடே கூட உண்மையிலிருந்து வெகு தொலைவில் நிற்பது என்பது கவிஞனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல. ஆகவே அவன் கவிதைகள் எழுதவந்தான். நேர்மையான உணர்ச்சிகளை எந்த வித சமரசத்திற்கும் அச்சத்திற்கும் அதிகார விருப்பத்திற்கும் ஆதிக்க எழுச்சிக்கும் ஆளாகாமல் இருக்கும்பொழுது கவிதை முளைக்கிறது. இந்தத் தர்க்கத்தின் அடிப்படையிலேயே இத்தொகுப்பும் உருவாகியிருக்கிறது.



முள்ளிவாய்க்காலில் இறுதி வரை நின்று சண்டையிட்ட இருதரப்பு போராளிகளின் பார்வைகளாகவோ அங்கு கடைசிக்கணம் வரை உயிருடன் சாட்சியாக நின்று களத்தில் மனித அவலங்களை கண்ணுற நேர்ந்த மக்களின் ஓலங்களாகவோ காலம், இடம் என்ற அங்குற்ற வெளிகளுக்கு அப்பால் இருந்து ஊகித்தும் கணந்தோறும் உறவுற்றும் சொற்களாகி நின்ற கவிஞர்களின் கவிதைகளாகவோ இந்தத்தொகுப்பு ஆகி நிற்கலாம். பல சமயங்களில் கவிதைகள் நீதிமன்றங்களின் விசாரணைகளாக இருக்கின்றன. அல்லது உயிர்பிரியும் நேரத்திலான வாக்குமூலங்களாக. அல்லது நாட்குறிப்பின் ரகசிய குறியீடுகளாக. அதை வாசிக்கும் எவரும் நேரடியான பொருளைப் புரிந்து கொள்ள முடியாத படிக்கு சொற்களின் மறைமுக அர்த்தங்கள் துலங்கும் படியான உளவு நோக்குவதற்கு ஏதுவான படிமங்களாக. வகுப்புகளில் சொல்லிக்கொடுத்த ஆசிரியருக்கு மாணவியின் ஒப்புவித்தலாக. பெருங்காற்றுக்கு முஷ்டிமடக்கும் போராளியாக. அடர்ந்த இருண்டவெளிக்குச் சென்று உயிர்த்தோழியின் சடலத்தை மீட்டு வரும் எத்தனமாக. இப்படி எண்ணிலாத குரல்களைக் கொண்டுவரும் முயற்சியே, ‘முள்ளிவாய்க்காலுக்குப் பின்’ எனும் இக்கவிதைத் தொகுப்பு. இதுவரையிலான போர்பற்றிய அத்தனை மனித அறிவும் நினைவுகளும் இக்கவிதைகளில் புரள்கின்றன.



மனித நினைவுகளில் வன்முறை பதிந்திருக்கும் வடிவங்களைச் சொற்களாக்க முயலும் போதெல்லாம் கவிதை பிறப்பதாக நான் எண்ணுவதுண்டு. கிணற்றின் தாரையைப் போல நினைவின் ஆழ்துளையின் உட்சுவர்களிலிருந்து சுரந்து வழியும் சொற்களே கவிதை வடிவாகின்றன. மீண்டும் மீண்டும் கவிதைகள் எழுதப்படுவதால் வன்முறையை அழிக்க முயலும் என்ற எனது நம்பிக்கைத் தீர்மானம் தான் இக்கவிதைத் தொகுப்பின் உருவாக்கத்திற்கான அடித்தளமும் கூட. மேலும் இது ஒரு வகையில் மறைமுகமான ரணசிகிச்சை என்பதைப் பலருடைய கவிதை வரிகள் உணர்த்துகின்றன.



ஊழ் என்பது சிலப்பதிகாரத்தில் மனித மனங்களின் தற்செயலான முடிவுகளாலும் தான்தோன்றித்தனமான போக்குகளாலும் தாம் தீர்மானிக்கப்படுவதாக சித்திரிக்கப்படுகிறது. மனித மனம் தன் இயல்பு மீறிய திட்டங்களின் சாத்திய அசாத்தியங்களை அறியாமல் இப்படி வெறுமனே உணர்ச்சிகளின் கால்களுக்கிடையே அலைவுறும் போது ஏற்படும் நசுக்கல்களே ஊழுக்கான தொடக்கமாக இருக்கிறது. மனித மனத்திற்கு சமாதானம் என்ற ஒருவார்த்தை இருக்க முடியாது. அது தேவனால் கொடுக்கப்பட்ட சொல்லாக இருக்கலாம். ஊக்கம் பெற்ற மனிதன் எதையாவது தனக்குத் தானே சாதகமாகவோ எதிராகவோ செய்து கொண்டுதான் இருப்பான். அவ்வாறு அவன் தொடர் இயக்கத்திற்கான வாழ்க்கைக்குள் புகும்பொழுது இதன் எல்லைகளையும் முடிவுகளையும் கற்பனைசெய்து பார்த்து அதன் விளைவுகளை ஆராய்ந்து பார்க்கும் அவசியம் இல்லை. மாறாக தற்காலிகமான ஓர் எழுச்சி என்ற மனிதனுக்கான அடிப்படை அறிவுவெளியால் அவன் எதையேனும் செய்துவிட நினைக்கிறான். அதில் போர் என்பதும் ஒடுக்குமுறை என்பதும் இன்னொருவர் மீது ஏவும் வன்முறை என்பதும் முதன்மையானதாக மாறி அவன் பின் ஒருபொழுதும் தான் தொடக்கப்புள்ளிக்கு மீண்டு வர முடியாத நிலைக்கு தன்னைத்தானே இழுத்துச் செல்கிறான். முன்னை வினை சூழ் காலம் என்ற சாக்கு எல்லாவற்றிற்குப் பின்னும் ஆறுதலாக இருக்கிறது.



ஈழத்தைப் பொறுத்தவரை இரண்டு தரப்பினராகவே பிரிந்திருக்கிறது அரசியல் நிலைப்பாடு. விடுதலைப் புலிகளை முன்வைத்து எதிரெதிர் நிலைப்பாடுகளை எடுக்கும் இவர்கள் ஈழத்தை முதன்மையாக வைத்துப் போரிட்ட பிரபாகரனுக்கு எதிரானவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு பின்பு அந்தக் கோரிக்கைக்காக வாதாட நேர்ந்தது. அதற்கு ஆதரவாக இருப்பவர்களோ அதற்கான உள்ளீடுகளையும் நுண்ணிரசியலையும் பேசாது வெறுமனே உணர்ச்சிவயப்பட்டவராய் இருந்து ஈழத்தை ஒரு கருத்துநிலமாகவே முன்மொழிந்தனர். இந்நிலையில் இதன் பின்புலத்தில் சாதியம் என்பது மிகத் தீவிரமான தந்திரங்களைக் கையாண்டிருப்பதைத் தெளிவாகப் பார்க்கமுடிகிறது. இந்தியாவில் அதிகாரச்சாதி அடையாளத்தைக் கொண்ட எவருக்கும் ஈழம் என்ற பேச்சே வேப்பங்காய் தான். இதனால் தான் சாதியம் இந்திய தேசியம் தமிழ்த்தேசியம் எல்லாவற்றையும் இணைத்துப் பார்த்து அதன் நுட்பமான கோணங்களை எல்லாம் விரித்துப் பேச வேண்டியிருக்கிறது. தமிழினப் பெருமிதம் தன்மானம் கொண்ட இந்தியர்கள் சாதி வெறியை ஒரு வன்முறையாக நோக்குவதே இல்லை. இந்தியாவைத் தன் நாடு என்று முழங்கும் ஆதிக்க வர்க்கம் மற்றும் சாதியைச் சேர்ந்த நாட்டுப்பற்றாளர்கள் எவரும் தமிழ்ப் பெருமை என்பதைப் பேசினாலே அது தமிழகம் சம்பந்தப்பட்டதாக இருக்கட்டும் அல்லது ஈழம் சம்பந்தப்பட்டதாக இருக்கட்டும் இரண்டு விஷயத்திலுமே தமது நாட்டைத் துண்டாட தமிழர்கள் முனைவதாய் அவசர அவசரமாய்ப் பறைசாற்றிக்கொண்டு நிராகரிப்பார்கள். இரண்டுமே தமது நாட்டை இழப்பதற்கான அச்சங்கள் இல்லை, தாம் தலைமுறை தலைமுறையாகச் சம்பாதித்து வந்த சாதிப் பெருமித்தையும் அதிகாரத்தையும் இழந்துவிடக்கூடுமே என்ற அச்சம் தான். மேலும் ‘இந்தியா’ என்று நாட்டின் பெயரைச் சொல்லித் தான் அவர்கள் மனித இரத்தத்தைப் பருக முடியும் என்று ஏற்கெனவே அறிந்திருந்த படியால் பார்ப்பனீய இந்தியாவைப் பொறுத்த வரை தமிழ்த் தேசியமும் சரி, ஈழத் தமிழ்த் தேசியமும் சரி செல்லாது.



ஏதோ ஒரு வகையில் தமிழ்த்தேசியத்தின் தலைமை அவ்வாறு இல்லையென்றாலும் அதன் கருத்தியலையும் நிலைப்பாட்டையும் தம் முழக்கமாகக் கொண்டிருக்கும் எந்த ஒரு நபரிடமும் சாதியம் பற்றிய புரிந்துணர்வும் அதற்கான முனைப்பும் இல்லாததை மிகுந்த கவலையுடன் இங்கு பதிவுசெய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. அதைப் புரிந்து கொள்ள முரட்டுத்தனமாக மறுக்கும் பாமரத்தனமும் பரம்பரையாக ஆண்டுவந்ததன் பழக்கம் செறிந்த ஆண்டைக்கான குருட்டுத்தனமும் இவ்வினப்படுகொலையில் என்ன பங்கு எடுத்துள்ளன என்பது பேசப்படாமலேயே காலம் நழுவிச்செல்கிறது.


கவிதைகளுக்கு வருவோம்.

விடுதலைக் கனியின்/ மரபணு விதைக்குள்/வீரியம் கலந்த/ஓர்மமும் கொடூரமும்

சமன்பாடற்று/ஓங்கியே வளர்ந்ததால்/அவர்கள் உச்சரித்த/ஒற்றைச் சொல்லின்/சாயல் படிந்ததை/தவிர்த்திருந்தோமா? எனும் கி.பி.அரவிந்தனின் கவிதையுடன் தொடங்குகிறது இத்தொகுப்பு. நாங்கள் மறுத்தொரு சொல்லும் சொல்லோம்/துப்பாக்கிச் சன்னங்கள்/ வாய்க்குள் பிரவேசித்து/ பிடரிவழியாக வெளியேறுவதை /நீங்களும் விரும்பமாட்டீர்கள் தானே…? என்ற கேள்வியே பதிலாய் விடுவிக்கப்பட்டவர்களின் இரகசிய வாக்குமூலம் கவிதையில், தமிழ்நதி. இரு கேள்விகளும் தனித்து நின்று நம்மைச் சுட்டியும் தமிழ்நதியின் கேள்வியே பதிலாய்த் தொக்கி நிற்பதுமென ஓர் மனித அவலம் தன் முடிவுறாத் தன்மையை பறைசாற்றுகின்றது.


மெழுகுவர்த்திகளில் ஏற்றப்பட்டும்/ ஊதுபத்தியில் புகையவிடப்பட்டும்/ அவமானத்துக்குள்ளாவதன் சித்திரவதை தான் நான், என ’வெளியேற்றம்’ கவிதையில் அனார் கூறுவதைப் போலவே எல்லோரையும் தானாக நோக்கும் தன்மையால் கவி வாதம் பொதுநிலையை அடைகிறது. புணர்ந்து புணர்ந்து சக்கையாகிய/ பெண்ணுடலின் யோனிக்குல் /குண்டு வைத்து தகர்த்துப் போகிறான்/ ஒருவன்பிணங்களோடே வாழ்தல்’ என்ற கவிதையில் ,இளைய அப்துல்லாஹ் பெண்ணுடலின் யோனி என்பதை நிலத்தின் ஒரு பகுதியாக உள்வாங்கி அதன் எதிர்த்தன்மையை சித்திரிக்கிறார். அவர்கள தான் வருகிறார்களாக்கும் வெள்ளை வானில்/ மனைவி முத்தமிடும்போதும் காது வெளியில் தான் நீட்டிக்கொண்டிருக்கிறது... உயிர் கவிதையில் இளைய அப்துல்லாஹ் அகவெளியையும் புற விளைவையும் ஒன்று சேர்க்கிறார்.


முள் குத்தாமல் கம்பியை/ லாவகமாகப் பிடித்தபடி/மணிக்கணக்காக முகம் காட்டப்/

பழகி விட்டிருந்தனர்/மக்கள் – இரண்டாம் காலனித்துவத்தின் சில காட்சிகள், கனகலதா நேரடியான ஒரு பத்திரிகைப் புகைப்படத்தின் காட்சியைப் போல கவிதைக்குள் துயரைச் செருகுகிறார் புத்தராய் பிறந்த கிருஷ்ணர்/பிசாசாய்ப் போனார்/வெட்டுண்ட கடைசிக் கரங்களையும்


புதைக்கப்பட்ட மீதி உயிர்களையும்/தின்று கொன்றே/அவர் கீதையைக் கேட்ட/ தேவதைகள்/ஊர் பிடிக்கத் தொடங்கின. – குருஷேத்திரம் எனும் கனகலதாவின் கவிதை மிகச் சரியாக புராணத்தை அங்கதம் செய்கின்றது. துக்கம் அமரும் கையில் இனி தும்பியும் அமரா/ துப்பாக்கியும் அமரா என்று மாதுமையின் கவிதை போரின் வன்முறையால் பறிக்கப்பட்ட பால்யத்தையும் நினைவுறுத்துகிறது.



அந்த நெருப்பு நம் காலடியில் / தணல் பூத்துக்கிடக்கிறது/ உள்ளே சுவாலை கொள்ளத் துடித்தவாறு – இரண்டாம் காலம் எனும் கவிதையும், சுற்றி வளைக்கப்பட்ட நிலையிலிருந்தும் / கைதியான சொற்களை/ தண்டனைக் காலத்தின்/ வலியுடைய சொற்களை குற்றம் சாட்டப்பட்டவனின் தணிந்த குரலுடைய சொற்களை / மறைத்து வைக்க முடியவில்லை அவற்றின் பெருகும் ஒளியை கட்டுப்படுத்தி

வழியற்றவனின் சொற்கள் கவிதையும் கருணாகரன் வசந்தியின் இக்கவிதைகள் எழுத நேர்ந்த அவசியத்தை வலியுறுத்துகின்றன.


சிந்திக்கத் தெரிந்த மனித உடற்கூறுகளை, மூளையின் நரம்புகளை/சிதைப்பதன் மூலம்
அழிக்க வைக்கப்படும் தந்திரத்தை அவர்கள் வரலாறு முழுவதும்/தந்து கொண்டேதான் இருக்கிறார்கள் என்பது சிமோந்தியின் இறுதிக்கணங்களாலான கவிதை. சட்டம் உடைந்த கண்ணாடியை / காவித் திரிகிறேன் பிரதிபலிப்புகளுக்குள் / மூழ்கடிக்கப்பட்டுவிடுகிறது / அழகிய தருணங்கள் -
சித்தாந்தனின் இக்கவிதை வரிகள் மெய்மையான தருணங்கள் வெறுமனே பிம்பங்களாகிவிட்டதைச் சொல்கின்றன.


சுல்பிகா வரையும் வைரமூக்குத்தி பற்றிய கவிதைச்சிறுகதை கவிதை எனும் இலக்கிய வடிவையும் நேர்த்தியையும் சிதைத்துப் போட்டு மீண்டும் அடுக்கும் கவிதை. ஒவ்வொரு அகதியும் முதுமையடைந்து கொண்டிருக்கிறோம்இது சுலோசனா தேவராஜா. இந்தக் காணி நிலத்தில் என்னுடைய கதை பிறந்தது/ அங்கு கடல் கொண்ட /பெருமரங்களின் /வேரடிமண் இப்பொது வெளித் தெரிகிறது, என்ற வரிகளும் நீரற்றது கடல் / நிலமற்றது தமிழ் /பேரற்றது உறவு என்ற வரிகளும் சேரனுடையவை. தேசியச்சிந்தனையின் முத்தாய்ப்போ என்று எண்ண வைக்கும் அதே சமயம் ஒரு பெருமரத்தின் வேரடிமண் என்ற குறியீடாகவும் பார்ப்பது அச்சிந்தனைக்கான முழுமையை எய்துகிறது.



திருமாவளவனின் முறையீட்டுக்கவிதைகள், தீபச்செல்வனின் தொடர்நிகழ்வுக் கவிதைகள், சபிக்கும் குரல்களுடன் முனகும் தேவ அபிராவின் கவிதைகள் என ஊழியை வேறு வேறு மனித சஞ்சாரங்களுடன் அணுகும் கவிதை வெளி உருப்பெறுகிறது. காருண்யனின் தீராப்பதுங்குகுழி விசாரம் ஓர் உரையாடலை நிகழ்த்துகிறது. ஆகவே பல குரல்கள் கேட்கின்றன.



குருவியை உறங்க வைத்திட முடியாமல் /கிளைகளினூடே /பதுங்கிப் பதுங்கி அசைந்து கொண்டிருந்தது /இருண்ட இரவு என்ற ஃபஹீமா ஜஹானின் உயிர்வேலி கவிதை ஒரு துன்பியல் உணர்ச்சிகர நாடகத்தின் உச்சக்கட்ட காட்சியை அதன் நடுக்கத்துடனும் என்ன நிகழுமோ என்பதற்கான குறியீட்டு உணர்ச்சியையும் கொண்டிருக்கிறது. ஜெயந்தி தளையசிங்கத்தின், இங்கு நாம் இருளை விரும்பினோம் / நாங்கள் அம்மணமாய் இருந்தோம் என்ற வரிகள் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்ள இயலாத இயலாமையின் மூர்க்கமான பதிவு என்று சொல்லலாம்.


மு. புஷ்பராஜின் கனவில் வந்தவன் கவிதை சித்திரிக்கும் கற்பனை யதார்த்தத்தையே கற்பனையாக்குவது போல. பலியாடுகளாய்ப் போன நாட்களை நினைத்துருகல் மலர்ச்செல்வனின் கவிதை. இனப் பேரினவாதம் பலியாடுகளுக்காய்ப் பாடும் பாடல் எதுவாக இருக்கும் என்று நோக்குகிறார். நிறைவேறாக் கனவு முடிவுறல் தகாதென / மூடாத கண்கள் - இவை விநோதினியின் வரிகள். நிகழ்வின் சித்திரங்களிலிருந்து ஆறுதல் படிமங்களை எழுதுகிறார். அன்று புறப்பட்ட காற்று ஊர் திரும்பவேயில்லை என முடியும் விஜயலெட்சுமியின் கவிதையை வாசிக்கையில் காற்றின் பாதையைப் போலவே வாழ்வின் கோரம் முடிவுறாததாய் நீளுவதை உணர்த்துகிறது. எதிரெதிர் முகங்களிடையே / காற்று / ஒரு பயணியைப்போலலைகிறது ‘விடுபட்ட காலத்தின் வார்த்தைகள்’ கவிதையில், சித்தாந்தன் ஒரு நிசப்தமான தருணத்தை இயக்குகிறார்

வறுமையை எழுதுகிறது. வெலிகம ரிம்ஸா முஹம்மத்தின் கவிதை. இருக்கட்டும்/ புத்தர் உறங்கும் விகாரைக்கு நீ/வெண்ணலறிப் பூக்களொடி என்கிறது. எம். ரிஷான் ஷெரீபின் ஈழம் எனும் கவிதையும் வாழ்வின் உடனடி யதார்த்தங்களைப் பேசுகின்றன.


தப்பிச்செல்வது இயலாததல்ல/ செலவிடப் பணமும் செல்வாக்கும்/ இருந்தால் ஒரு வழி, இல்லாவிட்டால் இன்னொரு வழி/ ஒன்று மண் வழி/ மற்றது விண்வழி – சி. சிவசேகரத்தின் முட்கம்பித்தீவு கவிதையும் சொல்வதையே போர் தேவையில்லை / இனி/ உதவி என்ற பெயரால் கொலைகள் தொடரும் என முடியும் றஞ்சினியின் கொல்வதற்குப் பல வழிகள் கவிதையும் படுகொலையைச் சித்திரவதையிலிருந்து தப்பித்தல் வழியாக நோக்குகின்றன.


நீள விரிந்து வேம்பு / முற்றம் சருகுதிர்க்க /நெஞ்சில் குடைவிரித்த /வேர் கொண்ட வாழ்வு என்ற செழியனின் நெஞ்சில் குடை விரித்த வாழ்வு காட்டும் நம்பிக்கையும் என் மண்ணிலும் முறிந்த வேம்புகள்/ மலர்கின்றன என்ற வ.ஐ.ச.ஜெயபாலன் முதல் வசந்த பாடல் கவிதையும் இத்தொகுப்பெங்கும் வசந்தத்தின் நம்பிக்கையின் வேம்பு மனம் கமழச்செய்கின்றன.



ஈழ இனப்படுகொலை எனும் நிகழ்வை எந்தக்கோணத்தில் பார்ப்பது என எல்லோரும் சுவரை முட்டிக்கொண்டு யோசிக்கும் போது அந்தக்காட்சியையே அழித்தொழிக்கும் தோரணையையே இந்தத்தொகுப்பு எடுத்துக்கொண்டிருக்கிறது. காட்சி ஊடகத்தின் ஆட்சியும் ஆதிக்கமும் எவ்வளவுக்கெவ்வளவு மெய்மையாக ஒரு போர்க்களத்தையும் ஓர் இனப்படுகொலையையும் நமது கண்களுக்குக் கொண்டு வந்து சேர்க்கமுடியும் என்பதை இந்தத்தலைமுறையைச் சேர்ந்தவர்கள் உணர்ந்திருக்கமுடியும் என்றே நம்புகிறேன். இணையத்திலோ தொலைக்காட்சிகளிலோ அவ்வாறான காட்சிகள் இடம்பெறும்போதெல்லாம் நான் அவற்றைக் காணுறுவதைத் தவிர்த்திருக்கிறேன். அவை நினைவவயங்களில் ஏற்படுத்தும் வன்மங்களைக் களையவோ அல்லது அவ்வாறான காட்சிப்பதிவுகளையே நான் கண்ணுறப் போவதில்லை என்ற எனது சத்தியப்பிரமாணமாயிருக்கலாம். ஆனால் நான் நிச்சயம் கோழை தான். நம்மக்கள் கொல்லப்பட்ட உடலுடன் சிதைக்கப்பட்ட மரியாதைகளுடன் கிடப்பதைக் காணும் சக்தி எனக்குமில்லை தான். எனில் இந்நூல் அதற்கான சிகிச்சை முறை. உலகெங்கிலும் விரவிக்கிடக்கும் கோடானகோடி தமிழர்கள் மற்றும் கொல்லப்பட்டோரின் பக்கம் நின்று இது சரியா, எது தவறு என்று கேள்விகளில் குழம்பிப்போயிருக்கும் எல்லோருக்குமான பதிலாக இத்தொகுப்பை நான் முன்வைக்கிறேன். மனிதன் தன் அறிவின் உச்சத்தில் அரசியல் பேசும்போதெல்லாம் அவனுடைய நேர்த்தியான உணர்வுகளின் அடித்தளம் அவனிடமே இரைந்து கெஞ்சிக்கேட்டுக்கொண்டிருப்பதை அவன் செவிமடுக்காமல் போகிறான். மூளையின் தரையில் மண்டிக்கிடக்கும் உணர்வுகளை இக்கவிஞர்கள் எல்லோரும் சொற்களாக்க முயன்றிருக்கின்றனர். இதில் அரசியல் பேச என்ன இருக்கிறது? இராணுவக்களத்தில் நிகழும் வன்முறைகள் படுக்கையறை வரை நமது அனுமதியின்றி வந்து சேரும்பொழுது படுக்கையறையின் வன்முறைகளும் நியாயப்படுத்தப்படுவதாகவே தோன்றுகிறது.



எல்லா அரசியலின் அறிவார்ந்த கேள்விகளையும் கேட்டுணர்ந்தவாறே அவற்றைப் புறம் தள்ளி முன்னோக்கிப் போகும் அக எழுச்சியுடன் இருப்பவன் தான் கவிஞன். வாழ்வதற்கான வேட்கையை நிறைந்த கருணையுடன் எல்லோர் முன்னும் தனிமனிதனாய் எழுந்து நின்று ஊட்டுபவன். சேரனின் கவிதைகளை வாசிக்கும் பொழுது நான் உணர்வதுண்டு. சொற்கள் மனிதனின் எலும்புக்கூட்டைப் போல எழுந்து நின்று ஆவேசமாய் ஒரு மாயவெளியில் அமானுஷ்யமான அசைவுகளுடன் இயங்குவதை. பின்பு ஈழத்திலிருந்தும் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த பெண் கவிஞர்களின் படைப்புகளையும் நான் விரும்பிச் சுவைத்துப் படித்தேன். அவர்கல் தம் மனவெளியில் வெளிப்படுத்த முடியாமல் சுடுண்டுகிடந்த உக்கிரங்கள், சொற்களாய் குமைந்து கிடந்து கவிதைகளாய்ப் பூத்துக்குலுங்கியதைக் கண்டேன். சங்கத் தமிழ்க்கவிதையின் அகம் புறம் என்ற இருமை நிலைகளைப் போலவே நவீன தமிழ்க்கவிதையில் இன்னொரு திரையை விரிக்கின்றன ஈழத்தமிழ்க்கவிதைகள். இதனால் தான் இன்றைய நவீன தமிழ்க்கவிதை பட்டொளி வீசிப்பறக்கிறது என்று சொன்னாலும் மிகையன்று.



இக்கவிதைகளைத் தொகுப்பதில் நானொருத்தியே ஈடுபட்டிருந்தாலும் இதில் தங்களின் தூய இருப்பின் மூர்க்கத்துடன் பங்கெடுத்துக் கொண்டவர்கள் ஏராளம் குறிப்பாக ஃபஹீமா ஜஹானும் சேரனும் இனியொரு யோகன் அசோகனும் யமுனா ராஜேந்திரனும் செளமீதரனும். தொடர்ந்து தாங்கள் அறிந்திருந்த எல்லா தொடர்பு மின்னஞ்சல்களையும் அனுப்பியும் தங்கள் படைப்பாளி நண்பர்களையும் அறிமுகப்படுத்தியும் உதவினர். தொடர்ந்து தொகுப்பு எப்படி வளர்ந்து வருகிறது என்று அக்கறையுடன் ஈடுபட்டனர். இல்லையென்றால் இன்றைய அரசியல் சூழ்நிலையில் சிதறுண்ட தமிழ்ப்படைப்பாளிகளை ஒருங்கிணைப்பது எவ்வளவு அசாதாரணமான வேலை என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். இதில் தங்கள் கவிதைகள் இடம்பெறுவதற்கான சமாதானத்தையும் ஒப்புரவையும் தனக்குத்தானே வழங்கிக்கொண்ட ஒவ்வொரு கவிஞருக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். நீங்கள் தாம் இத்தொகுப்பின் குரல்களாக பதிவாகியிள்ளீர்கள். ஆழி செந்தில்நாதன் இத்தொகுப்பிற்கான ஆலோசனைகளையும் ஊக்கத்தையும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தார். அவரன்றி இந்நூல் உங்கள் முன்னே சாத்தியமே இல்லை.



வழக்கமாகத் தொகுப்புகளைத் தொகுப்பதைப் போல இவற்றில் எது சிறந்த கவிதை என்று தேர்ந்தெடுக்கும் பணியை நான் மேற்கொள்ளவில்லை. வேதனைக்குரிய ஒரு நிகழ்வை ஒட்டி கவிஞர்களின் அகக்குரல்பதிவுகளைப் பதிவு செய்வதே என் எண்ணமாக இருந்தது. நிறைய கவிதைகள் அனுப்பிய பொழுது மட்டும் சமத்துவம் கருதி நான் தேர்ந்தெடுக்கவேண்டியிருந்தது. இப்பணியினூடே கவிதையின் பயன்பாடு பற்றிய கேள்வி மட்டும் ஓயாததாக சமூகத்திடம் புரண்டு கொண்டே இருந்தது. எனக்கு அதற்கான பதில்கள் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருந்தாலும் கவிதைக்கான தேவையும் பயன்பாடும் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. அதிவேகக் காலத்தில் கால் பதித்த மனிதனுக்கு கவிதையின் சொற்கள் மருந்துக்கும் சிகிச்சைக்கும் நிகரானதொரு பணியை ஆற்றுகின்றன. அது சொல்லித் தீராதது என்பதை இக்கவிதைகள் நமக்கு வழங்கும் நீளமான மெளனத்திலிருந்து உணரலாம்.



தற்காலச் சமூகத்துடன் உணவிற்காகவும் அற உணர்வின் பொருட்டும் ஒரு கவிஞன் அன்றாடம் மோதவேண்டியிருப்பதால் அவன் தன் ஆளுமை பற்றியும் அக்கறை கொள்ளவேண்டியிருக்கிறது என்பதை நான் மிகுந்த தயவுடன் கூறிக்கொள்கிறேன். அது தான் கவிதைகளின் கொடியை அவற்றின் மானுடக்குரலை தேசங்கள் தாண்டியும் அசைத்துக்காட்டுகின்றன. தொய்விலாத ஆளுமையை கவிஞன் தன் கவிதைகளுக்கு எலும்புகளாகவும் தசைகளாகவும் உருவாக்கிப்படைக்கிறான் என்பதில் ஐயமில்லை. வாருங்கள் கவி நண்பர்களே! நமது உக்கிரமான ஒப்புயர்வான ஆளுமைகளால் இன்னும் இன்னும் கவிதைகளைப் நெய்திடுவோம். காலந்தோறும் புனைவு தோறும் பழங்கதைகள்தோறும் எரிந்துகொண்டிருக்கும் அந்நிலத்தீயை குளிரும் சொற்களால் அணைத்திடுவோம்.



குட்டி ரேவதி

6.06.2010

சென்னை

கருத்துகள் இல்லை: