நம் குரல்

`கவிஞர் குட்டி ரேவதியின் ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் நூல் வெளியீட்டு விழா'













எந்த அதிகாரத்தோடும் சமரசம் கொள்ளாமல் இயங்கும் பெண் பாலியல் மொழியைக் கொண்டாடுகிறது, தமிழ் ஸ்டூடியோ

கடந்த பத்தாண்டு நவீன தமிழ் இலக்கியத்தைப் புரட்டிப் போட்ட பெண் கவிஞர்களின் மொழியை உடலரசியலை அலசும் தொகுப்பு

நவீன இலக்கியத்தின் தவிர்க்கமுடியாத அரசியல் வடிவமான பெண் கவிஞர்களை ஒன்று திரட்டிய தொகுப்பு




நாள்: 06-01-2012

வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 5:30 மணிக்கு 

இடம்: ஜீவன ஜோதி அரங்கம், கன்னிமாரா நூலகம் எதிரில், எழும்பூர்



சிறப்பு அழைப்பாளர்கள்



அழகிய பெரியவன் 
பாலை நிலவன் 
யாழன் ஆதி 
தமயந்தி 
அஜயன் பாலா 
நர்மதா 
தி. பரமேஸ்வரி 
ப்ரவீண்
குட்டி ரேவதி 

நூல் வெளியீடு: நாதன் பதிப்பகம் (அஜயன் பாலா)



நன்றி: தமிழ் ஸ்டூடியோ





எளிதில் கலையும் பிம்பம்






  


காலந்தோறும் கதாநாயகர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்! ஆனால், அவர்கள் சமூகத்தின் எந்தக் குழுவினரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பது முக்கியமான கேள்வி. ‘தன்னையா’, ’தன் சமூகத்தையா’ அவர்கள் யாரை அடையாளப்படுத்துகிறார்கள்? சமூகத்தின் எந்தப் பிரிவினரை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்? அப்பிரிவினரிடம் என்னவிதமான எழுச்சியை ஏற்படுத்துகிறார்கள்? இது எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு, ‘தான்’ என்ற சுயபிம்பத்தை அவர்கள் என்னனம் கட்டமைத்துக் கொள்கிறார்கள்? இக்கேள்விகளுக்கான பதில்களைக் கண்டடைந்த பின்பு தான் அவர்கள் கதாநாயகர்களா என்ற கேள்விக்கும் பதிலையும் கண்டடைய முடியும். ரஜினி எனும் தனிமனித சமூக நாயகனுக்குப் பின்பு வருவோம். ஆனால், அவர் அந்தக் கதாநாயகத்தன்மையை – ஹீரோயிஸத்தை, திரையில் தன் உருவில் தோன்றிய கதாபாத்திரங்கள் வழியாகத்தான் பெற்றிருப்பதால், ரஜினி என்ற திரைக் கதாநாயகனுக்கே முதலில் செல்வோம்.




தமிழகத்தின் செம்மாந்த ஆண் தலைவர்கள் எல்லோருமே பெரும்பாலும் அல்லது எப்பொழுதுமே ‘ஆணாதிக்கக்’ கதாநாயகர்களாகவே இருந்திருக்கின்றனர். ‘ஹீரோயிஸம்’ நிலைநாட்டப்படுவது என்பதை, பெண்ணுக்கு எதிரான வாக்குத் தத்தங்களை உதிர்ப்பதன் வழியாகவே காட்டியிருக்கின்றனர். அந்த மனநிலையினூடேயே தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றனர். இலக்கியம், சினிமா, அரசியல் இந்த மூன்று முதன்மையான துறைகளிலுமே இந்த ‘ஹீரோயிஸம்’ ஒன்றுக்கொன்று கொடுத்து வாங்கப்பட்டும், ஒன்றையொன்று ஆதரித்தும் தான் பெருவாரியாக நிகழ்த்தப்பட்டுள்ளது.




எப்பொழுதுமே தமிழ் சினிமா, இந்த பெண் எதிர்ப்பு, ஆணாதிக்க, கதாநாயகத் தன்மைகளிலிருந்து வெளியே வந்ததே இல்லை.   காலந்தோறும் அதற்கு ஊட்டமளிக்கும் வண்ணம் தமிழ்சினிமாவாதிகள் செவ்வனே அரசியலையும், இலக்கியத்தையும் பயன்படுத்திக் கொண்டார்கள். சமூகவரலாற்றைத் திரித்திக் கொண்டார்கள். அவ்வப்பொழுது, தன் ‘ஹீரோயிஸத்தை’ நிலைநாட்ட, இலக்கியத் துறையிலிருந்தும் ’கதாநாயகர்கள்’ திரைத்துறைக்குச் சென்றிருக்கிறார்கள். திரையில், ஒரு பெண் தாயாகும் போது புறநானூற்றுத் தாயாகவும், அதற்கு முன்பான இளமை வரை, அலங்கார ஜடமாகவும் இருக்கும்படிப் பார்த்துக் கொண்டார்கள்! இந்நிலையில், பெண் பற்றிய சிந்தனைகள் பற்றி தமிழ்த்திரை இயக்குநர்களும், கதாநாயகர்களும் ரொம்பவும் தான் குழம்பிப் போனார்கள்.




இவர்களிலேயே உச்சம், ரஜினி எனும் கதாநாயகன்! தெள்ளத் தெளிவாக, தேர்ந்தெடுத்த சொற்களுடன் பெண்களை வரையறுக்கவும், தான் வரையறுக்கும்படியான பெண்களையே, ’நல்ல’ பெண்களாய் தன் ரசிகமணிகளுக்கு முன் மொழியவும் அவரால் முடிந்தது. அவரது கதாநாயகத்தன்மை, தமிழ் பேசும் பெண்களுக்காகக் கட்டமைக்கப்பட்டவை. ‘பொம்பளையின்னா பொறுமை வேணும், அவசரப்படக்கூடாது! அடக்கம் வேணும்! ஆத்திரப்படக்கூடாது! அமைதி வேணும், அதிகாரம் பண்ணக்கூடாது! கட்டுப்பாடுவேணும், கத்தக்கூடாது! பயபக்தியா இருக்கனும்!  இப்படி பஜாரித்தனம் பண்ணக்கூடாது! மொத்தத்துல பொம்பள பொம்பளயா இருக்கனும்!’ ‘அதிகமா ஆசைப்படற ஆம்பிளையும் அதிகமா ஆத்திரப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா  சரித்திரமே கிடையாது!’ ’படையப்பாவில்’ வரும்  இந்த வசனம் மட்டுமே ரஜினி ரசிகர்களால் ஓராயிரம் முறை உச்சரிக்கப்பட்டிருக்கும்! அவரவர் வீட்டுச் சுவர்களில் எதிரொலித்து அடங்காதிருக்கும்!




ரஜினியை ஒரு நடிகனாகவோ, அவரது நடிப்பாற்றல் குறித்தோ விமர்சிப்பது திரைத்துறையினரின் பணி! அது அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட துறை! ஆனால், அவரை வைத்துக் கட்டமைக்கப்பட்ட, ‘கதாநாயகத் தன்மை’யின் விளைவுகளும் விபரீதங்களும் ஓர் ஒட்டுமொத்த சமூகத்தை எந்த அளவிற்குப் பீடித்திருக்கிறது என்பது விவாதிக்கப்படவேண்டியது! பெரும்பாலும், அவருக்கு இணையாக உருவாக்கப்படும் பிற பெண் கதாபாத்திரங்கள், அவரைப் பொறுத்தவரை, கதாநாயகிகளாக இருக்கத் தகுதியற்ற, சிறந்த ஆளுமையாக இருக்க முடியாத பெண்கள்! அவர்கள் நொறுங்கிப் போகும் அளவிற்கு ஒடுக்கப்படுவார்கள்! அந்த நிறைவுக் கட்டம் வரை திரைக்கதை நீளும்!




முதலில், ரஜினி, கூலித் தொழிலாளர்களில் ஒருவராக, அவர்களின் தலைவனாக அடையாளம் பெற்றார்! அதிக மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த மத்திய தரவர்க்கத்தின் அடையாளமாகத் தன்னை மாற்றிக் கொண்டது, அவரது முதல் வெற்றி! அம்மக்களின் உளவியல் பிரச்சனைகளை, இயக்குநர்கள் ரஜினி என்ற கதாபாத்திரத்தின் மீது ஏற்றினர்! திரையில், அக்கதாபாத்திரம், குடித்தது, புகைத்தது! ஒழுக்க நெறிகளைக் கற்பித்தது! ஆண் ஆம்பிளையாக இருக்கவும், பெண் பொம்பிளையாக இருக்கவும் வகுப்புகள் எடுத்தது! காலப்போக்கில் இந்தக் கதாபாத்திரம் முதிர்ந்து, ரசிகர்களின் மனதில் ஆழமாகப்பதிந்து, பதிந்து ஒரு பிம்பமாக உருவெடுத்தது! இனி ரஜினியே நினைத்தாலும் அந்தப் பிம்பத்தைக் கலைக்கமுடியாது!




சென்ற காலத்தில் ரஜினியின் தாக்கம் சமூக அரசியலில் எதிர்ப்பார்க்கப்பட்ட அளவிற்கு, அது சமூக மாற்றத்தில் பங்கேற்காமல் டுபாக்கூர் அதிர்வுகள் ஆனது, எல்லோரும் அறிந்ததே! தனிமனித அரசியல் சிந்தனைகள் தமிழகத்தில் வேகாத பருப்பாக ஆகி இருந்த காலத்தில் தான் ரஜினி தன் அரசியல் சிந்தனைகளை சினிமாவில் மட்டும் தைரியமாகப் பேசத் தொடங்கியிருந்தார். அதுவும் இலை மறை காயாகத்தான்! அப்படித்தான் தன் படங்களை வெற்றிபெறச் செய்யமுடிந்திருக்கலாம்!
ரஜினியின் ரசிகர்கள் யார்? அவர்கள் பெரும்பாலும் மத்தியதர வர்க்கமாகக் கூட இருக்க மாட்டார்கள். அடித்தட்டு மக்களாகவும், முதல் தலைமுறையாகக் கல்வியை அதிக முயற்சிக்குப்பிறகு பெறவேண்டியவர்களாயும், தான் சார்ந்த சமூகப் பொறுப்புகளை ஏற்க வேண்டியவர்களாயும் இருப்பவர்கள். அவர்களை விசிலடிச்சான்களாக மாற்றும் சமூகப் பணி தான், இந்த ஆதிக்க மனநிலையுடைய சினிமாவால் சாத்தியப்பட்டிருக்கிறது. ரஜினி, திரையில் பெண்களை எப்படிக் குறிப்பிட்டாரோ அது போன்றே, ரஜினியின் ரசிகர்களும் பெண்களைப் புரிந்து கொண்டார்கள். அங்க அடையாளங்களில் அவர் பாணி பாவனைகளை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், அவரைப் போல ஒற்றை ரூபாயை வைத்து யாருமே தம் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற முடியவில்லை. காரணம், இவை எல்லாமே யதார்த்தங்களிலிருந்து வெகு தொலைவில் இருந்தமை தான்!



மக்கள் திரளைத் தம் சொந்த நலத்திற்காக, அவரும், அவரது சினிமாவை உருவாக்குவதில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கே. எஸ். ரவிக்குமாரும், தங்களின் சுய மனநிலையைத் தான் திரையில் தொடர்ந்து பிரதிபலித்தார்கள். ஒரு தடித்த, ஆதிக்க சிந்தனையைத்  தங்கள் கதைகளில் முழு விழிப்புடன் செய்தார்கள். இவர்கள் எத்தனை வயதானாலும், முதுமையடைந்தாலும், திரைக்கதைகளில் ஒரு வளர்ந்த பாலகனாகவே வெளிப்பட்டனர். இச்சிறுபிள்ளைத் தனத்தை, ரஜினி என்ற கதாநாயகனின் எல்லா வசனங்களையும் சுட்டிக் காட்டி உணர்த்தமுடியும் என்றாலும், ‘மன்னன்’ என்ற படத்தில் இடம்பெற்ற வசனமும் அதற்கு அவர் கொடுக்கும் விளக்கமும் தமிழ்த்திரையின் ஆண் மன வளர்ச்சியையும் அதன் சிறுபிள்ளைத்தனத்தையும் தெள்ளத் தெளிவாகச் சுட்டக்கூடியது. ‘நம்பர் 1 பெரிதா? நம்பர் 2 பெரிதா?’ என்ற கேள்விக்கு, ரஜினியின் விளக்கம், நம்பர் 2 தானே எண்ணிக்கையில் பெரியது என்பதாய் இருக்கும்!   



ரஜினி என்ற கதாநாயகன், ஒரு கதாநாயகனாக இருக்க, எந்தத் தகுதியும் திறனும் அற்ற கதாநாயகனாகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அல்லது அதையே விரும்பிச் செய்திருக்கிறார். ரஜினியின் தனித்தன்மை விமர்சிக்கப்பட்ட அளவிற்கு, அவர் திரையில் ஏற்ற கதாபாத்திரங்கள் ஆராயப்பட்டதில்லை. திரையில் அவர் தோன்றிய கதாபாத்திரங்கள், அவரது தனிமனித பிம்பத்தினும் ஆபத்தானவை. ஒரு மிகையான ஆண் சித்திரத்தைக் கட்டமைத்த அதன் ஒரு செம்மையான ஒரு பிரதியின் மாதிரியைத் திரையில் உருவாக்கி, அதன் எக்கச்சக்கமான பிரதிகளைச் சமூகத்தில் உண்டாக்குவதே அவரது கதாபாத்திரத்தின் நோக்கமாக இருந்திருக்கிறது. பொதுவாகவே, இயக்குநர்கள், ‘ரஜினி சாருக்கான கதை!’ என்று உருவாக்கும்போது அடிப்படையான சில உள்ளடக்கங்களை மீறி வெளியே போகவில்லை.



இரண்டு முக்கியமான திரைப்படங்களைக் கவனத்தில் இருத்தி முன்னகரலாம் என்று நினைக்கிறேன். அவை, ‘மன்னன்’ மற்றும், ‘படையப்பா’.  திரையில் அவருடன் தோன்றும் இரு பெண்களின் ஒருவர் முழுமையான ஆளுமையுடன் சித்திரிக்கப்பட்டு, அவர் ரஜினியால், ‘பொம்பளை இப்படி இருக்கக்கூடாது!’ என்பதற்கு உதாரணமாகவும், இன்னொரு பெண், தன்னை தாழ்த்திக்கொண்ட கதாபாத்திரமாகவும், அவரே அவரால் முழுமையான பெண்ணாகவும் நிறுவப்படுவார். பெரும்பாலும், அம்மா என்ற நிலையில் மட்டுமே பெண் என்பவர் அவரால் மதிக்கப்படுவார். இது தமிழ்ச்சமூகத்தின் வழக்கமான சென்டிமெண்ட் மனோபாவத்திற்காக!




திரையில் ரஜினியின் ஆண் ஆளுமைச் சாதனைளாவன:
பெண் ஆளுமையை ஒடுக்கப் பெண்களை மூர்க்கமாகக் கன்னத்தில் அறைந்தது!
பெண், ஆண் அங்க அசைவுகள், பாவனைகள் எப்படி இருக்கவேண்டும் என்று தன் ஸ்டைல் மொழிகளாலேயே பயிற்றுவித்தது!
சில பெண் ஒழுக்க இலக்கணங்களை பஞ்ச் வசனங்களாக்கியது: உதாரணத்திற்கு,
‘என்ன தான் பெண்கள் துணிச்சலா இருந்தாலும், பொறுமையா இருந்தாத்தான் பெருமையா வாழமுடியும்?’
’எத்தனை ஜென்மம் எடுத்தாலும், அளவுக்கு அதிகமா ஆசைப்படுற ஆம்பிளையும், அளவுக்கு அதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது!’
தாய், தங்கை, மகள் நிலையில் இருக்கும் பெண்கள் தன் அக்கறைக்கு உட்பட்டவர்கள். மனைவியோ காதலியோ கட்டுப்பாடுகளைச் சுமக்கக் கடன்பட்டவள் என்பதை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் வலியுறுத்துவது.



ஒரு நடிகனின் வசனத்திற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டியதில்லை என்று இவ்விடம் சப்பைக் கட்டுபவர்களுக்கு என் கேள்வி, சினிமா என்ற வியாபாரத்துறையில், வசூலும், சினிமாவின் வெற்றி என்பதும் பெரிய கணிதமாக இருக்கும் பட்சத்தில், அதற்கான ரசிக உற்சாகங்கள் அதிக விளைவைக் கொடுக்கக்கூடியது என்பதாலும், ரசிகர்களின் மனநிலைக்கு உற்சாகம் அளிப்பதற்கு ஏற்றபடியும், சமூகத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு ஏற்றபடியும், வசனங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட எழுத்தாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுவதாலும், ரஜினியின் கதாநாயக வசனங்களை, வெறும் ஹீரோவின் வசனம் என்று மட்டுமே ஒதுக்கி விட முடியாது!     
இந்திய மண்ணில் பெண், திருமணம் பற்றிய வலுவான சிந்தனைகள் காலந்தோறும் வெவ்வேறு ஊடகங்கள் வழியாக உரத்த குரலுடையோரால் பயிற்றுவிக்கப்படுகின்றன. அவை, அடிமை நிலையை, எல்லா நிலைகளிலும் சமூகத்தில் ஊட்டிக் கொண்டே இருப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ரஜினியின் சினிமா காலத்தில் அது ரஜினியின் கதாபாத்திரங்களுக்குக் கொடுக்கப்பட்டது. அதன் பின்னணியில் இருந்தவர்கள் எல்லோருமே, சனாதன மூளைகளைக் கொண்டவர்களாகவே இருந்திருக்கின்றனர்! அதற்கு கே.எஸ்.ரவிக்குமார், சங்கர், மணி ரத்தினம் என ஒவ்வொரு இயக்குநரின் திரைக்கதைக்குள்ளும் நம் ஆய்வைத் தொடரவேண்டியிருக்கும்! ரஜினியின் ஒரே முகமுடைய இக்கதாபாத்திரங்கள் வேறுவேறு உடைகளை அணிந்து வேறு வேறு சினிமாவில் தோற்றம் தந்தன.




பாலியல் சிந்தனை ரஜினி எனும் நாயகனுக்கு, மனிதப்பண்புகளுடன் அல்லாது இயந்திரத்தனமான கட்டமைக்கப்பட்ட மொழியில் உருவாகிறது. சென்னை நீதிமன்ற வளாகத்தில் ஒருமுறை, ஒடுக்கப்பட்ட பெண்கள் தங்களைத் தாக்கவந்த காவல்துறையினர் முன்பு, தம் பாவாடையை உயர்த்திக் காட்ட, எல்லா காவல்துறை அதிகாரிகளும் தலைதெறிக்க அங்கிருந்து ஓடியதாகச் செய்தி. இது எதைக் காட்டுகிறது? வழக்கமாக, இதே காவல் துறையினரால் தான் பாலியல் ரீதியில் ஒடுக்கப்பட்டிருக்கும் இப்பெண்கள், தங்கள் உடைகளை உயர்த்தி அந்தரங்கங்களைக் காட்டும்போது ஏன் அக்காட்சியை அனுபவிக்காது ஓடுகின்றனர். பெண்ணின் பாலியல் ஆற்றல் அத்துணை வலிமை மிக்கது. அதன் மீது செயல்படும் ஆணின் அதிகார முறைகளும் அத்தகையது. அதாவது, பெண்ணின் பாலியல் ஆற்றலை தானே சுரண்டும்போது அது இன்பமாகவும், அதை அவர்களே தம் வலிமையாக மாற்றி, தானே வழங்கும் போது, அச்சம் கொண்டு ஓடுவதுமாக, எதிரெதிர் நிலைகளை எடுக்கிறது.
ரஜினியின் கதாநாயகன் முன், இத்தகைய இருநிலையடையும் ஒற்றையான பெண்கள் தாம் இரு  கதாபாத்திரங்களாகின்றனர். ஒரு பாத்திரம், தன் பாலியல் ஆற்றலை தன் சுயவிருப்பப்படி, கோருகிறது. தன் தேவையை முழக்கமாய், திமிர்பிடித்த பெண்ணாய்க் கூறுகிறது. இன்னொரு பாத்திரம், அதை ஆணின் வசதிக்கேற்றபடி, விட்டுக்கொடுக்கிறது. ஆணின் இசைவிற்கேற்ப தன் பாலியல் ஆற்றலை வழங்க நிர்ப்பந்திக்கப்படும் எந்த ஒரு பெண்ணும் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவளே.  
எல்லா கதைகளிலும் உழைப்பின் முக்கியத்துவத்தை, அதில் தொடர்ந்து ஈடுபடும் தன் விடாமுயற்சியை நிரூபிக்கும் அவர் பாத்திரங்கள், ஏனோ பெண்ணுக்கு எதிரான தம் ஒடுக்குமுறையை விட்டதேயில்லை. மூன்று முக்கியமான கதாபாத்திரங்கள் முக்கோணவடிவில் நிறுத்தப்படும். குறிப்பாக, இரண்டு திரைப்படங்கள். ‘மன்னனின் வரும் கிருஷ்ணன்’, ‘படையப்பாவில் வரும் படையப்பா’ இரண்டிலுமே, ஆளுமையான ஒரு பெண், ரஜினி கதாபாத்திரத்தை மணந்து கொள்ளத்துடிக்கும்! அது, பெண்ணின் பாலியல் இச்சையை மறைமுகமாகக் குறிப்பதே அல்லாமல் வேறேதுமில்லை! அந்த ஆணுடனான திருமணம் என்ற தன் இச்சையை அவள் சொல்வதே ஓர் ஆபாசமான, கொச்சையான விஷயமாகக் காட்டப்படும்! பெண்கள், ஆண்களின்  தாடியைப் போலவே தமக்கான ஸ்டைலையும் வளர்த்துக் கொள்ளமுடியாது போல!




இனி, ‘உழைப்பு’ என்ற அடுத்த மைய சிந்தனைக்கு வருவோம்! அது, ஒடுக்கப்பட்ட மக்களைப் பொருட்படுத்திய உழைப்பு இல்லை. சமூக ஏணியில், ‘உழைக்கும்’ வர்க்கம் என்று அவர் குறிப்பிடுவதும் உண்மையிலேயே உழைக்கும் இனத்தைக் காட்டவே இல்லை. பொதுவாக, தொழிற்சாலைகளில் உழைக்கும் மக்களைத் தான் குறிப்பிட்டிருக்கிறார்! அவர்கள் எல்லாம் யாராக இருந்திருப்பார்கள்! கண்டிப்பாக, மத்திய தரவர்க்க, இடைநிலை சாதியினர் தாம்! அவர்களுக்கு மத்தியில் தானும் ஒருவராய் நின்று, அவர்களின் தலைவனாய் தன்னை வரிந்து கொண்டு, அதே சமயம், அவர்கள் என்ன மாதிரியான திருமணம், குடும்பம், பெண் போன்றவற்றைத் தமக்கு ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற பாலபாடத்தை அவர்களுக்குக் கற்பித்ததுடன், ஆதிக்கச்சிந்தனையின் முத்திரையான தன் கதாபாத்திரத்தின் வெற்றியை நிலைநாட்டிக்கொண்டார்!
இதில் இருட்டடிக்கப்பட்டது, மேல் வர்க்க, ஆதிக்க சாதி மக்களின் சிந்தனை எப்படி தந்திரமாக சினிமாவில் நிறுவப்படுகிறது என்பதும், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் தொழில்கள் அடையாளப்படாத ஓர் உழைப்பை முன் வைத்த அவரது சனாதனம் என்பதும்! இது, தன் சுய, சாதி, மதம், பால் அடையாளங்களை எந்த விதத்திலும், தமிழக அரசியல் சூழ்நிலைகளை குந்தகம் ஏற்படாமல் பார்த்துக் கொண்ட, அவரது தந்திரங்கள் இது வரை வெளிச்சம் பெறாமலேயே போயின. பொருட்படுத்தாமலும் போயின!



தன்னை விட பெரிதாகத் திரையில் காட்டப்பட்ட தன் ஹீரோயிஸத்தைக் கண்டு அவரே மிரண்டிருக்கவேண்டும்! பதில்கள் சொல்வதில், முடிவுகளைத் தெரிவிப்பதில் தடுமாறிப்போனார்.  சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல அதை மாற்றிக் கொள்ளும் வாய்ப்புக்காக அவர் எப்பொழுதுமே காத்திருந்தார்! தன் எல்லா சுமையையும், ரஜினி என்ற கதாநாயகன் மீது ஏற்றிவிட்டுக் கொண்டு, சிவனே என்று இருந்தார். ரசிகர்களின் உறக்கம் கெடுத்தார். ரசிகர்கள் தம் வீடுகளின் இரவுகளையும் பகலையும் இழந்தனர். இந்த  விளைவுகளின் முடிவும் எல்லையும் எதிர்காலத்தில் தான் தெரியும்!



இதற்குப் பின்பு, ரஜினி சிறந்த மனிதனாகவோ, ஆன்மீகவாதியாகவோ இருந்தால் என்ன,  இல்லாமல் போனால் தான் என்ன? சிறந்த மனிதன் என்பவன், தன் வாழ்வின் நாளில், சக மனிதனின் மனதிலோ, செய்கையிலோ அடிமைத்தனத்தை விதைக்காமல் இருப்பவன் தானே! ரஜினி எனும் கதாநாயகன், திரைப்படங்களுக்கு வெளியே என்ன செய்திருக்கிறார் என்பது கேள்வி கேட்கப்படவே இல்லை. அவர் எப்பொழுதுமே. ‘புனிதனாக’ப் பார்க்கப்பட்டிருக்கிறார்! சமூகத்தின் அரசியலை தன் கதைகளில் அவர் விமர்சித்ததே இல்லை. கதைகளுக்குள் வெற்றியை நோக்கிய போராட்டமும், அதனோடு இழையோடும் நகைச்சுவையும், தாம் முதன்மைப்படுத்தப்பட்டன. பேருந்து நடத்துநராக இருந்து கதாநாயகனான ஒரு மனிதனின், வாழ்க்கை அவர் ‘வெற்றியின் கதை’களுக்கு நம்பகத்தன்மையையும் விசில் சத்தங்களையும் கொடுத்தது. ஆனால், அது தவிர, ரஜினியின் கதாநாயகன், தன்னைத் தானே மிகுந்த எச்சரிக்கையுடனேயே ஓர் ஒளிவட்டத்தில் இருத்திக்கொண்டு அதை விட்டு வெளியே வரவில்லை. ரசிகனுடனோ, சமூகத்தின் பிற பார்வையாளனுடனோ, ஏன் சமூகத்துடனோ கூட எந்தத் தொடர்பையும், இணக்கத்தையும், சம உறவையும் ஏற்படுத்திக் கொள்ளவே இல்லை.



புகழின் வெளிச்சத்தில், திரைக்கு வெளியேயும் அவர் கண்கள் மயங்கித்தான் போயிருந்தார். சமூக மாற்றத்திற்கான அரசியல் பயணமும் போராட்டமும் ஏன், எரியும் பிரச்சனைகள் தமிழகத்தைப் பீடித்திருந்த போது கூட, அது அவரைக் கிஞ்சித்தும் பாதித்தது இல்லை.  அவருக்குத் தன் கருத்தை சொல்வதற்கான துணிவு இல்லை. தயக்கமும் பயமும் அவரை எப்பொழுதுமே அவரை இருந்த இடத்திலேயே அழுத்தின என்று தான் சொல்லவேண்டும். அவர் ஏற்ற கதாநாயக வேடங்கள், அவர் எவ்வளவு பெரிய மனிதராக வளர்ந்த போதும், சூழ்நிலைகளைக் கையாளத் தேவையான சமூக அறிவை பெற்ற ஆளுமையாக உயர்த்தவே இல்லை. தன் தொடர் தப்பித்தல் நடவடிக்கைகளால், இந்த நெருக்கடிகளிலிருந்து நாகரிகமாக அவரால் எப்பொழுதுமே விலகி இருக்க முடிந்திருக்கிறது.



திரையில் மின்னும் கதாநாயகர்களான, படையப்பா, பாபா, அண்ணாமலை, இன்ன பிற கதாநாயகர்களின் பிரச்சனையும் இது தான்! சாதாரண, ஆனால், உரத்துச் சொல்லப்படும் பஞ்ச் வசனங்களால், சமூக அரசியலைப் புரிந்து கொள்ளும் அறிவை வழங்கப் போதவில்லை. ரஜினியைப் போலவே ஒரு தலைமுறை ரசிகர்களும், இம்மாதிரியான ஊக்குவிப்புகளுடன் சமூகத்திற்குப் புறத்தே நிறுத்தப்படுகின்றனர். ரஜினி ரசிகர்கள், ‘ரஜினி எனும் மாயை’யில் சிக்கிக்கொண்டது போலவே ரஜினியும் சிக்கிக் கொண்டது தான் வேதனை! ரஜினி, யாரையுமே பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, சமயங்களில், அவர் தன்னையே கூட!




திரையில், அக்கதாபாத்திரம், குடித்தது, புகைத்தது! ஒழுக்க நெறிகளைக் கற்பித்தது! ஆண் ஆம்பிளையாக இருக்கவும், பெண் பொம்பிளையாக இருக்கவும் வகுப்புகள் எடுத்தது! காலப்போக்கில் இந்தக் கதாபாத்திரம் முதிர்ந்து, ரசிகர்களின் மனதில் ஆழமாகப்பதிந்து, பதிந்து ஒரு பிம்பமாக உருவெடுத்தது! ரஜினியின் இத்தகைய பிம்பங்கள், நாம் நினைப்பது போலவும், ரசிகர்கள் நினைப்பது போலவும் கலைக்கக் கடினமானது இல்லை. அவை வாணவேடிக்கை! நிரந்தரத்தன்மை அற்றவை! தற்காலிகமாகக்  கவனத்தைத் திருப்பிவிட்டு, அவனை அப்படியே அந்தரத்தில் விட்டுவிடும்! ரசிகன் தன் வாழ்க்கையின், அதன் யதார்த்தத்தின் படுபாதாளத்தில் வீழ்ந்து மண்டை வீங்கும் வரை வாணவேடிக்கையை ரசிப்பான்! அந்தரங்கவாழ்க்கை மனிதனை அழுத்தும் கணங்களில் எவருடனும் இந்த, ‘கதாநாயக பிம்பங்கள்’ துணைக்கிருந்து காப்பாற்றுவதில்லை! தனிமனிதனின் இரத்தம் சுண்டிய கணங்களில், ரஜினிக்காக இது வரை எழுதப்பட்ட ஒற்றை வசனம் கூட ஊக்கமளிப்பதில்லை! வாழ்க்கையின் அகழியை, கடக்கும் தினவை தனிமனிதனுக்கு வழங்க இயலாத ரஜினி என்னும் பிம்பத்தால்  பயன் ஏதுமில்லை! ஆகவே, ரஜினி எனும் பிம்பத்தை நாம் வெகு எளிதாகக் கலைத்துவிடலாம்! அந்தப் பிம்பம் பொருட்டு அதிகமும் கவலையுற வேண்டியதில்லை! நாம் கவலையுறுவதெல்லாம், ரஜினி ரசிகர்கள் குறித்தே!






குட்டி ரேவதி
நன்றி: இந்தியா டுடே


ஆண்குறி மையப் புனைவைச் சிதைத்தப் பிரதிகள்- 14
ஃபஹீமா ஜஹான் - நம் அன்னையரின் ஆதித்துயர்








http://koodu.thamizhstudio.com/thodargal_14_16.php



குட்டி ரேவதி
நன்றி: தமிழ் ஸ்டூடியோ

புத்தகங்கள் இன்னும் என்னை எங்கே அழைத்துச் செல்லப் போகின்றன?










புத்தகங்கள் நம்முடன் வாழ்வது என்று முடிவெடுத்துவிட்டால், அவை நம் இளம்பருவத்திலேயே நம்மைத் தொற்றிக் கொள்கின்றன என்று தான் நினைக்கிறேன். சாருண்ணிகளைப் போல நம்முடனேயே வாழ்வதில் அவை கொள்ளும் அதே களிப்பைத் தான் நானும் அடைந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். புத்தகங்கள், அறிவுஜீவித்தனம் மிக்க உயிரிகள். இன்னும் சொல்லப்போனால், மனித அறிவுஜீவிகளைப்போல் அல்லாமல் தான் எத்தகையதொரு வாக்குமூலங்களை சொல்கின்றனவோ அதிலிருந்து நழுவாமல், சமரசம் கொள்ளாமல் எப்பொழுதும் தம் நிலைப்பாட்டில் ஒற்றைக் காலில் நிற்கக்கூடியன.





என்னுடைய வாழ்க்கையிலும், எல்லோருக்கும் போலவே, அழுக்கடைந்த தெருநாய்க் குட்டிகளைப் போலவோ, அல்லது எவரோ நழுவ விட்ட காதல் கடிதத்தைப் போலவோ என்னை வந்து சேர்ந்திருக்கின்றன சில புத்தகங்கள். ஆனால், அவை வந்து சேரும் போதே ஓர் உறவின் அடித்தளத்தை என்னுள் அமைக்கும் அத்தனை ஏற்பாடுகளுடனும் தான் வந்து சேர்ந்திருக்கின்றன என்று நினைக்கிறேன். யாரோ ஒருவர் உங்களிடம் ஒரு புத்தகத்தைப் பற்றி விசாரிக்கலாம்! நீங்கள் சற்றும் எதிர்பாராத ஒரு கணத்தில் உங்களுக்கு ஒரு நூலைப் பரிசளிக்கலாம்! அல்லது, நீங்கள் நீண்ட நாளாக படிக்க விரும்பி, வாங்கும் வழியின்றி தவித்த நூல் உங்கள் கைக்கெட்டும் தூரத்தில் இருக்க நீங்கள் திருடியெடுத்து, உங்கள் பைக்குள் திணிக்க, அந்தக் குட்டிநாய்க் கத்தி குரல் காட்டிவிடக்கூடாதே என்ற பதைபதைப்புடன் நீங்கள் அள்ளிவரலாம்! முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை படித்தப் பின்னும், அதை உங்கள் கைப்பையிலிருந்து இறக்கமுடியாமல், பிரிய முடியாமல் ஒரு காமத்தை உங்கள் சுவாசத்திற்கு தொடர்ந்து அளித்துக் கொண்டே இருக்கலாம்! எந்த ஒரு நூலுமே வாழ்க்கைக்குள் நுழையும் போது, ஓர் உறவின் சீரிய தொடக்கத்தை நிகழ்த்தவே வருகின்றன என்பதை உணர, இன்றைய என் வயதொத்த ஆயுள் பிடித்திருக்கிறது!





நட்பில் பெருத்த நம்பிக்கை இன்று வரை ஏற்படவில்லை. காரணம், எதனுடனான தன் ஒப்பந்தத்தையும் எளிய சமரசங்களால் நண்பர்கள் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றபடிக் கலைத்துவிடுவது தான்! தன் சமரசமின்மையால், நம் நெஞ்சுக்குள், தம் உறவின் வழியாக நெருப்பில் தகிக்கும் ஓர் இரும்புக்கம்பியை, ஆழமாகப் பாய்ச்சும் தகுதி உள்ளவர்கள் தாம் நண்பர்கள் என்பது என் இலக்கணம்! ஆனால், புத்தகங்கள் கூட்டி வரும் மனிதர்கள், நம் மன இடுக்குகளில் ஓர் ஆலமரத்தின் விதையை எச்சமாய் இட்டுச்செல்கிறார்கள். பின் நீங்கள், அவர்கள் கொண்டு வந்த சாபமூறிய அந்தப் புத்தகங்கள் விரும்பிய ஆலமரத்தை உங்களுக்குள் சுமந்தபடி வளர்ப்பதற்குத் தயாராகிவிடுகிறீர்கள்!





நானும் என் நண்பரும், சென்னை வந்து இது வரை பத்து வீடுகளுக்கு மேல் எங்கள் புத்தகங்களைச் சுமந்து இடம்மாறியிருக்கிறோம்! ஒவ்வொரு முறை, வீடு மாறும்போது, அந்தப் புத்தகங்கள் மலைப்பையும் திகைப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன! எங்களின் ’எட்டுத் திக்கிலும் மதர்த்து எழுந்து நின்று’ (தேவதேவனின் வரி), அவை அமானுஷ்யமாய் எழுந்து நிற்கும் அந்தத் தருணங்களில், வீடுமுழுக்க அவை இறைந்து கிடக்கையில் மனம் கொள்ளும் பேதலிப்பு எந்த இலக்கியத்திலும் இடம் பெற்றிருக்கிறதா என்று தெரியவில்லை!





என் நண்பருக்கு, ஓர் அசாதாராண திறன் இருக்கிறது. எல்லா நூல்களையும் வகைப்படுத்தி அடுக்கி வைப்பதுடன், அவர் வெளியூர் சென்றிருக்கும் நாட்களிலோ அல்லது, வீட்டிற்கு வெளியே இருக்கும்போதோ ஒரு நூல் அவசரமாகத் தேவைப்பட்டால், எந்த அடுக்கில், எந்த வரிசையில் எந்த நிற அட்டையுடன், என்ன தன்மையான அட்டையுடன் அது இருக்கிறது என்பது வரை அவரால் சொல்லிவிடமுடியும்! நாங்கள் விரும்பிப் படித்த நூல்கள் மட்டுமே எங்கள் அறைகளில் நிறைந்திருக்கும்! அல்லாத நூல்களை, உடனே குப்பைத் தொட்டிகளில் போட அவரோ நானோ தயங்கியதே இல்லை! இது கூட, அவரின் நினைவுத்திறனுக்கு ஒரு காரணம்! அம்மாதிரியாக அடுக்கப்பட்ட நூல்களில், நீங்கள் தேடும் நூலை விரும்பும் போது உருவி எடுத்துப் படித்து, மகிழும் சுகம் போல் வேறேதும் இல்லை! இல்லையென்றால், இந்த சென்னை வாழ்க்கையில் என்னால் நிச்சயமாக இவ்வளவு கூட எழுதியிருக்க முடியாது என்பதே என் அபிப்ராயம்.





நல்ல புத்தகங்கள் என் வாழ்க்கையில் காதலைக் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன. புதிய உறவுக் கண்ணிகளை ஏற்படுத்துவதில் மூர்க்கமாய் பிடிவாதமாய் இருந்திருக்கின்றன. நூல்கள் பற்றிய கவிதைகள் என் தொகுப்புகளில் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டேயும் இருக்கின்றன! அவை, மழை நாள்களில் என் நூல்கள் கொள்ளும் குளிரையும் விறைப்பையும் குறித்த கவலையாகவே பெரும்பாலும் இருக்கும்! சென்னை போன்றதொரு நகரத்தில், நூலைப் பாதுகாக்கும் கவலை நம் எல்லாவிதமான இயல்புகளையும் புரட்டிப்போட்டுவிடுகிறது. புத்தகங்களின் மீதான கையாட்சியை, உடைமை அதிகாரத்தைப் பேணுவதே ஒரு மனநோய் தான் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை!




ஒவ்வொரு நூலும் அடர்த்தியான சிந்தனையின் எழுச்சியை மூச்சாய்க் கொண்டு அவ்விடம் உறைந்திருக்கின்றன. ஒவ்வொரு நூலும், அல்லது ஒரு குறிப்பிட்ட சிந்தனை அல்லது இயக்கம் சார்ந்த  சிந்தனைகளில் தீவிரமாய் உழலும்போது, அந்தக் குறிப்பிட்ட சிந்தனையை வலுவூட்டி மேற்கொண்டு நான் கயிறு பிடித்து ஏறும்படியான துணிவைத் தந்த நூல்கள் ஏராளம். இன்றும் அவற்றை, என் காதலனை நேசிப்பது போலவே நேசிக்கிறேன். இன்று தனிமனிதராய்க் கடந்து வந்த தூரத்தையும், ஏறிவந்த துயரமான மலைகளையும் திரும்பிப் பார்க்கையில் புத்தகங்கள் தாம் அவற்றைக் கடக்கக் கைப்பிடித்துக் கூட்டி வந்திருக்கின்றன என்பதை இப்போது உணரமுடிகிறது.



இந்தப் புத்தகங்கள் இன்னும் என்னை எங்கே அழைத்துச் செல்லப்போகின்றன என்ற ஆவலுடனும் புதிர்த்தன்மை நிறைந்த எதிர்பார்ப்புடனும் காத்திருக்கிறேன். வேறு எந்தத் திசையில் சென்றிருந்தாலும், நான் விரும்பாத என்னை அது உருவாக்கியிருக்கலாம்! அப்படி நூல்களிலிருந்து விலகிச் சென்றோர் அடைந்த திசைகள் அவர்களைக் கொடுமையான தனிமைக்கும், வாழ்க்கையின் சிறைக்கும் பழிவாங்கலின் வன்மத்திற்கும் கொண்டு சேர்த்திருக்கும் பட்சத்தில், அவர்களுக்குத் தேவையானதொரு நூல் கிடைத்திருப்பின் அவர்கள் இந்தக் கொடுஞ்சிறைகளிலிருந்தெல்லாம் வெளியே வந்திருக்கமுடியும் இல்லையா? ஒரு நண்பனை விட, உற்ற உறவாய் நூல்கள் ஆற்றுகின்ற பணியை வேறெவரும் செய்வதில்லை.






குட்டி ரேவதி


நன்றி: ’புத்தகம் பேசுது’

குறியீட்டுக் கவிதைகள்








1.
தாமரை மலர் நீட்டம்

தடாகத்தில் கண்ணகியின் உடல்
ஒரு செந்தாமரையாகித் தவிக்கக் கண்டாள்
காமத்தின் நீர் மட்டம் உயர உயர
தன் தாமரையின் ஒற்றைக்காலில் நின்ற
தவ வேளையும் உயரக்கண்டாள்
சேற்றின் வேகாத மண்ணில் நின்று தவித்த
தன் தாளாத இலை உடலை
அந்நீரில் விரித்து சூரியன் பரவக் கொடுத்தாள்
சூரியனோ அவளைக் காணாமல் கடக்கிறது
தணலாய்த் தகித்தது உள்ளும் புறமும்
நீர்த்தடாகம் அவளைச் சுற்றிப்
பெருகிக் கொண்டே இருந்தது
தன் இலையுடல் நோவும் கனத்த மலராகத்
தான் இருப்பதை அவள் விரும்பாமலும் இல்லை
சுற்றிப் பறக்கும் தேனீக்களுக்குத் தேன் கொடுக்க
விரியும் தன் முகத்தை முத்தமிட்டு முத்தமிட்டுச்
சிரிக்கின்றன தேனீக்கள்
தடாகம் தரை தங்காமல் கரையெட்டித் தளும்ப,
மலருடன் வாடும் முன் எனைக் கொய்யச் சொல்லுங்கள்
இல்லை, தடாகத்தைக் கடந்து போகும் சூரியனைக்
கண நேரம் என்னில் பரவச்சொல்லுங்கள்
எனக்கூவுகிறாள் விடிகாலைப் பொழுதுகளில்.




  
2.
இனி வேட்டை என்முறை

அது ஒரு வேட்டையின் கணம் என்று
சொல்லத் தேவையில்லை
அவன் என்னுடல் நிலத்தின் மேலிருந்தான்
அவன் எடையின் அழுத்தமும்
மூச்சின் விசைக்கும் கீழிருந்தேன்
நானங்கே நரம்புகளால் நாண் இழுத்த வேகத்தில்
அவன் மல்லாந்து எதிரே விழுந்தான்
இப்பொழுது வேட்டையின் என் முறை
நான் அவனை மூர்ச்சிக்கச் செய்தேன்
அம்புகள் தீர்ந்து போயிருந்த  அம்பாரியில்
மூர்ச்சிக்கச் செய்யும் முத்தங்களின் கனிகளுடன்
நிணம் பெய்யும் வானத்தைப் போல  இருந்தேன்
ஒரு மிருகமாய் மாற்றி அவனைத் தூக்கிச்சுமந்து
வனத்தைச் சுற்றி வந்தேன்
இனி இறைச்சியின்றி ஒரு கணமும்
என் வேட்கை தணியாது


 



3.
மதுத்தாழி

என் உடலொரு மதுத்தாழி
நுரைத்த மதுவை விளிம்பின் தருணம் வரை
நிறைத்து வைத்திருப்பவள்

தேனடையாய்த் தொங்கும் நிலவினும்
கனம் நிறைந்த அதன் போதத்தைத்
தூக்கிச் சுமக்கும் இனிய பருவம் என் இரவு

மரத்தின் தேகத்தில் தனியே தொங்கும்
அணிலின் நீண்ட நேர காத்திருப்பில்
என் மதுத்தாழி நிறையும்

தாழிக்குள் அடைந்து கிடக்கும் ஆழியை
குடிக்க முடியாதெனும் திகைப்பில்
அணில் நீண்ட நேரம் தனியே தலைகீழே

மதுத்தாழி நிறையட்டும்
போதையை ஏற்றிக்கொள்ள முடியாத அணில்
தலைகீழே தொங்கட்டும்

உருவத்தை ஒரு பகையாக்கி
அணில் எனைப் பார்த்தவண்ணமே
மண் கிடந்ததொரு கொட்டையை எடுத்துக்
கொறித்துக் கொண்டிருக்கிறது







4.

விதை முளையும் யோனி

விதையுடன் கூடிய சிறு செடியொன்று
யோனியில் முளைத்து வந்த அம்முத்திரையை*
வரலாறு தன் அகண்ட பூமியின் வயிற்றிலிருந்து
எமக்கு எடுத்துக் காட்டியது எதேச்சையானது அன்று
சூரியன் தன் பழுக்கக் கொதித்த நரைத்த கரங்களை
வரலாற்றின் மண் கிளறி நம் காட்சிக்கு
ஒரு சித்திரம் வரைந்து கொடுக்கிறது
அதைத் தொடரச் சொல்கிறது
மறைதொனியில் இச்சிக்கிறது நம் தேடலை
காலத்தின் பாதையைத் திறந்து கொடுக்கிறது
இன்னும் உறையாத இரத்தத்தை
அது தன்னில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது
இன்னொரு நாளை எப்படித் தொடங்குவது
என்று அந்தக் காட்சி நினைவுறுத்துகிறது
சூரியனை நிதம் தின்று செரிக்கும் கலை கற்ற
தாவரத்தைப் பிரசவிக்கும்
பலமுலைப் பெண்கள் நாமென்று
 
தன் இரு கைகளால் தொடைகளின் இடுக்கிலிருந்து
அத்தாவரத்தைப் பெயர்த்துத் தனியே எடுக்க

அவள் கைகளில் சிரிக்கிறது ஒற்றைச்செடி.




சிந்து சமவெளியில் கிடைத்த முத்திரை வடிவம்





  
5.
அணிலாகி நின்ற மரம்

அதிகாலை மரத்தில் தன் குரல் சப்தத்தை
கிளையெங்கும் பூத்துக்குலுங்கும் பூக்களாக்கிய
அணில் ஒரு மழையால் அடங்கியது

வானம் தன் இசையை ஒரு பெருமழையாக்க
பூக்களை உதிர்த்த கிளையிலும் இலையிலும்
வந்து தங்கியது நீரின் குரல்

அணிலாகி நின்ற மரத்தில்
எப்பொழுது பூக்கள் மீண்டும் குலுங்குமென
எல்லோரும் காத்திருக்க
சுள்ளென்று வெயில் வந்து மர உச்சியில் அமர,
காலம் ஒரு மரமாய் நின்றது

பூக்களற்ற மரம்
மதிய வேளையின் சாபம்.





  
  
6.

சோழிகள் ஆக்கிய உடல்

உருட்டிவிடப்பட்ட சோழிகளால் ஆன
இப்பெருஉடலின் நற்சோழிகள் உமது
நீவிர் உருட்டி விளையாட
உருண்டோடி விளையாடும் நண்டுகளின்
மத்தியில் நவ சோழிகளின் பொலிவு
உம் கண்களைத் திருடும்
கைப்பற்றி உருட்டி விளையாட இம்சிக்கும்
சோழிகளை அலை வந்து கலைக்க
வழி மறந்து திணறி நீருக்குள் உருளும்
சோழிகளற்ற கடலாகா கரையை
என் உடலென்று ஆக்கினால்
தன்னைத் தானே இயக்கும் மகிழ்ச்சியறியா
கூழாங்கற்களே மிஞ்சும் உமக்கு




குட்டி ரேவதி
நன்றி: ’சாளரம்’ இலக்கிய இதழ்

ஒரு ககனப்பறவையும் சில நூறு ஊர்க்குருவிகளும்


(சிவகாமியின், ‘கதவடைப்பு’ கவிதை நூலுக்கு எழுதிய அணிந்துரை) 




நேரடியாகத் தமிழகத்தின் ‘பெண் எழுத்து’  அரசியலுக்குள் செல்லலாம். பின்பு, சிவகாமியின் கவிதைகளுக்குள்ளும் அவை பேசும் அரசியலுக்குள்ளும்!



இலக்கியத்தின் முந்தைய தலைமுறை பெண் படைப்பாளிகளால், பெண் என்ற ஒற்றைப் பரிமாண அரசியலையே உருவாக்கமுடிந்தது! அது, அவர்கள் ‘பெண் என்ற தனித்த அடையாளம் எங்களுக்குத் தேவையில்லை’ என்று தங்களுக்குத் தாங்களே வலியுறுத்திய போதும், அப்பொழுதும் எப்பொழுதும் பரவலாக எழுதி வரும் ஆண் படைப்பாளிகளின் படைப்பியக்க அடையாளங்களுடன் தம்மைப் பொருத்தி இணைத்துக் கொண்ட போதும்!



‘பெண்’ என்ற ஒற்றை அரியணை போதும்!’ என்ற ஏற்றத்தாழ்வின்றி, எல்லா பெண்களும் அந்த ஒற்றைப் பரிமாண பெண்ணிய அரசியலை முன்மொழிந்த போது கல்வி, சமூக, மதிப்பீடுகளில் ஏற்றத்தாழ்வுகளுடன் இருந்த சமூகத்தின் பிற பெண்களுக்கான சிறந்த இடங்களை மறுத்துள்ளனர். ஆனால், இந்த இடைப்பட்டக் காலத்திற்குள், ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்கள் தன்னையே வருத்திக் கொண்ட, அழுத்தமான, நீண்ட, போராட்டங்களினால் எழுத்தை நோக்கி தம்மைத் தாமே உந்தித்தள்ளிக்கொண்டனர்.  எழுத்து என்னும் சமூகத்தின் வலிமையான குரலெடுப்பை, அதன் பரவசத்தை  முதன்முறையாக உணர்ந்த முதல் தலைமுறைப் பெண்களின் உள்ளார்ந்த வல்லமை கண்கூசும் ஒளியுடன் எழுத்தில் பரிணமித்தது. இன்று, அவர்கள் முன்வைக்கும், ‘அறிவார்ந்த சிந்தனை’களுக்கு முன், சென்ற காலத்தின் கற்பனைகளும், இலக்கிய ஜோடனைகளும் தம் ஒளிமங்கிப் போனது தவிர்க்கமுடியாததும் ஆனது.



ஏனெனில், இவர்கள் மட்டுமே உடலின் மொழியை எழுத்தாக்கினர். இன்று வரை மொழி என்பது, இவர்களுக்குத்  தம் உடலுக்குள், குமைந்து கிடந்த கண்ணீரின் துளிகளாகவோ, கனன்று கொண்டிருந்த கனல் துண்டங்களாகவோ, இசைக்க மறந்திருந்த பாடலாகவோ இருந்திருக்கவேண்டும். அல்லது, வாய்மொழிக் கதையாடல்களாய் இருந்திருக்கவேண்டும்! எழுத்தின் வெளிப்பாட்டால் உணர்ந்த பரவசநிலை, மண்ணோடு மண்ணாக அழுத்திப் புதைக்கப்பட்ட தம், ‘சுய வரலாறு’களின் படிமங்களைத் தேர்ந்தெடுத்த கவிதைச் சொற்றொடராக்கத் தூண்டியது.  ‘உடலின் மொழி’ என்றால், அது பாவனைகளைக் குறிப்பிடுவது அல்ல என்ற புரிதலுடன் நாம் முன்நகரலாம்!



அதற்கு முன்பு வரை எழுதிக்கொண்டிருந்த ஆதிக்க சாதிப் பெண்களின் உணர்நரம்புகள் தொட்டாற் சிணுங்கிகளைப் போல் உள்ளிழுத்துக் கொண்டன. அல்லது புதியதாக எழுதப்பட்ட சொற்களின் அர்த்தம் புரியாததைப் போல மலங்க மலங்க விழித்தன அல்லது இயல்பாகவே, இவ்வெழுத்தின் மீது உருவான தம் வெறுப்பை, ‘நாகரிகம்’ என்ற பெயரில் மறைத்துப் பத்திரப்படுத்திக் கொண்டு, சமூகத்தில் இதை விட முக்கியம் வேறெது என்று தேடும் பாவனையில் தம் உருப்பெருக்கிக் கண்ணாடிகளை அங்கும் இங்கும் திருப்பி நோக்கின!  வேறேதும் கிட்டவே இல்லை!



எப்பொழுதுமே பெண் எழுத்தின் வாயில், ஆதிக்கச் சிந்தனைப் பெண் எழுத்தின் வழியாகவே திறக்கப்படுவதால்,  அதிலும் ஆண்டாள் போன்ற பெயர்கள் அலுக்கும் வரை உரத்தக் குரலில் உச்சரிக்கப்படுவது எமக்குச் சலித்துப் போய்விட்டதால், அடுத்த வீட்டு வாசல் வழியாக எம் வீட்டிற்குள் நுழையாமல், இங்கு நேரடியாகவே சிவகாமியின் கவிதைகளுக்குள் செல்லும் படி அழைக்கிறேன்!  ஏனெனில், ஆதிக்கச் சிந்தனையின் பின்னிருக்கும் இறைஞ்சுதல் தொனி, பக்தியாக அடையாளப்பட்டுப் போயிருக்கிறது! அதிகாரத்தைப் பிச்சையெடுத்தேனும் வாங்கிச் சுகிக்கும் அடிமை மனோநிலை தானே அது?



எது கவிதை? என்று அறியப்படாமலேயே, தமிழகத்தின் வருடங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அந்தக் கேள்வி, சிந்தனையின் வெளியில் பல பிளவுகளையும் சேதங்களையும் நிகழ்த்திவிடும் என்பதலாயே, அக்கேள்வி, வசதியாய்ப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. அது, நவீன அரசியல் காலக்கட்டத்தில், ‘சுயம்’ பற்றிய தத்துவ விளக்கத்தையும் கோரும் என்பதே அதற்கு முதன்மையான காரணம். ’சுயம்’ என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல கவிதையில் அன்றி வேறெந்த இலக்கிய வடிவிலும் துலங்குவதில்லை. அதிலும், நவீனத்தின் உரத்த குரலாயிருக்கும் கவிதை மொழி, ஒரு சிந்தனையாக, விவாதவெளியாக இன்னும் விரிக்கப்படாமலேயே அதன் அதிர்வுகள் செரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இன்றைய படைப்பாளியின், ‘சுயம்’ ரசிக்கத் தக்கதாயில்லை!



ஒரு தனித்த படைப்பாளியின் கிரீடங்கள் மண்ணில் உருண்டு, பரிகாசங்களின் வாய் பொத்திய மொழிகள் ரகசியங்களாக உலா வருவதும்,  அத்தகைய படைப்பாளிகள், மன நோயாளிகளைப் போல திறந்த வெளியில் திரிவது கண்டுப் பரிவுடன் அவர்களை விட்டு விலகுவதும் வழக்கமாயிற்று. பழகிப்போயிற்று. இன்று ஒரு படைப்பாளி, தன் படைப்புகளின் வழியாக, தன் சுயத்தின் பொலிவுடன் சமூகத்தின் எந்தெந்த மனிதர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறான் என்பதும், சிந்தனையின் தீரா இயக்கத்தை எவ்வளவு துணிவுடன் தொடர்ந்து இயக்குகிறான் என்பதும் மிக மிக முக்கியமாகிறது. இது இயலாது, தன் சுயம் கண்டு மிரண்டு போனவர்கள், தனி மனிதச் சுமைகளுடனும், அதன் கிரீடங்களுடனும் அடையாளம் பெறும் நிலையிலிருந்து, ‘சிந்தனைப் பருவம்’, நகர்ந்து வந்துவிட்டது. ஏனெனில், அத்தகைய கிரீடங்கள், அதிகாரம் செய்து பழகியவர்களுக்கும், ஆதிக்கச் சிந்தனையை எழுத்தாக்கியவர்களுக்கும் தாம் தேவைப்பட்டது. அவர்களின், சிந்தனை, நடை, ஊக்கம் தளர்ந்ததை இன்று நாம் கண்ணெதிரேயே காணமுடிகிறது.




கதவடைப்பு


தமிழில் இயல்பாகவே, தம் சாதி, மதம், பால் அழுத்தங்களைப் புறக்கணித்தவர்கள் உடலின் மீதான, அவற்றின் அழுத்தங்களைப் பேசாமல் இல்லை. விட்டு விடுதலையாகிய உணர்வை உடலுக்கு ஊட்டிய சிட்டுக்குருவிகளாக இருந்திருக்கின்றனர். அதன் தொடர்ச்சியை இலக்கியத்தின் வேறு வேறு முகங்களாய் எங்கெங்கும் நாம் கண்டுணரமுடியும். பகுத்தறிவுச் சிந்தனையின் ஊற்று, உடலில் தான் பிறக்கிறது! புத்தன் அதை செம்மையாகத் திருந்தச் செய்து வைத்தான்! காலந்தோறும் யாரேனும் அதைத் தன் உடலுக்குள் ஊதிப் பெரிதாக்கி, அதன் வெக்கையை வெளியிலும், பரப்பினர். இவ்வாறு தன் உடலைப் பகுத்தறிவுச் சிந்தனையின் உலையாக்கியவர் சிவகாமி.



மேற்குறிப்பிட்ட, சமூகச் சூழலைப்  பின்னணியாகக் கொண்டு தான், சிவகாமியின், ‘கதவடைப்பு’ என்னும் கவிதை நூலை அணுக வேண்டும். அவர் எழுத்துக்குப் புதியவர் அல்ல. ‘இந்தியாவின் முதல் தலித் இலக்கியம்’ என்று வரையறை செய்தாலும், ‘இந்தியாவில் பெண் உடலின் சிந்தனை எழுச்சிகளை முதன் முதலாகப் பதிவு செய்தவர்’ என்று ஆராய்ந்து பார்த்தாலும், சிவகாமியின் எழுத்தனுபவமும் முதன்மையும் வியப்பை ஏற்படுத்தக்கூடியது. என்றாலும், அவர் எழுத்தின் முதல் புள்ளியிலேயே நின்றுவிடவில்லை. அங்கிருந்து, விடுதலை, வேட்கை, நீதி போன்ற  உணர்வுகளின் திசைகளை நோக்கி அயராது ஓடியவர். அத்திசைகள், அவருக்கானவையாக மட்டுமே இருந்தவை என்று எவரும் தவறாக நினைத்துவிடவேண்டாம். அதில், அவர் பின்னால், எப்படி ஒடுக்கப்பட்ட சமூகத்தினரும், பிற பெண்களும் கூட ஓடிவர முடியும் என்று அவர்களுக்காகவும் சிந்தித்தவர். சமீபத்தில் ஒரு சமூக இயக்கத்தின் தலைவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. ‘பிற சமூகத்திலிருந்து, தீண்டாமைக்காகவும் சமூகத்திற்காகவும் ஒருவர் உழைத்தால், அது கொண்டாடப்படுகிறது. ஆனால், தீண்டப்படாத நிலைக்குத் தள்ளப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து ஒருவர் தன் சமூகத்தின் மீது படிந்து கிடக்கும் கருமையான போர்வையைக் களைய வந்தால், அவரை அழித்தொழிக்கும் திட்டம் தீட்டப்படுகிறது!’ என்று. இதுவும் தீண்டாமையைச் செயல்படுத்தும் ஒரு சமூகத்தின் ஆதிக்க உத்தி தான்! இலக்கியத்திலும் அது தான் நிகழ்ந்திருக்கிறது.



நவீன இலக்கியத்தின் நெடுஞ்சாலை, சென்று சேரும் ஊர் இன்றி ஓடிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில், இரண்டு முக்கியமான சிந்தனைத் தெறிப்புகளை முன் வைக்கிறார், சிவகாமி. ஒன்று, ‘பெரியார், ஒடுக்கப்பட்ட மக்களின், தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் இல்லை!’ என்பதும் ‘தாழ்த்தப்பட்டவர்களால் படைக்கப்படுவது மட்டுமே, தலித் இலக்கியம்!’” என்பதும்! இரண்டுமே, பெரிய அதிர்வுகளையும், மடைமாற்றங்களையும் கவனக்குவிப்புகளையும் நிகழ்த்தின என்பதாலேயே, மேற்குறிப்பிட்டது போல், நவீன இலக்கியமுகாமில், இலக்கியத்தின்  புதிய சிந்தனை முறைகள் விவாதிக்கப்படாமலேயே காலங்கள் கழிந்தன. இவ்விரண்டு, கூக்குரல்களும் எழுப்பப்படவில்லையென்றால், இன்று இலக்கியத்தின் திசை கண்டிப்பாக, தறிகெட்டுப் போயிருக்கும், அல்லது இலக்கியத்தின் இன்றைய நவீனத்துவம் சாத்தியப்பட்டிருக்காது!




சிவகாமியின் கவிதைகளுக்குள் வருவோம்! தன் தேசத்தை, தாய் நாடு என்று போற்றும் மக்களிடையே தன் உடலை ஒரு தேசத்தின் நிலப்பரப்புடன் விரித்துப் புரிந்து கொள்ளும்  முழு வேகத்தையும் வேட்கையையும் அவர் இங்கு பதிவு செய்துள்ளார்! தோலின் வார்களால் இழுத்து, இறுக்கிக் கட்டப்பட்ட உடல் மட்டுமே அன்று, இந்த உடல்!’ என்பது ஒவ்வொரு  சொற்றொடரின் பின்னாலும் கூக்குரலிடுவது, கேட்கிறது. இது ஓர் அசாதாரண நிலை. தன் உடலையும்  சிந்தனையையும் தானே உந்தி உந்தி ஓடும், அகால நிலை.


புத்தனும் அப்படித்தான் உடலை இயக்கச் சொல்கிறான். பகுத்தறிவுச் சிந்தனை வேரூன்றிய நம் மண்ணில், நம் உடலும் அதில் வேர்விட்டிருக்கும் சிந்தனைகளும் எப்படி, தனிமைப்பட்டுப் போயின. அன்னியப்பட்டுப் போயின, எப்படி விதையெழும்பாமல் பார்த்துக் கொள்ளப்பட்டன என்று தொடர்ந்து அவன் உடலும் தீயாகக் கனன்றது. அப்படியாகக் கனலும் உடலின் பெருவெளியை, சிந்தனையின் உற்பத்தியிடமாக ஆக்கித் தந்திருக்கிறார், சிவகாமி.


எளிமையான சொற்களுடனும், அதிகார இயங்குமுறைகளைப் புதிய சொற்கோர்வைகளாக்கிய எழுச்சியுடனும் அவர் மொழியும் சிந்தனைகளும் கவிதைகளாகியிருக்கின்றன. இரண்டாயிரம் வருடங்களாக, இம்மண்ணில் தன்னை உயிர் தக்கவைத்துக் கொள்ளப்போராடும் சிந்தனையின் கருவாய், சிவகாமியின் சிந்தனை உயிர் நீர்ப் பாய்க்கிறது. அதே சமயம், அது சுணையாகவும் இருக்கிறது! புற வடிவில் தன்னைச் சுருக்கிக் கொண்டு, தன் அந்தரங்கத்தின் மறைவிடங்களில் ரகசியமாய் நீங்கள் வருடுகையில் அது உங்கள் சதைகளில் ஏறி சுணையைப் போலவே கடுக்கும்! நினைவுக்குள் பழுக்கச் செய்யும்! பிடுங்கியெறிய நீங்கள் போராட வேண்டியிருக்கும்! நினைவுகளுக்கு ஒருபொழுதும் சுகமளிக்காது! புண்ணுக்குச் சொறிந்து கொடுக்கும் சுகம் போல இருக்கவே இருக்காது!



கதவடைப்பு என்பது, ஒரு குறியீடாக இந்தியாவின் ஒட்டுமொத்த அதிகார மனத்தையும் குறிப்பிடுகிறது. அறைக்குள், காகிதத்தின் குறுகிய பக்கங்களுக்குள் அடைந்து கிடக்காது, சமூகத்தின் திறந்த வெளிகளில், சேரிகளில், நெடுஞ்சாலைகளில் ஒற்றையடிப்பாதைகளில் மனிதர்களை நோக்கிய அவரது பிடிவாதமான பயணங்கள் கொண்டு சேர்த்த உண்மைகள் இன்னும் அவர் ஒரு நூறு புத்தகங்கள் எழுதினாலும், தீராது என்பதை நான் அறிவேன். தமிழகத்தில், கடந்த காலத்தின் ஐம்பது வருடங்களில் அவரளவிற்கு மக்களை நோக்கிப் பயணம் செய்தவர் யாரும் இருக்கமுடியாது  என்பது இலக்கியவாதிகள் மறைத்து வைக்கும் உண்மை.  




இருந்தாலும், இத்தனிமனித விடயத்திலிருந்து புதிய குரல் தொனிக்கும் இலக்கியத்தின் தளத்தில் சிவகாமி அவர்கள் சொல்லவந்ததன் பொருளும், குரலும் இன்றைய இலக்கியத்தின் எந்தெந்தக் கதவுகளை உடைத்துத் தள்ளுகிறது என்று பார்க்கலாம்.

விடாது மழையிலும்
அடாது தொடர்வோம்
நாம் பேசிக்கொண்டிருந்ததையே
ஏனெனில்
வேலியின்றி விரிந்திருக்கிறது
நிலம்

தனிமனிதர்கள் அழிந்து போய்விடுகின்றனர். எழுத்தாளர் என்னும் முத்திரை நம்மைச் சுற்றிச்சுற்றி வரும் ஒரு நூறு பேருக்கு முக்கியமாகப் படலாம். அதுவே நமக்கும்  முக்கியமாகப் படலாம். அல்லது, ‘காலம் தாண்டி என் எழுத்தும், என் பெயரும் நிற்கும்’, என்ற நம்பிக்கையில் எழுதுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், எழுதும் போதே சமூகத்திற்கும், சக மனிதனுக்கும், தனக்கும் உற்ற துணையாகி வெளிச்சத்தைக் காட்டாத எழுத்தினால் பயனென்ன?

சூல் எழுத்து என்ற கவிதையில்,
சூல் பதரென நல்லுழவன்
பிரித்தறிவானெனினும்
தற்காலிகமாகவேனும் தன்னை
நிலைநாட்டிக்கொண்டே உளது பதர்

…….   ……….  …………………  ………….
நனைத்து முகம்புதைக்கும்
காலத்தாவரங்களின் உணர்கொம்பு
வெறுப்பு குமிழ்கள் உடைய
ஒளிப்பூக்களென நெற்றி வருடும்
அவ்வெழுத்தின் கரங்களை
வாருங்கள் முத்தமிடுவோம்


களவு போன நீல ஆடைகளும், கானகமும் கவிதையின் உள்ளே முதிர்ந்த இந்திய அரசியலின் குறியீடுகள் காட்சி பெறுகின்றன. சிறிய சிறிய சொற்களால் அரசியலைக் கவிதைகளில் சொல்வதென்பது சாதாரணமான விஷயமில்லை. எழுதி எழுதிப் பார்த்துப் பல கவிதைகளுக்குப் பின் தான், ஆயிரம் சொற்களை இறைத்து விரயமாக்கியப் பின் தான் ஓர் அரசியல் நுணுக்கத்தைச் சொல்லில் ஆளும் திறனை அடையும் நவீன தமிழ்க் கவிதைக்கு மத்தியில், சிவகாமியின் கவிதை நேரடியாக ஒரு சொல்லையும் அதன் பின்னால் காலங்காலமாகப் புதைந்து கிடக்கும் நிழல் வரலாறுகளையும் அரசியல்களையும் உடைகளாகக் கவர்ந்து வரும் வீரியத்தைக் கொண்டிருக்கிறது.

அரசியல் கொட்டடிகளில்
பூந்தேக நரம்புகள் துடிதுடிக்க
செலுத்தப்படுகின்றன அபின் ஊசிகள்
போதையின் முதுமையில்
அழிகின்றது கானகத்து பசுமை


கவிதையோடு படிக்கும்போது, ‘போதையின் முதுமையில் அழிகின்றது கானகத்து பசுமை’ என்பதன் வரிகளில் அடங்கியிருக்கும் இழப்பின் திடமும் உருவமும் கனமானது! சிவகாமி தன் வரிகளில் சொல்லும் அதே அழுத்தத்துடன் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியுமா என்ற சந்தேகம் எனக்குத் தலைதூக்குகிறது.



கவிதையின் கூக்குரல் தனிமையானது தான்! தனிமையின் தீனமான குரல் அவருடைய எல்லா கவிதைகளிலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. தன் இருப்பின், தனது சாத்தியப்பாடுகளின் முழுமையைக் கண்டுணரும் முயற்சியில் உருவாகும் மோனமே தனிமையாகிறது! அவர் சொல்ல வரும் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறுகளுக்குள் ஒளிந்து கிடக்கும் காலாதீதத்தை, தன் சொற்களுக்குள் பொதிந்து கொடுக்க, இவர் விரிக்கும் தனிமை பெரிதும் உதவுகிறது. இந்த தனிமை பொதுவாகவே, பெண்கள் மீது திணிக்கப்பட்ட சாபம் என்றாலும், அத்தனிமையின் வேர்களையும் கிளைகளையும் கண்டுணர்ந்தவர்களுக்கு அது சாபமில்லை. தன் வாழ்வின் மீதான போதம், அது! அதை ஒளி குன்றாமல் வைத்துக் கொள்ளும் போராட்டத்தில் சிவகாமியின் எழுத்து கவிதை வழியாகவே தன்னையும் ஈடுபடுத்திக் கொள்கிறது!  ’ஆம் என்றொரு உரையாடல்’, அவர் வாழ்க்கையின் அன்றாடத் தனிமையைச் சொல்லும் ஒரு கவிதை. அகத்தனிமையைப் பாதுகாக்கவும், புறத் தனிமையைச் சுட்டெரிக்கவும் செய்கிறது! அகத் தனிமையை அவரின் ‘விதையின் பிரசவம்’ கவிதைக்குள் உணரலாம். ‘விதையெழுப்புதல்’ பலரால் பலமுறை எழுதி சலித்துப் போன நிலையில், புதிய அர்த்தங்களுடன் உருப்பெற்றிருக்கும் இக்கவிதை, இத்தொகுப்பிற்கு விளக்காய் இருக்கிறது!


சதை திரட்சி விலகி கனி உலர்ந்தது
நிர்வாணத்தின் கரை தொலைவிலில்லை
மலரசம் காய்ந்த விதை
உலர்தலின் வருத்தமின்றி உதிர்கிறது
இறந்தவரின் தடயத்தை உரக்குழியாக்கி
விதைப்பையிலிருந்தும் விலகி
திடமான உதிரக்கட்டி உருள்கிறது
முளைத்தலில் பரவசம் ஆட்கொள்ள
உந்தி சுழன்று நிகழ்கிறது உற்சவம்
பிறவியின் துயர நடனம்
சூளுரை எதுவுமின்றி
தடித்த தடுப்பின் மறைவில்
கிளர்ச்சி கொந்தளிப்புடன்
வினையுடன் எழுகிறது உயிர்
மாமிச இரவு விழிப்புடன் அரவணைக்கிறது
மண் இளகி வழிவிட
ஆகாயம் ஈரத்துடன் விசிறிக்கொடுக்க
பெருமுளைப்பு நிகழ்ந்தது
பச்சைக்கனவு பலிதமென
சுற்றுச் சூழல் வாழ்த்த
நிர்வாணத்தின் கரை தொட்ட களிப்பில்
படர்கிறது நிழல் தரும் கிளை
மரம் வளர்த்த பேருவகையில்
கசிகின்றேன் நான்



அவ்வாறே இவரது இலக்கிய ஆக்கத்திற்கான கற்பனைகள், கற்பிதங்கள் காற்றாக அடைக்கப்பட்ட பலூன்களோ அல்லது நினைவுகளின் வெற்றிடங்களில் எழும்பி, கண் முன் அலையும் குமிழிகளோ அல்ல. தீராத வேட்கையினால் அயராது ஓடுகையில்  இவர் முன்னே விரியும் காட்சிகளும், முற்றி முதிர்ந்த பயிர்களுமே அவை! அக்கற்பனைகளைக் கடந்து போகும் நிர்ப்பந்தத்தையும் பந்தயத்தையும் தனக்குத் தானே வழங்கிக்கொள்கிறார்! இவர் பந்தயம், தன்னுடன் யாரும் ஓடிவருகிறார்களா என்று கடைக்கண்ணால் நோக்கும் வன்மமும், பின்னால் யார் யார் ஓடிவருகிறார்கள் என்று புறக்கண்களால் அளக்கும் அவநம்பிக்கையும் அற்றது.  தூய கற்பனைகளும் தரிசனங்களுமே இவர் ஓட்டத்தின் கால்களுக்கு ஊக்கமருந்துகள்!    


ககனப்பறவை


தமிழ் எழுத்தில் பல பெண் உடல்கள் பிறந்திருக்கின்றன. ஆண் படைப்பு மனோ நிலை ரசித்த, காமம் தோய்ந்த கண்களுடன் கண்டுணரப்படும் பெண் உடல்கள், பெண் படைப்பாளிகள் தம் உடலைக் கொண்டாட்டமாகவும் அதிகார ஆற்றலாகவும் மாற்றிக் கொள்ளத் துடித்த பெண் உடல்கள், கொண்டாட்டத்திற்கான வியப்பை நோக்கிக் காத்திருந்த பெண் உடல்கள், ஆண் அனுபவித்துக்கொண்டிருந்த அதிகாரக் கொண்டாட்டத்தையும், வன்ம மொழிகளையும் தம் உடலுக்கும் வரிந்து கொண்ட பெண் உடல்கள், போலியான, கற்பனையான ஆற்றல்களை உடுத்திக் கொண்ட பெண் உடல்கள், படிமங்களாகிப் போன, உயிரிழந்த பெண் உடல்களைத் தோண்டித் துருவி எடுத்து தற்காலப் பெயரைத் தனக்குச் சூட்டி மகிழும் பெண் உடல்கள் இவை எல்லாவற்றிற்கும் அப்பால், புதிய வலிமையான உடல்களை, தன் நுட்பமான சிந்தனையின் வடிவமைப்பினால், சிவகாமி, தன் ‘கதவடைப்பில்’  உருவாகியிருக்கிறார்.


சக மனிதனின் உடலிலிருந்து அதிகாரத்தின் கயிற்றால் தொடர்ந்து உழைப்பை இறைக்கும் உடல்களாக, இயல்பூக்கம் நிறைந்த உடல்களாக, வன்மங்களைச் செய்து பயிலும் உடல்களை அடையாளம் காட்டும் உடல்களாக… என உடலின் மாண்பை முற்றிலும் எதிர்த்திசையில் சொல்கிறது. உடலை வெளிச்சப்படுத்தும் சரியான தருணத்திற்கு எழுத்தைக் கொண்டுவந்து சேர்ந்திருக்கிறார்! வெளிச்சம் விழவேண்டிய உடல்கள் இங்கு, இவர் வரிகளில் அணிவகுத்து நிற்கின்றன!


அடையாள நெடுங்கதவுகள்
………  ……… ………….
தனக்கான சாயலற்ற அடையாளம் கேட்டு
பூட்டியிருக்கும் அதிகாரக் கதவுகளை
பிறந்த குழந்தையின்
தலை முட்டிக் கொண்டேயிருக்கிறது



இன்றைய விடுதலை உணர்வின் அடிப்படையான கேவல் தான் இது! ‘அடையாள அரசியல்’ காயடிக்கப்பட்டு, பதராகிப் போனதொரு இன்று, இந்த வரிகள் நெஞ்சைப் பிளக்கின்றன.  

கருணை

………………… ………….. …….
விந்துக்களின் தடயமின்றி
துப்புரவாய் கழுவப்பட்டுள்ளது
கர்ப்பவாசலும் கருவறையும்
அசாதாரணமாக
விரிய திறந்திருக்கும்
அவ்வாசல் வழி
வந்து சென்றவர் யாரென
துப்பேதும் கிடைக்கவில்லை



கோயில் வடிவமைப்புகள், சாதி அதிகார வடிவமைப்புகளை நேரடியாகக் குறிப்பிடுவன. ’கருணை’ கவிதையில் அவர் சொல்வதும், பெண் உடலின் மீது செலுத்தப்படும் அதிகார வன்முறையை கோயில் வடிவமைப்பிலேயே சொல்லியிருக்கிறார். கோயிலை, பாலியல் வன்முறைக்கு உள்ளான ஒரு பெண் உடலாக ஆக்கியிருக்கிறார்.



பெண்கள்
உடலின் ஒரு பகுதிக்கு
தீ மூட்டிக் கொண்டாள் அவள்
இதயத்திலிருந்து கொங்கைக்கு மாற
எரிந்தது மதுரை வானவர் வாழ்த்து
பின் வந்து சேர்ந்தது

உடல் துறக்கிறாள் வேறொருத்தி
உதயணன் விசை தவறி
பசிப்பிணி சாக்காடறுக்க
கரம் சேர்கிறது ஆபுத்திரனின்
அமுத சுரபி

சுட்ட பழத்தை ஊதி பசியாறி
அறநெறி அரசனுக்குக் கற்பித்து
உப்புக்கும் பருப்புக்கும் பாடிய
மக்கள் கவிக்கு பரிசு
அதியமான் கனி

அன்பே
அந்தியின் சோபையற்ற கண்களால்
குப்புறப்படுத்து வானம் பார்க்க விழையும்
உன் அசைவுகள் கவனித்தும்
மேலும் எரிந்து கொண்டு தான் உளது
இச்சிறு மெழுகுவர்த்தி



இதில் சிறு மெழுகுவர்த்தி தன்னிடம் தக்கவைத்திருக்கும் தீயை, மீண்டும் முதல் வரிக்கும் சென்று, அங்கு அவர் குறிப்பிட்டிருப்பது போல,   ’உடலின் ஒரு பகுதிக்குத் தீ மூட்டிக்கொள்ளும், அது பின் அவள் கொங்கைக்கு மாறும். பின் அது விசை தவறி வேறிடம் பாயும். அது அதியமானிடம் கனியாகும்!’  இதுவே அவர் தன்னிடம் காத்து வைத்திருக்கும் தீயாகச் சொல்வதும்! அது ஒரு பொதுவான தீ தான்! குப்புறப்படுத்து வானம் பார்க்க விழைபவர்கள் சுரணை கொள்ளும் போது, இச்சிறு மெழுகுவர்த்தியிலும் இருந்து தீ, பரவும்!’


அதிகாரத்தின் அசைவுகள்
பீறிட்டெழும்
விலங்குணர்ச்சிகளால் ஆனவை
அதிகாரத்தின் அசைவுகள்

-----  ------ -------
உருவிக்கொள்ள இயலாதவாறு
ஊசிகளின் காதுகளில்
நுழைக்கப்பட்டு விட்டோம்
பொருந்தாத போட்டிகளில்
விதிக்கப்பட்ட வரிசைகளில் இருந்து
இலக்கற்ற இலக்கணத்துடன்
வாட்களை உருவுகின்றோம்
அஹிம்சை  இம்சை
வேறுபாடின்றி

-------- --------- -------
அதிகாரத்தின் விதிகளையும் அது இயங்கும் முறைகளையும் மொழிப்படுத்த இப்படிக் கவிதைகளில் ஆக்கிவைத்தால் தான் அது நிரந்தரத்தன்மையை அடையும் போலும்! கட்டுரைகளிலும் புனைவுகளிலும் எழுதி எழுதி வாசித்துப் புரிந்து கொள்ளாத  மரத்துப் போன ஆதிக்க மண்டைகளிடம், ‘ஊசிகளின் காதுகளில் நுழைக்கப்பட்டுவிட்டோம், உருவிக்கொள்ள இயலாதவாறு!’ என்ற வரியாவது புரிதலை ஏற்படுத்தி, அவர்களின் நினைவுச் சடவுகளின் கணங்களிலேனும் பொறி தட்டிக் கலங்கச் செய்யட்டும்!


எனதாயிராத உடல்

எனதாயிராத என்னுடலை
விக்கிரமாதித்தனென சுமப்பதில்
மரங்களிலிருந்து மலர்கள் உதிர்கின்றன
எப்போதும் கத்தியில் நடப்பது போல்
கவனமாய் வகைபிரிக்க இயலாமையால்
வார்த்தைகளின் தடுமாற்றங்களில்
உடைகிறது இவ்வூன் குடம்

செப்பனிடும் வசதி குறைவினால்
மிருகத்தின் பிளிறல் மிக அருகில் கேட்டு
பதறுகிறது பிறப்பித்த உடல்
என் பேச்சு கேட்குமாறு என்னுடலை
எவ்வளவு வற்புறுத்தியும் அது
எனக்கெதிராகத் திரும்பியிருப்பதை
அறிவிக்கிறது கொம்பு முளைத்த தலை

முழுதும் என் படைப்பல்லாத உடலை
நான் மட்டுமே சுமக்கும் படி
சபிக்கப்பட்டிருப்பது கண்டு
வியந்து தான் போகின்றேன்


இத்தொகுப்பின் நிறைவுக் கவிதை, இது!  ‘முழுதும் என் படைப்பல்லாத உடலை, நான் மட்டுமே சுமக்கும் படி..’ என்ற வரிகள் போதும், சிவகாமி அவர்கள் எம்மாதிரியான உடலைப் படைப்பு உடலாக ஆக்க முயல்கிறார் என்பதற்கு!



ஏனெனில், பெண் பாலியல் சுரப்பிகள் வற்றிப் போகும் அளவிற்கு அதற்கு பாலுக்கம் தந்த எழுத்துக்களையும், இன்றைய பெண்படைப்பாளிகள் தன் பாலின உறுப்புகளுக்கு மொழியின் வழி கட்டுக்கடங்கா இன்பத்தைத் தானே கொடுத்துக்கண்ட  எழுத்துக்களையும், ஊசி போன்ற இவரின் கூர்மையான எழுத்து முனை, போலியான உடலரசியலையும், செயற்கையாகச் செய்யப்பட்ட உடலரசியலையும் ஓர் அறுவை மருத்துவரின் கத்தியைப்போல அம்பலப்படுத்துகிறது.



உடலரசியலின், புதிய பாதையென இக்கவிதைகளைத் தெரிவுசெய்ய கொள்ளவேண்டும்! முள் மண்டி அடைத்துக் கொண்டிருக்கும்   தற்கால உடலரசியலின் பாதையை, செம்மைப்படுத்துகிறது, இவரது பார்வை! பெண்ணியம் இந்தியாவில் ஒரு பெரும் இயக்கமாக மலராததற்குக் காரணம், இப்பார்வை இன்மை என்பது எந்தத் தருணத்திலும், படைப்பாளிகளின், இயக்கவாதிகளின் அனுமானமாகக் கூட இருந்ததில்லை! இந்நிலையில், சிவகாமியின் இக்கூக்குரல், தமிழகத்தின் பெண் உடலரசியலை முற்றிலும் நேர்மாறாக்குகிறது! சிவகாமியிலிருந்து திரும்பி பின்புறமாகப் போகலாம்! அல்லது, பெயர் பட்டியலை தலைகீழாக்கலாம்! இதை ஒரு தரமாணியாக வைத்துக் கொள்ளலாம்! அல்லது, இங்கிருந்து தொடங்கலாம்!



கவிதைகளுக்கு மத்தியில், ஆங்காங்கே சிந்திக் கிடக்கும், பொட்டுப் பொட்டாய் மலர்ந்து நெஞ்சின் வெளியில் துடிக்கும் காதல் கவிதைகள், அன்பைக் கடலாக்கி அதன் மத்தியில் நம்மை இருத்துகின்றன! உலகின் ஒட்டுமொத்த தனிமைச் சாகரத்தில் தீங்காதலினும் சிறந்த தோணி எது என்பதை அதன் ஒட்டுமொத்த அழகும் குலையாமல் வழங்குகின்றன!



இத்தொகுப்பில் சிவகாமி, ஒரு ககனப்பறவையென தன் குரலை எழுப்பியிருக்கிறார்.   அடர்த்தியான அதன் அதிர்வுகள் மனித மனங்களை ஊதலென ஊடுருவி, ககனத்தின் எதையும் பொருட்படுத்தாமல் பேரலையென எல்லாவற்றையும் சரித்து, தன்னந்தனியே நீந்துகிறது!  அதன் மெளனமான  குரல், இதயத்தை வாளாய் அறுக்கிறது! ஊர்க்குருவிகளோ கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றன!





குட்டி ரேவதி

சென்னை
27.09.2011