நண்பனுடனான வழக்கமான சண்டை. ஒவ்வொரு சினிமாவின் திரைக்கதையையும் கதாப்பாத்திரச் சித்திரிப்பையும் அக்குவேறாக ஆணி வேறாகப் பிரித்துச் சலிக்கும் முயற்சி. சமீபத்தில் வெளிவந்த ஒவ்வொரு தமிழ்ப்படமும் எங்கள் நாவில் உருண்டோடிப் பற்களால் அரைபட்டுக்கொண்டிருந்தன. நடுத்தர சினிமா என்று ஒரு வகை சினிமா உருவாகிக்கொண்டிருக்கும் போக்கை இன்றைய தமிழ்ச்சினிமா உலகம் நியாயப்படுத்துவதை அவன் அறிந்திருந்தாலும் அது ஒரு சரியான போக்கா என்ற எண்ணம் அவனைக் குழப்பிக்கொண்டிருந்தது. இயக்குநராகும் இலட்சியம் கொண்ட அந்த நண்பன் தினமும் சினிமாவின் ஏதோ ஒரு திசையிலிருந்து தனது உரையாடலை ஆரம்பிப்பான். பல நூறு கிளைகளாகப் பிரிந்து எங்கள் உரையாடல் கிளைத்துக் கொண்டே போய் நாங்கள் ஆசுவாசம் அடையும் பொழுது எங்களின் பொதுவான குணம் என்பது சினிமாவின் மீதான ஈர்ப்பாகவும் அக்கறையாகவும் இருந்ததைக் கண்டுகொண்டோம்.
ஒரு சினிமா என்ன செய்யவேண்டும் என்ற கேள்விக்குப் பதிலைக் கண்டடைந்தால் நல்லசினிமா, கெட்ட சினிமா, நடுத்தர சினிமா, கலை சினிமா, வியாபார சினிமா என்ற வகைகளைப் பற்றிய ஒரு தெளிவுக்கு வரலாம் என்ற எங்கள் முயற்சி தொடர்ந்து கொண்டே இருந்தது. பொதுவாக எனக்கு நடுத்தர சினிமா என்று ஒரு வகை இருக்க முடியாது என்ற அபிப்பராயம் உண்டு. ஓர் இயக்குநர் தனது சினிமாவை வியாபார வகையோடு இணைத்துப் பேசினால் கூட அவரை நம்பலாம். ஏனெனில் அவர் சினிமா என்பதை பொருளாதார ஊடாட்டம் ஆதிக்கம் பெற்ற தளம் என்பதை அறிந்திருக்கிறார் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. அல்லது தான் ஓர் ஒப்புயர்வற்ற இயக்குநர் என்று கூறிக்கொண்டே மசாலாவைத் தராத நேர்மையாளர் என்ற அற்ப சந்தோசமேனும் பிறக்கிறது. ஆனால் நடுத்தர சினிமாவைத் தருகிறேன் என்று சொல்லும் இயக்குநர் தனது அரைவேக்காட்டு நம்பிக்கைகளை வாழ்க்கையின் நெறிகள் என்று காட்சிப்படுத்துவதுடன் மக்களின் மனதைச் சலவை செய்யும் தந்திரத்தையும் தன் வசம் வைத்திருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
நடுத்தர சினிமா என்பது ஒருவர் அக்கலைவடிவத்தின் முழுப்பரிமாணத்தையும் அறியாமல் பிதற்றுவது. அல்லது அதன் முழு வடிவத்தையும் கற்பனைசெய்ய நேரும்போது உண்டாகும் பீதி. அந்த வடிவத்தின் முழுமையை நோக்கி உய்து பெறுவதற்கான எழுச்சியற்ற மடித்தனம். இத்தகைய சினிமா மனிதனுக்குத் தந்தது தட்டையான படிமங்களும் சில மணி நேர புல்லரிப்புகளும். உலகுக்குத் தந்தது இன்னும் கொஞ்சம் குப்பைகள். நினைவுகளின் கழிவை மீண்டும் மீண்டும் செரிக்கச் சொல்லும் நோய்த்தன்மை. பெரும்பாலான இயக்குநர்கள் ஆண்களாக இருக்கும் பட்சத்தில் ஆணாதிக்க ஊடகமாக சினிமா இயங்கும் கட்டத்தில் எல்லா இயக்குநர்களும் பெரியவர்களாக வளர்ந்துவிட்ட பதின்பருவத்து ஆண்களின் விடலைத்தனமும் சித்தாந்தங்களும் உடையவர்களாய் இருக்கின்றனர். அத்தகைய காட்சிகளே இன்று நமது அன்றாட நினைவைப் பீடித்து இருக்கின்றன என்று உறுதியாகச் சொல்லலாம்.
சினிமா மனித மூளையில் ஏற்கெனவே பதிவாகியிருக்கும் நினைவலையை அழித்து பிறிதொரு நினைவைப் பதிக்கிறது. ஆகவே ஒரு சினிமா என்பது மனித மனத்தின் நினைவை அழிக்கும் முயற்சியைச் செவ்வனே செய்யவேண்டும். அவன் மனவெளியில் செருகிக்கொண்ட முள்ளைப் பக்குவமாக எடுத்து வெளியே எறியவேண்டும். அவன் பிரக்ஞைக்கு எட்டாமலேயே இந்தச் செயலைச் செய்யக்கூடியதில் சக்தி வாய்ந்த கலைகளில் முதன்மையானதாக சினிமா உருக்கொண்டிருக்கிறது. இக்காலக்கட்டத்தில் நினைவுகளால் தொடர்வரலாறுகளால் அரசியல் பிழைகளால் சென்றகால மனிதனின் மனக்குரூரங்களால் முதிர்ச்சியற்ற இலக்கியப் பீடிப்புகளால் மனிதமனம் பீடிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பதிவுகளையெல்லாம் அழித்து அதன் இருளையெல்லாம் கிழிக்கும் ஒரு முயற்சியை சினிமா செய்யவேண்டும். ஏனெனில் நேரடியாக மனித உள்ளுணர்வின் பிரதேசத்திற்குள் நுழைந்து இரசவாதங்களைப் புரியும் சக்தி திரைச்சித்திரங்களால் தாம் இந்த நூற்றாண்டில் பெருவாரியாகச் சாத்தியமாகியுள்ளது.
குட்டி ரேவதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக