நம் குரல்

ஒரு சினிமா என்ன செய்யவேண்டும்?



நண்பனுடனான வழக்கமான சண்டை. ஒவ்வொரு சினிமாவின் திரைக்கதையையும் கதாப்பாத்திரச் சித்திரிப்பையும் அக்குவேறாக ஆணி வேறாகப் பிரித்துச் சலிக்கும் முயற்சி. சமீபத்தில் வெளிவந்த ஒவ்வொரு தமிழ்ப்படமும் எங்கள் நாவில் உருண்டோடிப் பற்களால் அரைபட்டுக்கொண்டிருந்தன. நடுத்தர சினிமா என்று ஒரு வகை சினிமா உருவாகிக்கொண்டிருக்கும் போக்கை இன்றைய தமிழ்ச்சினிமா உலகம் நியாயப்படுத்துவதை அவன் அறிந்திருந்தாலும் அது ஒரு சரியான போக்கா என்ற எண்ணம் அவனைக் குழப்பிக்கொண்டிருந்தது. இயக்குநராகும் இலட்சியம் கொண்ட அந்த நண்பன் தினமும் சினிமாவின் ஏதோ ஒரு திசையிலிருந்து தனது உரையாடலை ஆரம்பிப்பான். பல நூறு கிளைகளாகப் பிரிந்து எங்கள் உரையாடல் கிளைத்துக் கொண்டே போய் நாங்கள் ஆசுவாசம் அடையும் பொழுது எங்களின் பொதுவான குணம் என்பது சினிமாவின் மீதான ஈர்ப்பாகவும் அக்கறையாகவும் இருந்ததைக் கண்டுகொண்டோம்.


ஒரு சினிமா என்ன செய்யவேண்டும் என்ற கேள்விக்குப் பதிலைக் கண்டடைந்தால் நல்லசினிமா, கெட்ட சினிமா, நடுத்தர சினிமா, கலை சினிமா, வியாபார சினிமா என்ற வகைகளைப் பற்றிய ஒரு தெளிவுக்கு வரலாம் என்ற எங்கள் முயற்சி தொடர்ந்து கொண்டே இருந்தது. பொதுவாக எனக்கு நடுத்தர சினிமா என்று ஒரு வகை இருக்க முடியாது என்ற அபிப்பராயம் உண்டு. ஓர் இயக்குநர் தனது சினிமாவை வியாபார வகையோடு இணைத்துப் பேசினால் கூட அவரை நம்பலாம். ஏனெனில் அவர் சினிமா என்பதை பொருளாதார ஊடாட்டம் ஆதிக்கம் பெற்ற தளம் என்பதை அறிந்திருக்கிறார் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. அல்லது தான் ஓர் ஒப்புயர்வற்ற இயக்குநர் என்று கூறிக்கொண்டே மசாலாவைத் தராத நேர்மையாளர் என்ற அற்ப சந்தோசமேனும் பிறக்கிறது. ஆனால் நடுத்தர சினிமாவைத் தருகிறேன் என்று சொல்லும் இயக்குநர் தனது அரைவேக்காட்டு நம்பிக்கைகளை வாழ்க்கையின் நெறிகள் என்று காட்சிப்படுத்துவதுடன் மக்களின் மனதைச் சலவை செய்யும் தந்திரத்தையும் தன் வசம் வைத்திருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.


நடுத்தர சினிமா என்பது ஒருவர் அக்கலைவடிவத்தின் முழுப்பரிமாணத்தையும் அறியாமல் பிதற்றுவது. அல்லது அதன் முழு வடிவத்தையும் கற்பனைசெய்ய நேரும்போது உண்டாகும் பீதி. அந்த வடிவத்தின் முழுமையை நோக்கி உய்து பெறுவதற்கான எழுச்சியற்ற மடித்தனம். இத்தகைய சினிமா மனிதனுக்குத் தந்தது தட்டையான படிமங்களும் சில மணி நேர புல்லரிப்புகளும். உலகுக்குத் தந்தது இன்னும் கொஞ்சம் குப்பைகள். நினைவுகளின் கழிவை மீண்டும் மீண்டும் செரிக்கச் சொல்லும் நோய்த்தன்மை. பெரும்பாலான இயக்குநர்கள் ஆண்களாக இருக்கும் பட்சத்தில் ஆணாதிக்க ஊடகமாக சினிமா இயங்கும் கட்டத்தில் எல்லா இயக்குநர்களும் பெரியவர்களாக வளர்ந்துவிட்ட பதின்பருவத்து ஆண்களின் விடலைத்தனமும் சித்தாந்தங்களும் உடையவர்களாய் இருக்கின்றனர். அத்தகைய காட்சிகளே இன்று நமது அன்றாட நினைவைப் பீடித்து இருக்கின்றன என்று உறுதியாகச் சொல்லலாம்.


சினிமா மனித மூளையில் ஏற்கெனவே பதிவாகியிருக்கும் நினைவலையை அழித்து பிறிதொரு நினைவைப் பதிக்கிறது. ஆகவே ஒரு சினிமா என்பது மனித மனத்தின் நினைவை அழிக்கும் முயற்சியைச் செவ்வனே செய்யவேண்டும். அவன் மனவெளியில் செருகிக்கொண்ட முள்ளைப் பக்குவமாக எடுத்து வெளியே எறியவேண்டும். அவன் பிரக்ஞைக்கு எட்டாமலேயே இந்தச் செயலைச் செய்யக்கூடியதில் சக்தி வாய்ந்த கலைகளில் முதன்மையானதாக சினிமா உருக்கொண்டிருக்கிறது. இக்காலக்கட்டத்தில் நினைவுகளால் தொடர்வரலாறுகளால் அரசியல் பிழைகளால் சென்றகால மனிதனின் மனக்குரூரங்களால் முதிர்ச்சியற்ற இலக்கியப் பீடிப்புகளால் மனிதமனம் பீடிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பதிவுகளையெல்லாம் அழித்து அதன் இருளையெல்லாம் கிழிக்கும் ஒரு முயற்சியை சினிமா செய்யவேண்டும். ஏனெனில் நேரடியாக மனித உள்ளுணர்வின் பிரதேசத்திற்குள் நுழைந்து இரசவாதங்களைப் புரியும் சக்தி திரைச்சித்திரங்களால் தாம் இந்த நூற்றாண்டில் பெருவாரியாகச் சாத்தியமாகியுள்ளது.


குட்டி ரேவதி

குட்டி ரேவதியும் பெண்ணியமும்

ஜுலை 2010 கோகுலம் கதிர் இதழில் குட்டி ரேவதியும் பெண்ணியமும் என்ற பொருளில் வெளியான எனது நேர்காணல்:



1.பெண்ணியம் என்றால் என்ன? அதன் உண்மையான அர்த்தம் எதை நோக்கியது?

ஒடுக்கப்பட்ட பெண்களின் உரிமைகளைப் பேசுவதற்கான முனைப்பும் முயற்சியும் வெளிப்பாடும் அதற்கான எழுச்சியும் தாம் பெண்ணியம் என்றாகிறது. ஒடுக்கப்பட்ட என்று நான் குறிப்பிடுவதே கூட, இந்திய நாட்டைப் பொறுத்த வரை தாழ்த்தப்பட்ட ஒரு பெண்ணுக்கு முழுமையும் உரிமை பெற்றுத் தருவதன் அர்த்தத்தையே நோக்கியதாக இருக்க வேண்டும்.

பெண்ணுரிமை என்பது நம் சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்ட எந்த ஒரு பெண்ணுக்கும் அவளின் அடிப்படையான உரிமைகளான கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார விடுதலை, குடும்பம் மற்றும் சமூகத்தில் மரியாதை, பாலியல் விடுதலை, சொத்தில் சம உரிமை, மருத்துவ வசதிகள், பொது வாழ்வில் சமூக அதிகாரம் என எல்லா நிலைகளிலும் எல்லாவற்றையும் பெற்றுத் தருவதே அதன் உண்மையான அர்த்தத்தில் பெண்ணியம் எனப்படும்.

இதுவரை இந்தியாவில் பேசப்பட்டு வரும் பெண்ணியம் ஆதிக்க சாதிப் பெண்கள் தம்மை விட நிலைமையிலும் அதிகாரத்திலும் இருந்த ஆண்களின் அதே அதிகாரத்தைக் கோரிப் பெறுவதற்கான இச்சையாகவும் அதற்கான முறையீடாகவும் தாம் இருந்திருக்கின்றன.

2. அதன் இலக்கை அது அடைந்துள்ளதா?

மேற்குறிப்பிட்ட இப்பெண்ணியம் சாதி ஒழிப்புப் பெண்ணியம் அல்லது தலித் பெண்ணியம் அல்லது பாரதப் பெண்ணியம் என்று வரையறுக்கப்படலாம். இவ்வரையறை தாழ்த்தப்பட்ட பெண்ணின் நிலையிலிருந்து வழங்கப்படுவதாக இருக்கவேண்டும்.

இந்தியாவின் விடுதலைப் போராட்டக் காலத்தை ஒட்டியும் அதற்குப் பின்பும் பார்ப்பனீய பெண்கள் கேட்ட விடுதலை உரிமைகள் என்பவை குடும்பம் மதம் சாதி என்னும் சனாதன வடிவங்களுக்குள்ளும் ஆணாதிக்க வடிவங்களுக்குள்ளும் ஆண் பெற்று வந்த அதே அதிகாரத்தையும் குற்றங்கள் செய்வதற்கான வாய்ப்பையும் கோருவதாகவே இருந்தது. கருத்தியல் வடிவில் இதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் எந்த வேற்றுமையும் இல்லை.

அதற்குப் பின்பாக சமூக அங்கீகாரத்தை பொருளாதார வடிவிலும் அரசியல் வடிவிலும் பெறுவதைக் குறிக்கோளாகக் கொண்ட இடைச்சாதி அதிகாரம் பெற்றிருந்த பெண்களும், தங்களுக்கு ஏற்கென்வே வழங்கப்பட்ட சாதி அதிகாரத்தையும் சுகித்துக் கொண்டே பாலியல் ஒடுக்குமுறையை சகித்துக் கொண்டே மேம்போக்கான கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றைப் பெறுவதற்கான வழிகள் நிலைத்தனவாக இல்லாத பட்சத்தில் அவை அடுத்த தலைமுறையினருக்குக் கூட பொருத்தம் உடையதாக இல்லாமல் போய்விட்டது.

ஆகவே தான் சாதி ஒழிப்புப் பெண்ணியம் என்பதைக் குறிப்பிடுகிறேன். சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் எந்த ஒரு தாழ்த்தப் பட்ட பெண்ணும் உய்வதற்கான வழிகளையும் நிலைத்த விடுதலை உணர்வையும் மானுடத்திற்கான அக்கறையையும் கொண்டிருக்கும்.

3. பெண்ணியத்தின் உச்சபட்ச இலக்கு என்ன?

பெண்ணியத்தின் உச்சபட்ச இலக்கு என்பது ஏற்கெனவே ஒடுக்குமுறைக்கு உள்ளான ஒரு பெண்ணை அவள் நிலையிலிருந்து எழுச்சியுறச் செய்வதும், ஏற்கெனவே அதிகாரத்தைக் குறைந்த அளவிலேனும் தன்னளவில் பெற்ற பெண்கள் தமது அதிகாரத்தை சமூகத்தில் இருக்கும் மற்ற பெண்களின் விடுதலைக்கும் பயன்படுத்துவதாக மாறுவதே உச்சபட்ச பெண்ணியமாக இருக்க முடியும்.

4. பெண்ணியத்திற்கு எதிரானதா ஆண்ணியம்?

ஆணியம் என்பது ஒருவேளை பெண்கள் அதிகாரத்தில் ஆண்களை விட மேல்நிலைக்குச் சென்றால் பேசப்படும் பொருளாக இருக்கலாம். அதற்கு இப்பொழுது சாத்தியமில்லை.

ஒரு தாழ்த்தப் பட்ட ஆணுக்கு மற்ற சாதி அதிகாரமுடைய ஆண்களுக்கு இருக்கும் அதே பிரச்சனைகள் இருப்பதில்லை. அதை விவாதப் பொருளாகக் கொண்டதாக இருக்கலாம் ஆணியம்.

ஆனால் அதற்குச் சாதகமான சூழ்நிலைகளே இங்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஆண்களின் வேலை சமூக நிறுவனங்களான குடும்பம் திருமணம் மதம் சாதி போன்றவற்றை இன்னும் இன்னும் ஆதிக்க வடிவங்களாக மாற்றுவதில் முடிந்துவிடவில்லை.

இந்நிலையில் ஆணியம் என்பது பெண்ணியத்துடன் மோதுவதற்கான வெற்றுப் போட்டி மனநிலையாகவே கொள்ளப்படும்.

5. இதற்கு எதிர்ப்பு வரக்காரணம்?

மேம்போக்கான பெண்ணியக் கருத்தியல் உள்வாங்கப்பட்ட நிலையில் நம் சமூகம் இருக்கிறது. இது என்னவோ பெண்கள் அத்துமீறிய சுதந்திரம் கொண்டிருப்பதாகவும் உரிமைகளையெல்லாம் பெற்றுவிட்டதாகவும் சுட்டுகிற ஒரு தோற்றமாயை. ஏற்கெனவே நான் குறிப்பிட்டது போல இது சமூகத்தில் ஆதிக்கம் அதிகமுடைய சமூகச்சூழலிருந்து வந்த பெண்கள் பெண்ணியத்தைக் கையிலெடுத்தது தான் இதற்குக் காரணம். பெண்ணியப்பாதையில் இன்னும் நெடுவழிப் போகவேண்டியிருக்கிறது.

6. சத்தியமாக பெண்ணியத்தால் பெண்ணினத்திற்கு தீர்வு உண்டா?

சத்தியமாக பெண்ணியத்தால் பெண்ணினத்திற்கு தீர்வு உண்டு. ஆனால் அது ஒட்டுமொத்த பெண்ணினத்தின் மீதான அக்கறையுடனும் எத்தகைய பெண்ணுரிமைகள் உண்மையிலேயே பெண்களுக்கு நிரந்தரமான உண்மையான விடுதலையைப் பெற்றுத் தரக்கூடும் என்ற புரிதலுடனும் பேசப்படவேண்டும். அப்பொழுது தான் அது பெண்ணின அடிமைத் தனத்திற்கான தீர்வாக இருக்கமுடியும்.

7. உடல்மொழி, பெண்மொழி என்கிறார்களே அப்படின்னா என்ன?

உடல் மொழி என்பது நாம் வாழும் சமூகத்தின் அரசியலுடன் நமது உடல் கொண்டிருக்கும் முரண்பாடுகளைப் பேசுதல். பெண்ணின் உடல் என்பது இன்றைய உலகமயமாக்கல் சூழ்நிலையில் ஒரு நுகர்வுப் பொருளாக மாறிவிட்டது. வெறும் பிளாஸ்டிக் தன்மையுடையதாக உயிரற்ற சடப்பொருளாக மாறிவிட்டது. அவ்வாறே பெண்ணின் உடல் என்னும் படிமம் வெவ்வேறு காலகட்டங்களில் வரலாற்றின் வெவ்வேறு படிநிலைகளில் வேறுவேறு பொருளாக மாறிக்கொண்டே இருக்கிறது. முழுமையான சமூக உரிமைக்கும் உட்பட்ட உயிரியாக என்றுமே கருதப்பட்டதில்லை. அதிகாரம் நிலவுடைமை போர் என்பதற்கான மறுப்பும் எதிர்ப்பும் தாம் உடல்மொழியும் பெண்மொழியும். பெண்ணின் உடல் மீதும் மனம் மீதும் சமூக நிறுவனங்களான மதம் சாதி திருமணம் குடும்பம் வழியாக செலுத்தப்படும் வன்முறை எழுப்பிய புழுதிகளும் இரத்தக் கறைகளும் வரலாற்றில் மறைக்கப்பட்டிருக்கின்றன. மறக்கப்பட்டிருக்கின்றன. இதை எதிர்க்கும் விதமாக எழுந்துள்ள பெண்ணிலக்கிய வடிவமே உடல்மொழியும் பெண்மொழியும். பெண்ணின் உடலோ ஆணின் உடலோ உறும் சமூக ஒடுக்குமுறையை இலக்கியத்தின் வழியாக எதிர்ப்பதற்கான ஆயுதமாக இது இருக்கிறது. குறிப்பாக, தலித் பெண்கள் தீண்டாமையின் வழியாக அனுபவிக்கும் உடல் வன்முறையையும் ஒடுக்குமுறையையும் பேசவேண்டிய அரசியல் வடிவம் என்று நவீன இலக்கியம் தனது அடுத்தக் கட்டத்தை அடைந்துள்ளது சிறப்பான விஷயம்.

8. இது வெறும் பம்மாத்து வேலை?

ஒரு சில பெண் எழுத்தாளர்கள் தம் படைப்புக்கான சுதந்திரம் என்பதை சமூகத்தில் இன்னொரு பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ள பாலியல் சுதந்திரத்தை அளவிடாமலும் அதைக் கருத்தில் எடுத்துக்கொள்ளாமலும் தங்கள் படைப்புகளில் உடல்மொழியையும் பெண்மொழியையும் முன்வைக்கும் போது இது வெறும் பம்மாத்து வேலை என்று தோன்றலாம். ஏற்கெனவே சமூகத்தில் பெண்ணியம் என்று ஆதிக்க சாதிப் பெண்களால் முன்வைக்கப்பட்டிருந்த அதே அர்த்தத்தில் அதாவது கட்டற்ற பாலியல் நுகர்ச்சியை மட்டுமே முன்மொழியும் ஒரு பெண்ணியமே அறியப்பட்டிருப்பதாலும் பெண்ணிய எதிர்ப்பாளர்களுக்கும் ஆணாதிக்கவாதிகளுக்கும் இவ்வாறு தோன்றலாம். இது ஒருவகையில் பெண்ணியத்தைக் காயடிக்கும் நிலையே.

பாலியல் விடுதலையைப் பெறுவது மட்டுமே பெண்ணுக்கு வேண்டிய மற்ற உரிமைகளை பெற்றுவிட்டதாகாது. தான் பெற்றுவிட்ட பாலியல் விடுதலை கூட மற்ற பெண்களின் விடுதலையைக் குறிப்பதாகாது. இலக்கியங்கள் பொதுமையைப் பேசவேண்டும். சிறப்பான நிலைகளையும் பேசவேண்டும். அவ்வாறு பேசப்படுகையில் உடல்மொழி வெறுமனே பம்மாத்து வேலை தானே என்ற இது போன்ற கேள்விகளும் எழாது.

ஆணின் உடல் காலந்தோறும் அதிகாரம், வீரம், தந்திரம், சாகசத்தன்மை, வன்முறை, அச்சமின்மை ஊட்டம்பெற்ற உடலாக மரபணுவரை இவ்வுணர்வு பாய்ந்து வளர்ந்த உடலாக வளர்ந்துள்ளது. இனி சமூகவியலின் உச்சமான செயல்பாடு தனது அதிகார உணர்வை சிறுகச் சிறுகவோ ஒட்டுமொத்தமாகவோ அழிப்பதில் தான் வேரூன்றியிருக்கிறது. அவ்வாறே, ஒரு பெண் உடலை பல ஆண்கள் பங்கிடுதலும் ஓர் ஆண் பல பெண்கள் உடல் மீது தனது அதிகாரத்தைச் செலுத்துவதும் ஆண்மையின் தகுதியாகவே கருதப்படுகிறது. பெண்ணின் உடல் உடமையாக்கப்பட வேண்டிய ஒரு நிலமாகவோ அருளாசி வழங்கவேண்டிய ஒரு போலியான தெய்வ நிலையாகவோ கற்பினால் பூட்டிவைத்துப் பேணப்பட வேண்டியதாகவோ கருதப்பட்ட அளவிற்கு சமூகச் சம உரிமை உடையவள் பெண் என்பது கிஞ்சித்தும் கருதப்படவில்லை. மேலும், நவீன உலகின் இயந்திரங்களும் பயன்பாட்டு வடிவங்களும் பெண்ணுடலின் சித்திரிப்பு உடையவையாகவே உருவாக்கப்படுகின்றன. இதன் உள்ளார்த்தம் பெண்ணும் காரைப்போன்று கழிவறைப் பேழைகளைப் போன்று குப்பிகளைப் போன்று நவீனம் பரவிய சடத்தன்மை உடையவர்கள் தாம் என்பதே. பெண்ணுடல் மெளனம் நிறைந்ததாகவும் அதைப் பேணுவதாகவும் ஆக்கப்பட்ட ஓர் வலிய ஏவுகணையைப் போன்ற ஆயுதம். தன்னைத் தானே இயக்கிக்கொள்ள முடியாத ஆயுதம். சமூகச் சிக்கல்கள் பதிந்து பதிந்து படிவமான உடலாகி இருக்கிறாள் பெண். இச்சிக்கல்கள் கவனமாகக் களையப்பட உடல்மொழி அவசியமானது.

9. ஒரு சாதாரண பெண்ணிற்கும் பெண்ணியம்பேசும் பெண்ணிற்கும் என்ன வேறுபாடு?

சாதாரண பெண் என்றும் பெண்ணியம் பேசும் பெண் என்றும் வகைப்படுத்துவது கொஞ்சம் நகைச்சுவையாக இருக்கிறது. இன்று தன்னுடைய நிலையிலிருந்து தன் உரிமைகளுக்காகப் போராடும் எந்தவொரு பெண்ணும் பெண்ணியம் பேசும் பெண்ணே. தன் மீது சுமத்தப்படும் வன்முறையை தனது விதியே என்றும் பொறுப்பு என்றும் ஏற்றுக்கொள்ளும் பெண்கள் வேண்டுமானால் சாதாரண பெண்ணாக அடையாளம் பெறலாம். ஆனால் இன்று பெண்கள் பொதுவாகவே அப்படி இருப்பதில்லை. தங்கள் இருப்புக்கு வந்த நெருக்கடியாலும் தாங்கள் இயல்பாகவே தமது உரிமைகள் குறித்த விடுதலை உணர்வைக் கொண்டிருப்பதாலும் எல்லா இடத்திலிருந்தும் பெண்கள் தம்தம் உரிமைகளை வென்றெடுப்பதில் தீவிரமாயிருக்கின்றனர்.

10. இதை எப்படி அணுகுவது?

பெண்ணியம் என்பது சமூகத்தின் கடைநிலைப் பெண்ணின் நிலையிலிருந்து அணுகப்படவேண்டும். அவளுக்கு அனுமதிக்கப்பட்ட உரிமைகளையே அளவுகோல்களாக கொள்ள வேண்டும். அவளுக்கு அளிக்கப்படும் உரிமைகளும் அதிகாரபலமுமே மற்ற பெண்களின் ஆண்களின் ஏன் ஒட்டுமொத்த மானுடத்திற்கானதாயும் இருக்கும். பெண்ணியம் என்பது ஏதோ பிஸ்கோத்துகள் போல இரு தரப்பாற்கும் சமமாகப் பிரிக்கப்படவேண்டியது அன்று. எங்கு உணவிற்கான வறுமை இருக்கிறதோ அங்கு அதிகமான பங்கு கொடுக்கப்படுவது தான் சமத்துவத்திற்கானதாய் இருக்கமுடியும். இத்தகைய பெண் சமத்துவம் பேசுவோராய் நாம் பரிணமிக்க வேண்டிய காலகட்டம் இது என்பதை உணரவேண்டும்.

குட்டி ரேவதி

பேட்டி கண்டவர்: நட்சத்திரன்

நன்றி: ‘கோகுலம் கதிர்’ இதழ்

இன்று எழுத ஏதுமில்லை



செய்தித்தாளையோ எந்தவொரு வலைப்பதிவையோ வாசிக்காதிருந்தால் அன்றைய நாள் உறக்கத்தின் கனவில் வந்து போன காட்சி தெளிவான ஓவியமாய் விழியில் படிந்திருக்கிறது. மீண்டும் மீண்டும் அதை வண்ணம் தீட்டிப் பார்க்க முழுநாளும் போதவில்லை. அதற்குள் அடுத்த கனவு வந்து கவிகிறது. ஒரு பெரிய வனத்தை எனதாக்கிக் கொண்ட பாவனையில் அமைதியாக இருக்கிறேன். என் மூச்சு எனக்கே கேட்பது போல் சப்தமாக ஒலிக்கிறது. வம்புகளுடன் வார்த்தைகளில் திராவக எரிச்சல்களுடன் தோழிகள் இப்பொழுதெல்லாம் என் வாசல் வருவதில்லை என்பது மிகுந்த மனஅமைதியைத் தருகிறது. என் முகவரிக்கோ என் தொலைபேசிக்கோ எந்தவொரு அழைப்பும் வராததும் கூட இன்னும் என் தனிமையை முழுமை செய்யப் போதுமானவையாக இருக்கின்றன. புகழ்ச்சிகளுக்கு மயங்கிய வண்டுகளின் ரீங்காரம் காதுக்கு இரைச்சலாய் இருக்கிறது. ஆகவே விழாக்கூட்டங்கள் அலுப்பூட்டுகின்றன. உணர்ச்சிவெறியில் நரம்பு முறுக்கேறிய முயக்கங்களின் உச்சக்கட்டம் போலவே வாழ்வின் எல்லா தருணங்களையும் எடுத்துக் கொள்ளும் பெண்கள் பேசிப்பேசி ஓய்ந்து போகின்றனர். ஆண்களோ அது ஒரு புதிய மொழி போல புரிதலுக்கு அப்பாற்பட்டதாய் இருப்பதைக் கூட காட்டிக்கொள்ளாத ஒரு வன்மம் அவர்களின் தலையில் மூளையாக அமர்ந்திருக்கிறது.



செம்மொழி மாநாடு சீக்கிரம் முடிந்தால் பரவாயில்லை என்பதாய்ப் பேசிக்கொண்டிருந்தான் சூரியா. எனக்கென்னவோ கலைஞரைப் போலவே தமிழ்நாட்டில் எல்லா அறிவாளிகளும் இயங்கத் தொடங்கிவிட்டதாகத் தோன்றுகிறது. வலைப்பதிவுகளின் பக்கங்கள், சுயவிளம்பர மோகப் பலகைகளாக மாறியதில் எல்லோரின் புகைப்படமுகங்களும் அழிக்க முடியாமல் நினைவறையில் உறைந்திருக்கின்றன. கணினிக்குள் இப்படி ஓர் ஆவியுலகம் சாத்தியமாக முடியும் என்பது நாம் அறிந்தது தான். மனித மூளையின் வடிவமைப்பை ஏந்திய கணினிக்குள் இப்படியான வன்ம உலகம் தான் பிறக்க முடியும் போலும். வேகமாய் என் வலைப்பதிவின் ஜன்னலைத் திறந்து என் வானத்தின் தட்பவெப்பநிலையை அறிந்து கொண்டு மூடிவிடுகிறேன். இதுமாதிரியான சந்தர்ப்பங்களில் தான் நூல்களுக்குள் இமையாமல் விழித்திருக்கும் கவிஞர்களையெல்லாம் தேடிப்பிடித்து மொழிபெயர்க்கிறேன். தனது மனதின் வன்மங்களை தனக்குத் தானே வெல்ல அவர்கள் எடுத்த முயற்சிகள் கவிதைகளாக மலர்ந்திருப்பது பரவசம் தருகிறது.



உடலும் மனமும் ஒன்றொடொன்று ஒட்டாத சங்கடத்தை எந்தப் பாலியல் உறவும் தீர்ப்பதில்லை. உடலையும் மனதையும் தைக்கும் வேலையை அன்றாட வாசிப்புப் பணிகள் வழியாக முயன்றிருக்கிறேன். எத்தனை ஆயிரம் ஆண்களின் உடலை இட்டு நிரப்பினாலும் நிரம்பாதது என்னுடல் என்பது எனக்கு மறைமுகமான மகிழ்ச்சியைத் தான் தருகிறது. பெரிதினும் பெரிதான ஒரு மனோவெளியைக் கவிதை வழியாகத் தான் விரிக்கமுடிகிறது. கொக்கரிக்கும் சப்தங்கள் எழுத்துகளாகும் ஒரு காலத்தில் ஜோ டி குரூஸின் பண்பு என்பது ஓர் இலக்கியப் பட்டம். இதை யாரும் தனக்குத் தானே தந்துகொள்ள முடியாது என்றும் தோன்றுகிறது.



ஏற்கெனவே மனித வன்மங்கள் எல்லாம் யுத்தங்களாக நடந்தேறிவிட்ட பின்பு எந்தப் போரை இவர்கள் எதிர்க்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. வன்மத்தை மூன்றுவேளை உணவாகத் தின்பவர்கள் வைக்கம் முகம்மது பஷீரை வாசித்து தங்கள் வயிற்றுக் குன்மத்தைச் சரிசெய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வன்மங்கள் குன்மத்தைத் தான் உருவாக்கும், படைப்புகளை அல்ல, சந்திரா! படைப்பு புரட்சி சமூகமாற்றம் குறித்த இவர்களின் விவாதங்கள் கிச்சுகிச்சு மூட்டுவதாகத் தோன்றுகிறது. இவர்களின் மடமையை எண்ணி நகைப்பது இது கடைசி முறையன்று!



குட்டி ரேவதி