நம் குரல்

அகத்திணை - 3





இக்கோடைக்காலம் வேறுவேறு மாழ்பழ வகைகளின் வித்தியாசமான சுவைகளால் நிறைந்திருந்தது. அதிலும் ஹிமாம் பசந்த் பழத்தின் சுவைக்கும் மணத்திற்கும் கோடைக்காலங்களை எழுதித் தீர்க்கலாம்.


வீட்டிற்கு வேலைக்கு வரும் சந்தியா தினமும் தனது குடும்பத்தின் கண்ணீர் வற்றாத சோகக் கதைகளை பக்கம் பக்கமாகச் சொல்லி மாய்கிறாள். ஒரு நாளைக்கு எப்படியும் குறைந்தது நான்கு வீடுகளிலாவது வேலை செய்கிறாள். ஒரே பிரச்சனையின் வேறு வேறு முகங்கள் என ஒவ்வொரு வீட்டிற்கும் ஒதுக்கி வைத்திருப்பாள் போலும். மறுநாள் காலையில் மிகவும் உற்சாகமாயிருப்பாள்.



எழுதும் பொழுது மடிக்கணினியின் அருகில், நான் எழுதும் விஷயத்தின் உண்மையின் உருவம் வந்தமர்ந்து என்னை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது, அதன் ரசத்தை இழக்காமல் மரியாதையைக் குலைக்காமல் அழகைச் சிதைக்காமல் எழுதுகிறேனாவென்று. நான் அதற்கு அடங்கிப் போகிறேன்.



என்னைப் பொறுத்தவரை அரசியல் நிகழ்வுகள் தமது சுவாரசியங்களை இழந்து விட்டன. காரணங்களில் ஒன்று, தினம்தினம் செய்தித்தாள்களின் இடத்தை நிரப்பத் துடிக்கும் அவற்றின் வேட்கை. இரண்டு, கூட்டிக்கழித்துப் பார்த்தால் தென்படும், அரசியல் அதிகாரத்திற்கென மனித உறவுகள் நெய்யும் போலியான தற்காலிகமான புனைவுகள். மூன்று, என்ன தான் இந்த அரசின் கட்டங்களுக்குள் நகர்த்தப்படும் காய்கள்தாம் நாம் என்றாலும் நமது சுயசிந்தனைகளை இவை விலைக்கு வாங்க முடியாது எனும் தன்னம்பிக்கை.



என் எழுத்தின் வெளிக்குள்ளும் மழை பெய்யத் தொடங்கிவிட்டதை உணர்கிறேன். பூமியின் கருணை இது! இந்த முறை கோடையின் வதை எத்தனை முதியவர்களை ஈவு இரக்கமில்லாமல் கொன்றிருக்குமோ? அப்படிக் காய்ந்தது வெயிலின் வானம் மூர்க்கமாய்.



லூயி புனுவலின் இறுதி சுவாசம் என் பையை நீண்ட நாட்களாக விருப்பீர்ப்பத்துடன் அடைத்துக் கொண்டிருக்கிறது. சா. தேவதாஸின் மொழி பெயர்ப்பு. கொஞ்சம் அவசரமான பதிப்போ என்று தோன்றினாலும் லூயி புனுவல் வழங்கும் அவருடைய உலகத்தின் நேர்மையும் மென்மையான அணுகுமுறையும் நம் எல்லோரையும் நமது வாழ்க்கையை எச்சரிக்கையுடன் அணுகத் தூண்டும்.



என்னை பெண்களே விமர்சிக்கும் பணியைத் தான் மீண்டும் மீண்டும் செய்ய விரும்புகிறேன். ஏனெனில் அவர்கள் தம்மை பெண்ணாக ஒட்டுமொத்தப் பெண்களின் பிரக்ஞையாக பரந்த பிரபஞ்சத்தில் தமது கடமையாக எவ்வளவுக்கு உணர்ந்திருக்கிறார்கள் என்பதன் ஆழமும் அர்த்தமும் அப்பொழுது தான் வெளிப்படுகிறது. எதிர்மறையான குணாதிசயங்களுடன் அவர்கள் வெளிப்பட்டாலும் கூட. ஆண்களோ பெண்களை விமர்சிப்பதே இல்லை; அவதூறு செய்கிறார்கள்.



ஒவ்வொரு முறையும் தினப்படி வாழ்க்கையின் அலுப்பூட்டும் காலகட்டத்தைக் கடக்க நேரும் போதெல்லாம் ‘புது விசைஇதழை முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை விரும்பி வாசித்து எழுவேன். அது தன்னில் இடம்பெறும் படைப்பு ஒவ்வொன்றின் வழியாகவும் ஒரு புதிய திசையைக் காட்டுகிறது.


என்னை நிறைய நதிகள் கடந்து போகின்றன. எப்பொழுதாவது தான் ஏதோ ஒரு நதியில் இறங்கி கால் நனைக்க விரும்புகிறேன். சிலவற்றில் மூழ்கி எழ.



குட்டி ரேவதி