நவீனக்கவிதைக்கான விமர்சனக்குரலை எப்படி, எங்கே தொடங்குவது?
அதற்கு இலக்கிய அரசியல் தெரியவேண்டாமா?
அது எப்பொழுதும் ஒரு பக்கச்சாய்வுடன் இயங்கியதை நவீனக்கவிஞர்கள் அறியவேண்டாமா?
அறியாமையுடன், தன் சுயம் சார்ந்த சொற்ப, அற்ப உணர்ச்சிகளைச் சொறிந்து கொடுக்கும் சொற்கள் மட்டுமே கவிதைக்குப் போதுமா?
அற்பமான உணர்ச்சிகளிலிருந்து மானுடத்திற்குப் பொதுவான உணர்வெழுச்சிகள் நோக்கி தனிமனிதனை உந்திச்செல்லும் நெம்புகோல் இல்லையா, கவிதை?
தமிழ்க்கவிதையியல் அறிய வேண்டாமா?
காலந்தோறும் நவீனக்கவிதையின் அகக்குரல் சமூக நீதிக்காகத் தன் உயிர்பலி ஈந்ததை நாம் மறைக்க முடியுமா?
கவிதை என்ற பெயரில் சாதி எழுத்தை எழுதிக்குவித்த சொற்களில் வீசும் முடை நாற்றத்தை இல்லை என இயலுமா?
உரத்த குரலால் கவிதை, கவிதை எனப்பட்டவை எல்லாம் காலத்தின் சுழிப்பில் இன்று செத்துப் போனது ஏன் என்று கேள்வி எழுப்பினோமா? உரத்த குரல்களால், உரையாடல் சாத்தியப்படாமல் போனதை மறுப்பீர்களா?
கவிதையைத் தொங்கிக்கொண்டிருக்கும் இரும்புக்குண்டுகளாய் நாம் ஆனக்காலத்தில் நவீனக்கவிதையின் வரையறை தான் என்ன?
எல்லா வகையிலும் கவிதையாக இருக்க முடிந்த ஒன்று, சமூகத்தில் அன்று செய்யமுடிந்ததை ஏன் இன்றைய நவீனக்கவிதை செய்யவில்லை? குருதியில் தோய்ந்த சொற்களைச் சிறந்த கவிதைகள் என்று ஏன் கொண்டாடுகிறோம்?
ஒரு சிம்மாசனத்திற்காகத்தானே 'நவீனக்கவிஞர்' பட்டம் தேவைப்படுகிறது, இல்லையா?
சிந்தனையின் வெளியில் தக்கையாக மிதக்கும் சொற்களின் பயணம் மட்டுமே கவிதை என்பதா?
குட்டி ரேவதி