நம் குரல்

அம்பேத்கரும் காந்தியும் அருந்ததிராயும்


அம்பேத்கரும் காந்தியும் எதிரெதிராகச் செயல்பட்டார்கள் என்பது நாடு அறிந்தது.
ஒருங்கிணைந்த இந்தியாவிற்கான தேவைகளையும் திட்டங்களையும் அம்பேத்கர் வகுத்தும் செயல்பட்டும் வந்தார்.
காந்தியை மகாத்மா, தேசப்பிதா என்று சொல்லுமிடத்து மட்டுமே இந்தியாவின் அடையாளமாக ஆக்கப்பட்டிருக்கிறார். உண்மையில், அதற்கான எந்தத்தகுதியும் காந்திக்கு இல்லை.
குறிப்பாக, இந்துக்கள் அல்லாத தாழ்த்தப்பட்டவர்கள் குறித்த, பாரபட்சமில்லாத புரிதலை காந்தியால் இறுதிவரை ஏற்கவே முடியவில்லை. அவர்களையும் இந்துமதக் கட்டத்தில் கொண்டுவந்து வருணாசிரம தர்மத்தை நிலைநிறுத்துவதற்கே போராடினார்.
அம்பேத்கரையும் காந்தியையும் ஒரே கோட்டில் வைத்துப் புரிந்துகொள்வது கூட மிகவும் அபத்தமானது.
இந்திய அறிவுசீவிகள், அல்லது இந்தியா உடைந்துவிடப்போகிறது என்ற போலியான பதட்டத்தைத் தாமே உருவாக்கி அதன் வெப்பத்தில் குளிர்காய்பவர்கள் முதலாயும் இறுதிவரையிலும் தொடர்ந்து செய்வது, அம்பேத்கரையும் காந்தியையும் ஒரே கோட்டில் வைத்து விவாதிப்பதும், அடுத்தடுத்து வைத்துப் பொருள் விளக்கம் கொடுப்பதும்.
அருந்ததிராய் 'சாதி ஒழிப்பு' நூலில் முன்வைத்திருந்த எழுத்திலும், இத்தகைய பதட்டத்தை உணரமுடிந்தது. காந்தியைச் சொல்லாது அம்பேத்கரை விளக்கினால், தான் தனிமைப்படுத்தப்பட்டுவிடுவோம், தீண்டத்தகாத கருத்தியல்வாதியாகிவிடுவோம் என்ற திருகுமனநிலை அருந்ததிராய்க்கும் இருந்தது.
காந்தியின் திருகுமனநிலைகள், உண்மையில் இந்துத்துவ மதவெறியிலிருந்து உருவாகுபவை. தொடர்ந்து இதற்கு ஆதாரமான விடயங்களை தரவுகளுடன் முன் வைப்பது என்று இருக்கிறேன்.
உண்மையில், இந்தியாவை உடைக்கமுடியாது. இந்தியாவை உடைப்பது என்றால், அதைச் செய்வது இந்துத்துவ சக்திகளாக இருக்கும் அல்லது, செயலிலும் சொல்லிலும் சிந்தனையிலும் இந்துமத வாதத்தை முன்வைப்பவர்களாக இருக்கும்.

குட்டி ரேவதி

நண்பர்களே, ஆண்கள் தினமாம் இன்று!


வாழ்க்கையில் வெவ்வேறு நற்பங்குகளை ஏற்ற எல்லா ஆண்களுக்கும், ஆண்களாக இருக்கும் பொறுப்பேற்றமைக்கும் என் வாழ்த்துகள்.

உண்மையில், இத்தகைய இறுக்கமான சமூக அமைப்பில், ஆளுமையும் பண்பும் குன்றாத ஓர் ஆணாக இருப்பது என்பது சாதாரண விடயமே இல்லை.

தனித்தன்மையை எப்படிக்காப்பாற்றுவது என்பதற்கும் எங்கே சமூகப்பொறுப்பு எடுப்பது என்பதற்கும் இடையே மெல்லிய நூலிழை தான் விடயம்.

இதில் குழம்பிப்போன பல ஆண்களை நம் அன்றாட வாழ்விலும் பொதுவெளியிலும் காண நேரிட்டாலும், மோசமான 'ஆண்' என்று யாருமே இல்லை. அல்லது, அப்படியான மோசமான ஆண்கள் என் வாழ்க்கையில் நிகழ்ந்ததில்லை.

ஒருவேளை, அப்படியான ஆண்களாகத் தம்மைத்தாமே வரிந்துகொண்டவர்கள் கூட, நேர்மையான வாழ்க்கையை மேற்கொள்வதில் உண்டாகும் நம் பயணத்தின் தகிப்பு தாங்காமல் தாமே உதிர்ந்தும் போய்விடுவார்கள் என்பது என் நம்பிக்கை.

பால்நிலை சமத்துவம் என்பதும் ஆண்களுக்கு எதிரானது அன்று. அப்படி நம்பிய ஆண்கள், இயல்பாகவே 'பெண் வெறுப்பை' தம் தேர்வாகக் கொண்டதும் ஒரு கெடுவாய்ப்பே.

ஆனால், இந்த எழுத்தின் பொதுவாழ்வில் அருமையான ஆண்களை எல்லாம் காண நேர்ந்திருக்கிறது, என்பதே நான் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புவதும்.

தான் பிறந்த குடும்பம் என்பதை மட்டுமே ஒரு சமூகப்பாதுகாப்பிற்கான அடையாளமாகக் கருதியிருந்தால், நல்ல ஆண்களை நான் கண்டிருக்க முடியாது.

குடும்பத்திலிருந்து பொது வாழ்வு நோக்கி நகர, நகர வன்முறையை ஓர் அடையாளமாகக் கருதாத ஆண்களையும், சமூகப்பொறுப்பான ஆண்களையும், ஆளுமையான ஆண்களையும் இயல்பாகவே சந்திக்க நேர்கிறது.


நீங்கள் அப்படியிருந்தமைக்காகவும், இருப்பதற்குத் தம்மைத்தாமே பணித்தமைக்காகவும் உங்கள் எல்லோருக்கும் என் நல்வாழ்த்துகள்!

குட்டி ரேவதி

உண்மையான முத்தப்போராட்டம் எப்படி இருக்கவேண்டும்?நான் முத்தங்களுக்கு எதிரானவள் இல்லை. பகிரங்கப் பொதுவெளி முத்தங்களும் வரவேற்கப்படவேண்டியவையே. 
பொதுவெளியில், கத்திக்குத்தும் வன்முறையும்  எல்லா ஊடகங்களாலும் தீவிரமாக விதைக்கப்படும் இக்காலக்கட்டத்தில், முத்தம் என்பது அன்பை வெளிப்படுத்தும் ஒரு சனநாயக அடையாளம்.

பொதுவெளி முத்தங்கள் அவசியமே.

ஆனால், போராட்டங்களை எப்படிக் கட்டமைக்கவேண்டும் என்பதில் இந்திய அளவில் நமக்கான பெரிய படிப்பினைகள் இருக்கின்றன.

முத்தப்போராட்டம், நிர்வாணப்போராட்டம், அரைநிர்வாணப்போராட்டம் என்பவை எல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கின்றன. புரட்சிகரமானவை போல் தான் இருக்கின்றன. ஆனால், நீண்ட கால அடிப்படையில் நமக்கு எந்த உரிமைகளையும் இவை பெற்றுத்தராது.  ஒரு முத்தத்தையும் கூட உரிமையாகப் பெற்றுத்தராது. காரணம், இவை எல்லாம் வெறும்  'எதிர்வினைப்' போராட்டங்கள் மட்டுமே. பதிலுக்குப் பதில் போராட்டங்களே. 

உண்மையில் போராட்டங்கள் என்றால், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மீனவப்பெண்களின் போராட்டம், மணிப்பூர் பெண்களின் நிர்வாணப்போராட்டம், இரோம் ஷர்மிளாவின் போராட்டம், அற்புதம் அம்மாளின் போராட்டம் போன்று இந்தியாவின் ஒடுக்குமுறை, மதவாதம், சாதிய அமைப்பு, சமூக அமைப்பு போன்றவற்றின் அடித்தளங்கள் அறிந்த போராட்ட வடிவமைப்பைக் கொண்டிருக்கவேண்டும்.

என்னதான் பொதுவெளியில் முத்தங்களுக்காகப் போராடினாலும், நாம் இப்பொழுது போராடுவது போல் போராடினால் நீண்ட கால லட்சியத்தில் 'பொதுவெளி முத்தங்களை',  மனித உரிமையின் அடிப்படையான ஒரு விடயமாகக் கூட பெறமுடியாது.

நிர்பயாவுக்கான போராட்டம், 'பெண்கள் மீதான பாலியல் வன்முறை' குறித்த எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அது ஒரு தனிப்பெண்ணுக்கான போராட்டமாகவே சுருங்கிப் போனது. 

அதுபோலவும், இதுவும் ஒரு மேம்போக்கான போராட்டவடிவமாகவே இருக்கும்.

இது இந்துத்துவ பெண் - ஆண் பால் இடைவெளியை அகலப்படுத்தும் நோக்கத்திற்கு எதிரான போராட்டம் என்று வாதிடுவோர்களே கூட, இந்துப்புராணங்களையும் அது சார்ந்த படைப்புகளையும், எழுத்தாளர்களையும் கடுமையாக ஆதரிக்கும் மனநிலையும் இங்கே தான் இருக்கிறது. 
அத்தகைய படைப்புகளையும் அதை எழுதும் படைப்பாளிகளையும் விட, இத்தகைய  "இரண்டுங்கெட்டான மனநிலை" கொண்ட போராளிகள் தான் சமூகத்தில் ஆபத்தானவர்கள்.

உறுதியான திட்டங்களும் நோக்கங்களும் கொண்டு போராடுபவர்கள் நிலைத்தப் போராட்ட வடிவங்களைக் கொண்டிருக்கின்றனர். 
தொடர்ந்து நின்றும், உட்கார்ந்தும், நடந்தும் விடாப்பிடியாகப் பிடிவாதமாகப் போராடுகிறார்கள். 
அவர்கள், அவ்வப்பொழுதான உரிமைகளுக்காகவும், போராளி அடையாளங்களுக்காகவும் மட்டுமே போராடுவதில்லை.

அவ்வகையில் பார்த்தால், இன்று உண்மையில் மனித உரிமைகளுக்காகப் போராடும் இயக்கங்கள் எல்லாம் நீண்டகாலத்திட்டத்தை இலட்சியமாகக் கொண்டும், அடிப்படையான சமூக அமைப்பின் ஒடுக்குமுறைகளுடன் எந்த சமரசமும் கொள்ளாமலும் இருக்கின்றன.

மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்.

நான் முத்தங்களுக்கு எதிரானவள் இல்லை. பகிரங்கப் பொதுவெளி முத்தங்களும் வரவேற்கப்படவேண்டியவையே. 

என் கவிதைகள் எங்கும் முத்தங்கள் இறைந்து கிடக்கின்றன.

ஆனால், பொதுவெளி முத்தங்களை சட்டப்பூர்வமான மனித உரிமையாக்க, மதவாதத்தை கடுமையாக எதிர்க்கவேண்டும். அதிலும், இந்துமதவாதத்தைத் தகர்க்கவேண்டும். 

இப்பொழுதைய போராட்டமுறை, நோக்கத்தை நீர்த்துப்போகச்செய்யும். ஒரு முத்தத்தையும் வழங்கமுடியாது.  வேடிக்கை பார்க்கலாம்.குட்டி ரேவதி

கதை எவருடையதோ, அவருடையதே திரைப்படமும்!நான் அறிந்த தயாரிப்பு நிறுவனங்களும், நட்பு நிலை தயாரிப்பு நிறுவனங்களும் கூட,
படம் தயாரிக்கக் கதைகளும், அதைச் சொல்லும் இயக்குநர்களும் வேண்டுமென்கிறார்கள்.

இயக்குநர்களும், கதையாசிரியர்களும் நாம் அறிந்த நிறுவனங்களுக்கே கூட கதை சொல்ல முன்வருவதில்லை.
அவர்கள் சொல்லும் ஒரே காரணம், கதையைக் கேட்டுவிட்டு,
கதை பிடிக்கவில்லை அல்லது வேறு காரணங்கள் சொல்லிவிட்டு, பின் அதே கதையைப் படம் எடுக்கும் 
திரைத்துறையின் 'வியாபாரத் தந்திரத்தை'த் தம்மால் சமாளிக்கமுடியாது என்பது தான்.

நம் வாழ்க்கையைய் திருடியது போக, நம் மக்களின் கதைகளையும் திருடி, நம் நாயகர்களாக மாறும் 'திடீர் நாயகர்களால்' மெல்ல மெல்ல நம் சமூகத்தின் நீதியும் கொல்லப்படுகிறது.
இவர்கள் நாயகர்களாக மாற, நம் கதைகளா?
நம் திரைத்துறையின் 'கதைப்பஞ்சமும்', 'ஏமாற்றுவித்தையும்', பணம், புகழ் மற்றும் அதிகாரத்தின் மீதான பேராசையில் எழுவது.
பணத்தை வைத்து மொத்த திரைத்துறையையும் அசைத்துவிட முடியும், 
ரசிகர் கூட்டத்தை வைத்து எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்ள முடியும் 
என்ற கட்டப்பஞ்சாயத்து மனநிலை, திரைத்துறையையும் காவுகொடுக்கச்செய்துவிடுமோ 
என்ற எண்ணம் தோன்றுகிறது.

உண்மையில், மொத்த இயக்குநர்களும், உதவி இயக்குநர்களும் இதற்கு எதிராக வெகுண்டெழுந்து கண்டனம் தெரிவிக்க வேண்டும். 
இந்நிலை, இனியும் தொடராமல் இருக்கும்படியான, 
வழக்கத்தைத் திரைத்துறையில் கொண்டுவரவேண்டும்.

கதையைத் திருடி, படம் செய்து வெளிச்சத்தில் பதுங்கிக்கொள்ளல், மக்கள் துறையான திரைத்துறையைச் சூறையாடுதலாகும்.
சொந்தமாக ஒரு கதையை உருவாக்கமுடியாதவர்கள், திருடிப்படம் எடுக்கும் கலை வறட்சி உள்ளவர்கள், ஏன் படம் எடுக்கவேண்டும்?
கதை இல்லாமல், மற்றவர்களின் கதையைத் தாம் படம் எடுக்கப் பயன்படுத்திக்கொள்ளல், முதுகெலும்பு இல்லாமை.
கதை எவருடையதோ, அவருடையதே திரைப்படமும்!குட்டி ரேவதி

பறை என்பது விழிப்பும் எழுச்சியும்!


'பறை' என்பது கடந்த நூற்றாண்டுகளின் ஒட்டுமொத்த இருளையும் தட்டி எழுப்பிய ஒரு பெருஞ்சத்தம்.பாடிப் பாடித் தெருவெலாம் அம்பேத்கரை எடுத்துச் செல்ல உதவிய பாட்டுக்கருவி.ஓர் அடையாளம், ஆயுதம், இணக்கம், அடங்கமறுத்தல்.ஊழலையும் ஆதிக்கத்தையும் வெளிச்சப்படுத்துவோர் கூட தத்தம் சாதிக்கடியில் ஒளிந்து கொள்ளும் கோழைத்தனத்தை அம்பலப்படுத்தும் வெளிச்சம்.பறை என்பது விழிப்பும் எழுச்சியும்.


இந்துமதத்தீண்டாமையைக் கண்டிக்கும் ஒரே அடிக்கோல்.

பறை என்பது பல நூறு ஆண்டுகளின் சப்தமின்மையை, குரல்நெரிப்பை உணர்த்தக் கிடைத்த ஒரே கருவி.உடலின், உள்ளத்தின், அடக்குமுறைக் காலங்களின் ஒட்டுமொத்தக் கொந்தளிப்பின் நெடிய அதிர்வு.பறை என்பது அம்பேத்கர். பறை என்பது தமிழ் இசையும். பறை என்பது சொல், தெளிவாய்ச் சொல், மீண்டும் சொல், அதையே சொல் என்பதுவும்.


எங்கே 'பறையை'த் தடைசெய்யுங்கள் பார்க்கலாம்!


குட்டி ரேவதிநூல்களை வாசித்தல்!நூல்களை வாசித்தல் என்பது தான் மனிதப் பழக்கங்களிலேயே மிகவும் சிறந்த பழக்கமாகத் தோன்றுகிறது.
நூல்களுக்கு சம்பந்தமே இல்லாத, எந்த வேலையைச் செய்பவராக இருந்தாலும், நூல்களை வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பது அவசியம்.

இந்த இணைய யுகத்தில், எல்லா அரசியல், சமூகப்பிரச்சனைகளும் அவற்றின் விபரீதங்களும் விளைவுகளும் அடுத்தடுத்த கணங்களிலேயே நம் முன் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன.
இதை அடிப்படையாகப் புரிந்து கொள்ள, சகமனிதர்களைவிட, நூல்களாலேயே உதவமுடியும். அதிலும், தத்தம் ஆளுமை, சமூகச்சூழல், நெருக்கடி, நோக்கம் ஆகியவற்றைக் கருத்தில் வைத்து நூல்களைத் தேடி வாசிக்கும்பொழுது, நமக்குள் இருக்கும் தனிமனிதர் ஒரு சமூகமனிதராக மாறுவதை உணரமுடியும்.
நூல்களை எழுதுதல், விற்றல், உருவாக்குதல், காட்சிப்பொருளாக வைத்தல் எல்லாவற்றையும் விட வாசித்தல் உயர்ந்தது, முக்கியமானது.
ஒவ்வொருவரும் நூல் வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்கிக்கொள்வதுடன், தம் வீட்டினரும் நூல் வாசிப்பதை உறுதிசெய்யவேண்டியது, ஆவன செய்யவேண்டியது மிகவும் மகிழ்ச்சியான விடயமாகும்.
மனிதச்சிந்தனையின் எழுச்சி தான் காலந்தோறும் நூல்களாக உருவம் பெறுகிறது. சென்ற நூற்றாண்டுகளின் நூல்களும் சிந்தனைகளும் அது தொடர்பான திறமைகளும் இல்லையென்றால், மனிதக்கூட்டம் இன்றைய பல சாதனைகளையும் பண்புநலன்களையும் தக்கவைத்திருக்கமுடியாது!


குட்டி ரேவதி

இவர்களால் ஆடுகளைத்தான் பலியிடமுடியும். சிங்கங்களை அல்ல - கலையும் அரசியலும்!
'எது கலை?' என்பதற்கான பதில், ஊடகங்களில் அதிகாரம் நிறைந்தவர்களாலேயே எப்பொழுதும் நிறுவப்படுகிறது என்பது புதிது அன்று.

அதிலும், குறுகிய அரசியல் பார்வைகளும், அதற்கான சனநாயக ஊடகங்களின் வாய்ப்பும் பெருகிவிட்ட நெருக்கடிக்கிடையில், 'நம் படைப்பு கலையே!' என்பதை வாதிடுவதற்கான வாய்ப்பும் மெளனமாகிவிடுகின்றது.
எங்கெங்கும் சாதியின் வலைகள் பின்னி இறுகிக்கிடக்கின்றன. எல்லோரின் கழுத்துகளையும் நெரிக்கின்றன. பாரபட்சமும், தான் விரும்பியதை முன்மொழிந்து அதையே ஆதரிப்பது என்ற அதிகாரமும் காலங்காலமாய் இருந்து வரும் கடைந்தெடுத்த சாதியமுறைகள்.
ஒடுக்கப்பட்டவர்களுக்கான கலைவடிவம் கூர்மையடையும் பொழுதெல்லாம் கலைத்துவிடுவதும் இவர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு.
எல்லா இயக்கங்களும் பாதைகளும் இறுகி நிறுவனமாகிப் போன பேனர்களாகிவிட்டன.
தனிமனிதர்களைப் பற்றிய முன் அபிப்ராயங்களும் நிறைந்து, அவர் குறித்த வெறுப்பே காய்களை நகர்த்தத்தூண்டுகின்றன.

இந்நிலையில், கலை என்பது அதிகாரம் நிறைந்தவர்களின் கைகளிலும் ஆதிக்கம் நிறைந்தவர்களின் கைகளிலும் தான், தன் இருப்பைப் பத்திரப்படுத்திக்கொள்வதாகக் காட்டிக்கொள்கிறது.
கலையின் விளக்கங்கள் உண்மையில் அங்கிருந்து எழுவது இல்லை. ஓரிடத்திலிருந்து நாளுக்கு நாள் நகர்ந்தும், மாற்றங்களை ஏற்றுக்கொண்டு வளர்ந்தும், புதுக்கொள்கைகளுடன், திறந்த மனதுடன் புத்தாக்கம் செய்து கொள்பவர்களின் கைகளில் இருக்கின்றன.
அன்றாட நாட்களின் கனத்தில், தற்காலிகமான, அதிகார சொகுசுகளுக்கு எல்லாம் இரையாகிப்போகாமல் இருக்கவும், ஒற்றையாக நின்றாலும் நாம் சொல்லவரும் அரசியலின் கலைவடிவத்திற்கு நேர்மையாக இருக்கவும் மிகப்பெரிய துணிச்சலும் பலமும் வேண்டும்.
அம்பேத்கரின் கூற்றை இங்கே வலியுறுத்துகிறேன்: ஆடுகளைத் தான் பலியிடுவார்கள். சிங்கங்களை அல்ல. சிங்கங்களாய் இருப்போம், நண்பர்களே!குட்டி ரேவதி

எங்க ஊரு மெட்ராசு இதுக்கு நாங்கதானே அட்ரசு! - ஒரு சினிமா அனுபவம்'மெட்ராஸ்', சினிமா வரலாற்றில் பெரிய, கலை முன்னகர்த்தல். அதுமட்டுமன்று, எப்பொழுதுமே நாம் சினிமாவில் முக்கியம் என்று நம்பும், கதைமூலமும் கதைக்களமும் கதைசெயல்படும் விதமும் தாம் சினிமாவில் நமக்குத் தேவையான இன்றைய மாற்றமும் என்றளவில் இந்தப்படம் முதன்மையானதாகவும் இருக்கிறது. 

ஏதேதோ கதைகள் எல்லாம் சொல்லப்பட்டு, அவற்றின் அதிகமான தொழில்நட்ப மேன்மைக்காக மட்டுமே உன்னதப்படங்களாகவும் வெற்றிப்படங்களாகவும் வலிந்து நிறுவப்பட்ட வரலாற்றைக் கொண்ட நமக்கு, 'மெட்ராஸ்' எனும் படம் அச்சவாலை நேரடியாக, எந்தத்தந்திரங்களும் இன்றி வென்றிருப்பதை உணரமுடியும்.

இப்படத்தில், அதிகாரத்தைத் துரோகத்தால் வெல்லும் மனிதர்களும், அன்பினாலும் உண்மையாலும் வெல்லும் மனிதர்களும் வேறுபடுத்திக்காட்டப்பட்டிருக்கிறார்கள். அறம் சார்ந்தும், நெஞ்சில் உரத்துடனும் பெண் கதாபாத்திரங்கள் இதுவரை இது போன்று சினிமாவில் பதிவு செய்யப்பட்டதில்லை. இப்படத்தின் பெண் கதாபாத்திரச்சித்திரங்கள் தாம் உண்மையில் நம் சமூகத்தின் முதுகெலும்பு. இருளுக்குள் சென்று வரும் கணத்திற்குள் கதை மாந்தர்கள், நல்லவர்களாவதும், கெட்டவர்களாவதும் துரோகிகளாவதும் என நிழல் மாந்தர்களும் நிறைந்துள்ளனர். இப்படத்தில், 'சுவர்' என்பது ஒரு படிமம் தான். அந்தச்சுவரை வைத்துக்கொண்டு, அதே வகையான சிறு ஊர் வரலாறுகள் ஒட்டுமொத்தத்தையும் இப்படம் அடுக்கடுக்காக நினைவுக்குக் கொணர்கிறது. சினிமா எனும் கலைவடிவத்தின் அதிகபட்ச சாத்தியங்களை எல்லாம் நமக்கு அனுபவமாக்கியிருக்கிறது.

இதையெல்லாம் தாண்டி என் முழு கவனமும் , இது வழங்கிய கொண்டாட்டத்தையும் எழுச்சியையும் இங்கே சுட்டிக்காட்டுவது. சமூக அரசியலுடன் கலையையும், கலையுடன் சமூகத்தையும் இணைத்துப் புரிந்து கொள்பவர்களுக்கு, இருக்கைகளில் அமர்ந்து மனஎழுச்சியுடன் படம்பார்க்ககூடிய உச்சபட்ச கொண்டாட்டத்தை அனுபவமாக, இப்படம் வழங்கியதே. இதுவரை இம்மாதிரியான கொண்டாட்டத்தை வேறு எந்தப் படமும் தந்ததில்லை. எனக்கு மட்டுமன்று, நான் சந்திக்கும் நண்பர்கள் எல்லோரும் கண்ணில் நீர்பொங்க, நெஞ்சம் மகிழ இப்படத்தைத் தன் படமாகக் காண்கின்றனர்.

கலையையும் சமூக எழுச்சியையும் இணைக்கும் முயற்சியில் வெல்லும் சாத்தியங்களை சமூகத்தின் முன் வைக்கும் எந்தச் சிறிய கலைஞனையும் நான் கொண்டாடவிரும்புகிறேன். ஏனெனில், 'கிணற்றுத்தவளை' போல் சினிமாவைத் தாம் அறிந்த உலகம் மட்டுமே என உணர்ந்தவர்களுக்கு இப்படத்தின் வீர்யம் தெரியாது. மாற்று சினிமாவின் இலட்சியங்களும், வணிக சினிமாவின் இலட்சியங்களும் வேறு வேறு. வணிகசினிமாவின் வெற்றிகளை வைத்துக்கொண்டு, மாற்றுசினிமா அரங்கில் அங்கீகாரம் கோருவதான அபத்தம் போலவே, மாற்றுசினிமாவின் இலக்கணங்களை வைத்துக்கொண்டு வணிக சினிமாவின் இலக்கணங்களை விமர்சிப்பது, மிகவும் கற்றுக்குட்டித்தனமானது. 

வணிக சினிமாவெளிக்குள் நுழையமுடியாமல் நூற்றுக்கணக்கான அருமையான கதைகளுடன் திரியும் உதவி இயக்குநர்களை நான் அறிவேன். கடுமையான சாதி, பணபலம், புகழ், அங்கீகார அதிகாரத்தின் இரும்புக் கதவுகளுடன், சினிமாவெளி மூஞ்சில் அறையும். 

இந்நிலையில், கிடைக்கும் வாய்ப்புகளில் சொல்லற்கரிய விடயங்களை மானுட நுட்பத்துடன் திரைக்கதையை வீர்யத்துடன் வழங்குவது அவசியம், மிக அவசியம். இதை 'மெட்ராஸ்' செய்திருக்கிறது. இந்தப்படத்தைப் போல் ஒரு படம், வேறு மாநிலங்களில் வேறு மொழியில் சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. "ஃபன்றி", ஒரு வணிகசினிமா இல்லை. 'மெட்ராஸ்' படத்தின் இதே கதைக்கருவை வைத்துக் கொண்டு, கலைப்படங்கள் எடுக்கலாம், மாற்றுப்படங்கள் எடுக்கலாம், குறுகிய வெளியில் படங்கள் எடுக்கலாம். ஆனால், அதிகாரங்களும் அழுத்தங்களும் நிறைந்த, வணிக சினிமாவின் வழியே, இது வரை நாம் நம்பியிருக்கும் சமூக மதிப்பீடுகளை, தன் சுய வாழ்வும் சுயலாபங்களும் சாராது கொண்டு சேர்ப்பதற்கு மிகப்பெரிய வலிமை வேண்டும்.

ஒரே சமயத்தில், இறந்து போன வணிக இயக்குநர்களைக் கொண்டாடுவதும், மனித அக்கறை கொண்ட வணிக சினிமாவின் சாதனைகள் உணராமல் இருப்பதும் ஃபேஷனாகிவிட்டது.

சினிமா மொழி இன்று எல்லோருக்குமாக ஆகிவிட்டது. 
உலகின் உன்னதப்படங்கள் எல்லாவற்றையும் இன்று எவருமே பார்த்துவிடமுடியும். தனிமனித முயற்சியின் வழியாக, சினிமாவின் எல்லைகளை விரிக்கமுடியும். ஆனால், இன்றைய தமிழ் வணிக சினிமாவில், இது தனிமனிதன் யானையை வளர்ப்பது போல. 'மெட்ராஸ்' இதைச் சாதித்திருக்கிறது. இந்தப்படத்தைத் தம் கொண்டாட்டமாகவும் எழுச்சியாகவும் உணர்ந்த ஒவ்வொரு இதயத்துடனும், நான் பார்க்கும்பொழுது நான் உணர்ந்த கொண்டாட்டத்தை இணைத்துக்கொள்கிறேன்.

இத்தகைய சினிமாவின் அருமை என்னவென்று எல்லோரையும் உணரவைப்பதில், இன்னும் நாம் நெடுவழி போகவேண்டியிருக்கிறது. ஏனெனில், சமூகம் அந்த அளவிற்கு முன்அபிப்ராயங்களுடன் இயங்குகிறது.குட்டி ரேவதி

நம் இந்தியாவைத் தூய்மை செய்யமுடியுமா?


நல்ல திட்டம் தான். தூய்மையான இந்தியாவை உருவாக்குதல் என்பது இந்தியராகப் பிறந்தவர் எவருக்குமே உள்ளது தான்.
ஆனால், அது அவ்வளவு எளிதானது இல்லை என்று தோன்றுகிறது.


ஒரு முக்கியமான, முதன்மையான காரணம்: நம் இந்தியா இவ்வளவுக்குத் தூய்மையற்றும், அழுக்காகவும், கழிவறைகள் அசுத்தமாகவும் இருக்கக்காரணம், அதையெல்லாம் சுத்தம் செய்ய வேறொரு ஜாதி மக்கள் இருக்கிறார்கள் என்ற நமது அடிப்படையான ஜாதி நம்பிக்கையும் அது சார்ந்த சிந்தனைகளும்.

நாம் உபயோகித்து வெளியே வரும் கழிவறையைக் கூட, தூய்மையாக வைத்துக்கொள்வது நமது பொறுப்பில்லை என்று நம்பும் இந்தியா எப்படி தூய்மையாக முடியும்.

வெளிநாடுகளுக்குப் பயணம் சென்று வரும் எவரின் முதல் ஆதங்கமும் இது தான், இந்தியா தூய்மையாக இல்லை. அதுமட்டுமன்று, வந்த சில நாட்களிலேயே சோடா பாட்டில் உற்சாகம் போல பொங்கித்தீர்ப்பார்கள். அவ்வளவே.

ஆனால், இந்தியாவைத் தூய்மை செய்தல், என்பது தெருக்களை மட்டுமே சுத்தல் செய்தல் இல்லை. முதலில் நம் மனவெளியில் அது குறித்த அடிப்படையான சிந்தனைகள் உருவாகவேண்டும். நம் மனதில் விதைக்கப்பட்டிருக்கும் "தீண்டாமை" குறித்த, மனிதனை மனிதன் அருவெறுப்பாக நோக்கும் சிந்தனைகள் மாறவேண்டும்.

பின், அவரவர் வீட்டைத் தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும். அவரவர் பயன்படுத்தும் கழிவறைகளை வீட்டின் கழிவறைகளைத் தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும்.

பின் தான், தெருக்களையும் பொதுவெளிகளையும் தூய்மையாக வைத்துக்கொள்ளல் என்பது சாத்தியம். இது ஒரு தலைகீழ் முறை.

இந்தியாவைத் தூய்மையாக வைத்துக்கொள்ளல் என்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். காலங்காலமாக, ஊறிப்போன 'தூய்மை' என்பது குறித்த நம் சிந்தனைகளை அலசிப்பாருங்கள். அது முற்றிலும் பொதுத்தூய்மைக்கு எதிரானது, தவறானது.

இந்த நிலையில், தெருவிலிருந்து தூய்மையைத் தொடங்குதல் என்பது களைகளைப் பிடுங்காமல், நெற்பயிர்களைப் பிடுங்கி அவற்றை மட்டுமே பராமரிக்க முயல்வதில் ஈடுபடுவது என்பது வேடிக்கையானது.

நான் அழுத்தம் தரவிரும்புவது, நமது நாட்டின் தூய்மை, மனத்தீண்டாமையையும், உடல்தீண்டாமையையும், மனிதத்தீண்டாமையையும் களைவதில் தான் இருக்கிறது.

பின் பாருங்கள், இந்தியா எத்தகைய தூய்மையான நாடாக இருக்கப்போகிறது என்று!


குட்டி ரேவதி

பாடகர் ஜேசுதாசு அவர்களின் கருத்துக்குக் கண்டனம்!


பெண்கள் கவனம் குலைக்காத உடை உடுத்தவேண்டும் என்று சொல்லும் ஆண்கள்,
முதலில் தங்கள் கருத்துக்குலையாமல் இருந்தால் நன்று.


பெரிய பொறுப்புகளில் வசிக்கும் ஆண்களும், இந்தியாவின் கலைத்துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆண்களுமே இப்படி சிறுபிள்ளைத்தனமாகச் சொல்லும் பொழுது, அவர்களின் ஆளுமையை இது குறைக்கிறது.

மேலும், பெண்கள் உடை உடுத்துவது, இந்தியாவின் பாலியல் வன்முறை, ஆண்களின் கவனம் குலைவது இவை எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விடயங்கள் என்று வன்முறையின் பலதருணங்களில் அழுத்தம் கொடுத்து சொல்லியாயிற்று.

வளர்ந்தாலும், இன்னும் வயது வராத விடலை ஆண்களின் பிரச்சனையாகவே இது இருக்கிறது.

உலகெங்கிலும், பெண்கள் நவநாகரீக உடை உடுத்துதலும், அதை எளிதாகக் கடந்து செல்லும் ஆண்களையும் காணும் பொழுது, அந்த ஆண்களின் மீது இயல்பாகவே மரியாதை தோன்றுகிறது.

சினிமா, ஃபேஷன் தொழிற்சாலை முழுதும் இயக்கப்பட்டுத்தான் இத்தகைய உடையும், நாகரிகமும் பரப்பப்படுகிறது. உண்மையில், இந்தத் தொழில்முறையைக் கட்டுப்படுத்த இயலாத அளவிற்குப் பூதாகரமாக வளர்ந்து நிற்கிறது.

இதன் நிர்வாக சவால்களையும் படைப்புச்சவாலையும் மேற்கொண்டிருப்பவர்கள் எல்லோரும் ஆண்களே. அணிபவர்கள் மட்டுமே பெண்கள்.

உண்மையில், பெண்கள் இப்படி உடை உடுத்துவது தங்களைத் துன்புறுத்துகிறது என்று ஆண்கள் நம்புகிறார்கள் எனில், தங்களுக்கு இணையான ஆண்களைத் தான் எதிர்க்கவேண்டும். இதுவே, தர்க்கப்பூர்வமானது.

பெண்களின் உடையைக் குறை சொல்லிக்கொண்டே இருப்பதென்றால் வாழும் காலம் முழுதும் அதையே ஒரு தொழிலாகச் செய்து கொண்டிருக்கலாம், ஆண்கள்.

அல்லது, இவ்வாறு உடையுடுத்தும் பெண்களை ரசிக்கும் ரசனையையேனும் வளர்த்துக்கொள்ளலாம்.

அல்லது, தெருக்களில் மேல் உடை உடுத்தாமல் அலையும் ஆண்களையும் இறுக்கமாக உடை உடுத்தும் ஆண்களையெல்லாம் உடலை மறைக்கச்சொல்லலாம்.

பெண்கள் ஒருபொழுதும் அதைச் செய்வதில்லை. ஏனெனில், ஆண்கள் போல் பெண்கள் ஆண்கள் மீது வெறுப்பு கொள்வதில்லை. பெண்கள், ஆண்களை எல்லா வகையிலும் ரசிக்கும் ரசனை மிக்கவர்கள்.

குட்டி ரேவதி

ஜெயலலிதா கைதுஇதுவும் பாரபட்சங்களை எழுப்பும் நீதியே!

குற்றத்திற்குப் பின்பு 18 ஆண்டுகள் வாழ்க்கையை அனுபவித்த பின்பான ஒரு தண்டனை.

வாச்சாத்தியிலும் இதுவே நிகழ்ந்தது. குற்றம் இழைத்தவர்கள் நிறைய பேர் தண்டனையை அனுபவிக்காமல், தாங்கள் செய்தது குற்றம் என்றே நம்பாமல் இறந்து போனார்கள்.

இந்தியாவின் நீதி முறை சிக்கலானது. இந்த நீதியும் கூட, சுப்ரமணியசுவாமிக்கு இருக்கும் அதிகார அழுத்தத்தால் சாத்தியப்படுத்திக் கொண்டது.

ஓநாய்கள் பெற்றுத்தரும் நீதியை, நமக்கு ஆதாயமாகப் பார்க்கமுடியாது. எப்பொழுதுவேண்டுமானலும் நம் கைகளிலிருந்து பறிக்கப்படும்.

மேலும், இந்தியா முழுதும் இவ்வாறு நம் மக்களை அட்டைகளாக உறிஞ்சி வாழ்பவர்கள் ஏராளம். நம் மக்கள் இழந்த நல்வாழ்வை எப்படி மீண்டும் பெறமுடியும்.

இன்னும் சிக்கலான எதிர்காலத்தைத் தமிழகம் சந்திக்க இருப்பதாகத் தோன்றுகிறது.

தமிழர்கள் மீதான வெறுப்பு மனோபாவத்தின் தொனி நிறைந்திருக்கிறது பிஜேபிகளிடம்.

கருத்தியல் புரிதலும், அரசியல் தெளிவும் ஒருமுகப்பட்ட செயல்பாடும் சரியான தொலைநோக்கும் இல்லை எனில்,
நம்மை நாமே எதிர்காலத்தில் கூடக் காத்துக்கொள்ளமுடியாது என்று தோன்றுகிறது.

குட்டி ரேவதி

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கைதை திரைத்துறையினர் கண்டிக்கிறார்கள் என்றால்…இவர்கள் இந்திய நீதிமுறையை அவமதிக்கிறார்கள் என்று அர்த்தம்.

இவர்கள் நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்று அர்த்தம்.

இந்த எதிர்ப்பே, இந்திய இறையாண்மைக்கு முற்றிலும் எதிரானது. தாய்த்திருநாட்டின் குடியாட்சியையும் அதன் மீதான இறையாண்மையும் இழிவுபடுத்துகிறார்கள் என்று அர்த்தம்.

திரைத்துறையினர், தங்கள் சுயமரியாதையைப் பணயம் வைக்கிறார்கள் என்று பொருள்.

என்றேனும், ஜெயலலிதா அவர்கள் வெளியே வந்து திரைத்துறைக்கான அங்கீகாரங்களை செய்யக்கூடும் என்ற அபத்தமான நம்பிக்கைகள் உடையவர்கள் என்றும் அர்த்தம்.

காலங்காலமாக, இந்தியாவில் உணவின்றி வாழ்வாதாரங்களின்றி வாடும், வறுமையினால் இறந்து மடியும் மக்களைப் பற்றி எங்களுக்கு 'எந்த அக்கறையும் இல்லை' என்ற உண்மையை வெளிப்படையாக முன்வைக்கிறார்கள் என்றும் அர்த்தம்.

அவர் பெண் என்றும் அவர் மேல் பரிவுகாட்டவேண்டும் என்றும் இவர்கள் வாதிடுகிறார்கள் என்றால், இந்த நாட்டில் உயிர்களுக்கு ஏற்றத்தாழ்வான விலையைப் பரிந்துரைக்கும் மனு தர்மத்தின் பாரபட்சத்தை, அநீதியை வெளிப்படையாக ஆதரிக்கிறார்கள் என்று அர்த்தம்.

இந்தியாவின் நிலங்களைப் பகிர்ந்து கொடுக்கும் போராட்டங்கள் எவ்வளவு வலி நிறைந்தவை, அதன் பின்னால் எத்தனை இலட்சம் தலித் மக்கள், பழங்குடி மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள், இன்றும் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதையும் அறியாதவர்கள் என்று அர்த்தம்.

சினிமா எங்களுக்கு வெறும் வியாபாரம் தான்; அதற்காக நாங்கள் இந்த நாட்டின் இறையாண்மையையும் விற்போம் என்று மேடைகளில் முழங்கப்போகிறார்கள் என்றும் பொருள்.

மனசாட்சி உள்ளவர்கள், இந்த வழக்கின் பின்னணியில் உள்ள கொடுமைகளையும் ஆய்ந்து பார்த்து, அதன் பொருட்டான நீதியின் பக்கமே, தர்மத்தின் பக்கமே நிற்பார்கள்.

இவ்வளவும் ஒரு நாள் நடக்கக்கூடும் என்று எதிர்பார்த்திருப்பின், முன்பே இவர்கள் யாரும் ஏன் ஜெயலலிதா அவர்களுக்கு 'இடித்துரைக்கும்' நல்ல நண்பராக இருக்கவில்லை.

நீதியின் தராசு ஒரு பொழுதும் அநியாயத்தின் பக்கம் தலைசாய்க்காதிருக்கட்டும், நண்பர்களே!


குட்டி ரேவதி

டென்மார்க் பயணம் 7 - பெண்ணியமும் ஆணியமும்


இத்துடன் ஐந்து நிகழ்வுகள் கலந்து கொண்டேன். எல்லாமும் பெண்ணிய விவாதங்கள். பெண்ணிய விவாதம் என்றால் ஆண் வெறுப்பு விவாதங்கள் என்று நினைத்துக்கொள்ளவேண்டாம். எல்லா விவாதங்களிலும் முக்கியமான கேள்வி, 'ஏன் இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகமாக இருக்கின்றன?' என்பதே. பரவலாக, பெரும்பான்மையோருக்கு, டெல்லி நிர்பயா நிகழ்வு தெரிந்திருக்கிறது. என்றாலும், நான் பல இடங்களிலும் தொடர்ந்து விளக்கவேண்டியிருந்தது.

என்னுடைய விளக்கங்களின் மையப்புள்ளிகள் இவையே:
இந்தியாவின் பெண்ணியம் மேலைநாட்டுப்பெண்ணியம் போல, பெண்களை மட்டுமே உள்ளடக்குவதாக இருக்கமுடியாது.
மேலும் எமது ஆண்களை வெறுக்கும் பெண்ணியம் இல்லை . ஏனெனில், ஆண்களிலும் கடுமையான ஏற்றத்தாழ்வை, சாதி வழியாகச்செயல்படுத்தும் நாடு எங்களுடையது.
பாலியல் வன்முறை, ஆதிக்க சாதியினரால் அல்லது மேல்தர வர்க்கத்தினரால் செயல்படுத்தப்படும்போது, பெரும்பாலும் அது பொது அரங்கில் குற்றமாக, விவாதமாவதில்லை. ஆனால், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து எந்த ஓர் ஆண் செய்யும் தவறும் ஊதிப்பெரிதாக்கப்பட்டு, தண்டனையும் நீதியும் பெறுவதில் மூர்க்கம் காட்டப்படுகிறது.
அவ்வாறே, பெண்களிலும் சமூக ஏற்றத்தாழ்வு இருக்கும் பட்சத்தில், இந்தியப்பெண்ணியம் என்பது, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் சிறுபான்மை சமூகத்தைச்சேர்ந்த பெண்ணின் உரிமைகளுக்கு முதன்மைக்குரல் கொடுப்பதாக இருக்கவேண்டும்.

*
நான் சென்னை திரும்பும் விமானத்திற்கு நடுஇரவு, இரண்டு மணிக்கு, நான் தங்கியிருக்கும் இடத்திலிருந்து கிளம்பி விமான நிலையம் சென்றால் தான் இயலும். இங்கே என் தோழியின் தந்தை, எனக்கு முழு விவரத்தையும் வரைபடம் போட்டு, எங்கே பேருந்தில் ஏறவேண்டும், எங்கே மெட்ரோவில் ஏறவேண்டும் என்று விளக்கினார்.
வழக்கமான பழக்கத்தில் கேட்டுவைத்தேன். 'இரவு இரண்டு மணிக்குப்போவது பாதுகாப்பானதா?' என்று. 'கண்டிப்பாக, நீங்கள் எங்கள் நாட்டில் எங்குவேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் தனியாகச் செல்லலாம்' என்றார். அவர் ஏற்கெனவே ஒரு முறை இந்தியாவிற்கு வந்து வேலை நிமித்தம் சிலமாதங்கள் சென்னையில் தங்கிச்சென்றிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
பழக்கத்தில், தனிச்சாலைகளில் நடந்துசெல்கையிலோ, முன்னிரவுகளில் இருப்பிடம் திரும்பும்போதோ, பின்னால் அவ்வப்பொழுது சூழலையே உறுத்துப்பார்த்துக்கொள்கிறேன். ஆனால், இது வரை எந்தப்பெண்ணையும் கண்களில் கூடக் கிண்டல் தொனிக்கும் ஓர் ஆணை இது வரை நான் பார்க்கவில்லை. எங்கு வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானலும் முன்சென்று விவரம் கேட்கலாம். பொறுப்பெடுத்துக்கொண்டு நமக்கு உதவுகிறார்கள்.
*
இந்தியாவில், பெண்கள் மீதான கேலி பார்வை என்பதற்கு சாதி தான் காரணம். ஆதிக்க சாதியிலிருந்து வந்தவர்களால், நான் அறிந்தவரை, அவர்களால் பெண்களைக் கேலிசெய்யாமல் இருக்கமுடிந்ததில்லை. பொதுப்பரப்பில், பெண்களை எள்ளல் செய்யாமல் இருக்கவும் முடிவதில்லஇ. அவர்கள், பெண்கள் என்னவோ தங்களுக்குத் திறமை இல்லாதது போலவும், எதையும் சாதித்துக்கொள்ள ஆண்களிடம் தம் பாலியலை விற்கவேண்டியது போலவும் பேசுவது சாதியத்தில் ஊறிஎழும்பியது. பழங்குடி சமூகத்தில் இருக்கும் ஆணிடமோ, சாதியின் அழுத்தத்தில் உள்ள ஓர் ஆணிடமோ தவறான பார்வையை நான் கண்டதில்லை. பெண் என்றால் யார் என்று ஒவ்வோர் சமூகத்திற்கும் ஒவ்வொரு மாதிரியாக ஊட்டப்பட்டிருக்கிறது.
இந்தியாவில், பெண்கள் மட்டுமல்ல, அதிகாரத்தில் மெலிந்த ஆண்களும் எல்லா விதமான பாதுகாப்பான உணர்வுகளுடனும் நள்ளிரவில் செல்லும் காலத்தைப் பார்க்க, ஆவல் எழுகிறது!

குட்டி ரேவதி

* * *

டென்மார்க் பயணம் 6 - அருங்காட்சியகங்கள்!


அயல்நாடுகளுக்கு மாநிலங்களுக்கோ செல்லும் போது, அந்த இடத்தின் நிலக்காட்சி பீடிக்க, முதலில் செல்லவேண்டியது அதன் அருங்காட்சியகங்கள் தான். அந்த இடத்தின் உயிர்நாடியை அறிந்தது போலாகிவிடுகிறது. டென்மார்க்கின் தேசிய அருங்காட்சியகம், ஒரு சர்வதேசஅருங்காட்சியகமாகத்தான் இருக்கிறது. டென்மார்க்கின் காலனியாதிக்கத்தில் இருந்தபொழுது பெற்றவையோ, பயணியாக டென்மார்க்கிலிருந்து வேறு நாடுகள் சென்று வந்தோர் சேகரித்து வைத்திருந்ததோ என ஒட்டுமொத்தமான சேகரிப்பும் தெளிவான விவரணைகளுடன் இருக்கிறது.


இங்கே, மெட்ரோ எனப்படும் தரைகீழ் ரெயில் மிகவும் சிக்கலான பயணமுறைகளை உடையது என்று எல்லோரும் எச்சரித்திருந்தாரகள். இருந்தாலும், வரைபடம் கொஞ்சம் புரிபட்டுவிட்டதால் செல்வது எளிதாகிவிட்டது. Kongens Nytrov என்னும் பகுதியில் நிறைய அருங்காட்சியங்கள் ஒன்றுக்கொன்று அருகிலேயே இருக்கின்றன. சிறிய அருங்காட்சியகம் என்றாலும், டென்மார்க் தேசிய அருங்காட்சியகம் பார்த்துவரவே எனக்கு ஐந்து மணி நேரம் பிடித்தது. குறிப்பாக, எஸ்கிமோக்கள் பகுதி எனை வெகுவாகக் கவர்ந்தது. பனிப்பிரதேச வேட்டை, வாழ்க்கை முறை சார்ந்த அவர்கள் பயன்படுத்திய எல்லாமும் ஒன்றுவிடாமல் சேகரித்துக் காட்சிக்கு வைத்திருந்தார்கள். நம்முடையதைப் போன்ற வெப்பப்பிரதேசங்களிலிருந்து செல்பவர்களுக்கு முற்றிலும் வியப்பாக இருக்கும். திமிங்கல எண்ணெயும் இறைச்சியும் அவர்கள் வாழ்வின் மிகமுக்கியமான வாழ்வாதாரமாகும். ஐஸ்கட்டிகளுக்கு இடையே அவர்கள் வேட்டைக்குச் செல்ல, வடிவைத்து வைத்திருக்கும் ஒவ்வொரு ஆயுதமும் கலைப்பொருளைப் போல இருக்கிறது. அவர்கள் பயன்படுத்தும் சமையலறைப்பொருட்கள் எல்லாம் மரத்தில் செய்யப்பட்டவையாகவும், ஆயுதங்கள் எல்லாம் நீரில் வேட்டையாடிய பிராணிகளின் எலும்புகளில் செய்யப்பட்டவையாக, அணிந்திருக்கும் உடைகள் எல்லாம் குளிரைத்தாங்கும்படியான பிராணிகளின் தோலினால் ஆனவையாக இருக்கின்றன. எஸ்கிமோக்கள் பற்றிய அருங்காட்சியகங்களில் இது தான் மிகவும் சிறந்ததாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஆனால், இதே அருங்காட்சியகத்தில் இருக்கும் மற்ற பிரிவுகள் எல்லாம் ஓரளவுக்கே அக்கறையுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு அருங்காட்சியகமும், மனிதன் இந்தப்பூமியில்இயற்கையின் பேராற்றலை எதிர்கொள்வதற்கு, தகவமைத்துக்கொள்வதற்கு ஏதுவாக வழிமுறைகளைக் கண்டறிந்ததின் எச்சங்களும் சின்னங்களும் தாம். பரந்த இந்தப் பூமியில் வடக்கும் தெற்கும் கிழக்கும் மேற்குமாய் மனிதர்கள் போர், காலம், மனம், மரணம், இன்பம் என ஒவ்வோர் அனுபவம் வழியாகவும் கடந்து வந்த சென்ற நூற்றாண்டுகளின் சுவடுகள் கற்பனை எழுச்சியைக் கொடுப்பவை. என்றாலும், நவீனக்கலைவடிவத்திற்கான, லூசியான அருங்காட்சியகம் முற்றிலும் நவீனவடிவில், கடலோரம் நிறுவப்பட்டுள்ளது. கோபன்கேஹனிலிருந்து ஒரு மணி நேரம் பயணித்துச் செல்லவேண்டும். ஐரோப்பிய நவீன ஓவியர்களையும் சிற்பக்கலைஞர்களையும் முதன்மைப்படுத்தியிருந்தனர். கவிஞர்களுடனான லூசியான குறித்த உரையாடலில், ஒரு கவிஞர் கேட்டது: அது நவீனக்கலைஞர்களுக்கான கலைஅருங்காட்சியகம் எனில் ஏன் இத்தனை நாடுகளிலிருந்து கலைஞர்களை முன் வைக்கவில்லை என்று ஒரு நீளப்பட்டியலை முன்வைத்தார்.
எல்லா நாடுகளும் இந்த விடயத்தில் இப்படித்தான் போல!


குட்டி ரேவதி

டென்மார்க் பயணம் 5 - க்ரீன்லாந்து நாயகியும் மான்கறியும்


இது எதேச்சையாகத்தான் நடந்தது. ஒரு கவிதை வாசிப்பு நிகழ்வில் என்னுடன் தன் நாடகத்தை நிகழ்த்துவதற்காக ஜெஸ்ஸி என்ற நாடகக்கலைஞரும் அழைக்கப்பட்டிருந்தார். இவர் க்ரீன்லாந்திலிருந்து இடம்பெயர்ந்து, டென்மார்க்கில் வாழ்ந்து வருபவர். ஒரு மாலை நேரத்தில் இவர் வீட்டில் காபி அருந்தி விட்டு அங்கிருந்து இருவருமாக கவிதை வாசிப்பு நிகழ்விற்குச் செல்வதாகத் திட்டம். டென்மார்க்கில் வந்து இறங்கிய முதல் நாட்களிலேயே ஒரு முறை இவரைச் சந்தித்திருந்தேன். சந்தித்த சில கணங்களிலே, நீங்கள் மாயமந்திரங்களில், சடங்குகளில் நம்பிக்கை உள்ளவரா என்று கேட்டேன். அந்த அளவிற்கு அவருடய உடல் அசைவுகளும் அணுகுமுறைகளும் பெருவடிவில் இருந்தன. மாலையில் இவர் வீட்டிற்குள் நுழைந்ததுமே, சிறிய அறையின் குறுகலான வெளி, நகர அமைப்பு என எந்தக்கட்டுக்குள்ளும் அடங்காத ஒரு பெண்ணின் வீடு என்று விளங்கியது. க்ரீன்லாந்தின் பனிப்பிரதேசங்களில் சீல், வால்ரசுகளை வேட்டையாடி வாழும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் இவர். வீட்டிற்குள்ளும் ஒரு பனிப்பிரதேசத்தை, அல்லது அதன் நினைவுகளைக் கொண்டு வர முயன்றிருந்தார். ஒவ்வொரு சிறிய இடத்திலும், நூற்றுக்கும் மேலான நுட்பமான பொருட்களை, பனிநிலம் சார்ந்த கலைப்பொருட்களையும் சேகரிப்புகளையும் ஒரு சடங்கின் நுணுக்கத்துடன் வைத்திருந்தார். கலைப்பொருளின் கண்காட்சியகம் போல இருந்தாலும், எதையும் தொட்டுப்பார்ப்பதற்கான தயக்கமும் கூடியது. அந்த அளவிற்கு ஒவ்வொரு பொருளுக்கு இடையேயும் உறவும் அர்த்தமும் தொனிக்க அவை வைக்கப்பட்டிருந்தன. உள்ளே நுழைந்ததுமே அவருடைய கணவர் எங்கள் இருவருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தார். அவருடன் இன்னும் சில ஆண்களும் இருந்தனர். ஜெஸ்ஸி, சொன்னார். சுவீடன் காடுகளில் வேட்டைக்காகச் சென்றிருந்த அவருடைய கணவனின் சகோதரர் திரும்ப இருப்பதாகவும், அவருடைய வேட்டைக்கறியைப் பெறுவதற்காகக் காத்திருப்பதாகவும் கூறினார்.

அப்பொழுது, தொலைபேசி அழைப்புவர எல்லோரும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் வீட்டிற்கு வெளியே ஓடினர். சிலநிமிடங்களில், திரும்பிய அவருடைய கணவர் கையில், மானின் தொடைக்கறியும் விலா எலும்புக்கறியும் காகிதத்தில் பொதியப்பட்டு இருந்தன. பச்சை மாமிச வாசனை, தாவர வாசனை கலந்து வீசியது. வீட்டிற்குள் மான்கறி வந்ததும் ஜெஸ்ஸி உற்சாகமாக நடனமாடினார். எங்களுக்கோ நிகழ்விற்கான நேரம் ஆகிக்கொண்டிருந்தது. அவருடைய கணவர், க்ளாஸ், அந்தக்கறியை சிறிய அழகான துண்டுகளாக நறுக்கினார். வாணலியில் சிறிது ஆலிவ் எண்ணெய் விட்டு மான்கறியைப் போட்டுப்புரட்டினார். மிளகுப்பொடியைத் தூவினார். ஏற்கெனவே வதக்கிவைத்திருந்த முள்ளங்கி, தக்காளி, வெங்காயத்துண்டங்களைப் போட்டுப்புரட்டி தட்டில் வைத்தார். மான்கறி சாப்பிடாமல் போனால், இன்று நிகழ்வில் குறை நிகழும் என்று ஏதோ சங்கேதம் போலச் சொன்னார். நீண்டநாட்களாக நோயுற்று இருந்த தன் நண்பன் அன்று காலையில் மறைந்த செய்தி வந்ததிலிருந்து அவனுக்காக நான் ஏதேனும் செய்யவேண்டுமென்று துடிப்புடன் இருக்கிறேன். அவனுக்கு இன்றைய மாலை நிகழ்வை அன்பளிப்பாக்கப் போகிறான் என்றார்.

மாலை நிகழ்வில், எல்லோரின் கண்களிலிருந்தும் கண்ணீர் உகுக்க வைத்துவிட்டார். ஏனெனில், விடுதலையைச் சிந்திக்கும் உடல் அத்தகைய மாண்புகளையும் ஆற்றல்களையும் தனக்குள் சேகரித்து வைத்துக்கொள்கிறது. அதை இயக்கும் தட்டாமாலை போல உடலுக்குள்ளிருந்து எல்லா நினைவுகளும் உணர்வுகளும் வீச்சுடன் வெளிப்படுகின்றன. ஜெஸ்ஸிக்கு ஐம்பது வயது. தன் நிகழ்த்து அனுபவங்களை ஒரு நூலாக எழுதியிருக்கிறார். தன் ஒட்டுமொத்தச் சிந்தனையையும், அன்றாடங்களையும் உடலுக்குள் நிரப்பிவைத்திருக்கிறார். எங்கேயோ விட்டுவந்த க்ரீன்லாந்து நினைவுகளும், பனிப்பிரதேச வேட்டைகளும் இயற்கையுடன் ஒன்றுதலும் அவருடைய உடலாகி இருப்பதாகத் தோன்றியது. நிலம் விட்டு நிலம் ஏகுபவர்கள் நிலத்தையும் தம்முடன் சுருட்டி எடுத்துச் செல்கின்றனர்.

குட்டி ரேவதி

டென்மார்க் பயணம் 4 - தனிமையின் சாலையும் நோக்கமிலாப்பயணமும்!


சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் சந்தித்தப் பெண்ணிய எழுத்தாளர், Mette என்பவரை டென்மார்க்கில் இந்தப்பயணத்தின் பொழுது மீண்டும் சந்தித்தேன். இங்கு மிகவும் புகழ்பெற்ற, ஊக்கமிக்கப் பெண்ணியலாளர். எந்த வேண்டுகோளையும் முன் வைக்காமலேயே, அவரே முன் வந்து, பல இடங்களுக்கும், கலைக் கண்காட்சிகளுக்கும் அழைத்துச்செல்கிறார். என்னுடைய ஒவ்வொரு நாளும் பயனுள்ளதாகக் கழிகிறதா, இந்தக்குளிரை நான் எவ்விதம் தாங்குகிறேன் என்று அக்கறை எடுத்துக்கொள்கிறார். என் பயணம் முழுதும், வெவ்வேறு இடங்களில் பெண்ணிய விவாதத்தையும் கவிதை வாசிப்பையும் ஒருங்கிணைத்து, அவற்றை சிறப்புற வடிவமைத்துள்ளார். குறிப்பாக, பிளாக் டைமண்ட் நூலகத்தில் அவர் ஒருங்கிணைத்திருந்த கூட்டமும் உரையாடலும் பொருளுடையதாக இருந்தது.
நேற்று ஒரு நாள் முழுதும், இருவரும் கோபன்கேஹனின் மையச் சாலைகளில் எந்த நோக்கமுமின்றி அலைந்து திரிந்தோம். குளிர் மிகுந்த அறைகளில் இருந்து, சூரிய ஒளி வீசும் மையச்சாலைகளில் திரிவதும், சூடான பானங்களையும் பருகித்தீர்ப்பதும் அருமையான அனுபவமாக இருந்தது. நீளமான உரையாடல் கொள்ள ஏதுவாக இருந்தது. ஒரு பெரிய எழுதுபொருள் கடைக்குச் சென்று அங்கு விற்பனைக்கு இருக்கும் எல்லா நுட்பமான எழுது பொருள்களையும் பார்த்தோம். டேனிஷ் பண்பாட்டின் கலைத்தன்மை சார்ந்த வரைபொருட்களாக அவை இருந்தன. பொதுவாக, இம்மாதிரியான வெளிநாட்டுப்பயணங்களில் சந்திக்கும் அயல்நாட்டுப் படைப்பாளிகளை, வாழ்க்கையில் மீண்டும் சந்திப்பது என்பது அரிதாகிவிடும். அதற்கான பொதுப்புள்ளிகளும் இருக்காது. ஆனால், இவரை மீண்டும் சந்திக்க வாய்த்தது, எழுத்தின் பொதுத்தன்மையை உணர்த்துவதாக இருந்தது.
மிகவும் பழமையான Gyldendal Publishing House - க்குச் சென்றோம். அது, அவர் தன் நூல்களுக்காகப் பணியாற்றிய இடம். ஒரு தொழிற்சாலையைப் போல் இருக்கிறது. டென்மார்க்கில் உருவாக்கப்படும் நூல்களுக்கு மையமான இடம். அதன் இயக்குநர் Johannes Riis அவர்களைச் சந்தித்தேன். டென்மார்க் நூல்பதிப்பு வெளியில், மிகவும் முக்கியமான மனிதர் என்று கூறினார்கள். Mette - வும் நானும், பதினெட்டாம் நூற்றாண்டின் கட்டிடங்கள் இன்னும் சிதைவுறாமல் இருக்கும் பல சாலைகள் வழியே நடந்து சென்றோம். அயல்நாடுகள் மீது பெரிதான வியப்பு என்பது எப்பொழுதுமே இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், என் கவனமும் எண்ணமும், நம் நாட்டிற்கும் இந்த நாடுகளுக்குமான இடைவெளி என்ன என்பதில் தான். அப்படிப்பார்த்தால், பொருளாதார நிலையிலும் சுகாதாரத்திலும் அவர்கள் உயர்வாக இருப்பதாகத் தெரிந்தாலும், பல வகைகளில் அது உண்மை இல்லை. நாம் அன்றன்று சமைத்து உண்பவர்களாக இருக்கிறோம். உடல்நலப்பண்பாட்டின் வேர் இன்னும் நம்மிடம் இருக்கிறது. ஆனால், இங்கு பெரும்பாலான உணவுப்பொருள்கள், பதப்படுத்தப்பட்டவையாக அதற்கான ரசாயனங்கள் சேர்ந்தவையாக இருக்கின்றன.
வியப்பை ஊட்டும் ஒரே விடயம், தொன்னூறு சதவிகிதத்தினருக்கும் அதிகமானோர் சைக்கிள் பயன்படுத்துவது தான். இது, கண்டிப்பாக, சுற்றுச்சூழல் அக்கறையினால் இல்லை. அவர்கள், பண்பாடு, நாகரிகம் என்று நம்புவதன் குறியீடாக சைக்கிள் மாறியிருக்கிறது. தினமும், தோராயமாக, முப்பது கிலோமீட்டர் வரை சைக்கிள் ஓட்டுவதாக என் தோழி கூறினார். இங்கு சராசரி ஆயுள் 90 வயது வரை இருக்கலாம் என்று கூறினார். இன்னொரு முக்கியமான விடயம், இங்கு எங்குமே ஆங்கிலத்தில் எந்தப்பெயர்ப் பலகையையும் அறிவிப்பையும் பார்க்க இயல்வதில்லை. டேனிஷ் மொழியில் தான் முழுமையும்.
திருவண்ணாமலையிலிருந்து டென்மார்க் வந்திருந்த பிரியமான நண்பர் ஜேபி -யை, அவருடைய சகோதரி பிரியா வீட்டில் சந்தித்தேன். பிரியா, சுடச்சுட கோழிபிரியாணியும் எலுமிச்சம் ஊறுகாயும் தயார்செய்துவைத்திருந்தார். சற்றும் எதிர்பாராதது. அதுவரை, இத்தகைய உணவை எதிர்பார்த்திராத நான், அதை உண்ணும்பொழுது தான் மீண்டும் உயிர்கொள்வதைப் போல உணர்ந்தேன். இன்னும் சில நாட்களைக் கடத்துவதற்கு, வீட்டை மறந்து இருப்பதற்கு இது போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறேன். அரிசி உணவு இல்லாமல் வாழ்வது, நம் நினைவுகளுக்குக் கூடச்சாத்தியமில்லை போல. இங்கே ஒவ்வொரு நாளும் இருக்கும் ஒவ்வொரு விதமான காலநிலை, நம் தமிழ்ப்பருவத்திற்குக் கொஞ்சம் அசாதாரணமானது தான். எதிர்பாராமல் திடீரென்று மழை அல்லது அதிகக் குளிர் அல்லது சுள்ளென்று வெயில் என்று காலத்தை மூடிக்கொள்கிறது. ஆனால், பரந்த வானமும், மேகமும், ஒளியின் தன்மையும், நீண்ட பகலும் புத்தம்புதியது. இங்கே கோடைக்காலம் முடிவுக்கு வந்துவிட்டதாம். இப்பொழுது, அவர்களே கடிகாரத்தின் முள்ளைத் திருப்பி ஒரு மணி நேரத்தைக் குறைத்துக்கொண்டு எதிர்வரும் பருவத்தைத் தொடர்வார்கள் என்று சொல்லும் பொழுது, ஒட்டுமொத்த இந்த வாழ்வும், ஒரு புனைவிற்குள் நழுவிச் சென்ற உணர்வு ஏற்பட்டது. காலம், மனிதன் உருவாக்கிக்கொள்வது.
இன்று தனியே சாலையில் இறங்கித் திரியும் யோசனை தலையெடுத்துள்ளது. ஏற்கெனவே அப்படி சென்று இரண்டு முறைகள் தொலைந்து இருப்பிடம் கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இன்று மீண்டும் தொலைந்து போகும் திட்டம்!குட்டி ரேவதி

டென்மார்க் பயணம் 3 - இரவும் உறக்கமும் காலக்குழப்பமும்!

மார்க்வெசின் 'தனிமையின் நூறாண்டுகள்' நாவலிலும், யசுனாரி கவபட்டாவின் 'தூங்கும் அழகிகளின் இல்லத்திலும்' வரும் தூக்கத்தனிமையும் இரவும் தூக்கமின்மைப் பழக்கமும் சேர்ந்த கலவையான உணர்வுகள், அந்நாவல்களின் புனைவுலகங்களுக்கு ஆதாரமாகின்றன. 'நேஷனல் ஜியோகிரஃபிக்' பத்திரிகை சில வருடங்களுக்கு முன், தூக்கம் பற்றிய ஒரு சிறப்பான ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டிருந்தது. அதில், தூக்கமே வராத இரு மெக்சிகோ சகோதரிகளைக் குறிப்பிட்டு எழுதியிருந்தது. இக்கட்டுரை தரும் அனுபவத்தையே, 'தனிமையின் நூறாண்டுகள்' நாவலிலும் என்னால் நுகரமுடிந்தது. தூக்கம், ஒரு மரபணுப்பழக்கமா அல்லது தனிமனிதக் குணமா என்று கேட்டால் பெரும்பாலும் தனிமனித வழக்கம் தான் என்று தோன்றுகிறது.

சதத் ஹசன் மாண்ட்டோவின் ஒரு சிறுகதையில், பாலியல் தொழிலை ராப்பகலாகத் தொடர்ந்து செய்யவேண்டியிருக்கும் ஒரு பெண், ஒரு கட்டத்தில் அவளை நிர்வகிப்பவனே வந்து அவளை அழைக்கும் போது, அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து அவனைத் தலையில் அடித்துக்கொன்று போட்டுவிட்டு நிம்மதியாக உறங்குவாள். காலக்குழப்பம், முதலில் தாக்குவது உடலைத் தான். 'ஸ்பேஷ் ஷிப்பில்' பயணித்துப் பார்த்தல், இந்தத் தாக்கத்தை இன்னும் அதிகமாக உணரமுடியும் என்று நினைக்கிறேன்.

என்னை ஒட்டி இருக்கும் சென்னை நண்பர்கள், அடுத்து என்ன செய்யலாம் என்று ஒவ்வொரு நாளும் இரவு எட்டு மணிக்குத் தான் திட்டமிடுகிறார்கள். அதன் பின் வாழ்க்கை இரவு 2 மணி வரை நீளும். அதிகாலையில் பெரும்பாலும் இவர்கள் யாரையும் தொலைபேசியிலோ ஏன் நேரிலோ கூடப் பிடிக்கமுடியாது. இரவு நேரங்களில் தீவிரமாகவும் மிக விழிப்புடனும் கவனத்துடனும் வேலை செய்யும் படைப்பாற்றல் மிக்கவர்களுடன் வேலை செய்ததில் அறிந்தது, அவரவர் உடல் நலத்திற்கும் வேலைசெய்யும் முறைக்கும் ஏற்ற தூக்கம் அவசியம் என்பதே. அதுவே, அவரவரின் படைப்பாற்றலுக்கு ஆதாரமாக இருக்கிறது. விமானப்பயணம் தரும் உடலியங்கியல் குழப்பத்தைத் தவிர்க்க, வந்து தரையிறங்கியது 'முதல்' பகல்வேளையைத் தூக்கமின்றிக் கடப்பது தான். பகல் நேரம் நீளமானதாக இருப்பதால், தூக்கத்தைத் தவிர்ப்பது சிரமமாக இருக்கும். என்றாலும், இரண்டொரு நாள்களில், காலமாறுபாட்டைப் பழக்கிக் கொண்டால், தனியாக இயங்குவது எளிதாகிவிடும். 

கோபன்கேஹன் கவிதை விழாவை ஒருங்கிணைத்த பெண்கள், நிகழ்வும் விருந்தும் முடிந்த அந்த இரவு, தூங்குவதற்காக அவரவர் இடம் நோக்கி விரைந்ததைப் பார்க்க தூக்கத்திற்கான பசி போன்று அது இருந்தது. தூக்கம், மனதின் பாதாளம் போன்றது. கண்டுபிடிப்புகளுக்கும் விஞ்ஞானத்திற்கும் கவிதைக்கும் புனைவிற்கும் கற்பனைகளுக்கும் தூக்கம் தான் மூலம். மனித மனதின் சிக்கலான வெளிகளின், உலைவுகளின் அழுத்தத்தை, அவரவர் கனவுகளில் காணும் படிமங்கள் வழியாகவே தீர்த்துக்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். மனித மனவெளி, அந்த அளவிற்கு, தன்மயமானது. 

என் பள்ளி நாட்களில், குறிப்பாக, பரீட்சைக்குப் படிக்கும் நாட்களில் என் அம்மா தான் நான் தூங்கும் நேரத்தைத் தீர்மானிப்பவராக இருந்தார். அதிகாலையில் எழுப்பிவிடுவது அல்லது பரீட்சை முடிந்த நாட்களில் தூங்கும்பொழுது, இடையூறு இல்லாமல் பார்த்துக்கொள்வது என்று. இன்று, என் தூக்கத்தை நான் ஒருவரே முடிவு செய்யும் விடயமாக, மிகவும் விடுதலையான ஒன்றாக மாறிவிட்டது. பல சமயங்களில், தொடர்ந்து வேலை செய்துவிட்டு, திட்டமிட்டு நேரம் ஒதுக்கித் தூங்குவதும் உண்டு. பெரும்பாலும், இரவு தான் எழுத வசதியானது. இரைச்சலற்ற சூழல், எழுத வசதியாக இருக்கும். கனவின் வெளி போல மெளனமாக, குரலற்று இருக்கும். இப்பொழுது நான் தங்கியிருக்கும் Amagerbro என்ற இடம், சிறிய சத்தமும் இல்லாமல் இருக்கிறது. எப்பொழுதும் இரவு போல் இருக்கிறது. சூரியனும் பறவைகளும் சத்தமில்லாமல் வந்து போகின்றன. இப்பயணத்தில் ஒரு நாள், கடலின் கரை சென்று பார்க்கவேண்டும், அலைகளாவது சத்தமிடுகின்றனவா என்று.குட்டி ரேவதி