நம் குரல்

அது 'பீப்' பாடல் இல்லை; 'ஹேட்' பாடல்!


பீப் பாடலுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. அது வெறுமனே ஒரு பாடலில் அல்லது சினிமாவில் 'கெட்ட வார்த்தையைப்'பயன்படுத்துதல் குறித்த உரிமை, கருத்துரிமை என்பதாகத் திசைதிருப்பப்படுகிறது. அநியாயம்.

அந்த 'பீப்'பாடல் ஒரு hate song. பெண் வெறுப்புப்பாடல். இலக்கியம், சினிமா, ஊடகம் என எல்லா துறைகளிலும் வியாபித்திருக்கும் பெண் வெறுப்பின் சீழ் தான் இப்படி அதிகாரத்துடன், மறைமுக இச்சையுடன், நமுட்டுச்சிரிப்புடன் வெளிப்பட்டிருக்கிறது.

இதையெல்லாம் கலையாகவும் கலையுரிமையுடனும் ஒப்பிட்டு முழக்கமிடுவது என்பது செய்வதையும் செய்துவிட்டு அப்படிச் செய்யவில்லை என்பதான தப்பித்தல் தந்திரம் தான்.

இன்றைய சமூக ஆண்களிடம், தாய்ப்பாசம், அண்ணன் - தங்கைப்பாசம், தோழி, காதலியர் என்பதெல்லாம் அர்த்தமற்ற, உணர்வுகளற்ற வெற்று வார்த்தைகள். எல்லாமே Use & Throw.
காலங்காலமாக, கலை ஊடகங்களால் விதைக்கப்பட்டுவந்த 'ஆணாதிக்க' (அரதப்பழசான வார்த்தை தான்) பழக்கங்கள் தாம் இன்று அனிருத்தாகவும் சிம்புவாகவும் வெடித்திருக்கிறது.

பெண்கள் மீது குருட்டாம்போக்கில் அமிலத்தை வீசும் ஆண்களாய் இன்றைய தலைமுறை மாறிவிட்டதற்கு, அதிலும் எந்தக்குற்றவுணர்வுமில்லாமல் பொதுவெளியில் வெளிப்படுத்த வாய்ப்பு உண்டாக்கித் தந்ததற்கு, நம்முன் உள்ள எல்லா ஊடகங்களும் பொறுப்பு ஏற்கவேண்டும்.
நம்மைச் சுற்றியுள்ள எந்த ஆணுக்கும் குறைந்தபட்ச அளவில் கூட பெண்கள் மீது மரியாதையோ அல்லது அது இல்லாதது குறித்த அவமானமோ இல்லை.

எங்கேயாவது அப்படி ஒன்றிரண்டு ஆண்கள், பெண்கள் மீது நன்னடத்தையுடன் நடந்துகொள்வதைப் பார்க்க நேர்ந்தால் வேறு கிரகம் வந்துவிட்ட உணர்வு எழுகிறது.

நண்பர்கள் எல்லோரும் சமீபத்திய பயணத்தில், டி.ராஜேந்திரரின் அண்ணன் - தங்கை பாசப்பாடல்களைக்கேட்டு சிலாகித்துக் கொண்டு வந்தோம்.
அப்படியான உறுதிப்பாடான பாடல்கள் இன்றைய வாழ்க்கையில் மிகவும் பொருத்தமற்றவையாகவும் தொடர்பற்றவையாகவும் ஆகிவிட்டதன் நவீன விடங்கள் தான் 'அனிருத் - சிம்பு'
உண்மையில், இதை எதிர்த்துப் போராடவேண்டியவர்கள் மற்ற ஆண்கள் தாம். இப்படியான பெண் வெறுப்புப் பாடல்கள் சமூகத்தில் மற்ற ஆண்களுக்கும் இழிவைச் சம்பாதித்துத் தருகிறது என்று நம்பினால் 'ஆண்கள்' தாம் தெருவிறங்கிப் போராடவேண்டும்.

திரைத்துறையில், 'அனிருத் - சிம்பு' தொடர்ந்து இயங்குவதைத் தடைசெய்யவேண்டும்.
இப்படியான 'பெண் வெறுப்பு' ஆண்கள் திருந்துவதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, அவர்களுக்குப் பிறக்கும் மகள் மீது, இந்தச் சமூகம் செலுத்தும் வன்முறையைக் காண நேர்வது தான் என்பது எனது என்றென்றைக்குமான நம்பிக்கை.
ஆனால், அப்படியெல்லாம் நிகழ்வதற்குள் மற்றவர்களின் மகள்கள் மீதெல்லாம் கடுமையான வன்முறையை இவர்களே ஏவிவிட்டுவிடுவார்கள் போல. அதுவரை, நாம் காத்திருக்கவா போகிறோம்.

குட்டி ரேவதி