நம் குரல்

உடலை மொழியும் மரபு - 4பெண்ணின் பாலியல் மொழி

உடலை மொழிதல் என்பது கரைவெட்டும் வேலையாக ஆகிவிட்டதோ என்று சிந்திக்கும் விதமாக பல நிகழ்வுகள் தமிழ்த்தளத்தில் நடந்தேறிவிட்டன. வாய்க்காலுக்கு சீராக நீர் கொண்டு செல்லும் மடையை வெட்டிக் கலைப்பதில் கிளுகிளுப்பும் அதிகாரப்பேரமும் நிறைந்திருந்தாலும் ரசிக்க ஏற்றதன்று. உடலை மொழிதல் புதிதும் அன்று. இலக்கிய வரலாற்றின் சரடைப் பிடித்து ஏறினால் அத்தகைய உடலை மொழிதல் என்பது எந்தக் காலத்திலும் துண்டிக்கப்படாமல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அது சுட்டிக்காட்டிய உடல் அசைவுகளும் அதற்கான சமூக இயக்கங்களும் தாம் வேறானவை. உடல் இன்று தோன்றியதில்லை. அதிலும் பெண்ணுடல் சொல்லுக்கும் மொழிக்கும் புதியதன்று. ஆனால் உடலென்பதை வெறும் சொல்லாகவும் மொழியாகவும் மட்டுமே பார்க்கப்படுவதில் நிறைய ஆபத்துகள் பெண் இனத்திற்கே இருக்கின்றன.


மரபுடன் இணைய முடியா கவிஞர்கள் தனிமையில் வாடுவதாய் எனக்குத் தோன்றும். ஆயிரமாயிரம் ஆண்டுகள் கவிதை மரபில் தன்னை இணைக்க முடியாமல் போவது என்பது ஓர் அறியாமையாகவும் அல்லது அப்படி இணைவதை மறுப்பதை விடுதலையாகவும் எண்ணுவது என்பது துணிவின்மையாகவும் தோன்றும். அது ஒரு நீளமான வெள்ளம் பெருக்கெடுக்கும் ஆறு. அதை முழு வீச்சுடன் நீச்சலடித்துக் கடந்து செல்லத் தேவைப்படும் பலம் என்பது சாதாரணமானது அன்று. மரபு என்பது யாப்பையும் வார்த்தைகளையும் கயிறு கட்டி இழுக்கும் மாய வித்தை மட்டுமே அன்று. காலந்தோறும் மானுடவாழ்க்கைக்கான விடுதலையை உய்த்தறிவதற்கான தனிச்சிறப்புமிக்க, முழுமையான வழியையும் அதற்கான வேட்கையையும் சுமந்து வருவது.


இன்றைய தேதியில் வகுப்புகளெடுப்பதற்காக பலமுறையும் எனக்கான அந்தரங்க ஊக்கத்தைப் பெறுவதற்காகவும் கவிதையின் வழியே பின்னோக்கிப் பயணிக்கும் வாய்ப்புகளை எடுத்துக்கொண்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் உடலை மொழிதல் என்பது பலருடைய கவிதைகளில் ஆண்-பெண் என்ற பேதமின்றி ஒரு பொதுவான வினையாகவே இருந்திருக்கிறது. அதற்கான இயல்பூக்கத்தை அவர்கள் புவியியலாலும் வரலாற்றாலும் ஏன் மொழியாலும் ஒன்றுபட்ட நம் இனத்தின் இரத்த ஓட்டத்திலிருந்தே பெற்றிருக்கவேண்டும். அதாவது இந்தக் குறிப்பிட்ட இனத்திற்கான பொதுமையான உணர்வுக் குவியல் என்ன என்பதை அந்தக் கவிதைக்குரல் தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்கிறது. தூய தமிழினம் என்ற அர்த்தத்தில் இதை நான் சொல்லவில்லை. அதை மீறியும் மொழியின் செழுமை வேர்விட்ட சிந்தனையிலும் அது மலர்த்திய உணர்ச்சிகளிலும் வெடித்த கவிதைகளின் வெள்ளப் பெருக்கு நம்மை ஈர்க்கிறது. அதனுள் பாய்ந்து குதித்து நீச்சலடிக்கத் தூண்டினாலும் நீருக்குள் விழுந்த பின்னர் மூச்சடக்கிச் செத்துப் போய்விடக்கூடாதே என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை.


உடலுடன் நெய்யப்பட்ட வார்த்தைகளை கவிதையாக்கிய பெருவெளியே நவீன தமிழ்க் கவிதையினது. உடலைக் கட்டிப்போட்ட சிந்தனைகளை மறுத்ததும் விட்டு விடுதலையாகிப் பறத்தலை ஊக்குவித்ததும். உடலை மையமாகச் சுழன்று வரும் கவிதைச் சுனை தான் நமது. இந்நிலையில் பாலிமை நறுக்கப்பட்ட பெண்ணுடலின் யோனி என்பது ஒரு பரந்த பிரதேசத்தைப் போன்றது. அதை ஒரு சிறு வார்த்தைக்குள் அடக்கமுடியாத படிக்கு வீறு கொண்ட எல்லைகளற்ற முள்வேலிகளற்ற வெளியாகப் பார்க்கலாம். அதை இன்னார் இன்னாருக்கென்ற அரசியலாக்கியதும் முகாந்திரங்களாக்கியதும் தாம் அது இறுக்கமாய்ச் சுருண்டு ஒரு தென்னங்காயாக்கிக் கொண்டது தன்னை. பின் நாயின் கையில் சிக்கிய தென்னம்பழம்! ஓடும் உடைக்கப்படாமல் கொப்பரையும் சுவைக்கப்படாமல்.


பொருளுக்கு வருவோம். இன்றும் என்னைக் காண வரும் நோயாளிகளிடம் நான் கூறுவதுண்டு. எந்த ஒரு பெண்ணும் தன் பாலுறுப்புகளை ஆரோக்கியமாகப் பேணுதல் வேண்டும் என்பது. ஒரு பெண்ணின் நெஞ்சுரமும் சிந்தனைத் தெளிவும் காதலும் கவின்திறனும் அவள் உடலில் பாயும் இயக்கு நீர் அல்லது நாளமில்லாச் சுரப்பிகளின் நொதிகளின் சீர்மையால் தாம். ஆனால் அப்படியான அறிவையும் அதைப் பெறுவதற்கான வாய்ப்பையும் அத்தகைய அறிவுநூல்களை வாசிக்க வாய்ப்புகள் அதிகம் கொண்ட பெண் மருத்துவர்களிடம் கூட நான் கண்டதில்லை. உடல், பாலிமை, கலவி போன்றவை பற்றிய கருத்தியல் வெளிப்பாடும் அவற்றின் ஆரோக்கியமின்மையும் அவரவர் உடல்நிலை பொருத்து வெளிப்படுகிறது என்பது மறுக்க முடியாதது. அதற்கான மருத்துவ முறைகளுக்கான வாய்ப்பும் வசதிகளும் அற்றது நமது தேசம். உடல் என்பது எங்குமே பெண்ணுக்குப் பேச்சுப் பொருள் அல்ல. அது ஓர் உயர்திணை விஷயமுமல்ல. இந்நிலையில் உடலை மொழிதல் என்பது கயிற்றில் நடப்பது போன்றது. கயிறு கட்டப்பட்டிருக்கும் முனைகளின் பலம் அறியாமல் நடக்கும் போது வெறும் சாகசமாகவே முடிந்து விடலாம்.


ஒவ்வொரு சொல்லும் சமூக அசைவுக்கான நெம்புகோலாக மாறியிருப்பதை சமூகவியலுக்குள் நுழைபவர்களால் உணரமுடியும். அப்படி மாற முடியாத சொற்கள் ஆணாதிக்க விட்டத்தில் நூலாம்படைகளைப் போல இன்னமும் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அப்படியான சில நூறு சொற்கள் சித்தர் தத்துவக் கலைக் களஞ்சியத்திலேயே இருக்கின்றன. அரும்பொருள் சொற்கள் அவை. உடலின் புதிர்களையும் அவற்றை விடுவிக்கும் பதங்களையும் ஒரே சொல்லில் கொண்டாளுபவை. இதே போல சங்க இலக்கியத்தில் உலவிய சொற்களுண்டு. பின் அவை காலம்காலந்தோறும் மழுங்கடிக்கப்படும் மனிதச் செயல்பாடுகளால் திறமிழந்து செத்து மடிந்தன. சமயம் வாய்க்கும் பொழுது அப்படியான சொற்களை உங்களின் பார்வைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறேன்.


குட்டி ரேவதி

அந்தத்தாய் ஒரு கொலை செய்தாள்
அந்தப் பெண்ணுக்கு முப்பது வயதுக்குக் குறைவாகத் தான் இருக்க வேண்டும். உடல் மெலிந்து இரத்த சோகையுடன் கண்களும் முகமும் வெளுத்து காணப்பட்டாள். நேற்று இரவு தான் தனது ஏழாவது குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறாள். இனி அவளால் ஓரடியும் எடுத்து வைக்க முடியாது என்னும் அளவிற்கு அவள் தரையில் கிடந்து இழுபட்ட நைந்த துணியைப் போல் இருந்தாள். அவள் கண்கள், கல் வீசினால் கேட்கமுடியாத கிணற்றின் ஆழத்தில் தளும்பும் நீர்மேட்டை ஒத்திருந்தன. முகவாய் சட்டென்று கண்டுணர முடியாத ஒரு மிருகத்தை ஒத்திருந்தது போலும் தோன்றியது. அவள் தன் வாயைத்திறந்து பேசுவதற்கான சக்தியை சேமிக்கவே இன்னும் ஒரு வாரம் எடுக்கும். அவளுக்குக் குடும்பக்கட்டுப்பாட்டு சிகிச்சை முறையை அளிப்பதென்றால் கூட அவளுக்கு நிறைய ஊட்டச்சத்தையும் ஓய்வையும் அளிக்க வேண்டியிருக்கும். அந்த இடைவெளிக்குள் மீண்டும் ஒரு குழந்தை உருவாகிவிடக் கூடாதே என்ற கவலையை நகைப்பாய் வெளிப்படுத்தினார் அந்த முதுநிலை மருத்துவர். ஆகவே மாறாக அவளின் கணவனுக்கு அந்தச் சிகிச்சையை அளிக்கும்படிக் கட்டளையிட்டார்.
நான்கு தொடர் ஆண் குழந்தைகளுக்குப் பின் மூன்றாவது பெண் குழந்தை நேற்றையது. இரண்டாவது பெண் குழந்தை பிறந்த மறு நாளே ஈரத்துணிகளை அந்தக் குழந்தையின் உடல் முழுவதும் அடுக்கடுக்காய் சுற்றி வைக்க அது வலிப்பு வந்து நுரை தள்ளி இறந்தது. நேற்று பிறந்த பெண் குழந்தை எந்த வித பணத்தொகையையும் பெற்றுக் கொள்ளாமல் ஒரு பணக்காரக்குடும்பத்திற்குத் தத்துக் கொடுக்கப்பட்டிருந்தது. சில வரிகளாலான ஒப்பந்தம் போதுமானதாயிருந்தது இருவர் தரப்பிலும். ஒரு நாள் கூட நிறைவெய்தாத அக்குழந்தை என்னவிதமான உலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும்? ஒவ்வொரு பிரசவத்திற்குப் பின்னும் மருத்துவர் அவளுக்குக் குடும்பக்கட்டுப்பாட்டை வலியுறுத்திய போது அவள் பிடிவாதமாக மறுத்திருக்கிறாள். அந்த நாட்களில் அவளின் கணவன் வேறு பெண்ணைத் தேடிப் போய்விட்டால்? கணவனும் அதையே ஆமோதித்தான். அவளால் முன்பைப் போல தனக்குத் தினமும் திருப்தி அளிக்க முடியாமல் போய்விட்டால்?வறுமையும் அறியாமையும் ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றன. அந்தப் பெண் மீண்டும் மீண்டும் மயக்க நிலைக்குச் சென்று கொண்டிருந்தாள். அவளை விட்டு விலகி வந்தேன். சேலத்தின் கோடையினும் அந்தப் பெண்ணின் உடலில் படர்ந்திருந்த தாங்கவியலா வேதனையும் பலவீனமும் மரணத்துக்கு மிக அருகில் இருந்த அவளின் நினைவுகளும் கொதிப்பைத் தந்தன. மரணத்தை ஏந்தி இருக்கும் கோப்பை போல அவள் உடல் காட்சியாகியது. பின் வெளியே வந்தேன். மனோ தனது நண்பர்களுடன் காத்திருந்தான். பல கிலோமீட்டர் தூரம் நானும் அவனும் எந்தவித முனைப்பும் இன்றி கால்கள் ஓய நடந்தது சேலத்தின் மாலைத் தெருக்களை அலங்கரித்தது போல இருந்தது. மேற்கிலிருந்து எழும்பி வந்த கருநீலப் புகையைப் போன்ற மேகவிரவல் மழையாய் இறங்காமலேயே போயிற்று. இரவு இன்னும் அதிகமாய் வெக்கையாக இருக்கிறது. எந்தவொரு மரத்தின் ஒற்றையிலையும் மூச்சுவிடும் தன் அசைவைக் காட்டாமல் இறுக்கமாய் இருக்கிறது. முழு நிலவு மேகங்களுக்கிடையே வேகமாய் ஊர்கிறது, இவையெல்லாம் தனக்கு மிகவும் பழக்கம் தான் என்பதைப் போல. ஒருவேளை அந்தத் தாய் தன் வாழ்க்கையின் அவலம் அந்தக் குழந்தையின் வழியாய் பிரதிபலிப்பதை விரும்பாமல் தான் அதைக் கொலையைச் செய்திருப்பாளோ?
குட்டி ரேவதி

காபியும் வன்முறைத் திரைப்படங்களும் - 3
உடலைப் பற்றிய குறிப்புகள்காபி குடித்ததும் உடலில் இரத்தம் இடம் வலமாயும் வலம் இடமாயும் மாறி மாறிக் குழப்பத்துடன் சுழலத் தொடங்குகிறது. உடல் புயலின் மையத்தில் அகப்பட்டுத் துடிப்பதைப் போல. அவ்வாறே தமிழ்ப்படங்களின் அளவிலாத வன்முறையும் உடலைத் துடிக்கச் செய்கிறது. எந்த உடலின் மீது இறங்கும் காமமும் காதலும் தன் உடல் மீது இறங்குதல் போலவே வன்முறையும் என்னுடல் மீது இறங்கி நசுக்கிறது. என் இரத்தத்தை உடலின் நாலா திசையும் அலைபாயச் செய்கிறது. துடிக்கும் இதழ்கள் தேடும் வார்த்தைகளைக் கண்டடையும் துணிவு இன்மையால் இன்னும் சில்லிடுகின்றன. கைகள் பனி பொழியும் இரவுகளின் வெளியைத் ஆதரவுக்காய்த் துழாவுகின்றன. இல்லாத ஒரு வெளி நோக்கித் தப்பித்து ஓடத் தவிக்கிறது உடல். குழப்பமானதொரு இரவைத் தொடங்கி வைக்கிறது வன்முறை மிகுதியானதொரு திரைப்படம். காபி பருகியதும் உரையாட ஒரு நண்பனைத் தேடும் மேஜையைப் போல் இத்திரைப்படங்களும் உலகத்தின் விளிம்பிற்கு அழைத்துச் செல்கின்றன. கடைசியாக காபியென்றெண்ணி தினந்தோறும் ஒரு கோப்பைக் குருதியைக் குடித்துக் கொள்கிறது தமிழகம்.குட்டி ரேவதி

பெண்ணுடல் ஓர் இயந்திரம் - 3பெண்ணின் பாலியல் மொழி

பாலியல் சொற்கள் பெண்களுக்கு எங்குமே உதவுவதில்லை, ஆண்களுக்கு உதவும் அளவிற்குக் கூட. பெண்களை வர்ணிக்கவும் வசவிற்கும் பெண் பாலியல் சொற்களை ஆண்கள் பயன்படுத்தும் அளவிற்குக் கூட பெண்கள் மருத்துவரிடம் தங்கள் நோயைச் சொல்லவோ தோழிகளிடம் அல்லது பெற்ற அன்னையிடம் உடல் இன்னலைச் சொல்லவோ கூட பயன்படுத்துவதில்லை. அந்த அளவிற்கு இந்தச் சொற்கள் பாலியல் சுமையையும் அரசியல் பளுவையும் ஏற்கின்றன. பண்பாட்டுச் சுமை என்று சொல்ல முடியாது. பண்பாட்டு ஊடகங்கள் எல்லாவற்றிலும் இந்தச் சொற்கள் அள்ளித் தெளித்தாற் போலும் இலை மறை காயாகவும் விரவிக் கிடக்கின்றன. தனது பால்நிலையை அரசியல் பூர்வமாகவும் சமூகப் பூர்வமாகவும் அறிந்த எந்த ஒரு படைப்பாளியும் அந்தச் சொற்களை அதே அரசியல் மற்றும் சமூகத்தின் ஆழம் தெரியாமல் பயன்படுத்த மாட்டார்.


இன்றைய காலகட்டத்தில் பெண்ணின் உடல் என்பது முற்றிலும் ஓர் இயந்திரமே. மேலும் அதன் உறுப்புகளை ஓர் இயந்திரத்தின் பாகங்களைப் போலவே அணுகுவது என்பதை, நவீன படைப்பிலக்கியத்திலும் சரி அறிவியல் தளத்திலும் சரி ஒரு நேர்மையான போக்காகவும் நவீனப் பார்வையாகவும் தெரிவது தான் பெருத்த சோகம். உடலின் முழுமையைப் பேசிய மெய்யியல் அறிவுமரபின் தொடர்ச்சியில் வந்தவர்கள் நாம். நமது உடலின் தனிப்பட்ட பாலியல் சொல்லுக்கு எந்தத் தனித்த பாலியல் சுமையும் இல்லை. அந்தச் சொற்கள் உச்சரிக்கப்படும் பொழுது அவை தன்னுடன் இழுத்து வரும் அரசியல் சமூக பண்பாட்டு அர்த்தங்கள் எல்லாமும் தான் முக்கியமானவை. அத்தகைய சொற்கள் புணர்புழையாகவோ யோனிமடலாகவோ கருத்தரிப்பின் ஆதாரத் திணையாகவோ தாம் எழுச்சி கொள்கின்றன. சொற்களின் இணைப்பாகவே உச்சரிக்கப்படுகின்றன. இயந்திரத்தின் பாகங்களைப் பெயரிட்டு அழைப்பதைப் போல இச்சொற்களையும் உதிரிகளாக அரசியலுக்குப் பயன்படுத்துவது என்பது, ஒரு பெண் தன்னுடைய நோய் தீர்க்க ஒரு பெண் மருத்துவரை அணுகினாலும் சொல்ல இயலாத சமூகநிலை நீடிப்பதைத் தொடரவே செய்யும். அது பெண்ணினத்திற்கு எதிராகவே முடியும். பெண்ணினத்துக்கு எந்த வித நன்மையும் பயக்காது.


பெண்ணின் உடலை ஒரு பாலியல் பிரதியாகவே பார்க்கலாம். சமூகத்தின் எல்லா வகையான வன்மங்களையும் வக்கிரங்களையும் புதைத்து வைத்துக்கொள்ள, எழுதி வாசித்துக் கொள்ள, வெளிப்படுத்திக்கொள்ள என பெண்ணின் உடலை ஒரு பாலியல் பிரதியாக நீலப்படத்தின் ஒரு சுவரொட்டியாகவே மாற்றிக்கொள்கிறது இச்சமூகம். உறுப்பு ஒவ்வொன்றையும் அலங்காரப்படுத்திக்கொள்வதிலும் அதன் வழியாக உடல் மொழியை வெளிப்படுத்துவதிலும் கூட இதே வகை குரூரங்கள் தாம் வெளிப்படும் படியாக வற்புறுத்துகிறது. அவ்விதமாகத் தான் யோனியையும் முலையையும் கூட நமது சிந்தனையில் ஓர் உறுப்பாக இருத்துகிறதே அன்றி அதை ஒரு இயக்கத்திற்கானதாக ஆக்குவதில்லை.இன்றைய தமிழ்ச்சமூகத்தில் பெண்ணின் பாலியல் உடல் என்று ஒன்றை மொழி வழியாக உருவாக்குவதில் ஈடுபட்டால் அது எத்தகையதாக இருக்கும்? தட்டையான மொழிப் பகிர்வுகள், செயற்கையாக ஊசியால் செலுத்தப்பட்ட மருத்துவச் சிந்தனைகளால் பெருத்த உடல் மொழிகள், உடலுக்கும் வாழ்க்கைக்கும் பொருந்தா அந்நிய பாணி உடைகள், பாலியலின் வளம் அற்ற பெண்ணுடல், அதனால் உருவான நோய்களால் பாலிமையைப் பற்றிய பேச இயலாமை, சப்பென்று இருக்கும் பாலிமை உணர்ச்சிகளால் ஆகிய உடல் அல்லது தீவிரமான பாலிமை என்பதை முரட்டுத் தனமான இயைபு அற்ற உணர்ச்சிகளால் வெளிப்படுத்துதல் என பெண்ணின் உடல் தீவிரமான பரிசோதனைகளுக்குப் பெண்களாலேயே உட்படுத்தப்படுவதாய்த் தான் இருக்குமோ என்ற சந்தேகமே தோன்றுகிறது.எனது கணிப்பில் இன்றைய நூற்றாண்டில் பெண்கள் அதிகமும் இழந்திருப்பது அவர்களின் பாலிமைச் செழுமையைத்தான். பாலிமையை வெறுமனே பெண்மை என்ற ஒற்றைச் சொல்லால் வரையறுக்க முடியாது. இந்த உடலுக்கு ஊக்கமும் புத்துணர்வும் தரும் பிரத்யேகமான இயங்கியல் கொண்ட உறுப்புகளுடனான உறவை, பெண்கள் தரம் குறைந்த தமது ரசனைகளால் முறித்துக் கொண்டனரோ என்ற இரக்கம் மேலிடுகிறது. நிறைவாக, பெண்ணியச் சிந்தனை என்பதே பெண்ணுடலின் பால்வினை உறுப்புகளுடனான இயல்பான ஆரோக்கியமான மேம்பட்ட உறவுகளால் உருவாவதே என்பதை எப்படி நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம்? இயற்கையின் புத்துருவாக்கத்தை மறுப்பதெல்லாம் அதிகாரமயமானதாக ஆதிக்கமயமானதாக ஆண்மையென்பதாகக் கருதப்படும்போது இயற்கையின் ஓரம்சமான பெண் பாலிமையை முழுமையான அளவில் புத்துருவாக்கம் செய்வது தானே பெண்ணியச் சிந்தனையாக இருக்க முடியும்? இயல்பான காம ஊக்கத்தை ஆரோக்கியமற்ற பால்வினை உறுப்புகளால் ஒரு பொழுதும் தர இயலாது என்பதைப் போலவே ஆரோக்கியமற்ற பாலியல் சொற்பயன்பாடுகளும் சமூகச்செயல்பாடுகளுக்கு இயல்பூக்கம் அற்றவையாகத் தான் இருக்கும்.பாலியல் கவிதையின் மொழி என்பது தன்னுடலை அன்றாடம் பேணும் பெண்ணுடலின் பால்வினைச் சுரப்பியுடன் நேரடியான உணர்வுப் பகிர்வு கொண்டதாக இருக்கும். ஆண் – பெண் பொதுப் பாலிமைக்கான கூட்டுறவை மொழிபெயர்க்கும் சொற்களுடையதாக இருக்கும். ஆதிக்க அரசியல் பொதிந்த பாலிமைச் சொற்களின் அர்த்தங்களுக்கு புது விளக்கம் தரும். எத்தகைய மலிவான வசவில் பயன்படுத்தக் கூடிய பாலியல் சொல் என்றாலும் கவிதையில் அதற்கு இடமிருக்கிறது என்றாலும் அதே வினையை கவிதை வழியாக அது ஆற்ற முடியாது தானே!

(மீண்டும் எழுதுவேன்)

குட்டி ரேவதி

ஆண் உடல் - 2

பெண்ணின் பாலியல் மொழி
ஆணுடலும் பெண்ணுடலும் ஒன்றையொன்று புத்தாய்வு செய்வதற்கான நோக்குடனும் இவ்வுலகம் எந்தக் கணத்திலும் அலுப்பூட்டாதபடி இருப்பதற்கும் உருவானதாக இருக்கும் என்று நம்புகிறேன். அடிப்படையில் இரண்டு உடல்களும் வேறு வேறு என்றாலும் இரண்டின் தேவைகளும் நிரந்தரமானவையாகவும் சமமானதாகவும் இருக்கின்றன. இந்நிலையில் ஆண் உடல் என்பது பெண்ணுரிமைகளுக்கும் பெண் விடுதலைக்கும் எப்படி எதிரானதாக மாறுகிறது என்பதை அறிவது அவ்வளவு எளிதானதாக இல்லை. ஏனெனில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாகவும் ஒவ்வொரு வரலாற்றையும் கொண்டு ஆண் உடல் பெண் உடலுக்கு எதிரான ஆதிக்கம் பெறுகிறது. இயற்கையின் இயல்புகள் படி ஒன்றுக்கொன்று நிரந்தர ஈர்ப்பைக் கொண்டிருக்கும் இவ்வுடல்கள் சமூகம் சார்ந்த அதிகாரங்களைத் தன் மீது சுமத்திக்கொள்ளும் போது தான் மற்றைய உடலுக்கு எதிரானதாக மாறுகிறது.


உடலுறவில் இரு உடல்களும் ஒரே விதமான விசையுடன் இயங்கினாலும் அவ்வமயம் எந்த ஓருடல் கருத்தியல் அதிகாரத்தைப் பெற்றுள்ளதோ அந்த உடல் மற்ற உடலை ஒடுக்குகிறது. அது ஆணுடையதாகவும் இருக்கலாம் பெண்ணுடையதாகவும் இருக்கலாம். நமது பொதுச்சிந்தனை என்பதே கூட ஆதிக்கமும் அதிகாரமும் மிக்க உடலை ஆண் உடல் என்றே பழகி வந்திருப்பதால் இவ்விடத்திலும் அதிகாரம் மிக்கதை ஆதிக்கம் மிக்கதை ஒடுக்கவிரும்புவதை ஆணுடல் என்றே கூறுகிறோம். திரைப்படங்களும் விளம்பர உலகமும் பத்திரிகை உலகமும் இத்தகைய ஆணுடலுக்கான இலக்கணங்களைத் தொடர்ந்து படைத்தளிப்பது இன்னும் இன்னும் இத்தகைய ஆணுடல் உருவாவதற்கான மன அவசத்தையே சமூகத்திற்கும் ஏன் பெண்களுக்குமே கூட வழங்கி வருகிறது. பெண்கள் அத்தகைய ஆண்களையே தமக்குப் பொருத்தமான ஆண்களாகவும் கற்பனை செய்து வருகின்றனர். ஆண் உடல் என்றால் அதிகாரத்தை மற்றவர் மீது செயல்படுத்துவதாக இருக்க வேண்டும் என்ற கருத்திற்கு நமது பிடரிமனமும் பழகியிருக்கிறது. அதிகாரம் என்பதையே ஆண்மை என்கிறோம். ஆளுமையை அன்று. இவ்வாறு பெண்ணுடல் ஆணுடல் குழப்பம் சமூகத் தளத்தில் நிகழ்ந்து விட்ட நிலையில் ஆண் உடல் என்பதைத் தற்பொழுது எழுத்து மொழியில் எப்படி வரையறுப்பது?


அரசு அதிகாரம், போர் அரசியல் போன்றவற்றைப் போலவே சாதிய வன்கொடுமையை நிகழ்த்துவதற்கான போர்க்களமாக பெண்களின் யோனி என்பது தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்படுத்தப் பட்டு வருவது நாம் அறியாதது அன்று. கவிஞர் தில்லையின் கவிதையான ‘எரிந்தும் நூராத தணலுக்குள் போய் வருவோம் ஒரு முறை.
போரிட்டு மடிந்த பெண்ணுடலை
யுத்த நிலங்களில்
தழுவிப் புணர இழுத்துவருகிறான்
இராணுவ வீரன்
அவனுடைய
ஆண்குறி
19.99 கிலோ வெடிமருந்து
நிரம்பிய குண்டின்
வேகத்தை ஒத்ததாயிருந்தது
பெண்ணுடலில்
மீதமிருந்த ஆடைகளுமில்லை....
அடி..... கொல்லு...... என்ற சத்தம்
மட்டுமே அச்சமூட்டியது
அடுத்த கணமொன்றில்
யோனி தின்று நாக்குத்தொங்க
நகைப்புக் காட்டுகிறான்
இராணுவ வீரன்
அரையும் குறையுமென
ஒரு வீடியோ காட்சி
இணையங்களில் புகைப்படங்கள் என
நீள்கிறது
பெண்ணுடல் மீதான
ஆணாதிக்க கொடுமைகள்.
எமது கண்கள் முன்னே
இரத்தம் கசிய சிதைத்த
மனம்பேரியையும்
கோணேஸ்வரியையும்
சாரதாம்பாளையும்
கிருசாந்தியையும் கடந்து
பேரினவாத யுத்தத்தில்
எத்தனை பெண்போராளிகளை
வெடிமருந்து நிரம்பிய
ஆண்குறிகள்
தின்று தீத்திருக்கும்?
அதை நம்பமறுக்கும்
ஆணாதிக்க அரசியல்
இணையங்களில் கேவலமாய்
நம்பரும் வட்டமும் வரைந்து
பெண்ணுடலை
ஆய்வு செய்யும் கொடுமைகள்
ஆணாதிக்க பிசாசுகளே
நீங்கள் யாராக இருந்தாலும்
எரிந்தும் நூராத தணலாய்
இன்னும் ஏன் இருக்கிறீர்கள்
தூஊ நூர்ந்து போங்கள். (நன்றி: ‘பெண்ணியம்இணையத்தளம்)
மேற்கண்ட கவிதையில் வெடிமருந்து நிரம்பிய ஆண்குறிகள் என்று, கருத்தியலை கவிதை வெளிக்குக் கொண்டு செல்லும் தன் மொழியால் ஆணுடலை வருணிக்கிறார் தில்லை. இவ்விடத்தில், நாம் சில விஷயங்களை நினைவு படுத்திக்கொள்வோம்.


‘பெண்ணின் உடல் பார்க்கப்பட்டு புனையப்பட்டு எழுதப்பட்ட அளவிற்கு ஆணின் உடல் எழுதப்படவில்லை. ஆணே பெண்ணின் உடலை எழுதுபவனாக இருந்திருக்கிறான். பெண் தனது உடலை எழுத நேர்ந்தது என்பதும் ஆணின் கண்காணிப்பில் இருந்த உடலை தனது உடலாக மீட்டெடுக்கும் உத்தியாகிறது. ஆணின் உடல் அதிகாரப் பிரயோகங்களுக்காகவே இருந்திருப்பதால் முலைகள், யோனி போன்ற பெண்ணுடல் உறுப்புகள் அதிகாரமிழந்து எதிர்நிலைகளை அடைகின்றன. ஆண் – பெண் உடல் கலந்த மயக்க நிலை கொண்ட அரவாணிகளின் உடல் நிலையென்பதும் அதிகார எதிர்நிலைகளுக்கு வெளியே நின்று நாம் மேற்கொண்டிருக்கும் விவாதத்திற்கு அழகு கூட்டுகிறது. அதாவது, ஆண் உடல், பெண் உடல் என்ற இரு எதிரெதிர் உடலே இருக்க முடியும் என்ற கருத்தைத் தகர்க்கிறது


எழுத்து மொழியில் ஆண் உடல் என்பது என்னவாக இருக்கிறது? ஆதிக்கக் கருத்தியலாகவோ அதிகாரம் மிக்க செயலாகவோ இருக்கிறதே அன்றி ஆணின் உடல் இயல்பான நிலையில் எழுதப்படவே இல்லை. அல்லது அத்தகைய உடலை அறிவதற்கான உரிமையையும் வாய்ப்பையும் பெண்கள் பெறவே இல்லை. ஆணின் உடல் என்பது ஆண்களின் கருத்தியலுக்குப் பின் ஒளிந்து நிற்பதாகவும் பெண்ணின் உடலை விலகி நின்று கண்காணிப்பதாகவும் இருக்கிறது என்றும் கொள்ளலாம். ஆணின் உடல் என்பதை அறியும் வாய்ப்பு நமக்கு இல்லாமல் இருப்பதும் பெண்ணொடுக்குமுறைகளில் ஒன்றே. அத்தகைய உடல் ஒன்று எழுத்தானால் வரலாற்றை மீண்டும் எழுத வேண்டியிருக்கும் என்பதே ஆதிக்கம் பயில்வோரின் அச்சமாக இருக்கும்.


இவ்விடம் இந்திய மண்ணில் பிறந்த நமது ஆண் உடல் பெண்ணுடல் வேறுபாடுகள் எங்கு உருவாகின்றன என்று பார்க்கலாம்.
2006 ம் ஆண்டில் கயர்லாஞ்சியில் நிகழ்ந்த சம்பவம் யாருக்கும் மறந்திருக்காது. என்றாலும் ஒரு முறை இங்கே நினைவூட்டிக்கொள்ளலாம். ‘2006, செப்டம்பர் 29ம் நாள். ஆதிக்க சாதியினர் கயர்லாஞ்சியில் வசித்து வந்த ஒரே தலித் குடும்பமான பய்யாலால் மற்றும் அவர் குடும்பத்தினர் மீது வன்கொடுமையை நிகழ்த்தினர். அவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் ஆடைகளையும் உருவி உடம்பில் துண்டு துணியுமின்றி அவர்களை ஊரின் மையப் பகுதிக்கு இழுத்து வந்து மிகக் கொடூரமாகத் தாக்கினர். ஆதிக்க சாதியினர் ஆண் பெண் பேதமின்றி, அனைவரும் தாக்குதலில் ஈடுபட்டனர். அண்ணனையும் தங்கை பிரியங்காவையும் உடலுறவு கொள்ளச் சொல்லி துன்புறுத்தினர். மறுத்த ரோஷனையும் சுதிரையும் மிகக் கடுமையாகத் தாக்கியதுடன் அவர்களின் பிறப்புறுப்பு மீது அடித்து உதைத்து வெட்டி எறிந்தனர். இந்தக் கொடுமை ஒரு புறம் நடக்க, இன்னொரு புறம் தாய் சுரேகாவையும் மகள் பிரியங்காவையும் அனேகமாக அத்தனை ஆதிக்க சாதி ஆண்களும் வன்புணர்ச்சி செய்தனர். அதுவும் போதாதென, இரு உயிரும் பிரியும் வரை மாடு விரட்டப் பயன்படும் தொரட்டிக் குச்சியையும் மூங்கில் குச்சியையும் இருவரின் பிறப்புறுப்பிற்குள்ளும் குத்தினர். அடிபட்டுக்கிடந்த ரோஷனையும் சுதிரையும் மேலே பலமுறை தூக்கியெறிந்து கீழே விழச்செய்தனர்நன்றி: பூங்குழலி, தலித் முரசு.


தோழியரே, பிறப்புறுப்புகளுக்கு இச்சமூகத்தில் வேறு வேறு நோக்கங்களும் இருக்கின்றன இல்லையா? அதற்கு ஆண் – பெண் பேதமில்லை இல்லையா? இந்தப் புகைப்படத்தில் இருக்கும் ஆண், பெண் அவர்களின் உடல் மீது வன்கொடுமை நிகழ்த்திய ஆண், பெண் இவ்விரண்டு நிலைக்கும் இடையே எவ்விடத்தில் நமது உடல் தன்னை அடையாளம் காண்கிறது. தில்லையின் கவிதையில் குறிப்பிட்டுள்ள இராணுவ வீரன், பய்யாலால் குடும்பத்தின் மீது வன்புணர்வு நிகழ்த்திய ஆதிக்க சாதியினர் இவ்விரு வகையினரை வேண்டுமானால் ஆணாதிக்கக் கருத்தியலின் படிமங்கள் என்று கொள்ளலாம். ஆனால், ஓர் ஆதிக்க சாதிப் பெண்ணை விட அதிகாரமும் வாய்ப்புகளும் அற்ற ஆண் உடலொன்று இந்தியாவில் இருப்பதற்கு சாத்தியம் என்பதை நமது பெண்ணெழுத்து மொழி கண்டடைந்திருக்கிறதா? பெண்ணின் யோனி என்பது ஆணாதிக்க அதிகார மயக்கருத்துகள் இயங்குவதற்கான உடலாகவே கருதப்பட்டிருக்கிறது. ஆதிக்கம் மிக்க உடலை ஆண் உடலாகவும் ஒடுக்கப்படும் உடலைப் பெண்ணுடலாகவும் அவதானிக்கும் அறிவுசார் விவாத்த்திற்கு நம்மை நாம் எவ்வளவு தூரம் தயார் செய்து கொண்டிருக்கிறோம்? ஆக, மேற்குறிப்பிட்டது போன்ற சூழ்நிலையில் தன்னுடல் வழியாக, தன் உடலைக் காரணம் காட்டி ஆதிக்கத்தைச் செலுத்தும் பெண்ணுடலையும் ஆணுடலாகக் கொள்ளலாம் தானே?
(மீண்டும் எழுதுவேன்)
குட்டி ரேவதி

பெண்ணின் பாலியல் மொழிஉடலும் பொருளும் - 1இக்கட்டுரைத் தொடரை எழுதுவதற்கான நோக்கமென்பது பெண்ணெழுத்தின் பாலியல் மொழி என்பது இன்றைய நிலையில் எத்தகைய ஊக்கத்தையும் பொருத்தப்பாட்டையும் பெற்றிருக்கிறது என்பதை அறிவதாகும். நிறைய வகையான கருத்தியல் தளங்களைக் கடந்து வந்த தமிழக அரசியலில் பெண்ணிய பாலியல் மொழி எவ்வளவு தட்டையானதாக இருக்கமுடியும் என்பதற்கான உதாரணங்களையும் நாம் தற்பொழுது உணர்ந்தும் கண்டும் கொண்டிருக்கிறோம். அவ்வாறான தட்டையான மொழியை ஒரு பெண் படைப்பாளி கையாளும் போது, நுண் அரசியலை எடுத்தாள்வதை மட்டுமே தன் நோக்கமாகக் கொண்டியங்கும் நவீன தமிழ்க் கவிதையில் எந்தவிதமான அதிர்வையும் உருவாக்க முடியாமல் போகிறது என்பதையும் பேசாமல் இருக்க இயலாது.


உடல் மொழி என்பது உடல் உறுப்புகளைப் பயன்படுத்தி எழுதுவது மட்டுமே அன்று. உடல் உறுப்புகளை அவற்றின் உச்சமான வடிவில் உச்சரித்தாலும் அவை அர்த்தம் பெறாமல் போகும் அரசியலை சுமக்கத் தொடங்கிய காலகட்டத்தை நாம் வந்து சேர்ந்திருக்கிறோம் என்பதை அறியாமல் இருப்பதும் அதற்கு உரிய விளக்கம் சொல்லும் பொறுப்பையும் ஏற்காத படைப்பாளிகளாகப் பெண்கள் இருப்பதும் சரியான பெண்ணியவாதத்தை முன்வைப்பதாக இருக்காது. ஏற்கெனவே நான் பலமுறை குறிப்பிட்டிருப்பது போல ‘பெண்என்ற ஒற்றை அடையாளம் மலிவாகி விட்டது இன்று. அதாவது சென்ற பத்தாண்டுகளில் தமிழக அரசியல், சமூக, இலக்கியத் தளங்களில் ஏற்பட்ட இயக்க மாறுபாடுகள் பெண்ணியக் கருத்தியலை வேறுவிதமாகச் செழுமையூட்டி இருக்கின்றன. இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் எந்தப் பெண் என்றாலும் ‘பெண்என்ற ஒற்றை அடையாளத்துக்குள் அடங்கக் கூடியவள் என்று வாதிடும் பெண்ணியம் காலாவதியாகி விட்டது. நானும் அத்தகைய ஒற்றை அடையாள நிலையிலிருந்து நகர்ந்தும் வளர்ந்தும் வந்து விட்டதுடன் மற்ற சமூகச் சூழலில் உள்ள பெண்களுக்கும் இதே மாற்றமும் நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளதை சமீப கால அரசியல் சமூக வளர்ச்சிகள் உறுதி செய்கின்றன.


கவிதை தனது ஒய்யாரக் கொண்டைகளுடனும் தாழம்பூக்களுடனும் ஆதிக்க சமூகத்தினரின் மடியில் இருந்த பொழுதெல்லாம் நவீன தமிழ்க் கவிதை தனது எலும்புகளால் முட்டி முட்டி உடைத்து நகர்ந்து வெளியே எம்பிக் குதித்திருக்கிறது. நவீன தமிழ்க் கவிதை என்பதன் முதல் எழுச்சியும் கருவும் அவ்வியக்கம் சார்ந்த கவிஞர்களே கூட தம் சுய சாதி அதிகார நிலைகளை எவ்வளவு எள்ளி நகையாடினார்கள் என்பதன் வழியும் தன் உடலை எந்த அளவுக்கு அதிகாரச் சிதைவுக்கு உள்ளாக்கினார்கள் என்பதன் வழியும் புரிந்து கொள்ள முடிகிறது. நான் மேலே குறிப்பிட்டிருப்பது ஆதிக்க சமூகத்திலிருந்து வந்த ஆண் கவிஞர்களின் முனைப்பு என்பதை முன்வைத்துத் தான். அப்பொழுது எழுத்து மொழி ஒடுக்கப்பட்டவருக்கு வந்து சேர்ந்திருக்க வாய்ப்பில்லை அது ஆண் என்றாலும் பெண் என்றாலும். ஆனால், ஒடுக்கப்பட்டவரின் குரலுக்கான செருமல்களையேனும் கொண்டிருந்த ஆதிக்க சமூக ஆண்படைப்பாளிகளின் பெயர்களைத்தான் இன்றைய நவீன தமிழ்க் கவிதை தன் வரலாற்றில் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது.இந்நிலையில் பெண் கவிதை என்பது அவ்வரிசையில் இணைய வேறு உத்திகளையும் வடிவங்களையும் முனைப்புகளையும் கைக்கொண்டது. சாதி உணர்வைத் தன் நாடி நரம்பெல்லாம் பாய்ச்சலாகக் கொண்டிருக்கும் இந்தியாவில் பெண் கவிதையில் கையாளப்படும் உடல் கவிஞரின் உடல் என்றே வைத்துக் கொள்வோம். அது அக்கவிஞரின் குரல் என்றும் வைத்துக் கொள்வோம். இந்நிலையில் அந்த உடல் என்ன விதமான பாலியல் அங்கீகாரங்களுக்காக ஏங்குகிறது என்பதும் எந்த விதமான ஆண்களின் பாலியல் குற்றங்களை தனக்கான அதிகாரங்களாகவும் உரிமைகளாகவும் முன்வைக்கிறது என்பதும் இன்று நம்முன் தலையுயர்ந்து நிற்கும் கேள்விகள். அதாவது, அந்தக் கவிதையில் விளக்கப்படும் அர்த்தப்படும் பெண் கவிஞரின் உடல் சமூக பொருளாதார அரசியல் அதிகாரங்களைத் துய்த்த பின்பும் அதன் வழியாக பெறமாட்டாத பாலியல் அதிகாரத்தையே முன் வைக்கிறதா அல்லது எந்த அதிகாரத்தையும் இன்னும் பெற்றிடாத ஏன், கல்வி அல்லது எழுத்து மொழிக்கான வாய்ப்பைக் கூட பெற்றிராத ஒரு பெண்ணின் சார்பாய் நின்று அவள் உடலுக்கான அதிகாரங்களை அர்த்தப்படுத்தும் சொற்களுடன் உருவாகி வருகிறதா என்பது மிக மிக முக்கியம். இன்றைய நமது பெண்ணிய மைதானம் என்பது தாழ்த்தப்பட்ட பெண்கள், சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த பெண்கள், பாலியல் நிலையை உறுதிப்படுத்தப் போராடும் அரவாணிகள் என்று முதல் முறையாக எழுத்தைத் தம் குரலாக்கும் பெண்களால் நிறைந்திருக்கிறது. அவர்கள் பேசும் அரசியலுக்கான இயக்கங்களைக் கண்டடைந்திருக்கிறது. அவர்களின் மொழி அரசியலைப் புரிந்து கொள்வதும் அவற்றிற்கான அதிகார இழப்பைத் தனக்குத் தானே தன் உடலுக்குத் தந்து கொள்வதும் அல்லது அவர்களுக்கு அதிகாரம் பெற்றுத் தர போராடுவதுமான மொழியைக் கவிதைகள் பாடுகின்றனவா என்பதும் நோக்கற்பாலது, தோழியரே? இந்தச் சவாலை ஏற்க பெண்ணியக் கவிஞர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் தயாராக இருக்கிறோமா?பாலியல் சுதந்திரமும் உரிமையும் அதிகாரமும் வேறு வேறு சமூகப் பின்னணியிலிருக்கும் பெண்களுக்கு வேறு வேறாக இருப்பதை உணர்கிறேன். அதாவது ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அதே சமூகத்தைச் சேர்ந்த ஓர் ஆண் கொண்டிருக்கும் மிகுதியான பாலியல் அதிகாரங்களையும் விடுதலைகளையும் கோரிப்பெறுவதாகவே உள்ளது. இத்தகைய சாதி அதிகாரம் மிக்கப் பெண்ணுக்கு தன்னையும் விட அதிகாரத்தில் கீழ் நிலையில் இருக்கும் பெண்ணின் பாலியல் உரிமை குறித்து சற்றும் கவலையோ அக்கறையோ இருப்பதில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களைச் சுகிப்பதற்கான உரிமையும் அதிகாரமும் மட்டுமே விடுதலை உணர்வு என்றாகி விடாது. அத்தகைய உரிமையும் அதிகாரமும் பெறாத கடைக்கோடிப் பெண்களுக்குக் கூட தன் எழுத்தும் அதன் பொருளும் எத்தகைய உரிமையையும் அதிகாரத்தையும் பேச முடியும் என்ற அக்கறையுடன் மலரும் எழுத்து சமூகத்திலிருந்து தனித்து நிற்காது. அத்தகைய அக்கறையுடைய எழுத்திற்கான சமூக எதிர்ப்பு என்பதும் விமர்சனப்பூர்வமானதே அன்றி அவதூறானதாக இருக்க முடியாது. அதுமட்டுமன்றி, பாலியல் விடுதலை என்பது தன்னுடலை பல ஆண்களுக்குக் கொடுப்பதற்கான விழைவும் அதற்கான உரிமையும் அதிகாரமுமே என்று ஓர் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த பெண் எண்ணிக்கொண்டிருப்பதும் எந்த ஓர் அடிப்படையான சாதி அதிகாரமுமற்ற ஒரு பெண் பல நிலை அதிகாரங்களிலிருக்கும் ஆண்களிடமிருந்தும் அதாவது போலீஸ், அரசு, கலாசாரக் காவலர், கணவன், சமூகத்தின் பிற ஆண் அதிகாரிகள் போன்றோரின் வன்புணர்வுகளிலிருந்தும் தனது ஒற்றை உடலைக் காப்பாற்றிக் கொள்வதற்கான போராட்டத்தில் ஈடுபடும் யதார்த்தம் என்பதும் எவ்வளவு முரண்பாடாயிருக்கிறது பாருங்கள், தோழியரே!எனது தோழி முத்தழகு கவிதைகள் எழுதுபவள். இன்னும் அவை தொகுப்பாக வெளிவரவில்லை. அவளைப் பற்றிச் சொல்வதென்றால் தன் உடலைத் தானே ஆள்பவள். காமம் சார்ந்த ஒழுக்கங்கள் உடையவள் அல்ல. ஆனால் தன் உடல் குறித்த ஒழுங்குகளும் அறங்களும் பயில்பவள். ஆணின் உடலுக்கும் பெண்ணின் உடலுக்கும் இடையே நிலவும் பாலியல் சமன்பாடுகளையும் அதிகார விதிகளையும் தகர்ப்பவள். தனது பாலியல் அதிகாரத்தை அடுத்தவர் மீது ஏவாதவள். பெண்ணின் பாலியல் நுகர்ச்சியையும் விடுதலையையும் ஒரே புள்ளியில் இணைப்பவள். உடலைத் தாவரப் புல்லாகவும் மாமிசப் பட்சிணியாகவும் மாற்றிப் பார்ப்பவள். ‘பெண்ணின் உடலுக்குள் ஆணின் உடலை உறங்க வைக்க இயலும். ஆணின் உடலுக்குள் பெண்ணின் உடல் அடங்காது என்பது இயற்கையின் கணிதம் என்பாள். எந்த ஆணுடன் என் உடல் இணைய விரும்புகிறது என்பதை வேறெந்த ஆணோ பெண்ணோ தீர்மானிக்க இயலாது என்பாள். சமூகத்தின் அடித்தளம் வரை அவள் உடல் ஈடுகொடுப்பதான புரிதலையும் அதற்கான மொழிகளையும் கொண்டவள். யோனி, குறி, முலைகள் போன்றவற்றிற்குச் சிறப்பான அர்த்தங்களையும் மொழி வடிவங்களையும் தருபவள். அவை நேரடியான சொற்களாக இல்லாமல் தற்கால அரசியல் அர்த்தங்களால் அவற்றின் வரைவடிவங்களைச் சொற்களாக்குபவள். உடல் மொழியும் பாலியல் மொழியும் வேறு வேறு என்பாள். உடல் மொழியினும் பாலியல் மொழி சமூக, அரசியலின் கவித்துவ வெளிகளைக் கண்டடையும் மொழி என்பாள். பாலியல் மொழி அரசியல் கருத்தியல்களைச் செரித்து உள்வாங்கிய உடலின் மொழி என்பாள். இது சரியாக இருக்கலாம்.


(மீண்டும் எழுதுவேன்)குட்டி ரேவதி

உடலைப் பற்றிய குறிப்புகள் - 2
உள்ளிருந்து எழும் குரல்கள்

நிறைய குரல்களை தன்னுள் சேமித்து வைக்கின்றது உடல். அல்லது ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ற தனது மெய்யியல் தேவைகளை மட்டுமன்றி மெய்ஞ்ஞான தேவையினையும் கூட தன்னுள்ளிருந்து எழும் குரலால் தெரிவிக்கின்றது. பசி, காமம், கழிவை வெளியேற்றுதல் அல்லது உடலுக்குத் தேவையான இச்சைகளைத் துறத்தல் என இன்ன பிற தேவைகளை நிறைவேற்றுவதற்கான அழைப்பு கேட்கும் போதெல்லாம் நாம் அதற்கு இணங்குகிறோம் அல்லது அக்குரல்களுக்கு செவிமடுக்கிறோம். உடலின் சங்கடங்கள், ஆனந்த, துயரக்குரல்களைக் கேட்கும் பயிற்சி, தனது உடலையும் உடலின் இயங்கியலையும் புரிந்துகொள்ளும் பண்பையும் திறனையும் வளர்க்கிறது. இது உடலின் நோய் எதிர்ப்புக்கொள்கையைச் செயல்படுத்த உடலுக்கும் உதவுகிறது. ஒவ்வாமையைத் தவிர்க்க முடிகிறது. பெண் உடலில் குழந்தை பிறப்பதற்கான உந்துதலைக் கூட கேட்கமுடிகிறது. குரலற்ற உடலென்று ஏதுமில்லை. தனது குரல்களை ஓர் உடல் எவ்வளவுக்கெவ்வளவு பொருட்படுத்துகிறதோ அவ்வளவுக்கவ்வளவு எளிமையானதாகிறது உறவு. மனித உடலின் அழைப்பையும் மறுப்பையும் எழுச்சியையும் உந்துதலையும் பால்நிலையால் பேதப்படுத்தி அரசியல்படுத்தாதபோது அது இயற்கையின் பேராற்றல் உடையதாகிறது.

குட்டி ரேவதி

உடலைப் பற்றிய குறிப்புகள் - 1உடல் மேயும் கனவுகள்

கனவுகளை அவசரக்கோலத்தில் தின்னுகிறது, உடல். கனவுத்திரள்களைத் தொடர்ந்து உற்பத்தியும் செய்கிறது. அசீரணமாகும் கனவுகள் நாற்றமெடுக்கின்றன. கனவை உற்பத்தி செயும் வேலை உடலினது. பல சமயங்களில் பாதி வழியில் அறுபட்டுத் தொங்குகின்றன கனவுகள், முடிவு அறியாமல். இன்னொரு உடலைத் தன்னுடலுடன் கோர்க்கும் வழியறியாமல் வகையறியாமல். மூட்டைப் பூச்சிகளைப் போல அக்கனவுகள் உடலை மேயும் போது உடலைத் தனியே கழற்றிவைத்து விடலாம் போல. சில கனவுகள், பகலை இன்னும் வெளிச்சமாக்குவதாயும் சில பகலின் விழிப்புணர்வை இன்னும் தொல்லை செய்வதாயும் பிறக்கின்றன. கனவுகளின் வெளிகளுக்குள் நாகரிகத்தின் சிற்றிழையும் கிடையாது எனினும் மனித அறம் பிறழாமல் எல்லாமும் நிகழ்கின்றன. பெரும்பாலும் அவை வார்த்தைகளற்ற ஓவியமாய் நீர்மை கொண்டலைகின்றன. அவனையும் கனவு வடிவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது என் உழைப்பு. தோற்றுப் போக விரும்பாது மீண்டும் மீண்டும் கற்பனை செய்து பார்க்கிறது அவன் அதரச்சுழிப்பை. சிறிய நேரப் புன்னகையுடன் அவன் தொலைதூரத்தில் மறைந்து போகிறான். நேற்றைய கனவை இன்றைய கனவு துவைக்கிறது. இன்றைய கனவை நாளைய கனவு மிதிக்கும். நீர்த்துளிகளாய் உடலெங்கும் முளைத்துக் கிடக்கும் கனவுகளைத் துடைக்கும் மரணத்தின் பூந்துண்டுக் கைகள். எண்ணத்தின் இருளடர்ந்த அறையிலோ, இதயத்தின் கனிந்த பார்வை துளைக்காத மூளையின் இயந்திரக்கலனிலோ அவை தம்மை மீண்டும் மீண்டும் நிகழ்த்திப் பார்த்துக்கொள்கின்றன. அதன் இரும்புக் கைகள் என் கழுத்தை நெரிக்க, உயிர்பிழைக்கும் ஓலக் குரலெழுப்ப முயன்று சத்தம் வராத தொண்டையில் கனவுகளை அதக்கியபடி பதறி விழிக்கிறேன்.
குட்டி ரேவதி

ஓர் உரைக்கான குறிப்புகள்எனது ஓர் உரைக்கான குறிப்புகள் இப்படியான சிறு வாக்கியங்களாகவும் தெறிப்புகளாகவும் இருந்தன. பின்பு அவற்றை நீட்டிக்கொள்ளும் வாய்ப்பையும் சமயத்தையும் எடுத்துக்கொண்டேன். கன்னியாகுமரியில் நிகழ்ந்த ‘வேறொன்றுமில்லைகூட்டத்தில் கவிதை குறித்து ஆற்றிய உரைக்கானது இக்குறிப்புகள்.

கவிதை: எல்லா எனது கண்டுபிடிப்புகளும் நினைவுகளுக்கும் நினைவூட்டல்களுக்கும் எதிரான திசையில் பயணப்படுவது – நாவல், சிறுகதையைப் போலன்று – வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் முற்றிலும் வேறானதொரு சிறப்புத் திறனைக் கோரும் இலக்கிய வகை – நினைவுகள்/ஞாபகங்கள் பிரக்ஞைக்கு எதிராக நின்று பிரக்ஞையை மூடிக்கவிழ்த்துக் கொள்கின்றன – கவிதை என்பது அதிகப்பட்ச பிரக்ஞையை மொழியில் இயக்குவது – சுயநிழல் அற்றது.

என் நினைவுகள் தொன்மங்களாகும் வரை அப்படியே விட்டுவிடுகிறேன் - தொடர்ந்து இந்த உடலுக்குள்ளேயே மீண்டும் மீண்டும் பயணிக்க வேண்டியிருப்பது அலுப்பூட்டுகிறது - தொட்டியிலிருக்கும் ஒரு மீன்குஞ்சைப் போல - சொற்கள் உதவுமா இந்தத் தொட்டிக்குள்ளிருந்து வெளியே குதிக்க என்று முயல்கிறேன் – அறியேன் வெளியே மரணத்தைப் போன்ற ஒன்று காத்திருக்கிறது என்பதை – ஒரு பெண்ணும் ஆணும் புணர்வதைத் தவிர வேறென்னவெல்லாம் செய்யமுடியுமென்று யோசிக்கிறேன் – புணர்வதனூடாகவும்.

கவிஞன்: எந்த ஒரு புராணக்கதாபாத்திரமும் கற்பனையும் அவனுக்கு வெறுப்பூட்டும் சித்திரம் – இவையெல்லாவற்றிலும் உலவும் தத்துவக் கதாபாத்திரங்களை மீறிய கதாபத்திரங்களையே உருவாக்க விரும்புபவன் – தனது உடலோடு பிணையும் சித்தாந்தங்களால் தாம் இந்தக் கதாபாத்திரங்கள் உருப்பெற இயலும் என்று நம்புபவன் – நிகழ்வுகளிலிருந்து தப்பியோடும் கடவுளை கனவுகளிலும் கற்பனைகளிலும் கவிதைகளிலும் தடுமாறிவிழச் செய்யத்துடிப்பவன்.

கவிதை மொழி: புரியாததற்குக் காரணம் தனி மனித முற்போக்கான சிந்தனைகளுக்கும் சமூகத்தின் அடக்குமுறை வடிவங்களுக்கும் இடையே நிலவும் இடைவெளி – முதலில் அது சொற்களாகத் தான் வெளிப்படும் – வெகுசன பொழுது போக்கு வடிவங்களுக்கும் சமூகச்சிந்தனை வடிவங்களுக்கும் இடையே அல்லாடும் வடிவமாகிவிட்டதில் கவிதை மொழி தன் பலத்தை இழந்த நிலை.

கவிதை வடிவம்: அரசோ சமூகமோ தனிமனிதனோ... அதிகாரமயத்திற்கு எதிரான வடிவமாகப் பயன்படுவது – அதிகாரத்துடனான சமரசங்களைச் செய்து கொண்ட பிரக்ஞையே வடிவமாக மாறும் – அதற்குப் பின் எல்லா வார்த்தைகளும் அதிகாரத்தின் வேர்களால் தாம் உயிர்வாழும் – நடுவாந்திரமான ரசனையும் அரசியலும் கூட வடிவமாகிறது.

உடல்மொழி: எல்லோரையும் அவரவரின் தனித்த உடல் தான் இயக்குகிறது – சமூக இயந்திரங்கள் எல்லாம் இந்த உடலை தமது அதிகாரத்தையும் ஆணையையும் இயக்கிக் கொள்ளப் பயன்படுத்துகின்றன – இதுவே உடலுக்கு ஓர் இனவரைவியல் தன்மையைக் கொடுக்கிறது – ஒவ்வொரு உடலுக்குமான தனிச்சிறப்பையும் யதார்த்தத்தையும் மொழிவது – இதை முற்றிலுமாக எதிர்க்கிறது இந்து மதம்.
குட்டி ரேவதி