நம் குரல்

டென்மார்க் பயணம் 4 - தனிமையின் சாலையும் நோக்கமிலாப்பயணமும்!


சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் சந்தித்தப் பெண்ணிய எழுத்தாளர், Mette என்பவரை டென்மார்க்கில் இந்தப்பயணத்தின் பொழுது மீண்டும் சந்தித்தேன். இங்கு மிகவும் புகழ்பெற்ற, ஊக்கமிக்கப் பெண்ணியலாளர். எந்த வேண்டுகோளையும் முன் வைக்காமலேயே, அவரே முன் வந்து, பல இடங்களுக்கும், கலைக் கண்காட்சிகளுக்கும் அழைத்துச்செல்கிறார். என்னுடைய ஒவ்வொரு நாளும் பயனுள்ளதாகக் கழிகிறதா, இந்தக்குளிரை நான் எவ்விதம் தாங்குகிறேன் என்று அக்கறை எடுத்துக்கொள்கிறார். என் பயணம் முழுதும், வெவ்வேறு இடங்களில் பெண்ணிய விவாதத்தையும் கவிதை வாசிப்பையும் ஒருங்கிணைத்து, அவற்றை சிறப்புற வடிவமைத்துள்ளார். குறிப்பாக, பிளாக் டைமண்ட் நூலகத்தில் அவர் ஒருங்கிணைத்திருந்த கூட்டமும் உரையாடலும் பொருளுடையதாக இருந்தது.
நேற்று ஒரு நாள் முழுதும், இருவரும் கோபன்கேஹனின் மையச் சாலைகளில் எந்த நோக்கமுமின்றி அலைந்து திரிந்தோம். குளிர் மிகுந்த அறைகளில் இருந்து, சூரிய ஒளி வீசும் மையச்சாலைகளில் திரிவதும், சூடான பானங்களையும் பருகித்தீர்ப்பதும் அருமையான அனுபவமாக இருந்தது. நீளமான உரையாடல் கொள்ள ஏதுவாக இருந்தது. ஒரு பெரிய எழுதுபொருள் கடைக்குச் சென்று அங்கு விற்பனைக்கு இருக்கும் எல்லா நுட்பமான எழுது பொருள்களையும் பார்த்தோம். டேனிஷ் பண்பாட்டின் கலைத்தன்மை சார்ந்த வரைபொருட்களாக அவை இருந்தன. பொதுவாக, இம்மாதிரியான வெளிநாட்டுப்பயணங்களில் சந்திக்கும் அயல்நாட்டுப் படைப்பாளிகளை, வாழ்க்கையில் மீண்டும் சந்திப்பது என்பது அரிதாகிவிடும். அதற்கான பொதுப்புள்ளிகளும் இருக்காது. ஆனால், இவரை மீண்டும் சந்திக்க வாய்த்தது, எழுத்தின் பொதுத்தன்மையை உணர்த்துவதாக இருந்தது.
மிகவும் பழமையான Gyldendal Publishing House - க்குச் சென்றோம். அது, அவர் தன் நூல்களுக்காகப் பணியாற்றிய இடம். ஒரு தொழிற்சாலையைப் போல் இருக்கிறது. டென்மார்க்கில் உருவாக்கப்படும் நூல்களுக்கு மையமான இடம். அதன் இயக்குநர் Johannes Riis அவர்களைச் சந்தித்தேன். டென்மார்க் நூல்பதிப்பு வெளியில், மிகவும் முக்கியமான மனிதர் என்று கூறினார்கள். Mette - வும் நானும், பதினெட்டாம் நூற்றாண்டின் கட்டிடங்கள் இன்னும் சிதைவுறாமல் இருக்கும் பல சாலைகள் வழியே நடந்து சென்றோம். அயல்நாடுகள் மீது பெரிதான வியப்பு என்பது எப்பொழுதுமே இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், என் கவனமும் எண்ணமும், நம் நாட்டிற்கும் இந்த நாடுகளுக்குமான இடைவெளி என்ன என்பதில் தான். அப்படிப்பார்த்தால், பொருளாதார நிலையிலும் சுகாதாரத்திலும் அவர்கள் உயர்வாக இருப்பதாகத் தெரிந்தாலும், பல வகைகளில் அது உண்மை இல்லை. நாம் அன்றன்று சமைத்து உண்பவர்களாக இருக்கிறோம். உடல்நலப்பண்பாட்டின் வேர் இன்னும் நம்மிடம் இருக்கிறது. ஆனால், இங்கு பெரும்பாலான உணவுப்பொருள்கள், பதப்படுத்தப்பட்டவையாக அதற்கான ரசாயனங்கள் சேர்ந்தவையாக இருக்கின்றன.
வியப்பை ஊட்டும் ஒரே விடயம், தொன்னூறு சதவிகிதத்தினருக்கும் அதிகமானோர் சைக்கிள் பயன்படுத்துவது தான். இது, கண்டிப்பாக, சுற்றுச்சூழல் அக்கறையினால் இல்லை. அவர்கள், பண்பாடு, நாகரிகம் என்று நம்புவதன் குறியீடாக சைக்கிள் மாறியிருக்கிறது. தினமும், தோராயமாக, முப்பது கிலோமீட்டர் வரை சைக்கிள் ஓட்டுவதாக என் தோழி கூறினார். இங்கு சராசரி ஆயுள் 90 வயது வரை இருக்கலாம் என்று கூறினார். இன்னொரு முக்கியமான விடயம், இங்கு எங்குமே ஆங்கிலத்தில் எந்தப்பெயர்ப் பலகையையும் அறிவிப்பையும் பார்க்க இயல்வதில்லை. டேனிஷ் மொழியில் தான் முழுமையும்.
திருவண்ணாமலையிலிருந்து டென்மார்க் வந்திருந்த பிரியமான நண்பர் ஜேபி -யை, அவருடைய சகோதரி பிரியா வீட்டில் சந்தித்தேன். பிரியா, சுடச்சுட கோழிபிரியாணியும் எலுமிச்சம் ஊறுகாயும் தயார்செய்துவைத்திருந்தார். சற்றும் எதிர்பாராதது. அதுவரை, இத்தகைய உணவை எதிர்பார்த்திராத நான், அதை உண்ணும்பொழுது தான் மீண்டும் உயிர்கொள்வதைப் போல உணர்ந்தேன். இன்னும் சில நாட்களைக் கடத்துவதற்கு, வீட்டை மறந்து இருப்பதற்கு இது போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறேன். அரிசி உணவு இல்லாமல் வாழ்வது, நம் நினைவுகளுக்குக் கூடச்சாத்தியமில்லை போல. இங்கே ஒவ்வொரு நாளும் இருக்கும் ஒவ்வொரு விதமான காலநிலை, நம் தமிழ்ப்பருவத்திற்குக் கொஞ்சம் அசாதாரணமானது தான். எதிர்பாராமல் திடீரென்று மழை அல்லது அதிகக் குளிர் அல்லது சுள்ளென்று வெயில் என்று காலத்தை மூடிக்கொள்கிறது. ஆனால், பரந்த வானமும், மேகமும், ஒளியின் தன்மையும், நீண்ட பகலும் புத்தம்புதியது. இங்கே கோடைக்காலம் முடிவுக்கு வந்துவிட்டதாம். இப்பொழுது, அவர்களே கடிகாரத்தின் முள்ளைத் திருப்பி ஒரு மணி நேரத்தைக் குறைத்துக்கொண்டு எதிர்வரும் பருவத்தைத் தொடர்வார்கள் என்று சொல்லும் பொழுது, ஒட்டுமொத்த இந்த வாழ்வும், ஒரு புனைவிற்குள் நழுவிச் சென்ற உணர்வு ஏற்பட்டது. காலம், மனிதன் உருவாக்கிக்கொள்வது.
இன்று தனியே சாலையில் இறங்கித் திரியும் யோசனை தலையெடுத்துள்ளது. ஏற்கெனவே அப்படி சென்று இரண்டு முறைகள் தொலைந்து இருப்பிடம் கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இன்று மீண்டும் தொலைந்து போகும் திட்டம்!



குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: