நம் குரல்

பாலின்ப இலக்கியம்


சென்னையின் ஓய்வில்லா கடுமையான உழைப்பிற்குப் பின்பான நாட்களிலெல்லாம் நகுணனுடன் பெங்களூர் புறப்பட்டு விடுவதுண்டு. அந்தப்பயணம் அதிகப்பட்சம் இரண்டு நாட்களுக்கு மேல் இருக்காது. அதுவும் ஓய்வெடுப்பதாய் இருக்காது. ஓய்வென்பதும் ஓரிடத்தில் இருத்தல் நிமித்தம் என்பதாய் இருக்காது. காந்தி சாலையின் இந்தக் கரையிலிருந்து எதிர் அத்தம் வரையிலுமானதாக இருக்கும். இந்தப் பயணமும் நகுணனுடன் பெங்களூரில் வீசும் குளிர் கலந்த வெயிலில் நடந்தவாறே எந்த நோக்கமுமில்லாமல் புத்தகக் கடைகளில் ஏறி இறங்கி எனது மனவெளிக்குள் கட்டுண்டு கிடக்கும் உலகத்தைப் புதிப்பித்துக் கொள்ளும் முயற்சியாய் இருக்கும்.

அம்மாதிரியான ஒரு பயணத்தில் தான் அனைஸ் நின்னை நகுணன் அறிமுகப்படுத்தினார். அப்பொழுது அனைஸ் நின்னின் ஏராளமான நூல்களை ஒரே இடத்தில் பார்க்கக் கிடைத்தும் வாங்குவதற்குப் போதிய பணம் இல்லை ஒன்று. மேலும் அந்த எழுத்தாளர் என் உலகத்திற்கு உவப்பானவரா என்று அவரின் ஒரு நூலை படித்துப் பார்க்காமல் தொடர்ந்துவாசிக்க இயலாது என்னால் என்ற முடிவில் அனைஸ் நின்னின் Delta of Venus’ நூலை வாங்கினேன். இம்மாதிரியான நூல்கள் குறித்த மனத்தடையையோ எந்த எதிர்ப்பார்ப்பையோ நான் ஏற்றி வைத்துக் கொள்ளவில்லை என்பதால் அவர் நூற்கள் ஒரு புத்தம் புதிய அனுபவத்திற்கான வாயில்கள் என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை.


பாலின்ப இலக்கியம் என்பது அபத்தமான கிளர்ச்சிகளை உண்டுபண்ணும் பாலின்ப உறவுகள் அல்லது பாலின்ப இச்சைகளைத் தூண்டுவதற்கான நூல் என்று மட்டுமே பொருள் இல்லை. ஒரு மனிதனின் பாலியல் அறிவின் வழியாகவே அவனின் ஞானம் எழுச்சி அடைவதாக குரானின் நபியைப் போலவே நானும் நம்புகிறேன். ஆனால் பொய்மையும் கபடும் மனிதனை மனிதன் எத்திப் பிழைக்கும் உலகில் பாலின்பம் என்பது மிகவும் கொச்சையாகவும் மலினப்படுத்தப்பட்டதாகவும் ஆகிவிட்டது. ஆக, பாலியலை அதன் அழகும் அந்தரங்கமும் புதுமையும் நூதனமும் கலைக்காமல் மனிதனுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே பாலின்ப இலக்கியம் என்பது அனைஸ் நின்னை வாசித்த பிறகு தோன்றியது. எழுத்தில் எங்குமே வலிந்து பாலியலின் அறத்தை மீறுபவரோ தயக்கங்களை மதிப்பவரொ இல்லை அனைஸ் நின்.


இங்கு பாலியல் அறம் என்பது பாலின்பத்தின் எல்லையோ கட்டுப்பாடோ இல்லை. அதன் உச்சத்தை எந்த விதச் சிதறலும் கவனக்குலைப்பும் இன்றி சென்று சேர்வது என்று அறிந்துணரப்படவேண்டியது என்ற பொருளிலே தான் குறிப்பிடுகிறேன்.


பிரெஞ்சு எழுத்தாளரான அனைஸ் நின்னின் மூன்று நூல்களை படித்திருக்கிறேன். ‘Delta of Venus’, ‘White Stains’ மற்றும் ‘Under a glass bell’. ‘Delta of Venus’ தரும் இலக்கிய நவிற்சியும் பாலியல் விழிப்புணர்வும் அலாதியானது. எல்லாமே மனிதன் தன் சுயவாழ்க்கையின் வழியாக பாலியல் அறிவைக் கண்டுணர முயற்சிக்கும் பாதையின் சுரங்க வழிகள். மேலும் ஒரே மாதிரியான அலுப்பூட்டும் பாலின்பத்தை அவர் மாந்தர்கள் மீது ஏற்றிச் சுமத்துவதில்லை என்பதால் அந்நூல்கள் காவிய இலக்கிய வகையைச் சேர்ந்து விடுகின்றன. மறைமுகமாக அல்லது அவரின் தனிப்பட்ட உள் பிரக்ஞையாக இருக்கலாம், பாலின்ப அரசியலின் எம்மாதிரியான சுவரையும் அவர் எழுதும் நிகழ்வுகள் சுவரேறிக் குதிக்கின்றன.


ஒவ்வொரு மனிதனையும் பாலியல் ஒடுக்குமுறையின் செருப்படியில் அகப்பட்டுக் கிடப்பதிலிருந்து விடுவிக்க அவர் எழுத்து உதவுகின்றது. அவர்களைக் கைப்பிடித்து இருண்ட அறைகளிலிருந்தும் படுக்கை அறைகளிலிருந்தும் மோட்டார் பம்புசெட் அறைகளிலிருந்தும் நதிக்கரைகளிலிருந்தும் மலைக்குகைகளிலிருந்தும் சொர்க்கம் எனப்படும் மனோவெளிக்கு அழைத்துச் செல்கிறது.


தன் உள்ளுணர்வைத் தொடர்ந்து பயணிக்கும் எவரும் பயணத்தின் இடைவழியிலோ ஏன் தொடக்கத்திலே கூட தன் பாலின்பத்திற்கான தண்ணீர்ப் பந்தலைக் காணக்கூடும். ஆனால் அதில் இளைப்பாறாது அதன் குளிர்ச்சியை உணராது அதைப் புறக்கணித்து நகரக்கூடும். தனது முழுப் பயணவழியிலும் அதை நிராகரித்ததின் வலியும் சுமையும் தாகமும் நம் முதுகில் வியர்வையாய் ஒட்டியிருக்கக் கூடும். அம்மாதிரியான சுமைகளுக்கும் குற்றவுணர்வுகளுக்கும் இழப்புகளுக்கும் எளிதான நிவாரணம் அளிக்கக்கூடிய கற்பனையும் மெய்ம்மையின் அருகிலான அடர்ந்த வெளியும் அவர் தன் எழுத்தில் தருகிறார். அதன் கள்ளங்கபடமற்ற உலகம் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் உடல் ரீதியாகக் கண்டடைவதற்கு உதவுகிறது. பெரும்பாலானோர் தத்தம் உடலின் அமைப்பையும் செயற்பாடுகளையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. என்னவோ அதை மருத்துவர்கள் மட்டும் தான் அறிய வேண்டும் என்பதைப் போல.


ஆனால் ஆணும் பெண்ணும் பாலிய உறுப்புகள் வழியாக இணைவதால் தரும் இன்பத்தை அதன் முழுமையான அறிவின்றி உணரமுடியாது. அவ்வாறே ஏதோ முறையற்ற பாலியல் உறவுகளே இன்பம் என்ற கட்டுக்கதையும் மறைமுகமான அம்மாதிரியான இலட்சியமும் எல்லோருடைய மனதிலும் மறைந்திருக்க்க் கூடும். ஆனால் தன் உடல் எழுப்பும் அலைகளில் பயணிக்கும் திராணியுடையவரைக் கண்டடையும் பயணம் தான் பாலுறவும் அது தரும் இன்பங்களும்.


மனிதனிடம் அவனது பாலின்ப நிலை பிரக்ஞையற்ற நிலையிலும் இருக்கிறது என்று டி.ஹெச்.லாரன்ஸைப் போலவே அனைஸ் நின்னும் நம்பினார்.


தன் வாழ்க்கை முழுதும் ஓர் இலட்சியப்பூர்வமான பாலின்ப வாழ்க்கையை முன் வைத்துக் கொண்டே இருந்தார்.


பாலின்ப பரவசத்தை – உச்சத்தை தன் துணிவான செயலாகவும் ஒரு சாகசமென்றும் கூறுகிறார்.


உணர்ச்சிப்பூர்வமானதாக இருக்க இருக்க மனித உறவு தன்னுள் அடிமைத்தனத்தைப் பொதிந்து வைத்துக் கொள்கிறது என்பது அவரின் அரசியல். அப்படி இருந்தால் அந்தப் பொழுது கடுந்துயரமான ஒரு நினைவாக மனித மூளையில் பதிந்துவிடுகிறது.

தன் அன்றாட வருமானத்திற்காக சிரமப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் புனைபெயரில் பாலின்ப இலக்கிய எழுத்தில் மிகவும் தீவிராமக ஈடுபட்ட அனைஸ் நின், ஒரு கட்டத்தில் தன் பெயரிலேயே எழுத்தைத் தொடர்ந்தார். தன் பாலின்ப அனுபவத்தை அன்றாடம் நாட்குறிப்புகளாகவும் பதிவு செய்து வைத்தார்.

பல ஆண்களுடனான உறவுகளைப் பற்றியும் விளக்கமாகவும் நுட்பமாகவும் எழுதிய நின், அடிப்படையில் தன் சுயம் எதிர்கொள்ளும் முரண்களையும் யதார்த்தங்களையும் பதிவுசெய்திருக்கிறார்.


காம இச்சையின்பாற் பெண்கள் கொண்டிருக்கும் உயிர்ப்பற்ற உறவுக்கு முற்றிலும் எதிரான ஓர் ஆளுமையாக இருந்த நின், தன் சுயவாழ்க்கையிலும் படைப்பிலும் அதை நிறுவினார்.


அவருடைய எழுத்து, கூருணர்வுத் திறன் மிகுந்த ஆணுக்காக எழுதப்பட்ட பெண்ணின் பார்வை.


புலனறிவு மற்றும் அதன் இன்பத்தை உச்சரிப்பதற்கான சொற்களால் தான் விழிப்புணர்வை ஏற்படுத்தமுடியும் என்பதால் தன் உணர்வுகளைத் தெளிவாகத் தன்னால் பேசமுடிகிறதா என்பதற்கான தொடர்ப்பயிற்சி தான் பாலின்ப வகை இலக்கியம் என்றார்.


ஆண்களுடன் பாலின்பத்தைப் பகிர்ந்து கொள்வதும், பாலுறவு வைத்துக் கொள்வது மட்டுமே விடுதலையைத் தராது. அத்தகைய உறவில் உண்டாகும் உணர்வுகளுக்கேற்ற மொழியையும் பார்வையையும் உருவாக்குவதிலும் முனையவேண்டும். இது ஒரு கூட்டுச் செயல்பாடு என்பதையும் முன்வைத்தார்.


மெல்ல மெல்ல ஒரு பெண் தான் வாழும் தருணத்திற்கும் சூழலுக்கும் ஏற்றவாறு எந்த ஒரு சட்டத்தையும் வளைத்துக் கொள்ளமுடியும். முரட்டுத்தனமாக ஒரு கற்பனைவாதத்தைச் செயல்படுத்துவதை விட இது இலகுவானது. முரட்டுத்தனமான பொருள்விளக்கங்கள் இன்னும் சிக்கலைத் தான் தரும் என்றார்.

அனைஸ் நின்னின் இலக்கியத்தை வாசித்தப் பின்பு புதிதான ஓர் இலக்கிய வகையென பாலின்ப இலக்கியத்தை அடையாளப்படுத்தும் அதே சமயம் நவீன பெண்ணெழுத்தின் முத்திரையாகவும் அவரையே அடையாளம் காண முடிகிறது.குட்டி ரேவதி

கதை சொல்லும் உரிமை நமது

பெண்களிடமிருந்து பறிபோன இன்னொரு உரிமை, கதை சொல்லும் உரிமை. விசித்திரமாயிருக்கலாம். பாட்டிகள் தான் கதைகள் சொல்லுவார்கள் என்ற பொது வழக்கின் பின் வேறு வேறு அரசியலும் வரலாறும் சமூகவியலும் அடுக்கடுக்காகப் படிந்துள்ளன. கதை சொல்லுவது பெண்கள் மத்தியில் ஓர் அன்றாடப் பழக்கம். நிகழ்வுகளைப் பாத்தவர்கள், பார்த்தவர்களிடமிருந்து கேட்டவர்கள், கேட்டவர்களிடமிருந்து கேட்டவர்கள் என ஒரு நிகழ்வைச் சொல்லும் முறை திரிபடைந்து சுவையான கதைகளாகியிருக்கின்றன. அந்தக் கதைகளுக்குள் அவர்கள் சொல்லவந்த நீதிகளும் அறங்களும் புதைந்திருக்கின்றன. அப்படிக் கதைகளைச் சொல்லிச் சொல்லி பெண்கள் அன்றாட வாழ்வினுடன் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். பண்பினக்கம் செய்து கொண்டார்கள். இன்றைப் போல் அன்று ஊடகங்கள் இல்லை. நிகழ்வுகளைப் பற்றி அறிந்து கொள்ள பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் இல்லாத காலகட்டங்களில் மனிதர்களின் வாய்களும் காதுகளும் தான் ஊடகங்களாக இருந்தன. பொதுவெளிக்குச் செல்ல முடியாமல் பெண் சமூகம் ஒடுக்கிவைக்கப்பட்டு வைத்திருந்த போது கதை சொல்லுதல் தான் பெண்களை பொது வெளியோடு இணைத்தன. கேட்ட ஒன்றிரண்டு தகவல்களைக் கூட்டியும் பெருக்கியும் கற்பனை செய்யத் தூண்டின.
இந்தக் காலத்தில் போல் அந்தக்காலங்களில் மனிதனுக்கு ‘பொழுதைப் போக்கும் வசதிகள்’ தேவைப்படவில்லை. மாறாக, ‘பொழுதைப் பயன்படுத்தும் ஊக்கங்கள்’ தாம் தேவைப்பட்டன. மானுட நலம் பேணும் பணிகளில் மனிதர்கள் ஈடுபட்டுத் தம் சுயதேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டனர். அதற்கு ஏற்றாற் போல கதைகளும் கதை சொல்லும் முறையும் உருவாகி இருந்தன. கதை சொல்லல் ஒரே சமயத்தில் கலை வடிவமாகவும் சமூகப்பயன்பாடாகவும் இருந்திருக்கவேண்டும். இன்றைய மனிதனின் தேவை தற்காலிக சுவாரசியங்களை நோக்கியதாக இருக்கிறது. செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகள் மக்களை சுவாரசியப்படுத்துவதற்காக எத்தகைய அறம்மீறலையும் செய்யத் துணிகின்றனர். தொலைக்காட்சியும் திரைப்படங்களும் பார்வையாளர்களுக்குத் தற்காலிகமான சுவாரசியங்களைத் தந்து ஓர் ஈர்ப்பிற்குள் கட்டிவைப்பதில் முனைந்துள்ளன. அவை பார்வையாளர்களை திரை நிகழ்ச்சிகளின் கருப்பொருளுடன் ஈடுபடுத்த வேண்டிய அவசியமில்லை. அவர்கள் பொழுதைப் போக்க வேண்டும்; கரைக்க வேண்டும். அவ்வளவு தான்! ஆகவே தான் பெண்கள் தொலைக்காட்சி தொடர்களின் முன் கண்ணிமைக்காமல் உட்கார்ந்திருக்கின்றனர். கதைகளைச் சொல்ல வேண்டியவர்கள், கதைகளைப் பார்ப்பவர்களாகவும் கேட்பவர்களாவும் மாறியிருப்பது ஒரு வணிக உத்தி. சமூக இழிவு.
அந்தக் காலங்களுக்குச் செல்வோம். எழுத்தறிவு ஏற்படும் முன் வாய்மொழி தான் மக்களின் பொதுவான ஊடகம். எழுத்து மொழி தோன்றிய பொழுதும், எழுத்து மொழி தோன்றும் முன், குறிப்பாக சமூக நிறுவங்களான மதம் திருமணம் குடும்பம் சாதி போன்றவை அழுத்தமாகத் திணிக்கப்பட்டதும் பெண்களுக்கு பொதுவெளிகளும் சமூக வெளிகளும் மறுக்கப்பட்டன. அதாவது பெண்கள் தன் குடும்பத்திற்கு உணவு உற்பத்தி செய்யும் அரவை இயந்திரங்களைப் போல மாறிப் போயினர். கிராமங்களில் ஊர்களில் நடக்கும் பொது நிகழ்வுகளில் பெண்களுக்கு இருந்த பங்கும் முன்னிலையும் பறிபோயின. நிகழ்வுகளில் பங்கு பெறும் அனுமதி மறுக்கப்பட்ட பெண்கள் கதை சொல்லிகளாக மாறினர்.
ஏனெனில், எப்போதும் தம் உரிமைகளாக, இயல்பூக்கங்களாக இருந்த கற்பனை வளம் வறண்டு போவதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. வெவ்வேறு கதை முறைகளை உருவாக்கினர். பாட்டும் கதையும் வாய்மொழி மரபின் ஆணிவேர் என்று சொல்லலாம். மேலும் நினைவுகளைத் தேக்கி வைக்கும் ‘வட்டு’ (DISC) போல அவர்கள் தங்கள் நினைவுகளை கதைகளாக மாற்றி வைத்துக் கொண்டனர். அக்கதைகளில் சுயவரலாறும் வரலாற்றில் இடம்பெறாமல் போன உள்ளூர் வரலாறுகளும் தன்னையொத்த பெண்கள் போராடிய வரலாறும் இருந்தன. அக்கதைகள் வழியாக அவர்கள் வெளிப்படுத்த விரும்பிய அரசியல் பார்வைகள் சிலேடையாக மரபுச் சொற்களாக வெளிப்பட்டன. பகடியும் விமர்சனமும் பூடகங்களாக இருந்தன. மேலும், கால ஓட்டத்தில் சம்பவங்களும் உணர்ச்சிகளும் தொலைந்து போகாமல் இருப்பதற்காக, அவற்றைக் கதைகளாக வடிவமைத்து வைத்துக் கொண்டனர். எழுத்து மொழி மறுக்கப்பட்ட போது பெண்களுக்கு இடையே இக்கதை சொல்லும் மரபே முதன்மையான ஊடகமாக மாறியது. அடுத்த தலைமுறைகளுக்கு தம் வாழ்வின் நீதிகளை கடத்தும் வழிமுறையாக இருந்தது. எல்லா அடிப்படையான உரிமைகளும் மறுக்கப்பட்டு, ஆண் - பெண் ஏற்றத்தாழ்வுகள் பயிலப்பட்டு வந்த பொழுது பெண்களுக்கு இருந்த ஒரே வழிமுறையாக கதை சொல்லுதலே இருந்தது. திரெளபதி அம்மன் கதை. சுடலைமாடன் கதை, முப்பாட்டன் கதைகள் வாய்மொழிகளாய் சொல்லப்பட்ட போது அவற்றின் செவ்வியல் வடிவத்திற்குள் அந்தந்த ஊர்களின் கதைகளும் பின்னிக்கொண்டன. ஒப்பாரிகளுக்குள்ளும் கதைகள் ஒளிந்திருந்தன. தாலாட்டுகளுக்குள் இழந்த உரிமைகளும் எதிர்நோக்கிய போராட்டங்களும் பொதிந்து வைக்கப்பட்டிருந்தன.இன்று கதை சொல்லும் ஊடகங்களிலிருந்து பெண்கள் முழுதுமாக புறந்தள்ளப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றனர். வெறுமனே கதைகளைப் பார்ப்பவர்களாகவும் கேட்பவர்களாகவும் மாற்றப்பட்டுவிட்டனர். பெண்கள் கதை சொல்லும் மரபு அழிந்துவிட்டதால் நிகழ்வுகளுடனான பெண்களின் ஊடாட்டமும் கதைகளைச் சொல்லும் பெண்களின் படைப்பாற்றலும் அழிந்து வருகின்றன. பெண்கள் இந்த நவீன ஊடகங்களில், கதைகளில் நடிப்பவர்களாக இருக்கின்றனர். தம் பார்வையை முன்வைக்கும் கதை சொல்லிகளாக இடம்பெறுவதில்லை. அந்த இடங்களை நோக்கிப் பெண்கள் நகரவேண்டும். கதைகளைப் படைப்பவர்களாகப் பெண்கள் மாறவேண்டும்.
கதைகளைச் சொல்லும் கலையின் உச்சபட்ச வடிவம் தான் திரைப்படங்கள். அங்கும் பெண்கள் பார்ப்பவர்களாகவும் கதைகளில் பங்கேற்பவர்களாகவுமே இருக்கின்றனர். படைப்பவர்களாக மாறும் போது தான் கதைகளின் திசை, மானுட நலனை நோக்கிச் செல்வதாக இருக்கும். அதற்கு நம் சம்பவங்கள் மறக்கும் தகுதி கொண்டவையாக இருக்கக் கூடாது. நினைவிலிருந்து மறையும் பொழுது அதற்கான உணர்ச்சிகளையும் இழந்தவர்களாய் மாறிவிடுகிறோம். போராட்ட குணத்தை இழக்கிறோம். ஆகவே பெண்கள் தம் அனுபவங்களையெல்லாம் கதைகளாய் மாற்றி வைக்க வேண்டும். அக்கதைகள் வழியாக பெண்கள் தம் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும். ஏனெனில் வரலாறுகளில் பெண்கள் இடம்பெறாமல் போன போதெல்லாம் அவர்களின் போராட்டங்களுக்கான அங்கீகாரம் மறுக்கப்பட்ட போதெல்லாம் பெண்கள் தம் போராட்டங்களைக் கதைகளாக மாற்றி வைத்திருக்கின்றனர். அவற்றில் புரட்சிக்கான வித்துகளையும் ஒளித்து வைத்திருக்கின்றனர். நாம் சொல்ல வரும் கதைகளுக்கு முடிவு என்று ஒன்று இருப்பதேயில்லை. அவை தொடங்கிய இடத்திலிருந்து தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
குட்டி ரேவதிகுறிப்பு: ‘பெண்ணெணும் பெருந்தகை’ எனும் பொருளில் அரும்பு இதழில் தொடர்க்கட்டுரைகள் எழுதிவருகிறேன். இது சென்ற மாதம் வெளியாகியுள்ள கட்டுரை.

வம்சம் - விமர்சனம்


இயக்குநர் பாண்டிராசுக்குக் கதை சொல்லும் திறன் இருக்கிறது. ஆனால் கதை தான் சிக்கமாட்டேன் என்கிறது.இரண்டு ஊரின் பகைக்கிடையில் சிக்கிக்கொள்ளும் நாயக, நாயகி மற்றும் இதர கதாபாத்திரங்கள். இது தான் கதை. ‘களவாணிதிரைப்படத்தின் ஒரு வரிக்கதையும் இதுதான்!நாட்டார் பண்பாடு, இனவரைவியல் என்றெல்லாம் வகைப்படுத்தி, ஒரு குறிப்பிட்ட இனக்குழுச் சமூகம் பற்றிய திரைக்கதையை என்னதான் நியாயப்படுத்தினாலும் சரியான அணுகுமுறையும் பக்குவமும் இல்லாததால் அர்த்தமிழந்து உதிர்கின்றன.செய்ய விரும்பிய கொலையைச் செய்து விட்டு, ‘பட்டைச்சாராயமும் பன்னிக்கறியும் திங்கவச்சுட்டாங்களேய்யாஎன்று சப்பைக்கட்டாய்த் தாழ்த்தப்பட்டவர்களின் குறியீடுகளை உள்ளே இழுத்துக் கொள்ளுவதற்கு வாய்ப்பாக அமைந்த ஏராளமான சண்டைக் காட்சிகள் இயக்குநரின் நோக்கங்கள் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன.கோடம்பாக்கத்தை ஒட்டி வசிப்பவர்களுக்குத் தான் தெரியும் இந்தப்படத்தின் கதாநாயகனுக்குச் செய்யப்பட்ட அளவுக்கு மிஞ்சிய விளம்பரப்பலகைகளும் சுவரொட்டிகளும். வாசலில் தட்டி வைத்து மறித்தது போல் திரையரங்கில் கூட்டமே இல்லை.சண்டைக்காட்சிகளுக்கு முன்பான நீள நீள நடையும் ஓட்டமுமான முன்னோட்டக் காட்சிகள் அயர்ச்சியைத் தருகின்றன.தேவர் சமூகப் பெண்களின் அம்சங்களாகக் காட்ட முயற்சித்திருக்கும் அத்தனைக் காட்சிகளும் பெண்களுக்கு அழகு கூட்டாமல் நிகழ்வுகளுடனும் பொருந்தாமல் முகம் தொங்கிப்போகின்றன.துடைப்பத்தையும் அரிவாள்மனையையும் காட்டும் பெண்கள் புத்திசாலிப்பெண்களாக இல்லாமல் போய்விடுவார்களா என்ன?மற்ற சாதிப் பெண்களை விட, தேவர்சாதிப் பெண்களுக்கு, அச்சாதியின் கட்டுப்பாடுகளையும் முறைகளையும் நிறைவேற்றுவதற்கான வற்புறுத்தல்கள் அதிகம். ஆகவே, அவர்கள் மீது செலுத்தப்படும் ஒடுக்குமுறைகளிலிருந்து வெளியேற முடியாத தவிப்பு நிறைந்த பெண்களாய்த் தான் யதார்த்தத்தில் அவர்களை பார்த்திருக்கிறேன்.கதாநாயகனின் அம்மா பள்ளி ஆசிரியையாக இருந்தாலும் முடிவெடுக்கும் துணிவு மிக்கவர் என்றாலும் பிற்பாடு தன் வீரத்தை இழந்து அடக்க ஒடுக்கமாய் மாறிவிடுவதற்குக் காரணம், ‘எப்பாடுபட்டாலும் பிற்பாடு கெடாதவர்என்ற வம்சப் பெருமையையும் வம்சத்தையும் காப்பாற்றிக் கொள்ளுதலாம்.கிராமக்கதை என்ற பூச்சுடும் வேலையெல்லாம் பாரதிராஜாவுடன் ஏற்கெனவே நிகழ்ந்து விட்டது. இப்பொழுதைய சமூக அமைப்பின் புதிய குளறுபடிகளைப் பேசியிருந்தால் இச்சமயத்தில் வரவேற்கத்தக்கதாக இருக்கும். செல்ஃபோன் நகைச்சுவைகள் மட்டும்தாம் புதியதாய் இருக்கின்றன.அரைகுறையான யதார்த்த சினிமா. யதார்த்த சினிமா என்னும் பெயரில் முன்வைக்கப்படும் இயல்பான சாதீயக்கதை, சாதிப்பெருமைகள்! சாதி, அண்டை அயல் மக்களுடன் கொண்டிருக்கும் முரணைப் பேசாமல் விடும்போது, அல்லது புரிந்து கொள்ளத் தயங்கும்போது இயக்குநனான கலைஞன் யதார்த்தத்தின் பக்கம் நிற்கமுடியாமல் தோற்றுப்போவது தெரிகிறது.


காதுக்கு ஓய்வே இல்லாமல் இசை வெறும் இரைச்சலாய் குடைந்துகொண்டே இருக்கிறது.இந்தப் படத்தின் வழியாகச் சொல்லப்பட்ட தேவர் சாதிப் பெருமையையும் வம்ச விருத்தியைக் காப்பதற்கான நியாயங்களையும் இப்படத்திலிருந்து தொடங்கி ‘தமிழ் சினிமாஇன்னும் பல படங்களுக்குத் தொடரும் என்று வெகுநிச்சயமாய் எதிர்ப்பார்க்கலாம்.


என்ன தான் பெண்ணை தெய்வமாகப் பார்க்கும் சாதி என்றாலும் பள்ளிக் கல்வியில் மாநிலத்திலேயே முதலாவது மதிப்பெண் பெற்ற பெண்ணை மாடு மேய்ப்பதற்கு அனுப்புவதில் பெருமை கொள்ளும் சாதியும் கூட.திரைக்கதைக்கு என எடுத்துக் கொண்ட கருப்பொருள் அரைவேக்காட்டுத்தனத்துடன் இருப்பதால், படத்தில் இடம்பெற்றிருக்க வேண்டிய புதிய நிலவெளிக்கான ஒளிப்பதிவுக்கும் இசைக்கும் ஏராளமான சாத்தியங்கள் இருந்தும் கருப்பொருளே கலைஞனின் யத்தனத்தை குறுக்கி முடக்குகிறது.‘தேவர் சாதிஎன்று நேரிடையாக என் கருத்துகளைக் குறிப்பிட்டது குறித்து சாதி விசுவாசிகள் வருத்தமுற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஒரு படமே நேரிடையாக இதை முன் வைத்துப் பேசும் போது என் கூற்று ஒன்றும் பெரிய பாதகத்தை ஏற்படுத்திவிடாது.


‘எப்பாடு பட்டாலும் பிற்பாடு படம் ஓடாதுஎன்பதற்கான போதிய காரணங்கள் இருப்பதால் மக்கள் மனதில் இடம்பெறுவதற்கான எந்த அம்சமும் இல்லாத ‘வம்சம்’!


குட்டி ரேவதி

புலி வேட்டை


ஆள்கொல்லிப் புலிகளை வேட்டையாடிய ஜிம் கார்பெட்டின் ‘குமாயுன் புலிகள்நூலை உங்களில் எவரேனும் வாசித்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை. புலனுக்கும் அறிவுக்கும் ஒரேசமயம் இன்பமளிக்கும் இத்தகைய நூலை சமீபத்தில் நான் வாசிக்கவில்லை. புலிகளை வேட்டையாடும் மனிதன், மனிதர்களை வேட்டையாடும் புலிகள் என இரண்டு எதிரெதிர் சமூக இயக்கங்களின் வெளிகளாக விரியும் இந்நூலை தி.ஜ.ர. (திங்களூர் ஜகத்ரட்சகன் ரங்கராஜன்) மொழிபெயர்த்திருக்கிறார். நீரில் தூண்டிலிட்டு அல்லது புடவைத் தலைப்பை நீருக்கடியில் பறக்கவிட்டு மீன்பிடிக்கக் காத்திருக்கும் அதே அனுபவம் இந்த நூலை படிக்கும் பொழுதும் ஏற்படுகிறது.


ஆட்கொல்லிப் புலிகள் என்று அறிவிக்கப்பட்டவற்றை அடர்ந்த காட்டுக்குள் தேடிச் சென்று வேட்டையாடிய வேட்டை அனுபவ நூல் இது. ஜிம் கார்பெட் அதற்காக அந்தந்தக் காட்டை ஒட்டிய கிராமங்களில் சென்று தங்கி, ஆட்கொல்லிப் புலிகளின் குணங்களையும் வாழ்முறையினையும் அறிந்து கொண்டு அவற்றைத் தேடிச்செல்லும் அனுபவங்களை பதிவுசெய்திருக்கிறார். நிறைய கிளைக்கதைகளும் ஆங்காங்கே முளைத்து நம்மைப் பரவசப்படுத்துகின்றன. வேட்டைக்கு உடன் அழைத்துச் செல்லும் நாய் ராபினின் கதை நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதுடன் ராபினை நாம் அதிகமாய் நேசிக்கத் தொடங்கிவிடுகிறோம்.


மலை காடு ஆறு என நில, நீர்வெளியை நுணுக்கமாக அதன் அங்க அடையாளங்களுடன் விவரித்து, அதன் கட்டுடையாமல் நம் கண்முண் நிறுத்துகிறார் ஜிம் கார்பெட். அவர் நுழைந்திருக்கும் காட்டின் வரைபடம் அதிகச் சிரத்தையுடன் நம் முன் எழுதப்படுகிறது. இரவும் பகலும் காட்டிற்குள் முறையே சிறுத்தையையும் வேங்கையையும் தேடிச் செல்லும் அவரது பயணத்தின் சிரமங்களும் திருப்புமுனைகளும் ஏற்கெனவே தென்மாநில காடுகளுக்குள் பலமுறை பயணித்த என் போன்றவர்களுக்கு இன்னும் பரபரப்பூட்டுவதாகவும் கற்பனையைத் தூண்டுவதாகவும் இருக்கின்றன. வாசிக்கத் தொடங்கினால் புத்தகத்தைக் கீழே வைக்க முடியாத அளவுக்கு உரைநடையின் நாவல் மொழியும் சுவாரசியமும் இயல்பான கச்சிதமான சொற்சேர்க்கையுடன் ஆளப்பட்ட மொழியாக்கமும்.


ஓர் இயற்கைச் சூழலில் இருக்கும் அத்தனை உயிர்ச்சித்திரங்களையும் அவற்றைப்பற்றிய துல்லியமான சப்த உருவக்குறிப்புகளுடன் இவ்வேட்டைப் பயண நூலில் பதிவுசெய்திருக்கிறார் ஜிம். அவை வெறுமனே ஒரு விவரக்குறிப்பாக இல்லாமல் சம்பவத்துடன் கூடிய ஓர் அனுபவ விவரிப்பாகவும் இருக்கிறது. ஓர் வேட்டையாளன் தனது செவிப்புலனறிவு, நாசிப்புலனறிவு, கட்புலனறிவு ஆகியவற்றுடன் இவை எல்லாவற்றையும் ஒரே சமயம் கையாளும் மாயவித்தையையும் கொண்டிருக்க வேண்டும். பல இடங்களில் புலியின் தன்மையும் அதை வேட்டையாடும் வேட்டையாடியின் தன்மையும் ஒரே குண இயல்புகளைப் பெற்றுள்ளதைப் போல தோன்றுகிறது. வேட்டை அனுபவத்தை அவர் விவரித்துக் கொண்டிருக்கையில் நடையின் எந்த இடத்திலிருந்து புலியின் சுவடுகள் தொடங்குமோ என்னும் ஆர்வக்குறுகுறுப்பு நம்மை நிமிண்டிக்கொண்டே இருக்கும்.


வேட்டை என்பது நிஜமானதொரு மெய்வருத்தும் பணி. அதற்குத் தேவையான அதிமுக்கியமான அறிவு கற்பனை வளம். சண்டைக்கான இயற்கையான உணர்ச்சிகள் உச்சம் பெறும் தருணம் வரை வேட்டையில் ஈடுபடுபவர், அவர் மனிதனாயிருந்தாலும் புலியாயிருந்தாலும் பதுங்கி இருக்க வேண்டும். உடல் முழுதும் புலன்களின் ஆணைகளைத் தட்டாமல் ஏற்கும் இராணுவம் போல செயல்படவேண்டும். இவ்வாறு வேட்டையை தனிமனித சுபாவத்துடன் இணைத்துப் பார்க்கும் அளவுக்கு பொதுத்தன்மையையும் கொண்டிருக்கிறது. ஜிம் கார்பெட் தன் வேட்டை அனுபவங்களுக்கு அப்பாற்பட்டு பயின்ற, நுகர்ந்த மனிதத் தன்மைகளும் அவற்றுடன் இயல்பாகவே தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டதும் தாம் இதைச் சாத்தியப்படுத்துகின்றன.


‘குமாயுன் புலிகளை’ப் படித்து முடிக்கும் ஒருவர், காட்டுக்குள் பிரவேசிக்க விரும்பும் தன் இச்சையை நிறைவேற்றிக் கொள்ளாதவரை நீருக்குள் நீச்சலடிப்பது பற்றி புத்தகத்தில் படிப்பது போலாகிவிடும். என்ன தான் நூலில் வாசித்தாலும் காட்டுக்குள் பயணிக்கும் அனுபவம் என்பது ஒரு மனிதனின் அடிப்படையான தேவை என்பதை பலசமயங்களில் நான் உணர்ந்திருக்கிறேன். அது பெண், ஆண் என்ற பேதமில்லாமல் ஒரு பரிபூரண விடுதலை உணர்வைக் கொடுக்கிறது. இனியொரு முறை காட்டுக்குள் நுழைய நேர்ந்தால் வழியில் புலியின் சுவடுகள் தென்படுமா? அவை முன் சென்ற சுவடுகளைக் காணும் வாய்ப்பைத் தருவதற்கேனும் புலிகள் மீதமிருக்குமா என்ற கேள்விகளுடன் இதை முடித்துக் கொள்ளலாம்.

குட்டி ரேவதி

இரு குறுங்கதைகள்

முட்டுச்சந்து

மழை தூறிக்கொண்டிருந்தது. புங்கமரங்களின் பூக்கள் உதிர்ந்து மரத்தின் காலடியில் கோலமிட்டிருந்தன.

கக்கன்புரத்தின் நான்கு வீடுகளில் பெருக்கித் துலக்கிப் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த வெள்ளையம்மா, மழையைப் பற்றிய அசிரத்தையின்றி தூறலினூடே நடந்து சென்று கொண்டிருந்தாள்.

அவளின் நாற்பது வயது மகன் கால்கள் ஒன்றையொன்றுப் பின்னித் தள்ளாட அவளைக் கெஞ்சியவாறே தொடர்ந்து கொண்டிருந்தான். அப்பொழுது அவன் தலை காற்றில் உருள்வதைப் போலிருந்தது.

‘ஒரு இருபது ரூபா கொடும்மா!

‘இருபது ரூபா கொடு!

‘கொடுக்கப்போறீயா இல்லியா?

அவன் கெஞ்சக் கெஞ்ச, என் கிட்ட இல்ல’, என்று பிடிவாதமாய் மறுத்தவாறே நடந்தாள் வெள்ளையம்மா. ஒரு முட்டுச் சந்துக்கு வந்ததும் எதிரிலிருந்த குத்துச்சுவரைப்பார்த்து விறைப்பாகக் கையைக் கட்டிக் கொன்று நின்று விட்டாள்.

அருகில் வந்த மகன் தரையில் கிடந்த ஒரு விறகுக் கட்டையை எடுத்து,

‘இப்ப காசு கொடுக்கப் போறியா இல்ல..?

என்று கட்டையை ஓங்க, வெள்ளையம்மாள் தன் முந்தானை முடிச்சை உருவி அவிழ்க்கத் தொடங்கினாள்.அணில்

ஒரு பெரிய அரசமரம். பகற்பொழுதுகளில் அம்மரத்தில் ஏறித் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தது ஓர் அணில். கீச் கீச் சப்தம்.

பொழுது இரவாகும் போதெல்லாம் அதைக் காணாத மஞ்சுப்பாப்பா,

‘அம்மா, அந்த அணில் எங்க போயிருக்கு?என்று கேட்க,

இரவானதும் நிலாவுக்குள்ள போயிரும் என்று அம்மா பதிலளித்தாள்.

அப்பொழுதுதான் முழு நிலாவிற்குள் அணில் உறங்குவதைப் பார்த்தாள் மஞ்சுப்பாப்பா.

பின்பொரு நாள் நிலாவையும் காணாதபோது சோகமுற்றாள் மஞ்சுப்பாப்பா.

அந்தி வீசிய காற்றில் அம்மரம் அசைந்தாடுவதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

மரத்தின் உச்சாணிக் கொம்பின் அருகில் நிலாவின் வெள்ளி நுழைவாயில்

வானத்திற்குத் திறந்திருந்தது.

அம்மரத்தின் கிளையிலிருந்து அணில் துள்ளி எழுந்து நிலாவிற்குள் குதித்தது.

மஞ்சுப்பாப்பா நிலாவிற்குள் தானும் போகவேண்டும் என்று எண்ணியவாறே தூங்கப்போனாள்.குட்டி ரேவதி