நம் குரல்

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்

(தமிழ்ப்பெண் மொழி வழி ஓர் அகழ்வாய்வு)

பெண்ணெழுத்து தமிழ்ச்சூழலுக்கு ஏற்கெனவே நிரம்ப அறிமுகமாகியிருந்தாலும் அதன் புரிந்து கொள்ளல் தளத்தில் உள்ள முரண்களைக் கட்டவிழ்ப்பது அவசியம் எனப்படுகிறது. பெண்மை என்பது ஒற்றைத்தன்மை உடையதன்று, அது பன்முகத் தன்மை உடையது என்பதான, பின்நவீனத்தின் கருத்தாக்கத்தை எதன் மீதும் சுமத்திப் பார்க்கும் காலக்கட்டத்தில் தான் பெண்ணெழுத்து தமிழகத்தில் ஓங்கியது. குழந்தைகள் விளையாடும் உடைந்த பொம்மையைக் கூட பின்நவீனத்துவப்பண்பு கொண்ட கலைப்பொருள் எனக் கொண்டாடும் நகைப்பைக் கொடுக்கும் இடத்தில், பெண்ணெழுத்தை அறிமுகம் செய்யும் இடத்தையும் கால அவகாசத்தையும் நான் உங்களிடையே எடுத்துக் கொள்ள இருக்கிறேன்.


இவ்விடத்தில் ‘பெண்’ என்ற தனது பால் அடையாளத்தை நிலைநிறுத்த எழுத்தைப் பயன்படுத்திய பெண்களுடன் ஏற்கெனவே அவ்வடையாளங்களுடன் எழுதிய, எழுதிக்கொண்டிருந்த பெண்கள் வந்து இணையும் இடத்தில் அவ்வொற்றை அடையாளம் என்பது காத்திரமடையாமல் நீர்த்துப் போகும்படியான ஒரு செயலூக்கம் பெற்றிருந்ததைத் தமிழ்ச்சூழல் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது அல்லது சொரணையற்று இருந்தது. இந்நிலையில் நம் பெண்கள், தம் பிரதிகளை மீண்டும் மீண்டும் எழுதிக் கலைக்கவேண்டியிருந்தது. மணல் மீதான தடங்களைப்போல கலைந்து கொண்டே இருந்தன, அப்பிரதிகள். மண் அடுக்குகளின் ஆழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும், புதைக்கப்பட்டிருக்கும் தம் உடலைக் கண்டடையும் முடிவற்ற முயற்சியின் வெளிப்பாடாகவும் இருந்தன அப்பிரதிகள். இவ்விடத்தில், பெண் ‘எழுத்தை’, இரண்டாம் கட்டத்தில் எழுத வந்தப் பெண்கள் அவ்விதம் தான் தமக்குப் பயன்படுத்திக் கொண்டனர், ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து முதல் முறையாக எழுத வந்த பெண்கள், இவர்கள். சமூகவெளியில் முதன் முறையாகத் தம் உடலை நிலைநிறுத்திக் கொள்ளும், கட்டமைத்துக் கொள்ளும் அவர்தம் பணி, அவர்கள் எழுத்தின் வழியாகவே, அதிகார நிறுவனங்களுக்கு வெளிப்படையாகத் தெரியவந்தது. அதிர்ச்சியை அளித்தது. இது நிகழ்ந்த காலக்கட்டத்தில் அதிகார நிறுவனங்கள், பெண்ணுடல்களுடன் நேரடியாகவே மோதத் தொடங்கின.ஆனால், அதற்கு முன்பிருந்தே எழுத்தைத் தங்களின் ஊக்கமாகவும் அதிகார நிறுவனங்களை எதிர்ப்பதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்திய இரண்டாம் தலைமுறைப் பெண்கள், ’பெண்’ என்ற ஒற்றை அடையாளத்தையே எப்பொழுதும் வலியுறுத்தி வந்தனர் என்பதை இங்கு நினைவில் வைத்துக் கொள்வோம். ஒற்றை அடையாளப் பெண்கள் இதர, அதிகார நசிவுக்குள்ளான பெண்களுடன் ஒருபுறம் தங்களை இணைத்தவாறே மறுபுறம் ஆதிக்கக்குறிகளையும் தங்கள் உடலில் வளர்த்துக் கொண்டும் இருந்தனர். இந்நிலையில் பெண்களில் ஆதிக்கக் குறி வளர்த்த பெண்கள், ஆதிக்கக் குறி வளர்க்காத பெண்கள் என்ற இருவகையினர் உருவாகின்றனர். ஏற்கெனவே, அதிகாரம், முறையற்ற பாலின்பச் சுவை, உடல் மீதான தொடர் வன்முறைக்கான வேட்கை போன்ற ஆண்மைய வாதத்தினால் பெண்களின் பேசுபொருட்கள் ஒருக்காலும் விளிம்பிலிருந்து மையத்தை எட்ட முடியாத சுழற்சி நிலையிலும், இயக்க நிலையிலுமே இருந்தன. அவ்வகையில், சமூகத்தின் மேல் தட்டு அங்கீகாரங்களுக்கும் சலுகைகளுக்கும் உரியவர்களான பெண்கள் தாங்கள் மீட்டுக்கொண்டு வந்த மணலுடலில் குறி வளரக் கண்டனர். அது பாலுறுப்பு என்பதால், அது எப்பொழுதும் மறைவிடத்தில் உள்ளது என்பதால் அது பெரிய பொருட்டாக்கிப் பேசப்படவேண்டியதில்லை என்று கருதியதுடன், தம் பெண்ணியப்பிரச்சனைகளுக்கெல்லாம் முற்றுவைத்துவிட்டு, தம்முடலை ஒரு பேசுபொருளாக ஆக்கும், அதை திடப்படுத்தும் தலையாய வேலையையும் விட்டுவிட்டு மீண்டும் தங்கள் தங்கள் உடலை ஆணின் வேட்கைக்கு இரையாகச் செய்யும் மரபார்ந்த வேலைக்குத் திரும்பிவிட்டனர்.பெண்ணெழுதும் பிரதியோ அப்பிரதியைப்படைக்கும் பெண்ணோ முக்கியமன்று. இப்பிரதி உருவாக்கம் பெறும் வழிமுறை தான் முக்கியம். பிரதியை வியத்தலும், அதைத் தூற்றுதலும் அல்லது பிரதியை விடுத்து அதை உருவாக்கிய பெண்ணின் உடலையும் வாழ்க்கையையும் ஒரு பிரதியாக்கித் தூற்றுதல் அல்லது புறக்கணித்தல் போன்ற நிகழ்வுகளையெல்லாம் தமிழ்ச்சமூகம் வேண்டி விரும்பி தன் ஆதிக்கக் குறி வளர்த்த தருணங்களாகக் கொள்ளலாம்.ஆனால், பெண்ணின் சமூக அடையாளம், அவள் ஆக்கிய பிரதியின் கருப்பொருட்களின் பொருள்விளக்கம் இவையிரண்டுமே, அப்பெண் உருவாகிவந்த பண்பாட்டுத் தளத்தின் வழியே தான் நுகரப்படுகிறது. இதை வேண்டாமென்று பெண்களும், இது அவசியமில்லை என்று வாசகர்களும் ஒருபொழுதும் புறக்கணித்து விடமுடியாது. ‘மொழி’ யைப் பெண் பெறுவது ஓர் அதிகாரமாகவே கருதப்பட்ட சமூகத்தில் பிரதியை உருவாக்கிய பெண்ணுக்கு எழுத்துமொழியுடனான அல்லது வழக்கு மொழியுடனான புழக்கம் எத்தனை தலைமுறையினது என்பதும், முந்தைய தலைமுறையிலேயே அவளுக்கு மொழி வாய்த்திருந்தது எனில் அத்தலைமுறையிலேயே அவளுக்கு மொழி அதிகாரத்தைத் துய்க்கும் வாய்ப்புக் கிடைத்த போது அப்பெண் அம்மொழியை வைத்து தனக்கும் தன்னையொத்த உடலுடைய பெண்களுக்கும் என்ன செய்து கொண்டாள் என்பது மிகவும் கவனத்தில் கொள்ளப் படவேண்டிய கேள்வி. இந்தக் கேள்வியை இன்னும் எளிதாக அணுகுவது அப்பெண்ணுக்கு அவசியப்படும் விடுதலையின் வேட்கையை அளவிட உதவியாக இருக்கும். அதற்குக் காலத்தைத் தலைகீழாக நாம் அணுகவேண்டியிருக்கும். முதல் தலைமுறையாக மொழியைக் கைக்கொள்ளும் பெண் எனில் அப்பெண்ணின் கருப்பொருட்களே முதன்மையானதாகக் கருத்தில் கொள்ளப்படவேண்டும். ஏனெனில், இன்னும் வாசிக்கப்படாததும், முன் வைக்கப்படாததும், புறக்கணிக்கப்பட்டதுமான மூலகங்கள் அங்கே தான் நிறைந்து கிடக்கின்றன.மேற்கண்ட புரிதலுடன், தமிழ்ச்சூழலில் பெண்ணெழுத்து நிகழ்வை அணுகலாம். மிகை வெளி, இவ்வுலகை ஒரு ‘முழுமை’ எனப்பார்ப்பதற்கான தனிப்பட்ட முறைமை, நன்கு செழித்தும் கொழுத்தும் வளர்ந்திருந்த முதலாளித்துவப் பண்பாட்டு நிலையைப் பகுத்தாய்வதற்கான தத்துவார்த்தக் கருத்துகளின் ஒரு தொகுதி, எப்பொழுதும் கலகத்தை நிகழ்த்துவதற்கான வாய்ப்பும் வேட்கையை நிறைவேற்றிக் கொள்வதற்குமான வசதியும் வழங்கப்பட்ட பசியாறிய உடல்கள், பணிவு மறுக்கும் தன்மை, புரிதலின் செயல்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருவது, ஒருங்கிணைப்பைக் காப்பாற்றுவதில் அதிக ஆர்வமற்றது, ஏற்கெனவே திடமான குருதிப்பாய்ச்சலுக்கு உள்ளான ஆதிக்கக் குறிகளை வளர்த்திருந்த இனத்துடன் சென்று சேரும் ஆர்வத்தைச் செயல்படுத்திக்கொள்வது, எனத் தீவிரமாக தன்னிலையிழந்து தமிழ்ச்சமூகம் செயல்பட்டுக் கொண்டிருந்தக் காலகட்டத்தில் பெண்ணெழுத்து அறிமுகமாகிறது. அதுவரையிலும் பெண்ணுடலைத் தன் புனைவுகளுக்குள் ஒரு கச்சாப்பொருளாக மட்டுமே ஆண் படைப்பாளிகள் படைத்து வந்தனர். ஆக. பெண்கள் தம் மொழியால் அத்தகையப் புனைவுகளையெல்லாம் தம் எழுத்துக் கரத்தால் அழிக்கின்றனர். அப்புனைவுகளில் இடம்பெற்றவை எல்லாம் எம் உடல்களோ, ஏன், எம் உடல்களின் சாயல்களோ கூட இல்லை என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. ஆண்களின் புனைவுகளில் உலவிய பெண்ணுடல்கள், ஆண்களின் வசதிக்காகவும், ஆண் குறிகளின் அதிகாரத்தை இயக்குவதற்காகவும் அவர்கள் புலன்களுக்கு இன்பமூட்டும் நுகர்வுத்தன்மைகளுடன் உருவாக்கப்பட்ட அங்க அடையாளங்களுடையதுமான ஒரு தட்டையான உடல் தான். இந்நிலையில் பெண்ணெழுத்து என்பது தன்னுடலின் வலிமையையும் தன்னையொத்த பெண்கள் உருக்கொண்ட உடலையும் எழுதுபொருளாக்கும் முதல் வகையான பணியைச்செய்கிறது. இங்கு எழுத வரும் பெண்களும், அவர்கள் எழுத்து உருவாக்கம் பெறும் நடைமுறையும், ஏன் அவர்கள் உருவாக்கும் பிரதியுமே கூட தனித்த அளவில் முக்கியத்துவம் பெறுவதுடன் உச்சப்பட்ச செயற்பாடும் அடைகின்றன.மேற்கண்ட நிலையில் உருவாகிய பிரதிகள் எவ்வாறெல்லாம் வாசிக்கப்பட்டன எனும் புரிதலுக்குச் செல்லலாம். அப்பிரதியை வாசித்தவர்கள், அவரவர் மனதில் அப்பிரதியை உருவாக்கியப்பெண் பற்றிய என்னென்ன சமூகப் பண்பாட்டு பிம்பங்கள் துலங்கினவோ, அந்தச் சமூகப் பண்பாட்டு பிம்பங்களுக்கு என்னென்ன ஏற்றத் தாழ்வுகளைக் கற்பித்திருந்தனரோ அதையே கண்ணாடியாக அணிந்து கொண்டு வாசித்தனர். அவர்கள், தங்களின் அகஉலகத்திற்கு ஊட்டி வளர்த்திருந்த கருத்தாக்கத்தையோ, சமூகக் கூறுகளையோ, பண்பாட்டு ஏற்றத் தாழ்வுகளையோ எங்குமே கேள்வி எழுப்பாமல் சந்தேகிக்காமல், தங்கள் முன்வைக்கப்பட்ட பிரதிகளின் மீது அச்சுமைகளை ஏற்றினர். அவற்றைச் சந்தேகித்தனர், அஞ்சினர். அவதூறு செய்தனர். தங்கள் புனைவுகளில் உலவிய பெண் பிம்பங்களும் அவற்றின் வழியாக அவர்கள் தங்களுக்குச் சேமித்து வைத்திருந்த அதிகாரங்களும் பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை மறைக்கப் பரிபூரண அமைதி காத்தனர். இவர்களில் பெரும்பாலான ஆண்கள், யோனியையும் முலைகளையுமே வீடாகவும் வெளியாகவும் மாற்றியிருந்த பெண்களின் காதுகளில், ’யோனிகளும் முலைகளுமே கூட மாயை!’ என அழுந்த அழுந்தக் கூறி அவற்றின் வழியாக அச்சத்தைச் சித்திரித்த பக்திப்பாடல்கள் தொடர்ந்து ஒலித்த இந்துக் குடியிருப்புகளிலிருந்து வந்த படைப்பாளிகளாயிருந்தனர். ஆகவே, தங்களின் கவனத்தை, சமூகப் பிரக்ஞையை, அவர்களுக்கு அது வரை செயலூக்கம் வழங்கி வந்த இந்திய இறையாண்மை, இந்திய சமயம், இந்தியப் பண்பாடு என்ற இந்திய முகத்துடன் தங்களை ஒட்டுமொத்தமாய் இணைத்துக் கொண்டனர். அப்படி அவர்கள் தங்களை இந்திய இறையாண்மையின் இந்து இதயத்திற்கு ஒப்புக்கொடுத்துவிட்டார்களானால், பெண்கள் முகத்தில் வெளிப்படும் பலதரப்பட்ட உணர்ச்சிகளை நேரடியாக எதிர்கொள்ளவே வேண்டியிருக்காது. ஏனெனில் அவ்வுணர்ச்சிகள் அவர்களுக்குள் கடுமையான குற்றவுணர்வை ஊட்டக்கூடும். அவர்தம் பண்பாட்டு அதிகாரத்துடனான உறவைத் துண்டித்து நிரந்தரமானதொரு தனிமையைக் கொடுக்கக்கூடும். மொழி வழியாகத் தம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டினால் உண்டாகும் பதட்டத்தை எல்லோரும் அறியும்படியாகும். ஆண் குறி வழங்கிவரும் மறைமுகமான பெருமையையும் அதிகாரத்தையும் சுவைக்கமுடியாது போய்விடும். இன்னும் சொல்லப்போனால் எந்த மொழியை வைத்துத் தன் அதிகாரத்தை வளர்த்துக் கொண்டார்களோ அந்த மொழியே முற்றிலும் அந்நியமாகப் போய்விடும். ஏனெனில் இது வரை அவர்கள் கற்பித்து வந்த அர்த்தத்தில் இருந்த சொற்களையெல்லாம் பெண்கள் வேறுவேறு அர்த்தங்களில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அவர்கள் தம் பயன்பாட்டிற்கு ஏற்ற கலைச்சொற்களையும் உருவாக்கிக் கொண்டனர். ஆகவே, புனைவாளர்கள் தங்கள் முகம் திருப்பிக் கொண்டார்கள்!ஆனால், தமிழ்ச்சூழலில் ஒரு தவறான அர்த்தப் புரிதல் நிகழ்ந்து விட்டது. பெண் விடுதலைக்கான இந்த எழுத்து வகை, பாலியல் வேட்கையின் வெளிப்பாடாகவும் அதற்கான வெளிப்படையான கோரலாகவும் பெண்களாலேயே புரிந்து கொள்ளப்பட்டிருப்பது தான் அது. அத்தகைய பாலியல் வேட்கையை பெண்கள் தாமாய் முன்வைக்கும் உரிமையைப் பெற்றுவிட்டாலே, ஆண் குறிகள் தம்மீது செலுத்தி வந்த அதிகாரத்தை எதிர்த்து விடலாம் என்ற அர்த்தமாயும் எடுத்துக்கொண்டனர். அப்படியொரு பாலியல் வேட்கையையும் விடுதலையையும் ஏற்கெனவே சாதியச் சந்தையின் மேல் தட்டில் இருக்கும் ஆதிக்கச் சாதிப் பெண்கள் நுகரவில்லையா என்ன? அது முழுமையான விடுதலையை பெண்ணினத்திற்குச் சாத்தியப்படுத்திவிட்டதா என்ன? ஆக, மொண்ணையாக அதை பாலியல் வேட்கை என்றும் பாலியல் விடுதலை என்றும் பேசுதல் ஆணாயிருப்பினும் பெண்ணாயிருப்பினும் அவரவர் சாதி சார்ந்த அதிகார போதையில் நிகழும் அரைகுறைப் புரிதலே. பாலிமை உறுதிப்பாட்டை அடைவதற்கான முயற்சியில் ஒடுக்கப்பட்ட சாதிய, பொருளாதார அடுக்குகளின் கீழ்த்தட்டில் இருப்பவர்களுக்கும் இவை தடைகளாக எழுகின்றன. ஆக, இக்கட்டத்தில் பாலியல் உரையாடல்களின் அர்த்தங்களையும் பாலிமையின் பண்புகளையும் பாலியல் சொற்களின் குறியீடுகளையும் விரைந்து மாற்ற வேண்டியிருக்கிறது. மொழியின் கூர்மையை இன்னும் தீட்டிக் கொள்ளவேண்டிய அவசியமும் இருக்கிறது. பாலியல் வேட்கை பற்றிய வெற்று உரையாடல்கள் எல்லாம் புணர்ச்சியின் உச்சக்கட்டத்தைப் போலவே தீவிரச் சோர்வைத்தாம் தரக்கூடும், அதை அடைவதற்கான வழிமுறைகளும் அலகுகளும் தேவைகளும் இல்லாத போது.பாலியல் வேட்கை என்பதை முன்வைக்கும் பெண்நிலை வாதம் முற்றிலுமானதோர் ஒற்றை அடையாளத்தைப் பெண்ணுக்குக் கேட்பது. ஆண்களை மட்டுமே எதிரிகளாகப் பாவித்து, இதர சமூகப் பெண் வர்க்கத்தினரை புறந்தள்ளுவது. இவர்கள் தாம் ”பெண்” சம்பந்தப்பட்ட எதுவுமே பெண்ணியப் பிரச்சனையென்று பொத்தாம்பொதுவான விஷயங்களையும் பேசுபொருளாக்குவதுடன், பெண்ணிலை வாதத்தை கூர்மையடையாமல் மழுங்கடையச்செய்கின்றனர். பொருளாதார, சாதிய நிலைகளில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் பெண்களின் முதன்மையான பிரச்சனை பாலியல் வேட்கை இல்லை, பாலியல் உரிமை. அத்தகைய பாலியல் உரிமைகளில் அவர்கள் கோரும் வேட்கை என்பது மிகச்சொற்பமான, அற்பமானதோர் உரிமை. அன்றாடம் கணநேரமும் உழைக்கும் பெண்ணின் பாலியல் நுகர்வுக்கான இயல்பூக்கம் எப்பொழுதுமே ஆரோக்கியமானதாகவும் அவ்வேட்கையை நிறைவு செய்துகொள்ளும் அனுபவமும் வாய்த்ததாகவும் இருக்கும் என்பதில் ஐயமென்ன இருக்கிறது?. ஆனால், உடலுக்கு உணவையும் ஆரோக்கியத்தையும் வழங்குவதற்கான அடிப்படை வசதிகள் அற்ற சமுதாயத்திலிருந்து எப்படி உடலுக்கு பாலியல் இன்பத்தை வழங்க முடியும்? பசி வந்திடப் பறந்து போம்!தீவிரநிலைப் பெண்ணியம், மார்க்சியம் போன்ற கருத்தாக்கங்களை பெண்களின் உடல் சார்ந்த அரசியலைப் பேசுவதிலும் குறிப்பாக, கீழைத் தேயப்பெண்களின் காலங்காலமான செயற்பாடுகளை அர்த்தப்படுத்துவதிலும் இருக்கும் போதாமைகளை நினைவில் கொண்டும், அக்கருத்தாங்களை முற்றிலும் உதிரியான அளவில் புரிந்து கொண்டும் தாம் இதை முன்னுரைக்கிறேன். இந்நிலையில் நாம் அடையவேண்டிய பெண் விடுதலை என்பது, பெண்ணின் பொருளாதார விடுதலையைக் கருத்தில் கொண்டது, அதன் கடந்த கால சாத்தியங்களை நினைவில் கொண்டது, இன்றைய பெண்ணுக்கான அறஞ்சார்ந்த வாழ்வையும் அதில் பெண்ணுக்கான பாலுரிமையையும் உள்ளடக்கியது.அம்பேத்கரின் நூற்றாண்டுக்குப் பின் தான் பிற சமூகத்தினரிடம் ’பெண் விடுதலை’ நிகழ்த்தப்போகும் அதிர்வுகள் குறித்த இம்மாதிரியான பதற்றங்களும், குழப்பங்களும், தடுமாற்றங்களும் அதிகமாகியிருப்பதை உணர்கிறேன். பட்டியல் இனம் தவிர்த்த பிற சாதியினர் தங்கள் அதிகாரத்தையும் நிலைநிறுத்துதலையும் புணரமைக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதைப் போல தீவிரமாக இயங்கத் தொடங்குகின்றனர். இதில் இயல்பாகவே பெண்களின் ஒட்டுமொத்த பிரதிகளும் அவர்கள் எந்தப் பின்னணியிலிருந்து வந்தனரோ அந்தப் பின்னணி சார்ந்து இரு வகையினராகப் பிரித்து நுகரப்படுகின்றன.இதில் நாம் உண்மையிலேயே படித்துணரவேண்டியதும் நாம் எடுக்கவேண்டிய நிலைப்பாடும், தொன் பொருண்மைத்துவமும் தொல் அறவியலும் சார்ந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை ஏற்கெனவே நினைவுகளில் மீண்டும் மீண்டும் பதியப்பட்டிருந்த மரபார்ந்த பெண்பிம்பங்களின் நினைவுகளிலிருந்து நம் பெண்களை மீட்டெடுக்கவேண்டியிருக்கிறது. ஆதிக்கப் பெண் பிம்பங்களான பாஞ்சாலியின் தூமையில் உழலும் பூமியாகவும் சீதையின் சாபத்தினால் பீடிக்கப்பட்ட மண்ணில், அவள் உண்டாக்கிய தீயின் வெக்கையில் உழல்பவர்களாகவும் நம் மண்ணையும் நம் மக்களையும் சித்திரிக்கும் பிம்பங்களிலிருந்தும் பெண்கள் தங்கள் உடல்களை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. இதன் பின்னணியில் மரபார்ந்த இன ஒடுக்குமுறையையும், அதற்காகக் கட்டமைக்கப்பட்ட சாதிய அடக்குமுறையையும் நாம் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. இதுவே, இம்மண்ணின் தொல் தெய்வம் என்றால், வைதிக அடையாளங்களைத் துறந்த தெய்வமென்றால் அதன் தூமையலாத செங்குருதியில் உழலும் உடல்கள் நீங்கள் என்று எவரையும், ஏன் எந்த ஓர் ஆதிக்க சாதிப்பெண்ணையும் நாம் அடையாளப்படுத்தி அவர்களுக்கு, அறிவு புகட்டமுடியுமா என்ன? எந்த அதிகார நிறுவனத்தின் குறுக்கீடும் இல்லாமல் இயல்பான பாலியல் உந்துதலை, ஊக்கத்தைச் செயல்பாடாக்கும் உரிமை தான் பெண்களை மிகவும் வலுவாக்கும். இன்று பெண் கவிதையின் அடிநாதமாய் வியக்கப்படும் ஆண்டாளின் பாடல்களே கூட தனக்கு மறுக்கப்பட்ட ஆணுடல் மீதான வேட்கையை இறைவன் மீது ஏற்றிப் பாடியதே. இந்த ஆண்டாளுக்கு எல்லா அடிப்படையான உரிமைகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு இருக்க, பாலியல் வேட்கையை வெளிப்படுத்தும் வாயிலான யோனி மட்டுமே அடைக்கப்பட்டிருந்ததே அவள் உணர்வெழுச்சிக்குக் காரணமாயிருந்தது.ஆகவே, ஆண்டாளின் உடலும் எம் பெண்டிரின் உடல் அல்ல. யோனியை எவருக்கும் குத்தகைக்கு விடாத உடல் தீரத்தை நாம் எதிர்கொள்ளவேண்யிருக்கிறது. காலங்காலமாக ஆண்களும் அதிகாரமும் அடைக்கலமான நம் யோனிகளை அதன் அதிகார உடல்களிடலிருந்து பறித்தெடுக்க வேண்டியிருக்கிறது. அந்த யோனிகளைக் காரணம் காட்டித்தான் நம்மீது பண்பாட்டின் சுமைகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. ஆக, நம் பெண்டிரின் யோனிகளே, அறமும் சமூக நீதியும் உட்பொருளான தொல்நெறியுடன் நம்மை இணைத்துக்கொள்வதான நுழைவாயில்கள். மேலும் அந்தயோனிகள் வழியாகத் தொடர்ந்த புனல்கள் தாம் நமது உடல்களுக்கு, உடல் வளமைக்கு தீராத பாலூக்கத்தைத் திறந்து கொடுக்கின்றன.மேலும் வாசகர்கள் தெளிவாக ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். கலவியையும் பாலியல் வேட்கையையும் பேசுமிடத்தில் மட்டுமே நம் உடலை மீட்டுக் கொண்டுவிட்டதாகி விட முடியாது. நம் உடலை வலையாகப் பின்னிக்கொள்ளும் பிற ஆண், பெண் சார்ந்த பாலியல் அடக்குமுறைகளிலிருந்தும் வன்முறைகளிலிருந்தும் கூட நம் உடலை கைப்பற்ற வேண்டியிருக்கிறது. அதன் உள்ளீடாக இருக்கும் பாலியல் அரசியல்களையும் விவாதப் பொருளாக வேண்டியிருக்கிறது. தன் உடல் என்பதே கூட மற்ற உடல்களுடன் ஊற்றாக இருக்கும் யோனிகளுடன் தொடர்ந்ததொரு தீராத உறவைக் கொண்டிருக்கிறது. ஆகவே, மற்ற வேறுபட்ட தளங்களிலும் இருக்கும் பெண்ணுடலையும் மீட்டு வராமல் ஒரு பெண்ணுக்குத் தன் உடல் உரிமையும் விடுதலையும் என்பது சாத்தியமே இல்லை.மேற்விவரித்த, விவாத முன்னிலையில், ‘ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்த பிரதிகள்’ என்ற தொடரை எழுதப் போகிறேன். இது 1990 – களில் நிகழ்ந்த பின்நவீனத்துவ வாதத்தின் தேய்வையும், அப்பொழுது பெருவாரியாக அழுத்தமாக தமிழ்த்தளத்தில் நிகழ்ந்த ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து எழுத வந்த பெண்ணெழுத்தையும் பொருட்படுத்தி விவாதம் செய்யும். மேற்கத்திய கருத்துக்கோட்பாடுகளைப் புறந்தள்ளும் அல்லது அதன் பொருத்தப்பாடு கருதி விவாதிக்கும். மேற்குத் திசைக்கு முற்றிலும் எதிரான திசையில், ஐந்தாயிரம் வருட தொன்மையான தமிழ் அறச்சீர்மையான வெளியில் பயணித்தவாறே அகழ்வாராய்ச்சி செய்யவும் துணியும். வாருங்கள் நண்பர்களே! தேங்கிக் கவனிப்பாரற்றுக் கிடக்கும் அதன் நீர்வெளியில் நிரம்பத் தழைத்த பாசிகளை விலக்கிய வண்ணமே உள்நுழைந்து அகழ்வாராயாலாம், வாருங்கள்!குட்டி ரேவதி

நன்றி: கூடு, இணைய இலக்கிய மற்றும் குறும்பட இதழ்

http://koodu.thamizhstudio.com/thodargal_14.php

'முள்ளிவாய்க்காலுக்குப் பின்’ நூலுக்கு எழுதிய முன்னுரை

சிறிய அவகாசம் எடுத்துக்கொள்கிறேன்...கனலும் உண்மையின் மீது போர்த்தியிருக்கும் சாம்பலை ஊதிப்பறக்கச் செய்யும் பணி கவிஞனுடையது. அரசியல்வாதியைப் போல நிலைப்பாடு எடுப்பது அன்று. உண்மைக்குச் சார்பான நிலைப்பாடே கூட உண்மையிலிருந்து வெகு தொலைவில் நிற்பது என்பது கவிஞனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல. ஆகவே அவன் கவிதைகள் எழுதவந்தான். நேர்மையான உணர்ச்சிகளை எந்த வித சமரசத்திற்கும் அச்சத்திற்கும் அதிகார விருப்பத்திற்கும் ஆதிக்க எழுச்சிக்கும் ஆளாகாமல் இருக்கும்பொழுது கவிதை முளைக்கிறது. இந்தத் தர்க்கத்தின் அடிப்படையிலேயே இத்தொகுப்பும் உருவாகியிருக்கிறது.முள்ளிவாய்க்காலில் இறுதி வரை நின்று சண்டையிட்ட இருதரப்பு போராளிகளின் பார்வைகளாகவோ அங்கு கடைசிக்கணம் வரை உயிருடன் சாட்சியாக நின்று களத்தில் மனித அவலங்களை கண்ணுற நேர்ந்த மக்களின் ஓலங்களாகவோ காலம், இடம் என்ற அங்குற்ற வெளிகளுக்கு அப்பால் இருந்து ஊகித்தும் கணந்தோறும் உறவுற்றும் சொற்களாகி நின்ற கவிஞர்களின் கவிதைகளாகவோ இந்தத்தொகுப்பு ஆகி நிற்கலாம். பல சமயங்களில் கவிதைகள் நீதிமன்றங்களின் விசாரணைகளாக இருக்கின்றன. அல்லது உயிர்பிரியும் நேரத்திலான வாக்குமூலங்களாக. அல்லது நாட்குறிப்பின் ரகசிய குறியீடுகளாக. அதை வாசிக்கும் எவரும் நேரடியான பொருளைப் புரிந்து கொள்ள முடியாத படிக்கு சொற்களின் மறைமுக அர்த்தங்கள் துலங்கும் படியான உளவு நோக்குவதற்கு ஏதுவான படிமங்களாக. வகுப்புகளில் சொல்லிக்கொடுத்த ஆசிரியருக்கு மாணவியின் ஒப்புவித்தலாக. பெருங்காற்றுக்கு முஷ்டிமடக்கும் போராளியாக. அடர்ந்த இருண்டவெளிக்குச் சென்று உயிர்த்தோழியின் சடலத்தை மீட்டு வரும் எத்தனமாக. இப்படி எண்ணிலாத குரல்களைக் கொண்டுவரும் முயற்சியே, ‘முள்ளிவாய்க்காலுக்குப் பின்’ எனும் இக்கவிதைத் தொகுப்பு. இதுவரையிலான போர்பற்றிய அத்தனை மனித அறிவும் நினைவுகளும் இக்கவிதைகளில் புரள்கின்றன.மனித நினைவுகளில் வன்முறை பதிந்திருக்கும் வடிவங்களைச் சொற்களாக்க முயலும் போதெல்லாம் கவிதை பிறப்பதாக நான் எண்ணுவதுண்டு. கிணற்றின் தாரையைப் போல நினைவின் ஆழ்துளையின் உட்சுவர்களிலிருந்து சுரந்து வழியும் சொற்களே கவிதை வடிவாகின்றன. மீண்டும் மீண்டும் கவிதைகள் எழுதப்படுவதால் வன்முறையை அழிக்க முயலும் என்ற எனது நம்பிக்கைத் தீர்மானம் தான் இக்கவிதைத் தொகுப்பின் உருவாக்கத்திற்கான அடித்தளமும் கூட. மேலும் இது ஒரு வகையில் மறைமுகமான ரணசிகிச்சை என்பதைப் பலருடைய கவிதை வரிகள் உணர்த்துகின்றன.ஊழ் என்பது சிலப்பதிகாரத்தில் மனித மனங்களின் தற்செயலான முடிவுகளாலும் தான்தோன்றித்தனமான போக்குகளாலும் தாம் தீர்மானிக்கப்படுவதாக சித்திரிக்கப்படுகிறது. மனித மனம் தன் இயல்பு மீறிய திட்டங்களின் சாத்திய அசாத்தியங்களை அறியாமல் இப்படி வெறுமனே உணர்ச்சிகளின் கால்களுக்கிடையே அலைவுறும் போது ஏற்படும் நசுக்கல்களே ஊழுக்கான தொடக்கமாக இருக்கிறது. மனித மனத்திற்கு சமாதானம் என்ற ஒருவார்த்தை இருக்க முடியாது. அது தேவனால் கொடுக்கப்பட்ட சொல்லாக இருக்கலாம். ஊக்கம் பெற்ற மனிதன் எதையாவது தனக்குத் தானே சாதகமாகவோ எதிராகவோ செய்து கொண்டுதான் இருப்பான். அவ்வாறு அவன் தொடர் இயக்கத்திற்கான வாழ்க்கைக்குள் புகும்பொழுது இதன் எல்லைகளையும் முடிவுகளையும் கற்பனைசெய்து பார்த்து அதன் விளைவுகளை ஆராய்ந்து பார்க்கும் அவசியம் இல்லை. மாறாக தற்காலிகமான ஓர் எழுச்சி என்ற மனிதனுக்கான அடிப்படை அறிவுவெளியால் அவன் எதையேனும் செய்துவிட நினைக்கிறான். அதில் போர் என்பதும் ஒடுக்குமுறை என்பதும் இன்னொருவர் மீது ஏவும் வன்முறை என்பதும் முதன்மையானதாக மாறி அவன் பின் ஒருபொழுதும் தான் தொடக்கப்புள்ளிக்கு மீண்டு வர முடியாத நிலைக்கு தன்னைத்தானே இழுத்துச் செல்கிறான். முன்னை வினை சூழ் காலம் என்ற சாக்கு எல்லாவற்றிற்குப் பின்னும் ஆறுதலாக இருக்கிறது.ஈழத்தைப் பொறுத்தவரை இரண்டு தரப்பினராகவே பிரிந்திருக்கிறது அரசியல் நிலைப்பாடு. விடுதலைப் புலிகளை முன்வைத்து எதிரெதிர் நிலைப்பாடுகளை எடுக்கும் இவர்கள் ஈழத்தை முதன்மையாக வைத்துப் போரிட்ட பிரபாகரனுக்கு எதிரானவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு பின்பு அந்தக் கோரிக்கைக்காக வாதாட நேர்ந்தது. அதற்கு ஆதரவாக இருப்பவர்களோ அதற்கான உள்ளீடுகளையும் நுண்ணிரசியலையும் பேசாது வெறுமனே உணர்ச்சிவயப்பட்டவராய் இருந்து ஈழத்தை ஒரு கருத்துநிலமாகவே முன்மொழிந்தனர். இந்நிலையில் இதன் பின்புலத்தில் சாதியம் என்பது மிகத் தீவிரமான தந்திரங்களைக் கையாண்டிருப்பதைத் தெளிவாகப் பார்க்கமுடிகிறது. இந்தியாவில் அதிகாரச்சாதி அடையாளத்தைக் கொண்ட எவருக்கும் ஈழம் என்ற பேச்சே வேப்பங்காய் தான். இதனால் தான் சாதியம் இந்திய தேசியம் தமிழ்த்தேசியம் எல்லாவற்றையும் இணைத்துப் பார்த்து அதன் நுட்பமான கோணங்களை எல்லாம் விரித்துப் பேச வேண்டியிருக்கிறது. தமிழினப் பெருமிதம் தன்மானம் கொண்ட இந்தியர்கள் சாதி வெறியை ஒரு வன்முறையாக நோக்குவதே இல்லை. இந்தியாவைத் தன் நாடு என்று முழங்கும் ஆதிக்க வர்க்கம் மற்றும் சாதியைச் சேர்ந்த நாட்டுப்பற்றாளர்கள் எவரும் தமிழ்ப் பெருமை என்பதைப் பேசினாலே அது தமிழகம் சம்பந்தப்பட்டதாக இருக்கட்டும் அல்லது ஈழம் சம்பந்தப்பட்டதாக இருக்கட்டும் இரண்டு விஷயத்திலுமே தமது நாட்டைத் துண்டாட தமிழர்கள் முனைவதாய் அவசர அவசரமாய்ப் பறைசாற்றிக்கொண்டு நிராகரிப்பார்கள். இரண்டுமே தமது நாட்டை இழப்பதற்கான அச்சங்கள் இல்லை, தாம் தலைமுறை தலைமுறையாகச் சம்பாதித்து வந்த சாதிப் பெருமித்தையும் அதிகாரத்தையும் இழந்துவிடக்கூடுமே என்ற அச்சம் தான். மேலும் ‘இந்தியா’ என்று நாட்டின் பெயரைச் சொல்லித் தான் அவர்கள் மனித இரத்தத்தைப் பருக முடியும் என்று ஏற்கெனவே அறிந்திருந்த படியால் பார்ப்பனீய இந்தியாவைப் பொறுத்த வரை தமிழ்த் தேசியமும் சரி, ஈழத் தமிழ்த் தேசியமும் சரி செல்லாது.ஏதோ ஒரு வகையில் தமிழ்த்தேசியத்தின் தலைமை அவ்வாறு இல்லையென்றாலும் அதன் கருத்தியலையும் நிலைப்பாட்டையும் தம் முழக்கமாகக் கொண்டிருக்கும் எந்த ஒரு நபரிடமும் சாதியம் பற்றிய புரிந்துணர்வும் அதற்கான முனைப்பும் இல்லாததை மிகுந்த கவலையுடன் இங்கு பதிவுசெய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. அதைப் புரிந்து கொள்ள முரட்டுத்தனமாக மறுக்கும் பாமரத்தனமும் பரம்பரையாக ஆண்டுவந்ததன் பழக்கம் செறிந்த ஆண்டைக்கான குருட்டுத்தனமும் இவ்வினப்படுகொலையில் என்ன பங்கு எடுத்துள்ளன என்பது பேசப்படாமலேயே காலம் நழுவிச்செல்கிறது.


கவிதைகளுக்கு வருவோம்.

விடுதலைக் கனியின்/ மரபணு விதைக்குள்/வீரியம் கலந்த/ஓர்மமும் கொடூரமும்

சமன்பாடற்று/ஓங்கியே வளர்ந்ததால்/அவர்கள் உச்சரித்த/ஒற்றைச் சொல்லின்/சாயல் படிந்ததை/தவிர்த்திருந்தோமா? எனும் கி.பி.அரவிந்தனின் கவிதையுடன் தொடங்குகிறது இத்தொகுப்பு. நாங்கள் மறுத்தொரு சொல்லும் சொல்லோம்/துப்பாக்கிச் சன்னங்கள்/ வாய்க்குள் பிரவேசித்து/ பிடரிவழியாக வெளியேறுவதை /நீங்களும் விரும்பமாட்டீர்கள் தானே…? என்ற கேள்வியே பதிலாய் விடுவிக்கப்பட்டவர்களின் இரகசிய வாக்குமூலம் கவிதையில், தமிழ்நதி. இரு கேள்விகளும் தனித்து நின்று நம்மைச் சுட்டியும் தமிழ்நதியின் கேள்வியே பதிலாய்த் தொக்கி நிற்பதுமென ஓர் மனித அவலம் தன் முடிவுறாத் தன்மையை பறைசாற்றுகின்றது.


மெழுகுவர்த்திகளில் ஏற்றப்பட்டும்/ ஊதுபத்தியில் புகையவிடப்பட்டும்/ அவமானத்துக்குள்ளாவதன் சித்திரவதை தான் நான், என ’வெளியேற்றம்’ கவிதையில் அனார் கூறுவதைப் போலவே எல்லோரையும் தானாக நோக்கும் தன்மையால் கவி வாதம் பொதுநிலையை அடைகிறது. புணர்ந்து புணர்ந்து சக்கையாகிய/ பெண்ணுடலின் யோனிக்குல் /குண்டு வைத்து தகர்த்துப் போகிறான்/ ஒருவன்பிணங்களோடே வாழ்தல்’ என்ற கவிதையில் ,இளைய அப்துல்லாஹ் பெண்ணுடலின் யோனி என்பதை நிலத்தின் ஒரு பகுதியாக உள்வாங்கி அதன் எதிர்த்தன்மையை சித்திரிக்கிறார். அவர்கள தான் வருகிறார்களாக்கும் வெள்ளை வானில்/ மனைவி முத்தமிடும்போதும் காது வெளியில் தான் நீட்டிக்கொண்டிருக்கிறது... உயிர் கவிதையில் இளைய அப்துல்லாஹ் அகவெளியையும் புற விளைவையும் ஒன்று சேர்க்கிறார்.


முள் குத்தாமல் கம்பியை/ லாவகமாகப் பிடித்தபடி/மணிக்கணக்காக முகம் காட்டப்/

பழகி விட்டிருந்தனர்/மக்கள் – இரண்டாம் காலனித்துவத்தின் சில காட்சிகள், கனகலதா நேரடியான ஒரு பத்திரிகைப் புகைப்படத்தின் காட்சியைப் போல கவிதைக்குள் துயரைச் செருகுகிறார் புத்தராய் பிறந்த கிருஷ்ணர்/பிசாசாய்ப் போனார்/வெட்டுண்ட கடைசிக் கரங்களையும்


புதைக்கப்பட்ட மீதி உயிர்களையும்/தின்று கொன்றே/அவர் கீதையைக் கேட்ட/ தேவதைகள்/ஊர் பிடிக்கத் தொடங்கின. – குருஷேத்திரம் எனும் கனகலதாவின் கவிதை மிகச் சரியாக புராணத்தை அங்கதம் செய்கின்றது. துக்கம் அமரும் கையில் இனி தும்பியும் அமரா/ துப்பாக்கியும் அமரா என்று மாதுமையின் கவிதை போரின் வன்முறையால் பறிக்கப்பட்ட பால்யத்தையும் நினைவுறுத்துகிறது.அந்த நெருப்பு நம் காலடியில் / தணல் பூத்துக்கிடக்கிறது/ உள்ளே சுவாலை கொள்ளத் துடித்தவாறு – இரண்டாம் காலம் எனும் கவிதையும், சுற்றி வளைக்கப்பட்ட நிலையிலிருந்தும் / கைதியான சொற்களை/ தண்டனைக் காலத்தின்/ வலியுடைய சொற்களை குற்றம் சாட்டப்பட்டவனின் தணிந்த குரலுடைய சொற்களை / மறைத்து வைக்க முடியவில்லை அவற்றின் பெருகும் ஒளியை கட்டுப்படுத்தி

வழியற்றவனின் சொற்கள் கவிதையும் கருணாகரன் வசந்தியின் இக்கவிதைகள் எழுத நேர்ந்த அவசியத்தை வலியுறுத்துகின்றன.


சிந்திக்கத் தெரிந்த மனித உடற்கூறுகளை, மூளையின் நரம்புகளை/சிதைப்பதன் மூலம்
அழிக்க வைக்கப்படும் தந்திரத்தை அவர்கள் வரலாறு முழுவதும்/தந்து கொண்டேதான் இருக்கிறார்கள் என்பது சிமோந்தியின் இறுதிக்கணங்களாலான கவிதை. சட்டம் உடைந்த கண்ணாடியை / காவித் திரிகிறேன் பிரதிபலிப்புகளுக்குள் / மூழ்கடிக்கப்பட்டுவிடுகிறது / அழகிய தருணங்கள் -
சித்தாந்தனின் இக்கவிதை வரிகள் மெய்மையான தருணங்கள் வெறுமனே பிம்பங்களாகிவிட்டதைச் சொல்கின்றன.


சுல்பிகா வரையும் வைரமூக்குத்தி பற்றிய கவிதைச்சிறுகதை கவிதை எனும் இலக்கிய வடிவையும் நேர்த்தியையும் சிதைத்துப் போட்டு மீண்டும் அடுக்கும் கவிதை. ஒவ்வொரு அகதியும் முதுமையடைந்து கொண்டிருக்கிறோம்இது சுலோசனா தேவராஜா. இந்தக் காணி நிலத்தில் என்னுடைய கதை பிறந்தது/ அங்கு கடல் கொண்ட /பெருமரங்களின் /வேரடிமண் இப்பொது வெளித் தெரிகிறது, என்ற வரிகளும் நீரற்றது கடல் / நிலமற்றது தமிழ் /பேரற்றது உறவு என்ற வரிகளும் சேரனுடையவை. தேசியச்சிந்தனையின் முத்தாய்ப்போ என்று எண்ண வைக்கும் அதே சமயம் ஒரு பெருமரத்தின் வேரடிமண் என்ற குறியீடாகவும் பார்ப்பது அச்சிந்தனைக்கான முழுமையை எய்துகிறது.திருமாவளவனின் முறையீட்டுக்கவிதைகள், தீபச்செல்வனின் தொடர்நிகழ்வுக் கவிதைகள், சபிக்கும் குரல்களுடன் முனகும் தேவ அபிராவின் கவிதைகள் என ஊழியை வேறு வேறு மனித சஞ்சாரங்களுடன் அணுகும் கவிதை வெளி உருப்பெறுகிறது. காருண்யனின் தீராப்பதுங்குகுழி விசாரம் ஓர் உரையாடலை நிகழ்த்துகிறது. ஆகவே பல குரல்கள் கேட்கின்றன.குருவியை உறங்க வைத்திட முடியாமல் /கிளைகளினூடே /பதுங்கிப் பதுங்கி அசைந்து கொண்டிருந்தது /இருண்ட இரவு என்ற ஃபஹீமா ஜஹானின் உயிர்வேலி கவிதை ஒரு துன்பியல் உணர்ச்சிகர நாடகத்தின் உச்சக்கட்ட காட்சியை அதன் நடுக்கத்துடனும் என்ன நிகழுமோ என்பதற்கான குறியீட்டு உணர்ச்சியையும் கொண்டிருக்கிறது. ஜெயந்தி தளையசிங்கத்தின், இங்கு நாம் இருளை விரும்பினோம் / நாங்கள் அம்மணமாய் இருந்தோம் என்ற வரிகள் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்ள இயலாத இயலாமையின் மூர்க்கமான பதிவு என்று சொல்லலாம்.


மு. புஷ்பராஜின் கனவில் வந்தவன் கவிதை சித்திரிக்கும் கற்பனை யதார்த்தத்தையே கற்பனையாக்குவது போல. பலியாடுகளாய்ப் போன நாட்களை நினைத்துருகல் மலர்ச்செல்வனின் கவிதை. இனப் பேரினவாதம் பலியாடுகளுக்காய்ப் பாடும் பாடல் எதுவாக இருக்கும் என்று நோக்குகிறார். நிறைவேறாக் கனவு முடிவுறல் தகாதென / மூடாத கண்கள் - இவை விநோதினியின் வரிகள். நிகழ்வின் சித்திரங்களிலிருந்து ஆறுதல் படிமங்களை எழுதுகிறார். அன்று புறப்பட்ட காற்று ஊர் திரும்பவேயில்லை என முடியும் விஜயலெட்சுமியின் கவிதையை வாசிக்கையில் காற்றின் பாதையைப் போலவே வாழ்வின் கோரம் முடிவுறாததாய் நீளுவதை உணர்த்துகிறது. எதிரெதிர் முகங்களிடையே / காற்று / ஒரு பயணியைப்போலலைகிறது ‘விடுபட்ட காலத்தின் வார்த்தைகள்’ கவிதையில், சித்தாந்தன் ஒரு நிசப்தமான தருணத்தை இயக்குகிறார்

வறுமையை எழுதுகிறது. வெலிகம ரிம்ஸா முஹம்மத்தின் கவிதை. இருக்கட்டும்/ புத்தர் உறங்கும் விகாரைக்கு நீ/வெண்ணலறிப் பூக்களொடி என்கிறது. எம். ரிஷான் ஷெரீபின் ஈழம் எனும் கவிதையும் வாழ்வின் உடனடி யதார்த்தங்களைப் பேசுகின்றன.


தப்பிச்செல்வது இயலாததல்ல/ செலவிடப் பணமும் செல்வாக்கும்/ இருந்தால் ஒரு வழி, இல்லாவிட்டால் இன்னொரு வழி/ ஒன்று மண் வழி/ மற்றது விண்வழி – சி. சிவசேகரத்தின் முட்கம்பித்தீவு கவிதையும் சொல்வதையே போர் தேவையில்லை / இனி/ உதவி என்ற பெயரால் கொலைகள் தொடரும் என முடியும் றஞ்சினியின் கொல்வதற்குப் பல வழிகள் கவிதையும் படுகொலையைச் சித்திரவதையிலிருந்து தப்பித்தல் வழியாக நோக்குகின்றன.


நீள விரிந்து வேம்பு / முற்றம் சருகுதிர்க்க /நெஞ்சில் குடைவிரித்த /வேர் கொண்ட வாழ்வு என்ற செழியனின் நெஞ்சில் குடை விரித்த வாழ்வு காட்டும் நம்பிக்கையும் என் மண்ணிலும் முறிந்த வேம்புகள்/ மலர்கின்றன என்ற வ.ஐ.ச.ஜெயபாலன் முதல் வசந்த பாடல் கவிதையும் இத்தொகுப்பெங்கும் வசந்தத்தின் நம்பிக்கையின் வேம்பு மனம் கமழச்செய்கின்றன.ஈழ இனப்படுகொலை எனும் நிகழ்வை எந்தக்கோணத்தில் பார்ப்பது என எல்லோரும் சுவரை முட்டிக்கொண்டு யோசிக்கும் போது அந்தக்காட்சியையே அழித்தொழிக்கும் தோரணையையே இந்தத்தொகுப்பு எடுத்துக்கொண்டிருக்கிறது. காட்சி ஊடகத்தின் ஆட்சியும் ஆதிக்கமும் எவ்வளவுக்கெவ்வளவு மெய்மையாக ஒரு போர்க்களத்தையும் ஓர் இனப்படுகொலையையும் நமது கண்களுக்குக் கொண்டு வந்து சேர்க்கமுடியும் என்பதை இந்தத்தலைமுறையைச் சேர்ந்தவர்கள் உணர்ந்திருக்கமுடியும் என்றே நம்புகிறேன். இணையத்திலோ தொலைக்காட்சிகளிலோ அவ்வாறான காட்சிகள் இடம்பெறும்போதெல்லாம் நான் அவற்றைக் காணுறுவதைத் தவிர்த்திருக்கிறேன். அவை நினைவவயங்களில் ஏற்படுத்தும் வன்மங்களைக் களையவோ அல்லது அவ்வாறான காட்சிப்பதிவுகளையே நான் கண்ணுறப் போவதில்லை என்ற எனது சத்தியப்பிரமாணமாயிருக்கலாம். ஆனால் நான் நிச்சயம் கோழை தான். நம்மக்கள் கொல்லப்பட்ட உடலுடன் சிதைக்கப்பட்ட மரியாதைகளுடன் கிடப்பதைக் காணும் சக்தி எனக்குமில்லை தான். எனில் இந்நூல் அதற்கான சிகிச்சை முறை. உலகெங்கிலும் விரவிக்கிடக்கும் கோடானகோடி தமிழர்கள் மற்றும் கொல்லப்பட்டோரின் பக்கம் நின்று இது சரியா, எது தவறு என்று கேள்விகளில் குழம்பிப்போயிருக்கும் எல்லோருக்குமான பதிலாக இத்தொகுப்பை நான் முன்வைக்கிறேன். மனிதன் தன் அறிவின் உச்சத்தில் அரசியல் பேசும்போதெல்லாம் அவனுடைய நேர்த்தியான உணர்வுகளின் அடித்தளம் அவனிடமே இரைந்து கெஞ்சிக்கேட்டுக்கொண்டிருப்பதை அவன் செவிமடுக்காமல் போகிறான். மூளையின் தரையில் மண்டிக்கிடக்கும் உணர்வுகளை இக்கவிஞர்கள் எல்லோரும் சொற்களாக்க முயன்றிருக்கின்றனர். இதில் அரசியல் பேச என்ன இருக்கிறது? இராணுவக்களத்தில் நிகழும் வன்முறைகள் படுக்கையறை வரை நமது அனுமதியின்றி வந்து சேரும்பொழுது படுக்கையறையின் வன்முறைகளும் நியாயப்படுத்தப்படுவதாகவே தோன்றுகிறது.எல்லா அரசியலின் அறிவார்ந்த கேள்விகளையும் கேட்டுணர்ந்தவாறே அவற்றைப் புறம் தள்ளி முன்னோக்கிப் போகும் அக எழுச்சியுடன் இருப்பவன் தான் கவிஞன். வாழ்வதற்கான வேட்கையை நிறைந்த கருணையுடன் எல்லோர் முன்னும் தனிமனிதனாய் எழுந்து நின்று ஊட்டுபவன். சேரனின் கவிதைகளை வாசிக்கும் பொழுது நான் உணர்வதுண்டு. சொற்கள் மனிதனின் எலும்புக்கூட்டைப் போல எழுந்து நின்று ஆவேசமாய் ஒரு மாயவெளியில் அமானுஷ்யமான அசைவுகளுடன் இயங்குவதை. பின்பு ஈழத்திலிருந்தும் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த பெண் கவிஞர்களின் படைப்புகளையும் நான் விரும்பிச் சுவைத்துப் படித்தேன். அவர்கல் தம் மனவெளியில் வெளிப்படுத்த முடியாமல் சுடுண்டுகிடந்த உக்கிரங்கள், சொற்களாய் குமைந்து கிடந்து கவிதைகளாய்ப் பூத்துக்குலுங்கியதைக் கண்டேன். சங்கத் தமிழ்க்கவிதையின் அகம் புறம் என்ற இருமை நிலைகளைப் போலவே நவீன தமிழ்க்கவிதையில் இன்னொரு திரையை விரிக்கின்றன ஈழத்தமிழ்க்கவிதைகள். இதனால் தான் இன்றைய நவீன தமிழ்க்கவிதை பட்டொளி வீசிப்பறக்கிறது என்று சொன்னாலும் மிகையன்று.இக்கவிதைகளைத் தொகுப்பதில் நானொருத்தியே ஈடுபட்டிருந்தாலும் இதில் தங்களின் தூய இருப்பின் மூர்க்கத்துடன் பங்கெடுத்துக் கொண்டவர்கள் ஏராளம் குறிப்பாக ஃபஹீமா ஜஹானும் சேரனும் இனியொரு யோகன் அசோகனும் யமுனா ராஜேந்திரனும் செளமீதரனும். தொடர்ந்து தாங்கள் அறிந்திருந்த எல்லா தொடர்பு மின்னஞ்சல்களையும் அனுப்பியும் தங்கள் படைப்பாளி நண்பர்களையும் அறிமுகப்படுத்தியும் உதவினர். தொடர்ந்து தொகுப்பு எப்படி வளர்ந்து வருகிறது என்று அக்கறையுடன் ஈடுபட்டனர். இல்லையென்றால் இன்றைய அரசியல் சூழ்நிலையில் சிதறுண்ட தமிழ்ப்படைப்பாளிகளை ஒருங்கிணைப்பது எவ்வளவு அசாதாரணமான வேலை என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். இதில் தங்கள் கவிதைகள் இடம்பெறுவதற்கான சமாதானத்தையும் ஒப்புரவையும் தனக்குத்தானே வழங்கிக்கொண்ட ஒவ்வொரு கவிஞருக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். நீங்கள் தாம் இத்தொகுப்பின் குரல்களாக பதிவாகியிள்ளீர்கள். ஆழி செந்தில்நாதன் இத்தொகுப்பிற்கான ஆலோசனைகளையும் ஊக்கத்தையும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தார். அவரன்றி இந்நூல் உங்கள் முன்னே சாத்தியமே இல்லை.வழக்கமாகத் தொகுப்புகளைத் தொகுப்பதைப் போல இவற்றில் எது சிறந்த கவிதை என்று தேர்ந்தெடுக்கும் பணியை நான் மேற்கொள்ளவில்லை. வேதனைக்குரிய ஒரு நிகழ்வை ஒட்டி கவிஞர்களின் அகக்குரல்பதிவுகளைப் பதிவு செய்வதே என் எண்ணமாக இருந்தது. நிறைய கவிதைகள் அனுப்பிய பொழுது மட்டும் சமத்துவம் கருதி நான் தேர்ந்தெடுக்கவேண்டியிருந்தது. இப்பணியினூடே கவிதையின் பயன்பாடு பற்றிய கேள்வி மட்டும் ஓயாததாக சமூகத்திடம் புரண்டு கொண்டே இருந்தது. எனக்கு அதற்கான பதில்கள் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருந்தாலும் கவிதைக்கான தேவையும் பயன்பாடும் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. அதிவேகக் காலத்தில் கால் பதித்த மனிதனுக்கு கவிதையின் சொற்கள் மருந்துக்கும் சிகிச்சைக்கும் நிகரானதொரு பணியை ஆற்றுகின்றன. அது சொல்லித் தீராதது என்பதை இக்கவிதைகள் நமக்கு வழங்கும் நீளமான மெளனத்திலிருந்து உணரலாம்.தற்காலச் சமூகத்துடன் உணவிற்காகவும் அற உணர்வின் பொருட்டும் ஒரு கவிஞன் அன்றாடம் மோதவேண்டியிருப்பதால் அவன் தன் ஆளுமை பற்றியும் அக்கறை கொள்ளவேண்டியிருக்கிறது என்பதை நான் மிகுந்த தயவுடன் கூறிக்கொள்கிறேன். அது தான் கவிதைகளின் கொடியை அவற்றின் மானுடக்குரலை தேசங்கள் தாண்டியும் அசைத்துக்காட்டுகின்றன. தொய்விலாத ஆளுமையை கவிஞன் தன் கவிதைகளுக்கு எலும்புகளாகவும் தசைகளாகவும் உருவாக்கிப்படைக்கிறான் என்பதில் ஐயமில்லை. வாருங்கள் கவி நண்பர்களே! நமது உக்கிரமான ஒப்புயர்வான ஆளுமைகளால் இன்னும் இன்னும் கவிதைகளைப் நெய்திடுவோம். காலந்தோறும் புனைவு தோறும் பழங்கதைகள்தோறும் எரிந்துகொண்டிருக்கும் அந்நிலத்தீயை குளிரும் சொற்களால் அணைத்திடுவோம்.குட்டி ரேவதி

6.06.2010

சென்னை

அடையாளத்தின் புதிய வெளியீடுகள்எனது ஐந்து கவிதை நூல்கள் யானுமிட்ட தீ, உடலின் கதவு, தனிமையின் ஆயிரம் இறக்கைகள், முலைகள், பூனையைப் போல அலையும் வெளிச்சம் ஆகியவை அடையாளம் வெளியீடாக வந்துள்ளன. 


நூல்கள் கிடைக்குமிடம்: அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தா நத்தம் 621310,
திருச்சி மாவட்டம், இந்தியா தொலைபேசி 04332 -273444

1. யானுமிட்ட தீ (2010)


சாதியப்படுத்தப்பட்ட மூடுண்ட மனித உடலை இக்கவிதைகள் இயல்பூக்கத்துடன் திறக்கின்றன. உடலையே இயக்கமாக்கி அதை அதன் ஆதி நிலைக்குத் திருப்புகின்றன. தொல் அறத்தை மீட்டெடுக்கின்றன. வரலாற்றிலிருந்து உடலின் விடுதலை என்பது மோதலில் மட்டுமே நிகழ முடியும். அத்தகைய மோதலின் உக்கிரமான ஒரு புள்ளியில் இக்கவிதைகள் பீறிடுகின்றன. இதுவே இக்கவிதைகளை உயிர்த்துடிப்புடன் இயங்க வைக்கிறது.


2. தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (2003)
நவீன தமிழ்க்கவிதை வெளியில் பெண் குரல், பெண் உடல், உடலரசியல் போன்ற தளங்களில் ஒலிக்கும் ஒரு குரலை இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பதிவு செய்திருக்கின்றன. ஏக்கம், நிராசை,காமம், மரணம் போன்ற அனுபூதிகள் இக்கவிதை வரிகளில் சாகாவரம் பெற்று இயங்குகின்றன. இயற்கையின் மீதான அவதானிப்பு இக்கவிதைகளில் பெண்ணியத்தின் குறியீடுகளாக மிளிர்கிறது. பெண்ணிடமிருந்து விலக்கப்பட்ட சொற்களை இவை துணிந்து உச்சரிக்கின்றன. அந்தச் சொற்கள் ஆணாதிக்க மனத்தின் செவிப்பறைகளில் போய் மோதி அதிர்கின்றன. இதுவே இத்தொகுப்பை பிற கவிதைத் தொகுப்புகளிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.

3. உடலின் கதவு (2006)
ஆணாதிக்கச் சமூகத்துக்கெதிரான ஒரு பெண் மனத்தின் சீற்றம் இக்கவிதைகளில் தெறிக்கிறது.காமம், புணர்ச்சி,கருவுறுதல் என்று விரியும் குறியீடுகள் இந்தப் பிரபஞ்சத்தையே ஒரு பெண்ணின் உடலாகவும், ஒரு பெண்ணின் உடலையே பிரபஞ்சமாகவும் உருவகித்துக் காட்டுகின்றன. கவிதை வரிகள் தோறும் படிமங்களும், தொடர் உருவகங்களும் காட்டாற்று வெள்ளம் போல் பிரவகித்துப் பாய்கின்றன. சில தருணங்களில் வெள்ளம் வடிந்த பின் படியும் நுரையாய் மனத்தில் ஒட்டிக் கொள்கின்றன. கவிதையில் உற்பவிக்கும் உணர்ச்சிப் பெருக்கு கவிஞரிடமிருந்து வாசகனையும் தொற்றிக் கொள்ளும் அதிசயம் இந்தத் தொகுப்பில் சாத்தியப்பட்டிருக்கிறது.

4. முலைகள் (2002)
பெண்ணின் உடலரசியலைப் பேசும் இந்தப் பிரதி முலைகள் துடைத்தகற்ற முடியாத இரு கண்ணீர்த்துளிகள் என்று அறிவித்து பெண்ணை நுகரும் உடலாகப் பார்க்கும் ஆணாதிக்கப் பொதுப்புத்தியைத் தகர்க்கிறது. இத்தொகுப்பில் இயங்கும் கவிதை மனம் வாழ்க்கையின் முட்களில் சிராய்த்துக் கொண்டு கண்ணீர் வடிக்கிறது. அதே சமயத்தில் வாழ்வின் அதீதமான தருணங்களை போகிற போக்கில் தரிசிக்கவும் செய்கிறது. உத்வேகத்துடன் அலைவுறும் கவிதை மனம் விடுதலை வேட்கையுடன் இயங்கும் இக்கவிதைகளில் படிமங்கள் அழகாகக் கைகோர்க்கின்றன. இயல்பான தனமையுடன் நடனமாடுகின்றன.


5. பூனையைப் போல் அலையும் வெளிச்சம் (2000)
தொண்ணூறுகளில் கவனம் பெற்ற முக்கியமான கவிதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இக்கவிதைகள் கோபம் கொள்கின்றன; காதல் வயப்படுகின்றன; காமம் துய்க்கின்றன.. வாழ்வின் வெம்மை பொறுக்க முடியாமல் போகும்போது நிழலைத் தேடும் மன நிலை, ஜீவிதத்தின் உயிர்த்துடிப்பு, பேரனுபவத்தை சுட்டிக் காட்டும் தன்மை; இருமை எதிர்வுகளை வெகு இயல்பாகப் படிமமாக்கிக் காட்டும் அழகியல் ஆகியவற்றுடன் இயங்கும் இக்கவிதைகள் தங்கள் அளவில் தனித்து நிற்கின்றன. ஆணால் வடிவமைக்கப்பட்டு பெண்ணுக்கு வழங்கப்பட்ட பெண் சிந்தனையைப் பார்த்து கெக்கலி கொட்டிச் சிரிக்கின்றன. புதிய சொல்லாட்சிகளும், புதுப்புது சொல்லிணைகளும், மின் தெறிப்பாய் தெரிந்து மறையும் படிமங்களும் இக்கவிதைகளை நினைவு கூறுமாறு செய்கின்றன.


குட்டி ரேவதி