நம் குரல்

டென்மார்க் பயணம் 3 - இரவும் உறக்கமும் காலக்குழப்பமும்!

மார்க்வெசின் 'தனிமையின் நூறாண்டுகள்' நாவலிலும், யசுனாரி கவபட்டாவின் 'தூங்கும் அழகிகளின் இல்லத்திலும்' வரும் தூக்கத்தனிமையும் இரவும் தூக்கமின்மைப் பழக்கமும் சேர்ந்த கலவையான உணர்வுகள், அந்நாவல்களின் புனைவுலகங்களுக்கு ஆதாரமாகின்றன. 'நேஷனல் ஜியோகிரஃபிக்' பத்திரிகை சில வருடங்களுக்கு முன், தூக்கம் பற்றிய ஒரு சிறப்பான ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டிருந்தது. அதில், தூக்கமே வராத இரு மெக்சிகோ சகோதரிகளைக் குறிப்பிட்டு எழுதியிருந்தது. இக்கட்டுரை தரும் அனுபவத்தையே, 'தனிமையின் நூறாண்டுகள்' நாவலிலும் என்னால் நுகரமுடிந்தது. தூக்கம், ஒரு மரபணுப்பழக்கமா அல்லது தனிமனிதக் குணமா என்று கேட்டால் பெரும்பாலும் தனிமனித வழக்கம் தான் என்று தோன்றுகிறது.

சதத் ஹசன் மாண்ட்டோவின் ஒரு சிறுகதையில், பாலியல் தொழிலை ராப்பகலாகத் தொடர்ந்து செய்யவேண்டியிருக்கும் ஒரு பெண், ஒரு கட்டத்தில் அவளை நிர்வகிப்பவனே வந்து அவளை அழைக்கும் போது, அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து அவனைத் தலையில் அடித்துக்கொன்று போட்டுவிட்டு நிம்மதியாக உறங்குவாள். காலக்குழப்பம், முதலில் தாக்குவது உடலைத் தான். 'ஸ்பேஷ் ஷிப்பில்' பயணித்துப் பார்த்தல், இந்தத் தாக்கத்தை இன்னும் அதிகமாக உணரமுடியும் என்று நினைக்கிறேன்.

என்னை ஒட்டி இருக்கும் சென்னை நண்பர்கள், அடுத்து என்ன செய்யலாம் என்று ஒவ்வொரு நாளும் இரவு எட்டு மணிக்குத் தான் திட்டமிடுகிறார்கள். அதன் பின் வாழ்க்கை இரவு 2 மணி வரை நீளும். அதிகாலையில் பெரும்பாலும் இவர்கள் யாரையும் தொலைபேசியிலோ ஏன் நேரிலோ கூடப் பிடிக்கமுடியாது. இரவு நேரங்களில் தீவிரமாகவும் மிக விழிப்புடனும் கவனத்துடனும் வேலை செய்யும் படைப்பாற்றல் மிக்கவர்களுடன் வேலை செய்ததில் அறிந்தது, அவரவர் உடல் நலத்திற்கும் வேலைசெய்யும் முறைக்கும் ஏற்ற தூக்கம் அவசியம் என்பதே. அதுவே, அவரவரின் படைப்பாற்றலுக்கு ஆதாரமாக இருக்கிறது. விமானப்பயணம் தரும் உடலியங்கியல் குழப்பத்தைத் தவிர்க்க, வந்து தரையிறங்கியது 'முதல்' பகல்வேளையைத் தூக்கமின்றிக் கடப்பது தான். பகல் நேரம் நீளமானதாக இருப்பதால், தூக்கத்தைத் தவிர்ப்பது சிரமமாக இருக்கும். என்றாலும், இரண்டொரு நாள்களில், காலமாறுபாட்டைப் பழக்கிக் கொண்டால், தனியாக இயங்குவது எளிதாகிவிடும். 

கோபன்கேஹன் கவிதை விழாவை ஒருங்கிணைத்த பெண்கள், நிகழ்வும் விருந்தும் முடிந்த அந்த இரவு, தூங்குவதற்காக அவரவர் இடம் நோக்கி விரைந்ததைப் பார்க்க தூக்கத்திற்கான பசி போன்று அது இருந்தது. தூக்கம், மனதின் பாதாளம் போன்றது. கண்டுபிடிப்புகளுக்கும் விஞ்ஞானத்திற்கும் கவிதைக்கும் புனைவிற்கும் கற்பனைகளுக்கும் தூக்கம் தான் மூலம். மனித மனதின் சிக்கலான வெளிகளின், உலைவுகளின் அழுத்தத்தை, அவரவர் கனவுகளில் காணும் படிமங்கள் வழியாகவே தீர்த்துக்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். மனித மனவெளி, அந்த அளவிற்கு, தன்மயமானது. 

என் பள்ளி நாட்களில், குறிப்பாக, பரீட்சைக்குப் படிக்கும் நாட்களில் என் அம்மா தான் நான் தூங்கும் நேரத்தைத் தீர்மானிப்பவராக இருந்தார். அதிகாலையில் எழுப்பிவிடுவது அல்லது பரீட்சை முடிந்த நாட்களில் தூங்கும்பொழுது, இடையூறு இல்லாமல் பார்த்துக்கொள்வது என்று. இன்று, என் தூக்கத்தை நான் ஒருவரே முடிவு செய்யும் விடயமாக, மிகவும் விடுதலையான ஒன்றாக மாறிவிட்டது. பல சமயங்களில், தொடர்ந்து வேலை செய்துவிட்டு, திட்டமிட்டு நேரம் ஒதுக்கித் தூங்குவதும் உண்டு. பெரும்பாலும், இரவு தான் எழுத வசதியானது. இரைச்சலற்ற சூழல், எழுத வசதியாக இருக்கும். கனவின் வெளி போல மெளனமாக, குரலற்று இருக்கும். இப்பொழுது நான் தங்கியிருக்கும் Amagerbro என்ற இடம், சிறிய சத்தமும் இல்லாமல் இருக்கிறது. எப்பொழுதும் இரவு போல் இருக்கிறது. சூரியனும் பறவைகளும் சத்தமில்லாமல் வந்து போகின்றன. இப்பயணத்தில் ஒரு நாள், கடலின் கரை சென்று பார்க்கவேண்டும், அலைகளாவது சத்தமிடுகின்றனவா என்று.குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: