நம் குரல்

சாதி மீறிய காதல் என்றால் மயானத்தில் தான் போய் முடியும்!


MASAAAN - இரு காதல் உறவுகளுக்கு இடையே இருக்கும் சாதியச் சமன்பாடுகளைச் சொல்லும் படம். ஆதிக்கசாதிக்கும் தாழ்த்தப்பட்ட சாதிக்கும் இடையே உலவும் காதல் உறவுகளை இந்திய சினிமா அவ்வளவாகப் பொருட்படுத்தியதில்லை.
அப்படியே அவர்களின் கதைகளைச் சொல்ல முனைந்தாலும், 'ஒரு குறிப்பிட்ட சாதிக்கும் இன்னொரு குறிப்பிட்ட சாதிக்கும் இடையே' என்று பத்திரிகையாளர்களைப் போலவே, இலை மறை காய் மறையாக, கடந்து செல்லும் தயக்கமும் அச்சமும் குழப்பமும் எப்பொழுதும் கதையில் தொங்கலாக இருக்கும். இந்திய சினிமாவின் பிதாமகன்கள் என்று சொல்லப்பட்ட சத்யஜித்ரே போன்றவர்கள் கூட, திரைக்கதையில் சாதியை ஓர் உட்பொருளாக வைத்துச்சொல்லும் அக்கறைகள் கொண்டாரில்லை.

அப்படியே சொன்னாலும் அவை, ஆதிக்கசாதியினர் மீது பரிவு கொண்ட, சாய்வு கொண்ட கதைகளாகிப் போயின. கெளதம் கோஷ், 'அந்தர்ஜாலி யாத்ரா' என்ற படத்தில், பார்ப்பன ஆணுக்கு இருக்கும் பலதாரப் பெண் வாய்ப்புகளை எள்ளிநகையாடியிருப்பார். அதன் உட்பொருளாய், 'இந்துமதக்கட்டுமானம்' எவ்வளவு சப்பைக்கட்டுகள் நிறைந்தது என்பதையும் திரைக்கதையின் கலைவடிவம் திரியாமல் சொல்லியிருப்பார்.
FANDRY, COURT மற்றும் TITLI போன்ற படங்கள் வரிசையில் MASAAAN திரைப்படமும் இந்திய சாதியமுறையின் இக்கட்டுகளை நேர்மை தவறாமல், மிகவும் கவனமாகச் சொல்கிறது. ஆயிரம் ஆயிரம் காதல் கதைகளைச் சினிமா வழியாகச் சொல்ல முயன்றாலும் பின்னணியில் இருக்கும் சாதிய வன்மங்களை எல்லாம் சொல்லும் வாய்ப்பை சினிமா எடுத்துக்கொள்வதில்லை.
MASAAAN படத்தில், காதல் உறவில் ஈடுபடும் ஆதிக்க சாதியினர், ஒன்று சாதிய அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொள்கின்றனர் அல்லது, கொல்லப்படுகின்றனர். காதல் உறவில் நம்பிக்கை கொண்ட தாழ்த்தப்பட்டவர்களோ, எல்லாவற்றிற்கும் சாட்சியாய் மரண விளிம்பிற்குத் தள்ளப்பட்டு ஆணிஅறைந்தாற்போல அங்கேயே இருத்திவைக்கப்படுகின்றனர்.
ஆனால், கதையின் முடிவில் எந்த மாற்றமுமில்லை. ஆதிக்கசாதிக்காதலர்களை பெற்றவர்களே கொன்றுவிடுவர். தாழ்த்தப்பட்ட காதலர்களையும் ஆதிக்கசாதியினரே கொல்வர். சாதியப்பிரமிடின் பின்னால் இருக்கும் மனித வன்மங்களை எந்த சமரசமும் இன்றி கலைவடிவம் பரவலாக பல திரைப்படங்கள் வழியாக முன்னேற்றிக் கொடுக்கையில் தான் இந்திய சினிமா சரியான வழியில் பயணிக்கும் என்று சொல்லலாம்.
ஆதிக்கசாதிக்கும் தாழ்த்தப்பட்ட சாதிக்கும் இடையே காதல் உறவு என்றால் அது மயானத்தை நோக்கியே அழைத்துச்செல்லும் என்ற யதார்த்தம் சொல்லும் படம்.

குட்டி ரேவதி