நம் குரல்

நான் சாதியற்றவள்!


என்னிடம் உயர்சாதி, ஆணவக்கொலைகளுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டீர்கள். ஆணவக்கொலைகளுக்கு எதிரான ஓர் அறிக்கையில் என் பெயரையும் இணைத்துக்கொள்கிறீர்கள் என்பதாய் என் சம்மதத்தைத் தெரிவித்தேன்.
இப்பொழுது உங்கள் இணையதளத்தின் தலைப்பில், ஆதிக்கசாதி, என்றும் என் புகைப்படத்தின் மீது உயர்சாதி என்றும் அச்சாகி இணையம் எங்கும் பரவிவருகிறது. ஒன்றுக்கொன்று முரணாக, எந்தக் கருத்தியல் தெளிவுமற்று வெளியாகியிருக்கிறது. இதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.
மேலும், நீங்கள் உண்மையில் செய்திருப்பது ‘புகைப்படம்’ சார்ந்த பிரச்சாரம். அதில் என்னுடைய எந்தப்புகைப்படத்தை உபயோகிக்கப்போகிறீர்கள், அதன் மீது என்ன வரிகளை அச்சாக்கப் போகிறீர்கள் என்றும் எனக்குத் தெரியாது. அந்த வரிகளையும் அந்தப் புகைப்படத்தையும் என்னிடம் அனுப்பி ஒப்புதல் வாங்கவில்லை.
நான் சாதியற்றவள். என் எழுத்து வாழ்வில் இதுவரை நான் உறுதிகொண்டு சம்பாதித்த நன்னம்பிக்கைகளை இந்தப்புகைப்படம் பிரச்சாரம் முழுமையாகச் சிதைத்துவிட்டது.
நீங்கள் பதிவிட்ட அன்று முழுநாளும் ஒரு பாடல் பதிவில் இருந்ததால், அதைக் கவனிக்கவில்லை. பின் மாலையில், நண்பர்கள் சிலர் அறிவித்ததன் பின்தான் அறிய நேர்ந்து என் மறுப்பைத் தெரிவிக்கமுடிந்தது.
ஆனால், அதற்குள்ளாகவே, எனக்கு எதிராக நீண்டநாட்களாகச் செயல்பட்டு வரும் நண்பர்கள் எல்லோரும் இதைத் தங்களின் நோக்கங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர்.
இந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு எழுதியிருக்கவேமாட்டேன். இன்னும் என் புகைப்படம் ‘ ippodhu.com தளத்தில் நீக்கப்படாமல் இருப்பதும், அது மீண்டும் மீண்டும் சுற்றுக்கு வருவதும் அதிர்ச்சியையும், வேதனையும், கடுமையான மனஉளைச்சலையும் தருகிறது.
நான் உடன்படாத ஒரு செயலுக்கு நான் எப்படிப் பொறுப்பேற்கமுடியும். உடனே, அந்தப் புகைப்படத்தை உங்கள் செய்தித்தளத்திலிருந்து நீக்கவேண்டும். புகைப்படம் நீக்கியது குறித்த விளக்கத்தையும் உங்கள் இணையத்தளத்தில் பதிவிடவேண்டும்.
இன்னும் இருபத்திநான்கு மணிநேரத்தில் அதை நீக்கவில்லையெனில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் இறங்குவேன் என்பதை இதனால் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
குட்டி ரேவதி, கவிஞர்
(மார்ச் 25, 2016)