நம் குரல்

இப்பொழுதும் அவர்கள் மீது எனக்கு வெறுப்பில்லை.




காலங்காலமாக, தம் கால்களின் கால்களால் பெண்களை நசுக்கியவர்கள், 
இன்று அவற்றைச் செயல்படுத்த இயலாததை 
'ஆண்மைக் குறைவாய்' என்ணி, வெறுப்பை உமிழ்கிறார்கள்.
அவை அமிலச்சொற்களாய், எச்சில் துளிகளாய் 
அவர்கள் முகங்களைச் சுற்றித் தெறிக்கிறது.
இப்பொழுதும் அவர்கள் மீது எனக்கு வெறுப்பு மூளவில்லை.

ஏனெனில், அவர்களின் பெண் வெறுப்பை ஏற்றுக்கொண்டும், 
சுயமரியாதையை உதறிக்கொண்டும் 
அவருடன் அணிவகுத்து நிற்கும் பெண்களின் வரிசை 
அப்படியே உள்ளது.
அவர்கள் எழுத்து, நன்றாய்த்தானிருக்கிறது. 
ஆள்கள்தான் சரியில்லை என்று சொல்லும் ஆண்களின் வரிசையும் 
அப்படி அப்படியே உள்ளது.
விருதுகளின் வெளிச்சமும் அழைப்பிதழ்களின் நிறங்களும் கூட 
அப்படியே நிறம் மங்காமல் உள்ளது.
இதழ்களின் நடுப்பக்கங்களும் கேமராக்களின் முகங்களும் கூடக் காத்திருக்கின்றன.
சூத்திரப்பெண்களின் மீது வெறுப்பை உமிழ்வது தானே சாதியின் இயல்பு. 
இப்பொழுதும் அவர்கள் மீது எனக்கு வெறுப்பு மூளவில்லை.

ஆசான்கள் என்ன சொன்னாலும் ஆசாரிகள் என்ன சொன்னாலும் 
முதுகெலும்பின்றி கருத்தியலை விலைக்கு வாங்கும் கூட்டங்களும் கூட
அப்படியே காத்திருக்கின்றன. வரிசை நீள்கிறது.
கோழைத்தனங்களும் அப்படியே கூன்விழுந்து கிடக்கின்றன.
அணி மாறிக் கலைந்து மீண்டும் திரள்கின்றனர்.
அவ்வவ்வரிசைகள் அப்படியே உள்ளன. 
அவர்கள் மீது இப்பொழுதும் எனக்கு வெறுப்பு மூளவில்லை.

எதிர் வன்முறையை அடக்கிக்கொள்ளும் ஒரு மிடறு உமிழ்நீர் கூட 
இப்பொழுதெல்லாம் எனக்கு சுரப்பதில்லை.
எனது கவலையெல்லாம் அவர்களின் பெண்மகள்கள் பற்றியது.
இந்தியாவின் மகள்கள் எவர் மீதும்,
'இந்தியாவின் மகன்களோ, சகோதரரோ, மாமன்களோ, மருமகன்களோ 
ஏன் தந்தையரோ கூட ஒரு கணமும் கருணையுடன் நடந்து கொண்டதில்லை. 
கருணையுடன் நடந்து கொண்டதாய் வரலாறும் இல்லை.
எனது கவலையெல்லாம் அவர்களின் பெண்மகள்களும் பற்றியது.

ஆனால், இன்னும் அவர்கள் நிறைய எழுதி முடிக்கவேண்டியிருக்கிறது.
முழுக்கழிவும் வெளியேறும் வரை, எழுதித் தீர்க்கவேண்டியிருக்கிறது.
எனது கவலையெல்லாம் அவர்களின் பெண்மகள்கள் பற்றியது.

குட்டி ரேவதி

'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை முன் வைத்து! - 4







4. ஆவணப்படத்தின் புரிதலில் உள்ள சிக்கல்.









இந்தியச் சமூகத்தில், இப்படி 'பாலியல் வல்லுறவுகள்' இருபது நிமிடங்களுக்கு ஒன்றாக நிகழ்வதற்கும், கற்றோர் முதல் கல்லாதோர் வரை, 'ஆண் பாலியல் வல்லுறவு' செய்வதை நியாயப்படுத்துவதற்கும், செய்துவிட்டு பொதுமக்கள் பார்வையிலிருந்து தப்பிக்கமுடிவதற்கும் ஒரே காரணம், இச்சமூகத்தின் கட்டமைப்பு, 'சாதிய வலையால்' ஆனது. இது ஆதிக்க சாதியினருக்கும், மேல்மட்டத்தில் இருப்போரும் தப்பிப்பதற்கு ஏற்ற பெரிய ஓட்டைகளையும், நலிந்தோர் தப்பிக்க ஏதுவான சிறிய ஓட்டைகளையும் அல்லது ஓட்டைகளே அற்ற முட்டுச்சந்துகளையும் கொண்டது.



இந்துமதம், ஆகவே, சாதியமுறையை வற்புறுத்துகிறது. பெண்களை அடிமைப்படுத்தும் விடயங்களை மீண்டும் மீண்டும் கட்டாயப்படுத்துகிறது. இதற்கு ஏற்ப இந்துமதம் வலிமையுடையதாகும் என்று நம்புகிறது.



இதை, அந்த பிபிசி ஆவணப்பட இயக்குநரால் ஒரு பொழுதும் புரிந்து கொள்ளமுடியவில்லை. அல்லது, புரிந்து கொள்ளமுடியாது. 



இதைப் புரிந்துகொள்ள, நம்மை ஆண்ட பிரிட்டீசாராலும் இயலவில்லை. ஆகவே, நம்மை விட்டுவிட்டு ஓடிப்போனார்கள். 



லெஸ்லி வுடின் என்ற இந்த ஆவணப்பட இயக்குநராலும் இதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. அதில் குற்றமிழைத்த எல்லோரும், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்கள். 



வறுமைக்கும் மேட்டிமைக்கும் உள்ள ஏற்றத்தாழ்வு, சாதிஅதிகாரத்தினால் செயற்கையாய் உருவாக்கப்பட்டது. 



ஆகவே தான், இந்நிகழ்வில், ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீது இருக்கும் வெறுப்பும், ஏழ்மையின் மீது இருக்கும் அருவெறுப்பும் இயங்கி, தண்டனையைப் பெற்றுத்தரமுடிந்தது.



இதே நியாயத்தை, இரு தலித் பெண்களை வல்லுறவு செய்து, கொன்று மாமரங்களில் தொங்கவிடப்பட்ட, 'மாமர வழக்கிலும்' ஏன் நம்மால் பெற முடியவில்லை? ஏன் ஊடகங்களின் ஆதரவை, கவனத்தைப் பெறமுடியவில்லை? என்பது முக்கியமான கேள்வி.



சென்ற வருடம் மட்டும், 'நிருபயா' போன்று, 900 - க்கும் மேற்பட்ட தலித் பெண்கள் வல்லுறவு செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். 



ஏன், இவர்கள் 'இந்தியாவின் மகள்கள்' இல்லையா?



பிபிசி ஆவணப்பட இயக்குநரால், இந்தியாவின் இப்பிரச்சனையைப் பரந்த அளவில் அறிந்து கொள்ளவோ, உள்வாங்கவோ முடியவில்லை. அப்படி முடிந்திருந்தால், இந்த ஆவணப்படம், இந்தியாவின் நீதிமுறையைப் பெருத்த கேள்விக்குள்ளாக்கியிருக்கும்.



இந்தியா, இன்னும் பெருத்த அவமானத்திற்கு ஆளாகியிருக்கும்.



குட்டி ரேவதி

'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை முன் வைத்து! - 3


மகள்களைப் பெற்ற அப்பாக்களாலேனும் இதன் கொடூரத்தை உணரமுடியுமா?





இந்தியா என்பது, தமிழகத்தைத் தவிர்த்தது இல்லை.
தமிழகத்தில், பொதுவெளியில், சமூகவலைத்தளங்களில், பெண்களை, 'மூதேவி', 'தேவடியாள்', 'வாழாவெட்டி', 'வைப்பாட்டி' என்ற அடைமொழி கொடுத்து அழைப்போர் கூட கல்வி பெற்ற அரும்பெரும் ஆண்மகன்கள் தான்.
அவர்களுக்குப் பின் விசிறிகள் வரிசையாய், கூட்டங்கள் பெரிதாய். இங்கே, பெண்களுக்கு ஆதரவாய் குரல் கொடுப்போர் கூட, அப்படியான ஆண் ஆளுமைகளை வரவேற்றுப்பாராட்டிப் பொது அரங்கில் உயர்த்துவது நிறைய விடயங்களை உறுதி செய்கிறது.
1. ஓர் ஆண் சமூகத்தில் சிறந்த படைப்பாளியாக இருக்க, பெரியாரைப் போல சுயமரியாதையுடன் இருக்கவேண்டியதில்லை.
2. குறைந்தபட்ச, சமூக நாகரீகமும் தன்மான உணர்வும் விழிப்புணர்வும் அவசியமில்லை. ஊடகங்களில் அங்கீகாரம் பெற, அவையெல்லாம் அவசியமே இல்லை. காட்டுமிராண்டிச்சிந்தனைகள் போதுமானவை.
3. இந்து மதம் வலியுறுத்தும் அடிமைத்தனத்தை நாங்கள் எங்கள் மனைவி, மக்களிடம் வலியுறுத்துவது போலவே, பிற பெண்களிடமும் அச்சுறுத்துவோம் என்று பொதுப்படையாக, எழுத்திலும் சினிமாவிலும் தொடர்ந்து முழங்கிக்கொண்டே இருக்கவேண்டும்.


ஆனால், தொடரும் கடந்த கால நிகழ்வுகளின் பின்னால் எல்லாம் எனக்கு மீண்டும் மீண்டும் எழும் கேள்விகள் இவையே:
இப்படி, பொதுச்சமூகத்தின் பார்வையால் 'தான் பெற்ற மகள்' வன்புணர்வுக்கு ஆளாக நேரும் போது, பெற்ற தந்தையான இவர்களின் உணர்வு எப்படியாக இருக்கும்?
இன்று ஆண்களிடம் இவர்கள் நியாயப்படுத்தும் வன்முறையைத் தன் மகள் எதிர்காலத்தில் சந்திக்க நேரும்போது ஏற்படும் வலியைப் பார்த்துத் துடித்துப்போகாமல், இவர்கள் மீதே பெட்ரோலை ஊற்றி எரிப்பார்களா?
மகன்களைப் பெற்றோரை விட, மகள்களைப் பெற்றோர்களால் இச்சமூகமாற்றத்திற்காக ஒரு கணமேனும் சிந்திக்காமல் இருக்கமுடியுமா?
மகள்களைப் பெற்ற அப்பாக்களாலேனும் 'பாலியல் வல்லுறவின்' கொடூரத்தை நியாயப்படுத்தாமல் இருக்கமுடியுமா? அந்தத் துன்பியலைப் புறக்கணிக்கமுடியுமா?
இவர்களாலேனும், சமூகத்தில் இந்த வன்முறை எப்படி உற்பத்தியாகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியுமா?


குட்டி ரேவதி

'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை முன் வைத்து! - 2


இன்னும் மேலதிகமான குற்றங்களுக்கான வழி தான், குற்றங்களுக்குத் தீர்வா?




எல்லோருமே, இந்தப்பிரச்சனைக்குத் தீர்வாக, 'கல்வி'யைச் சொல்வது நகைப்பை வரவழைக்கிறது.
'கல்வி'யைப் பெற்றவரும், கல்வியைப் பெற வாய்ப்பில்லாதோரும் ஒரே மாதிரி சிந்தனையைத் தான் கொண்டிருக்கின்றனர் என்பது இப்படத்தின் போக்கில் தெளிவாகத் தெரிகிறது.
நமக்குக் கற்பிக்கப்படுவது, அடிமைக்கல்வி. அதிலும், இந்துமதம் மற்ற எல்லா மதங்களையும் விட, மூர்க்கமான, மடத்தனமான வன்முறையை, பெண்கள் மீதான அடக்குமுறையை நியாயப்படுத்துவது.
இந்த நாட்டை முழுமையும் 'இந்து நாடாக' ஆக்க, ஒரே வழி: பெண்களின் கருப்பையைக் காவல் காப்பது அல்லது சீரழிப்பது என்ற நம்பிக்கையைக் காலந்தோறும் வலியுறுத்திவருகின்றனர்.

'பெண்கள் விடயத்தில்' எந்த ஊடகமும் முழு விழிப்புணர்வுடன், நீதிநம்பிக்கைகளுடன் இல்லை என்பது வெளிப்பாடு.
வீட்டில் பெற்ற தாய் முதல் மணந்து கொண்ட மனைவி வரை, 'கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்' என்ற அடிமைச் சிந்தனை உடைய சமூகத்தை பெற்ற மகளைக் கொன்றும் நிலைநாட்டி வரும் ஓர் அபத்தமான நாடு இது.
எந்த நூலிலும், பெண்ணை மதிக்கும் கல்வி இல்லை.
இந்த நிலையில், 'கல்வி' எப்படி தீர்வாகும்?

அல்லது, 'தூக்கில் போடுங்கள்!' என்று சொல்கிறார்கள். அதைத் தீர்வு என்று சொல்கிறார்கள். எனில், அங்கு டில்லி வீதிகளில் நின்று போராடிய, அத்தனைப் பெண்களின் தந்தையரையும், சகோதரர்களையும், ஏன் பார்லிமெண்டில் தினம் தினம் நுழைந்து நாட்டுப்பற்றைப் பேசிவரும் அத்தனை ஆண்களையுமே 'தூக்கில் போடுவது என்பது சாத்தியமா?
தண்டனை பெற்றவன், தண்டனை பெறாதவனைக் குற்றம் சாட்டுகிறான். தண்டனை பெறாதவன், வன்முறைக்கு ஆளானோரே குற்றவாளி என்கிறான். வன்முறைக்கு உள்ளாகும் மக்கள், 'நீதி பெற போராடாமல்' தண்டனை பெற போராடுகிறார்கள்.
இதற்கு முடிவே இல்லை. எந்தக் கல்வியும் போதாது என்பதை இப்படமே முகத்தில் அறைந்தாற்போல் சொல்கிறது.

வீட்டிலும், பொதுவெளியிலும், ஊடகங்கள் வழியாகவும், 'உண்மையான ஓர் ஆண், பெண்கள் மீது மிகுந்த மரியாதையைக் கொண்டிருப்பான்,' என்ற ஒரு சாதாரணமான நம்பிக்கையை விதைப்பதே, சரியான, முதல்கட்ட தீர்வாக இருக்கமுடியும் என்று நம்புகிறேன்.


குட்டி ரேவதி

'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை முன் வைத்து! - 1


பாரதத்தாயின் புதல்வர்கள்!



'இந்தியாவின் மகள்' என்ற ஆவணப்படத்தைக் காரணமாக வைத்து, நிறைய விவாதங்களை எழுப்பலாம். அந்த அளவிற்கு, அந்தப்படம் தூண்டுதல்களையும் இடைவெளிகளையும் தன்னிடத்தில் கொண்டுள்ளது.
முதலில், 'இந்தியாவின் மகள்' என்ற டைட்டிலுக்குப் பதிலாக, 'பாரதத்தாயின் புதல்வர்கள்' என்று வைத்திருக்கலாம். அந்த அளவிற்கு, திரையில் தோன்றும் முதல் ஆண் மகன் முதல் கடைசியாகத் தோன்றிய ஆண்மகன் வரை, சமூகத்தில் பெண்கள் குறித்த தம் அரைகுறையான புரிதல்களைக் கூட மிகத் தெளிவாக, எந்த அளவும் தயக்கமில்லாமல் முன் வைத்துள்ளனர்.
நிர்பயா, வன்புணர்வு செய்யப்பட்ட நிகழ்வு, திரையிலும், செய்தித்தாள்களிலும் விவரிப்பாக வந்து இரத்தம் உறையச் செய்த அந்த முதல் நாள் இன்னும் நினைவிருக்கிறது.
ஆனால், இந்தப்படத்தில் ஒரு களப்பணியாளர் சொல்வது போலவே, இந்தியாவில் தினம் தினம் பாலியல் வன்புணர்வு நிகழ்வுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் முக்கியமானவை, வேறுபட்டவை, சமூகத்தின் கண்ணாடியாக இருந்து யதார்த்தத்தைப் பிரதிபலிப்பவை.
குற்றவாளிகள் எனப்படுவோருக்காக வழக்காடுபவர் ஏ.பி. சிங், சொல்லும் இரண்டு விடயங்கள் மிக மிக முக்கியமானவை: ஒன்று, "என் மகள் இப்படி எல்லை தாண்டி சென்றிருந்தால், என் சமூகத்தின் முன்னேயே, பெட்ரோலை ஊற்றி எரித்திருப்பேன்".
இரண்டு: "பார்லிமெண்டில் இன்று நுழைந்து அமர்ந்து பேசிவரும் உறுப்பினர்களில், 250 நபர்கள் மீது பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன" என்று கூறுவது.
மேற்சொன்ன, இவை இரண்டுமே இந்தியச்சமூகத்தின் அவலத்தை இரண்டு துருவங்களிலிருந்து படம்பிடித்துக் காட்டுபவை.

கடந்த இரண்டாயிரம் வருடங்களாக, சமூகத்தில் கொல்லப்பட்ட, தாக்கப்பட்ட, இருண்ட அறைகளில் மடிந்துபோன பெண்களின் வரலாறுகள் சொல்லி மாளாதவை. அந்த ஓலத்தின் கூக்குரல்கள் தாம் அவ்வப்பொழுது இப்படியான பெண் குரலாக எழும்பித் தேய்ந்து போகின்றனவோ என்று தோன்றுகிறது.
பிபிசியின் இந்த ஆவணப்படம், இந்தியாவின் காட்டுமிராண்டித்தனத்தை, பகிரங்கப்படுத்துகிறது. அதில், நிறைய பொத்தல்கள் இருந்தாலும், விவாதங்களைத் தூண்டிவிடுவதன் பொருட்டு இந்தப்படத்திற்கு இருக்கும் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவது ஒன்றும் எதற்கும் பாதகமாகாது.
அதற்காக, சர்வதேச நாடுகளில், லண்டனில், அமெரிக்காவில் பாலியல் வன்புணர்வு நடைபெறவில்லை என்று அர்த்தமில்லை.

ஆனால், இந்தியாவில் போல், இவ்வளவு மூடத்தனமாக, ஆண்களும் பெண்களும் ஆண்கள் செய்யும் குற்றத்தைச் சமூக நியாயமாக முன்வைப்பதில் ஒரு தயக்கமேனும் இல்லாமல் இருக்காது என்பதை நம்புகிறேன்.
'அந்தப்பெண்ணை உயிருடன் விட்டது தான் பிரச்சனை. கொன்றிருந்தால், இவ்வளவு பெரிய விவகாரமாகி இருக்காது!' என்பதே நீதியாகிவிடுமோ என்ற அச்சமும் தோன்றாமல் இல்லை.
இன்னும், பதிவுக்கு வராத, சென்ற ஆண்டு மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட, ஒடுக்கப்பட்ட, தலித் மற்றும் பழங்குடிப் பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, மரங்களில் கட்டிவிடப்பட்டப் பெண்களின் வரலாறுகளையும் ஓலங்களையும் சொல்லி, 'இந்தியாவின் மகள்கள்' என்று தலைப்பிட்டிருந்திருக்கலாம்.


குட்டி ரேவதி

மாட்டுக்கறி - எங்கள் வாழ்வு (தெலுங்கு கவிதையின் தமிழாக்கம்)









மாட்டுக்கறி எங்கள் பண்பாடு
மாட்டுக்கறி - எங்களது வாழும் பசுமை
வாழ்க்கையின் பன்முகம்
எங்கள் ஆன்மாவின் உயிர்மூச்சு
"மாட்டுக் கறி உண்ணாதீர்கள்"
நான் உன்னை கேட்கிறேன் - "எப்படி உண்ணாமல் இருப்பது?"
நீ யார் எனக்கு அறிவுரை கூற, எங்கிருந்து வந்தவன்?
எனக்கும் உனக்கும் என்ன உறவு?
நான் கேட்கிறேன்.
இன்று வரைக்கும்
நீ ஒரு ஜோடி காளை மாடுளை வளர்த்திருப்பாயா?
ஒரு ஜோடி ஆடுகளையாவது?
ஒரிரண்டு எருமைகளை?
அவைகளை மேய்த்த அனுபவமுண்டா?
குறைந்தபட்சம் கோழியாவது வளர்த்ததுண்டா?
இவைகளுடன் ஆற்றில் இறங்கி
அவற்றை தேய்த்துக் குளிப்பாட்டியதுண்டா?
காளையின் காதை அறுத்து துளையிட்டதுண்டா?
இல்லை, அவற்றின் பற்களைப் பிடித்து பார்த்திருக்கிறாயா?
அவற்றுக்கு பல்வலி வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?
அவற்றின் கால் குளம்புகள் புண்ணானால்?
உண்மையில் உனக்கு என்னதான் தெரியும்?
"மாட்டுக் கறி உண்ணாதே" என்று சொல்வதை தவிர?
பாலூட்டும் தனது மகளுக்கு, பிள்ளைப் பெற்று
கொஞ்சநாட்கள் கூட ஆகாத அவளுக்கு
எப்படியாவது
நன்கு பதப்படுத்தப்பட்ட மாட்டிறைச்சித் துண்டுகளை
சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று
கவலையுடன் அலைகிறாள் யெல்லம்மா.
மாட்டின் ஈறல் சுரக்கும் சாறு - அது லேசில் கிடைக்காது
அதைப் பெற மாலா செட்டம்மாவின் கூரை பலகை
மாடிகா எல்லம்மாவின் எறவானம்
என்று வீடுவீடாகச் தேடிச் செல்வாள்.
குழந்தையின் வயிற்று கடுப்பைத் தணிக்க
பெரியவர்களின் கைகால் வலியை போக்க
மாட்டீறல் சுரக்கும் கடுஞ்சாற்றையே
அவர்கள் நம்பி இருப்பர்.
அப்படிப்பட்டவர்களைப் பார்த்து
"மாட்டுக் கறி உண்ணாதே" என்று சொல்ல
உனக்கு எத்தனை துணிச்சல்?
ஜாக்கிரதை - அவர்கள் செருப்பாலேயே அடிப்பார்கள்.
ஓடு, அவர்கள் வருவதற்குள்...
மாலா மக்களும் மாடிகா மக்களும்
மாட்டுக் கறி உண்பவர்கள் மட்டுமல்ல, தம்பி.
மண்ணை உழுவதற்காக
காடுகளை பராமரிப்பவர்கள்
எருமைகளை, ஏர் ஒட்டிச் செல்லும் எருதுகளை
பழக்குபவர்கள்
யுகயுகமாக அவர்கள் இந்த பசும் வயல்களை உழுதுள்ளனர்
தலைமுறை தலைமுறையாக கன்றுகளை வளர்த்து வந்துள்ளனர்.
எமது மாட்டுச் சந்தைகள் - அவற்றின் பண்பாடு
பத்து மைல்களுக்கு ஒரு சந்தை
இந்த தக்காணம் முழுக்கவும்
தெலுங்கானா, ஆந்திரம், மகராட்டிரம், கர்நாடகம்
மலநாடு, மங்களூரு, சித்தூரு, நெல்லூரு,
ஓங்கோளு, அவுரங்காபாத் -
போய் நின்று பார் -
கண்ணுக்கு எட்டும் திசைகளிசெல்லாம் சந்தைகள்
பசுமாடுகள், கன்றுகள், காளைகள், எருதுகள்
அமெரிக்க திரைப்படங்கள் கொண்டாடும்
மாடு பிடிக்கும் குதிரை வீரர்களை உலகமறியும் -
ஆனால் இந்தச் சந்தைகளை?
அவற்றுக்காக வேர்க்க விறுவிறுக்க உழைப்பவர்களை?
ஓங்கோளு காளைகள், தீட்டிவிட்ட கொம்புகளைக் கொண்ட எருதுகள்
பிறைச் சந்திரனைப் போன்ற வளைந்த கொம்புகளுடைய மாடுகள்
தக்கணத்துக்குப் பெருமைச் சேர்க்கும் பன்னிரண்டு அடி காளைகள்
இவற்றை பற்றியெல்லாம் உனக்குத் தெரியுமா?
நாங்கள் மேய்த்துக் கொண்டிருந்த மாடுகளை பிறர் ஓட்டிச் சென்றது,
வளர்த்த கைகளிலிருந்து மாடுகள் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்ட சம்பவங்கள் -
இவை பற்றியெல்லாம் தெரியுமா, தெரியாதா?
அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை,
எருது பூட்டிய வண்டிகள் போய்
குதிரைகள் பூட்டப்பட்ட வண்டிகள் வந்த நாளை
எங்களால் மறக்க முடியுமா என்ன?
பசுக்களை, காளைகளை
நாங்கள் காடு, கரைகளில் ஓட்டிச் செல்வோம்
மண்ணை அவை உழுது போட வேண்டுமானால்
உணவு வேண்டுமே -
எங்களுக்கு இதைச் செய்ய தெரியும் -
ஒன்றை மறந்து விடாதே
மண்ணை உழுவதற்கே மாடுகளை வளர்க்கிறோம்.
மண்ணை விட்டு, மந்தைவெளியை விட்டு நீங்கியும்
மாட்டுக் கறித் தின்னும் கூட்டம் என்று எங்களை ஏசுகிறாய்-
பழைய பாட்டையே திரும்பத் திரும்ப பாடுகிறாய்
உனது ஊத்தைபற்களைக் காட்டி காட்டி.
இப்படி அங்கலாய்க்கும் நீ, நீ என்னதான் செய்கிறாய்?
கோமாதா என்று கும்பிடுகிறாய்
பாலை கறந்து கறந்து பலகாரம் செய்கிறாய்.
நாங்கள் பசுவை கறப்பதில்லை.
கோமாதா என்று வணங்குவதுமில்லை
கோமூத்திரத்தை குடிப்பதுமில்லை.
கன்றை கட்டி வைத்து
பசுவை கறக்கும் ஆட்கள் அல்ல நாங்கள்.
பசுவின் மடியில் கன்று - அது குடித்து
நன்றாக வளர வேண்டும்
மண்ணை உழுவதற்கு அதற்கு வலிமை தேவை
வேளாண்மை செழிக்க எங்களுடைய மாடுகள்
யானைகள் போல்
குன்றுகளாக
நிற்க வேண்டும்.
காளை ஈனும் பசுவை மதிப்பவர்கள் நாங்கள்
பச்சை புற்கட்டுகள், சோளத் தட்டு, அரிய புண்ணாக்கு
கன்று ஈன்ற பசுவுக்கு இவற்றை நாங்கள் அளிப்போம்
அதனை வேலை வாங்கமாட்டோம் -
பசுக்களை உன் வீட்டுக்கு கூட்டி வந்து
வாசலில் நிறுத்தி வித்தைக் காட்டி
பிழைப்பவர்கள் இல்லை நாங்கள்.
அவற்றை நன்றாக மேய்த்து வளர்ப்போம்
அவை நல்ல கன்றுகளை ஈன்றளிக்க,
மண் செழிக்க அவற்றை பராமரிப்போம்.
அவ்வபோது நாங்கள் இளைபாறும் போது
ஆனந்தமாக இருக்கையில் -
இந்த நாளை கொண்டாடினால் என்ன என்று
பணம் வசூல் செய்து
சந்தைக்கு செல்வோம்.
ஆரோக்கியமான, நல்ல பசுவை தேர்ந்தெடுத்து வருவோம்
அதை வெட்டி, கறியாக்கி பகிர்ந்துண்ண -
நாங்கள் விருந்துண்ணும்
அந்த மாலை வேளையில்
எங்கள் ஊரை
களிப்பின் வாடை குளிப்பாட்டும்.
தலைமகனுக்கு தரப்படும் மரியாதையும் பொறுப்பும்
எங்கள் வீட்டு எருதுகளுக்கும் - அவற்றுக்கு
பிடித்தமான பெயர்கள் சூட்டி மகிழ்வோம்
ராமகாரு, அர்ஜூனகாரு, தருமகாரு...
பசுக்கள், எருமைகள், கன்றுகள் - இவற்றுடன் குடும்பமாக வாழ்வோம்
அழகுப் பெயரிட்டு அழைப்போம் -
ரங்கசானி, தம்மரமோக, மல்லெச்செண்டு...
ஏன் மாடுகளுக்காக திருவிழா எடுப்போம் - யெரோன்கா
கேள்விபட்டதுண்டா?
தெரியுமா உனக்கு -
அந்த திருநாளில்
எங்களுடைய காளைகளை, எருதுகளை, பசுக்களை
தெளிந்த நீரோடைகளுக்கும் குளங்களுக்கும் ஓட்டிச் சென்று
தேய்த்து தேய்த்து குளிப்பாட்டுவோம்.
ஆண் எருமைகளையும் பசுவின் கன்றுகளையும்தான்.
அவற்றின் வேறு வேறு வண்ணங்களுக்கும் நிறங்களுக்கும் ஏற்ப
கோலம் தீட்டி அழகு செய்வோம்
சாயம் தோய்த்த சணல் கயிறுகளாலான
குஞ்சங்களை நெற்றிகளில் கட்டி
அவை அசைந்தாட பார்த்து மகிழ்வோம்.
மணிகள் அடுக்கிய மாலைகளை
அவற்றின் கழுத்துகளில் அணிவிப்போம்.
கம்பு, அரிசி, வெல்லம் என்று உணவளிப்போம்
பச்சை முட்டைகளையும் கள்ளையும் அவற்றின் வாய்களில் ஊற்றுவோம்.
ஊர் முழுக்க ஊர்வலமாக அழைத்துச் செல்வோம்.
நீ எப்போதும் பசுவை பற்றி மட்டும் பேசுகிறாய்.
உனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?
எருதுகளை பற்றி பேசுவதில்லை
அவை மண்ணை உழுவதைப் பற்றி பேசுவதில்லை
களி மண் குவியல்களை மிதித்து மிதித்து
எங்கள் வீட்டுச் சுவர்களை பூச தேவையான மண்ணை
எங்களுக்கு பதமாக ஆக்கித் தருவதைக் குறித்து பேசுவதில்லை.
ஒரு காலத்தில் கோட்டைகளை கட்ட தேவைப்படும் களிமண்ணைக்கூட
இவைதான் மிதித்தளித்ததாக வரலாறு உண்டு -
யார் தந்த அதிகாரத்தில் "மாட்டுக் கறி உண்ணாதே?" என்று கூறுகிறாய்?
"எருதுகளை கொல்லாதே" என்கிறாய்,
ஆனால் செத்த மாட்டை உண்ணச் செய்கிறாய்-
எங்களை தீண்டத்தகாதவர்கள் என்கிறாய்
நிலமற்றவராக வைத்திருக்கிறாய்
நீ செய்யத் தயங்கும் அழுக்கான வேலைகளை
எங்களைச் செய்ய சொல்கிறாய்
ஊர்த் தெருக்களில் விழுந்து கிடக்கும் செத்த மாடுகளை
அகற்றச் சொல்கிறாய்.
மாடுகன்றுகளை பராமரித்து
அளவாக அவற்றை கட்டி வளர்த்து
எருதையும் காளையையும் அம்மனுக்கு படையலிட்டு உண்பது
எங்கள் பண்பாடு
எங்களை தடுத்து நிறுத்த நீ யார்?
பௌத்தர்கள் பேசுவது போல நீ பேசப் பார்க்கிறாய்.
எங்களுக்கு என்ன பௌத்தம் தெரியாதா?
"மனிதர்களை கொல்லாதே" என்று சொன்னது பௌத்தம்.
நீயோ, "ஆட்டுக்கறி, மாட்டுக் கறி, வெங்காயம், பூண்டு உண்ணாதீர்கள்"
என்று சொல்லிக் கொண்டு மனிதர்களை வெட்டிச் சாய்க்கிறாய்.
விலங்குகளை பற்றி பேச நீ யார்?
மனிதம், நாகரிகம் தெரியாத நீ?
எருது, பசு, காளை, எருமை
எங்கள் குடும்பத்தினர்.
அவற்றின் தேவையறிந்து வளர்ப்போம்
வலியறிந்து மருந்தளிப்போம்
காயடித்து வேலைக்கு தயாராக்குவோம்.
போ, மாலா, மாடிகா மக்களிடம் போய்க் கற்றுக் கொள்ள
நாங்கள் நாகரிகம் உருவாக்கியவர்கள்
எமது தேசம் எங்கள் இருப்பிடங்களில்தான் பிறந்தது
என்பதை மறந்துவிட்டாயா?
சுற்றுச்சூழல், நாகரிகம் - எங்களுக்கு இயல்பானவை
போர், அழிவு - உனது பண்பாடு
பசுவுக்கும் உனக்குமான உறவு லேசானது -
பால், இனிப்பு, மரக்கறி உணவு, இவ்வளவுதான்.
ஆத்தாவை கும்பிடும் திருநாளில்
காளையையும் கிடாவையும் காணிக்கையாக செலுத்தி உண்போம்.
எங்கள் வழியில் குறுக்கிட்டால் ...
எங்களுடைய மைசம்மா, ஊரெட்டம்மா, போச்சம்மா, போலெரம்மா எல்லாம்
"ஏய், எனக்கு எருது வேண்டும்... காளை வேண்டும், கிடா வேண்டும்"
என்பார்கள்.
அவர்களுக்கு நேர்ந்து விடுவதற்காக இவற்றை பார்த்து பார்த்து வளர்ப்போம்
இது நாங்கள் செலுத்த வேண்டிய கடன்.
நீ யார் எங்களுக்கிடையே வருவதற்கு?
தன் பாதையில் குறுக்கிடுபவனை மைசம்மா சும்மா விடமாட்டாள்.
மாட்டுக்கறி எங்களது பண்பாடு. ஜாக்கிரதை.
- கோகு ஷியாமளா


(ஆந்திராவின் முக்கியமான தற்கால தலித் பெண் கவிஞர், சிறுகதையாசிரியர், பெண்ணிய ஆய்வாளர், செயற்பாட்டாளர். சாதி/எதிர்ப்பு, தெலுங்கானா போராட்டங்களில் தொடர்ந்து செயலாற்றி வருபவர்
ஆங்கிலம் வழி தமிழில் - வ. கீதா
(இந்தக் கவிதை இடம் பெற்ற சஞ்சிகை: தற்கால அரசியல் செய்தி மடல், செப்டம்பர் 2012, பெண்ணிய படிப்புக்கான அன்வேஷி ஆய்வு மையம், ஹைதராபாத் வெளியீடு)
(இக்கவிதை "பூவுலகு" மார்ச் - ஏப்ரல் 2013 பெண்கள் சிறப்பிதழில் இடம் பெற்றுள்ளது)


Painting: Damien Hirst's 'a thousand years'

ஞாயிற்றுக்கிழமை என்பது!







ஞாயிற்றுக்கிழமைகள், கட்டாய ஓய்வு போலவும் மற்ற கிழமைகள் விருப்ப ஓய்வு போலவும் இருக்கின்றன.
நிரந்தர வேலைகளில் இல்லாதவர்களுக்கு இப்படித்தான்.



மூன்று நாட்களாக, இணைய இணைப்பு சரியாக வேலை செய்யவில்லை. ஒரு மின்னஞ்சல் அனுப்புவதற்குக் கூட போராடவேண்டியிருந்தது. இன்று காலையிலேயே வேகமாக, வேலை செய்யத்தொடங்கிவிட்டது.

எழுதி அனுப்ப வேண்டிய கடிதங்களை எல்லாம் நிறைவு செய்துவிட முடியும் என்று நம்புகிறேன்.

சில நாட்கள் முன்பு, எங்கள் ஓய்வு வேளையில், ஆர். ஆர். சீனிவாசனிடம் விளையாட்டாகத்தான் கேட்டேன்.
அவருக்குப் பிடித்தமான, சிறந்த கவிதைகள் சிலவற்றைச் சொல்லுங்கள் என்று சொன்னேன். இத்தகைய உரையாடல்கள் எங்களுக்கு இடையே அடிக்கடி நிகழ்வது தான். ஆங்கில இலக்கியத்தில், இளநிலைப் பட்டம் பெற்றவர். உண்மையில், பட்டத்திற்கும் ஆர்வத்திற்கும் சம்பந்தமே இல்லை எனும் அளவிற்கு, ஆங்கில இலக்கியத்தின் சிறந்த எல்லைகளை எல்லாம் ஆர்வத்துடன் வாசித்து வைத்திருப்பவர். என்னுடைய கல்லூரி காலத்தில், ஆங்கில இலக்கியத்தை  எனக்கு  முறையே அறிமுகம் செய்து வைத்தவர் அவரே. இல்லை என்றால், இலக்கியப்பாதைக்குத் திரும்பியிருக்கவேமாட்டேன்.

சில்வியா பிளாத் தொடங்கி நிசிம் இசக்கியல் வரைக்கும் கவிதைகளையும், அக்கவிதைகளில் இருந்து மனனமாகியிருக்கும் முக்கியமான வரிகளையும் சொல்லிக் கொண்டே வந்தார்.
எவ்வளவு அறிந்திருந்தாலும், வெளியில் காட்டிக்கொள்ளவே மாட்டார். ஆண்களுக்கு அடக்கம் அவசியம் என்பதிலும், பெண்களுக்கு அடக்கம் அவசியமில்லை என்பதிலும் கருத்தியல் சார்ந்த திடமான நம்பிக்கை எனக்கு உண்டு.
அவர் ஒவ்வொரு கவிதையையும் சொல்லச்சொல்ல, இணையத்தில் தேடித்தேடி வாசித்தேன். ஏற்கெனவே அறிந்த, வாசித்தக் கவிதைகள் என்றாலூம், இப்படி ஒரு தொகுப்பாய் வாசிக்க ஒரு புத்தாக்கப் பயிற்சி போல இருந்தது.
Sylvia Plath's Mirror, Emily Dickinson's Because I could stop for death, Eliot's The Love Song of J. Alfred Prufrock, Faiz Ahmed Faiz;s My heart, He Traveller, Ted Hughs's Crows, Nissim Ezekiel's Night of the Scorpion, Ted Hughs's Apple Dumps, Rainer Maria Rilke's Solitude is like rain என நீண்டு கொண்டே இருந்தது.

இன்று காலையில், இந்த நாளுக்கு, கவிஞர் பாதசாரியின் சில கவிதைகளை எடுத்து வாசித்தேன்.
நாம் நல்ல கவிதைகள் எழுத, நம்மினும் சிறந்த கவிதை அறிவு உள்ளோரைச் சூழ வைத்திருக்கவேண்டும். அப்பொழுது தான், நம்மிடம் கற்களுக்குப் பதிலாக, சில கவிதைகள் இருக்கும்.

இன்று காலையில் ஃபேஸ்புக்கில், Run For Life என்று ஒரு புகைப்படம் பார்த்தேன். இத்துடன் இணைத்திருக்கிறேன், பாருங்கள். மனித வாழ்வின் நிறைய தருணங்களையும் கூட, அது கிளர்த்துகிறது. மீண்டும் மீண்டும், அடங்கமாட்டா ஆர்வத்துடன் அதையே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.


நடிகர் முருகருடன் சென்னையின் அதிகாலையையும் பார்த்துவந்துவிட்டேன். ஞாயிற்றுக்கிழமையின் நினைவுகளுக்கு, திரைகளை இழந்த சன்னல்களில் வழியாகப் பீறிடும் வெளிறிய ஒளி வீசும் தன்மையும், வெறிச்சோடிப்போன சாலைகளின் குணமும் உண்டு!
ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துகள்!
ஃபோட்டோ கிராஃபர்: Roie Galitz

குட்டி ரேவதி

ஏன் நமக்கு 'அம்பேத்கரியம்' அவசியம்?






கொள்கைகளில் பிரச்சனை இல்லை. அதைப் புரிந்துகொள்ளும் நம்மிடம் தான் சிக்கல் இருக்கிறது!
பல உதாரணங்கள் பார்த்துவிட்டேன்.


தங்கள் தங்கள் துறைகளில், போராடி முன்னேறி வரும் பெண்களாகிய நாம், போராட்டத்தின் பொழுது, தம் நம்பிக்கைக்கு நெஞ்சிற்கு உறுதுணையாக இருக்கும், 'இயக்கத்தையும்', 'கொள்கைகளையும்', 'கருத்தியலையும்' பற்றிப்பிடித்துக்கொள்வதுடன்,
அந்த இயக்கத்தில், கருத்தியலில், கொள்கையில் கால் ஊன்றி நிற்கும் 'ஆண்களை'யும் நெஞ்சார நம்புகிறோம். அந்த ஆண்களை வாழ்க்கைத்துணையாக, நண்பர்களாக, காதலராக ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால், தனக்கும் அவருக்கும் இடையே உறவுசார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் போது, இயக்கம், கருத்தியல், கொள்கைகள் தாம் அந்தப் பிரச்சனைக்குக் காரணம் என்று வெகு எளிதாகச்சொல்லி விடுகிறோம்.
இதற்கிடையில், அந்த ஆணின் பின்னணி, சாதி, குடும்பம், அது தவிர நம் புரிதலில் இருக்கும் குறைபாடு என பல காரணங்களை வெகு எளிதாகவும் வசதியாகவும் மறந்துவிடுகிறோம். சம்பந்தப்பட்ட அந்த ஆணை விட, நாம் தாம் அரைகுறையாகக் கருத்தியலை, கொள்கையை உள்வாங்கியவராக இருந்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள மறுக்கிறோம்.


உண்மையில், இது மிகவும் பிற்போக்கான சிந்தனை.
பெரியாரியம் விடயத்திலும் சரி, தமிழ்த்தேசியம் விடயத்திலும் சரி, கம்யூனிச விடயத்திலும் சரி, இதுவே போக்காக உள்ளது.
எனக்கென்னவோ, ஆண்கள் எல்லா இடங்களிலும் ஆண்களாகவே, ஆண்களுக்கான அதிகார விடயங்களுடன் இருப்பதற்கான வாய்ப்பையே உலகமும், சமூகமும், இயக்கங்களும் அவர்களுக்கு நல்குகிறது.
இவ்விடயத்தில், நாமும் இவ்வாறு பாரபட்சமான அணுகுமுறையைக்கொண்டிருப்பது இன்னும் நம் வலிமையைக் குலைக்கவே செய்யும்.
இதோ, இப்படி இவ்விடயத்தை அணுகுவதற்கான நம்பிக்கையும் புரிதலும் 'எனக்கு' வந்திருப்பதே கூட, ஏன், 'உங்களுக்கும்' ஏற்பட்டிருப்பதே கூட இவ்வியக்கங்களினால், கொள்கைகளால் தாம்.


நடைமுறையில், 'அம்பேத்கரியம்' தான் மேற்சொன்ன இயக்கங்களில் எல்லாம் இருக்கும் வெற்றிடங்களை ஆண்களிடமும், பெண்களிடமும் ஒரு சேர நிரப்பமுடியும் என்பது என்னுடைய நம்பிக்கை.
சமீபமாக, நிறைய பெண்கள் தங்கள் சொந்தவாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகளை, சம்பந்தப்பட்ட இயக்கத்தின் கொள்கைகளுடன் போட்டுக்குழப்பிக் கொள்கிறோம்.


இதற்கு காரணம், இந்தக் கொள்கைகள் அவசியப்படும் இந்தச் சமூகத்தில் பெண்களும் ஆண்களும் தனித்தனி மனிதர்கள் இல்லை. ஒருவருடன் ஒருவர் பின்னிப்பிணைந்தவர்கள் என்பதை ஆண்களைப் போலவே, பெண்களும் தங்கள் வசதிக்கேற்ப மறந்துவிடுவது தான்.
கொள்கைகளில் பிரச்சனை இல்லை. அதைப் புரிந்துகொள்ளும் நம்மிடம் தான் சிக்கல் இருக்கிறது. கொள்கைகளின் திசைகளைத் திருகி மாற்றமுடியாது. மனிதர்களின் மனோபாவங்களை, அணுகுமுறைகளை இத்தகைய நம் புரிதலின் வழியாக வெகு எளிதாக மாற்றிவிடலாம்.


குட்டி ரேவதி