நம் குரல்

புத்தகக்கண்காட்சி -2அருள் எழிலன் குறிப்பிட்டிருப்பது போலவே, இந்த வருடம் புத்தகக் கண்காட்சி படுதோல்வி தான்! இதற்குக் காரணம், புதிய படைப்பாக்கங்கள் பெருமளவில் வராதது தான்! இதற்குக் காரணம், அரசு முன்பு போல நவீன இலக்கியப்படைப்புகளை நூலகங்களுக்கு வாங்கிக்கொள்ளாதது தான்! தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு, இச்சமூகம் ஓர் அறிவுச்சமூகமாய் இருப்பதில் எந்த உவப்புமில்லை.

பெரும் நிறுவனங்களாய் இயங்கும் பதிப்பகங்கள் தம் விருப்பப்படி நூல்களை கண்டபடிக்கு வெளியிட, கவனமாயும் சமூக அக்கறையுடனும் குறிப்பிட்ட எழுத்தாளர்களிடமிருந்து படைப்புகளை வாங்கி வெளியிடும் சிறு பதிப்பகங்கள் இந்த முறை கைகளைக் கட்டிக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது.

இன்று மீண்டும் புத்தகக்கண்காட்சிக்குச் சென்று வந்தேன். வருடத்திற்கு ஒரு முறை புத்தகக்கண்காட்சியில் மட்டுமே சந்திக்க முடியும் நண்பர்களையெல்லாம் பார்த்துக் கைகுலுக்கி மகிழமுடிகிறது. மற்ற படிக்கு, கண்காட்சியில் ஈக்கள் தாம் சுற்றித் திரிகின்றன. கருத்தரங்க வெளியில் ஒலிக்கும் காட்டுக்கத்தல் சொற்பொழிவுகளைப் பத்துபேர் அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நம் சமூகத்தின் முக்கியமானதொரு பண்பாட்டு வெளியெங்கிலும் ஈக்களே ஆடிப்பாடித் திரிகின்றன!குட்டி ரேவதி

புத்தகக்கண்காட்சி 2013 - 1
நேற்று புத்தகக் கண்காட்சியில் ஒவ்வொரு கடையாகச் சென்று, நான் வாங்க வேண்டிய நூல்களின் பட்டியல் ஒன்றை தயாரித்தேன். பட்டியலில் உள்ள நூல்களை கண்காட்சி முடிவதற்குள் வாங்கிவிட வேண்டும்!

எல்லா நூல்களையும் கண்காட்சியில் மொத்தமாகப் பார்க்கும் போது வழக்கத்திற்கு மாறாக, ஏனோ ஓர் ஒவ்வாமை உணர்வு ஏற்பட்டது.

நூல்களை அதிகமாகக் காட்சிப்படுத்துவதிலும் ஏதோ ஒரு பிழை இருக்கத்தான் செய்கிறது.

மூத்த எழுத்தாளர்கள் சமகாலத்துடன் கொண்டாட முடியாத உறவினாலும் புரிந்துணர்வு இன்மையாலும் நூல்கள் எல்லாம் பின் தங்கிப் போய் முகஞ்சுழித்துக் கொண்டதைப் போலிருந்தன.

இளம் எழுத்தாளர்கள் உற்சாகத்துடன் புதிய கதை சொல்லலுடன் எழுந்து வருகையில், மூத்தப்படைப்பாளிகள் எல்லாம் மண்டையில் தட்டி மூர்க்கத்தைக் குறைத்துவிடுவார்களே என்று தோன்றுகிறது.

அட்டைகளும் அழகுணர்ச்சி இழந்து முகம் தொங்கப் போட்டுக் கொண்டு உயரே நிற்கின்றன, புத்தகங்கள்.

புனைவு நூல்களின் மீது தான் விருப்பம் அதிகமாக இருக்கிறது. என்னைக் கண் சிமிட்டி வாவென்று பிடிவாதமாய் அருகில் அழைக்கும் நூலை வாங்கிவிடுவது என்று உத்தேசித்து இருக்கிறேன்!

குட்டி ரேவதி

எழுத்தாளரும் விமர்சகருமான சாரு நிவேதிதாவே 2012 - ம் ஆண்டின் சிறந்த மனிதர்!

எழுத்தாளரும் விமர்சகருமான சாரு நிவேதிதாவே 2012 - ம் ஆண்டின் சிறந்த மனிதர்!

உண்மையிலேயே சென்ற வருடத்தின் 'சிறந்த மனிதர்' விருது, சாரு நிவேதிதாவிற்குத் தான் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். இந்த நேர்மையிலிருந்து நாம் தவறி விட்டோம் என்பதைத் தான் சாரு நிவேதிதாவின், 'உரத்த சிந்தனை: "சலவை'யாக்கப்பட்ட சிந்தனைகள்!' பதிவு எனக்கு உணர்த்துகிறது.

சாரு நிவேதிதாவின் எழுத்துப் பணிகளுக்காகவும் தேசப்பற்றுக்காகவும், ஒரு பத்திரிகையாளராக அவரது உரத்த சிந்தனைக்காகவும், 'சிறந்த மனிதர்' விருது அவருக்குத் தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

அப்துல்கலாமிற்குப் பிறகு, அணு உலைகள் பற்றி விஞ்ஞானப்பூர்வமாக அறிந்த ஒரே அறிவு ஜீவி, நவீன இலக்கியப்படைப்பாளி சாரு தான். அணு உலை விவகாரத்தில் அவர் என்ன சொன்னாலும் அது சரியாகத் தான் இருக்கும்.

அரசையும், காவல் துறையையும், உதயகுமாரையும் விட மக்கள் மீதும், சமூகத்தின் மீதும் அக்கறை கொண்ட கொள்கைகளை நான் சாருவிடமே காண்கிறேன்.

தினம் தினம் மக்களின் குரலைத் தன் குரலாகப் பதிவு செய்யும், நம்மில் ஒருவராய் நம் அருகிலேயே இருக்கும் மாபெரும் இலக்கியவாதிக்கு விருது கொடுக்காமல் தொலைதூரத்தில் தென் எல்லையில் இருக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது எந்த வகையில் நியாயம்?

இதற்காக எத்தனை வழக்குகளை சாரு அவர்கள் சந்தித்து இருக்கிறார்?

எத்தனை நாட்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்?

கடந்த ஐந்நூறு நாட்களாக, அணு உலையை ஆதரித்து வீதிவீதியாகச் சென்று சாரு நிவேதிதா பிரச்சாரம் செய்ததையெல்லாம் நாம் மறந்தால் வருங்கால சந்ததி ஒருபோதும் நம்மை மன்னிக்காது!

இவ்வளவு நன்றியுணர்வு அற்றதா தமிழ் கூறும் நல்லுலகம்?
குட்டி ரேவதி