நம் குரல்

'நீங்கள் முன்னே செல்லுங்கள்!'TOMMERVIK - ன் MAN AND BIKE க்யூபிச ஓவியம்.


'நீங்கள் முன்னே செல்லுங்கள்!' என்ற வாசகத்தைச் சாலைகளெங்கும் நீங்கள் காணமுடியும். இது ஒரு சாலை பாதுகாப்பு வாசகம்.
நடைமுறையில், நோய், முதுமை எனப் பிற காரணங்களால் இறப்போரின் மொத்த எண்ணிக்கையை விட, விபத்தில் சாவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.நம் போக்குவரத்து முறையில், எந்தவிதமான திடமான ஒழுங்கும் இல்லை. அவரவரின் அவ்வப்பொழுதைய மனநிலைக்கு ஏற்றாற்போல, வண்டியின் வேகத்தையும், விதிகளையும் மாற்றிக்கொள்கிறோம்.

எங்கள் வீட்டைச் சுற்றிலும், இளைஞர்களின் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகளைக் காணும் பொழுதெல்லாம், அவர்கள் முந்திக்கொண்டு மோதி மடிந்த சாலை விபத்துகளைத் தான் நினைவுறுத்துகின்றன.


பெரும்பாலான நாடுகளில், சாலை விதிகள் மிகவும் கண்டிப்பானவை. நடுநிசியில், சாலையில் யாரும் அதிகமாகப் பயணிக்காத கணங்களில் கூட, எரியும் சிவப்பு, பச்சை, மஞ்சள் விளக்குகளுக்கு ஒரே ஒரு வாகனம் என்றாலும், காத்திருக்கும். எதிர்பாராமல், எவர் மீதும் மோதிவிடக்கூடாதே என்று, மற்றவரின் உயிருக்குப் பொறுப்பெடுக்கும்.
நம் நாடு இவ்விடயத்தில் கடுமையாக மாறவேண்டியிருக்கிறது. ஃபேஸ்புக்கில், விபத்தில் சிதைந்த உடல்களைப் புகைப்படங்களாகப் பார்க்கும் பொழுதெல்லாம், உயிரும் உடலும் நடங்குகிறது.

இந்த இடத்தில், 'நீங்கள் முன்னே செல்லுங்கள்!' என்ற மனோபாவம், மிகவும் கைகொடுக்கக் கூடியது. எல்லா வகையான எதிர்பாரா, கவனக்குறைவான விபத்துகளையும் தவிர்க்கக் கூடியது.
அது மட்டுமன்று: சாலையில் யாரென்றே அறியாத நாம் ஒருவருக்கு விட்டுக்கொடுக்கவும் அன்பை வெளிப்படுத்தவும் கிடைத்த வாய்ப்பு, அழகானது. சுயநலமும் பொதுநலமும் சமூகநலனும் கலந்த ஒரு சமூகப்பழக்கம் இது.

என்னைப் பொறுத்தவரை, சாலைப்பயணத்தில் மட்டுமன்று, வாழ்க்கைப்பயணத்திலும் கூட, 'நீங்கள் முன்னே செல்லுங்கள்!' என்ற வாசகம் மிகவும் உதவக்கூடியது, மகிழ்ச்சி அளிக்கக் கூடியது.

ஏனெனில், மற்றவர்கள் முன்னே செல்லும் வாய்ப்பை நீங்கள் அவர்களுக்குக் கொடுத்துவிடும்போது, பின் நீளும் முழுச்சாலையும் உங்கள் பயணத்திற்கானது.
மகிழ்ச்சியைப் பெறுவதிலும் கொடுப்பதிலும், நாம் முந்திக்கொள்வது நன்று. அதற்கு, "நீங்கள் முன்னே செல்லுங்கள்!' என்று உரையாடலைத் தொடங்கலாம்.

குட்டி ரேவதி

கருச்சிதைவு, ஏன்?


கடந்த சில மாதங்களாக, கருவுற்ற சில பெண் தோழியருக்கு எதிர்பாராமல் கருச்சிதைவு ஏற்பட்டு அவர்கள் துன்புறுவதைத் தொடர்ந்து கேள்விப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.
மூன்று மாதம் முதல் எட்டு மாதம் வரையிலும் கூட, இச்சிதைவு ஏற்படுகிறது.

இதற்கு முக்கியமான காரணம் என்று நான் கருதுவது: நாம் உண்ணும் இராசயன அரிசியும், அதிக மன அழுத்தங்களும் தான்.
இரசாயன அரிசியை உண்ணும்பொழுது, அது, நெல்லில் 'சாவி' என்று சொல்வார்களே. அது போல், உள்ளீடற்ற அரிசிக்கூடாக, நாக்கிற்குச் சுவையற்றதாக இருக்கிறது. 
நம் கோடைப்பருவங்களுக்கு ஒருவேளைக்கு மேல் வைத்திருக்கமுடியாது, வியர்த்து ஊசிப்போய்விடுகிறது.

இந்த அரிசியில், கொஞ்சமும் ஊட்டம் இல்லை. இதில் இருக்கும் அதிகப்படியான இரசாயனம், ஒரு தற்காலிகப் பசியைப் போக்கிய, உயிர்ச்சத்தை வழங்கியதான தோற்றத்தையே கொடுக்கிறது.

இத்தகைய அரிசி, இயல்பாகவே, கருப்பையுடன் சிசுவின் பிணைப்பை மிகவும் மெல்லியதாக, ஒடிசலாக ஆக்குகிறது. அது, சிறிய பளு தூக்கினாலும், அடிவயிற்றிற்கு மிகையான அழுத்தம் கொடுத்து, சிசுவின் பிணைப்பை மிகவும் எளிதாகத் துண்டித்துவிடுகிறது.

மனஅழுத்தம், அதிக வகையான உணர்ச்சிகளின் பரப்புகளுக்குப் பெண்கள் தங்களை ஒப்படைப்பதாலும், அளவுக்கதிகமான சவால்களை எதிர்கொள்வதாலும் உண்டாகிறது.
நம் அன்னையர் பல குடம் நீர் சுமக்கும், மூட்டைகளை சுமக்கும் வலு பெற்றிருந்ததற்கு அவர்கள் உண்ட 'ஊட்டமிக்க அரிசி தானியங்கள்' மிகவும் முக்கியமான காரணம்.
எட்டுமாதச் சிசுவை இழந்த ஒரு பெண்ணுக்கு, தான் ஒரு சிசுவை ஈன்ற உணர்வும் அதை இழந்த உணர்வும் தன்னை விட்டுப்போகாமல் இருப்பதாகவும், கடுமையான மனஉளைச்சலைக் கொடுப்பதாகவும் கூறுகிறாள்.

மனித உடல், மில்லியன் வருடங்களாகத் தொடரும் ஒரு நினைவின் மரபு. உடலுடன் இருந்ததை, உறுப்புகளை, உடலை, சிசுவை, சுவையை ஒரு பொழுதும் மறப்பதே இல்லை.
தயவுசெய்து, எல்லோரும் இயற்கையான அரிசிக்குத் திரும்புங்கள். உயர்விலை என்பதெல்லாம், நாம் அதிகப்படியான கொள்முதல் செய்யாததால் விளைவது.

நம் உடலே இப்படி என்றால், நம் குழந்தைகளுக்கோ மிகவும் பூஞ்சையான, உடல்நலமற்ற, நோய்நிறைந்த உடலையே நாம் 'அன்பளிப்பாக்குகிறோம்' என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

இயற்கை அரிசிக்குத் திரும்பிப்பாருங்கள். அதன் சுவையும், பயனும் சொல்லித் தீராதது. இந்த உணவிற்குப் பழகிவிட்டால், மீண்டும் அந்த 'பளிச்' வெள்ளை அரிசிக்குத் திரும்பவே மாட்டோம்.


குட்டி ரேவதி

கதை சொல்ல தலை வேண்டும்! - அம்பிகா

டில்லி பயணம். நண்பரும் கவிஞருமான விவேக் நாராயணன் அவர்கள் குழந்தை அம்பிகாவை இந்தமுறை டில்லி பயணத்தில் சந்தித்தேன்.

நான்குவயது அவளுக்கு. தினமும் தன் அம்மாவுடன் கவிதை வாசிப்பு நிகழ்விற்கு வந்துவிடுவாள். பார்க்கும் பொருளையெல்லாம் வைத்து, பார்ப்பவரிடம் எல்லாம், 'இந்தக் கரண்டியை வைத்து ஒரு கதை சொல்லுங்கள், அந்தப் பூவை வைத்து ஒரு கதை சொல்லுங்கள்!' என்பாள்.

என்னிடம் ஒவ்வொரு முறை, தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும்பொழுதும், 'இப்பொழுது நான் ஒரு முயல்!, இப்பொழுது நான் ஒரு பூனை!' என்பாள்.

பொறுக்கமாட்டாமல், நான் என்னை ஒரு டைனசோர் என்று அவளிடம் அறிமுகப்படுத்திக்கொண்டேன்.
'ஏன், அப்படி?' என்று கேட்டாள். ' ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்தது!' என்று சொன்னதும் என்ன யோசித்தாளோ, தன்னை ஒரு 'குட்டி டைனசோர்' என்று மாற்றிக்கொண்டாள்.
'அவளால் இப்பொழுது என்னவெல்லாம் செய்யமுடியும்?' என்று கேட்டேன். 'எவ்வளவு பெரிய தலையென்றாலும் தன்னால் விழுங்கிவிட முடியும். என் தலையையும் கடித்து விழுங்கிவிட முடியும்' என்றாள். நானும் அனுமதித்துவிட்டேன்.

தொடரும் நாட்களில், தினமும் நான் என் தலை எனக்கு மீண்டும் வேண்டும் என்று கேட்பதாயும், அவள் அதை அன்று காலை உணவாகக் கடித்துச் சாப்பிட்டுவிட்டதாகவும் மீதியை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டதாகவும் சொல்வாள்.

இரு நாட்களாக டில்லியில், கழுத்தில் மஃப்ளரைச் சுற்றிக்கொண்டு அலைகிறேன். கவிதை வாசிக்க, எனக்குத் தலைவேண்டும் என்று நான் கேட்டாலும், அவள் எப்படி என் தலையை அன்று காலையில் கடித்து ருசித்துச்சாப்பிட்டாள் என்பதை மிகவும் ரசனையுடன் விவரிப்பாள். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரியாமல் கூட, வீட்டில் தலையை மறைத்துவைத்திருப்பதாகச் சொல்வாள்.

நிகழ்வின் கடைசி நாளில், அவள் வழக்கம்போல இதையே பதிலாக்கிவிட்டு, 'சரி! அதெல்லாம் இருக்கட்டும். ஒரு கதை சொல்லுங்கள்!' என்றாள்.

'தலையில்லாமல் நான் எப்படி கதை சொல்வது?' என்று கேட்க, என்னை ஒருவிதமாகப் பார்த்தவள், 'சரி, இந்தாங்க! இருநூறு ஆயிரம் தலைகள். வைத்துக்கொள்ளுங்கள். இருநூறு ஆயிரம் கதைகள் சொல்லுங்கள்!' என்று சொன்னாள்.
நான் ஒரு கதை சொன்னேன். ஒரு பெரிய டைனசோர், பாலைவனத்தில் பெரிய பெரிய முட்டைகள் இட்டதையும், அவ்வளவு முட்டைகளும் மணலுக்குள் இறங்கி ஆழத்தில் மறைந்துவிட, முட்டையிலிருந்து வெளி வந்த குட்டிகள், மீண்டும் மணலூடே ஏறி வெளிவந்ததையும் கூறினேன்.
சொல்லி முடித்ததும், 'அப்படி வெளியே வந்த குட்டி டைனசோர், தான் தான்!' என்று கூறி, அந்தக் குட்டி டைனசோரின் சாதனைகளை எனக்கு விவரித்தவள் அப்படியே என் கைவிரல்களைப் பற்றிக்கொண்டு தூங்கிப்போனாள்.

என் விரல்களுடன் பின்னியிருந்த அவள் விரல்களை, அவள் தூக்கம் கலையாமல் மெல்ல விரித்து எடுத்து அவள் அம்மாவின் கைகளில் கொடுத்துவிட்டு, டில்லிக்கு விடை கொடுத்தேன்.


குட்டி ரேவதி
இடம்: Craft Museum, New Delhi

'பறவை மனிதனும்' மறக்கமுடியா அனுபவமும்!'Bird Man' படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்தாலும், அதையும் தாண்டி பரந்த அளவில் முக்கியத்துவம் பெறும் படமாக இருக்கிறது.

சமகால சினிமாவின், கலைவடிவத்தின் எல்லையின்மையை இதில் தொட்டிருக்கிறார்கள் என்று சொல்லவேண்டும்.

திரைப்படங்களில் பறவை மனிதராக நடித்த நடிகரே, எழுத்தாளர் ரேமண்ட் கார்வரின் ஒரு கதையை அரங்க நாடகமாக்கும் முயற்சி தான் கதை.
ஆனால், திரைக்கதை, அது நெய்யப்பட்டிருக்கும் விதத்தில், பல அடுக்குக் கதைகளைச் சொல்லிச் செல்கிறது.


இன்றைய சினிமாவின் நவீனத்துவம் என்பது, தேர்ந்தெடுக்கப்படும் கதை எந்த அளவிற்கும் புதியதாக இருக்கிறது என்பதிலும், அது எந்த வடிவத்தில் சொல்லப்படுகிறது என்பதிலும் தான் இருக்கிறது.
அந்த வகையில், தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கும் கதையும், கதையைச் சொல்லும் விதமும் ஒரு கலைஞனின் தனிப்பட்ட மனச்சிக்கல்களிலிருந்து, பரந்த அளவில் கலைவடிவம் குறித்த உரையாடல் வரை விரித்துச்சொல்லியிருக்கிறார்கள்.

படத்தின் முதன்மை என்பதில், இயக்குநன் இனோரிட்டோவின் கதையைப் போலவே, இம்மானுவேல் லூபென்ஸ்கியின் ஒளிப்பதிவும்.
முழுக்கதையையும் நீளமான ஒற்றைக்காட்சியில் சொல்லும் முயற்சியில் ஈடுபட்டு, அதில் புனைவின் அழகான சாத்தியப்பாடுகளை எல்லாம் திரையில் வெளிப்படுத்துகிறார்கள்.
சத்யம் திரையரங்கில், என் அருகில் இருந்து படத்தைப் பார்த்த இளைஞர்கள், கதை சொல்லப்படும் விதத்தில் இருக்கும் எதிர்பாராதத்தன்மையைக் கண்டு தொடர்ந்து வியந்து, அனுபவித்துக் கொண்டே இருந்தார்கள்.
லூபென்சி, சினிமா வழியாகக் கதை சொல்லும் அனுபவத்தையும் அதன் வழியாக அது கொடுக்கும் கலை அனுபவத்தையும் ஒரு சேரத்தந்திருக்கிறார். லூபென்சிகியின் இருபதுக்கும் மேற்பட்ட நேர்காணல்களைப்படித்தேன். அவர், அந்த நேர்காணல்களில் கதைக்கேற்ற ஒளிப்பதிவு முறையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது குறித்து மிகவும் விளக்கமாகவும் நுட்பமாகவும் பகிர்ந்துள்ளார். இவர் தான் கிராவிட்டி, சில்ட்ரன் ஆஃப் மென் மற்றும் ட்ரீ ஆஃப் லைப் படங்களின் ஒளிப்பதிவாளரும்.

தவிர, ரேமண்ட் கார்வரின் இலக்கியப்படைப்பு, பேர்ட் மேனாக நடித்த ஒரு திரைப்படம், ஒரு மேடை நாடகம் என வெவ்வேறு தளங்களில் ஒரு நட்சத்திரநடிகன் பயணிக்கும் விதத்தை ஒரே கதையில் சொல்லியிருக்கிறார்கள். அடுக்கடுக்கான கதைகள் இருப்பது, பார்வையாளர்களுக்கு ஒரு முழுமையான அனுபவத்தை வழங்கவல்லதாக இருக்கும்.
சிலருக்கு, கதை புரிவதற்கு சமயம் எடுத்ததாகச் சொன்னார்கள். ஆமாம், அறிவார்ந்த தளங்களில் இயங்கும் ஒரு திரைக்கதையே. 
மொழியை, சப்-டைட்டில் வழியாகப் புரிந்து கொண்டால், முழு நகைச்சுவையையும் அனுபவிக்கமுடியும்.

இந்தப்படம், திரைத்துறை மாணவர்களுக்கு திரைக்கல்விக்கான பயிற்சியைத் தரும் கவனக்குவிப்பையும் கூட வேண்டுகிறது.


படம், அதன் எல்லா அறிவார்ந்த தன்மைகளையும் கடந்து மனிதனின் எளிமைகளையும் அறியாமைகளையும் போற்றுவதும் அதன் சிறப்பு. இயக்குநர் இனோரிட்டோ, முந்தைய 'பேபல்' படத்திலிருந்து, அசாதாரணமான திரைச்சாதனையைச் செய்துள்ளார்.
இது இப்படம் குறித்த விமர்சனமோ, மதிப்புரையோ அன்று. சினிமா என்னும் கலைத்துறையின் வளர்ச்சியை மனிதன் தன் நிவாரணங்களுக்கும் பலத்திற்கும் எப்படிப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதில் திரைக்கலைஞர்களும் பார்வையாளர்களும் தொடர்ந்து இன்னும் அதிகமாக ஈடுபடவேண்டும் என்பதை முன்வைப்பதற்காக இதை எழுதுகிறேன்.சில நாட்களாகத் தொடர்ந்து, இரவுகள் நண்பர்களுடன் படம் பார்ப்பதிலேயே கழிகிறது.
சில (தமிழ்ப்)படங்களைப் பார்த்துவிட்டு நடு இரவில் வீடு திரும்புகையில், மனதில், வாழ்க்கை குறித்த நம்பிக்கையின்மையும் இனம்புரியா கோபங்களும் சூழ்ந்து சங்கடப்படுத்தும்.
ஆனால், 'பேர்ட்மேனை'ப் பார்த்துத் திரும்புகையில், மனதில் பெருத்த நம்பிக்கையும் ஊக்கங்களும் நிறைந்தன. ஒரு கலைப்படைப்பு தரும் ஊக்கம், அவரவர் வாழ்வு வரையும் விளிம்புகள் பொருத்ததும் கூட, என்றாலும் ஒரு படைப்பின் முதன்மையான வேலையும் அது தானே!

பேர்ட்மேனை, இன்னும் சில முறைகளேனும் திரையரங்கில் சென்று பார்க்கவேண்டும் என்று இருக்கிறேன்.
குட்டி ரேவதி

தமிழ்சினிமாவும் பெண் உதவி இயக்குநர்களும்


தமிழ்சினிமாவில் ஏன் பெண் உதவி இயக்குநர்கள் அதிகமில்லை என்ற கேள்வியை, பலர் என்னிடம் எழுப்புகிறார்கள்.
தமிழ் சினிமாவில் தான், பெண் உதவி இயக்குநர் என்றால், ஏதோ "நடிகையின் எடுபிடி" என்று நினைக்கிறார்கள்.


நடிகைகளும் அவர்கள் தொழில்களுக்கான சவால்களைச் சந்திப்பவர்கள் என்று புரிந்து கொண்டால், இத்தகைய பொத்தாம்பொதுவான விமர்சனம் எழாது. 'நடிகையின் எடுபிடி' என்பது சினிமாவைப் புரிந்துகொள்ளாத, ஒரு பிற்போக்குத்தனமான சிந்தனை.
நடைமுறை இது இல்லை என்பதை, ஒரு சினிமாவிலேனும் வேலை பார்த்து தான் புரிந்துகொள்ளமுடியும் போல.
பொதுவாகவே, சினிமாவிற்கு வெளியே இருந்து சினிமாவின் பார்வையாளராக இருந்து மட்டுமே புரிந்து கொள்ளும் மனோபாவமே இது.


நான் அறிந்த இயக்குநர் ஒருவர், தன்னுடன் வேலை செய்ய பெண் உதவி இயக்குநர்கள் தாம் வேண்டும் என்பார்.
'இயக்குநர்' வேலைக்கான துல்லியத்தையும், அதன் அபரிமிதமான வேலைகளின் தேவைகளையும் பெண் உதவி இயக்குநர் அளவுக்குப் புரிந்து கொண்டு வேலைசெய்ய பெண் உதவி இயக்குநர்களால் தான் முடியும் என்பார்.
மும்பையில் ஹிந்தி சினிமாவில் பணிபுரியும் பெண்உதவி இயக்குநர்கள் பலருடன் பணிபுரிந்திருக்கிறேன். அங்கு, இந்த நிலைமை இல்லை. அங்கு சினிமா என்பது மிகவும் தொழில்முறை வேலையாகப்பார்க்கப்படுகிறது. பெண் / ஆண் என்ற பேதம் இல்லை.

'உதவி இயக்குநர் வேலை', ஓர் அன்றாட வேலை. எண்ணங்களுக்கும் நடைமுறைக்கும் இடையே நெருக்கடிகளைக் கொடுக்கும் வேலை.
ஆனால், பெண் உதவி இயக்குநர்கள், நவீன தொழில்நுட்பத்தையும் தம் படைப்பாற்றலையும் கைக்கொண்டு இந்த வேலையை மிகவும் லாவகமாகச் செய்து முடிக்க முடிப்பதாக இன்னோர் இயக்குநர் தனிப்பட்ட உரையாடலில் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
நாளுக்கு நாள் பிரமாண்டமாக வளர்ந்து கொண்டிருக்கிறது, சினிமா. அதன் அதிநவீன தொழில்நுட்பத்தையும், மொழியையும், கலைவடிவத்தையும் ஒருங்கிணைந்து கையாள, 'தயாரிப்பு மனநிலையும்', 'தயார் மனநிலையும்' வேண்டும்.
படத்திற்கான முன் தயாரிப்பு, படப்பதிவு, படப்பதிவுக்குப் பின்பான தொகுப்பு வேலைகள் எனத் தொடர்ந்து அதி நவீனச்சவால்களைப் பெண்கள் எளிதாகக் கையாண்டாலும், பெண் உதவி இயக்குநர்களுக்குக் கிடைப்பதென்னவோ அவப்பெயர்.
தமிழ்சினிமா குறித்து, குடும்பங்களிலும் ஊடகங்களில்உம் பொதுச்சமூகத்திலும் நல்லெண்ணமே கிடையாது. சினிமா என்றாலே ஏதோ இழிவான தொழிலாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அண்டை மாநிலங்களில் இருந்தும் பிற மொழிகளில் இருந்தும் தமிழ்சினிமாவில் வேலை செய்யும் பெண்கள், நல்ல முறையில் வேலை செய்து தம்மை பலப்படுத்திக்கொள்வதை நாம் கருத்தில் எடுத்துக்கொள்வதில்லை.

நடிப்புத்தொழிலுக்கும், தொழில்நுட்பத்துறைக்கும், இயக்கத்திற்கும் நான் மேற்குறிப்பிடுபவை ஒரு சேரப் பொருந்தும்.
நடிப்பு, இயக்கம், தொழில்நுட்பம் என எந்த வகையிலும், சினிமாவிற்குள் பெண்களை வரவிடாத கருத்துகளை உதிர்த்தவண்ணமே, சினிமாவில் மாற்றம் வரவேண்டும் என்று விரும்புவது எந்த வகையில் நியாயம்.
சினிமாவை எல்லோரும் தொடர்ந்து திட்டித்தீர்ப்பதற்கு, அப்படித் திட்டுவதில் உள்ளார்ந்த குதூகலத்தை அனுபவிப்பதற்கு வேண்டுமானால் இது உதவலாம்.

தழிழ்சினிமாவில் முற்போக்கான, கலைவடிவ மாற்றத்தைக் கொண்டுவர இது ஒருபொழுதும் உதவாது.


குட்டி ரேவதி
*