நம் குரல்

பாலாற்றின் மீது நடந்தோம்

பாலாறு, ஒரு விதவையின் வெள்ளைப்புடவையைப் போல உலர்ந்து வறண்டிருந்தது. இந்த உவமானம் இன்றைய தேதிக்குப் பழமையானது. ஆனால் தொன்மையான ஆற்றைக்குறிக்க இந்த உவமையைப் பயன்படுத்துவதில் தவறில்லை. பாலாறு பாதுகாப்புக் கூட்டியக்கம், முக்கூடல் அருகே ஒரு பிரச்சார நடை பயணம் ஒன்றை மேற்கொள்வது என்று முடிவு செய்திருந்தது. முக்கூடலிலிருந்து வாலாஜாபாத் நோக்கி நடந்து செல்வது என ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. 8.8.09 அன்று மாலை ஏறத்தாழ இருநூறு பேர் நடக்கத் தொடங்கினோம். அப்பொழுதும் உச்சி வெயில் தான். தலையில் கழுத்தில் உடலில் வியர்வையாய்க் காய்ந்தது. கோஷங்கள் நிகழ்கால இயற்கை அரசியல், தமிழக அரசியல், பாலாற்று விஷயத்தில் இந்தியா மற்றும் அண்டை மாநிலங்களின் அரசியல் என எல்லாம் கலந்தன. உற்சாகமான வேகத்துடன் ஏழெட்டுக் காவல்காரர்கள் உடன் வர நடக்கத் தொடங்கினோம். சிறிது தொலைவு சென்றதும் பிரச்சாரத்தில் இருந்த ஒருவர் காவல்காரரிடம் சொல்லிப் பார்த்தார், ‘ஐயா, இந்த வெயிலில் இவ்வளவு தொலைவு நீங்களும் ஏன் சிரமப்பட்டு நடக்க வேண்டாம்’. ஆனால் அவர் இன்னும் வேடிக்கையாக, ‘எனக்கு சர்க்கரை வியாதி, ஐயா. நடைப்பயிற்சி வேணுமின்னு டாக்டர் சொல்லியிருக்காரு. அதனால இப்படி நடந்தாத் தான் உண்டு.’
முக்கூடல் அருகே மணல் கொள்ளையர்கள் இன்னும் ஆற்றை அதன் மற்ற பகுதிகளைப் போல தோண்டியிருக்கவில்லை. அங்கு 18 அடியிலேயே கழிமண் இருப்பதாலும் பெருமணலாய் இருப்பதாலும் அவர்கள் இன்னும் அந்த ’சமூக நலப் பணி’யைத் தொடங்கியிருக்கவில்லை. வழியெங்கும் ஆயிரம் வருடங்களாய் ஓடிக்கொண்டிருக்கும் ஓர் ஆற்றில் அதன் நீரோட்டத்துடன் ஓடி ஓடிக் களித்த கூழாங்கற்களையும் சேகரித்துக் கொண்டே நடந்தேன். அந்தக் கற்களில் கூட ஆற்றின் வருடம் எழுதப்பட்டிருந்த்தைப் போல பழமையாய் ஒரு பறவையின் முட்டையை நினைவுப்படுத்துவதாயும் இருந்தன. அந்த ஆற்றில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளும் எங்கள் பின்னால் வெகு தூரத்திற்கு நடந்து வந்தன. எதிரில் வானம் மாலையின் தோரணங்களைக் நிகழ்த்தத் தொடங்கியிருந்தது. ஒளித்தூண்கள் வடக்கு தெற்கென தூரிகையால் வரைந்ததைப் போல இருபுறமும் சரிந்து வீழ்ந்தன. மெல்ல மெல்ல மேகங்களும் கூடின. வாலாஜாபாத்தை சென்று சேர்ந்த போது தூறல் கனத்தத் துளிகளாயிருந்தது.இன்றைய நாளின் அதிகாலையில் எந்த ஊரைத் தொட்டாலும் கணவனும் மனைவியுமாக, அல்லது ஆணும் பெண்ணும் தனித்தனியாக மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் நடைப் பயிற்சியை மேற்கொள்வதைப் பார்க்கலாம். நடைப் பயிற்சி இதயத்திற்கு ஊக்கமும் மனதிற்கு உற்சாகமும் தரவல்லது. ஆனால் இம்மாதிரியான நடைப் பயணத்தின் கொடையை என்னென்பது? பரந்த வானத்தின் கீழே அகண்ட மணற்பரப்பின் மேலே நடந்து செல்வது. நூற்றுக்கணக்கான வேறுபட்ட வயதினர் ஒன்றாக இணைந்து இதில் ஈடுபடுவது. ஒரே நோக்கத்திற்காக ஒரே திசையை நோக்கி பயணிப்பதும் அந்நோக்கம் பற்றிய பாடல்களை பாடிக்கொண்டே செல்வதும், ஒருவித கூட்டுணர்வை எல்லோர் மனதிலும் கிளர்த்துகிறது. பறவைகள் இருபுறமும் வானத்தை அவ்வப்போது அளந்தன. ஆனால் ஆற்றில் நீந்திச் செல்வதற்குப் பதிலாக நடந்து செல்கிறோம். என்னவொரு கொடுமை!ஆறுகள் மனித மனத்திற்கான லயத்தைக் கூட்டுபவை. ஆறுகள் மட்டுமன்று. எல்லாவிதமான நீர்நிலைகளும் அவ்விதமான இசைவை மனதிற்கு ஊட்டக் கூட்டியவை. இம்மாதிரியான வறண்ட பாழ்வெளிகள் அவற்றின் குணாம்சங்களையே மனத்திலும் வாழ்க்கையிலும் விதைக்கின்றன. ஆகவே தாம் ஆற்றங்கரை ஒத்த நாகரிகங்கள் மனித பரிணாமத்தை வளர்த்தெடுப்பதாய் இருந்தன, இன்றும் இருக்கின்றன. ஆறுகளைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத மனித சமூகம் வயிற்றை அறுத்துப் பேறு பார்ப்பது தான். மனிதர்கள் நீர்நிலைகள் பற்றிய நினைவுகளில் தாம் தமது பால்யத்தை வளர்த்தெடுத்திருக்கின்றனர். . ‘ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்’. ஆறில்லாமல் போகும் போது அந்த ஆற்றைச் சார்ந்து வாழ்ந்த ஒட்டு மொத்த குமுகத்தின் வளமும் தூர்ந்து போகிறது. வாழ்வியலின் அழகியல் அழிந்து போகிறது. இயற்கையுடனான தனது பிணைப்பை அறுத்துக் கொள்கிறது. மனித மனமும் மற்ற உயிர்களின் இயக்கமும் தறிகெட்டுப் போகின்றன.


ஆற்றில் நடந்து செல்கையில் ஆங்காங்கே தவளைகள் சிறு குமிழிகளாய் கண்மிதக்க நீந்திக்கொண்டிருக்கும் குட்டைகள் தென்பட்டன. வேலிக்காத்தான் செடிகளும் எருக்குப் புதர்களும் கருவேல முள்மரங்களும் ஆற்றை ஆக்கிரமித்திருந்தன. மாடுகள் மேய்ந்த குளம்படிகள் பதிந்து ஆற்றின் பரப்பெங்கும் வரைபடங்களை ஏற்படுத்தியிருந்தன. எல்லாவற்றையும் மீறி ஒரு சூன்யம் அவ்விடமெங்கும் பரவி குரலற்றுக் கதறிக் கொண்டிருந்தது. ஆற்றின் நீர்ப்பெருக்கைக் கொண்டாடும் ஆடிப்பெருக்கை இந்த வறண்ட ஆற்றின் மத்தியில் கொண்டாடியிருந்தனர், கரையோரத்தில் வதியும் சில இருளர் பழங்குடியினர். வருடந்தோறும் ஆடிப்பெருக்கிற்கு காவிரியை வேடிக்கைப் பார்க்கச் செல்லும் நதியின் காதலி நான். காவிரி பார்க்கப் பார்க்கத் தீராத புத்துயிர்ப்பை அளிக்கும் அழகு கொண்டது. பாலாறு, அந்தக் காட்சி சித்திரத்திற்கு முற்றிலும் எதிராயிருந்தது. ஒரு தாயின் வயிற்றின் மீது நடந்து செல்வது போல இருந்தது.காஞ்சி அமுதனும் சமூகச் செயல்பாட்டு இயக்கத்தின் துரையும் ஏற்கெனவே இந்தத் தொலைவை நடந்து சென்று நடை பயணத்தில் ஈடுபடும் மற்றவர்களாலும் நடக்க இயலுமா என சோதித்துப் பார்த்திருந்தனர். ஆற்றின் மணல் அலை காலை உள்ளுக்குள் இழுத்துச் சிரமப்படுத்துகிறது. வழியில் சில மணல் மேடுகளை ஏறி இறங்க வேண்டியிருக்கிறது. என்றாலும் ஓர் இயக்கம் முளை விட்டிருப்பதன் அடையாளமாக இருந்தது. மண்ணை கொள்ளையடிக்கும் அரச இயந்திரம் பாலாற்றைக் காத்திட என்ன செய்து விடப்போகிறது? மக்கள் தாம் திரண்டெழ வேண்டும்.

குட்டி ரேவதி

ஒரு பெண்ணியவாதியாக இயங்குவதென்பது...
பெண்ணியம் எனும் இயக்கத்துறை ஒரு தீவைப் போலவே இருந்தது. பெண்ணுரிமைக்கான இயக்கங்கள் முளைவிட்ட தொடக்கத்தில் அதற்கான சமூகத் தேவையை உணராமல் அதை விமர்சித்துப் பேசவே ஆங்காங்கே குழுக்கள் எழும்பின. பெண்ணுரிமைக்காகப் போராடுவதை தனது முழுநேரப் பணியாக எடுத்துக் கொள்பவர்களும் அகதிகளைப் போலவே இருக்க நேர்ந்தது. எவரோடும் தொடர்புப் படுத்திக் கொள்ள முடியாமல், எவரோடும் பொருந்த முடியாமல் ஆனால் தாம் தமது பயணப் பாதையாக தேர்ந்தெடுத்துக் கொண்டதை அர்ப்பணிப்போடு எப்பொழுதும் போலவே தொடர நேர்ந்தது. உலகெங்கும் அங்கும் இங்குமாய் சிலர் ஓயாது இயங்கியதன் பேரிலேயே பெண்ணியம் என்பது ஓர் இயக்கமாகியது.ஆனால் எல்லா பெண்களுக்கும் பொதுவானதொரு சாலையை பெண்ணியப் பாதையாக கட்டமைக்க முடிவதில்லை. ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையும் சமூகப் பின்புலமும் வெவ்வேறான அதிகார அடுக்கில் எழுப்பப் பட்டிருப்பதே அதற்குக் காரணமாகும். பெண்ணியத்தின் முழுப் பரிமாணம் என்பதே கூட பெண்ணியச் சிந்தனையை வேறுவேறு களங்களில் அதாவது, கலை, இலக்கியம், அரசியல், வரலாறு மற்றும் பண்பாடுகளில் நின்று இயக்கும் போது தான் சாத்தியம் . பணியிடங்களில் பெண்ணுக்கு விடுதலையின் சூத்திரங்களாய் சொல்லப் படுபவை, ‘இல்லத்தரசி’களாய் இருப்பவர்களின் விடுதலைக்குப் பொருந்தாமலும், உதவாமலும் போகலாம் என்பது என் தொடர்ந்த பணியில் நான் கண்டறிந்தவை. மேலும் பெண்ணின் விடுதலைக்கு அவள் கல்வியோ, பொருளாதார பலமோ கூட போதவில்லை. அவள் தன் ஆளுமையை கண்டறிந்து அதன் வழி செல்லவேண்டியிருக்கிறது. பெண்கள் பன்முகங்கள் எடுக்க வேண்டிய உலகில் பெண்ணின் ஆற்றாமைக்கும் அறியாமைக்கும் எவரும் பொறுப்பேற்க வேண்டிய அவசியமுமில்லை. அத்தகைய வாழ்க்கைப் பயணம் ஒரு தனிமைப் பயணமாக இருக்கும் என்பதிலும் மாற்றுக் கருத்துமில்லை. சமூகத்தின் அடுக்குகளின் இடுக்குகளில் வேரூன்றியிருக்கும் அதிகார முளைகளைப் பற்றி அறியாமல் பெண்ணுக்குப் புறவயமான தீர்வுகளை மட்டுமே வழங்கிவிடுவது, அவளுக்கு மட்டுமே கிட்டும் தற்காலிகமான பலனே அன்றி அது அவளொட்டிய சமூகத்திற்கான விடுதலையாக இருக்காது. ஆனால் இப்பொழுது அவள் வாழும் நிலத்தினுடன் அவள் வரலாற்றையும் பண்பாட்டையும் இணைத்துப் பார்க்கையில் அவள் மீதான ஒடுக்கு முறையின் வடிவங்களை மிகத் துல்லியமாகவும் எளிதாகவும் புரிந்து கொள்ள முடிகிறது.பெண் இன்றைய காலத்தின் எல்லைகளை எந்த அளவுக்கு அனுபவிக்க அனுமதிக்கப் பட்டிருக்கிறாள் என்று கேள்வி எழுப்பும் அதே நேரத்தில் எவ்வாறெல்லாம் அவற்றைத் தொடர்வதற்கான பிரயத்தனங்களை அவளும் எடுக்கிறாள் என்பதும் முக்கியமான விஷயமாகிறது. அதற்கு ஆண்மைய எதிர்ப்பாளர்களாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஆணின் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் இருப்பையும் மட்டுமே ஊக்கப்படுத்தும் சமூக அலகுகளான திருமணம், மதம், குடும்பம், சாதி ஆகியவற்றையும் தொடர்ந்து எதிர்த்தலும் அவற்றின் இறுக்கத்தைத் தளர்த்தப் போராடுவதும் அவற்றை மறு கட்டமைப்பு செய்வதும் மிகமிக அவசியம். ஏனெனில் தன் சுய வாழ்க்கையும் கட்டுண்டு கிடக்கும் திருமணம், குடும்பம் இன்ன பிறவற்றிலிருந்து கொண்டே தான் அந்த சமூக அலகுகளை விமர்சிக்க வேண்டியிருக்கிறது. தொடக்கத்தில் ஆண்களைப் பட்டவர்த்தனமாக நேரடியாக எதிர்த்த பெண்ணியவாதிகளும் பின்பு ஆண்களோடு நிகர் நின்று போராடத் துணிந்தனர்.ஆண்கள், பெண்களை விடவும் உயர்ந்தவர்கள் என்று நிரூபிக்க முனையும் போதெல்லாம் இயற்கையை விடவும் உயர்ந்தவர்கள் என்றும் நிரூபிக்க முயல்கிறார்கள். ஆகவே பெண்களே சூழலியல் போராளிகளாகவும் ஆனார்கள். இன்று பெரும்பாலான சூழலிய இயக்கங்கள் பெண்களால் தொடங்கப்பட்டு இயக்கப்படுபவை. அந்தந்த சூழலுக்கு ஏற்ற இயக்கங்களைக் கட்டமைப்பவர்களாக உலகெங்கும் இருப்பதும் பெண்களே. இவர்கள் இதை தங்களின் சொந்த, அன்றாட வாழ்க்கையுடன் தங்களின் குடும்பம், தனிப்பட்ட தனது இலட்சியம், தனது அலுவலகப் பணி என எல்லா இடங்களிலும் தனது ஆளுமையை செதுக்கிக் கொள்வதற்கும் தனது உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்கும் செய்கிறார்கள். இத்தகைய பிராந்திய அளவிலான உரிமைப் போராட்டங்களும் சிறிய அளவிலான கிளர்ச்சிகளுமே மிக அடிப்படையான பெண்ணுரிமைகளைப் பெறுவதற்கான வழிகளை ஏற்படுத்தித் தந்துள்ளன.பெண்ணியவாதிகள் ஆண் வெறுப்பாளர்களாகப் பார்க்கப்பட்ட தொடக்கக் கால தொல்லைகளெல்லாம் உதிர்ந்து இன்று பெண்ணும் ஆணும் பொது நோக்கத்துடன் ஒரே தெருவில் நின்று போராடத் தலைப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமென்பது ஆணின் செழுமையான வாழ்க்கைக்கும் ஏற்றது என்ற புரிதல் ஏற்பட்டுள்ளது.

ஒரு பெண்ணியவாதியாக இயங்குவதென்பது,

‘தூக்கியெறியப்படாத ஒரு கேள்வி’*யுடன் தொடங்குகிறது. அதுமட்டுமன்றி,

சமூகத்தில் பலவிதமான பரிமாணங்களை தனக்கென நிலைநிறுத்த வேண்டியிருப்பது.

பொதுவெளியையும் அந்தரங்க வெளியையும் எப்பொழுதும் இணைத்தே அணுகுவது.

பெண் – ஆண் மனதில் இயங்கும் ஒடுக்குமுறைகளை, அடக்கு முறைகளைக் களையும் வண்ணம் சமூக அலகுகளை வடிவமைப்பது

சலிப்பூட்டும் நடுவாந்திரமான அழகியலுக்கு எதிரான அழகியலை உருவாக்கவேண்டியிருப்பது.

புவியியலுக்கு ஏற்ற பெண்ணுரிமைகளை சம்பாதிப்பதும் தன்னையொத்தோருக்குப் பெற்றுத் தருவதும்.

இடைவிடாமல் சுய சிந்தனையின் வழியில் அரசியலின் குறுக்கீடுகளற்று பயணிப்பது.

வரலாற்றை மறு வாசிப்பு செய்வது.

பண்பாடு என்பது மானுடத்தின் பண்புகளை மேன்மைப்படுத்துவதற்கே என்றறிந்து உழைப்பது.

தொடர்ந்து அறிவுத் துறையிலும் படைப்பாக்க வெளியிலும் பங்கெடுத்துக் கொண்டு தான் கண்டடைந்ததைப் பாரபட்சமற்று பகிர்ந்து கொள்வது.* ஈழக்கவிஞர் சிவரமணியின் கவிதை வரி.


குட்டி ரேவதி

சுடும் பாதங்கள்


புத்தனுக்கும் சுடும் பாதங்கள்

ஆலங்கிளைக்கூந்தலை அள்ளி முடிந்த குவேனி
சிம்மத்தை மோகித்து தேசம் மாறி அலைந்தாள்
அவள் விதைத்த மகவோ
அச்சிம்மத்தையே இரையாக்கி
சுக்கானிழந்த கப்பலாய் திசை களைத்தான்

பாதங்களின் திசையழித்து நோக்கழித்து
காடெரித்து மரம் தின்று இன்றும்
விழி மிதித்து குழந்தைகளையும் சவைத்து
மாங்கொட்டை சூப்பி எரிந்த மண்வெளியாய்
மிதக்கச்செய்கிறான் நிலப்பிண்டத்தை

உடல் பாளங்களாக வெடித்து
கண்ணீர் திரளும் எம்முடல் நிலத்தில்
நடந்தேகச்சொல்லுங்கள் அவனை
கதிர்காமத்துறையும் கடவுளையும்
மாற்றிக்கொண்டு

புத்தனுக்கும் சுடும் பாதங்கள்


குட்டி ரேவதி

வெயிலென உதிரும் கொன்றைப்பூக்கள்


நாம் சந்தித்து இரு வருடங்களிருக்கும். உனது முகம் கொஞ்சம் கொஞ்சமாய் நினைவிலிருந்து அதன் செழுமையை இழந்ததை நான் உணர்ந்து கொண்டுதானிருந்தேன். உனது காதையொட்டிய நரைமுடிகள் இன்னும் பழுத்திருக்கலாம். நடை அசைவுகள் மாறியிருக்கலாம். குறுகிய மெலிந்த உடல் எனது நினைவுகளில் காலாகாலங்களில் நான் உன்னைப்பற்றிக்கொண்டிருந்த நினைவுகளுக்கேற்றவாறு தன்மைகள் மாறிக்கொண்டிருந்தது. இன்றும் ஆனால் உன் நினைவின் வழியாக தரும் ஆதூரம் தேய்ந்து போகாமல் இருப்பது வியப்பில்லை. எல்லாம் தனிமனிதனாக தன்னை தினந்தோறும் தேற்றிக்கொள்வதற்கு இப்பிரபஞ்சம் அளிக்கும் பயிற்சியும் விழிப்பும் என நான் அறிவேன்.


காலம் வேகமாய் நகர்வது குறித்த எனது புரிதலுக்கு அடிப்படையாக இருப்பது நாம் தான். உன்னை சந்தித்து இருவருடங்களாகிவிட்டன. பல மாதங்கள் தொடர்ச்சியாக நாமே நம்மை மறந்தே போய்விடுகிறோம். வியப்புமில்லை. அதிர்ச்சியுமில்லை. வெயில் மழை புழுக்கம் வியர்வை வெறுப்பு சோர்வு தப்பித்தல் என நம்மை பருவங்கள் கடத்திக்கொண்டே செல்கின்றன. ஒருவரிடமிருந்து ஒருவரை தூரத்திற்கு அல்ல. மிக அருகினில். நெருக்கடியான தருணங்களில் இறுக்கிக்கொள்ளும் ஆசைகள் மெலெழுந்தவாறு நுரைத்து அப்படியே தணிந்து நீர்த்தும் போய்விடும்.


எவருக்கும் புரியும் படியாக சொல்வது கடினமாகத்தான் இருக்கும். உடலை இணைக்காத உறவில் எவருக்கும் நம்பிக்கை இல்லை. உடலை ஒரு முகமூடியாக எல்லோரும் வைத்துக்கொள்வது நகைப்பானது. ஆனால் உடல் தன்னை ஒரு கனவுக்குப்போல திறந்த வெளியாக மாற்றிக்கொள்கிறது. நாம் ஒருவரையொருவர் தொட்டது கூட இல்லை. உடலோடு பேச்சை இழைத்து இழைத்துப்பார்த்ததுமில்லை. ஒருவருக்கொருவர் பரிமாறவென்று வைத்திருக்கும் சொற்கள் பூக்களைப்போல இந்த உடலிலிருந்து உதிரும் வரை காத்திருப்போம். பிறகு பேசிக்கொள்வோம். நதியின் கரைகளைப்பற்றிக்கொண்டிருக்கும் பருத்த மரங்களின் வேர்களைப்போல தடித்து புடைத்துப்போயிருக்கிறது நமது நம்பிக்கை. நாம் இதற்கு மேல் பேசாமல் கூட போகலாம். ஏனெனில் இரவின் மீது கவியும் நட்சத்திரங்களை நோக்கி நான் உனக்காக எதையும் சேமித்து வைப்பதேயில்லை.


பழகும்வரை தாம் தேநீர்க் கோப்பைகள் குறித்த எச்சில் பட்டுவிடக்கூடாது எனும் தெளிவான வரையறைகள், உரையாடல்களுக்கிடையிலும் உயர்ந்து எழும்பிய வண்ணம். பின் அசப்பில் இரு கோப்பைகளும் தமது பருமனை இழந்து மற்றொன்றோடு கலந்து கை எந்த கோப்பையையும் தேடிச்சென்று தொண்டையை நனைத்துக்கொள்ளும் படியாக கரைந்து விடும். அப்படித்தான் இன்று தோழியின் கோப்பைத் தேநீரை எடுத்துப்பருகினேன்.


நினைவைத் துழாவிப்பார்த்தால் உன்னைப்பற்றிய எல்லாமே அரைபட்டு அரைபட்டு மாவாகிப் பறந்து போயின. நீ எங்கேனும் உயிரொன்றுடன் இலங்குகிறாயா என்பதும் சந்தேகம் தான். சிறுமைகளை நினைவில் ஏந்திக்கொள்ளும் பழக்கத்தைத் தவிர்க்க ஒருவரையொருவர் தவிர்க்கத்தொடங்கி ஒரு பெரிய இடைவெளி உறவை விலக்கிவைத்தது. இதுவரை உறங்கி விழிக்கக் கண்ட மேற்கூரைகள் எல்லாம் காலத்தை இறுகிப்போகச் செய்த உணர்வுகளுடன் உயரம் எம்பியவை. அப்பொழுதெல்லாம் மேற்கூரையைப்போல வண்ண வண்ண காலைகளாக விடிந்து பரவசப்படுத்திப்பார்க்கிறது ஆழமாய் வேரோடி அடர்ந்திருக்கும் உனது பார்வை. நம் பார்வைகள் இரண்டும் ஒன்றோடொன்று விரிந்து தழுவி கிளைபரப்பி சூழலைக்கணக்கில் கொண்டு பிரிந்து வளைவுகளுடன் ஓர் அடர்ந்த காடாகியது.


சரியாகச்சொன்னால் மூன்றுமுறை கூட நாம் தொடர்ந்து சந்தித்திருப்போம் என்று கூறமுடியாது. சந்திப்புகளின் எல்லைகளை தீர்மானிக்கும் உரிமையும் அதிகாரமும் நம்மை அண்டி இருப்பவருக்குத்தான் அதிகமாய் இருக்கிறது. முழுநாளும் காலை முதல் மாலை வரை எத்தனை நாட்கள் விரயமாய் கழிந்திருக்கின்றன. சூரியன் உதயமாகி ஏறுவதைப் பார்த்திருக்கமாட்டோம். வெளியே சென்று சாலைகளின் நிகழ்வுகளைக் கடக்காமல் வீட்டிலே சோம்பலாய் மெத்தையில் புரண்டு புரண்டு நினைவுகள் கூரைகளை இடித்து இடித்துக் களைத்துப் போகும்வரை தொடர்ந்து நெஞ்சம் முனகிக் கொண்டேயிருந்திருக்கும். காகமோ குருவியோ ஒற்றையாய் வந்து ஜன்னல் கம்பியை சில முறைகள் அலகால் கொத்திப் பார்த்து விழி விரைக்க உட்கார்ந்து போயிருக்கும். இரவும் தீவிரமாய்ச் சுழலும் மின்விசிறியின் கீழே வியர்வை உடையை ஈரப்படுத்தப் படுத்துக் கிடந்திருப்போம்.


நெஞ்சை அடைத்துக்கொண்டிருக்கும் குரல்கள் சொற்களற்றவை. அர்த்தங்களுமற்றவை. விரைத்துப்போன இமைகள் கருவேல முட்கள் என்பதெல்லாம் பழைய உவமானங்கள். நினைவுகள் தகரப்பலகையைபோல நெஞ்சை ஆக்கி இரும்பு ஆணியால் கீறிக்கீறிப் பார்ப்பவை. சரி போகட்டும்.

இன்று நீ அழைத்துவிட்டாய். உனது பயணங்கள் எங்கிருந்து எங்கு என வர்ணனை தொனிக்க விவரித்தாய். நான் கேட்டுக்கொண்டிருந்தேன், எனது பயணங்களின் மென்சிறகுகள் துளிர் விட்ட வண்ணம். உச்சி வெயிலில் கதவடைத்திருந்த, நூற்றாண்டுகள் கடந்த கோயிலின் வாசலில் உறங்கிக்கிடந்த கதையும் சொன்னாய். இருவர் தலைமீதும் கொன்றைப் பூக்கள் தூறலாய்க் கொட்டும் நான் கண்ட கனவை மீண்டும் நீ அழைக்கும் போது நான் சொல்ல மறந்து போகலாம்.


குட்டி ரேவதி

திரைக்கதையும் கதைசொல்லலும்
பூமியின் மீது பல்லாயிரம் வருடங்களாகக் கதை சொல்லுதல் என்பது ஒரு கலையாக இருந்தாலும் வாழ்க்கையின் நவீனத்துக்கு ஏற்றாற்போன்றும் அப்பொழுது பீடித்திருக்கும் அரசியலுக்கு ஏற்பவும் சொல்லப்படும் ஊடகத்திற்கு ஏற்பவும் கதை சொல்லப்படும் முறை மாறிக் கொண்டே இருக்கிறது. இலக்கியத்தின் உச்சபட்ச தகுதியான கதை சொல்லும் திறன் என்பது குகை ஓவியம் போன்ற கலை வடிவங்களை எப்பொழுதோ பற்றிக் கொண்டன என்றாலும், என்னை சுவாரசியப் படுத்துவதென்பது திரைப்படத்தில் ஒரு கதை, சொல்லப்படும் முறையாலும் நுட்பத்தாலும் பெரிய அளவில் வேறுபடுவதால் தான் இன்றைய உலகையே திரைப்படம் என்னும் காட்சி ஊடகம் வெகுஜனத்தை ஆட்டுவிக்கிறது. காலந்தோறும் வளர்ச்சியுறும் நவீன தொழில்நுட்பத்தின் சாத்தியங்களை தன்னுள் வாங்கிக் கொண்டு திரைப்படம் என்பது கதை சொல்லலை இன்னும் இன்னும் சுவாரசியப்படுத்துகிறது. அத்துடன் சொல்லப்படுவது ஒரே கதையென்றாலும் வேறு வேறு நுட்பமான அதன் வெளிகளையும் காட்சிப்படுத்துகிறது. அல்லது மிகுதியான கற்பனை வெளிகளுக்குப் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது.


மேற்சொன்ன அத்துணை விஷயங்களையும் கீஸ்லோவ்ஸ்கியின் மூன்று நிறங்கள் -சிவப்பு என்ற திரைப்படத்தைப் பார்க்கும் போது நுகரலாம். அதை எப்படியும் பத்து தடவைக்கு மேலாக ஒரு பாடத்தைப் படிப்பது போலவே நுணுக்கமாய் கவனித்திருக்கிறேன். கதையில் மூன்று வித்தியாசமான கதைப்பின்னல்கள் ஒன்றின் மீது ஒன்றாய் படரும்படி, ஒன்றோடொன்று பொருந்தும் படி, ஒன்றுக்குள் மற்றொன்று அடங்கி விடும்படியான திரைக்கதை. படத்தின் முழுக்கதையையும் இந்தப் பத்திக்குள் சொல்வது மிகக் கடினம். ஒரு முறை பார்த்துவிட்டால் பார்த்தவர்கள் அனைவரும் ஒரு தளத்திலிருந்து கதைப் பின்னல்களை விவரித்துப் பேசுவது என்பது எளிதாக இருக்கும். அதனினும், மனித சிந்தனைக்கு கதைசொல்லல் முறையை தெளிவாக்கும் பயிற்சியாகவும் இருக்கும். படத்தில் இடம்பெறும் மூன்று முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்று நேரடியாகப் படத்தில் இடம்பெறுவதில்லை. தொலைபேசி வழியாகக் கேட்கப்படும் குரலாகவே பதிவாகிறது. என்றாலும் மூன்று கதாபாத்திரங்களும் ஒன்றின் சாயலை மற்றொன்று ஏற்கும் படியாக சொல்லப்பட்டிருப்பது திரைக்கதை வடிவத்திற்கேயான சிறப்பியல்பு எனலாம். எந்தக் காட்சியில் அந்தக் கதாபாத்திரங்கள் மற்ற கதாபாத்திரத்தின் சாயலை ஏற்கின்றது, அல்லது இழக்கின்றது என்பதை படத்தைத் துல்லியமாகப் பார்ப்பவர் கண்டுபிடித்துவிட முடியும்.


அதே மாதிரி ஒரே சமயத்தில் படத்தின் முதிய கதாபாத்திரமும், இடம் பெறும் இளம் கதாபாத்திரமும் ஒரே கதாபாத்திரத்தின் முதிய, இளம் கதாபாத்திரங்களாக எண்ணத் தோன்றும் படியான திரைக்கதையாகவும் இருக்கிறது. ஒரு நேர்க்கோட்டுக் கதை மரபிலிருந்து திடச் சிக்கலான கதை சொல்லலையும் அதன் வழி அரசியலையும் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் கீஸ்லோவ்ஸ்கி. அத்திரைப் படத்தில் கதை மேற்கொள்ளும் மனித உளவியல், உறவுகள், அன்பு பற்றிய அணுகுமுறைகளைப் பற்றி திரைக்கதைக்கு நிகரான அளவுக்கு செறிவாக விவாதிப்பதற்கும் விஷயங்கள் இருப்பினும் என்னை மிகக் கவர்ந்தது அத்திரைப்படத்தில் ஆளப்பட்டுள்ள கதை சொல்லல் உத்தி தான். இம்மாதிரியான கதை சொல்லல் முறையால் மனவெளி விரிவடைவதோடு மனிதனின் ஆழ்மனச்சிக்கலை ஒத்த பின்னலான அமைப்பையே கொண்ட இக்கதை, அம்மனச்சிக்கலை அவிழ்க்கவும் செய்கின்றது.


நேர்க்கோட்டுக் கதையிலிருந்து கதையின் கட்டமைப்பை மாற்றியமைக்க உள்ளார்ந்த பயிற்சியும் வாழ்வியலை அயராது விசாரிக்கும் பார்வையும் அவசியப்படுகிறது. தமிழ்த் திரைப்படங்களின் குறைபாடுகள் என்பது எனக்கு இவையாகவே தோன்றுகின்றன. கதையை அணுகும் முறைகளால் பல சமயங்களில் வெற்றி கொள்ளும் திரைப்படங்களே கூட சமூக்கத்தை அரைகுறையாக உள்வாங்கிக் கொண்ட பார்வையால் பார்வையாளர்களின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. தமிழ் மொழியில் கதை சொல்லும் மரபு, இத்தகைய தட்டையானதாய் இருந்ததில்லை. சிலப்பதிகாரம் தனது காவியத் தன்மையில் இன்றும் வெற்றி கொள்வதற்கு காரணம் அதன் சித்திரக் கட்டமைப்பே. மேலும் பூடகமாகச் சொல்லல், ஒன்றைச் சொல்லி தொடர்புடையதைச் சொல்லாதிருத்தல், பார்வையாளரின் அனுமானங்களுக்கும் கற்பனைகளுக்கும் பெரும்பாலான உரையாடல்களை விட்டு விடுதல், அவர்களின் கற்பனை வெளியை கதை நகருந்தோறும் வளமாக்கிக் கொண்டே கதையை நகர்த்தல், வார்த்தைகளைக் குறைத்த பாணிகளையும் சைகைகளையும் குறிப்புகளையும் கொண்டிருத்தல் போன்ற நுட்பங்களைக் கொண்டு இயங்கும் கதை மரபு நமது.


இன்றும் நாட்டுப்புறக் கதை சொல்லிகள் இந்த நுட்பங்களை இழக்காமல் இருக்கிறார்கள். குறிப்பாக அவர்கள் கதையின் மையக் கதாபாத்திரங்கள் ஒரே சமயத்தில் பல கதாபாத்திரங்களாக மாறுவது என்பது கதை கேட்பவனை நுட்பமான உளவியல் வெளிக்குள் அழைத்துச் செல்வதற்கான உத்தியே. மனித உடலின் இயற்பியல் எல்லையை இயன்ற வரை விரிப்பதும் மானுடத்தின் அசாத்திய சாத்தியங்களைப் பற்றிய அக்கறையோடு இயங்குவதும் நாட்டுப்புறக் கதைகளின் சிறப்பியல்புகள். இக்கதைகள் உருவாக்கித் தரும் வெளியிலேயே அம்மனிதர்கள் தொடர்ந்து அன்றாடம் இயங்குவதும், வாழ்வதும்கூட உண்டு, கதையிலிருந்து வெளியே வர விருப்பமின்றி!குட்டி ரேவதி

ரகசியம்: தொண்டையில் சிக்கிய முள்

அன்பார்ந்த தோழிகளே, வாழும் கலை பற்றி நிறைய மனிதர்கள் வகுப்பெடுக்கும் காலக்கட்டதில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆண்களோடு பெண்களும் சரிசமமாய் முட்டி மோதி வாழும் வாழ்க்கையில் நாமும் பங்கு கொண்டவர்களாய் மாறிவிட்டோம். நாமே தீர்மானிக்கும் முன்பு பந்தய மைதானத்தின் கோடிட்ட பாதைகளில் நமது கால்கள் தலை தட்ட ஓட வேண்டியிருப்பதை நாம் தீர்மானிக்க வில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் ஓடத்தொடங்கிய பின்பு நாம் ஓட்டத்தை நிறுத்த முடியாது போலிருக்கிறது. பின்னே ஓடி வந்து கொண்டிருப்பவர் நம் மீது எகிறி விழுந்து நாமும் விழுந்து பல்லுடைக்க இயலாது என்பதால் மட்டுமன்று. வாழ்க்கை நம்மை ஒருபொழுதும் பார்வையாளர்களாய் மட்டுமே வைத்திருப்பதில்லை. பக்கத்து வீட்டுப் பெண்ணுடனோ, தூரத்தில் தன் ஆற்றாமையால் செயலாற்றிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணுடனோ நமது பந்தயம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.எனது தோழி ஒருத்தியை அவள் கணவர் அடிப்பதாக புண்பட்ட மனதுடன் என்னிடம் தொலைபேசியில் பகிர்ந்து கொண்டாள். அவளை சிறு பருவத்திலிருந்தே நான் அறிவேன். என் கண்களுக்கு போராளி என்று நானே கற்பிதம் செய்து கொண்ட எல்லா குணாம்சங்களும் வீர தீரங்களும் கொண்டவள். என்று, எப்படி, இப்படியானாள் என்று எனது மூளையைக் கசக்கித் தேய்த்தேன். வாழ்க்கை அவளையும் சோதித்துப் பார்க்கிறது என்ற மூட நம்பிக்கை என் பிடரியில் இருந்து கதறிக் கொண்டே இருக்கிறது. அவள் தன் காதலனுக்குத் தன்னை முழுதுமாய் ஒப்படைத்து விட்டாள்.அதாவது தன்னைப் பற்றிய அத்துணை ரகசியங்களையும். தோழியரே, மனதின் மூலையில் பசுமையாய் அடர்ந்து, நினைக்குந்தோறும் எல்லையிலா களிப்பை ஊறச்செய்து கொண்டிருப்பதே ரகசியம். அவள் தன் பழைய உறவுகளைப் பற்றி, தனது அதீதமான பால்ய நம்பிக்கைகளைப் பற்றி கணவனிடம் பகிர்ந்து கொண்டேயிருந்திருக்கிறாள். ஆண்களின் ரகசியங்கள் அதிகார விழைவுக்கானவை. அவை ஒரு பொழுதும் பெருஞ்சபையில் நுகர்வுப் பொருள் இல்லை. ஏனெனில் அதன் வழியாகத் தானே அவர்கள் தம் ஆளுமையைக் கட்டமைக்கின்றனர். ஆனால் பெண்ணின் இரகசியங்கள் அரசியலாகுபவை. வியாபாரச் சந்தையில் அவற்றுக்கு விலை அதிகம்.நமது அந்தரங்க உறவுகளை எவரிடமாவது பகிரப் போய் அதன் விளைவுகள் நாம் எதிர்பாராத திசையிலிருந்து வரும் போது கூனிக்குறுகிப் போவீர்கள். காரணம் அந்த உறவிற்கு நீங்கள் அளித்த வந்த மதிப்புகள் கரைந்து போய் அழுகிய முடை நாற்றத்துடன் அவை வெளிவரும். காலங்களால் அடித்துச் செல்லப் படவே உறவுகள் என்பதை அவை உணர்த்தும். மரணமும் முறிந்து போகும் உறவுகளும் முழுமையான நம்பிக்கையுடன் எந்த நபரையும் அணுகுவதற்கு மனத்தடையாக இருக்கின்றன.உறவைக் கட்டியெழுப்ப வித்தியாசமான அரசியல்கள் உண்டு, நமது சமூகத்தில். கணவனிடம் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் வித்தியாசமானவை என்பதை என் தோழி உணர்ந்திருக்கவில்லை போலும். காதல் கணவருடன் கருத்தொருமிக்கும் வழி தன் பழைய காதலையும் பகிர்ந்து கொள்வது என்று புரிந்துகொண்டாள் போலும். ஒரு தோழி இவ்வாறு தனது காதலனைப் பற்றி இன்னொரு தோழியிடம் பகிர்ந்து கொண்டதோடு அவரையும் அறிமுகப்படுத்தி வைத்தாள். அவர்கள் உறவு திடமாவதைச் சகியாத இவள் சிக்கலான மனப் போராட்டத்திற்கு ஆட்பட்டாள். தோழியிடம் உறவைத் தொடர்ந்தாள். காதலனைத் துண்டித்தாள். இன்றும் ரகசியங்கள் மூவர் வழியிலும் பேணப்படுகின்றன. மூவருக்கும் காயங்கள் தொடர்கின்றன.
சமூகப் போக்குகளுக்கு ஏற்றவாறு ரகசியங்கள் உருவாவதில்லை என்று சொல்ல வருகின்றேன். அவை எதிர்த் திசையிலிருந்து கிளம்புகின்றன. அந்த ரகசியங்களை எவரும் மதிப்பதில்லை. உங்கள் மனோ வெளியில் ரகசியங்களாயிருக்கும் வரையிலுமே அவை பொன் முட்டைகள். அதன் மென் சூடான வயிற்றை ஒரு போதும் பிறரிடம் பகிர வேண்டிய சொற்களால் கிழிக்காதீர்கள். அவை பருவத்திற்கு ஒப்ப கருத்தரிக்கட்டுமே.குட்டி ரேவதி