நம் குரல்

மாற்று சினிமா

(சினிமாவும் சினிமா என்பதும்)

மாற்று சினிமா என்றால் குத்துப்பாட்டு, நடனம் இல்லாத படம் என்ற இலக்கணம் வைத்திருக்கிறோம். அல்லது, படம் மெதுவாக நகரவேண்டும். அல்லது, புகழ்பெற்ற நடிகர், நடிகைகள் யாரும் மையப்பாத்திரங்களாக இருக்கக்கூடாது என்ற இது போன்ற தாறுமாறான இலக்கணங்களைக் கட்டமைத்துக்கொண்டு படத்தைப் பற்றிவிமர்சிக்கிறோம்.

சமீபத்தில், ஓர் எழுத்தாளர், ஜான் ஆபிரஹாமின், 'அக்ரஹாரத்தில் கழுதை' படத்தைப் பார்த்துவிட்டு 'இதையெல்லாம் படம் என்று சொல்கிறார்கள்?' என்று வேதனைப்பட்டார். உண்மையில், இது 'புரியும் கவிதை எழுதுங்கள்! படித்துப்பாராட்டுகிறோம்!' என்று கூறும் மனிதவகை தான் என்று நினைக்கிறேன். அல்லது தன் அறியாமையை மறைக்க முயலும் மனித இனம்.

நம் தட்டுக்கு எளிதாக, சூடாக வந்துவிடும் ஃபாஸ் புட் வகை உணவுகளை மட்டுமே உணவு என்று ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலிருந்து வருவது. 'அக்ரஹாரத்தில் கழுதை' படத்தின் கதையும், படிமங்களும் இன்றும் இந்தியாவின் எல்லா விதமான சமூகமனநிலையையும் உள்வாங்கியவை. அத்தகைய ஒரு கதையையோ, கதாபாத்திரங்களையோ இயக்கும் துணிச்சல், நான் அறிந்து நாம் எல்லோரும் புகழும், சத்யஜித் ரே, ரித்விக் கட்டக் மற்றும் அடூருக்குக் கூட இருந்தது கிடையாது.

நான் அறிந்து, வெள்ளித்திரையில், முதன் முறையாக இந்திய சாதிமுறையை அங்கதம் செய்த படம், அந்தப்படம் என்று சொல்லவேண்டும். அதுவும், ஒரு பார்ப்பனரைக்கூட மனிதராக அணுகாத சாதிமுறை கொண்டது, இந்துமதம் எனும் அளவிற்கு இந்து மதத்தைத் தோலுரித்து இருப்பார். பார்ப்பதற்கு சரியான ஒரு 'பிரிண்ட்' இருப்பின் இந்த விடயத்தை இன்னும் நேரடியாக நாம் உணரக்கூடும் என்று நினைக்கிறேன்.

இப்படி ஒவ்வொரு படத்திற்கும், 'கோனார் நோட்ஸ்' போட்டு அதன் பின்னணியை விரிவாகச் சொன்னால் ஒருவேளை, நம் நண்பர்கள் படத்தை வியப்பார்கள் என்று நினைக்கிறேன். அந்த அளவிற்கு சோம்பேறித்தனத்தின் மீதும் வாழ்வின் கொண்டாட்டங்கள் மீதும் நமக்கு அதிகப்படியான நம்பிக்கையும் அது தான் சரி என்ற மனோபாவமும் உருவாகிவிட்டது.

இன்று இந்தியாவின் மொத்தத்திரைத்துறையும், தமிழ் சினிமாவில் அடுத்து என்ன நிகழப்போகிறது என்று ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அதிலும் வேற்று மொழி மாநிலங்களில் இருந்து கூட தமிழில் திரைப்படம் எடுக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

உண்மையில், ஒரு பக்க, தமிழ்சினிமா, பல கோடி வியாபாரநிறுவனமாய்  இருந்தாலும், அதற்கு நேர் எதிர் எளிமையான படங்களும் உருவாகி வருகின்றன. நிறைய இளைஞர்கள், 'தீவிர திரைக்கதை 'வடிவங்களையும் கையில் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். வணிக ஊடகமாக இருக்கும் சினிமாவை, தமக்கு ஏற்றவகையில், ஒரு கலை ஊடகமாகவும் மாற்றிய முயற்சிகள் சமீபத்திய படங்களில் பார்க்கமுடிகிறது.

என்றாலும், தற்பொழுதைய அரசியல், சமூகத்தெளிவு ஆற்ற படங்கள் முழுமையும் கலைப்படங்கள் ஆகாது என்பது என் நம்பிக்கை. அதற்காக, அரசியல் படங்கள் தான் எடுக்கவேண்டும் என்று கூறவில்லை.

ஒரு திரை இயக்குநனின் அரசியல் தெளிவும், சமூக அறிவும் அவன் சொல்லும் கதையின் பக்குவத்தில் கண்டிப்பாய் வெளிப்பட்டுவிடும். இல்லையென்றால், படம், திரையரங்கிற்கு வந்த வேகத்தில் போய்விடும். படங்கள் நூறு நாட்கள் ஓடியது போய், ஒரு வாரம் ஓடியதற்கே விழா எடுக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.

'மாற்று'சினிமா என்ற அடையாளத்துடன் உருவான பல படங்கள், தோல்வியடைந்திருக்கின்றன, மக்களைக் கவராமல் போயிருக்கின்றன. முதல் காரணம், அவை முழுமையும் சினிமாவாக இல்லாமல், டாக்குமெண்டரித் தன்மையுடனோ அல்லது கேமராவை வைத்து கதை சொல்லும் அனுபவத்தைத்தராமலோ இருப்பது தான் காரணம்.

பொதுமக்களின் நவீன மனநிலையை, அதன் சிக்கலை, ஊடாகச் சொல்ல விரும்பும் கதைகள், 'மாற்று' பாதையைத் தேர்ந்தெடுக்கின்றன என்று சொல்லலாம்.

இன்றைய சூழ்நிலையில், 'மாற்று' சினிமா என்பது வலிமையான ஒரு விடயம். பெருத்த மரியாதைக்குரியவிடயமும் கூட. சினிமா எனும் கலையை, அறிவுப்பூர்வமாகச் செயல்படுத்தத்தெரியவேண்டும். 

பேசுவதிலோ எழுதுவதிலோ இல்லை. கதையை இயக்குவதில் இருக்கிறது.


குட்டி ரேவதி

கதை தான் எல்லாமும்!ஒரு சினிமாவை எவரும் பார்த்து எப்படியும் விமர்சிக்கலாம் என்ற காலகட்டத்திற்கு வந்துவிட்டோம். சினிமா அத்தகைய சனநாயக ஊடக வடிவமாகிவிட்டது.
பிராந்திய அளவில், சினிமாவின் சுயாட்சியும் நவீனமும் தான், அதை எல்லோரையும் வசீகரிக்கும் கலை வடிவமாக்கி வைத்திருக்கிறது.

ஒரு படத்தின் கதையில் தான் எல்லாம் இருக்கிறது.

சினிமாவைப்பொறுத்தவரை, என்ன தான் தொழில் நுட்பம் வளர்ந்தாலும், வியாபாரத்தளம் விரிந்தாலும் சொல்லப்படும் கதையின் தரம் அல்லது கதையின் வழியாக, மனித விழுமியம் எந்த அளவுக்கு சவாலுக்கு உள்ளாக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து தான் சினிமா என்னும் ஊடகம் வளர்ந்திருப்பதாகச்சொல்லப்படுகிறது.

காலந்தோறும் ஒரே கதை தான் சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரே கதை வெவ்வேறு முறையில் அல்லது வெவ்வேறு இடைவெளியில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஒரு கதை அல்லது ஒரு கதையின் துணுக்கு அல்லது கதை நோக்கிய ஒரு தருணம் அல்லது ஒரு கதையைச் சொல்லப்போவதற்கான முனைப்பு கூட போதும், ஒரு சினிமாவின் கதைக்களத்தை உருவாக்குவதற்கு!
முழு நீள, தொடக்கம், நடு, முடிவு என்ற கதைக்கயிறு தேவையில்லை.

பல்வேறு அரசியல், சமூகச்சிக்கல்களுக்கு இடையிலும், மனித விழுமியங்களை நோக்கி, ஒரு கதை எவ்வளவுக்கு தலைவணங்கியிருக்கிறதோ, அந்த அளவிற்கு அதன் 'கலை தரம்' உயர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. அத்தகைய இயக்குநர்கள், தம் சிந்தனை நோக்கி, மனித விடுதலை நோக்கி மக்கள் கூட்டத்தை இணங்கச் செய்திருக்கிறார்கள். உ.ம். குரோசாவா, தாஸ்தாயேவ்ஸ்கி, பராஜனோவ், அப்பாஸ் கியோராஸ்டமி...

ஆனால், தமிழ் சினிமாவில் மாற்று சினிமா என்று சொல்வது எல்லாம் இதுவரை ஒரு மிகையான கட்டுமானமாகத்தான் இருந்திருக்கிறது. அப்படி 'மாற்று சினிமா' என்று சொல்பவர்கள் எல்லாம் தம் தலையை மோதிக்கொண்டது வெகுசன சினிமா அல்லது வியாபார சினிமாவுடன் தான். உண்மையில், 'மாற்று சினிமா' அல்லது 'மக்கள் சினிமா' அல்லது 'கலை சினிமா' என்று கவலைப்படுபவர்கள், வியாபாரசினிமாவைப்பொருட்படுத்தவேண்டியதில்லை. தன் பாட்டுக்குத் தன் சினிமாவை உருவாக்கவும் பேசவும் வேண்டியது தான். இது குறித்து இன்னொரு சமயம் விரிவாக எழுதலாம்.

தமிழ்சினிமாவின் கதைக்கு வருவோம். பாரதிராஜாவின் 'அன்னக்கொடி' என்ற படத்தின் கதையை, படம் பார்த்தது முதல் பல கதைக்கயிறுகளுன் ஒப்பிட்டு அசைபோட்டுக்கொண்டிருந்தேன். இயக்குநர் பாரதிராஜா அளவிற்கு, தமிழ்ச்சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியின் வன்முறைப்பண்பாட்டை, கலைப்பண்பாடாக மாற்றிய இயக்குநர் இல்லை. முற்போக்கை நோக்கி தான் செல்வது போன்ற தொனி ஒலித்தாலும், சுயசாதிப்பண்பாட்டுப்படிமங்கள், இன்று தொன்மங்களாகிப் போகும் அளவிற்குக் கூர்மையாகப் பதிவு செய்தார். அவர் சினிமா வழியாகச் செய்த விபரீதங்கள் சொல்லி மாளாது. அங்கிருந்து விலகி வர, அவருக்கு, அவருடைய முழுதொழில் காலமும் பிடித்தது போலும். 'அன்னக்கொடி' கதை முழுதும் அவருடைய வழக்கமான கதைப்பாதைக்குத் தலைகீழானது. அவர் இது வரை நிகழ்த்தி வந்த குரூரமான, சுயசாதி மோகச்சினிமாலிருந்து விலகி, சமூகநேர்மையை ஏதோ ஒரு புள்ளியில், படம் பிடிக்க விழைந்திருந்தார்.

அந்தப்படம் வியாபாரரீதியில், படு தோல்வியடைந்தது. வெற்றியடையாத படங்களின், அடிப்படையான நல்ல நோக்கங்களையும் கருத்தில் கொள்வது தான் கலைச்செயல்பாட்டுக்கான முன்னெடுப்பாகும். பார்த்தவர்கள் எல்லோரும், 'அன்னக்கொடி' கேவலமான படம் என்று கூறினார்கள். திரைக்கதையின் தொய்வுகள், கதையில் ஆங்காங்கே கண்ட பொத்தல்கள் மீறி, கதையின் நவீனமும், அவர் சொல்ல விழைந்த தற்கால பாலியல் மொழியும் எனக்குப் பிடித்திருந்தன.

கதை தான் எல்லாமும்!குட்டி ரேவதி

நம் இந்தியத்திருநாடு ஏன் அழுக்காக இருக்கிறது?


வெளிநாட்டிற்குப் போய்வருபவர்களும், உள்நாட்டிலேயே அதிகமாய் பயணிப்பவர்களும் கழிவறைகள் தூய்மையாக இல்லாது இருப்பது குறித்து அங்கலாய்ப்பது தினந்தோறும் நம் காதில் ஒலிப்பது தான்.

ஒரே முக்கியமான காரணம், கழிவறைகளைத் தூய்மையாக வைத்திருப்பது நம் வேலையில்லை, அது குறிப்பிட்ட சாதி சார்ந்த மக்களின் வேலையும் பொறுப்பும் என்று நாம் ஒவ்வொருவரும் எண்ணுவது தான்.

கையால் மலம் அள்ளுவதை ஓர் ஆன்மீக அனுபவம் என்று ஒரு சாதிவேலையாகத் திணிப்பதும், அத்தகைய சாதி மனநிலையிலிருந்து தான் வருகிறது.

வேலைகளுக்கு இடையே உயர்வு, தாழ்வு பேதம் பாராட்டும் நம் நாட்டில், கடைநிலைத் தொழிலாக கழிவறைகளைத் தூய்மை செய்வதைப் பார்ப்பதுடன், அதை ஒரு சாதியினர் தாம் செய்யவேண்டுமென வலியுறுத்துகிறோம்.

பொது இடங்களிலும், ஏன் வீட்டிலும் கூட நம் கழிவறைகளைத் தூய்மையாக வைத்திருக்க நாமே முற்படுவதில்லை. நாம் பயன்படுத்திய பின்பு, அதைத் தூய்மை செய்ய இன்னொருவர் வருவார் என்ற எண்ணத்திலேயே அதன் தூய்மைக்கான பொறுப்பைத் தவிர்க்கிறோம்.

வீட்டில் கழிவறை என்பது ஒதுக்கப்பட்ட, நாற்றமெடுக்கும் ஒரு குறுகிய அறை என்பதாகவே வடிவமைக்கப்படுகிறது. உண்மையில், சிறிய நூலகங்கள் வைக்கப்படவேண்டிய அளவிற்கு, நூலகத்திற்கு இணையான இடமாகவே இதை உணர்ந்த மனிதர்களின் வீடுகளுக்குச் சென்றிருக்கிறேன்.

இன்னும் சொல்லப்போனால், நம்மில் பெரும்பாலோருக்குக் கழிவறைகளை எப்படி பயன்படுத்துவது என்பது கூட உண்மையில் தெரிவது இல்லை.

பெரும்பாலான கிராமங்களுக்கும் உள்ளூர்களுக்கும் போதுமான கழிவறைகள் சென்று சேரவில்லை. அரசுப்பள்ளிகளில் கூட மாணவ, மாணவியர்க்கு கழிவறைகள் அவசியம் என்பதை உணராத அரசும் நிர்வாகமும்.

பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் கூட கழிவறைகள் இருந்தாலும் அவற்றை முகம் சுளிக்காமல் பயன்படுத்துவதற்கான முயற்சியை, பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்வதில்லை.

ஒரே காரணம், நம் அடிமனதில் காலங்காலமாக நாம் ஏற்றுக்கொண்ட எண்ணம், கழிவறைகளைத்தூய்மை செய்ய அதற்கென ஒரு சாதி மக்கள் இருக்கின்றனர், அவர்கள் பொறுப்பு அது என்பதே. அவர்களை நாம் மனிதர்களாகவோ, ஏன் சக உயிர்களாகவோ கூடப் பார்ப்பதில்லை.

இந்த எண்ணமே, இந்தியத்திருநாட்டை அழுக்காக வைத்திருக்கிறது. இன்னும் இன்னும் அழுக்காக, நாற்றமெடுப்பதாக ஆக்கிக்கொண்டிருக்கிறது.


குட்டி ரேவதி