நம் குரல்

டாஸ்மாக் மது கொல்லும்!


நம் மாநிலத்திலிருந்து மதுவை ஒழிப்பது அவ்வளவு எளிதன்று. டாஸ்மாக் போன்ற கடைகள் அரசினால் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு, அடித்தட்டு மக்களைப் பார்த்துக் குறிவைக்கப்பட்ட 'மெளனமானதொரு படுகொலையே' என்பதை நாம் அறியாமல் இருக்கிறோம். ஏழையின் வயிற்றில் அடிப்பது என்பதன்  உச்சபட்சமான அரசுத் செயல்திட்டம்  இது.

இது மதுவிற்கு எதிரான குருட்டுத்தனமான பிரச்சாரம் அன்று. மதுவால் பூண்டோடு அழிக்கப்படும் அடித்தட்டு, உழைக்கும் மக்களை முன்நிறுத்தி, மது எப்படி அவர்கள் குடும்பத்தில் ஒரு சாபமாகிறது என்று விளக்கும் சிறு முயற்சியே. 'டாஸ்மாக்'கில் கிடைக்கும் மது வகைகள் இயல்பில் தரமானவை அன்று. அவை கிட்டத்தட்ட, நாள் முழுதும் உடல் வருந்த உழைத்த மனிதனின் உடலுக்குள் ஊற்றப்படும் அமிலமே. இதனால், உழைத்து வீடு திரும்பும் மனிதன் உடல் களைப்பாற்ற அருந்தும் போது எந்த வகையிலும் அது நலன் பயப்பதில்லை. மாறாக, உடலை மெல்ல மெல்ல அரித்துத் தின்னக்கூடியது. விரைவிலேயே வெவ்வேறு புதிய நோய்களையும், பெரிய நோய்களையும் வரவழைத்து முடக்கும். அதிலிருந்து நோயாளியைக் காப்பாற்ற பணமோ ஆற்றலோ இல்லாத நிலையில், சத்தமில்லாமல்,  ஒவ்வொரு வீட்டிற்கும் மரணத்தை அழைத்து வரக்கூடியது. இப்படி, இத்தகைய தரம் குறைந்த மதுவினால் எவ்வளவு பேர் ஒவ்வொரு நாளும் சாகிறார்கள் என்ற கணக்கெடுப்பு அவசியமாகிறது.

அது மட்டுமன்றி, உழைத்து வீடு திரும்புபவர்கள் தங்கள் ஒரு நாள் வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்கு மதுவிற்குச் செலவழித்து விட்டு, வீட்டிற்குக் கொண்டு போய் சேர்க்கும் அந்த ஒரு பங்கு வருமானத்தை வைத்து குடும்பத் தலைவிகள் என்னனம் வீட்டை நிர்வகிப்பது?  இத்தகைய வீடுகள் பெரும்பாலும் இருண்டும், கண்ணீர் நிறைந்ததாகவும் தான் இருக்கும். அந்த ஓர் ஆணை நம்பியதாகவும் தான் இருக்கும்.

மதுவிற்கு ஆண்கள் இரையாகிவிட்ட நிலையில், கல்வி மற்றும் வேறு எந்த சமூக வாய்ப்பும் கிடைக்கப்பெறாத அவர்களுடைய வீட்டுப்பெண்களின் நிலை மிகவும் அவலம் நிறைந்தது. இது பற்றி எழுதத்தொடங்கினால் அது நிறைவுறாத சோகக் காவியமாகிவிடும். அந்த அளவுக்குத் துயர் நிறைந்ததாக இருக்கிறது. ஆனால் இது வெளிப்படையாக ஒரு சமூக இழப்பாகவோ, கவனம் செலுத்தக்கூடிய  ஒன்றாகவோ  பார்க்கப்படுவதில்லை. 

மேலும் இந்த மதுக்கொடுமை, மேல் தட்டு குடும்பங்கள் அல்லது முற்போக்கு வாதிகள் முன்மொழியும் மதுப்பழக்கத்துடன் ஒப்பிடமுடியாது. அவர்களிடம் 'மது அருந்துதல்' ஒரு பொழுதுபோக்காகவும் வேடிக்கை நிறைந்ததாகவும் இருக்கிறது. மதுவின் தரம், உடன் அருந்தும் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை எல்லாம் வேறு வேறு. ஒட்டுமொத்தமாக டாஸ்மாக் மது வகையறாவையும் உயர்தர மது வகையறாவையும், இரு வகையான குடிப்பழக்கங்களையும், அதற்கான பின்னணிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கமுடியாது. 

அரசின் வருமானத்தில் பெரும்பங்கு வருமானம் டாஸ்மாக்கிலிருந்து வருவதாக அறியப்பட்ட நிலையில், மாணவர்களின் மதுவிற்கு எதிரான போராட்டம் எனக்குப் பெருத்த அச்சத்தையும் பதட்டத்தையுமே ஏற்படுகிறது. இம்மாதிரியான போராட்டங்களையோ, மக்கள் செயல்பாடுகளையோ பொருட்படுத்தாத அரசாகவே, ஜெயலலிதா அவர்களின் அரசு தொடர்ந்து இயங்குகிறது. மேலும், நம் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் ஒரு திட்டமாகவே,  அரச இயந்திரமாகவே 'டாஸ்மாக்' என் கண்களுக்குத் தெரிகிறது.


அதிலும், இந்த அரசிற்கு நம் மக்கள் நலனில் அக்கறை இருக்கும் என்பதெல்லாம் விவாதத்திற்கு அப்பாற்பட்டது. 'டாஸ்மாக்'கை இழுத்து மூடுவது என்பது, 'கூடங்குளம் அணு உலையை' இழுத்து மூடுவது போன்றே தொடர்ப் போராட்டத்தை வேண்டுவது!


குட்டி ரேவதி

தமிழ் அறிவுசீவித்தனம்!"'கருத்தியல்' என்பது புத்தியின் கூறு இல்லை. அது உடலின் இயங்கியலையும் வாழும் நிலத்தின் இயங்கியலையும் இணைத்துப் புரிந்து கொண்ட மனிதநிலை. 


உடலைத்தூக்கிக் கொண்டு நிலந்தோறும் நாடோடியாக, துறவியாகப் பறந்து திரியும் மனம் கூட, நிலத்திலிருந்து உந்தி எழுந்த காலையும் நிலத்தில் ஊன்றப் போகும் காலையும் கவனம் கொண்டு தான் பறக்கும்.

மனித உடல் நிலத்தைத் துறக்கமுடியாது.தன் சுயத்தையும் மனதையுமே சிறந்தது என்று கருதும் மனநிலை கொஞ்சமேனும் மிருக மனநிலை நோக்கிச் சாய்ந்த தராசுத் தட்டு.


மனிதன் என்பவன் தனித்த கூறு இல்லை. சிந்தனைகளால் ஒருவரோடு ஒருவர் இணைந்து இயங்க வேண்டிய உடல்களின் மந்தையே. 

உடலைக் கலைத்துப் போடுவதும், மனதை விரித்துப் போடுவதும், அவலம் பகிரங்கமாவதும், அற்புதங்கள் ரகசியமாய் உணரப்படுவதும் என விந்தையான ஒரு மிருகக் கூட்டம் இது.

'மெய்யியல்' என்பது உடலுக்குப் பின் தான் சிந்தனை சிறந்தது என்கிறது. மனமே சிந்தனையென்றாகிறது.

உடலே முதன்மையானது. உடலுக்கே சிந்தனை தேவையாகிறது. மற்றபடி, மனம், காக்கா, கொக்கு, ஆத்மா எல்லாம் பொய்.

மனிதன் 'தன்' உடலுடன் ஒரு பொழுதும் முரண் கொள்வதே இல்லை. கொள்ளமுடிவதும் இல்லை.

சும்மா கருத்தியல் என்று கூறி உடலின் அலங்காரத்தைக் கொண்டாடாதீர்கள். உடல் நோய்கள் உடைத்து"

இப்படியாகத்தான் இன்றைய என் சிந்தனைகள் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கின்றன.
குட்டி ரேவதி

'பண்பாட்டு அதிர்ச்சி'யைத் தந்த நீயா நானா!!


அன்புள்ள நண்பர்களே! நேற்று நீயா நானா நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு நிறைய தோழியர் தொலைபேசியில் அழைத்தார்கள், அது என்ன மாதிரியான நிகழ்ச்சி என்று ஆத்திரத்தில் கேட்டு! ஆண் இளைஞர்கள் எப்படி பெண்களை வர்ணிக்கிறார்கள் என்றும், பெண்களைப் பற்றிய அவர்களின் பார்வை என்னவாக இருக்கிறது என்றும் ஒரு விளக்கமான அலசல். நிறைய பேர் அந்த நிகழ்ச்சியால் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள் என்பதை உணரமுடிந்தது. அந்த உரையாடலில், எல்லோரும் பண்பாட்டு அதிர்ச்சிக்கு ஆளானதை உணரமுடிந்தது. 

நான் அந்த நிகழ்ச்சி பதிவுசெய்யப்பட்டபோது மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது உரையாடிய இளைஞர்களின் மனநிலை வழியாக சமூகத்தின் குறுக்குவெட்டுத்தோற்றத்தைக் கண்டறிய முடிந்தது.

இளைஞர்களை இப்படி உரையாட அனுமதிக்காத சமூகம் தான் காதல் என்ற பெயரில் தற்கொலையையும் ஆசிட்வீச்சையும் கொலைகளையும் சந்தித்துக்கொண்டிருக்கும் என்பது என் கருத்து. 

அந்த நிகழ்ச்சி பற்றி எனக்கு விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. இதே முறையில் 'பெண்கள்' உரையாடும் படியான நிகழ்ச்சியாகஎன் ஏன் இல்லை அது என்பது என் கேள்வியாகவே இருந்தது. பெண்கள் பாவைகளாக அமர்த்தப்பட்டிருந்தனர். மேலும், எழுப்பப்பட்ட கேள்விகளை இளைஞர்கள் புரிந்துகொள்வதற்கே சமயம் எடுத்தது. நிகழ்ச்சியை நடத்துபவருக்கும், பங்குபெறுபவருக்கும் இடையே ஒரு பொதுமொழியைத் தேடவேண்டியிருந்தது.

வீட்டின் மைய அறையில் ஒரு தொலைக்காட்சிப்பெட்டியை வைத்திருக்கிறோம். அதில் 'ஆணும் பெண்ணும்' உறவாடும்படியான என்னென்னவோ காட்சிகள் வந்து போவதைக் கண்டும் காணாமலும் இருக்கிறோம். தவிர்க்கிறோம். காட்சியிலிருந்து நாம் முகத்தை எடுத்துக்கொண்டால், குழந்தைகள் கவனிக்கமாட்டார்களா என்ன? நம் குழந்தைகள் அந்தக்காட்சிகளை எப்படிப் புரிந்து கொள்வது என்று அறியாமல் வெறித்து வெறித்துப் பார்க்கிறார்கள். இதையெல்லாம் புறக்கணித்துக் கொண்டிருக்கிறோம். என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்காமல் அடுத்த நிமிடமே வசதியாக மறந்துவிட்டுப்போகிறோம்.

இதற்கான உரையாடல் அற்ற சமூகத்திற்கும், சினிமாவில் நாம் காணும் அபத்தமான, காதலற்ற, ஆணுக்கும் பெண்ணுக்குமான உடல் மதிப்பீடுகளற்ற பாலியல் காட்சிகளுக்கும் இடையே இடைவெளியில் நிறைய போலியான பண்பாட்டுப் புரிதல்களும், பாலியல் சங்கடங்களும் இருக்கின்றன என்பதை நாம் உணராமல் இருக்கிறோம். தர்மசங்கடத்தை பரிதவிப்புடன், எரிச்சலுடன் கடந்துவிடத்துடிக்கிறோம்.

இம்மாதிரியான உரையாடல்களின் தொடக்கத்தில் நாம் இப்பொழுது உணரும் சங்கடங்களை, தயக்கங்களை எல்லாம் நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். அப்படியான சமூக இறுக்கத்தில்  தான் இருக்கிறோம். இதை உணராமல், அதிர்ச்சி அடைவதில் எந்த அர்த்தமும் இல்லை.


உரையாடலை, ஏதோ ஓர் இடத்தில் தொடங்குவது நல்லது. தொடருமா என்று தெரியவில்லை. 

குட்டி ரேவதி

கவிஞர் வாலியைத் தொடர்ந்து சந்திக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன்!

கவிஞர்களில் வெகுசிலரே இப்படி! 'மரியான்' படத்தின் இரு பாடல்கள் அவர் எழுதும் போதும் அவருடன் இருந்து, சூழ்நிலையை விவரிக்கும் பொறுப்பு எனக்கு இருந்தது. சந்தித்ததுமே, உற்சாகத்துடன் உரையாடத்தொடங்கினார். என் எல்லா கவிதை நூல்கள் பற்றியும் அறிந்திருந்ததைக் குறிப்பிட்டுத் தான் எல்லாவற்றையும் அறிந்து வைத்திருப்பதைச் சொல்லி நகைச்சுவையாக என்னை மிரட்டினார். அவர் பாடலில், நானும் வரி எடுத்துக் கொடுத்தால், 'வரியைப் போட்டுக்கோ! ஆனால், உரிமத்தொகை எல்லாம் எனக்குத்தான்!' சரியா என்று எந்தச் சூழ்நிலையையும் நகைச்சுவை உணர்வு மேலிட வைப்பதில் வல்லவராய் இருப்பார். நீண்ட நாட்கள் பழகிப் புரிந்து கொண்டிருந்த உணர்வை, முதல் கணத்திலேயே என்னிடம் ஏற்படுத்திய பெருந்தன்மை கொண்டவர்.

ஏ. ஆர். ரஹ்மான் அவர்கள் சொல்வது போல், அவருடைய ஞானமும், அன்பும் எவரிடமும் காணமுடியாது என்பதை நானே உணர்ந்திருக்கிறேன். பெருந்தன்மையிலும்! மூத்தப்படைப்பாளிகள் சிலர் எப்பொழுதும் வெறுப்பும் அகங்காரமும் மேலிட இருக்கும்போது, வாலி அவர்கள் இதற்கெல்லாம் மாறாக இருந்தார். இசையின் கூறுகளை உணர்ந்து உடனுக்குடன், வரிகளை எடுத்துக் கொடுக்கும் வேகத்தில் அவருக்கு இணை அவர் தான் என்பதை நேருக்கு நேர் உணர்ந்திருக்கிறேன். 'நேற்று அவள் இருந்தாள்' பாடலில் அவருடைய கவித்துவ முதிர்ச்சியை எளிமையாக வடித்துக் கொடுத்திருப்பார். ஓர் இரவின் ஒரு மணி நேரத்தில் இயக்குநர் பரத்பாலா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நான் மூவரும் அவர் இல்லத்திற்கே சென்று அந்தப் பாடலைப் பெற்றோம்.

எல்லாவற்றையும் விட, திறந்த மனதுடன் எதையும் அணுகக்கூடியவர். இளையவர்களிடம், அவர்கள் மனநிலைக்கு எழும்பி நின்று உரையாடக் கூடியவர். மொழியில் அவருடைய ஞானத்தை 'திரைப்படங்கள்' எவ்வளவு பயன்படுத்திக்கொண்டனவோ என்பது சந்தேகத்திற்குரியதே. எங்கள் இசை இயக்குநருக்கு மிகவும் பிடித்தமான பாடலாசிரியர் அவர் தான் என்பதை நான் அறிவேன். ஏனெனில், அந்த அளவுக்குக் கூர்மதியுடன் பாடலுக்குள் நுட்பமாய் சில கருப்பொருட்களையும், தன் அனுபவத்தையும் மறைத்தும் நிறைத்தும் எழுதும் பாடலாசிரியர் எவரும் இல்லை. அவருடைய  நினைவாற்றல் தான் அவரை எப்பொழுதும் இளமையாகக் காட்டியது. பொதுவாக, இது போன்ற நேரடியான புகழ் வெளிச்சத்தில் இருக்கும் மனிதர்களிடமிருந்து நான் விலகியே இருப்பதுண்டு. ஏனெனில், தன் வெளிச்சத்தின் கூச்சத்தை நம் மீதே வீசும் மனிதர்கள் தான் நிறைய பேர். 


வாலி அவர்களுடனான சில நாட்பழக்கத்திலேயே அவருடைய அணுகுமுறையும், அன்பும், திறமையும், உழைப்பும் என்னை வெகுவாக ஈர்த்தது. தொடர்ந்து அவரைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்!

குட்டி ரேவதி

'மாற்று' என்பதும் 'மெயின் ஸ்ட்ரீம்' என்பதும்!
அடிப்படையில் முற்றிலும், 'மெயின் ஸ்ட்ரீம்' அழகியலுக்கும் ஊடகங்களுக்கும் எதிரான பண்பாட்டையும் இலக்கியத்தையும் தோழமையையும் பின்பற்றி வந்தவள். கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக என் எழுத்தும் சிந்தனையும் அதுவாக இருந்திருக்கிறது. இந்த 'மாற்று' என்பதன் மீது முழுமையான ஈர்ப்பும், அக்கறையும் இருந்ததாலேயே என்னால் எழுத்தாளராக இருக்கமுடிகிறது என்றும் நம்புகிறேன்.

தொடர்ந்து கூட்டங்கள், போராட்டங்கள், களப்பணி என்று இயங்கிய போதும், இந்த 'மாற்று' விஷயங்களை ' 'மெயின் ஸ்ட்ரீமு'க்குக் கொண்டு சேர்க்காமல் நம் நோக்கம் நிறைவேறாது என்பதைப் புரிந்து கொண்ட போது, என் நம்பிக்கைகளும் வழிமுறைகளும் இன்று மாறிவிட்டதாகவே நம்புகிறேன்.

என்ன இருந்தாலும், 'கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம்', 'மரண தண்டனைக்கு எதிரான போராட்டம்', 'சாதி மறுப்பு வாழ்வியலை ஆதரிக்கும் போராட்டம்' என மாற்றுச்சமூகத்தினர் எப்பொழுதும் போராடிக் கொண்டிருப்பதாகவும், அது பொதுச்சமூகத்தின் அக்கறைக்குள் அடங்காததாகவும் இருக்கிறது.

பல சமயங்களில், 'மாற்று' என்பதன் நீரோட்டத்தில் இருப்பவர்கள் கூட மன இறுக்கங்களுடனும், அவதூறு அரசியல் போக்குகளுடனும், தற்பெருமையின் அடையாளங்களுடனும் இயங்கிக்கொண்டிருப்பது, 'மாற்று' என்பதன் வீர்யம்  'மெயின் ஸ்ட்ரீம்' சேரமுடியாமல் தடுத்திருக்கிறது. மக்கள் திரளாக ஆகாமல், 'மாற்றுக் கருத்தியலாளர்கள்', தனித்தனி மனிதர்களாகக் குறுகிப்போயினர்.

'மாற்று'க் கருத்தியலை,  'மெயின் ஸ்ட்ரீ'முக்குக் கொண்டு சென்று, பொதுச்சமூகத்தினர் இக்கருத்துகளை உள்வாங்கவைப்பதும், அவர்களையும் இவ்வியக்கங்களில் பங்குபெறவைப்பதும் இக்காலக்கட்டதின் அவசியமாகிறது.

ஆக, 'மாற்று' என்பதன் அவசியம் குறையாமல், நம் சமூகவெளிச்சத்தை 'மெயின் ஸ்ட்ரீ'முக்கு எடுத்துச்செல்லும் பொறுப்புணர்வும், அழகியலும், போராட்ட மனப்பான்மையும் கொண்டவர்கள் தாம் இன்று சமூகத்திற்குத் தேவைப்படுகின்றனர்.  'மெயின் ஸ்ட்ரீம்'  மாயையிலும் ஆர்ப்பாட்டத்திலும் மறைந்து விடாமல் இருப்பவர்கள் தாம் சமூகத்திற்கு அவசியம். 

இனி, 'மாற்று' என்பதே,  'மெயின் ஸ்ட்ரீம்' !

குட்டி ரேவதி

உயர் ஜாதிக்காரி ஒருத்தி நகத்தோடு என் பறை நகம் மோதி..!


பிரமிளின் 'கலப்பு' எனும் கவிதை


1. கண்கள்

உயர் ஜாதிக்காரி
ஒருத்தி நகத்தோடு
என் பறை நகம் மோதி
மனம் அதிர்ந்தது.

கோபத்தில் மோதி
கலந்தன கண்கள்

பிறந்தது ஒரு
புதுமின்னல்

ஜாதியின் 
கோடை மேவிப் பொழிந்தது
கருவூர்ப்புயல்.

(1972)


2. புகைகள்

உயர் ஜாதிக்காரி
ஒருத்தி நகத்தோடு
என் பறை நகம் மோதி
ஊர் அதிர்ந்தது.

ஐயாயிர வருஷத்து
இரவு சிவந்து 
எரிந்தது என் சேரி -

புகைகள் கலந்து
இருண்டது இன்றென்
உதய நெருப்பு.

(1980)


பிரமிளின் இக்கவிதை சில நாட்களாக மனதில் உருண்டு கொண்டே இருக்கிறது. கவிதையின் முற்பகுதி 1972 -ல் எழுதப்பட்டிருக்கிறது. இரண்டாவது பகுதி, 1980 - ல் எழுதப்பட்டிருக்கிறது. 

சாதியின் கொடூரத்தையும் அதன் மீதான தன் எதிர்ப்புணர்வையும் கவித்துவப் பிம்பங்களாக்கும் அவருடைய முயற்சி எழுபதுகளிலேயே நடந்திருக்கிறது.

இக்கவிதை, 'இளவரசன்' வன்படுகொலைக்கு எதிரான எழுச்சியைக் கொண்டுள்ளது. சற்றும் நவீனத்தன்மை குறையாமலும், தற்காலப் பொருத்தப்பாடு கொண்டும் இருக்கிறது.

தொடர்ந்த பிரமிளுடைய கவிதைப் பதிவுகளை வாசித்தவர்களுக்குத் தெரியும்,  இலக்கியத்தளத்தில் எவ்வளவு தீவிரமாக சாதியப்பயிற்சிகள் இருந்திருக்கின்றன என்றும், அதை அவர் எவ்வாறு தொடர்ந்து எதிர்த்திருக்கிறார் என்றும்.

'ஜாதியின் கோடை மேவிப் பொழிந்தது கருவூர்ப்புயல்', 'ஐயாயிர வருஷத்து இரவு சிவந்து எரிந்தது என் சேரி' என்ற வரிகள் நம் சிந்தனைத்தளத்தில் தொடர்ந்து செயல்படக்கூடிய இயங்கியல் தன்மை கொண்டவை.

இலக்கிய வெளியில் இரண்டு விதமான சிந்தனைப் போக்குகள் தாம் இருக்கின்றன. ஒன்று, சனாதனச்சிந்தனையை வலியுறுத்தி இலக்கியம் என்று அறைகூவல் விடுப்பது. இரண்டு, அதற்கு முற்றிலுமான எதிர்த்திசையில், பிரமிளின் சாதி எதிர்ப்புச் சிந்தனையை ஒட்டி இயங்குவது. 

எவ்வளவு தான் நட்டமும் இழப்பும் என்றாலும் வெகுசிலரே இரண்டாமவதைத் தேர்ந்தெடுக்கும் துணிவைப் பெற்றிருக்கின்றனர். கருத்தியலை, இலக்கியமாக்கும் படைப்பாற்றல் கொண்டிருக்கின்றனர். உதாரணங்கள் வாசித்துத் தெளிந்து கொள்ளக்கூடியவையே.
குட்டி ரேவதிஆண் எழுத்தாளர்களின் 'பெண்' பற்றிய பாலியல் வர்ணனைகள்!

ஒரு டி.வி. நிகழ்ச்சிக்காக, ஆண் எழுத்தாளர்கள், தம் எழுத்துகளில் பெண்களை எப்படி வர்ணனை செய்திருக்கிறார்கள் என்று ஆய்வு செய்ய நேர்ந்தது. பெரும்பாலான மூத்த எழுத்தாளர்களுக்குப் பெண்கள் மீது எந்த நன்மதிப்பும் இருக்கவில்லை. 

சமூகத்தின் அடித்தட்டிலிருந்து எழுந்து வந்த படைப்பாளிகள் இயல்பாகவே தம் சமூகத்தின் பெண்களின் உழைப்பின் மீதும், உடல் ஆற்றல் மீதும் அபரிமிதமான பரிவும் அக்கறையும் கொண்டவர்களாக இருந்ததையும் உணரமுடிந்தது. 

இளம் எழுத்தாளர்களைப் பொருத்தவரை, பெண்களின் உடல் தான் கவனத்திற்குரியதாக இருக்கிறதே ஒழிய, அவர்களின் குணமோ, ஆற்றலோ, ஆளுமையோ கவர்வதில்லை.  இதில், இன்னும் பரவலாக ஆய்வு செய்ய விரும்புகிறேன்.

எல்லாவகையிலும் பஷீர் தான் உயர்ந்து நிற்கிறார். பெண்களின் மீதான தன் காமத்தை வெளிப்படுத்துவதிலாகட்டும், அவர்களைப் பற்றிய பாலியல் வர்ணனையைத் துல்லியமாக எழுதுவதில் ஆகட்டும், அவர் எழுத்தில் எந்த அளவுக்கு வெளிப்படையான உணர்வுகள் இருக்கிறதோ,  அந்த அளவிற்கு அவர்கள் மீதான உண்மையான அன்பினொடு பதிவாகிறது. அதனால் அந்த வகையில் 'வர்ணனை' என்பது ஆபாசமாவதில்லை. 

பிற எழுத்தாளர்களுக்கு அடிமனதில் பெண்கள் மீது  இயல்பாகவே இருக்கும் வெறுப்பும், முறையீடுகளும் கலந்து தான் 'வர்ணனை' ஆகிறது. அதனால் நேரடியாக 'ஆபாசமான' ஒன்றாகவும், அருவருப்பூட்டுவதாகவும் இருக்கிறது. 

பெண்களின் மீது உண்மையான ஈர்ப்பைக் கொண்டவர்கள் வரிசையில், ப.சிங்காரம், ஜி.நாகராஜன், தேவதேவனையும் சேர்த்துக்கொள்ளலாம். 

மேலும் தலித் எழுச்சிக்குப் பின் தான் பெண்கள் உடலாற்றல், உடல் உழைப்பு என்பதின் மீது படைப்பாளிகளுக்குக் கொஞ்சமேனும் மரியாதை எழுந்துள்ளதையும் உணரமுடிகிறது. 

இதையெல்லாம் தவிர்த்து, பெண்களை ஓர் எதிர் வகை மிருக இனமாகவும், வெறுமனே சடப்பொருளாகவும் தான் எல்லோரும் வர்ணித்துள்ளனர். 
குட்டி ரேவதி'பெண் பத்திரிகையாளர்' என்ற அடையாளம்!

தொண்ணூறுகளின் இறுதி. தொடர்பியல் துறை பரவலாகிக் கொண்டிருந்த காலக்கட்டம். நான் திருநெல்வேலியில் சித்தமருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் துறையுடன் நெருக்கமான தொடர்பும் நட்பும் எனக்கு ஏற்பட்டது. அவர்களுடைய பயிற்சிப்பட்டறைகளில் நானும் தொடர்ந்து கலந்து கொண்டேன். நான் எழுத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு அது ஒரு முக்கியமான காரணமாக இருந்தது. பத்திரிகைத் துறையைப் பெரும்பான்மையும் ஆண்களே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது போய், பெண்கள் பெருவாரியாக அத்துறையில் நுழையத் தலைப்பட்டதை நான் அப்பொழுது தான் கண்ணுற்றேன். அதுவரை, பத்திரிகைத் துறை என்பது ஆண்களுக்கு மட்டுமே என்று இருந்து வந்தது. பெண்கள் கைக்கு மொழியும் எழுத்தும் வந்ததும் எப்படி படைப்பிலக்கியத்தைத் தேர்ந்தெடுத்தார்களோ, அவ்வாறே பத்திரிகைத் துறையையும் தேர்ந்தெடுத்தார்கள்.

ஊடகங்களின் பணியிடங்களில் அமர்ந்து பெண்கள் வேலைசெய்யத்தொடங்கிய  காலத்திலும் இயல்பாகவே நிறைய பிரச்சனைகள் பெண்களுக்கு எதிராகத் தொடங்கின. அவர்கள் எழுதுவதில் குறை கண்டுபிடிப்பது தொடங்கி, அவர்கள் ஆளுமையைத் தாங்கிக் கொள்ளமுடியாத நிலை என பரவலாகப் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைச் செயல்கள் விரிந்து கொண்டே தான் இருந்தன. இன்றும், அதையெல்லாம் தாங்கி எதிர்த்து நிற்கும் பெண் பத்திரிகையாளர்களை நாம் இனம் காண முடியும். பெயர் சொல்லியும் குறிப்பிடமுடியும். அந்த அளவிற்கு, தமிழ்ப் பத்திரிகைத்துறையின் பெண் ஆளுமைகள் தொடர்ந்து ஆண்களுக்கு இடையே நின்று வீர்யத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இலக்கியத்தில் எப்படி பெண் படைப்பாளிகள் உருவாகியது, ஆண் படைப்பாளிகளிடம் நெருடலையும் பதட்டத்தையும் தந்ததோ அதே போன்ற நிலையைப் பத்திரிகைத்துறையிலும் உணரமுடிந்தது. ஆனால், இலக்கியத்தரம், உருவம், கருப்பொருள், மொழி என்ற வெவ்வேறு காரணங்கள் காட்டிப் பெண் படைப்பிலக்கியவாதிகளை ஓரங்கட்டியது போல், பெண் பத்திரிகையாளர்களை ஓரங்கட்டமுடியாது போனது. சமூகத்தின் மையத்தளத்தில் நின்று ஆண்கள் எழுதிய, பேசிய பிரச்சனைகளை பெண்கள் தரப்பில் நின்று பேசும் பத்திரிகையாளர்களாக இவர்கள் இருந்தனர். பெண்ணுரிமை நோக்கிய பயணத்தில், 'பெண் பத்திரிகையாளர்' உருவாக்கம் என்பது மிகவும் சமூக முக்கியத்துவம் வாய்ந்தது. முதன்மையானது. எந்த நிலையிலும் சமரசம் இல்லாதது. இச்சமூக அடையாளம், எதன்பொருட்டும் பெண்கள் இழக்கத்தேவையில்லாதது.

சமீபகாலங்களில், நிறைய ஆண் தோழர்கள் பெண்ணுரிமை பேசும் இடத்தை நோக்கித் தம்மைத்தாமே நகர்த்திக் கொண்டு வந்துள்ளனர். இயல்பான உரையாடல்கள், விவாதங்கள், முகநூல் பரிமாறல்கள் இவையெல்லாம் இந்தப் பரிணாமம் ஏற்பட வழிவகை செய்துள்ளது. நான் அறிந்த நிறைய ஆண் நண்பர்களே பெண்களின் உரிமைகளில் தேர்ந்த நிலைப்பாடு எடுப்பவர்களாகவும் திருத்தம் செய்பவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால், சிலர் தன்னுடைய நிலையே கேள்விக்குள்ளாகும் போது இந்த நிலைப்பாட்டைச் சொல்வதில் ஏற்படும் தடுமாற்றத்தையும் உணரமுடிகிறது.

ஆக, பெண்களின் 'பத்திரிகையாளர்' என்ற அடையாளம் சமரசம் செய்யக் கூடியது அன்று. மேலும், அது தனிப்பெண்களுக்கான அடையாளமும் அன்று. ஒரு சமூகத்தின் முன்னோக்கிய நகர்வும் கூட. இவ்விடத்தில் இன்று வெவ்வேறு ஊடகங்களில் பணிபுரியும் அத்தனைப் பெண் பத்திரிகையாளர்களையும் நான் நினைவுகூர்கிறேன். ஏனெனில், அவர்கள் எல்லோரையும் வெவ்வேறு சூழ்நிலைகளில் தனிப்பெரும் ஆளுமைகளாக அறிந்து உணர்ந்திருக்கிறேன். அவர்களுடைய சமூகச்செயல்பாட்டையும் எல்லோர் கண்முன்னும் வெளிச்சப்படுத்த விரும்புகிறேன்.

தமயந்தி, ஜெயராணி, இளமதி, கவின்மலர், சுகிதா, வானவில் ரேவதி, கவிதா முரளீதரன், பிரியா தம்பி, நந்தினி, ஜெனிஃபர் மற்றும் எண்ணற்றோர். நிறைய பெயர்கள் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. மன்னிக்க. இவர்கள் தாம் பொதுச்சமூகத்தையும் சமூகவிழிப்பு கொண்ட சமூகத்தையும் தம் சிந்தனைகளால் இணைப்பவர்கள். குறிப்பாக, ஒடுக்கப்பட்டு, குடும்பம் மற்றும் பிற சமூகப் பெட்டிகளில் அடைந்து கிடப்பவர்களைப் பொதுச்சமூகத்திற்கு அடையாளப்படுத்த நம் சமூகத்தின் தரப்பில் இருக்கும் ஒரே நம்பிக்கை. இலக்கியவாதிகள் எழுதுவது ஓய்ந்தால் கூட இவர்கள் எழுதுவதும், இயங்குவதும் ஓய்ந்ததே இல்லை. அல்லும் பகலும் இவர்கள் இயக்கத்தைக் கூர்ந்து கவனிப்பவர்கள் இவர்களின் பணியை, வெறும் தொழில்முறைப் பணியாக மட்டுமே சொல்லிவிடமுடியாது.   இல்லை என்றால் இவர்கள் வெறுமனே சினிமா, ஃபேஷன், சமையல், குடும்பம் என்று பொதுச்சமூகத்திற்குக் கவர்ச்சியான பொருள்களை மட்டும் பற்றியே எழுதிவிட்டுப் போயிருந்திருக்க முடியும். 


இவர்களின் பணியை அங்கீகரிக்காமல், நிராகரிப்பது என்பதே கூட, சனாதனச் சிந்தனையே. மத, சாதி அடையாளங்களையும் அதன் சூழ்ச்சிகளையும் அறியாத நிலையே 'பெண் பத்திரிகையாளர்' என்ற அடையாளத்தின் முக்கியத்துவத்தையும் பொறுப்பையும் உணராது இருக்கும். வெவ்வேறு புறக்கணிக்கப்பட்ட சமூகங்களிலிருந்தும், பெண்களாயிருந்தும் தொடர்ந்து இயங்கி இயங்கியே ஒரு பத்திரிகையாளர் என்ற அடையாளத்தையும், உரிமையையும் இவர்கள் வென்றுள்ளனர். இவர்கள் நம்மிடையே எண்ணிக்கையிலும் பலத்திலும் பெருகுவதும், ஆரோக்கியமாகச் செயலாற்ற முடிவதும் தாம், நம் சமூக மாற்றத்தைக் குறிப்பிடுவது. இவர்கள் எல்லோருமே தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்றாலும், இவர்கள் எவருமே என்னைப் பொறுத்தவரை தனி நபர்கள் இல்லை. வெவ்வேறு விடுதலை உரிமைகளைக் கோரும் பெண் சமூகத்தினை அடையாளப்படுத்தும் ஆளுமைகள்.  மேலும், 'பத்திரிகையாளர்' என்பது பெண்களைப் பொறுத்தவரை ஒரு பிரபலத்தைக் குறிக்கும் அடையாளமும் அன்று. சாதாரண ஓர் அடையாளமும் அன்று. பெண்ணியச் சிந்தனையை உள்வாங்கிய ஒரு சமூக அரசியலை மீண்டும் மீண்டும் அறிவுறுத்தி உயரே பறக்கும் கொடி!
குட்டி ரேவதி