நம் குரல்

பெண்ணியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்ணியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.





* ஜிஷாவின் வல்லுறவு கொலைக்குப் பின், எங்கெங்கும் பெரும் அரற்றலாய் இருக்கிறது. ஆங்காங்கே, நண்பர்கள் ஃபேஸ்புக் பதிவுகளில், "இப்பொழுது இந்தப் பெண்ணியவாதிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?" என்று கேட்கின்றனர். ஒரு நண்பர் வேடிக்கையாக, 'ஓ, அவர்களா? பெண்ணியவாதிகளே பெண்ணியவாதிகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர், என்று பதில் இட்டிருந்தார்.

* 'ஜிஷா', தலித் என்பதால் பொதுச்சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைப் போலவே, இந்தியப் பெண்ணியவாதிகளும், ஊடகங்களும் கூட வேடிக்கை பார்ப்பதுடன் கடந்தும் செல்கின்றனர்.
* நிர்பயா விடயத்தில் ஒருங்கிணைந்தது, போல் இதில் பெண் சமூகம் ஒருங்கிணைய சாத்தியமில்லை. அதில் வன்முறையை நிகழ்த்தியவர்கள் ஒடுக்கப்பட்ட ஆண்கள் என்பதால் தண்டனையைப் பெற்றுத்தருவதில், ஒடுக்கப்பட்ட ஆண்கள் மீதான வெறுப்பைச் செயல்படுத்துவதில் பெண்கள் வெற்றி கொண்டார்கள் என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

* ஜிஷாவின் படுகொலையில் மட்டுமல்ல, சமீபத்திய சாதிஆணவப்படுகொலையாகட்டும், பள்ளி மாணவிகள் படுகொலையாகட்டும், எல்லா படுகொலைகளிலுமே வன்முறையை நிகழ்த்தும் விதத்தில், கரும்பை நுழைப்பது, முலைகளை அறுப்பது, குடலை உருவுவது என்று 'படுகொலை' ஒரு கேளிக்கையாவதை உணரமுடிகிறது. ஃபேஸ்புக்கில் நாம் எப்படி அவதூறுகள் எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பதில் சுவாரசியம் பெறுகிறோமோ அது போலவே.

* ஜிஷாவின் வன்கொலையில் எவ்வளவு காட்டுக்கத்தல் கத்தினாலும் நீதி என்பது ஒரு பிஸ்கெட் துண்டுக்குத் தான் சமானம். நிர்பயாவின் விடயத்தில் இல்லாத, பெரும் அமைதி நிலவும் இந்த நேரத்திலேனும் பெண்ணியவாதிகள் எல்லாம் பார்ப்பனீயமயமாகிவிட்டதை உண்மையான போராளிச்சமூகம் உணரவேண்டும்.
* பார்ப்பனீய பெண்ணியவாதிகள், காலங்காலமாக பெண்கள் ஒருங்கிணையாமல் பார்த்துக்கொள்கிறார்கள். தங்கள் 'பெர்சனல்' ஆதாயங்களைக் காரணமாக வைத்து, 'பிரித்துவிடுவது' ஒன்றே அவர்கள் ஆகச்செய்யும் சிறந்த வேலை, கலை. அப்படி பிரித்து வைத்திருந்தால் தான் இவர்களின் பார்ப்பன அடையாளங்களை, அதிகாரங்களை, அங்கீகாரங்களை இழக்காமல் இருக்கமுடியும். இது தான் அவர்கள் முன்வைக்கும் 'பெண்ணியம்'.

*பெண்கள் ஒருங்கிணைந்தால், பார்ப்பனீய பெண்ணியவாதிகள், தங்களின் சாதிய அங்கீகாரத்தை இழக்கவேண்டியிருக்கும் என்பதால் அவர்கள் பெண்கள் ஒருங்கிணையாமல் பார்த்துக் கொள்கிறார்கள். ( இவை தாண்டி, பார்ப்பனச் சமூகத்தில் பிறந்திருந்தாலும் தங்களை அப்படி உணராத, தம் அடையாளங்களை தொடர்ந்து மறுக்கும் பெண்கள் யாரேனும் உண்டா, இங்கே)

* அண்ணல் அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பின், அதாவது சமூகத்தின் சாதிய விழிப்புணர்வின் மறு தூண்டலுக்குப்பின், இந்தியாவின் எந்த மூலையிலுமே பெண்கள் இயக்கத்தைக் கட்டைமைக்க முடியவில்லை. இது ஆய்வுப்பூர்வமாக நிறுவப்பட்டிருக்கிறது. எங்கெங்கு பெண்கள் இயக்கம் தோன்றினாலும், அங்கே சாதி அதிகாரப் பெண்கள் நுழைந்து சாதிமறுப்பு அமைப்புகளை 'ப்ளேட்' போட்டு கத்தரிக்கவே செய்திருக்கிறார்கள்.
* 'தலித்' என்றால், சாதிப்படிநிலைகளில் சேராது. ஒடுக்கப்பட்டவர்கள் என்றே பொருள். ஆனால், சமீபத்தில், பார்ப்பனீயச் சிந்தனைச் சாய்வால், மெல்ல, மெல்ல 'தலித்' என்பதும் இங்கே சாதியாகிவிட்டது.

* இந்த சாதிமயப்போக்கால், ஏற்கெனவே, 'தலித்' சமூகத்தின் மீதான வன்முறைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் சாதி ஆதிக்க சமூகம், 'தலித் சாதிப்' பிரச்சனைகளை, வன்முறைகளை அவர்களே பார்த்துக் கொள்ளட்டும் என்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கவே தூண்டும்.
* 'சாதி ஒழிப்பு' நூலில், அம்பேத்கர் இரண்டு முக்கியமான விடயங்களை முன் வைக்கிறார். ஒன்று: அகமணமுறையிலிருந்து விடுபடுதல். இரண்டாவது: இந்த நாட்டின் நீதிமுறை என்பது பார்ப்பனீய நீதிமுறை என்பதை உணர்ந்து அதை எதிர்த்துப் போராட்டத்தைத் தொடருதல்.

* “எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - என்று கதறுகிறார், ஜிஷாவின் தாய். இந்திய நீதிமுறை ஒடுக்கப்பட்டவர்களுக்கான நீதியை ஒரு பொழுதும் வழங்கியதில்லை என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.
* இப்பொழுது, 'தலித்' என்பதும் இங்கே சாதியாகிவிட்டது. சாதியத்தின் ஸ்பெஷல் தன்மை என்னவென்றால், நம் வீட்டில் வன்முறைகள் நிகழாத வரை, எல்லாமே நமக்கு வேடிக்கை என்ற குணாதிசயம் தான். யாரும் 'மூச்' விடமாட்டார்கள்.


குட்டி ரேவதி

சாதிய நகைமுரணும் பெண்ணியப்போலிகளும் சாதிமறுப்புப் பாசாங்குகளும்!

* 'நான் உயர்சாதி' என்ற அறிவிப்பைப் பார்த்ததுமே நாட்டாமைத்தனத்துடனும், ‘நான் பெரிய முற்போக்காளராக்கும்' என்ற தொனியுடனும் ஓடிவந்து பதிவிடுபவர்கள் எவரிடமும் இதுகாறும் குறைந்தபட்ச சாதிமறுப்பு உணர்வைக்கூடப் பொதுவெளியில் நான் பார்த்தே இராததால் இதை எழுத வேண்டியிருக்கிறது.
*நான் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், எல்லோரும் நான் பிறந்து வந்த சாதியை அறிவார்கள் என்ற புரிதலுடன்தான் நான் இந்த உலகத்தில் வாழ்கிறேன். ஏனெனில், எல்லா சமூகத்தளங்களிலும், பொதுவெளிகளிலும் அந்த விழிப்புடன் தான் எல்லாமே அணுகப்படுகின்றன என்பது யாரும் அறியாதது அல்ல. நானும்.
* எந்த அளவிற்கு 'நான் இந்தச் சாதியுடையவள்' என்று ஒருவர் சொல்கிறாரோ, அந்த அளவிற்கு, 'நான் சாதியற்றவள்' என்று சொல்வதும் இந்த அவலமான உலகத்தில் ஒரு சுவாரசியமான புனைவு. அந்தப் புனைவை நானும் 'எனக்கு நானே' ஏற்படுத்திக்கொண்டு தான் வாழ்ந்துவருகிறேன். ஏனெனில், அப்படி சொல்லிக்கொள்வது என் வாழ்விலும் சமூக முற்போக்குத் தளங்களில் ஒரு சொகுசாக இருக்கிறது. அவ்வளவே. ஆனால், அது குறித்த பொதுவெளி உரையாடலுக்குக் கூட, நீங்கள் சாதிமறுப்பு நாட்டாமைகளின் கடவுச்சீட்டிற்குக் காத்திருக்கவேண்டும். உண்மையில் இதைப்பிற, பெண்ணிய விவாதங்களில் இதற்கு முன் எந்தப் பெண்ணியவாதியும் முன்வைத்ததில்லை. முன்வைக்கவும் முடிந்ததில்லை. அதற்கான வாய்ப்பையும் பெண்ணியவாதிகள் ஏற்படுத்திக்கொண்டதில்லை. மிகவும் வசதியாக ஒதுங்கிக்கொள்வார்கள், அல்லது மறந்துவிடுவார்கள். கடந்துசென்ற, ‘பெண்கள் தினத்திலேனும்' யாரேனும் முன்வைத்தார்களா, என்ன. அட, போங்கப்பா!
* எல்லாப்பெண்ணிய நாட்டமைகளும் ஓடிவந்து, நாட்டாமை தொனியிலேயே இதை என்னிடம் கேள்வி கேட்பது மிகவும் வியப்பானது, திகைப்பானது. இவ்வளவு காலம் உண்மையிலேயே இவ்வளவு சாதிய மறுப்பாளர்கள் பெண்ணியவாதிகளாய் இருந்திருக்கிறார்களா என்று அறிய நேர்ந்ததும் என் நல்வாய்ப்பே.
* பெண்ணியவாதிகளின் பசப்புகளும் பாசாங்குகளும் உலகம் அறிந்தது. ஓர் ஆணிடம் என்றால், அவர் ‘ஆணாதிக்கவாதி’ என்று முகத்திற்கு நேரேயே ஒரு கருத்தை முன்வைக்கமுடியும். எதிர்ப்பைப் பதிவுசெய்யமுடியும். ஆனால், பெண்ணியவாதிகள் அவரவர் வாடகைக்கு வாங்கிய சாதிக்குடைகளின் கீழ் ஒளிந்து கொண்டுதான் பெண்ணியவாதத்தையே நிகழ்த்துவார்கள். பெண்ணிய, முற்போக்கு ஒருமை இல்லாதவர்கள். அடுத்தடுத்த பெண்களை, ஆண்களின் அதே வன்மத்துடன் எதிர்கொள்வதில் ஈடுஇணை இல்லாதவர்கள். பாருங்கள். எல்லோரின் உரையாடலையும் சென்று மீண்டும் வாசியுங்கள். அவரவர் சாதிமுகங்கள் அதில் பளபளக்கும். அதிகாரமும் வியர்க்கும். அவரவர் கோட்டைகளும் எல்லைகளும் கூடத்தெளிவாகும்.
* சாதிய ஒழிப்பிற்கான, சர்வ அதிகாரத்தையும் அதற்கான தடிகளையும் யார் உங்களிடம் தந்தது. எந்தச் சாதி அதிகாரத்தின் பேரில் அதைக் கையில் எடுத்துக் கொண்டு பேசுகிறீர்கள்? அந்தத் தடியின் பின்னால், சாதி அதிகாரத்தை ஒழிப்பது குறித்த விவாதத்தையே நீங்கள் தான் மொத்தமாய்க் குத்தகைக்கு எடுத்திருப்பது போன்ற தொனி, மிகவும் மிரட்டலாக இருக்கிறதே. உங்கள் இமேஜைக் கொஞ்சம் சரிசெய்து கொள்ளுங்கள். ஏனெனில், அதில் 'பார்ப்பனீய' வாடையும் இதுவரைப்பொத்தி வைத்திருந்த ஒற்றை அதிகாரமுகமும் வெளிப்படையாகிறது. இதில் நீங்கள் எங்கே சாதியற்றவர் ஆகிறீர்கள்? யார் உங்கள் கையில் 'அம்பேத்கரை' ஒரு சிலையாக்கிக் கொடுத்தது?
* சாதிமறுப்பு நடவடிக்கைகளை, தலித் மக்கள் மட்டுமே செய்யவேண்டும் என்றால், 'தலித் அல்லாத’ சாதி ஒழிப்பு நடவடிக்கையில் முழுமுனைப்புடன் ஈடுபடுபவர்களை, முற்போக்குப் பெண்களை நீங்கள் எப்படி அடையாளப்படுத்த விரும்புகிறீர்கள். அம்பேத்கரைக் குத்தகை எடுத்திருப்பவர்கள் மட்டுமே சாதிய மறுப்பு நடவடிக்கைகள் செய்யலாம் என்றால், முதலில் நீங்கள் அம்பேத்கரை முழுமையாக வாசித்துவிட்டு வந்து பணியாற்றுவது தானே சிறப்பாக இருக்கும்.
* 'இப்போது.காம்' சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, நீங்கள் தான் என்னை சாதி அடையாளத்துடன் பார்க்கிறீர்கள். ஏனெனில், இதுவரை நீங்கள் அப்படித்தான் பார்த்துவந்திருக்கிறீகள். பெண்களைச் சாதியாக பார்க்கும் மனம், பார்ப்பனீய மனம். அது என்னைச் சாதியில்லாதவள் என்று அம்பேத்கர் அறிவியலின்படிக் கூட ஏற்கத்தயங்குகிறது. உங்கள் மனதில் உள்ள சாதியத்தந்திரங்களும் மாய்மாலங்களும் ‘மேனிப்புலேஷன்களும்’ வெளிப்படையாகின்றன, என்பதை முழுமனதுடன் நீங்கள் இப்பொழுதாவது ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.
* இதுவரை, படைப்பிலும் எழுத்திலும் நான் முன்வைத்துவந்த, என் சாதிமறுப்பு முன்மொழிதல்களை சமூகத்தின் எல்லா இடங்களிலும் கவனமாகப் புறக்கணித்துவிட்டு, இந்த இடத்தில்வந்து தங்களைச் சாதியமறுப்பாளராக முன்வைப்பது குறித்த உங்கள் பாசாங்குகளை நான் அறியும்போது உங்கள் ஒப்பனை ஒரு நீர்கோலம் அழிவதைப் போல கலைவதை உணர்கிறேன். வன்மையான கண்டனங்களை முன்வைக்கிறேன். வட்டத்தை வரைந்து கொண்டு, சமூகத்தளங்களில் வீறு கொண்டு எழுதி முன்னகரும் பெண்களை வட்டத்திற்கு வெளியே நிற்கச்சொல்லும், தங்கள் தங்கள் சாதிகளின் வன்முறைகளிலிருந்து வெளியேறத்துடிக்கும் பெண்களை ஒற்றைமுனை சாதிஅதிகாரத்தால் கண்டிக்கமுயலும், உங்களின் தடிகள், காவல்துறையின் தடிகளை விட வன்மம் நிறைந்தவை.
* சாதிஒழிப்பிற்கு, 'தலித்' பிரிவைச் சேர்ந்த கருத்தியலாளராகவோ அல்லது, 'சாதியற்றவர்' என்று கூக்குரலிட்டுக்கொள்வதோ மட்டுமே போதுமானது இல்லை. சமூகத்தின் குறுக்குவெட்டில் இறங்கி, சாதி நிறைந்த சமூகத்திடம் சாதிபற்றிய உரையாடல்களை நிகழ்த்தும் பெருமனம் இல்லாத, 'எக்ஸ்க்ளூசிவ்னெஸ்' சாதிமறுப்பு போலித்தனமானது, கண்டனத்திற்குரியது. தான் மட்டுமே தலைவராகவேண்டும் என்ற ஆசைகொண்டது. யாரையும் உள்ளடக்கிக்கொள்கிற, எவரையும் உள்ளடக்கிக் கொள்ளும் மனமற்ற, சிந்தனையற்ற போக்கு, அதே பார்ப்பனீய போக்கு தான் இன்னும் இன்னும் வன்முறைகளை அதிகப்படுத்துகிறது.
* இன்றைய தினத்தில், ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. படைப்பாளியும் அரசியல் தலைவருமான சிவகாமி அவர்களுடன் இரண்டு வருடங்கள் தொடர்ந்து களப்பணியில் பணியாற்றி வந்தக் காலத்தில், வம்படியாய் என்னை சிவகாமியிடமிருந்து பிரித்தார்கள். ஒரே காரணம், ‘தலித் அல்லாதவர்’ அந்தத் தலைவருடன் இணைந்து பணியாற்றத் தகுதியற்றவர் என்பது தான். இத்தனைக்கும் சிவகாமி அவர்களுடன் என்னுடைய களப்பணியும் உறவும், எந்தத் தரச்சோதனைக்கும் தயாரானது.
* இத்தனை வருடங்களும் எப்படிப் பெண்ணியவாதிகள், பார்ப்பனீய சிந்தனைப் பதிப்பகங்களுடனும், படைப்பாளிகளுடனும் ‘க்யூ’வில் நின்று தங்கள் பெண்ணியவாதத்தைத் தொடர்ந்தபோது, நான் மட்டும் எதிர்த்திக்கில் நின்று தொடர்ந்தேனோ அது போலவே இனியும் என் உரையாடல்களையும் விவாதங்களையும் தொடர்வேன். இப்படியான, ஒரு நகைமுரணான சம்பவம் (இப்போது.காம்) தரும் வாய்ப்பிற்காக நான் மிகவும் காத்திருந்தேன் என்று தான் சொல்லவேண்டும். 'பெண்ணியவிவாதமும்' அதன் பாசாங்குகளும் இதனால் வெளிச்சத்திற்கு வருகின்றன.
* நான் நாசமாகப் போவது இருக்கட்டும். (முதலில், 'நாசமாய்ப் போவது' என்று பேசுவது பகுத்தறிவு வாதமும் அன்று. உங்கள் பகுத்தறிவுவாதத்திற்கு அழகும் அன்று.) நான் ஒழிக்க முடியாது போன சாதிஆணவக் கொலைகளை நீங்களேனும் ஒழித்தால், ஒரு சாதாரணக் குடிமகளாக நான் உங்களுக்கு மிகவும் கடன்பட்டிருக்கிறேன்.
* இந்த இலட்சணத்தில் ‘ஆண்'சாதிமறுப்பாளர்களின் குறுக்கீடுகள் வேறு.
வாருங்கள். உரையாடலைத் தொடர்வோம்.

~ குட்டி ரேவதி

ஒரு தமிழ்சினிமாவிற்கான நடிகை தேடும் படலம் இன்னும் ஓயவில்லை!

நம்பர் 1 நடிகைகள் யாரும் நம் சுயமான, அசலான கற்பனைக் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமாக இருப்பதில்லை. ஸ்மிதா பட்டேல், தன் 31 வயதுக்குள் ஒரு நடிகையாகச் செய்த சாதனைகள் அபாரமானவை. தான் நடித்த கலைப்படங்கள் வழியாகவும் வணிகப்படங்கள் வழியாகவும் இந்தியப் பெண் ஆளுமையையும் மனோபாவத்தையும் திரைக்குக் கொண்டு வந்ததில் இவர் ஒருவருக்கே முதன்மையான இடம் என்று சொல்லலாம். இருவகை சினிமாவையும் தன் ஒட்டுமொத்த ஈடுபாட்டால் நேர்மையாகக் கையாண்டவர், ஸ்மிதா பட்டேல்

ஆனால், இன்று இந்தியப்பெண்களின் உளவியலை சற்றும் தொடாத வணிகப்படங்களுக்கு இடையே நாம் உழன்று கொண்டிருக்கிறோம். தமிழ்ப்படங்களின் நிலை இன்னும் அவலமானவை. இன்றும் தமிழ்ப்படங்களில் நடிக்க, தமிழ் பேசத்தெரிந்த, தமிழ் சமூகவியலை அடிப்படை அளவிலேனும் உணரக்கூடிய, உடலிலும் உடல் மொழியிலும் பன்முகப்பெண் ஆளுமையை ஏற்கக்கூடிய, நம் வெயில் காய்ந்த தோலின் நிறமுடைய, நடிப்பு என்பதன் சிறுமைகளை மீறி ஓங்கி நிற்கக்கூடிய நடிகைகளுக்குப் பஞ்சம் தான். இத்தகைய தேவைகளுக்கெல்லாம் நம்மிடம் இருக்கும் ஒரே மைல் கல், ஸ்மிதா பட்டேல் தான்.
முதல் விடயம்: தமிழ்ச்சமூகத்திலிருந்து தமிழ்க்குடும்பங்களிலிருந்தெல்லாம் பெண்களை நடிப்புத்துறைக்கு அனுப்புவதில்லை. இதற்கு நாம் பயன்படுத்தும் இழிவான ஒரே வார்த்தை, அது 'கூத்தாடி'த் தொழில் என்பதே. உண்மையில், திரையில் மற்றும் திரைத்துறையில் ஒரு பெண் நடிகையாக இயங்குவதற்கு பெரும் ஆற்றல் தேவைப்படுகிறது. அவ்வாறு இருப்பதற்கான சவால்கள் சகமனிதராகக் கூட, நாம் இன்னும் அறியாதவை. அதன் உடல் அரசியலும் எதிர்கொள்ளவேண்டிய ஆண்மைய புரிதலும் வேறு எந்தத்துறையை விடவும் அதிகமானவை. பெண் உடல் அரசியலை முழுமைப்படுத்தும் பெண்ணியமும் பெண்உரிமையும் அங்கே தான் முளைத்துவர வேண்டியிருக்கிறது.
இரண்டாவது விடயம்: ஒரு பக்கம் நடிகையை இழிவுபடுத்திய படியே, அவர்களை மிகையான வெளிச்சத்தில் நிறுத்திவைக்கும் வணிக ஃபார்முலாக்களின் அங்கமாகவும் நாம் தான் இருக்கிறோம். இன்று, நமக்கு (எனக்கு)த் தேவை, ஸ்மிதா பட்டேல் போல ஒரு நடிகை. முழுமையான மனவெழுச்சியும் தொழில்சார்ந்த அக்கறையும் உள்ள பெண்களை மற்ற மொழிகளிலிருந்து கண்டிப்பாக இறக்குமதி செய்யமுடியாது. வணிகமும், அங்கீகாரமும், சிந்தனையும் மொழி சார்ந்ததாக இருக்கும்பொழுது 'பாவனை'யை மட்டும் மற்ற மொழிநடிகைகள் வழியாக எப்படி இறக்குமதி செய்யமுடியும்?
நம் வெப்பப்பிரதேசத்தின் கனன்ற தோல் கொண்ட, கருத்த முடியும் பெரிய, கூர்மையான விழிகளும் கொண்ட, நம் ஒட்டுமொத்த பெண் சமூகத்தின் மீதான பரிவைக் கொண்ட நடிகை யாராக இருந்தாலும் அவர் அடுத்த 'ஸ்மிதா பட்டேல்' ஆகக்கடவர். ஸ்மிதா பட்டேலின் பெருமைகளைப் பேசிப்பேசியே, அங்கேயே பெண் நடிப்பின் சவாலை நிறுத்திவிடமுடியாது. தமிழ்த்திரைத்துறை ஒவ்வொரு நடிகை வழியாகவும் நிறைய கற்பனைகளையும் புனைவுகளையும் முன்வைக்கத் தயாராக இருக்கிறது.



குட்டி ரேவதி

ஏன் நமக்கு 'அம்பேத்கரியம்' அவசியம்?






கொள்கைகளில் பிரச்சனை இல்லை. அதைப் புரிந்துகொள்ளும் நம்மிடம் தான் சிக்கல் இருக்கிறது!
பல உதாரணங்கள் பார்த்துவிட்டேன்.


தங்கள் தங்கள் துறைகளில், போராடி முன்னேறி வரும் பெண்களாகிய நாம், போராட்டத்தின் பொழுது, தம் நம்பிக்கைக்கு நெஞ்சிற்கு உறுதுணையாக இருக்கும், 'இயக்கத்தையும்', 'கொள்கைகளையும்', 'கருத்தியலையும்' பற்றிப்பிடித்துக்கொள்வதுடன்,
அந்த இயக்கத்தில், கருத்தியலில், கொள்கையில் கால் ஊன்றி நிற்கும் 'ஆண்களை'யும் நெஞ்சார நம்புகிறோம். அந்த ஆண்களை வாழ்க்கைத்துணையாக, நண்பர்களாக, காதலராக ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால், தனக்கும் அவருக்கும் இடையே உறவுசார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் போது, இயக்கம், கருத்தியல், கொள்கைகள் தாம் அந்தப் பிரச்சனைக்குக் காரணம் என்று வெகு எளிதாகச்சொல்லி விடுகிறோம்.
இதற்கிடையில், அந்த ஆணின் பின்னணி, சாதி, குடும்பம், அது தவிர நம் புரிதலில் இருக்கும் குறைபாடு என பல காரணங்களை வெகு எளிதாகவும் வசதியாகவும் மறந்துவிடுகிறோம். சம்பந்தப்பட்ட அந்த ஆணை விட, நாம் தாம் அரைகுறையாகக் கருத்தியலை, கொள்கையை உள்வாங்கியவராக இருந்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள மறுக்கிறோம்.


உண்மையில், இது மிகவும் பிற்போக்கான சிந்தனை.
பெரியாரியம் விடயத்திலும் சரி, தமிழ்த்தேசியம் விடயத்திலும் சரி, கம்யூனிச விடயத்திலும் சரி, இதுவே போக்காக உள்ளது.
எனக்கென்னவோ, ஆண்கள் எல்லா இடங்களிலும் ஆண்களாகவே, ஆண்களுக்கான அதிகார விடயங்களுடன் இருப்பதற்கான வாய்ப்பையே உலகமும், சமூகமும், இயக்கங்களும் அவர்களுக்கு நல்குகிறது.
இவ்விடயத்தில், நாமும் இவ்வாறு பாரபட்சமான அணுகுமுறையைக்கொண்டிருப்பது இன்னும் நம் வலிமையைக் குலைக்கவே செய்யும்.
இதோ, இப்படி இவ்விடயத்தை அணுகுவதற்கான நம்பிக்கையும் புரிதலும் 'எனக்கு' வந்திருப்பதே கூட, ஏன், 'உங்களுக்கும்' ஏற்பட்டிருப்பதே கூட இவ்வியக்கங்களினால், கொள்கைகளால் தாம்.


நடைமுறையில், 'அம்பேத்கரியம்' தான் மேற்சொன்ன இயக்கங்களில் எல்லாம் இருக்கும் வெற்றிடங்களை ஆண்களிடமும், பெண்களிடமும் ஒரு சேர நிரப்பமுடியும் என்பது என்னுடைய நம்பிக்கை.
சமீபமாக, நிறைய பெண்கள் தங்கள் சொந்தவாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகளை, சம்பந்தப்பட்ட இயக்கத்தின் கொள்கைகளுடன் போட்டுக்குழப்பிக் கொள்கிறோம்.


இதற்கு காரணம், இந்தக் கொள்கைகள் அவசியப்படும் இந்தச் சமூகத்தில் பெண்களும் ஆண்களும் தனித்தனி மனிதர்கள் இல்லை. ஒருவருடன் ஒருவர் பின்னிப்பிணைந்தவர்கள் என்பதை ஆண்களைப் போலவே, பெண்களும் தங்கள் வசதிக்கேற்ப மறந்துவிடுவது தான்.
கொள்கைகளில் பிரச்சனை இல்லை. அதைப் புரிந்துகொள்ளும் நம்மிடம் தான் சிக்கல் இருக்கிறது. கொள்கைகளின் திசைகளைத் திருகி மாற்றமுடியாது. மனிதர்களின் மனோபாவங்களை, அணுகுமுறைகளை இத்தகைய நம் புரிதலின் வழியாக வெகு எளிதாக மாற்றிவிடலாம்.


குட்டி ரேவதி

காமப்பாழி; கடவழி; படுகுழி; பெருவழி; இடைகழி!


தமிழில் மாதவிடாய் அனுபவங்கள் குறித்தப் பெண்களின் பார்வைகளே கூட ஆரோக்கியமானவையாக இல்லை. ஆண்களின் எழுத்துப்பதிவையும் சொல்வழக்கத்தையும் கேட்கவேண்டாம்.

ஆவணப்பட இயக்குநர் கீதா இளங்கோவன் அவர்களின் ஆவணப்படம் மட்டுமே அதை நடைமுறையில் உள்ள சமூகச்சிக்கலாய் முன்வைத்திருந்தது.

எழுத்தில் இதுவரை, ஓர் அரைகுறையான பார்வையாகவும், சமூகம் வழங்கிவந்த அபத்தங்களை ஒட்டிவந்ததாகவுமே இருந்துள்ளது.

சித்தமருத்துவத்தில், அது பெரும்பாடு என்று வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான, சித்தமருத்துவச்சொற்கள் ஆண்கள் சொல்வதற்கும் புழங்குவதற்கும் ஏற்றவகையிலும், சமூகக்கட்டுப்பாடுகளுக்கு இயைந்த முறையிலும் தான் உருவாக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் ஒரு திரையிடல் நிகழ்வில், புகழ்பெற்ற தமிழ்த்திரைப்பட வசனகர்த்தா, தன்னாலும் கெட்ட வார்த்தையை எழுத்தில் பயன்படுத்த முடியும் என்று காட்டுவதற்காக, 'தூமை' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்ததை, பிரீத்தம் அவர்கள் சுட்டிக்காட்டினார். அவ்வளவு தான் அவருக்கு மொழியறிவு என்று கடந்து போகவேண்டியிருந்தது.

உண்மையில், மனித இனத்தின் உயிர்வெளியை, விளைநிலத்தைக் குறிக்கும் உடலியங்கியலே மாத உதிரப்பெருக்கு. பெண்ணுடலின் கருநிலத்தை உழும் செயல்பாடாகவே அது நோக்கப்பட்டுள்ளது.

இன்னும் சொல்லப்போனால், அது பெண்ணின் நொய்மையான கணங்களாகவும், இரக்கம் கோரும் சந்தர்ப்பமாகவுமே சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெண் உடல் நலனின் ஒரு முக்கியமான குறியீடு.

உடலுக்கு ஊட்டமான உணவையும் உணர்வுகளையும் கொடுக்கவேண்டிய பருவக்கட்டாயத்தை வலியுறுத்தும் ஓர் அவசியம். உளச்சிக்கலுக்கு ஆளான பெண்ணின் உடலில் உதிரப்பெருக்கையும் அதுசார்ந்த சிக்கல்களையும் அந்தந்த மாதத்திற்கு ஏற்றாற்போல சிம்டங்களாக (குறிகுணங்களாக) காணமுடியும்.

பெண் உடலும் ஆண் உடலும் இணைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் இயற்கையின் முதிர்ச்சி.
ஆனால், பெண்களின் உடல் பலவீனமாகவும், நொய்மையாகவும், அருவெறுப்பானதாகவும், இழிவாகவும், ஓர் அபாயமாகவும் பார்க்கும் வழக்கம் மதங்களின் ஆளுகையினாலும் சாதிக்கு ஏற்றாற்போன்ற வழக்கங்களினாலும் செய்யப்பட்ட முதன்மையான சூழ்ச்சி.

பெண் உடல் பற்றிய அறிவு கொண்டவர்கள், இரத்த ஊற்றின் மூலத்தையும் சுழற்சியையும் தொடர்ச்சியையும் தெளிவாக உணர்ந்துகொள்வர். அதை ஒரு கறையாகப் பார்க்கமாட்டார்கள்.

ஓர் இணையச்சுட்டியைப்பார்த்தேன். உதிரப்பெருக்கிற்கு எதிரான பார்வை பெண்களுக்கு இடையே நிலவுவதை கார்ட்டூன்களாக்கியது போல் இருந்தது. கீழே கொடுத்துள்ளேன்.

இதோ, பட்டினத்தார் பாடல் வரிகளைப் பாருங்கள். புகழ்ச்சொற்களின் வழியே ஓர் இழிவறிவு போல் இருக்கும்.
"காமப் பாழி; கருவிளை கழனி;
தூமைக் கடவழி; தொளைபெறு வாயில்;
எண்சாண் உடம்பும் இழியும் பெருவழி!
மண்பால் காமம் கழிக்கும் மறைவிடம்;
நச்சிக் காமுக நாய்தான் என்றும்
இச்சித் திருக்கும் இடைகழி வாயில்;
திங்கள் சடையோன் திருவருள் இல்லார்
தங்கித் திரியும் சவலைப் பெருவழி;
புண் இது என்று புடவையை மூடி
உள் நீர் பாயும் ஓசைச் செழும்புண்;
மால்கொண்டு அறியா மாந்தர் புகும்வழி;
நோய் கொண்டு ஒழியார் நுண்ணியர் போம்வழி;
தருக்கிய காமுகர் சாரும் படுகுழி;
செருக்கிய காமுகர் சேருஞ் சிறுகுழி;
பெண்ணும் ஆணும் பிறக்கும் பெருவழி;
மலம் சொரிந்து இழியும் வாயிற்கு அருகே
சலம்சொரிந்து இழியும் தண்ணீர் வாயில்;
இத்தை நீங்கள் இனிது என வேண்டா;
பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி
மெச்சிச் சிவபத வீடருள் பவனை"


குட்டி ரேவதி

பிரசவ அனுபவங்கள்


சித்த மருத்துவப்பட்டப்படிப்பின் நிறைவில் அரைவருட மருத்துவப்பயிற்சிக்காகத் தான் சென்னை வந்தேன். 1999. அதில் ஒரு மாதம், எந்த நவீனமருத்துவமனையிலும் நாங்கள் விரும்பிய பயிற்சியை எடுத்துக்கொள்ளலாம் என்ற வாய்ப்பு. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், பிரசவ வார்டில் பகலும் இரவும் என்ற பயிற்சியை நான் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். சித்தமருத்துவத்திற்கான அரசின் ஆதரவும் நவீனச்சமூகத்தின் புரிதலும் மிகவும் அற்பமானது என்பதால், அப்பொழுது எனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் மிகவும் அருமையாகவும் முக்கியமாகவும் கருதினேன். அதன் ஒவ்வொரு அனுபவத்தையும் சேர்த்துக்கொள்ளத் துடித்தேன்.

அரும்பாக்கத்தில் நான் தனியே தங்கியிருந்த வீட்டிலிருந்து, தினமும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை சென்று வரவேண்டும். அன்றைய நாட்கள், முறையற்ற காலஅட்டவணையைக் கொண்டிருந்தன. சென்னை இன்றைய பொழுதுகளை விட மெதுவாகவும் குறைந்த சலனங்களுடனும் நகர்ந்ததாக ஞாபகம்.

பிரசவ வார்டு முழுக்க, எப்பொழுதும் பெண்கள் வலியில் கதறியபடி இருப்பார்கள். அரைகுறை வளர்ச்சியில் தாயின் உடலுக்குள்ளேயே மரித்துப் போன சிசுக்களின் கருவழிப்புப் பணியும் நடக்கும். எப்பொழுதும் நொய்மையும் பதட்டமும் நீடிக்கும் மருத்துவப்பகுதியாக அது இருந்தது. ஒவ்வொரு முறை உடலுறவின் போதும் பெண்ணின் தொடையில் சிகரெட்டுகளால் சூடிட்ட வடுக்களைக் கொண்ட பெண்ணையும், நீண்ட காலம் குழந்தையில்லாமல் கருவுற்ற சிசுவும் கருவழிந்து போனநிலையில் தன் உயிருக்காகப் போராடிய பெண்ணையும், உடலெல்லாம் எலும்புகள் துருத்தி நிற்க வயிறு மட்டும் அளவுக்கதிகமாகப் புடைத்திருக்கும் வறுமை சூழ்ந்த பெண்களையும், பிரசவத்தின் பொழுது மரித்துப் போன பெண்களையும் அங்கு தான் கண்டேன். அதிக வலியில் பெண் கதறி அழும்போதோ, 'புருஷனுடன் படுக்கும்போது இனிச்சிது இல்ல, எப்ப என்ன கத்துற!' என்ற குரல் பின்னாலிருந்து கேட்கும்.

பெண் உடலின் வலிமையையும் அவலத்தையும் ஒருசேர 'பிரசவ வார்டில்' தான் உணரமுடியும். வார்டுக்கு வெளியே, குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் எல்லோரும் தோய்ந்துபோயிருக்க, உள்ளே தாய் வலி குறையும் நிம்மதியுணர்வில் ஆழ்ந்திடத்தொடங்கியிருப்பாள். சமீபத்தில், என் தோழியின் ஏழுமாதக் கருஉடலில் மருத்துவர்கள் ஊனம் கண்டறியக் கருவின் இயக்க நிலையைத் துண்டிக்கவேண்டியிருந்ததாகக் கூறினாள். அது அவளுக்கு மிகுந்த மனப்பேதலிப்பைக் கொடுத்ததாகக் கூறினாள். ஆனால், அது கிட்டத்தட்ட குழந்தையை ஈன்ற மனநிலைக்கே தன்னைக் கூட்டிச்சென்றதாகவும், கொடுமையான கனவுகள் பீடித்த உறக்கம் கொண்டதாகவும் கூறினாள்.

பெண் உடல், ஓர் இயந்திரம். சமூகப்பாத்திரம். தாய்மை, பெண்மை என்றெல்லாம் போற்றப்படும் பெண்ணின் உடல் கருவுறும்போது கொள்ளும் வளர்சிதை மாற்றங்களும், உருச்சிதைவும், சுமக்கும் அவலங்களும் நிறைய. இதில், பெண் வகிக்கும், ஏற்கும் சமூகப்பொறுப்பும், ஆளுமையும் கூட அதிகம். ஆனால், அதுவெல்லாம், கவனத்தில் கொள்ளப்படாது, சமூகத்தின் எல்லா தாழ்வான முறைகேடுகளையும் சுமக்கும் ஒரு பெண்ணாக அழுத்தப்படுவதும் இந்நிலையில் தான்.


குட்டி ரேவதி

ஃபேஸ்புக் உறவுகளும் சலித்துப்போகும்!


அன்று விடியும் முன்னேயே அந்தப்பெண் என்னைத் தொலைபேசியில் அழைத்தாள்.
காதலித்துத் திருமணம் செய்து கொண்ட தன் கணவன் தன்னைப் பொருட்படுத்தாமல், பிற பெண் தோழியருடனேயே ஃபோன், சேட், ஃபேஸ்புக் என்று தன் முழுநேரத்தையும் கழிப்பதாகவும், தன் முகத்தையே பார்க்கப்பிடிக்கவில்லை என்று கூறுவதாகவும்,

ஆனால், தன் வருமானத்தை அவரது பயன்பாட்டிற்குப் பயன்படுத்திக்கொள்வதாகவும், மாதந்தோறும் வீட்டு வாடகை இன்னபிற செலவுகளைத் தானே ஏற்கவேண்டும் என்று நிர்ப்பந்திப்பதாகவும் கூறினாள். இத்தனைக்கும் அது ஒரு காதல் திருமணம்.
ஆனால், இதுபோன்ற பிரச்சனைகளை நாம் கேட்பதும், பார்ப்பதும் முதல் முறை அல்ல.
சமூக வலைத்தளங்களின் தாக்கமும் புழக்கமும் அதிகரித்த பின்னர், ஆண்களுக்குப் பெண் தோழியரும், பெண்களுக்கு ஆண் தோழர்களும் இதுவரை எப்போதுமல்லாது கைக்கெட்டும் தூரத்தில் எளிதாகக் கிடைப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமே.
பள்ளிகளில் பெண் - ஆண் பாலார் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்தோருக்கும், தம் சகோதரிகளிடமே நெருக்கமாகப் பழக்கும் வாய்ப்பு கிட்டாதோருக்கும் ஃபேஸ்புக் மடை திறந்தாற் போலாகிவிட்டது. நாம் அத்தகைய இறுக்கமான காலத்திலிருந்து வெகுதூரம் நகர்ந்து வந்திருக்கிறோம்.

நீண்ட நாள் தான் விரும்பிய காதலியே சலித்துப் போகும் போது, இந்த ஃபேஸ்புக்கும் ஃபேஸ்புக் பெண்களும் நட்புகளும் கூடச் சலித்துப் போகும் இல்லையா?

ஃபேஸ்புக் உறவுகள், வீட்டில் இருப்போரை விட இனிமையாக இருப்பது போலத் தோன்றக்காரணம், அவர்களின் உடல் நலன், அன்றாட வாழ்வு, செலவுகளில் நாம் ஏதும் பொறுப்பேற்கவேண்டியதில்லை என்பதே.
பொறுப்பேற்கும் இடங்களில் இருந்து, ஆண்கள் தப்பிப்பதற்கு நவீன வாய்ப்பாக ஃபேஸ்புக்கும் ஆகிவிட்டது வெளிப்படையாகிறது.

தன் வீட்டில் தன் அம்மா, சகோதரியர், மனைவியுடன் கொஞ்சமும் நேரம் கழிக்காது, இந்தத் தற்காலிக இன்பத்திற்கு ஆட்பட்டு, வீட்டில் இருப்போரைப் புறக்கணிப்பது எந்த வகையில் நியாயம்.

ஏழெட்டு வருடங்கள் காதலித்து விரும்பிய பெண் மீது சலிப்பு ஏற்படுவது போன்ற தோற்றத்தைத் தரும் ஃபேஸ்புக் பெண்களும் உறவுப்புழக்கமும் கூட கூடிய விரைவில் சலிப்பைத் தரும். விர்ச்சுவல் வெளியில் எல்லாமும் மாயமாகிப் போகும். வெறுமை சூழும்.

இந்தச் சலிப்பை வெல்வதற்கு முதன்மையான வழி, நம்முடன் நேரடியான உறவிலும் தொடர்பிலும் இருப்போருக்கு முதலில் அன்பையும் அக்கறையையும் காட்டுவது அவசியம். அவர்களின் நல்வாழ்விற்குப் பொறுப்பேற்பது போன்ற இன்பமும் எழுச்சியும் ஏதுமில்லை.

காலம்செல்லச்செல்ல, 
சினிமாவில் பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்தவருக்கே, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துவைக்கும் கொடுமையான நிகழ்வு போலவே, காதலித்தவரையே கல்யாணம் செய்வதும் ஆகிவிடும் போலிருக்கிறது.

அந்தப் பெண்ணின் குரலில் இருந்த நிம்மதியின்மை என்னையும் தீவிரமாக ஆட்கொண்டிருக்கிறது. அதற்குப் பின், அந்தப்பெண்ணைத் தொடர்புகொள்ளமுடியவில்லை.

இந்தப்பெருநகரில் அவள், முதலில் தன் மீது அக்கறை கொண்டவளாக ஆகவேண்டுமென விரும்புகிறேன்.

குட்டி ரேவதி

நான் அவதூறுகளைக் கையாளும் முறை!




வணக்கம். இப்படி ஒரு பதிவை நீண்ட நாளாகவே எழுதவேண்டுமென்று நினைத்திருந்தேன். இப்பொழுது எழுதுவது சரியாக இருக்கும் எனத்தோன்றுகிறது.

எழுத வந்தது முதலே கடும் அவதூறுகளைச் சந்தித்து வந்திருப்பவள் தான் நான் என்பதால் இப்பொழுது எதுவுமே என்னைப் பாதிப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், கடந்து போகவும், அதன் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளவும் போதுமான சமூகநிலையை நான் நன்கு உள்வாங்கியிருக்கிறேன்.

எனக்கு எந்த ஒரு சக படைப்பாளியின் அங்கீகாரமும், விருதும், பாராட்டும் தேவையே இல்லை.

எழுத்துத்துறையில் மட்டுமன்றி, தனிப்பட்ட விதத்திலும் படைப்பாளிகளின் தொடர்ந்த குறுக்கீடுகளால் எதிர்ப்புகளைச் சந்தித்துக்கொண்டே தான் இருக்கிறேன். இது எப்பொழுதாவது குறையும் அல்லது இல்லாமல் போகும் என்று நான் நினைக்கவில்லை. நாளுக்கு நாள் அதிகரிக்கத்தான் வாய்ப்பிருக்கிறது.

நாம் பெரிய படைப்பாளிகள் என்று நம்பிக்கொண்டிருந்தவர்கள் கூட, தம் எதிர்வினைகளாலும், அவதூறுகளாலும் தம் இயலாமையை, போதாமையை வெளிப்படுத்தித் தம் ஆளுமைச்சிதைவை எனக்குக் காட்டியுள்ளனர். பொதுச்சமூகத்தில் எழுத்தும் மொழியும் உணர்வாக அன்றி அறிவாக மாறுவதை வெளிப்படையாகப் பார்க்கிறோம். காலங்காலமாக, 'படைப்பாளி' என்ற டைட்டிலை தாங்கள் மட்டுமே அனுபவித்து வந்த அதிகாரச்சுகத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள இவர்களின் மனம் ஒப்பவில்லை என்ற உண்மை தான் என்பதாக இதை எடுத்துக்கொள்ளலாம்.

பெண்கள் பன்னாட்டுப் படைப்பாளியாக மாறுவதையும், பன்னாட்டுத் தமிழர்களுடன் உரையாடக் கிடைக்கும் வாய்ப்பையும் வெறும் சலுகையாக, அல்லது ஒரு பாலினத்திற்கான பாரபட்சமாக எடுத்துக்கொள்வது அழகாகாது. அது உங்கள் மனதில் இயங்குவது. அது
அறிவாகாது. பள்ளிக்கல்வியைக் கூட இன்னும் எட்டாததாகும்.

எழுத வந்து பதினைந்து வருடங்களில், என் நூலை வெளிநாட்டுக்குக் கொண்டு சேர்க்கும் எந்தப்பெரிய பதிப்பகத்துடனும் சமரசம் செய்து கொண்டு என் நூலை கொண்டு வந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், என் நூல் வெளிநாடுகளுக்குச் சென்றதே இல்லை.
ஆகவே, இங்கிருக்கும் படைப்பாளிகள் பதட்டம் கொண்டு அவதூறு காட்டுவதெல்லாம் அவர்களின் பொறாமையை, நிலைகுலைவைத்தான் காட்டுகிறது.

இன்னும் அவதூறுகள் வரலாம், விமர்சனம் செய்யலாம். தொடர்ந்து செய்யுங்கள். என் படைப்புகளுடன், செயல்பாடுகளுடன் குறுக்கிடுங்கள். அதுவே, நீங்கள் செய்யவேண்டியது என்பது என் எதிர்பார்ப்பு. நாம் செய்யவேண்டியது, உங்களுக்கு மறுமொழி சொல்வதோ உங்கள் விமர்சனக்குரலுக்குப் பொருள்விளக்கம் கொடுப்பதோ இல்லை.

மாறாக, உங்கள் அவதூறுகளைகளை வழக்கம் போலக் கடந்து செல்வதே!

நன்றி.




குட்டி ரேவதி

பெண் எழுத்தாளர்கள் மீது ஆண் எழுத்தாளர்கள் கொள்ளும் வெறுப்பு! - இயங்கியல் பார்வை


குட்டி ரேவதி






இன்று தான் என்று இல்லை. பெண்கள் எழுத வந்த முதல் கணம் முதலே பெண் எழுத்தாளர்கள் மீதான வெறுப்பும், சந்தேகங்களும் சமூகத்திடம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அது வரை, ஆணின் ஆளுமைகளையும், குடும்பம், திருமணம், சாதி, மதம் இன்ன பிற, ஆணுக்கு இசைவான அமைப்புகளையும், ஆண் ஏற்ற அதிகார அடையாளங்களையும் கட்டிக்காக்கும் பொறுப்புகளை மட்டுமே நிறைவேற்றி வந்த பெண்கள், தம் கைக்கு மொழி கிடைத்ததும், சிந்திப்பதைப் பதிவு செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டனர். ஆனால், இதுவும் காலங்காலமான தடைகளுக்குப் பின்பு தான் நிகழ்ந்தது. எல்லா வர்க்கப்பெண்களுக்கும், எல்லா சாதியைச் சேர்ந்த பெண்களுக்கும் இது ஒன்று போல, ஒரே சமயத்தில் நிகழவில்லை. இந்தியாவின் பார்ப்பனப் பெண்களின் இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எழுதிக்கொண்டிருக்கும் போது தான், பிற இடைநிலைச் சாதிகளின் முதல் தலைமுறை, எழுத வாசிக்கவே கற்றுக்கொண்டிருந்தனர். இன்றும் இன்னும், தாழ்த்தப்பட்டவர்களின் பெரும்பகுதியும், பழங்குடிப் பெண்களின் பெரும்பகுதியும் எழுத்து மொழியைப்பெறாமல் இருக்கிறார்கள் என்பதையும் நாம் இவ்விடத்தில் நினைவில் கொள்ளவேண்டும்.

பெண்கள் எழுத வரும்போது, சமூகத்தில் உருவாகும் பதட்டம் என்பது, நிறைய விடயங்களை அம்பலமாக்கும் என்பது தான். அது வரை மறைத்தலுக்கும் மறந்துபோதலுக்கும் ஆளான வாழ்க்கைச் சம்பவங்கள், அது சார்ந்த முறையீடுகள் எல்லாம் பகிரங்கமாகத் தெரிய வந்து, இது வரை தாம் அனுபவித்து வந்த அதிகாரங்களையும் சமூக மரியாதைகளையும் குலைக்கும் என்பதை ஆண் எழுத்தாளர்கள் உள்ளிட்ட, அதிகாரங்களை அனுபவித்தவர்கள் அறிந்தது தான். நான் எழுதுவது ஒன்றும் புனைவு இல்லை. கடந்த கால நாவல்களிலும், திரைப்படங்களிலும் தெளிவாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இதை விட, அதிகமாகவும் ஆண் சமூகத்தை அச்சுறுத்துவது, பெண் தன் கற்பனைகளை எழுதத்தொடங்கிவிடுவாள் என்பதும், அதற்காகவே கற்பனை செய்வதை ஓர் ஆற்றலாக்கிக் கொள்வாள் என்பதும் தான். இதற்கு முன், பெண்கள் கற்பனை செய்வதற்குக் கூட வாய்ப்பு தராத சமூகச்சூழல் தான் எப்பொழுதும் வழங்கப்பட்டிருந்தது. தரவேற்றம் செய்யப்பட்டதை ஓர் இயந்திரம் போல, ஆணைகளுக்கு ஏற்ப அவளால் நிறைவேற்றமுடியும். அவ்வளவே.

இன்று நிலைமை மாறிவிட்டது. குறிப்பாக, மீனவர் பெண்கள், தாழ்த்தப்பட்ட பெண்கள், மதச்சிறு பான்மையினர், உழைக்கும் பெண்டிர், பாலியல் வாழ்வைத் தொழிலாக ஏற்றவர்கள், அதிகாரத்திற்கு எதிரான போராட்ட வாழ்வைத் தம் வாழ்வாக ஏற்றுக்கொண்டவர்கள் என எல்லோரும் எழுத வந்துவிட்டனர். இதனால், ஏற்படும் "பாதுகாப்பின்மை உணர்வு" ஆண் எழுத்தாளர்களைப் பதட்டம் நிறைந்தவர்களாக ஆக்கியுள்ளது. இதுமட்டுமன்று, இந்தப் பாதுகாப்பின்மையை நான் எழுத வந்த காலத்தில், இப்படித்தான் என்னிடம் செயல்படுத்தினார்கள்: இப்படியெல்லாம் எழுதுவது எழுத்து இல்லை என்றும், இந்தச் சாதியிலிருந்து வரும் எழுத்தை மற்ற சாதியினர் ஏன் வாசிக்கவேண்டும் என்றும், 'நீ தான் எழுதவந்து விட்டாயே, எழுதும் ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளவும், குடிக்கவும் தயாரா?' என்றும் 'பெண்களால் எத்தனை வருடங்களுக்குத் தொடர்ந்து இப்படி எழுதிவிட முடியும்!' என்ற பரிகாசங்களும் பல முனைகளிலிருந்து வந்து கொண்டே இருந்தன. அதை விட எளிதாக, பாலியல் நகைச்சுவையுணர்த்தும் குறிப்புகளையும் பாலியல் அறிவை நமக்கு புகுத்துவதற்கான ஆலோசனைகளையும் கடிதங்களாகவும் மின்னஞ்சல்களாகவும் ஆண் எழுத்தாளர்கள் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அதில், இன்றைய பெரிய படைப்பாளிகள் என்பவர்களும் அடக்கம்.

இம்மாதிரியான அணுகுமுறைகள், ஆண்களுக்குத் தத்தம் சாதிச்செயல்பாடுகளிலிருந்து வருபவையே என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். படைப்புவெளியில், வெவ்வேறு சாதிப் பின்புலத்திலிருந்து வந்த ஆண் எழுத்தாளர்கள் இருக்கின்றனர். ஆனால், பெண்கள் மீதான பாலியல் வெறுப்பை வெளிப்படுத்துவதிலும், கேலி செய்வதிலும் இவர்கள் எல்லோருமே ஒன்று போல இருந்தாலும் அதற்குக் காரணமான பதட்டமும், வெளிப்படுத்தும் விதமும், அவரவர் சாதி அதிகாரம் சமூகத்தில் எந்த இடம் கொண்டிருக்கிறதோ அதற்கு ஏற்றாற் போன்ற "வன்ம அளவுடன்' தான் செயல்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை எந்த நீதிமன்றத்திலும், அல்லது எந்த அறிவியல் பரிசோதனைச்சாலையிலும், நான் வந்து நிரூபிக்கத்தயார். பார்ப்பனர், பிள்ளைமார், முதலியார், நாயர், நாயக்கர், கவுண்டர், நாடார், தேவர், கோனார், வன்னியர் எனத் தத்தம் வீடுகளில், தன்னையொட்டிய சாதிச்சமூகத்தில் பெண்களை நடத்தும் முறையொத்த முறைகளையே பெண் எழுத்தாளர்களிடம் கையாள்வது, இந்த ஆபாசங்களிலேயே மிகவும் சுவாரசியமானது. இதை யாரும் இப்படி நுணுகிப்பார்த்திருக்கமாட்டீர்கள், என்றால் இனி அப்படிப் பார்ப்பதை ஒரு பயிற்சிமுறையாகக் கொள்ளலாம்.

பெண் எழுத்தின் மீதான அச்சமும், வெறுப்பும், ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி ஆண்களின் கண்காணிப்பாக மாறியது. பின், அவள் எழுதுவதில், பாலியல் விடயங்களோ, கல்வி, விவசாயம், அரசியல், வரலாறு போன்ற விடயங்களோ இருந்துவிடக்கூடாது என்பதைத் திட்டவட்டமாக எல்லோரும் உணர்ந்து முழு எதிர்ப்பும் அத்திசையில் திரும்பியது. இப்பொழுது, அது 'பெண் எழுத்தையே' முற்றிலும் நிராகரிக்கும் ஒரு போக்காக மாறிவிட்டது. அதற்கு இந்த வெறுப்புணர்வும், வன்மமும், காழ்ப்புணர்வும் உதவும் என்று அவர்கள் நம்புகிறார்கள். எழுத வந்த தொடக்கக்காலப் பெண்கள், இந்தியச்சாதியச்சமூகத்தின் காட்டுமிராண்டித்தனத்திலிருந்து விடுபடத் தமக்கு தேவையான விடுதலை மற்றும் பிரச்சார முன்மொழிதல்களை மேலைநாட்டுப் பெண்ணியத்திலிருந்து எடுத்துக்கொண்டார்கள். இயல்பாகவே, மேலை நாட்டுப்பெண்ணியம், அங்கு நிலவும் அரசியல் புரிதலின்பாற்பட்டு, ஆண் இனத்தைப் பெண்ணுக்கு எதிராக வைப்பது கெடுவாய்ப்பானது. அந்த முறையையே, இந்தியப்பார்ப்பனீய, ஆதிக்க சாதிப் பெண்களும் முன்மொழிந்ததால், பெண்ணியம் பேசும் பெண், ஆண்களை எதிரியாக, எதிர் இனமாகத் தான் பார்ப்பாள் என்பது நடைமுறையில் பதிந்து போன ஒன்றாகிவிட்டது. தொடர்ந்த எதிர்ப்புக்கு, ஆண்கள் இதையே காரணமாகவும் பார்க்கிறார்கள். உண்மையில், இந்தியப் பெண்களின் மரபணுவிலோ, நினைவுகளின் நரம்புக்கூட்டங்களிலோ கூட, பிழையாகக் கூட, பெண்ணுக்கு ஆண் எதிரி என்று நினைப்பது இந்தியாவில் சாத்தியமாகாது. அத்தகைய பண்பாடு, இந்தியாவில் வேர்விடவே வாய்ப்பு இல்லை. சாதிச்சிக்கல்களும் அதன் மரபார்ந்த அடக்குமுறைகளும் பெண்களுக்கு இருக்கும் சவால்களும் அந்த அளவிற்குக் கொடுமையானவை. 

இத்தகைய பிரச்சனையின் மையம், பார்ப்பன மற்றும் ஆதிக்கசாதி ஆண்கள் தான். இவர்கள், பெண்களைக் காலம்காலமாக இப்படித்தான் பார்த்துவந்திருக்கிறார்கள். தம் பாலியல் இச்சையை, வெறுப்பை, அதிகாரத்தை நிலைநிறுத்தும் வெளிக்காட்டிக்கொள்ளும் இடமாகவே பெண்களை வைத்திருக்கின்றனர். வரலாறு தோறும் இதற்கான சான்றுகள் இலட்சோப இலட்சம் நிறைந்திருக்கின்றன. ஆக, அறிவின் உறைவிடமாகவோ, கருத்தின் பிறப்பிடமாகவோ பெண்கள் மாறுவது, ஆண்களின் தன்னிருப்பை அச்சுறுத்தும் ஒன்று தான். அதிலும் எழுத்து என்பது சிந்தனை முறையைக் கேள்விகேட்கும் பணி என்பதால், இயல்பாகவே ஆண் படைப்பாளிகள் சாதாரண, பழைமைகள் தோய்ந்த, ஒரு சராசரி அவரவர் சாதி ஆண்களாகிவிடுகின்றனர். மொழியில் கையாளவேண்டிய குறைந்தபட்ச அறம் கூட, தேய்ந்துபோய்விடுகிறது. 

ஆனால், தாழ்த்தப்பட்ட மற்றும் சாதி அதிகாரத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கும் பின்புலத்தில் இருந்து வரும் ஆண் படைப்பாளிகள், பெண்களிடம் இது போல நடந்து கொள்வது இல்லை. (இதில், விதிவிலக்குகள் இருக்கலாம். அப்படி இருப்பின், அவர்கள் சாதி அதிகாரத்தை உள்வாங்கிய, பார்ப்பனீயமயமாக்கச் சிந்தனைக்கு இரையாகிப்போனவர்கள் என்று கொள்ளவேண்டும்.) இத்தகைய ஒடுக்கப்பட்டப் பின்னணியிலிருந்து வரும் ஆண்கள், வாழ்வின் எந்தக்கட்டத்திலும் பெண்கள் மீது வெறுப்பையும் வன்மத்தையும் உமிழும் வாய்ப்பை எடுத்துக்கொள்ளவே மாட்டார்கள். காரணம், இவர்கள் எப்பொழுதுமே பெண் பாலியல் ஆற்றலை ஓர் அச்சுறுத்தலாகப் பார்த்தப் பண்பாட்டில் வந்தவர்கள் இல்லை. இன்னொன்று, வரலாற்றின் எந்தக் கட்டத்திலும் தன் மனைவியோ, சகோதரியோ எந்தப் பிறச் சாதி ஆணுடனும் சென்று உறவு கொண்டு விடுவாளோ என்ற அச்சம் இவர்களுக்கு இருந்ததே இல்லை. சாதிக்கலப்பு, ஆதிக்கசாதி ஆண்களுக்கு ஓர் அச்சமாக இருந்தது போன்று, இவர்களுக்கு ஒரு பொருட்டு இல்லை. இவர்கள் ஒடுக்குமுறையின் ஒரு வடிவமாகவும், ஒடுக்குமுறைகளின் போதும், பாலைகளிலும் வனாந்திரங்களிலும் ஆணும் பெண்ணுமாக, கையறு நிலையில் விடப்பட்டவர்கள். அந்த அளவிற்கு, சாதி அதிகாரங்கள் ஏதும் இல்லாதிருந்தவர்கள். இவர்கள் எல்லோருமே, ஆதிக்கசாதி ஆண்படைப்பாளிகள் காட்டும் தற்பொழுதைய வெறுப்புக்கு எதிராக, பெண் எழுத்தின் பக்கம் நின்று அறம் பேணுபவர்கள். ஏனெனில், எந்தப்பெண்ணின் மீது, சாதி வன்கொடுமை நிகழும் போதும், அதைத்தம் சகோதரிக்கும் மகளுக்கும் நிகழ்வதாக உணரும் சிந்தனை உடையவர்கள். 'இசைப்பிரியா' என்ற பெண் மீதான பாலியல் வன்முறையைத் தம் சகோதரி மீதான வன்முறையாகப் பார்க்கும் மாண்பு கொண்டவர்கள்.

பெண்கள் எழுதுதல் என்பது ஒன்றும் எளிதாக நடந்துவிடவில்லை. தமக்கான நேரத்தைக் கண்டுகொள்ளல், தரவேற்றம் செய்யப்பட்ட சுயத்தணிக்கை முறைகளிலிருந்து விடுபடல், சமூகத்தணிக்கைகளைச் சமாளித்தல், இது மீறிய கற்பனை வெளிகளுக்கு உய்யும் வாய்ப்பைத் தேடிக்கொள்ளுதல், பணியிடங்களில் உயர்பதவிகளில் இருக்கும் ஆண் அதிகாரங்களால் பெண் பாலியல் மரியாதைகளுக்கு இழைக்கப்படும் சவால்களைச் சமாளித்துத் தன் இருப்பைப் போற்றுதல், சமரசம் ஆகாதிருத்தல், எந்த அங்கீகாரமும் இல்லாத நிலையிலும் தொடர்ந்து எழுதுதல், பதிப்பக அதிகாரங்களைக் கையாளுதல் எனத் தொடரும் சவால்கள் என்றுமே புதியவை. இன்றும் மாறாதவை. இன்னும் சொல்லப்போனால், தமிழ் ஆண் எழுத்தாளர்கள் சொல்வது போல், பெண்கள் ஒன்றும் ஆண்களின் பாலியல் இச்சைகளுக்கு இரையாகி 'ஊடகப்பிம்பங்களாக' ஆகிவிட முடிவது இல்லை. 'உன்னை எவ்வளவு பெரிய ஆளாக ஆக்கிக்காட்டுகிறேன்!' என்ற பசப்பு வார்த்தைகளுடன் வந்த ஆண் படைப்பாளிகள், அத்தகைய பெண்களைச் சமூக வெளிச்சத்திலிருந்து முற்றிலுமாக விலக்கி, இருட்டடிப்பு தான் செய்திருக்கிறார்கள். இத்தகைய முறை, நடைமுறைக்கு உதவாது என்பது தான் அடிப்படையான தர்க்கம். பெண் நாளும் உழைத்தும், போராடியும் தான் எழுத்தை மட்டுமல்ல, எந்தவகையான கலைவெளிப்பாட்டையும் இந்தச்சமூகத்தில் செய்யமுடியும் என்பது வெகு யதார்த்தம்.
இவ்விடத்தில், மிகவும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. உலகெங்கிலும் உள்ள ஆண் படைப்பாளிகள் இப்படி இருப்பதில்லை. அல்லது, உயர்ந்த அலல்து புகழ்பெற்ற ஆண் படைப்பாளிகள் என்று பாரட்டப்பட்டவர்கள், உண்மையில் அப்படியான புகழ்பெறுவதற்கு அடிப்படையான காரணம், பெண்களை எதிரினமாகப் பார்க்காதது தான். மனித இனமாகப் போற்றியது தான். பெண்ணும் ஆணும் ஹோமோசேப்பியன்ஸ் என்ற ஒரே வகை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படை அறிவியல் அறிவை அவர்கள் பெற்றிருப்பது தான். குதிரையும் கோழியும் என்ற வேறு வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதைப் புரிந்துகொண்டவர்களும் கூட. எந்தச்சந்தர்ப்பத்திலும், அவர்கள் பெண்கள் மீது அபாண்டமான சொற்களை உபயோகித்ததில்லை, உபயோகிக்கத் தயங்கியிருக்கிறார்கள். இன்றைய ஆண்படைப்பாளிகளின் ஆண் எழுத்து, அவர்கள் கொண்டிருக்கும் பெண் மீதான அடிப்படை வன்மங்களினாலேயே கடுமையாகப் பரிகசிக்கப்படும், புறக்கணிக்கப்படும் சூழலில் இருக்கிறது என்பதை அறியாதிருக்கிறார்கள். மார்க்வெஸ், தாஸ்தாயேவ்ஸ்கி, டால்ட்ஸ்டாய், பஷீர், நொபக்கோ என்று இந்த எழுத்தாளர்களே கொண்டாடும் படைப்புகளிலிருந்து கூட, இந்த ஆண் எழுத்தாளர்கள் தம் மூடப்பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ளும் துணிவைப் பெறவில்லை என்பது வருத்தமான விடயம் தான். பெண் எழுத்தின் மீதான நாட்டாமை அதிகாரத்தையும் அவர்களுக்கு எழுத்து அங்கீகாரம் வழங்கும் சலுகை உணர்வையும் இவர்கள் தக்கவைத்துக்கொள்வதன் வழி தான் இவர்கள் தம்மைப் படைப்பாளிகளாகக் காட்டிக்கொள்ளும் குறைந்தபட்ச வாய்ப்பையும் பெற்றிருக்கிறார்கள் என்பதை இன்று உணர்த்தியிருக்கிறார்கள். இது அடிப்படையில், ஆர்.எஸ்.எஸ். மனநிலை. துப்பாக்கியைக் கையில் எடுத்துச் சுடும் வாய்ப்புக் கிடைக்காத பட்சத்திலும், துப்பாக்கியில் குண்டு போட்டு எதையாவது சுட்டுச்சுட்டுப் பார்க்கும் கற்பனையின் வழியாகவே, மனப்பயிற்சியை தொடர்ந்து எடுத்துக்கொள்வது போன்றது தான்.
ஆனால், பெண்கள் இந்த வெறுப்புணர்வில் இருந்தெல்லாம் எளிதாக விடுபடக்கூடியவர்கள். உடனே எதையும் எவரையும் மன்னித்துவிடக்கூடியவர்கள். வரலாற்றில், இதைவிடக்கடுமையான சம்பவங்கள் பெண்கள் மீது இழைக்கப்பட்டிருந்தபோதும், பெண்கள், ஏதோ ஒரு வகையில் இப்படி மன்னிக்க முடிந்ததால் தான், இனஉற்பத்திப்பணியைக்கூட செவ்வனே செய்யமுடிந்தது. மானுடம் அதனால் தான்தொடர்கிறது. கருப்பையின் வழியாகப் பெண்களை மட்டுமே ஈனும், அற ஒழிப்பைப் பெண்கள் ஒருபொழுதும் செய்யமாட்டார்கள். மானுட இயங்கியலை, அறிவியலை மாற்றிவிட முடியும் என்ற மூடநம்பிக்கையைப் பெண்கள் ஒரு பொழுதும் கொண்டதில்லை! பெண் எழுத்தும் ஒரு பொழுதும் அதைப் பாராட்டாது!

* * *

நன்றி: கணையாழி மற்றும் ஆசிரியர் குழு

அம்மாக்கள்




இந்நாளில் எல்லோரிடமும் நிரம்பி வழியும் தாய்ப்பாசம் என்பது ஒரு பழையமரபின் தொடர்ச்சியாகவே தொனிக்கிறது. குறிப்பாக, ஆண்களிடம் அது மிகையாகவே இருக்கிறது. 



தாய் என்பது பெரும்பான்மையான ஆண்களுக்கு, அவர்கள் அன்பின் அடிமை தான். எவ்வளவோ தாய்மார்கள் ஏழ்மையிலும் வாழ்வின் இருட்டறையிலும் நோயிலும் குமைந்து செத்துப்போயிருக்கின்றனர். மொழிபெயர்க்கவே முடியாத தனிமையும் பெருமூச்சுகளும் நிறைந்த குறுகிய அறையே அவர்களின் முழுநீளவாழ்வாகியிருக்கிறது. வெறும் பாசம் அவர்களுக்கு ஒரு போதும் மகிழ்ச்சி அளித்ததில்லை.

பசியை நீக்க எப்படி ஒரு முத்தம் போதுமானது.

தாய்மார்களும், "மகன்களை" ஆண்பால் இனமாகவே பார்த்து வளர்த்து, ஆண் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்ற மாதிரிகளையே உருவாக்கியிருக்கின்றனர். மனிதர்களை அல்ல.

மனைவி, தாய் என்பதை எதிரெதிராக நிறுத்திப் பார்க்கும் வாய்ப்புகளைப் பெரும்பான்மையான ஆண்கள் தமக்கு ஆதரவாகவே பயன்படுத்திக்கொள்கின்றனர். அங்கே தாய்ப்பாசம், தன் மனைவிக்கு எதிரான ஆயுதமாக மாறி அவளைக்காயப்படுத்தப் பயன்படுகிறது.

ஆனால், கணவனை இழந்து, சிறிது பொருளாதாரபலம் வாய்த்து, தன் மகன் / மகளைச் சார்ந்திராது தனியாக வாழக்கிடைத்த தாய்மார்கள் என்னைப் பொறுத்தவரை, உண்மையிலேயே நல்வாழ்வு பெற்றவர்கள். தினந்தோறும் பதறிப்பதறி, காபி முதல் படுக்கை வரை தயார்செய்யவேண்டிய அவசியம் இருக்காது. இப்படியான வாழ்வு வாழக்கிடைத்தவர்கள், நீண்ட நாட்களுடன் ஆண்களின் தொல்லை இன்றி பேரமைதியுடன் வாழ்வதைப் பார்க்கிறேன்.

இளமையும் திருமணவாழ்வும் ஆண்களின் கைப்பிடிக்குள் இறுகிக்கிடந்திருக்க, முதுமை நோக்கி நகரும் போது அது அவர்களின் பிடியிலிருந்து நழுவக்கிடைத்த வாய்ப்பு எவ்வளவு சுகமானதாக இருகும் என்று விளக்கவேண்டியதில்லை.

மற்றபடி, தாய்ப்பாசம், தந்தைப்பாசம் எல்லாமும் வழிபாட்டுக்குரிய மரபுகளாகவே இருக்கிறதே அன்றி, அதன் அடிப்படையான புரிதல்களையும், பொறுப்புகளையும், தேவைகளையும் யாரும் உணர்ந்தால் போல் தெரியவில்லை. 

இந்தத்தேசத்தில், அம்மாக்கள் எப்பொழுதுமே பலியாடுகளுக்கு நிகரான குறியீடுகள். 

ஓயாத கண்ணீரும் கம்பலையும் அடிவயிற்றில் நிரந்தரமான அச்சமும் குடிகொண்ட கல்குகையும் கொண்ட அம்மாக்கள்!



குட்டி ரேவதி

வாசக மனோநிலையின் அடிப்படையிலான ஒரு பார்வை - குமரகுருபரன்







குட்டி ரேவதியின், சிறுகதைத்தொகுப்பு "நிறைய அறைகள் உள்ள வீடு " பற்றி, சென்ற மாதம் மதுரை 'கூழாங்கற்கள்' நிகழ்வில் குமரகுருபரன் அவர்கள் வழங்கிய மதிப்புரை இது!


(1)
நீட்டிக்க முடியாது என்கிற புரிதலுடன் அல்லது நீட்டிக்கக் கூடாது என்கிற சுய கண்டிப்புடன் நிகழும் கதை சொல்லலையே நான் சிறுகதை எனப் புரிந்து கொள்கிறேன்.அதனாலேயே சிறுகதைகள் இக் காலத்தின் அதிகம் பயன்படுத்தப் படும் ஒரு இலக்கிய அல்லது படைப்பு வடிவமாக இருக்கின்றன.
அதிகம் என்பது நாம் வாழும் காலத்தின் யதார்த்தமாக ஆகிப் போயிருக்கிறது.அதீதம் என்றால் அது நம் கால கட்டம் தான்.எங்கும் எதிலும் அதீதம் என்பது வாழ்வின் குணமாகியிருக்கிறது.ஒலியில் அதை நான் சொல்ல முயற்சிக்கும் போது உரத்த என்கிற தமிழ் வார்த்தை சரியாகப் பொருந்துகிறது.
ஆனால்,நாம்,உரத்த வின் அதீதமான இரைச்சலின் காலத்தில் இருக்கிறோம்.
என் முதல் பிரச்னை இரைச்சலில் எனக்கான ஒரு மெல்லிய பாடலைக் கேட்க முனைவதில் ஆரம்பமாகிறது.
வாசிப்பில் ஈடுபாடு குறையா யாதொரு வாசகனுக்கும் தான்.
எங்கே என் பாடல்? எங்கே என் இசை? எங்கே என் சிறுகதை? எங்கே என்னை இழுக்கும் அந்த இலக்கிய,கலை அனுபவம்?
இவ்வளவு இரைச்சலில் எங்கே அதை உணர்வது?
என் முன் மிகப் பெரிய வியாபார சந்தை இருக்கிறது.
என் முன் மிகப் பெரிய சமூக ஊடகம் இருக்கிறது.
என் முன் மிகப் பெரிய படைப்பாளிகள் கூட்டம் இருக்கிறது.
என் முன் மாறிக் கொண்டே இருக்கிற ரசனையின் அளவுகோல்கள் பூதாகரமாக வளர்ந்து நிற்கின்றன.
என் வீட்டு அலமாரியில்,இச் சந்தையில் இருந்து நான் கொணர்ந்த இவை எல்லாவற்றிலும் ஆன என் ரசனை அடுக்கி வைக்கப் பட்டிருக்கிறது.
வெறும் பெயர்களால் ஆன தேர்வு.சில முன் மதிப்பீடுகள் மூலம் நான் கணிக்க முடிந்த தேர்வு.
இவற்றில் எது நான் முதலில் படிக்க வேண்டியது? எது நான் முதலில் கேட்க வேண்டியது?
எது சிறந்தது? 
எது என்னை அதனுடன் மூழ்கடிக்க இருப்பது?
எதை நான் மற்றவர்களுக்கு இது உங்களின் ஆன்மாவை மூழ்கடிக்கும் அனுபவம் என்று பரிந்துரைக்க?
வருடத்துக்கு பத்து கோடிக்கும் மேல் வியாபாரமாகும் தமிழ்ப் புத்தக சந்தையில் எந்தப் புத்தகத்தை நான் காலத்தின் அவசியம் என உணர,உணர்த்த இருக்கிறேன்?
காலத்தின் அவசியம் என்கிற அந்த ஒற்றைச் சாவி மேற் சொன்ன எல்லா புதிர்களைத் தீர்க்க உதவும் என்று நம்புவதில் நிறைய அறைகள் உள்ள வீடு என்கிற குட்டி ரேவதியின் சிறுகதைத் தொகுப்புக்கான என் வாசிப்புணர்வு அனுபவம் ஆரம்பிக்கறது. 
இரண்டு லட்சம் ரூபிள்களுக்காக,பதினைந்து வருடம் தனிமைச் சிறையில் இருக்க சம்மதிக்கும் ரஷ்ய இளைஞனின் கதையைச் சொல்லும்,அன்டன் செகொவின் பந்தயம் சிறுகதையில் ஒரு சுவாரஸ்யமான பகுதி,காலத்தின் அவசியம் என்கிற வார்த்தையை மேலும் விஸ்தரித்து விடக் கூடியது.
தேவையான புத்தகங்கள்,மது இன்னும் என்ன என்ன வேண்டுமோ,அத்தனையும் கிடைக்கும்,அவனுடைய வீட்டை விட்டு வெளிவராமல்,அவன் தன்னுடைய வாழ்க்கையை க் கழிக்க வேண்டும் என்கிற ஒப்பந்தத் துடன் தன் தனிமை வாழ்வை ஆரம்பிக்கும் அந்த இளைஞன்,முதல் வருடத்தில் படித்த புத்தகங்கள் பெரும்பாலும் ஜனரஞ்சகமானவை.காதல் கதைகள் என்று வைத்துக் கொள்ளலாம்.இரண்டாவது வருடம் அவன் இலக்கிய நூல்களைப் படிக்கிறான்.நடுவில் மூன்று,நான்கு வருடங்கள் மது அருந்துவதிலும்,வயலின் வாசிப்பதிலும்,அவனாக சில நீண்ட கடிதங்கள் எழுதுவதுமாகப் போகிறது.ஆறாவது வருடம் அவன் மொழி குறித்த நூல்களைக் கற்க ஆரம்பிக்கிறான்.அடுத்த,நான்கு வருடங்கள் அவன் அறுநூறுக்கும் மேற்பட்ட அது சார்ந்த புத்தகங்களைப் படிக்கிறான்.பத்தாவது வருடம் அவன் வெறும் பைபிளை மட்டுமே மறுபடி மறுபடி வாசித்துக் கொண்டிருக்கிறான்.கடைசி,இரண்டு வருடங்கள்,அவன் பைரன்,ஆன்மிகம்,ரசாயனம்,மருத்துவம் என்று வகை தொகை இல்லாமல் வாசிக்கிறான்.
கடைசியில்,அவன் எல்லாவற்றையுமே வெறுக்கிறான்.அறிவையும் இந்த உலகத்தின் ஆசியையும் வெறுக்கிறேன் என்பதாக அதைக் குறித்துச் சொல்கிறான்.
காலத்தின் அவசியம் என்பது அவனைப் போலவே நம் ஒருவருக்கும் வேறு வேறாய் இருக்கக் கூடிய சாத்தியம் இருக்கிறது.விழிப்பு மன நிலை,ஆழ் மன நிலை என்ற இரு விசயங்களின் அடிப்படையில் இதை அணுகலாம்.என்னுடைய வாசிப்பு என்பது,காலத்தின் அவசியம் என்கிற நிலைப் பாட்டில்,விழிப்பு மற்றும் ஆழ்மன நிலையில்,எனக்குத் தேவை இருக்கிற சில வாழ்வியல்,தத்துவ,மொழி,கற்பனாவாதம் சார்ந்து அமைகிறது.இவற்றை எதிர்பார்த்தே,நான் வாசிக்க விரும்பும் புத்தகங்களின் தேர்வும் அமைகிறது.இந்த அடிப்படையில்,சமீபத்தில் நான் வாசிக்க முற்பட்ட சிறுகதைத் தொகுப்பு, குட்டி ரேவதியின் நிறைய அறைகள் உள்ள வீடு.

(2)
1.காலத்தின் அவசியம் 
2.வாழ்வியல் 
3.தத்துவம் 
4.மொழி 
5.கற்பனாவாதம் 
என்கிற வாசக மனோநிலையின் எதிர்பார்ப்பின் அடிப்படையில் அமைந்த ஒரு படைப்பு எப்படி இருக்கக் கூடும் என்பதை,ஒரு புனைவின் துளியில் இருந்தே,நான் ஆரம்பிக்கிறேன்.
ஆல்பெர் காம்யுவின் எழுதி முடிக்கப் படாத,நாவல் ஆக்கமான "முதல் மனிதன்"தமிழ் மொழிபெயர்ப்பின்,முதல் பாரா இது.என்னைச் சந்திக்கும் நிறைய தோழர்களிடம் இதை நான் வாசித்துக் காண்பித்திருக்கிறேன்.அதற்கடுத்த வாசிப்பை மேற்கொள்ள வைக்காமல்,அங்கேயே என்னைச் சுழல வைக்கும் விவரணை இது...
" கருங்கல் ஜல்லி நிரம்பிய அந்தப் பாதையில் ஓடிக் கொண்டிருந்த குதிரை வண்டிக்கு மேலே வானத்தில் அடர்த்தியான பெரிய மேகங்கள் பொழுது சாயும் வேளையில்,கிழக்கு நோக்கி விரைந்து கொண்டிருந்தன.மூன்று நாட்களுக்கு முன்னால்,அட்லாண்டிக் கடலுக்கு மேல் அவை உருவாகத் தொடங்கி,மேற்கே இருந்து அடிக்கும் காற்றுக்கு காத்திருந்து,முதலில் மெதுவாக நகர்ந்து,பிறகு சிறிது சிறிதாக வேகம் பெற்று,இலையுதிர் கால ஒளியில் ஒளிரும் நீர்ப் பரப்பின் மேல்,ஆப்பிரிக்கக் கண்டத்தின் நிலப் பரப்பை நோக்கி நேராகச் சென்று,மொரோக்கோவின் மலை உச்சிகளில் இழைஇழையாகப் பிரிந்து,மீண்டும் அல்ஜீரியப் பீடபூமியின் மேல் மந்தையாகச் சேர்ந்து,இப்போது துனிசியாவின் எல்லை மீது மத்தியதரைக் கடலின் மேற்குப் பகுதியை அடைந்து,கரைந்து போக முயன்று கொண்டிருந்தன.வடக்கே,ஓயாது வீசும் கடலலைகளுக்கும்,தெற்கே உறைந்து பரந்திருக்கும் மணலலைகளுக்கும் இடைப்பட்ட பிரமாண்ட தீவு போன்ற நிலப் பரப்பின் மீது பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு மேல் பயணம் செய்த பிறகு,பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேரரசுகளும்,மக்கள் கூட்டமும்,இந்தப் பெயரற்ற பிரதேசத்தை க் கடந்து சென்ற அதே வேகத்தில்,இந்த மேகங்கள் கடந்து,பிறகு உத்வேகம் சற்றுக் குறைந்து,சில மேகங்கள்,ஏற்கனவே இங்குமங்கும் பெரும் மழைத் துளிகளாக,நான்கு பயணிகள் இருந்த அந்த வண்டியின் கான்வாஸ் கூடு மீது சடசடக்கத் தொடங்கியிருந்தன."
நான்கு பயணிகள் இருந்த அந்த குதிரை வண்டியையே நான் காலத்தின் அவசியம் எனக் கொள்கிறேன்.அவர்கள் என்ன செய்ய இருக்கிறார்கள்,அவர்களுக்குள் என்ன நிகழ இருக்கிறது என்பதையும்.
பொருளாதாரம்,சித்தாந்தம்,அரசியல்,ஆன்மிகம்,அறிவியல் குறித்தான அத்தனை பார்வைகளையும் தாண்டி,ஆண் பெண் உறவுச் சிக்கலில் தான் இன்னமும் உலகம் மையம் கொண்டிருக்கிறது. மற்றவை எல்லாம் மேகங்கள் போல,அதன் மேல் உலவிக் கொண்டிருக்கின்றன என்று உறுதியாக நம்புகிறேன்.பெண்ணின் மனதில் என்ன இருக்கிறது என்று எனது முன்னோர்கள் அறியக் காட்டிய சிரத்தையைக் காட்டிலும்,அதிக சிரத்தையை இக் காலத்தில் ஆணாக,நானும்,எனது சக சிந்தனையாளர்களும் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.பெண்களின் மனமொழி இன்னமும் அதீத மர்மம் நிறைந்த ஒன்றாகவே இருந்து கொண்டிருக்கிறது எனினும்.குட்டி ரேவதியை பெண்களின் மனமொழியை வெளிக் கொணர விரும்பும் ஒரு படைப்பாளியாக அவரது கவிதைகள்,உடல் அரசியலைக் கட்டுடைத்த கவிதைகள் மூலம் வாசித்து அறிந்திருக்கிறோம்.அவரது சிறுகதைத்தொகுப்பு அதன் அடிப்படையில் மிக முக்கியமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.அடுத்து இன்னொரு எதிர்பார்ப்பு அவரது மொழி.கவிஞர்களின் புனைவு நடை குறித்து ஆர்வமும்,அவநம்பிக்கையும் இலக்கிய உலகில் ஒரு சேர நிலவுகிறது.குட்டி ரேவதியின் கவிதை மொழியின் வீரியம் நாம் அறிவோம்.அவரது புனைவு? அதுவும் மற்றொரு எதிர்பார்ப்பு.


(3)

காதலைப் பெறுவதற்கும்,அதிகாரத்தை எதிர்ப்பதற்கும்,உரிமைகளை வெல்வதற்கும் தம் உடலை ஆயுதமாகப் பயன்படுத்திய நம் சமகாலப் பெண்டிருக்கும்,மூதாதைப் பெண்டிருக்கும் சமர்ப்பிக்கப் படுவதாக ஆரம்பிக்கும்,நிறைய அறைகள் உள்ள வீடு சிறுகதைத் தொகுப்பில் பதிமூன்று சிறுகதைகள் இருக்கின்றன.
முடிவு என்கிற ஒன்று இல்லாத அல்லது வலியுறுத்தப் படாத தன்மை எல்லாக் கதைகளிலிலும் இருக்கிறது.ஒரு பெண்ணின் மனதைப் போல,மறுபடி மறுபடி சுழலும் முடிவற்ற அவளின் மன மர்மங்களைப் போல.முடிந்த இடத்திலேயே ஆரம்பமும் இருப்பது சிறுகதை வடிவின் அற்புதமான சாத்தியம்.நிறைய விஷயங்கள் சொல்லாமல் விடப் படுகிற தன்மையும் குட்டி ரேவதியின் அநேக சிறுகதைகளில் காணப் படுகிறது.சொல்லாமல் விடப் படுகிற அந்த இடங்களில் வாசகனின் யூகம்,மற்றும் தன்னை இருத்திக் கொள்ளல் ஆகியன நிகழும் சாத்தியங்கள் ஆர்மபிக்கின்றன.மிகவும் அடர்ந்த காமத்தை,விரக்தியை,வன்மத்தை,எள்ளலை,கொண்டாட்ட மனோபாவத்தை வெளிப் படுத்துகிற விதமாய்,குட்டி ரேவதி சிறுகதைகளின் புனைவு மொழி அமைந்திருக்கிறது.காணும் விசயங்களும்,சிந்தனைகளும்,உரையாடல்களுக்குள் அடங்காத ஒரு தன்மையையும் கவனிக்க முடிகிறது.சிறுகதையைத் தாண்டிய விஷயங்கள் சிறுகதை வடிவத்திற்குள் பேசப் படுகிற அழுத்தமும் வாசிப்பின் போது வந்து போகிறது.ஒரு சிறுகதை வாசித்து முடிந்த உடனே ஒரு மொபைல் கேம் விளையாட வேண்டும் என்று தோன்றுகிற அளவுக்கு இந்த சிறுகதைத் தொகுப்பில் வருகிற பெண்களின் சிந்தனைகளும்,உரையாடல்களும் இருக்கின்றன.குளிர் என்கிற சிறுகதையை இதற்கு முழு உதாரணமாகச் சொல்ல முடியும்.
"கற்பனையும்,புனைவும்,பாலியல் ஆற்றலும் இணைந்த பெருவெளியும்,அதில் தீவிரமாக பயணிக்கும் உடலும் கொண்டவள் நான் என்பது தான் சிறுகதை எழுதுவதைத் தேர்ந்தெடுப்பதற்கு அடிப்படை"என்பதாக,ஏன்,சிறுகதை வடிவைத் தேர்ந்தெடுத்தேன் என்று,குட்டி ரேவதி,அவரது முன்னுரையில்,சொல்லும் விசயத்தில் மேற்சொன்னவைகளுக்கான பதில் இருக்கிறது.
முத்தம் இடப் படாத வறண்ட காமத்திற்கு மனம் துவளும்,எதிர்ப்பைத் தெரிவிக்கும்,ஒத்துழைக்க மறுக்கும் உடல் கொண்ட பெண்களின் உலகம் நிறைந்ததாக இருக்கிறது நிறைய அறைகள் உள்ள வீடு சிறுகதைத் தொகுப்பு.இடுப்பிற்குக் கீழே மட்டும் இயங்கும் ஆண்களின் பாவனையான மன நிலையை நகைப்புக்கு உள்ளாக்குகிற பெண்களின் திட்டமிட்ட எதிர்கொள்ளலும் இருக்கிறது.பிங்க் வோட்கா இவ் விதத்தில்,இதுவரை எழுதப் படாத,இதுவரை நாம் கிசுகிசுத்துக் கொண்டு மட்டுமே இருக்கிற,பெண்களின் ஒரு பால் ஈர்ப்பு,பெண்களின் பாலியல் கற்பனைகள்,பெண்களுக்கு நடுவே நிகழும் ஆண் சார்ந்த பாலியல் விவாதங்கள்,ஆணின் பாவனையான காம அழைப்பை எதிர்கொள்ளும்மனநிலை குறித்து சொல்லும் கதையாய் விரிந்திருக்கிறது.காமத்தைக் குறித்த பெண் மனதை ஆணின் முகத்தின் மேல் விசிறடிக்கும் கதை என்றால் இன்னும் நேரடியாக இருக்கும்.இதைப் படித்த பிறகும் நிறைய ஆண்கள் வீடியோ கேம் விளையாட வேண்டியிருக்கும் என்றே தோன்றுகிறது.அல்லது ஒரு சிகரெட்டாவது தேவைப் படும்.
உண்மையில்,காமத்தை உடைப்பதில்,ஆண்களுக்கும் பெண்களுக்குமான முக்கியமான சிந்தனை வேறுபாட்டை இச் சிறுகதைத் தொகுப்பு உணர்த்துகிறது.குட்டி ரேவதியின் நாயகிகள் அவரது சிறுகதைகளில் முன்வைக்கும் மிக முக்கியமான விவாதமும் அதுதான்.
வெறும் ஏக்கங்களாக ஆண்களின் பார்வையில் அணுகப் பட்டிருக்கும் காமத்தை,உடலரசியலை,பாலியல் மனோபாவங்களை முழுமையாகக் கட்டுடைக்கும்,அணுத் துகள் ஒன்றின் ஆற்றலைக் கொண்டிருக்கும் அவரது கதைப் பெண்களின் புனைவுகள் மூலம் ,ஆண்களின் பாவனைகளைத் தூளாக்கும் மிக முக்கியமான சம கால சிறுகதைத் தொகுப்பு குட்டி ரேவதியின் நிறைய அறைகள் உள்ள வீடு,என்று நான் பதிவு செய்கிறேன்.யோனியின் உதடுகள் என்கிற சிறுகதை முத்தம் முகிழ்த்தும் காமத்தை,பெண்ணின் உடலை,அவளின் மனதை ஆண்களுக்கு உணர்த்தும் மிக முக்கியமான புனைவு.பெண் என்ன எதிர்பார்க்கிறாள் ஆணிடம் இருந்து என்று குறிப்பாகச் சொல்லும் இக் கதையில் முடிவு என்கிற ஒன்று அரிதாக நிகழ்ந்திருக்கிறது.அந்த முடிவில்,ஆண்களின் பெண் பற்றிய புரிதல் ஆரம்பிக்கக் கூடும்.

(4)
காமம் என்கிற பொது இழையைத் தாண்டி, வாசகனை ஈர்க்கிற,புதிய வாசிப்பனுபவங்களைத் தரக் கூடிய சிறுகதைகள் நிறைய அறைகள் உள்ள வீடு தொகுப்பில் இருக்கின்றன.அலைதல் அல்லது பயணம் கதைகளின் நடுவே நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.இயற்கை குறித்த,வாழ்வியல் குறித்த நுட்பமான விவரணைகள் சிறுகதைகளில் வியாபித்திருக்கின்றன.சமகால வாசகனுக்கு மிகவும் தேவையாய் இருக்கக் கூடிய விசயங்கள் இவை.தைலக்காரி என்கிற சிறுகதை,மலையை ஒரு பெண்ணின் கோணத்தில் நமக்கு விரிவிக்கிறது.மலையின்,மூலிகைகளின்,மர்மங்களை மென்மேலும் முடிச்சிடும் ஆண் ஸ்பரிசம் அறியா,ஒரு தைலக் காரியின் அனுபவம், கற்பனாவாதம் கலந்து மிகவும் புதிதான உணர்வுகளை வாசிப்பின் போது ஏற்படுத்துகிறது.பாம்புகளைத் தேடி அலையும் இருளர் குடும்பம் ஒன்றின் பயணத்தைச் சொல்லும் கட்டு வீரியன் என்கிற கதை நெளிந்து வளைந்து நீளும் பாம்பு ஒன்றின் நகர்வைத் தன் கதை சொல்லலில் கொண்டிருக்கிறது.எனினும்,பயணத்தின் உச்ச அனுபவத்தை,ஒரு மாய மனநிலையில்,சன்னத மொழியில் சொல்லும் மாஇசக்கி இச் சிறுகதைத் தொகுப்பின் மிக முக்கியமான சிறுகதை என்கிற அந்தஸ்தைப் பெறுகிறது.ஜெயமோகனின் மாடன் மோட்சம் தரும் அனுபவத்திற்கு நிகராக இருக்கிறது மாஇசக்கி.பெண் சிறு தெய்வம் ஒன்றின் பயணம் தான் மாஇசக்கி.அந்தப் பயணத்தின் முடிவு " இரத்தம் தா இரத்தம் தா சூடான இரத்தம் தா,
ஆண் இரத்தம் சுவைக்கும் பெண் இரத்தம் வேணாம்,
பெண்ணின் இரத்தம் குடித்த ஆண் இரத்தம் வேணும்,
நீ தா உன் இரத்தம் தா சூடாகத் தா " என்பதாக நிகழ்கிறது.
ஆனால்,அந்தப் பயணமும்,அப் பெண்சிறுதெய்வத்தின் பயண மன ஓட்டங்களும்,நேரடி அனுபவங்களும் சொல்லப் பட்டிருக்கும் புனைவு மொழி அபாரமான ஒன்று.சன்னத நிலையில் வெளிப் பட்டிருக்கும் மொழி.சாமி வந்தேறிய மனம் ஒன்றின் குறிசொல்லல்,மற்றும் அசைவை வார்த்தைகளில்,வரிகளில் உணர வைக்கும் புதிய அனுபவம் மா இசக்கி.கவிதை ஒன்றின் படைப்புத் தருணம் விழிப்பு மனநிலையில் கட்டமைக்கப் பட்டு,நிகழ்கிறதா,அல்லது ஆழ்மன நிலையில் ஒரு சன்னத அனுபவமாக நிகழ்கிறதா என்கிற விவாதம் இன்றைய இலக்கிய உலகின் மிக முக்கியமான ஒன்று என்று நினைக்கிறேன்.இது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
கட்டமைக்கப் பட்ட,விழிப்பு மன நிலையில் உருவாகும் ஒரு படைப்பின் நுட்பங்களை விட சன்னத சாமியேறிய ஆழ்நிலை மன நிலையில் உருவாகும் படைப்பின் மொழி மற்றும் அனுபவ நுட்பங்கள் மிக மேலாக உன்னதமாக இருக்கின்றன என்கிற விவாவதத்தையும் முன் வைக்கிறேன்.மா இசக்கி குறித்து குட்டி ரேவதியிடம் இன்னமும் உரையாட வில்லை எனினும்,அக் கதை சன்னத மொழி கொண்ட புனைவாகவே படுகிறது.குட்டி ரேவதியின் கவிதைகள் மேல் அவருக்கு இருந்த ஆளுமையை விட பன்மடங்கு மேலான புதிய நுட்பமான அனுபவத்தை அவரது சிறுகதைத் தொகுப்பான நிறைய அறைகள் உள்ள வீடு தருவதாக உணர்கிறேன்.அவரது புனைவின் மொழி அதற்கு மிக முக்கியமானதொரு காரணமாக இருக்கக் கூடும்.அப் புனைவு மொழி மறுபடி மறுபடி அவரது சில சிறுகதைகளை வாசிக்கத் தூண்டுகிறது.
நீட்டிக்கும் வாய்ப்பை படைப்பு வடிவத்தில் கொண்டிராத சிறுகதை ஏற்படுத்தக் கூடிய அசாத்தியமான அனுபவம், சிந்தனை ரீதியான, தர்க்க ரீதியான நீட்டித்தல் தான்.குட்டி ரேவதியின் சிறுகதைகள் ஏற்படுத்தும் எண்ணங்களும் சிந்தனைகளும் அது குறித்தான தர்க்கங்களும் அவற்றை மறுபடி மறுபடி வாசிக்க வைக்கும் நீள் அனுபவமாக இருக்கின்றன.அந்த அனுபவத்தை இக் காலகட்டத்தின் அவசியம் என்று நினைக்கிறேன்.
வாழ்த்துகள் குட்டி ரேவதி.