நம் குரல்

உடலரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உடலரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

காமப்பாழி; கடவழி; படுகுழி; பெருவழி; இடைகழி!


தமிழில் மாதவிடாய் அனுபவங்கள் குறித்தப் பெண்களின் பார்வைகளே கூட ஆரோக்கியமானவையாக இல்லை. ஆண்களின் எழுத்துப்பதிவையும் சொல்வழக்கத்தையும் கேட்கவேண்டாம்.

ஆவணப்பட இயக்குநர் கீதா இளங்கோவன் அவர்களின் ஆவணப்படம் மட்டுமே அதை நடைமுறையில் உள்ள சமூகச்சிக்கலாய் முன்வைத்திருந்தது.

எழுத்தில் இதுவரை, ஓர் அரைகுறையான பார்வையாகவும், சமூகம் வழங்கிவந்த அபத்தங்களை ஒட்டிவந்ததாகவுமே இருந்துள்ளது.

சித்தமருத்துவத்தில், அது பெரும்பாடு என்று வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான, சித்தமருத்துவச்சொற்கள் ஆண்கள் சொல்வதற்கும் புழங்குவதற்கும் ஏற்றவகையிலும், சமூகக்கட்டுப்பாடுகளுக்கு இயைந்த முறையிலும் தான் உருவாக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் ஒரு திரையிடல் நிகழ்வில், புகழ்பெற்ற தமிழ்த்திரைப்பட வசனகர்த்தா, தன்னாலும் கெட்ட வார்த்தையை எழுத்தில் பயன்படுத்த முடியும் என்று காட்டுவதற்காக, 'தூமை' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்ததை, பிரீத்தம் அவர்கள் சுட்டிக்காட்டினார். அவ்வளவு தான் அவருக்கு மொழியறிவு என்று கடந்து போகவேண்டியிருந்தது.

உண்மையில், மனித இனத்தின் உயிர்வெளியை, விளைநிலத்தைக் குறிக்கும் உடலியங்கியலே மாத உதிரப்பெருக்கு. பெண்ணுடலின் கருநிலத்தை உழும் செயல்பாடாகவே அது நோக்கப்பட்டுள்ளது.

இன்னும் சொல்லப்போனால், அது பெண்ணின் நொய்மையான கணங்களாகவும், இரக்கம் கோரும் சந்தர்ப்பமாகவுமே சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெண் உடல் நலனின் ஒரு முக்கியமான குறியீடு.

உடலுக்கு ஊட்டமான உணவையும் உணர்வுகளையும் கொடுக்கவேண்டிய பருவக்கட்டாயத்தை வலியுறுத்தும் ஓர் அவசியம். உளச்சிக்கலுக்கு ஆளான பெண்ணின் உடலில் உதிரப்பெருக்கையும் அதுசார்ந்த சிக்கல்களையும் அந்தந்த மாதத்திற்கு ஏற்றாற்போல சிம்டங்களாக (குறிகுணங்களாக) காணமுடியும்.

பெண் உடலும் ஆண் உடலும் இணைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் இயற்கையின் முதிர்ச்சி.
ஆனால், பெண்களின் உடல் பலவீனமாகவும், நொய்மையாகவும், அருவெறுப்பானதாகவும், இழிவாகவும், ஓர் அபாயமாகவும் பார்க்கும் வழக்கம் மதங்களின் ஆளுகையினாலும் சாதிக்கு ஏற்றாற்போன்ற வழக்கங்களினாலும் செய்யப்பட்ட முதன்மையான சூழ்ச்சி.

பெண் உடல் பற்றிய அறிவு கொண்டவர்கள், இரத்த ஊற்றின் மூலத்தையும் சுழற்சியையும் தொடர்ச்சியையும் தெளிவாக உணர்ந்துகொள்வர். அதை ஒரு கறையாகப் பார்க்கமாட்டார்கள்.

ஓர் இணையச்சுட்டியைப்பார்த்தேன். உதிரப்பெருக்கிற்கு எதிரான பார்வை பெண்களுக்கு இடையே நிலவுவதை கார்ட்டூன்களாக்கியது போல் இருந்தது. கீழே கொடுத்துள்ளேன்.

இதோ, பட்டினத்தார் பாடல் வரிகளைப் பாருங்கள். புகழ்ச்சொற்களின் வழியே ஓர் இழிவறிவு போல் இருக்கும்.
"காமப் பாழி; கருவிளை கழனி;
தூமைக் கடவழி; தொளைபெறு வாயில்;
எண்சாண் உடம்பும் இழியும் பெருவழி!
மண்பால் காமம் கழிக்கும் மறைவிடம்;
நச்சிக் காமுக நாய்தான் என்றும்
இச்சித் திருக்கும் இடைகழி வாயில்;
திங்கள் சடையோன் திருவருள் இல்லார்
தங்கித் திரியும் சவலைப் பெருவழி;
புண் இது என்று புடவையை மூடி
உள் நீர் பாயும் ஓசைச் செழும்புண்;
மால்கொண்டு அறியா மாந்தர் புகும்வழி;
நோய் கொண்டு ஒழியார் நுண்ணியர் போம்வழி;
தருக்கிய காமுகர் சாரும் படுகுழி;
செருக்கிய காமுகர் சேருஞ் சிறுகுழி;
பெண்ணும் ஆணும் பிறக்கும் பெருவழி;
மலம் சொரிந்து இழியும் வாயிற்கு அருகே
சலம்சொரிந்து இழியும் தண்ணீர் வாயில்;
இத்தை நீங்கள் இனிது என வேண்டா;
பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி
மெச்சிச் சிவபத வீடருள் பவனை"


குட்டி ரேவதி

உடலை விட்டு எப்படி வெளியேறுவது?




பகல் இரவு என்றில்லாது
எலும்பின் மஜ்ஜையும் நிணம் பாய்ந்த வெளிகளும் கூட
ஒவ்வொரு கணமும் சிந்தித்துக்கொண்டிருக்கின்றன
கனவுகளின் பெருவெளிகளாய் சிதறிக்கிடந்த அங்கங்களை 
வாரிச்சுருட்டி அள்ளி எடுக்கவே
நூறாண்டுகள் ஆயிற்று
இவ்விடம் இக்கணம் என்னிடம் மிச்சமிருப்பது
இவ்வுடல் மட்டுமே நீ கூட உடனில்லை
புழுக்கள் நெளியும் சிந்தனை வெளியை விசிறி விசிறி
தின்றுக் கொழுத்தப் புழுக்களிடமிருந்து
எலும்புகளின் திட மிச்சங்களைப் பொறுக்கி எடுப்பதற்கே
வாழ்வின் வறண்ட பாலைகளையும் பாறைகளையும்
கடக்க வேண்டியிருந்தது
மொழியைத் துலக்கித் தான் கண்கள் என்றும்
செய்து கொள்ளமுடிந்தது
கங்குகள் விரித்த பாதைகள் எங்கும்
வரலாற்றின் பொதிகளைச் சுமந்து வந்திருக்கிறேன்
இன்னும் இன்றும் கூட
யாக்கை என்பது வாக்கிற்கும் உன் தீண்டலுக்கும்
வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கருவறைச் சிற்பம்
நீ உருவி எடுத்த பின்னும் உன் குறியை மறந்து
சிந்தித்துக் கொண்டிருக்கும் கலையைச் 
செய்து கொண்டிருக்கும் உடல்
உன்னுடன் வெளிகளுக்கிடையே
வேகமாய்ப் பயணித்தும் கொண்டிருக்கும்
நீ நினைப்பது போல உடல் சொற்பமுமன்று 
நான் நினைத்திருப்பது போல
அது அற்புதமுமன்று
அற்பங்களால் கட்டியெழுப்பப்பட்ட உடலை
இன்னது இதுவென சுட்டிக்காட்ட நான் மட்டுமே 
எஞ்சியிருக்கிறேன்
என் காலடியில் உடலை எறிந்து விட்டு எட்டப் போ
அல்ல அதற்கு உன் யாக்கையை அறிமுகப்படுத்து
உன்னால் இப்பொழுது இயலாது என நான் அறிவேன்
இன்னும் உனக்கும் ஒரு நூறு ஆண்டுகளேனும் ஆகும்
ஆகட்டும் அதற்குள் என் உடலுக்கு
சில நூறு வானங்களையேனும் விரிக்க வேண்டும்


குட்டி ரேவதி

பரத்தமை

ஆதிக்கச் சமூகத்தினர் கட்டமைத்த ஒடுக்குமுறை வடிவம்






செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், ‘சங்க கால மகளிர்’ எனும் பொருளில் மூன்று நாள் (கடந்த மே 20 – 22) கருத்தரங்கை சென்னையில் நிகழ்த்தியது. பல தரப்பிலிருந்து வெவ்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. அவை, விளிம்பு நிலை மக்கள், பெண்பாற் புலவர்கள், ஆளுமைத் திறன்,  பெண்ணியம், பெண்மொழி, பாலின நோக்கு, இலக்கிய மாந்தர்கள், மகளிர் மாட்சி, கைம்மை, சமூகவியல் நோக்கு, பன்முக நோக்கு என்பவையாக இருந்தன. தொடக்கநாள் விழாவில், எழுத்தாளர் பாமா ஆற்றிய உரையை, இலக்கியப் பங்கேற்பாளர்கள் மிகச் சிறந்த உரை என்று சிலாகித்தனர். தவறவிட்டுவிட்டோமே என்ற வருத்தம் மேலிட்டது.

நான் பாலின நோக்கு எனும் அமர்வில், ‘பரத்தமையும் உடலரசியலும்: சங்க கால மகளிரின் உடல் பற்றிய கருத்தாக்கத்தைப் புரிந்து கொள்ளல்’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரை வாசித்தேன். இதற்கு ஒரு வார உழைப்பு தேவைப்பட்டது என்றாலும், நிறைய மறைபொருள்களைக்  கண்டறிய முடிந்தது. சங்ககால இலக்கியங்களில் புலமை வாய்ந்த, அதை நுணுகி ஆராயத்தக்க பல நூறு பேராசிரியப்பெருமக்களையும் அற்புதமான சான்றோர்களையும் நாம் கொண்டிருக்கிறோம். அதன் விவரங்களையும், எத்தனை நூறு பாடல்களையும் மனனமாகச் சொல்லி, விளக்கக்கூடிய விரிவுரையாளர்களையும் நாம் கொண்டிருக்கிறோம். ஆனால், விவர அறிவையும் பொது அறிவையும் ஒரு செயல்திறமிக்க விஷயமாகவோ, படைப்பாற்றலாகவோ கருதமுடியாது இல்லையா? என் தரப்பு விவாதப் புள்ளிகள் கீழ்க்கண்டவையாக இருந்தன.


‘சங்ககாலப் பெண்கள்’ என்பவர்கள் எப்பொழுதுமே வியக்கப்பட்ட, மிகைப்படுத்தப்பட்ட புகழுடைய பெண்டிராக நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

மக்கள் மீது ஆதிக்கமும் அதிகாரமும் செலுத்தும் வாய்ப்பு கொண்ட அரசின் கைகளில் தான் கலையும், படைப்பிலக்கியங்களும் இருந்திருக்கின்றன. அத்தகைய அரசு ஆவணப்படுத்திய இலக்கியங்கள் தாம் நம் கைகளில் கொடுக்கப்படுகின்றன. அவற்றைத் தான் நாம் இலக்கியம் என்று கொண்டாட வேண்டியிருக்கிறது.  

ஆண் என்பவன் தலைவனாகவோ அரசனாகவோ இருக்க, பெண்கள் குலமகளிர், தோழியர், பரத்தையர் என தன் காம நுகர்ச்சியை ஆணுக்கு வழங்கும் விதம் கொண்டு பல பிரிவினராக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இதில், பரத்தையரும் பல பிரிவினராகப் பிரிக்கப்பட்டிருக்கின்றனர்.

குலமகளிர், தோழியர், பரத்தையர், கைம்பெண்கள் இவர்கள் எல்லோருமே பெண்ணடிமைத்தனத்தின் குறியீடுகளாக ஆக்கப்பட்டிருப்பதன் விளக்கங்களைத்தாம் நாம் சங்கப்பாடல்கள் என்று கொண்டாடி வருகிறோம். மேற்கண்ட எல்லா வகைப்பெண்டிருமே, ஆணாதிக்கத்தின் வெளிப்பாட்டை கொஞ்சமும் விழிப்பிலாது நுகர்பவர்களாய் இருக்கின்றனர்.

பரத்தையர்கள், ‘காம இன்பத்தை நுகரும் காமுகர்களாகிய பன்றிகள் உண்பதற்குரியதாய் விளங்கும் இரண்டு இதழ் அமைந்த வாய்க்குத் தொட்டியைக் கொண்டவளே’ என்று பிற பெண்டிரால் இழிவுப்படுத்தப்பட்டிருக்கிறாள். என்றாலும், கற்புடைப்பெண்டிரும், தோழியரும் எந்த தனியுரிமையும் அற்ற இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.


தற்காலத்திலும் பாலியல் அரசியல் என்னும் நடவடிக்கையாக, பரத்தமை முன்வைக்கப்படுகிறது. இது தன் மீதான ஆணின் அடிமைத்தனத்தை ஆதரிப்பதே அன்றி வேறு இல்லை. கற்பைப் போன்றே அதற்கு நிகரானதொரு ஒடுக்குமுறை வடிவம், பரத்தமை. ஆதிக்கச் சமூகத்தினரால் முன் மொழியப்பட்டதும், வழிமொழியப்பட்டதும், ஆண்களின் நுகர்ச்சிக்காக வடிவமைக்கப்பட்டதுமான வடிவம் பரத்தமை. இதிலிருந்து, திருநங்கைகளை மீட்டு,  அவர்கள் சம உரிமை பெறவும், நிலைநாட்டவும்  போராடி வருகிறோம் என்பதை இங்கு நினைவில் கொள்வோம்.


அத்தகைய பரத்தமை மற்றும் பிற ஒடுக்குமுறைகளின் நீட்சியைத் தான் நாம் இன்றும் பின்பற்ற, வற்புறுத்தப்படுகிறோம். இது, சங்ககாலப் பெண்டிரின் நிலையை நினைவூட்டிக் கொள்வதாலும், விதந்தோதப்படுவதாலும் நமது உளவியலுக்கு அதிகார நிறுவனங்களால் திணிக்கப்படுகிறது. சங்க காலப் பாடல்களில், ‘பரத்தமை’ என்பது ஆணாதிக்கச் சமூகத்தின் புத்துருவாக்க வடிவமாகவும், ஒரு சமூக மதிப்பாகவும் இருந்திருக்கிறது.


தொல்குடியின் பண்பாக இருந்த இனக்குழுச்சமூகம் உடைந்து நிலவுடைமைச் சமூகம் கட்டியமைக்கப் பட்டபோதும், அது சமூகத்தில் உறுதிப்பட்ட போதும், பெண் ஒடுக்குமுறையை கட்டமைக்கப் பெண்ணுடல் தேவைப்பட்டது. அதற்கு, ‘பரத்தமை’ எனும் தன் உடலை எதற்கும் வாய்ப்பாக அனுமதிக்கும் பெண்ணின் மனோநிலை தேவைப்பட்டிருக்கிறது.


சங்ககாலப் பரத்தையரின் யோனிகள், ஆண்களின் காம நுகர்ச்சிக்கென இருந்தனவே தவிர, தாய்மை, குழந்தைப்பேற்றை அனுபவிக்கும் உரிமையை, வாய்ப்பை பெறவில்லை. இதில், பெண்களின் பாலியல் ஆற்றல் முழுமையடையாமல் முற்றுமுழுதுமாகத் துண்டிக்கப்பட்டிருக்கிறது.


தோழியர் எனும் பெண் பிரிவிற்கு, உடலே இல்லை என்பது போல, அவர்கள் வெறும் தலைவி, தலைவன், பரத்தையர் எனும் உறவுகளுக்கு இடையேயான ஊடகமாகவே சித்திரிக்கப்பட்டிருக்கின்றனர்.


பரத்தையருக்கு சொத்துரிமையோ வாரிசுரிமையோ வழங்கப்படாததால் அவர்கள் ஒடுக்கப்பட்ட இனக்குழுவைச் சேர்ந்தவர்களாயிருக்க வேண்டும்.  ‘பரத்தமை’ எனும் வடிவத்தை தற்காலத்திலும் நாம் அங்கீகரிப்பதன் வழி, ஒடுக்கப்பட்டவர் மீதான ஆதிக்கத்தை அங்கீகரிக்கிறோம் என்றே பொருள்படும்.
இந்தக் கடைசிக் கூற்றிற்குத் தேவையானதோர் விவரமாகக் கீழ்க்கண்ட தகவலைக் குறிப்பிடுகிறேன்.
325 கி.மு.வில் பார்ப்பனர்கள் விவசாயிகளாகின்றனர். அப்பொழுது அவர்கள் படைகளில் சேர்ந்து பணிபுரிதலிலும் ஈடுபடுகின்றனர்.
269 கி.மு.வில், அரசனையும் சட்டத்தின் ஆளுகையின் கீழ்க்கொண்டு வரும் திட்டம் உருவாக்கப்படுகிறது.
563 கி.மு.வில், கெளதம புத்தன் செய்த மிகப்பெரிய சமூக மாற்றத்தையும் நாம் இங்கு நினைவில் கொள்வோம்.
185 கி.மு.வில் அசோகனின் அடுத்த தலைமுறையினர் தீவிரமாகப் பெளத்த கருத்தைப் பரப்புவதில் ஈடுபட்டிருந்த போது, புஷ்யமித்ர சுங்க என்பவன், புராண ராமனின் மறு உருவாக்கமாகக் கருதப்படுபவன், அசோகனின் பேரன் பிருஹதத்தனைக் கொன்று ஆட்சிக்கு வருகிறான். பெளத்தர்களையும் விகாரைகளையும் அழித்து, வருணவிவஸ்தாவை, சாதிய அமைப்பாக, அதன் அதிகாரப் படிநிலைகளுடன் நிலைநிறுத்துகிறான்.  
மேற்குறிப்பிட்ட கால அமைப்பு, சங்க கால இலக்கியங்களுக்குச் சமமான காலக்கட்டமாக இருந்திருப்பதால், அதன் தாக்கத்தை சங்க காலப் பாடல்களில் எவ்வாறு கண்டறிவது என்பதும், சங்க இலக்கியத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்விற்கு, அது ஆதிக்கத்தில் இருந்தவர்களின் படைப்புகளாக இருந்தமை தான் காரணமா என்பதும் நீண்ட ஆய்வுக்கட்டுரைக்கான விவாதமாகும்.



குட்டி ரேவதி

உடலை மொழியும் மரபு - 4



பெண்ணின் பாலியல் மொழி

உடலை மொழிதல் என்பது கரைவெட்டும் வேலையாக ஆகிவிட்டதோ என்று சிந்திக்கும் விதமாக பல நிகழ்வுகள் தமிழ்த்தளத்தில் நடந்தேறிவிட்டன. வாய்க்காலுக்கு சீராக நீர் கொண்டு செல்லும் மடையை வெட்டிக் கலைப்பதில் கிளுகிளுப்பும் அதிகாரப்பேரமும் நிறைந்திருந்தாலும் ரசிக்க ஏற்றதன்று. உடலை மொழிதல் புதிதும் அன்று. இலக்கிய வரலாற்றின் சரடைப் பிடித்து ஏறினால் அத்தகைய உடலை மொழிதல் என்பது எந்தக் காலத்திலும் துண்டிக்கப்படாமல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அது சுட்டிக்காட்டிய உடல் அசைவுகளும் அதற்கான சமூக இயக்கங்களும் தாம் வேறானவை. உடல் இன்று தோன்றியதில்லை. அதிலும் பெண்ணுடல் சொல்லுக்கும் மொழிக்கும் புதியதன்று. ஆனால் உடலென்பதை வெறும் சொல்லாகவும் மொழியாகவும் மட்டுமே பார்க்கப்படுவதில் நிறைய ஆபத்துகள் பெண் இனத்திற்கே இருக்கின்றன.


மரபுடன் இணைய முடியா கவிஞர்கள் தனிமையில் வாடுவதாய் எனக்குத் தோன்றும். ஆயிரமாயிரம் ஆண்டுகள் கவிதை மரபில் தன்னை இணைக்க முடியாமல் போவது என்பது ஓர் அறியாமையாகவும் அல்லது அப்படி இணைவதை மறுப்பதை விடுதலையாகவும் எண்ணுவது என்பது துணிவின்மையாகவும் தோன்றும். அது ஒரு நீளமான வெள்ளம் பெருக்கெடுக்கும் ஆறு. அதை முழு வீச்சுடன் நீச்சலடித்துக் கடந்து செல்லத் தேவைப்படும் பலம் என்பது சாதாரணமானது அன்று. மரபு என்பது யாப்பையும் வார்த்தைகளையும் கயிறு கட்டி இழுக்கும் மாய வித்தை மட்டுமே அன்று. காலந்தோறும் மானுடவாழ்க்கைக்கான விடுதலையை உய்த்தறிவதற்கான தனிச்சிறப்புமிக்க, முழுமையான வழியையும் அதற்கான வேட்கையையும் சுமந்து வருவது.


இன்றைய தேதியில் வகுப்புகளெடுப்பதற்காக பலமுறையும் எனக்கான அந்தரங்க ஊக்கத்தைப் பெறுவதற்காகவும் கவிதையின் வழியே பின்னோக்கிப் பயணிக்கும் வாய்ப்புகளை எடுத்துக்கொண்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் உடலை மொழிதல் என்பது பலருடைய கவிதைகளில் ஆண்-பெண் என்ற பேதமின்றி ஒரு பொதுவான வினையாகவே இருந்திருக்கிறது. அதற்கான இயல்பூக்கத்தை அவர்கள் புவியியலாலும் வரலாற்றாலும் ஏன் மொழியாலும் ஒன்றுபட்ட நம் இனத்தின் இரத்த ஓட்டத்திலிருந்தே பெற்றிருக்கவேண்டும். அதாவது இந்தக் குறிப்பிட்ட இனத்திற்கான பொதுமையான உணர்வுக் குவியல் என்ன என்பதை அந்தக் கவிதைக்குரல் தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்கிறது. தூய தமிழினம் என்ற அர்த்தத்தில் இதை நான் சொல்லவில்லை. அதை மீறியும் மொழியின் செழுமை வேர்விட்ட சிந்தனையிலும் அது மலர்த்திய உணர்ச்சிகளிலும் வெடித்த கவிதைகளின் வெள்ளப் பெருக்கு நம்மை ஈர்க்கிறது. அதனுள் பாய்ந்து குதித்து நீச்சலடிக்கத் தூண்டினாலும் நீருக்குள் விழுந்த பின்னர் மூச்சடக்கிச் செத்துப் போய்விடக்கூடாதே என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை.


உடலுடன் நெய்யப்பட்ட வார்த்தைகளை கவிதையாக்கிய பெருவெளியே நவீன தமிழ்க் கவிதையினது. உடலைக் கட்டிப்போட்ட சிந்தனைகளை மறுத்ததும் விட்டு விடுதலையாகிப் பறத்தலை ஊக்குவித்ததும். உடலை மையமாகச் சுழன்று வரும் கவிதைச் சுனை தான் நமது. இந்நிலையில் பாலிமை நறுக்கப்பட்ட பெண்ணுடலின் யோனி என்பது ஒரு பரந்த பிரதேசத்தைப் போன்றது. அதை ஒரு சிறு வார்த்தைக்குள் அடக்கமுடியாத படிக்கு வீறு கொண்ட எல்லைகளற்ற முள்வேலிகளற்ற வெளியாகப் பார்க்கலாம். அதை இன்னார் இன்னாருக்கென்ற அரசியலாக்கியதும் முகாந்திரங்களாக்கியதும் தாம் அது இறுக்கமாய்ச் சுருண்டு ஒரு தென்னங்காயாக்கிக் கொண்டது தன்னை. பின் நாயின் கையில் சிக்கிய தென்னம்பழம்! ஓடும் உடைக்கப்படாமல் கொப்பரையும் சுவைக்கப்படாமல்.


பொருளுக்கு வருவோம். இன்றும் என்னைக் காண வரும் நோயாளிகளிடம் நான் கூறுவதுண்டு. எந்த ஒரு பெண்ணும் தன் பாலுறுப்புகளை ஆரோக்கியமாகப் பேணுதல் வேண்டும் என்பது. ஒரு பெண்ணின் நெஞ்சுரமும் சிந்தனைத் தெளிவும் காதலும் கவின்திறனும் அவள் உடலில் பாயும் இயக்கு நீர் அல்லது நாளமில்லாச் சுரப்பிகளின் நொதிகளின் சீர்மையால் தாம். ஆனால் அப்படியான அறிவையும் அதைப் பெறுவதற்கான வாய்ப்பையும் அத்தகைய அறிவுநூல்களை வாசிக்க வாய்ப்புகள் அதிகம் கொண்ட பெண் மருத்துவர்களிடம் கூட நான் கண்டதில்லை. உடல், பாலிமை, கலவி போன்றவை பற்றிய கருத்தியல் வெளிப்பாடும் அவற்றின் ஆரோக்கியமின்மையும் அவரவர் உடல்நிலை பொருத்து வெளிப்படுகிறது என்பது மறுக்க முடியாதது. அதற்கான மருத்துவ முறைகளுக்கான வாய்ப்பும் வசதிகளும் அற்றது நமது தேசம். உடல் என்பது எங்குமே பெண்ணுக்குப் பேச்சுப் பொருள் அல்ல. அது ஓர் உயர்திணை விஷயமுமல்ல. இந்நிலையில் உடலை மொழிதல் என்பது கயிற்றில் நடப்பது போன்றது. கயிறு கட்டப்பட்டிருக்கும் முனைகளின் பலம் அறியாமல் நடக்கும் போது வெறும் சாகசமாகவே முடிந்து விடலாம்.


ஒவ்வொரு சொல்லும் சமூக அசைவுக்கான நெம்புகோலாக மாறியிருப்பதை சமூகவியலுக்குள் நுழைபவர்களால் உணரமுடியும். அப்படி மாற முடியாத சொற்கள் ஆணாதிக்க விட்டத்தில் நூலாம்படைகளைப் போல இன்னமும் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அப்படியான சில நூறு சொற்கள் சித்தர் தத்துவக் கலைக் களஞ்சியத்திலேயே இருக்கின்றன. அரும்பொருள் சொற்கள் அவை. உடலின் புதிர்களையும் அவற்றை விடுவிக்கும் பதங்களையும் ஒரே சொல்லில் கொண்டாளுபவை. இதே போல சங்க இலக்கியத்தில் உலவிய சொற்களுண்டு. பின் அவை காலம்காலந்தோறும் மழுங்கடிக்கப்படும் மனிதச் செயல்பாடுகளால் திறமிழந்து செத்து மடிந்தன. சமயம் வாய்க்கும் பொழுது அப்படியான சொற்களை உங்களின் பார்வைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறேன்.


குட்டி ரேவதி

காபியும் வன்முறைத் திரைப்படங்களும் - 3




உடலைப் பற்றிய குறிப்புகள்



காபி குடித்ததும் உடலில் இரத்தம் இடம் வலமாயும் வலம் இடமாயும் மாறி மாறிக் குழப்பத்துடன் சுழலத் தொடங்குகிறது. உடல் புயலின் மையத்தில் அகப்பட்டுத் துடிப்பதைப் போல. அவ்வாறே தமிழ்ப்படங்களின் அளவிலாத வன்முறையும் உடலைத் துடிக்கச் செய்கிறது. எந்த உடலின் மீது இறங்கும் காமமும் காதலும் தன் உடல் மீது இறங்குதல் போலவே வன்முறையும் என்னுடல் மீது இறங்கி நசுக்கிறது. என் இரத்தத்தை உடலின் நாலா திசையும் அலைபாயச் செய்கிறது. துடிக்கும் இதழ்கள் தேடும் வார்த்தைகளைக் கண்டடையும் துணிவு இன்மையால் இன்னும் சில்லிடுகின்றன. கைகள் பனி பொழியும் இரவுகளின் வெளியைத் ஆதரவுக்காய்த் துழாவுகின்றன. இல்லாத ஒரு வெளி நோக்கித் தப்பித்து ஓடத் தவிக்கிறது உடல். குழப்பமானதொரு இரவைத் தொடங்கி வைக்கிறது வன்முறை மிகுதியானதொரு திரைப்படம். காபி பருகியதும் உரையாட ஒரு நண்பனைத் தேடும் மேஜையைப் போல் இத்திரைப்படங்களும் உலகத்தின் விளிம்பிற்கு அழைத்துச் செல்கின்றன. கடைசியாக காபியென்றெண்ணி தினந்தோறும் ஒரு கோப்பைக் குருதியைக் குடித்துக் கொள்கிறது தமிழகம்.



குட்டி ரேவதி

பெண்ணுடல் ஓர் இயந்திரம் - 3



பெண்ணின் பாலியல் மொழி

பாலியல் சொற்கள் பெண்களுக்கு எங்குமே உதவுவதில்லை, ஆண்களுக்கு உதவும் அளவிற்குக் கூட. பெண்களை வர்ணிக்கவும் வசவிற்கும் பெண் பாலியல் சொற்களை ஆண்கள் பயன்படுத்தும் அளவிற்குக் கூட பெண்கள் மருத்துவரிடம் தங்கள் நோயைச் சொல்லவோ தோழிகளிடம் அல்லது பெற்ற அன்னையிடம் உடல் இன்னலைச் சொல்லவோ கூட பயன்படுத்துவதில்லை. அந்த அளவிற்கு இந்தச் சொற்கள் பாலியல் சுமையையும் அரசியல் பளுவையும் ஏற்கின்றன. பண்பாட்டுச் சுமை என்று சொல்ல முடியாது. பண்பாட்டு ஊடகங்கள் எல்லாவற்றிலும் இந்தச் சொற்கள் அள்ளித் தெளித்தாற் போலும் இலை மறை காயாகவும் விரவிக் கிடக்கின்றன. தனது பால்நிலையை அரசியல் பூர்வமாகவும் சமூகப் பூர்வமாகவும் அறிந்த எந்த ஒரு படைப்பாளியும் அந்தச் சொற்களை அதே அரசியல் மற்றும் சமூகத்தின் ஆழம் தெரியாமல் பயன்படுத்த மாட்டார்.


இன்றைய காலகட்டத்தில் பெண்ணின் உடல் என்பது முற்றிலும் ஓர் இயந்திரமே. மேலும் அதன் உறுப்புகளை ஓர் இயந்திரத்தின் பாகங்களைப் போலவே அணுகுவது என்பதை, நவீன படைப்பிலக்கியத்திலும் சரி அறிவியல் தளத்திலும் சரி ஒரு நேர்மையான போக்காகவும் நவீனப் பார்வையாகவும் தெரிவது தான் பெருத்த சோகம். உடலின் முழுமையைப் பேசிய மெய்யியல் அறிவுமரபின் தொடர்ச்சியில் வந்தவர்கள் நாம். நமது உடலின் தனிப்பட்ட பாலியல் சொல்லுக்கு எந்தத் தனித்த பாலியல் சுமையும் இல்லை. அந்தச் சொற்கள் உச்சரிக்கப்படும் பொழுது அவை தன்னுடன் இழுத்து வரும் அரசியல் சமூக பண்பாட்டு அர்த்தங்கள் எல்லாமும் தான் முக்கியமானவை. அத்தகைய சொற்கள் புணர்புழையாகவோ யோனிமடலாகவோ கருத்தரிப்பின் ஆதாரத் திணையாகவோ தாம் எழுச்சி கொள்கின்றன. சொற்களின் இணைப்பாகவே உச்சரிக்கப்படுகின்றன. இயந்திரத்தின் பாகங்களைப் பெயரிட்டு அழைப்பதைப் போல இச்சொற்களையும் உதிரிகளாக அரசியலுக்குப் பயன்படுத்துவது என்பது, ஒரு பெண் தன்னுடைய நோய் தீர்க்க ஒரு பெண் மருத்துவரை அணுகினாலும் சொல்ல இயலாத சமூகநிலை நீடிப்பதைத் தொடரவே செய்யும். அது பெண்ணினத்திற்கு எதிராகவே முடியும். பெண்ணினத்துக்கு எந்த வித நன்மையும் பயக்காது.


பெண்ணின் உடலை ஒரு பாலியல் பிரதியாகவே பார்க்கலாம். சமூகத்தின் எல்லா வகையான வன்மங்களையும் வக்கிரங்களையும் புதைத்து வைத்துக்கொள்ள, எழுதி வாசித்துக் கொள்ள, வெளிப்படுத்திக்கொள்ள என பெண்ணின் உடலை ஒரு பாலியல் பிரதியாக நீலப்படத்தின் ஒரு சுவரொட்டியாகவே மாற்றிக்கொள்கிறது இச்சமூகம். உறுப்பு ஒவ்வொன்றையும் அலங்காரப்படுத்திக்கொள்வதிலும் அதன் வழியாக உடல் மொழியை வெளிப்படுத்துவதிலும் கூட இதே வகை குரூரங்கள் தாம் வெளிப்படும் படியாக வற்புறுத்துகிறது. அவ்விதமாகத் தான் யோனியையும் முலையையும் கூட நமது சிந்தனையில் ஓர் உறுப்பாக இருத்துகிறதே அன்றி அதை ஒரு இயக்கத்திற்கானதாக ஆக்குவதில்லை.



இன்றைய தமிழ்ச்சமூகத்தில் பெண்ணின் பாலியல் உடல் என்று ஒன்றை மொழி வழியாக உருவாக்குவதில் ஈடுபட்டால் அது எத்தகையதாக இருக்கும்? தட்டையான மொழிப் பகிர்வுகள், செயற்கையாக ஊசியால் செலுத்தப்பட்ட மருத்துவச் சிந்தனைகளால் பெருத்த உடல் மொழிகள், உடலுக்கும் வாழ்க்கைக்கும் பொருந்தா அந்நிய பாணி உடைகள், பாலியலின் வளம் அற்ற பெண்ணுடல், அதனால் உருவான நோய்களால் பாலிமையைப் பற்றிய பேச இயலாமை, சப்பென்று இருக்கும் பாலிமை உணர்ச்சிகளால் ஆகிய உடல் அல்லது தீவிரமான பாலிமை என்பதை முரட்டுத் தனமான இயைபு அற்ற உணர்ச்சிகளால் வெளிப்படுத்துதல் என பெண்ணின் உடல் தீவிரமான பரிசோதனைகளுக்குப் பெண்களாலேயே உட்படுத்தப்படுவதாய்த் தான் இருக்குமோ என்ற சந்தேகமே தோன்றுகிறது.



எனது கணிப்பில் இன்றைய நூற்றாண்டில் பெண்கள் அதிகமும் இழந்திருப்பது அவர்களின் பாலிமைச் செழுமையைத்தான். பாலிமையை வெறுமனே பெண்மை என்ற ஒற்றைச் சொல்லால் வரையறுக்க முடியாது. இந்த உடலுக்கு ஊக்கமும் புத்துணர்வும் தரும் பிரத்யேகமான இயங்கியல் கொண்ட உறுப்புகளுடனான உறவை, பெண்கள் தரம் குறைந்த தமது ரசனைகளால் முறித்துக் கொண்டனரோ என்ற இரக்கம் மேலிடுகிறது. நிறைவாக, பெண்ணியச் சிந்தனை என்பதே பெண்ணுடலின் பால்வினை உறுப்புகளுடனான இயல்பான ஆரோக்கியமான மேம்பட்ட உறவுகளால் உருவாவதே என்பதை எப்படி நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம்? இயற்கையின் புத்துருவாக்கத்தை மறுப்பதெல்லாம் அதிகாரமயமானதாக ஆதிக்கமயமானதாக ஆண்மையென்பதாகக் கருதப்படும்போது இயற்கையின் ஓரம்சமான பெண் பாலிமையை முழுமையான அளவில் புத்துருவாக்கம் செய்வது தானே பெண்ணியச் சிந்தனையாக இருக்க முடியும்? இயல்பான காம ஊக்கத்தை ஆரோக்கியமற்ற பால்வினை உறுப்புகளால் ஒரு பொழுதும் தர இயலாது என்பதைப் போலவே ஆரோக்கியமற்ற பாலியல் சொற்பயன்பாடுகளும் சமூகச்செயல்பாடுகளுக்கு இயல்பூக்கம் அற்றவையாகத் தான் இருக்கும்.



பாலியல் கவிதையின் மொழி என்பது தன்னுடலை அன்றாடம் பேணும் பெண்ணுடலின் பால்வினைச் சுரப்பியுடன் நேரடியான உணர்வுப் பகிர்வு கொண்டதாக இருக்கும். ஆண் – பெண் பொதுப் பாலிமைக்கான கூட்டுறவை மொழிபெயர்க்கும் சொற்களுடையதாக இருக்கும். ஆதிக்க அரசியல் பொதிந்த பாலிமைச் சொற்களின் அர்த்தங்களுக்கு புது விளக்கம் தரும். எத்தகைய மலிவான வசவில் பயன்படுத்தக் கூடிய பாலியல் சொல் என்றாலும் கவிதையில் அதற்கு இடமிருக்கிறது என்றாலும் அதே வினையை கவிதை வழியாக அது ஆற்ற முடியாது தானே!

(மீண்டும் எழுதுவேன்)

குட்டி ரேவதி

ஆண் உடல் - 2





பெண்ணின் பாலியல் மொழி
ஆணுடலும் பெண்ணுடலும் ஒன்றையொன்று புத்தாய்வு செய்வதற்கான நோக்குடனும் இவ்வுலகம் எந்தக் கணத்திலும் அலுப்பூட்டாதபடி இருப்பதற்கும் உருவானதாக இருக்கும் என்று நம்புகிறேன். அடிப்படையில் இரண்டு உடல்களும் வேறு வேறு என்றாலும் இரண்டின் தேவைகளும் நிரந்தரமானவையாகவும் சமமானதாகவும் இருக்கின்றன. இந்நிலையில் ஆண் உடல் என்பது பெண்ணுரிமைகளுக்கும் பெண் விடுதலைக்கும் எப்படி எதிரானதாக மாறுகிறது என்பதை அறிவது அவ்வளவு எளிதானதாக இல்லை. ஏனெனில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாகவும் ஒவ்வொரு வரலாற்றையும் கொண்டு ஆண் உடல் பெண் உடலுக்கு எதிரான ஆதிக்கம் பெறுகிறது. இயற்கையின் இயல்புகள் படி ஒன்றுக்கொன்று நிரந்தர ஈர்ப்பைக் கொண்டிருக்கும் இவ்வுடல்கள் சமூகம் சார்ந்த அதிகாரங்களைத் தன் மீது சுமத்திக்கொள்ளும் போது தான் மற்றைய உடலுக்கு எதிரானதாக மாறுகிறது.


உடலுறவில் இரு உடல்களும் ஒரே விதமான விசையுடன் இயங்கினாலும் அவ்வமயம் எந்த ஓருடல் கருத்தியல் அதிகாரத்தைப் பெற்றுள்ளதோ அந்த உடல் மற்ற உடலை ஒடுக்குகிறது. அது ஆணுடையதாகவும் இருக்கலாம் பெண்ணுடையதாகவும் இருக்கலாம். நமது பொதுச்சிந்தனை என்பதே கூட ஆதிக்கமும் அதிகாரமும் மிக்க உடலை ஆண் உடல் என்றே பழகி வந்திருப்பதால் இவ்விடத்திலும் அதிகாரம் மிக்கதை ஆதிக்கம் மிக்கதை ஒடுக்கவிரும்புவதை ஆணுடல் என்றே கூறுகிறோம். திரைப்படங்களும் விளம்பர உலகமும் பத்திரிகை உலகமும் இத்தகைய ஆணுடலுக்கான இலக்கணங்களைத் தொடர்ந்து படைத்தளிப்பது இன்னும் இன்னும் இத்தகைய ஆணுடல் உருவாவதற்கான மன அவசத்தையே சமூகத்திற்கும் ஏன் பெண்களுக்குமே கூட வழங்கி வருகிறது. பெண்கள் அத்தகைய ஆண்களையே தமக்குப் பொருத்தமான ஆண்களாகவும் கற்பனை செய்து வருகின்றனர். ஆண் உடல் என்றால் அதிகாரத்தை மற்றவர் மீது செயல்படுத்துவதாக இருக்க வேண்டும் என்ற கருத்திற்கு நமது பிடரிமனமும் பழகியிருக்கிறது. அதிகாரம் என்பதையே ஆண்மை என்கிறோம். ஆளுமையை அன்று. இவ்வாறு பெண்ணுடல் ஆணுடல் குழப்பம் சமூகத் தளத்தில் நிகழ்ந்து விட்ட நிலையில் ஆண் உடல் என்பதைத் தற்பொழுது எழுத்து மொழியில் எப்படி வரையறுப்பது?


அரசு அதிகாரம், போர் அரசியல் போன்றவற்றைப் போலவே சாதிய வன்கொடுமையை நிகழ்த்துவதற்கான போர்க்களமாக பெண்களின் யோனி என்பது தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்படுத்தப் பட்டு வருவது நாம் அறியாதது அன்று. கவிஞர் தில்லையின் கவிதையான ‘எரிந்தும் நூராத தணலுக்குள் போய் வருவோம் ஒரு முறை.
போரிட்டு மடிந்த பெண்ணுடலை
யுத்த நிலங்களில்
தழுவிப் புணர இழுத்துவருகிறான்
இராணுவ வீரன்
அவனுடைய
ஆண்குறி
19.99 கிலோ வெடிமருந்து
நிரம்பிய குண்டின்
வேகத்தை ஒத்ததாயிருந்தது
பெண்ணுடலில்
மீதமிருந்த ஆடைகளுமில்லை....
அடி..... கொல்லு...... என்ற சத்தம்
மட்டுமே அச்சமூட்டியது
அடுத்த கணமொன்றில்
யோனி தின்று நாக்குத்தொங்க
நகைப்புக் காட்டுகிறான்
இராணுவ வீரன்
அரையும் குறையுமென
ஒரு வீடியோ காட்சி
இணையங்களில் புகைப்படங்கள் என
நீள்கிறது
பெண்ணுடல் மீதான
ஆணாதிக்க கொடுமைகள்.
எமது கண்கள் முன்னே
இரத்தம் கசிய சிதைத்த
மனம்பேரியையும்
கோணேஸ்வரியையும்
சாரதாம்பாளையும்
கிருசாந்தியையும் கடந்து
பேரினவாத யுத்தத்தில்
எத்தனை பெண்போராளிகளை
வெடிமருந்து நிரம்பிய
ஆண்குறிகள்
தின்று தீத்திருக்கும்?
அதை நம்பமறுக்கும்
ஆணாதிக்க அரசியல்
இணையங்களில் கேவலமாய்
நம்பரும் வட்டமும் வரைந்து
பெண்ணுடலை
ஆய்வு செய்யும் கொடுமைகள்
ஆணாதிக்க பிசாசுகளே
நீங்கள் யாராக இருந்தாலும்
எரிந்தும் நூராத தணலாய்
இன்னும் ஏன் இருக்கிறீர்கள்
தூஊ நூர்ந்து போங்கள். (நன்றி: ‘பெண்ணியம்இணையத்தளம்)
மேற்கண்ட கவிதையில் வெடிமருந்து நிரம்பிய ஆண்குறிகள் என்று, கருத்தியலை கவிதை வெளிக்குக் கொண்டு செல்லும் தன் மொழியால் ஆணுடலை வருணிக்கிறார் தில்லை. இவ்விடத்தில், நாம் சில விஷயங்களை நினைவு படுத்திக்கொள்வோம்.


‘பெண்ணின் உடல் பார்க்கப்பட்டு புனையப்பட்டு எழுதப்பட்ட அளவிற்கு ஆணின் உடல் எழுதப்படவில்லை. ஆணே பெண்ணின் உடலை எழுதுபவனாக இருந்திருக்கிறான். பெண் தனது உடலை எழுத நேர்ந்தது என்பதும் ஆணின் கண்காணிப்பில் இருந்த உடலை தனது உடலாக மீட்டெடுக்கும் உத்தியாகிறது. ஆணின் உடல் அதிகாரப் பிரயோகங்களுக்காகவே இருந்திருப்பதால் முலைகள், யோனி போன்ற பெண்ணுடல் உறுப்புகள் அதிகாரமிழந்து எதிர்நிலைகளை அடைகின்றன. ஆண் – பெண் உடல் கலந்த மயக்க நிலை கொண்ட அரவாணிகளின் உடல் நிலையென்பதும் அதிகார எதிர்நிலைகளுக்கு வெளியே நின்று நாம் மேற்கொண்டிருக்கும் விவாதத்திற்கு அழகு கூட்டுகிறது. அதாவது, ஆண் உடல், பெண் உடல் என்ற இரு எதிரெதிர் உடலே இருக்க முடியும் என்ற கருத்தைத் தகர்க்கிறது


எழுத்து மொழியில் ஆண் உடல் என்பது என்னவாக இருக்கிறது? ஆதிக்கக் கருத்தியலாகவோ அதிகாரம் மிக்க செயலாகவோ இருக்கிறதே அன்றி ஆணின் உடல் இயல்பான நிலையில் எழுதப்படவே இல்லை. அல்லது அத்தகைய உடலை அறிவதற்கான உரிமையையும் வாய்ப்பையும் பெண்கள் பெறவே இல்லை. ஆணின் உடல் என்பது ஆண்களின் கருத்தியலுக்குப் பின் ஒளிந்து நிற்பதாகவும் பெண்ணின் உடலை விலகி நின்று கண்காணிப்பதாகவும் இருக்கிறது என்றும் கொள்ளலாம். ஆணின் உடல் என்பதை அறியும் வாய்ப்பு நமக்கு இல்லாமல் இருப்பதும் பெண்ணொடுக்குமுறைகளில் ஒன்றே. அத்தகைய உடல் ஒன்று எழுத்தானால் வரலாற்றை மீண்டும் எழுத வேண்டியிருக்கும் என்பதே ஆதிக்கம் பயில்வோரின் அச்சமாக இருக்கும்.


இவ்விடம் இந்திய மண்ணில் பிறந்த நமது ஆண் உடல் பெண்ணுடல் வேறுபாடுகள் எங்கு உருவாகின்றன என்று பார்க்கலாம்.
2006 ம் ஆண்டில் கயர்லாஞ்சியில் நிகழ்ந்த சம்பவம் யாருக்கும் மறந்திருக்காது. என்றாலும் ஒரு முறை இங்கே நினைவூட்டிக்கொள்ளலாம். ‘2006, செப்டம்பர் 29ம் நாள். ஆதிக்க சாதியினர் கயர்லாஞ்சியில் வசித்து வந்த ஒரே தலித் குடும்பமான பய்யாலால் மற்றும் அவர் குடும்பத்தினர் மீது வன்கொடுமையை நிகழ்த்தினர். அவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் ஆடைகளையும் உருவி உடம்பில் துண்டு துணியுமின்றி அவர்களை ஊரின் மையப் பகுதிக்கு இழுத்து வந்து மிகக் கொடூரமாகத் தாக்கினர். ஆதிக்க சாதியினர் ஆண் பெண் பேதமின்றி, அனைவரும் தாக்குதலில் ஈடுபட்டனர். அண்ணனையும் தங்கை பிரியங்காவையும் உடலுறவு கொள்ளச் சொல்லி துன்புறுத்தினர். மறுத்த ரோஷனையும் சுதிரையும் மிகக் கடுமையாகத் தாக்கியதுடன் அவர்களின் பிறப்புறுப்பு மீது அடித்து உதைத்து வெட்டி எறிந்தனர். இந்தக் கொடுமை ஒரு புறம் நடக்க, இன்னொரு புறம் தாய் சுரேகாவையும் மகள் பிரியங்காவையும் அனேகமாக அத்தனை ஆதிக்க சாதி ஆண்களும் வன்புணர்ச்சி செய்தனர். அதுவும் போதாதென, இரு உயிரும் பிரியும் வரை மாடு விரட்டப் பயன்படும் தொரட்டிக் குச்சியையும் மூங்கில் குச்சியையும் இருவரின் பிறப்புறுப்பிற்குள்ளும் குத்தினர். அடிபட்டுக்கிடந்த ரோஷனையும் சுதிரையும் மேலே பலமுறை தூக்கியெறிந்து கீழே விழச்செய்தனர்நன்றி: பூங்குழலி, தலித் முரசு.


தோழியரே, பிறப்புறுப்புகளுக்கு இச்சமூகத்தில் வேறு வேறு நோக்கங்களும் இருக்கின்றன இல்லையா? அதற்கு ஆண் – பெண் பேதமில்லை இல்லையா? இந்தப் புகைப்படத்தில் இருக்கும் ஆண், பெண் அவர்களின் உடல் மீது வன்கொடுமை நிகழ்த்திய ஆண், பெண் இவ்விரண்டு நிலைக்கும் இடையே எவ்விடத்தில் நமது உடல் தன்னை அடையாளம் காண்கிறது. தில்லையின் கவிதையில் குறிப்பிட்டுள்ள இராணுவ வீரன், பய்யாலால் குடும்பத்தின் மீது வன்புணர்வு நிகழ்த்திய ஆதிக்க சாதியினர் இவ்விரு வகையினரை வேண்டுமானால் ஆணாதிக்கக் கருத்தியலின் படிமங்கள் என்று கொள்ளலாம். ஆனால், ஓர் ஆதிக்க சாதிப் பெண்ணை விட அதிகாரமும் வாய்ப்புகளும் அற்ற ஆண் உடலொன்று இந்தியாவில் இருப்பதற்கு சாத்தியம் என்பதை நமது பெண்ணெழுத்து மொழி கண்டடைந்திருக்கிறதா? பெண்ணின் யோனி என்பது ஆணாதிக்க அதிகார மயக்கருத்துகள் இயங்குவதற்கான உடலாகவே கருதப்பட்டிருக்கிறது. ஆதிக்கம் மிக்க உடலை ஆண் உடலாகவும் ஒடுக்கப்படும் உடலைப் பெண்ணுடலாகவும் அவதானிக்கும் அறிவுசார் விவாத்த்திற்கு நம்மை நாம் எவ்வளவு தூரம் தயார் செய்து கொண்டிருக்கிறோம்? ஆக, மேற்குறிப்பிட்டது போன்ற சூழ்நிலையில் தன்னுடல் வழியாக, தன் உடலைக் காரணம் காட்டி ஆதிக்கத்தைச் செலுத்தும் பெண்ணுடலையும் ஆணுடலாகக் கொள்ளலாம் தானே?
(மீண்டும் எழுதுவேன்)
குட்டி ரேவதி