நம் குரல்

ஒரு பெண்ணியவாதியாக இயங்குவதென்பது...
பெண்ணியம் எனும் இயக்கத்துறை ஒரு தீவைப் போலவே இருந்தது. பெண்ணுரிமைக்கான இயக்கங்கள் முளைவிட்ட தொடக்கத்தில் அதற்கான சமூகத் தேவையை உணராமல் அதை விமர்சித்துப் பேசவே ஆங்காங்கே குழுக்கள் எழும்பின. பெண்ணுரிமைக்காகப் போராடுவதை தனது முழுநேரப் பணியாக எடுத்துக் கொள்பவர்களும் அகதிகளைப் போலவே இருக்க நேர்ந்தது. எவரோடும் தொடர்புப் படுத்திக் கொள்ள முடியாமல், எவரோடும் பொருந்த முடியாமல் ஆனால் தாம் தமது பயணப் பாதையாக தேர்ந்தெடுத்துக் கொண்டதை அர்ப்பணிப்போடு எப்பொழுதும் போலவே தொடர நேர்ந்தது. உலகெங்கும் அங்கும் இங்குமாய் சிலர் ஓயாது இயங்கியதன் பேரிலேயே பெண்ணியம் என்பது ஓர் இயக்கமாகியது.ஆனால் எல்லா பெண்களுக்கும் பொதுவானதொரு சாலையை பெண்ணியப் பாதையாக கட்டமைக்க முடிவதில்லை. ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையும் சமூகப் பின்புலமும் வெவ்வேறான அதிகார அடுக்கில் எழுப்பப் பட்டிருப்பதே அதற்குக் காரணமாகும். பெண்ணியத்தின் முழுப் பரிமாணம் என்பதே கூட பெண்ணியச் சிந்தனையை வேறுவேறு களங்களில் அதாவது, கலை, இலக்கியம், அரசியல், வரலாறு மற்றும் பண்பாடுகளில் நின்று இயக்கும் போது தான் சாத்தியம் . பணியிடங்களில் பெண்ணுக்கு விடுதலையின் சூத்திரங்களாய் சொல்லப் படுபவை, ‘இல்லத்தரசி’களாய் இருப்பவர்களின் விடுதலைக்குப் பொருந்தாமலும், உதவாமலும் போகலாம் என்பது என் தொடர்ந்த பணியில் நான் கண்டறிந்தவை. மேலும் பெண்ணின் விடுதலைக்கு அவள் கல்வியோ, பொருளாதார பலமோ கூட போதவில்லை. அவள் தன் ஆளுமையை கண்டறிந்து அதன் வழி செல்லவேண்டியிருக்கிறது. பெண்கள் பன்முகங்கள் எடுக்க வேண்டிய உலகில் பெண்ணின் ஆற்றாமைக்கும் அறியாமைக்கும் எவரும் பொறுப்பேற்க வேண்டிய அவசியமுமில்லை. அத்தகைய வாழ்க்கைப் பயணம் ஒரு தனிமைப் பயணமாக இருக்கும் என்பதிலும் மாற்றுக் கருத்துமில்லை. சமூகத்தின் அடுக்குகளின் இடுக்குகளில் வேரூன்றியிருக்கும் அதிகார முளைகளைப் பற்றி அறியாமல் பெண்ணுக்குப் புறவயமான தீர்வுகளை மட்டுமே வழங்கிவிடுவது, அவளுக்கு மட்டுமே கிட்டும் தற்காலிகமான பலனே அன்றி அது அவளொட்டிய சமூகத்திற்கான விடுதலையாக இருக்காது. ஆனால் இப்பொழுது அவள் வாழும் நிலத்தினுடன் அவள் வரலாற்றையும் பண்பாட்டையும் இணைத்துப் பார்க்கையில் அவள் மீதான ஒடுக்கு முறையின் வடிவங்களை மிகத் துல்லியமாகவும் எளிதாகவும் புரிந்து கொள்ள முடிகிறது.பெண் இன்றைய காலத்தின் எல்லைகளை எந்த அளவுக்கு அனுபவிக்க அனுமதிக்கப் பட்டிருக்கிறாள் என்று கேள்வி எழுப்பும் அதே நேரத்தில் எவ்வாறெல்லாம் அவற்றைத் தொடர்வதற்கான பிரயத்தனங்களை அவளும் எடுக்கிறாள் என்பதும் முக்கியமான விஷயமாகிறது. அதற்கு ஆண்மைய எதிர்ப்பாளர்களாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஆணின் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் இருப்பையும் மட்டுமே ஊக்கப்படுத்தும் சமூக அலகுகளான திருமணம், மதம், குடும்பம், சாதி ஆகியவற்றையும் தொடர்ந்து எதிர்த்தலும் அவற்றின் இறுக்கத்தைத் தளர்த்தப் போராடுவதும் அவற்றை மறு கட்டமைப்பு செய்வதும் மிகமிக அவசியம். ஏனெனில் தன் சுய வாழ்க்கையும் கட்டுண்டு கிடக்கும் திருமணம், குடும்பம் இன்ன பிறவற்றிலிருந்து கொண்டே தான் அந்த சமூக அலகுகளை விமர்சிக்க வேண்டியிருக்கிறது. தொடக்கத்தில் ஆண்களைப் பட்டவர்த்தனமாக நேரடியாக எதிர்த்த பெண்ணியவாதிகளும் பின்பு ஆண்களோடு நிகர் நின்று போராடத் துணிந்தனர்.ஆண்கள், பெண்களை விடவும் உயர்ந்தவர்கள் என்று நிரூபிக்க முனையும் போதெல்லாம் இயற்கையை விடவும் உயர்ந்தவர்கள் என்றும் நிரூபிக்க முயல்கிறார்கள். ஆகவே பெண்களே சூழலியல் போராளிகளாகவும் ஆனார்கள். இன்று பெரும்பாலான சூழலிய இயக்கங்கள் பெண்களால் தொடங்கப்பட்டு இயக்கப்படுபவை. அந்தந்த சூழலுக்கு ஏற்ற இயக்கங்களைக் கட்டமைப்பவர்களாக உலகெங்கும் இருப்பதும் பெண்களே. இவர்கள் இதை தங்களின் சொந்த, அன்றாட வாழ்க்கையுடன் தங்களின் குடும்பம், தனிப்பட்ட தனது இலட்சியம், தனது அலுவலகப் பணி என எல்லா இடங்களிலும் தனது ஆளுமையை செதுக்கிக் கொள்வதற்கும் தனது உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்கும் செய்கிறார்கள். இத்தகைய பிராந்திய அளவிலான உரிமைப் போராட்டங்களும் சிறிய அளவிலான கிளர்ச்சிகளுமே மிக அடிப்படையான பெண்ணுரிமைகளைப் பெறுவதற்கான வழிகளை ஏற்படுத்தித் தந்துள்ளன.பெண்ணியவாதிகள் ஆண் வெறுப்பாளர்களாகப் பார்க்கப்பட்ட தொடக்கக் கால தொல்லைகளெல்லாம் உதிர்ந்து இன்று பெண்ணும் ஆணும் பொது நோக்கத்துடன் ஒரே தெருவில் நின்று போராடத் தலைப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமென்பது ஆணின் செழுமையான வாழ்க்கைக்கும் ஏற்றது என்ற புரிதல் ஏற்பட்டுள்ளது.

ஒரு பெண்ணியவாதியாக இயங்குவதென்பது,

‘தூக்கியெறியப்படாத ஒரு கேள்வி’*யுடன் தொடங்குகிறது. அதுமட்டுமன்றி,

சமூகத்தில் பலவிதமான பரிமாணங்களை தனக்கென நிலைநிறுத்த வேண்டியிருப்பது.

பொதுவெளியையும் அந்தரங்க வெளியையும் எப்பொழுதும் இணைத்தே அணுகுவது.

பெண் – ஆண் மனதில் இயங்கும் ஒடுக்குமுறைகளை, அடக்கு முறைகளைக் களையும் வண்ணம் சமூக அலகுகளை வடிவமைப்பது

சலிப்பூட்டும் நடுவாந்திரமான அழகியலுக்கு எதிரான அழகியலை உருவாக்கவேண்டியிருப்பது.

புவியியலுக்கு ஏற்ற பெண்ணுரிமைகளை சம்பாதிப்பதும் தன்னையொத்தோருக்குப் பெற்றுத் தருவதும்.

இடைவிடாமல் சுய சிந்தனையின் வழியில் அரசியலின் குறுக்கீடுகளற்று பயணிப்பது.

வரலாற்றை மறு வாசிப்பு செய்வது.

பண்பாடு என்பது மானுடத்தின் பண்புகளை மேன்மைப்படுத்துவதற்கே என்றறிந்து உழைப்பது.

தொடர்ந்து அறிவுத் துறையிலும் படைப்பாக்க வெளியிலும் பங்கெடுத்துக் கொண்டு தான் கண்டடைந்ததைப் பாரபட்சமற்று பகிர்ந்து கொள்வது.* ஈழக்கவிஞர் சிவரமணியின் கவிதை வரி.


குட்டி ரேவதி

5 கருத்துகள்:

TBR. JOSPEH சொன்னது…

ஆண்கள், பெண்களை விடவும் உயர்ந்தவர்கள் என்று நிரூபிக்க முனையும் போதெல்லாம் இயற்கையை விடவும் உயர்ந்தவர்கள் என்றும் நிரூபிக்க முயல்கிறார்கள். //

இந்த நிரூபணமே தேவையில்லாத ஒன்று என்கிறேன்.

ஆணை விட பெண் உயர்வா அல்லது பெண்ணை விட ஆண் உயர்வா என்கிற சிந்தனையே தேவையில்லை..

இருவருமே சமமானவர்கள் என்பதை எப்போது இருவருமே உணர்கிறார்களோ அன்றுதான் நீங்கள் கூறுகின்ற குடும்பமும், சமுதாயமும் மேம்படும்.

ஆனால் இந்த கருத்து ஆண்களின் மனதில் இல்லை என்பதே உங்களைப் போன்ற பெண்ணியவாதிகளின் கருத்தாக இருக்கிறது. அதை பறைசாற்றிக்கொண்டு நடப்பதை விட ஆண்களின் மனதில் அந்த எண்ணத்தை ஏற்படுத்துவது எப்படி என சிந்தியுங்கள், செயல்படுங்கள்.

குட்டி ரேவதி சொன்னது…

ஆண்கள், பெண்களை விடவும் உயர்ந்தவர்கள் என்று நிரூபிக்க முனையும் போதெல்லாம் இயற்கையை விடவும் உயர்ந்தவர்கள் என்றும் நிரூபிக்க முயல்கிறார்கள்.

இந்த நிரூபணமே தேவையில்லாத ஒன்று என்கிறேன்.

ஆணை விட பெண் உயர்வா அல்லது பெண்ணை விட ஆண் உயர்வா என்கிற சிந்தனையே தேவையில்லை..

இருவருமே சமமானவர்கள் என்பதை எப்போது இருவருமே உணர்கிறார்களோ அன்றுதான் நாம் கூறுகின்ற குடும்பமும், சமுதாயமும் மேம்படும்.

ஆனால் இந்த கருத்து ஆண்களின் மனதில் இல்லை என்பதே எங்களைப் போன்ற பெண்ணியவாதிகளின் கருத்தாக இருக்கிறது. உங்கள் மனதில் அந்த எண்ணத்தை ஏற்படுத்துவது எப்படி என சிந்தியுங்கள், செயல்படுங்கள்.

இதுவே எனது பதில்,டி.பி.ஆர்!

பெயரில்லா சொன்னது…

மேடம்
நான் உங்கள் கட்டுரைகள் கவிதைகள் வாசித்துள்ளேன்.. ஒரு விசயம் பல நாட்களாக (அல்லது வருசங்களாக) பெண்ணியவாதிகளிடம் கேட்க வேண்டும் என்று தோன்றிக் கொண்டேயிருக்கிறது... தற்போது ஒரு சந்தர்ப்பம் வந்திருக்கிறது...
சுபாவமாக மனிதர்கள் வேறு படுகிறார்கள்...
கீழ்த்தட்டு பெண்கள் வறுமையில் உழலும் பெண்கள் போன்றவர்களிடன் பிரச்சனையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.. அவர்களாக பரிந்து பேசுவதும் நியாயம்தான் என்று தோன்றுகிறது.. நான் பெண்ணை சக human ஆகத்தான் பார்க்கிறேன்... ஆனால் நவநாகரீகம் என்ற பெயரில் சில விசங்கள் ஏற்ற மறுக்கிறது... என் அனுபவம் என்பதை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என்பதையும் நான் உணர்ந்தாலும், இரண்டு சம்பவங்களைச் சொல்ல விரும்புகிறேன்...
சம்பவம் 1
ஒரு பொயிட் காலர் வேலை செய்பவர் வயது 50த் தொடும்... அவர் கடந்த ஒரு வருடமாக தன் மனைவியால் அவமானப் படுத்தப் பட்டுக் கொண்டேயிருக்கிறார்... மனைவி virtuallஆக தினமும் குட்டுகிறார், கிள்ளுகிறார் (அடிப்பதில்லை போலும்.. நமது கலாச்சாரப் பெருமை என்று நினைத்துக் கொண்டேன்) தற்போது ஒரு மனநோயாளியைப் போல அலுவலகம் வந்து போகிறார்.. அவரை 25 ஆண்டுகளாகத் தெரியும்.. சுபாவத்தில் பிறர் வம்புக்குப் போகாத அப்பாவி என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும்...
சம்பவம் 2
இன்னொரு நபர், அவர் மனைவி மனை நோயாளி என்பதைத் தெரியாமல் அவருக்குத் திருமணம் செய்து விடடார்கள்.. குடியே பார்க்காத குடும்பத்தில் பிறந்து தற்போது தற்போது குடிக்கு அடிமையாகிக் கிடக்கிறார்..
இதைப் பற்றிய உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்....

குட்டி ரேவதி சொன்னது…

அன்புள்ள நண்பருக்கு,
நீங்கள் பெயரில்லாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்ததன் காரணம் புரியவில்லை. என்றாலும் நீங்கள் கேள்வி கேட்டிருந்த முறை எனக்குப் பிடித்திருந்ததாலும் இதற்குப் பதில் சொல்வது அவசியம் என்றுணர்ந்தாலும் எழுதுகிறேன்.


நீங்கள் எந்த தேசத்திலிருந்து எழுதுகிறீர்கள் என்று தெரியவில்லை. இந்தியாவைப் பொறுத்த வரை ஆண்களை பெண்களுக்கு முற்றிலும் எதிரானவராக வைத்துப் பேசமுடியாது. ஏனெனில் ஒரு மேல்சாதிப் பெண்ணாக இருந்தால் அவருடன் காதல் உறவு கொண்டிருப்பவரோ திருமணம் செய்து கொண்டவரோ கொஞ்சம் சாதியின் உயரம் அப்பெண்ணை விட குறைந்தவராய் இருந்தால் போதும். அதிகாரம் தலைகீழாய்த் தான் செயல்படும்.(நீங்கள் குறிப்பிட்டிருக்கும் முதல் வழக்கு அத்தகையது).அதாவது அந்தப்பெண் அவரை எல்லா வகையிலும் அதிகாரம் செலுத்தவே செய்வார். இதைப் பேசப்போய் மற்ற பெண்ணியவாதிகளிடமும் நான் வாங்கிக் கட்டிக் கொண்டது உண்டு, பெண்களுக்கு எதிராக இருக்கிறேன் என்று. அடிப்படையில் ஆண்-பெண்- சாதி என்ற அதிகாரக் கட்டமைப்பு எவ்வாறு இயங்குகிறது என்பதை நுட்பமாக புரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் பெண்ணியத்தில் நீங்களோ நானோ எந்த இடத்தில் இருந்து பேசவேண்டும் என்பதும் தெளிவாகும். அதைக் குறித்த தெளிவான கட்டுரை மிக விரைவில் எழுதலாம் என்று இருக்கிறேன்.


இரண்டாவதாக நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வழக்கில், அவர் உண்மையிலேயே மனநோயாளியா? அல்லது என்ன காரணத்தால் மனநோயாளியானார்? கல்யாணத்திற்கு முன்பா, அல்லது பின்பா? அவ்வாறு நோயாளியாக இருந்தார் என்று தெரிந்த பின்னும் ஒரு பெண்ணை கல்யாணம் செய்து வைக்கிறார்கள் என்றால் குடும்பம் என்பதைப் பெண் சுமந்தே ஆகவேண்டுமென்று ஏன் நிர்ப்பந்திக்கிறார்கள்? சமூகத்திற்குப் பயந்து, திருமணமாகாத பெண்ணை வீட்டில் வைத்திருக்க விரும்பாமலா?


நண்பரே, இவ்வளவு கேள்விகளுக்கும் பதில்களைப் பொறுமையாகத் தேடுவதும் தான் பெண்ணியவாதியாக இயங்குவதென்பது.

தமிழ். சரவணன் சொன்னது…

இதுபோல் பெண்களைபற்றி தங்கள் கருத்தென்ன சகோதரியே....?

நம் நாட்டில் அப்பாவி அபலைப்பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை யாராலும் மறுக்க முடியாது அதெ சமயம் இந்த "வரதட்சணை கொடுமை - 498ஏ" என்றும் சட்டத்தால் தவறாகப்பயன்படுத்தும் கெடுமதிப்பெண்களால் பற்றி தங்களுக்கு சிறு புள்ளி விபரம் - இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் தெருவிக்க விரும்புகின்றேன்...
இச்சட்டத்தால் ஒரு பெண் புகார் கொடுத்தால் எந்த வித விசாரணையும் இன்றி கைது செய்யலாம்..., அப்படி கைது செய்யப்பட்டவர் தான் எனது திருமணத்திற்கு வந்த பாவத்திற்காக எனது தம்பி நண்பருடைய தாயர்..
மற்றும் இவ்வழக்கில் எனது தாயர் மற்றும் தம்பி யும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர் இதில் கொடுமை என்ன வென்றால் எனது மனைவி குடும்தினரால் எனது தாயும் தம்பியும் (தற்பொழுது நானும்) "எனது" வீட்டை விட்டு போலீஸ் மற்றும் கட்டப்பஞ்சாயத்து பொறுக்கிகளினால் துரத்தப்பட்டனர் என்பது எனது பகுதியல் உள்ளவர்களுக்கு த்தெரியும்
மற்றும் இதைவிடக்கொடுமை எனது குழந்தை இவரை நான் பிறந்த பொழுது பார்தது இவரின் மழையை இழப்பது மகாக்கொடுமை... இவரைப்பார்கசென்றால் கடத்த வந்தான், கொலைசெய்யவந்தான் என்றும் புகார் கொடுக்கலாம் மற்றும் நீதிமன்றம் வழியா பார்க மனு செய்தால் ஒருமாதத்திற்கு ஒருமணி நேரம் அல்லது அரைநேரம் தான் பார்வை நேரம் (பெற்ற பிள்ளையை பார்க இவ்வளவு சட்டகெடுபிடி)
மற்றும்.. இதுபோல் வரதட்சணை கொடுமை பொய்வழக்கில் பதியப்படும் (புணையப்படும்) வழக்குகளில் 98 சதவித வழக்குகள் பொய்வழக்குகள் என்று நீதிமன்றத்தால் பொய்வழக்கு என்று தீர்ப்பு வழங்கப்படுகின்றது.... இரண்டு சதவீத வழக்குகள் மட்டுமே உண்மை..
2004 ஆம் அண்டில் இருந்து சுமார் 1,50,000 ஆயிரம் பெண்கள் மட்டும் விசாரணை கைதிகளாக (எனது தாயர், மற்றும் தம்பி நண்பருடைய தாயர் உட்பட) சிறையில் அடைக்கப்பட்டுள்ளர்... ஆண்டொன்றுக்கு சுமார் 20,000 ஆயிரம் குழந்தைகள் தந்தையில்லாமல் வளர்கின்றன ( எனது குழந்தை உட்பட)