நம் குரல்

திரைக்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரைக்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அம்மன் படங்களும் அம்பேத்கரும்


சத்யஜித் ரே, இந்திய சினிமாவின் தந்தை என்று உணரப்பட்டவர். கலாப்பூர்வமான வெளிப்பாட்டைக் கொண்டவர் என்று கொண்டாடப்பட்டவர். இன்றும் அவரது பெண் கதாபாத்திரங்களின் ஆளுமையும் நேர்த்தியும் ஒரு முழுக்கதையையும் கற்பனையையும் விரித்துக்கொடுக்கப் போதுமானவையாக இருக்கின்றன.

பெண்களைப் பற்றிய இந்திய படங்கள் பெரும்பாலும் அபத்தமான முதிர்ச்சியை அடையாளமாக்கி வசூல் செய்துவிடும். தமிழ்நாட்டின் அம்மன் படங்களுக்கு விசித்திரமான குணநலன்களும், தாலியை இறுக்கமாகக் காப்பாற்றிக்கொள்ளும் வித்தைகளைக் கற்றுக்கொடுக்கும் பாடங்களும் உடையவை.

சத்யஜித் ரேயின் "தேவி"யில், இந்தப்பெண்ணுக்குத் தெய்வத்தின் அருள் உள்ளது போல கனவு கண்ட அவளுடைய மாமனார் அவளைத் தெய்வமாக்கி, ஊரில் எல்லோரையும் அவளை வணங்க வைக்கிறார். வெளியூர் சென்ற கணவன் அறிந்து அவளை இந்தச்சிக்கலிலிருந்து மீட்க நினைக்கிறான். ஆனால், அதற்குள், தேவி தான் தெய்வமில்லை; சாதாரணபெண் தான் என்ற நம்பிக்கைக்கும், இல்லை இல்லை தான் தெய்வசக்தி படைத்தவள் என்ற நம்பிக்கைக்கும் இடையில் சிக்கி இரட்டை மனநிலைகளை அடைகிறாள். ஊரில் உள்ள நோயுற்ற குழந்தையை அவள் காப்பாற்றுவதாக ஊர்மக்கள் நம்பிக்கொண்டிருக்கையில், அவளுடைய உறவினர் குழந்தையையே காப்பாற்ற முடியாமல் போகிறது. இதனால், அவள் புத்தி பேதலிக்கிறது. இந்த இரட்டைத்தன்மை, அவள் சிந்தனையின் தெளிவைக் கிழிக்கிறது.

ஒரு சமூக அக்கறையுள்ள படம் தான். உயர்சாதி ஆண்கள் எந்த அளவிற்கு மூடநம்பிக்கையும், அதன் பெயரால், பெண்களைத் தெய்வநிலைக்கு உயர்த்துவதாக எண்ணி, தெய்வநிலையை உயர்ந்தநிலை என்றெண்ணி வாழ்ந்தார்கள் என்பதையும் வெளிப்படையாகச் சொல்கிறது. இதனால், உரிமையான வாழ்வும் இயல்பான ஆசைகளும் எண்ணங்களும் மறுக்கப்பட்ட பெண்கள் எத்தகைய மனச்சித்ரவதைக்கு ஆளானார்கள் என்பதையும் உணரமுடிகிறது.

தமிழின் அம்மன் படங்கள் இந்த நிலையைப்பேசுவதில்லை. கண்மூடித்தனமான தாலி நம்பிக்கைகள் அதிலும், கணவனின் உயிர்க்கயிறு தன் கழுத்தில் தொங்குவதான அபத்தங்கள் கற்பிக்கப்படும் கலைப்படைப்புகளாகத்தான் தமிழ் அம்மன் படங்கள் இருக்கின்றன. இதில் பெண்கள் கையாளும் கொடுமையான விரதமும், தன்னைத் தானே வருத்திக்கொள்ளுதலும் எந்த அளவுக்கு பெண்களுக்கு உடல் நல ஆரோக்கியத்தைக் கெடுத்துள்ளது, வாழ்க்கையைச் சீர்குலைத்துள்ளது என்பது நாம் விவாதிக்கவேண்டியது. ஆனால், இவ்விடத்தில் நாட்டுப்புறப்பெண் கதையாடல்கள் விடுபட்ட ஒன்றாகவும் மதிப்பிழந்த ஒன்றாகவும் இருக்கின்றன.

ஆனால், சத்யஜித் ரே போன்றோர் எடுத்துள்ள இப்படங்களுக்குப் பின்னாலும் ஒரு முக்கியமான கேள்வி உள்ளது. கைம்பெண் மறுமணம், பால்யத் திருமணம் போன்றவை சமூகச்சீர்த்திருத்தமாகக் கருதப்பட்ட இந்தியாவின் காலம் உண்டு. இத்தகைய சமூகச்சீர்திருத்தம் உண்மையில், உயர்சாதிக்குடும்பங்களைத்திருத்தவே அன்றி, சமூகத்தின் சாதிக்கொடுமையின் விளைவாகக் கருதப்பட்டு சீர்திருத்தம் செய்யப்படவில்லை என்கிறார், அம்பேத்கர். ஆகவே, தான் சமூகம் முழுமைக்கும் இது பயன்படாமல் உயர்சாதியினரின் வெளிப்பாடெல்லாம் கலைவெளிப்பாடு என்று கொண்டாடப்பட்டுள்ளது என்பதை உணரமுடிகிறது. 

"உயர்சாதி இந்துக்கள் சாதியை ஒழிக்கப்போராடுவதற்கான அவசியத்தை உணர்ந்திருக்கவில்லை; அல்லது அதற்காகப் போராடுவதற்கான துணிச்சல் பெற்றவர்களாகவும் இல்லை. ஒவ்வொரு மேல்சாதி இந்துக்குடும்பத்திலும் கட்டாய விதவைக்கோலமும், குழந்தையிலேயே திருமணம் செய்யும் கொடுமையும் இருந்தது. தனிப்பட்ட முறையில் அவர்கள் உணர்ந்த இந்தத்தீமைகளை ஒழிப்பது, அவர்களின் போராட்டம் என்பது குடும்பச்சீர்திருத்தத்தையே முன்மொழிந்தது" - அம்பேத்கர்

கலைத்தன்மை படங்களின் முன்னோடி என்று சொல்லப்பட்ட சத்யஜித் ரே, தன் கலைவெளிப்பாட்டுச் செயல்பாட்டில், ஒரு சமூக அக்கறை சார்ந்த கருப்பொருளை ஏன் எடுத்துக்கொள்ளவேண்டும்? 
சமூக அங்கீகாரத்திற்காகவா இல்லை, கலையின் மூலம் அது தான் என்று உணர்ந்தா?
அப்படியே என்றாலும், அவர் செய்தது அரும்பெரும் கலைப்பணியாகக் கொண்டாடப்படும் போது, ஏன் மற்ற சாதியினர் தம் கலைச்செயல்பாட்டின் வழியாக சமூக மாற்றத்தைச் சொல்லும்போது, அது கலைஅங்கீகாரம் தரப்படாமல், வெறுமனே சமூகச்சீர்திருத்தப்படம் என்றும் கலைப்படம் என்பதைக் கீழாகவும் ஏன் பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் கலைத்தளத்தில் இயங்கும் சூழ்ச்சிகளும் இந்திய சினிமாவரலாறும் உணர்ந்தோர் ஒரே சமயத்தில் சத்யஜித்ரேயை ரசிக்கவும் முடியும், இத்தளத்தில் இயங்கமுடியாமல் கலை ஊடகங்களுக்கு வெளியே நிறுத்தப்பட்ட கலைச்சிந்தனையாளர்களுக்காகத் துக்கிக்கவும் முடியும்!



குட்டி ரேவதி
("யரல வழள" திரைக்கட்டுரைத் தொகுப்பிற்காக...2)

'பொம்மக்கா திம்மக்கா கதையும் ஸ்னோ ஒயிட் கதையும்'







சமீபத்தில் The Snow white & the huntsman என்ற படம் பார்த்தேன். இது அடிப்படையில் ஒரு ஜெர்மானிய தேவதைக்கதையை அடிப்படையாக வைத்து எடுத்தது. இக்கதையை, பல இயக்குநர்கள், பல்வேறு வடிவில் வெவ்வேறு காலகட்டங்களில் படமாக்கியுள்ளனர்.
வீட்டில், பாட்டி பேரக்குழந்தைகளுக்குச் சொல்லும் ஒரு கதைச்சரடைத் தளமாக வைத்து அதன் அடுக்கடுக்கான கதைகளை வைத்து ஒரு பிரமாண்டமான படமாக ஆக்கியிருக்கிறார்கள்.



Frozen படமும் இந்த ஸ்னோ ஒயிட் கதையினை ஒட்டியே எடுக்கப்பட்ட படம் என்பதை இரண்டு படங்களையும் பார்த்தவர்கள் மிக எளிதாகப் புரிந்து கொள்ளமுடியும். 'உண்மையான அன்பு' எத்தகைய வலிமை வாய்ந்தது என்பதை நோக்கியே இரு கதைகளும் அலையும்.


The Snow white & the huntsman படத்தில் வியக்கத்தக்க அளவில் அனிமேஷன் மற்றும் கற்பனை விடயங்களை நுட்பமான அழகியல் வெளிப்பாட்டுடன் எடுத்திருப்பார்கள். Frozen படத்தில் அக்கா தங்கைக்கு இடையே இருக்கும் உண்மையான அன்பு, உயிர் காக்கும் வல்லமை உடையது என்பதைக் கூறியிருப்பார்கள். பொதுவாகவே, 'தேவதைக் கதைகள்' சொல்லும் நீதி, வாழ்வின் அளவை விடப் பெரியதாக இருக்கும். அப்படித்தான் இரண்டு படங்களிலுமே.

இந்த இரு படங்களைப் பார்க்கக் கிடைத்த வாய்ப்பிற்கிடையே, தமிழில் 'கொலைக்களங்களின் வாக்குமூலம்' என்ற நூலையும் வாசிக்கநேர்ந்தது. நந்தன், காத்தவராயன், மதுரைவீரன், முத்துப்பட்டன் ஆகிய பஞ்சம வரலாறுகள் குறித்து களஆய்வு செய்யப்பட்ட நூல். புனைவைப் போன்றே ருசிகரமாக இருக்கிறது. அருணன் எழுதியிருக்கிறார்.

ஒவ்வொரு வீரனின் கதைப்பின்னணியும், அதில் நிறைந்திருக்கும் சாதியத்திற்கு எதிரான, தீண்டாமைக்கு எதிரான உண்மையான போராட்டங்களும் கதைப்படங்களுக்கு சாத்தியம் அமைக்கக் கூடியன. குறிப்பாக, முத்துப்பட்டன் கதையில், 'பொம்மக்கா, திம்மக்கா' என்ற சக்கிலியச்சகோதரிகளைப் பார்ப்பனன் மணந்து கொள்ள மேற்கொள்ளும் போராட்டமும், காதலியரின் தந்தை அவனுக்கு விடுக்கும் சவால்களும் இன்றைய சாதியச்சிந்தனை வரை எல்லா படைப்பு சார்ந்த முன்முடிவுகளையும் கேள்விக்கு உள்ளாக்குவன. 

என் நோக்கம் இது தான். ஏன் இங்கு இருக்கும் இம்மாதிரியான துடிதெய்வங்கள் மற்றும் வீரர்களின் கதைகள் படமாக்கப்படாமல் இருக்கின்றன. காலந்தோறும் வடிவம் கொடுக்கப்படாமல் முடக்கப்படுகின்றன. கதையில் சுவாரசியத்திற்கும், வீரத்திற்கும், திருப்புமுனைகளுக்கும் பஞ்சமில்லை. அதேசமுயம், வணிக ரீதியான போக்கையும் கதைகள் கொண்டிருக்கின்றன. ஆனால், நம்மவர்கள் கதை தேடி அலைகளையில் வெளிப்படும் வறட்சி விந்தையாக இருக்கிறது.

உண்மையில், மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை புராணக்கதைகள் என்பதற்காக, அதேமாதிரி புராணத்தன்மையுடன் எடுக்கவேண்டியதில்லை. இராமாயணம், மகாபாரதம் போன்ற அடிமைமுறை, மனித சூழ்ச்சிகள் நிறைந்த கதைகளையே மீண்டும் மீண்டும் சொல்லி வளர்ப்பதற்குப் பதிலாக ஏன், இம்மாதிரியான நேர்மையான, பிரமாண்டம் உணர்த்தும் கதைகளை நம்மவர்கள் நம் குழந்தைகளுக்கு, நம் மக்களுக்குப் படமாக்குவதில்லை. The Snow white & the huntsman படத்தை அயல்நாட்டவர்கள் அத்தனை புதிய தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி நவீன வடிவம் கொடுத்து, இன்றைய கதையாக்கி விடுகிறார்கள்.

நம் படைப்பாளிகள் மனதில் மறைந்திருக்கும் அடிமை முறை, இதுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை. சுவாரசியம் தேடும் நோக்கில் செயற்கையாகக் கதைகளைத் தயாரிக்கிறோம். அவை மனதில் ஒட்டாமல், படைப்புகளையும் மக்களையும் பிரித்து வைத்திருக்கின்றன. 

நமக்கு யாரையேனும் அடிமைப்படுத்தி வாழவேண்டும். அல்லது, யாருக்கேனும் அடிமையாகி வாழவேண்டும். இந்தவெளிகளுக்குள்ளேயே நம் கற்பனைகளைக் குறுக்கிக் கொள்ள விரும்புகிறோம். நம்மிடம் மண்டிக்கிடக்கும் கலைச்செல்வங்களின், கதைக்களங்களின் மதிப்பு நமக்குத் தெரிவதில்லை. 

குட்டி ரேவதி
"யரலவழள"திரைக்கட்டுரை தொகுப்பிற்காக

கர்ணன்: பார்ப்பனீய சூழ்ச்சிகளின் அம்புகளைத் தன் மார்பில் தாங்கியவன்




ஒரு பேருந்துப்பயணம். பொழுதைக்கழிக்க பேருந்து வீடியோவில் எந்தப்படத்தைப் பார்க்கலாம் என்ற பலரின் பலவித ஆலோசனைகளுக்குப் பிறகு கர்ணனைப் பார்க்கலாம் என்ற ஒரு மனதான முடிவுக்கு வந்தோம். புதிய வண்ணங்கள் ஏறிய கர்ணன் திரைப்படம். 1964 - ல்  வெளிவந்த திரைப்படம். சிவாஜி கணேசன், சாவித்திரி, தேவிகா, என்.டி.ராமாராவ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். 


மிகவும் முக்கியமான விடயம், முழுப்படமும், கர்ணன் என்ற முழு குணச்சித்திரமும் பார்ப்பனர்களுக்கு எதிராக, எந்தவிதத் தயக்கமுமின்றி சொல்லப்பட்டிருப்பது தான்! பார்ப்பனீய மனம் எத்தகைய தந்திரமான சூழ்ச்சியான அமைப்புகளைக் கொண்டு இயங்கும் என்பதைத் தெளிவாகவும், நேர்த்தியான திரைக்கதை அமைப்பாலும் சித்திரித்திருக்கின்றார், படத்தின் இயக்குநர், பி. ஆர். பந்துலு. சமீபத்தில் அந்த படம் மீண்டும் திரைக்கு ஏறி, நில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது! இவ்வெற்றிக்கு நிறைய காரணங்களைப் படத்தில் காணமுடிகிறது.


கர்ணன் என்னும் கொடையாளன், என்பவன் இம்மண்ணின், மக்களின் குறியீடாக இருக்கிறான். செஞ்சோற்றுக்கடன் தீர்க்கும் நன்றியுணர்வு, இல்லையெனாது கொடுத்தல், மான உணர்வு, துன்பம் தாங்குதல், மதிநுட்பம், வெளிப்படையான குணங்கள் என கர்ணன் உயர்ந்து கொண்டே போகிறான். சிவாஜி கணேசன் தன் அசாதாரண நடிப்பால் கர்ணன் எனும் ஒற்றை மனிதனுக்கு சற்றும் சளைக்காமல்  பேருருவம் கொடுக்கிறார்.


ஒரு தேரோட்டியின் மகனாக வளரும் கர்ணன், இயல்பில் சூரியனின் மகன். அவனுக்கு இயல்பாக அமைந்த தீரங்கள் எப்படி அவனிடமிருந்து பொய்வேடங்களாலும், சுயநலத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கப்படுகின்றன என்பதும், தான் பிறந்த குலத்தைக் காரணம் காட்டித் தனக்கு மறுக்கப்பட்ட கலைகளையும் வீரங்களையும் அவன் வேட்கையுடன், சிரமங்களுடன் எப்படி அவன் கற்றுக் கொண்டான் என்பதும், அவையெல்லாம்  அவனுக்கு உபயோகப்படாமல் போகுமாறு பார்ப்பனீய உலகம் எப்படி அவனிடமிருந்து சூறையாடியதும் என்பதும் தான் கர்ணன் என்ற காவிய கதாபாத்திரம்.


சாதியின் துல்லியமான ஒடுக்குமுறை வெளிப்படையாகப் புலனாகிறது. கர்ணன் உயிருக்குப் போராடும் நிலையிலும் அவனுடய உயிரையும் தானதர்மங்களால் உண்டான களிப்பையும் கூட விட்டுவைக்காமல் அந்தணவேடம் ஒன்று வந்து வாங்கிச் செல்கிறது.


ஒவ்வொரு நிலையிலும் கர்ணனிடமிருந்து வஞ்சகத்தால் சத்தியத்தின் மேல் சத்தியங்கள் பெறப்பட்டு, அவன் உடைமைகள் எல்லாம் அபகரிக்கப்படுகின்றன. இந்த சூழ்ச்சிகளையும் வஞ்சகங்களையும் அறிந்திருந்தும் கர்ணன் தன் நல்ல குணங்களை இழக்காமல் இருப்பதும், தன் துணிவின் மீது நம்பிக்கை கொள்வதும் கர்ணனைத் தொடர்ந்து கொண்டிருக்கும்  நம்மை அவனுடன் இரண்டறப் பிணைக்கிறது.


பஞ்சபாண்டவர்களும் கெளரவர்களும் ஏன் கிருஷ்ணனும் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றபடி தம்மை மாற்றி மாற்றிப் பேசிச் சமாளிக்கும் போது, கர்ணன் தன் வெற்றுக் கைகளுடன் சந்தர்ப்பத்தின் கைதியாகி நிற்கிறான். போர்க்களத்தில் கையாளப்படும் வியூகங்கள் போல கர்ணன் என்னும் சூரியனின் மகன் மீது, தேரோட்டியின் வளர்ப்பு மகன் மீது, இயல்பிலேயே கொடையுள்ளம் கொண்டவன் மீது, சொன்ன சொல் தவறாதவன் மீது  எல்லா வியூகங்களும் கையாளப்படுவது எந்தச் சிரமமும் இல்லாமல் அற்புதமான வசனங்களால் சொல்லப்பட்டிருக்கிறது. படத்தின் திரைக்கதை அமைப்பு, பார்ப்பனீய அமைப்பைத் தெளிவுபடுத்துவதையே முழு நோக்கமாகக் கொண்டு அமைந்திருக்கிறது.


ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறையும் பாடலும் இசையும் எழும்பி, 'கர்ணன்' எனும் மனிதக் குறியீட்டைப் புரிய வைக்க உதவுகின்றன. பாடல்களில் வரும் ஒவ்வொரு சொல்லின் ஆழத்திலும் சாதியை மறுக்கும் நுட்பம் பொதிந்திருக்கிறது. இத்தனைக்கும் வணிகத் தளத்தில் இயங்கி வசூலை அள்ளிய படம்!  சமயம் வாய்த்தால் மீண்டும் ஒரு முறை பார்த்துவிடுங்கள்!


குட்டி ரேவதி




திரைக்கதையும் கதைசொல்லலும்




பூமியின் மீது பல்லாயிரம் வருடங்களாகக் கதை சொல்லுதல் என்பது ஒரு கலையாக இருந்தாலும் வாழ்க்கையின் நவீனத்துக்கு ஏற்றாற்போன்றும் அப்பொழுது பீடித்திருக்கும் அரசியலுக்கு ஏற்பவும் சொல்லப்படும் ஊடகத்திற்கு ஏற்பவும் கதை சொல்லப்படும் முறை மாறிக் கொண்டே இருக்கிறது. இலக்கியத்தின் உச்சபட்ச தகுதியான கதை சொல்லும் திறன் என்பது குகை ஓவியம் போன்ற கலை வடிவங்களை எப்பொழுதோ பற்றிக் கொண்டன என்றாலும், என்னை சுவாரசியப் படுத்துவதென்பது திரைப்படத்தில் ஒரு கதை, சொல்லப்படும் முறையாலும் நுட்பத்தாலும் பெரிய அளவில் வேறுபடுவதால் தான் இன்றைய உலகையே திரைப்படம் என்னும் காட்சி ஊடகம் வெகுஜனத்தை ஆட்டுவிக்கிறது. காலந்தோறும் வளர்ச்சியுறும் நவீன தொழில்நுட்பத்தின் சாத்தியங்களை தன்னுள் வாங்கிக் கொண்டு திரைப்படம் என்பது கதை சொல்லலை இன்னும் இன்னும் சுவாரசியப்படுத்துகிறது. அத்துடன் சொல்லப்படுவது ஒரே கதையென்றாலும் வேறு வேறு நுட்பமான அதன் வெளிகளையும் காட்சிப்படுத்துகிறது. அல்லது மிகுதியான கற்பனை வெளிகளுக்குப் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது.


மேற்சொன்ன அத்துணை விஷயங்களையும் கீஸ்லோவ்ஸ்கியின் மூன்று நிறங்கள் -சிவப்பு என்ற திரைப்படத்தைப் பார்க்கும் போது நுகரலாம். அதை எப்படியும் பத்து தடவைக்கு மேலாக ஒரு பாடத்தைப் படிப்பது போலவே நுணுக்கமாய் கவனித்திருக்கிறேன். கதையில் மூன்று வித்தியாசமான கதைப்பின்னல்கள் ஒன்றின் மீது ஒன்றாய் படரும்படி, ஒன்றோடொன்று பொருந்தும் படி, ஒன்றுக்குள் மற்றொன்று அடங்கி விடும்படியான திரைக்கதை. படத்தின் முழுக்கதையையும் இந்தப் பத்திக்குள் சொல்வது மிகக் கடினம். ஒரு முறை பார்த்துவிட்டால் பார்த்தவர்கள் அனைவரும் ஒரு தளத்திலிருந்து கதைப் பின்னல்களை விவரித்துப் பேசுவது என்பது எளிதாக இருக்கும். அதனினும், மனித சிந்தனைக்கு கதைசொல்லல் முறையை தெளிவாக்கும் பயிற்சியாகவும் இருக்கும். படத்தில் இடம்பெறும் மூன்று முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்று நேரடியாகப் படத்தில் இடம்பெறுவதில்லை. தொலைபேசி வழியாகக் கேட்கப்படும் குரலாகவே பதிவாகிறது. என்றாலும் மூன்று கதாபாத்திரங்களும் ஒன்றின் சாயலை மற்றொன்று ஏற்கும் படியாக சொல்லப்பட்டிருப்பது திரைக்கதை வடிவத்திற்கேயான சிறப்பியல்பு எனலாம். எந்தக் காட்சியில் அந்தக் கதாபாத்திரங்கள் மற்ற கதாபாத்திரத்தின் சாயலை ஏற்கின்றது, அல்லது இழக்கின்றது என்பதை படத்தைத் துல்லியமாகப் பார்ப்பவர் கண்டுபிடித்துவிட முடியும்.


அதே மாதிரி ஒரே சமயத்தில் படத்தின் முதிய கதாபாத்திரமும், இடம் பெறும் இளம் கதாபாத்திரமும் ஒரே கதாபாத்திரத்தின் முதிய, இளம் கதாபாத்திரங்களாக எண்ணத் தோன்றும் படியான திரைக்கதையாகவும் இருக்கிறது. ஒரு நேர்க்கோட்டுக் கதை மரபிலிருந்து திடச் சிக்கலான கதை சொல்லலையும் அதன் வழி அரசியலையும் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் கீஸ்லோவ்ஸ்கி. அத்திரைப் படத்தில் கதை மேற்கொள்ளும் மனித உளவியல், உறவுகள், அன்பு பற்றிய அணுகுமுறைகளைப் பற்றி திரைக்கதைக்கு நிகரான அளவுக்கு செறிவாக விவாதிப்பதற்கும் விஷயங்கள் இருப்பினும் என்னை மிகக் கவர்ந்தது அத்திரைப்படத்தில் ஆளப்பட்டுள்ள கதை சொல்லல் உத்தி தான். இம்மாதிரியான கதை சொல்லல் முறையால் மனவெளி விரிவடைவதோடு மனிதனின் ஆழ்மனச்சிக்கலை ஒத்த பின்னலான அமைப்பையே கொண்ட இக்கதை, அம்மனச்சிக்கலை அவிழ்க்கவும் செய்கின்றது.


நேர்க்கோட்டுக் கதையிலிருந்து கதையின் கட்டமைப்பை மாற்றியமைக்க உள்ளார்ந்த பயிற்சியும் வாழ்வியலை அயராது விசாரிக்கும் பார்வையும் அவசியப்படுகிறது. தமிழ்த் திரைப்படங்களின் குறைபாடுகள் என்பது எனக்கு இவையாகவே தோன்றுகின்றன. கதையை அணுகும் முறைகளால் பல சமயங்களில் வெற்றி கொள்ளும் திரைப்படங்களே கூட சமூக்கத்தை அரைகுறையாக உள்வாங்கிக் கொண்ட பார்வையால் பார்வையாளர்களின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. தமிழ் மொழியில் கதை சொல்லும் மரபு, இத்தகைய தட்டையானதாய் இருந்ததில்லை. சிலப்பதிகாரம் தனது காவியத் தன்மையில் இன்றும் வெற்றி கொள்வதற்கு காரணம் அதன் சித்திரக் கட்டமைப்பே. மேலும் பூடகமாகச் சொல்லல், ஒன்றைச் சொல்லி தொடர்புடையதைச் சொல்லாதிருத்தல், பார்வையாளரின் அனுமானங்களுக்கும் கற்பனைகளுக்கும் பெரும்பாலான உரையாடல்களை விட்டு விடுதல், அவர்களின் கற்பனை வெளியை கதை நகருந்தோறும் வளமாக்கிக் கொண்டே கதையை நகர்த்தல், வார்த்தைகளைக் குறைத்த பாணிகளையும் சைகைகளையும் குறிப்புகளையும் கொண்டிருத்தல் போன்ற நுட்பங்களைக் கொண்டு இயங்கும் கதை மரபு நமது.


இன்றும் நாட்டுப்புறக் கதை சொல்லிகள் இந்த நுட்பங்களை இழக்காமல் இருக்கிறார்கள். குறிப்பாக அவர்கள் கதையின் மையக் கதாபாத்திரங்கள் ஒரே சமயத்தில் பல கதாபாத்திரங்களாக மாறுவது என்பது கதை கேட்பவனை நுட்பமான உளவியல் வெளிக்குள் அழைத்துச் செல்வதற்கான உத்தியே. மனித உடலின் இயற்பியல் எல்லையை இயன்ற வரை விரிப்பதும் மானுடத்தின் அசாத்திய சாத்தியங்களைப் பற்றிய அக்கறையோடு இயங்குவதும் நாட்டுப்புறக் கதைகளின் சிறப்பியல்புகள். இக்கதைகள் உருவாக்கித் தரும் வெளியிலேயே அம்மனிதர்கள் தொடர்ந்து அன்றாடம் இயங்குவதும், வாழ்வதும்கூட உண்டு, கதையிலிருந்து வெளியே வர விருப்பமின்றி!



குட்டி ரேவதி