நம் குரல்

கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

என் நூல்கள்!




1. "நிறைய அறைகள் உள்ள வீடு", சிறுகதைத் தொகுப்பு, முதல் பதிப்பு, 2013, பாதரசம் பதிப்பகம்

2. "அகவன் மகள்", கவிதைகள், முதல் பதிப்பு, 2013, புது எழுத்து பதிப்பகம்

3. "இடிந்த கரை", கவிதைகள், முதல் பதிப்பு, 2012; ஆதி பதிப்பகம்.

4. "ஆண் குறி மையப் புனைவைச் சிதைத்த பிரதிகள்", தமிழ் நவீனப்பெண் கவிஞர்களின் கவிதைகள் குறித்த மீளாய்வுக் கட்டுரைகள், முதல் பதிப்பு, 2011, நாதன் பதிப்பகம்.

5. "முத்தத்தின் அலகு", ஆசிரியர் எழுதிய காதல் கவிதைகள், முதல் பதிப்பு 2011, ஆழி பப்ளிஷர்ஸ்.

6. "நிழல் வலைக்கண்ணிகள்", சாதியையும் பாலியலையும் ஆராயும் பெண்ணியக் கட்டுரைகள், முதல் பதிப்பு, 2011, வம்சி புக்ஸ்.

7. "மாமத யானை", கவிதைகள், முதல் பதிப்பு, 2011, வம்சி புக்ஸ்.

8. "முள்ளிவாய்க்காலுக்குப் பின்", ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த கவிஞர்களின் ஈழ இனப்படுகொலை பற்றிய நினைவுக்கவிதைகள், முதல் பதிப்பு, 2011, ஆழி பப்ளிஷர்ஸ்.

9. "காலத்தைச் செரிக்கும் வித்தை", தமிழ்ப் பெண்ணிய விவாதங்களை முன்வைக்கும் கட்டுரைகள், முதல் பதிப்பு, 2010, ஆழி பப்ளிஷர்ஸ்.

10. "யானுமிட்ட தீ", கவிதைகள், முதல் பதிப்பு, 2011, அடையாளம் பதிப்பகம்.

11. "உடலின் கதவு", கவிதைகள், முதல் பதிப்பு, 2006, பனிக்குடம் பதிப்பகம், இரண்டாம் பதிப்பு, 2011, அடையாளம் பதிப்பகம்

12. "தனிமையின் ஆயிரம் இறக்கைகள்", கவிதைகள், முதல் பதிப்பு, 2003, பனிக்குடம் பதிப்பகம்; இரண்டாம் பதிப்பு, 2011, அடையாளம் பதிப்பகம்.

13. " முலைகள்". கவிதைகள், முதல் பதிப்பு, 2002, தமிழினி வெளியீடு, இரண்டாம் பதிப்பு, 2003, பனிக்குடம் பதிப்பகம்; மூன்றாம் பதிப்பு, 2011, அடையாளம் பதிப்பகம்.

14. "பூனையைப் போல அலையும் வெளிச்சம்", கவிதைகள், முதல் பதிப்பு, 2000, தமிழினி வெளியீடு; இரண்டாம் பதிப்பு, 2003, பனிக்குடம் பதிப்பகம்; மூன்றாம் பதிப்பு, 2011, அடையாளம் பதிப்பகம்.




குட்டி ரேவதி

புத்தகங்கள் இன்னும் என்னை எங்கே அழைத்துச் செல்லப் போகின்றன?










புத்தகங்கள் நம்முடன் வாழ்வது என்று முடிவெடுத்துவிட்டால், அவை நம் இளம்பருவத்திலேயே நம்மைத் தொற்றிக் கொள்கின்றன என்று தான் நினைக்கிறேன். சாருண்ணிகளைப் போல நம்முடனேயே வாழ்வதில் அவை கொள்ளும் அதே களிப்பைத் தான் நானும் அடைந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். புத்தகங்கள், அறிவுஜீவித்தனம் மிக்க உயிரிகள். இன்னும் சொல்லப்போனால், மனித அறிவுஜீவிகளைப்போல் அல்லாமல் தான் எத்தகையதொரு வாக்குமூலங்களை சொல்கின்றனவோ அதிலிருந்து நழுவாமல், சமரசம் கொள்ளாமல் எப்பொழுதும் தம் நிலைப்பாட்டில் ஒற்றைக் காலில் நிற்கக்கூடியன.





என்னுடைய வாழ்க்கையிலும், எல்லோருக்கும் போலவே, அழுக்கடைந்த தெருநாய்க் குட்டிகளைப் போலவோ, அல்லது எவரோ நழுவ விட்ட காதல் கடிதத்தைப் போலவோ என்னை வந்து சேர்ந்திருக்கின்றன சில புத்தகங்கள். ஆனால், அவை வந்து சேரும் போதே ஓர் உறவின் அடித்தளத்தை என்னுள் அமைக்கும் அத்தனை ஏற்பாடுகளுடனும் தான் வந்து சேர்ந்திருக்கின்றன என்று நினைக்கிறேன். யாரோ ஒருவர் உங்களிடம் ஒரு புத்தகத்தைப் பற்றி விசாரிக்கலாம்! நீங்கள் சற்றும் எதிர்பாராத ஒரு கணத்தில் உங்களுக்கு ஒரு நூலைப் பரிசளிக்கலாம்! அல்லது, நீங்கள் நீண்ட நாளாக படிக்க விரும்பி, வாங்கும் வழியின்றி தவித்த நூல் உங்கள் கைக்கெட்டும் தூரத்தில் இருக்க நீங்கள் திருடியெடுத்து, உங்கள் பைக்குள் திணிக்க, அந்தக் குட்டிநாய்க் கத்தி குரல் காட்டிவிடக்கூடாதே என்ற பதைபதைப்புடன் நீங்கள் அள்ளிவரலாம்! முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை படித்தப் பின்னும், அதை உங்கள் கைப்பையிலிருந்து இறக்கமுடியாமல், பிரிய முடியாமல் ஒரு காமத்தை உங்கள் சுவாசத்திற்கு தொடர்ந்து அளித்துக் கொண்டே இருக்கலாம்! எந்த ஒரு நூலுமே வாழ்க்கைக்குள் நுழையும் போது, ஓர் உறவின் சீரிய தொடக்கத்தை நிகழ்த்தவே வருகின்றன என்பதை உணர, இன்றைய என் வயதொத்த ஆயுள் பிடித்திருக்கிறது!





நட்பில் பெருத்த நம்பிக்கை இன்று வரை ஏற்படவில்லை. காரணம், எதனுடனான தன் ஒப்பந்தத்தையும் எளிய சமரசங்களால் நண்பர்கள் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றபடிக் கலைத்துவிடுவது தான்! தன் சமரசமின்மையால், நம் நெஞ்சுக்குள், தம் உறவின் வழியாக நெருப்பில் தகிக்கும் ஓர் இரும்புக்கம்பியை, ஆழமாகப் பாய்ச்சும் தகுதி உள்ளவர்கள் தாம் நண்பர்கள் என்பது என் இலக்கணம்! ஆனால், புத்தகங்கள் கூட்டி வரும் மனிதர்கள், நம் மன இடுக்குகளில் ஓர் ஆலமரத்தின் விதையை எச்சமாய் இட்டுச்செல்கிறார்கள். பின் நீங்கள், அவர்கள் கொண்டு வந்த சாபமூறிய அந்தப் புத்தகங்கள் விரும்பிய ஆலமரத்தை உங்களுக்குள் சுமந்தபடி வளர்ப்பதற்குத் தயாராகிவிடுகிறீர்கள்!





நானும் என் நண்பரும், சென்னை வந்து இது வரை பத்து வீடுகளுக்கு மேல் எங்கள் புத்தகங்களைச் சுமந்து இடம்மாறியிருக்கிறோம்! ஒவ்வொரு முறை, வீடு மாறும்போது, அந்தப் புத்தகங்கள் மலைப்பையும் திகைப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன! எங்களின் ’எட்டுத் திக்கிலும் மதர்த்து எழுந்து நின்று’ (தேவதேவனின் வரி), அவை அமானுஷ்யமாய் எழுந்து நிற்கும் அந்தத் தருணங்களில், வீடுமுழுக்க அவை இறைந்து கிடக்கையில் மனம் கொள்ளும் பேதலிப்பு எந்த இலக்கியத்திலும் இடம் பெற்றிருக்கிறதா என்று தெரியவில்லை!





என் நண்பருக்கு, ஓர் அசாதாராண திறன் இருக்கிறது. எல்லா நூல்களையும் வகைப்படுத்தி அடுக்கி வைப்பதுடன், அவர் வெளியூர் சென்றிருக்கும் நாட்களிலோ அல்லது, வீட்டிற்கு வெளியே இருக்கும்போதோ ஒரு நூல் அவசரமாகத் தேவைப்பட்டால், எந்த அடுக்கில், எந்த வரிசையில் எந்த நிற அட்டையுடன், என்ன தன்மையான அட்டையுடன் அது இருக்கிறது என்பது வரை அவரால் சொல்லிவிடமுடியும்! நாங்கள் விரும்பிப் படித்த நூல்கள் மட்டுமே எங்கள் அறைகளில் நிறைந்திருக்கும்! அல்லாத நூல்களை, உடனே குப்பைத் தொட்டிகளில் போட அவரோ நானோ தயங்கியதே இல்லை! இது கூட, அவரின் நினைவுத்திறனுக்கு ஒரு காரணம்! அம்மாதிரியாக அடுக்கப்பட்ட நூல்களில், நீங்கள் தேடும் நூலை விரும்பும் போது உருவி எடுத்துப் படித்து, மகிழும் சுகம் போல் வேறேதும் இல்லை! இல்லையென்றால், இந்த சென்னை வாழ்க்கையில் என்னால் நிச்சயமாக இவ்வளவு கூட எழுதியிருக்க முடியாது என்பதே என் அபிப்ராயம்.





நல்ல புத்தகங்கள் என் வாழ்க்கையில் காதலைக் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன. புதிய உறவுக் கண்ணிகளை ஏற்படுத்துவதில் மூர்க்கமாய் பிடிவாதமாய் இருந்திருக்கின்றன. நூல்கள் பற்றிய கவிதைகள் என் தொகுப்புகளில் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டேயும் இருக்கின்றன! அவை, மழை நாள்களில் என் நூல்கள் கொள்ளும் குளிரையும் விறைப்பையும் குறித்த கவலையாகவே பெரும்பாலும் இருக்கும்! சென்னை போன்றதொரு நகரத்தில், நூலைப் பாதுகாக்கும் கவலை நம் எல்லாவிதமான இயல்புகளையும் புரட்டிப்போட்டுவிடுகிறது. புத்தகங்களின் மீதான கையாட்சியை, உடைமை அதிகாரத்தைப் பேணுவதே ஒரு மனநோய் தான் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை!




ஒவ்வொரு நூலும் அடர்த்தியான சிந்தனையின் எழுச்சியை மூச்சாய்க் கொண்டு அவ்விடம் உறைந்திருக்கின்றன. ஒவ்வொரு நூலும், அல்லது ஒரு குறிப்பிட்ட சிந்தனை அல்லது இயக்கம் சார்ந்த  சிந்தனைகளில் தீவிரமாய் உழலும்போது, அந்தக் குறிப்பிட்ட சிந்தனையை வலுவூட்டி மேற்கொண்டு நான் கயிறு பிடித்து ஏறும்படியான துணிவைத் தந்த நூல்கள் ஏராளம். இன்றும் அவற்றை, என் காதலனை நேசிப்பது போலவே நேசிக்கிறேன். இன்று தனிமனிதராய்க் கடந்து வந்த தூரத்தையும், ஏறிவந்த துயரமான மலைகளையும் திரும்பிப் பார்க்கையில் புத்தகங்கள் தாம் அவற்றைக் கடக்கக் கைப்பிடித்துக் கூட்டி வந்திருக்கின்றன என்பதை இப்போது உணரமுடிகிறது.



இந்தப் புத்தகங்கள் இன்னும் என்னை எங்கே அழைத்துச் செல்லப்போகின்றன என்ற ஆவலுடனும் புதிர்த்தன்மை நிறைந்த எதிர்பார்ப்புடனும் காத்திருக்கிறேன். வேறு எந்தத் திசையில் சென்றிருந்தாலும், நான் விரும்பாத என்னை அது உருவாக்கியிருக்கலாம்! அப்படி நூல்களிலிருந்து விலகிச் சென்றோர் அடைந்த திசைகள் அவர்களைக் கொடுமையான தனிமைக்கும், வாழ்க்கையின் சிறைக்கும் பழிவாங்கலின் வன்மத்திற்கும் கொண்டு சேர்த்திருக்கும் பட்சத்தில், அவர்களுக்குத் தேவையானதொரு நூல் கிடைத்திருப்பின் அவர்கள் இந்தக் கொடுஞ்சிறைகளிலிருந்தெல்லாம் வெளியே வந்திருக்கமுடியும் இல்லையா? ஒரு நண்பனை விட, உற்ற உறவாய் நூல்கள் ஆற்றுகின்ற பணியை வேறெவரும் செய்வதில்லை.






குட்டி ரேவதி


நன்றி: ’புத்தகம் பேசுது’

கருணையும் கொலையும் (அருணாவின் வாழ்வை முன்வைத்து)






கருணைக் கொலை என்பது ஒரு விவாதமாகக் கிளம்பியிருக்கும் நிலையில் அதைப் பற்றிய சில கேள்விகளை அருணா சான்பாக் வாழ்வில் நடந்த சம்பவங்களுடன் இணைத்துப் பதில் தேடுவது விவாதத்தை இன்னும் தெளிவாக்கும். முப்பத்தியாறு வருடங்களுக்கு முன் அருணா, மும்பையின் கே.இ.எம் மருத்துவமனையின் ஆய்வுக்கூடத்தில் பணி புரிந்து வந்தார். ஆய்வுக்கூடத்தில் மருந்துப் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தும் நாய்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் அருணாவினுடையது. நாய்களுக்குக் கொடுக்கப்படும் உணவைக் களவாடியதற்காக அங்கு பணிபுரிந்த சோகன்லால் பார்த வால்மீகி என்ற வார்ட்பாயை அருணா தொடர்ந்து கண்டித்து வந்திருக்கிறார். இதனால், எரிச்சலடைந்த வால்மீகி, அருணாவை வல்லாங்கு செய்ததுடன், அவளை நாய்களைப் பிணைக்கும் இரும்புச் சங்கிலியால் கழுத்தை இறுக்கி, கடுமையாகத் தாக்கி இரத்தவெள்ளத்தில் விட்டுச் சென்றிருக்கிறான். நரம்பு மண்டலம் பலமாகத் தாக்கப்பட்டு பார்வையை இழந்ததுடன் பேசும் ஆற்றலையும் இழந்துவிட்டாள். அன்று மயக்க நிலையை அடைந்த அருணா இன்று வரை முப்பத்தாறு வருடங்களாகக் கோமா நிலையில் இருக்கிறார். ஆறுதலளிக்கும் விஷயம், அன்றிலிருந்து இன்று வரை அந்த மருத்துவமனை செவிலியரே அருணாவின் உடல்நலத்தைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துவருகின்றனர். வேதனையளிக்கும் விஷயம், அருணாவின் மீது பாலியல் வன்முறையைச் செயல்படுத்திய  சோகன்லால் பார்த வால்மீகி, வெறுமனே திருட்டுக்குற்றத்திற்கான தண்டனையை மட்டுமே அனுபவித்து மீண்டது.




இந்நிகழ்வைப் பின்புலமாக வைத்து சில சமூக அவலங்களைப் புரிந்து கொள்ளலாம். ஆண்கள் தங்கள் வன்மங்களையும் பழிவாங்கல்களையும் பெண்கள் மீது செலுத்தும் ஒரே வடிவம், வல்லாங்காவே இருக்கிறது. சென்ற வாரம் கூட, எழுபது வயது மூதாட்டி ஒருவர் சில இளைஞர்களால் வல்லாங்கு செய்யப்பட்டிருக்கிறார். ஆக, இளமையோ, வயதோ கூட ஒரு பொருட்டு இல்லை. ஆனால், பழிவாங்குவதற்கு ஆண்கள் தேர்ந்தெடுக்கும் வழி, வல்லாங்கு ஒன்றே. இது, கடந்த காலங்களில் தீவிரப்பட்டிருக்கிறது. சிறு குழந்தை முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை எல்லோரும் இந்நிலைக்கு தொடர்ந்து ஆளாகின்றனர். சமூகம்  ‘இழிவு’ என்று வரையறுக்கப்பட்டிருக்கும், தன்னுடன் இணக்கமான உறவில்லாத பிற ஆணுடனான பாலியல் உறவு என்பதே பெண்கள் மீது வலுக்கட்டாயமாகவும் முறையற்ற வடிவிலும் திணிக்கப்படுகின்றது. இச்செயல் தொடர்ந்து கொண்டிருப்பதும், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதும் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகள் நம்மிடையே எந்நிலையில் இருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.




முப்பத்தாறு வருடங்களாக, அம்மருத்துவமனையின் அக்கறையின் பராமரிப்பில் இருக்கும் அருணாவின் நிலை பொதுமக்கள் கவனத்திற்கு மீண்டும் வந்திருப்பது பிங்கி விரானி, அருணாவைப் பற்றிய ஒரு நூலை எழுதிய பின்பு தான்.  இவர், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்து, ‘பிட்டர் சாக்லேட்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். இந்த நூலை ஏற்கெனவே நான் வாசித்திருக்கிறேன். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த பல்வேறு முக்கியமான நிகழ்வுகளையும் விளக்கி, அதன் பின்னால் இயங்கும் மனித உளவியலையும் ஆராயும் நூல். இவற்றை வெறுமனே ஓர் அவலமாக எண்ணி, மறுத்து ஒதுக்கிவிட்டு, ஆனால் அதை ஒரு  குற்றமாகப் பார்க்காத உளவியலையும் விரிவாக அலசும் அருமையான, அவ்வகையான முதன்மையான நூல். இவரே  அருணாவின் வாழ்வைப் பற்றிய நூலையும் எழுதியிருக்கிறார். இவர், அருணாவைக் கருணைக்கொலை செய்ய அனுமதி கோரி வழக்கும் தொடுத்திருக்கிறார். ஆனால், கே.இ. எம். மருத்துவமனை நிர்வாகத்தினர் இதை மறுக்கிறார்கள். அருணா, கோமா நிலையில் இல்லை என்றும், சங்கீதத்தைக்கேட்கவும், மீனை உண்ணவும் விருப்பப்படுவதாகவும் கூறுகிறார்கள். என்றாலும் அவரது மூளை சுருங்கிப் போயிருப்பதாக, நீதிமன்ற உத்தரவுக்குப் பின்பான ஸ்கேனிங்கில் தெரிகிறது.




பிங்கி விரானி இந்நூலை எழுதுவதற்கான முயற்சியில் தொடர்ந்து சென்று அருணாவைச் சந்தித்திருக்கிறார். அருணாவிற்காக உணவுகள் எடுத்துச்சென்றும், அவளுடன் பாடியும் பேசியும் நேரங்கழித்தும் அவளைப் புரிந்து கொள்ள முயன்றிருக்கிறார். தொடர்ந்து படுக்கையிலும் தனது அசைவுகள் எதையும் தானே நிர்வகிக்கும் நிலையையும் இழந்து விட்ட இவருக்கு கருணைக்கொலையை அனுமதிக்கவேண்டும் என்று இவர் உச்சநீதி மன்றத்தை அணுகியிருக்கிறார். இந்தியச்சட்டம் 21, கண்ணியத்துடன் ஒருவர் சாவதை அனுமதிக்கவில்லை, கண்ணியத்துடன் வாழ்வதற்கான சட்ட உரிமையை மட்டுமே அளிக்கிறது. இந்நிலையில், அவ்வாறாக, அருணா கருணைக் கொலை செய்யப்படுவதை சட்டம் அனுமதிக்கவில்லை என்கிறது, நீதிமன்றம். இதுகாறும், அம்மாதிரியான மதிப்புடைய பெருமையுடைய வாழ்வையா அருணா வாழ்ந்திருக்கிறார் என்ற தர்க்கப்பூர்வமான கேள்விகளுக்குச் சட்டத்தில் இடமில்லை போலும். ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் ஆய்வுக்கூடப் பெண்மணியாக இருந்த ஒருவர், திருட்டுக் குற்றத்தை எதிர்த்ததற்காக, வல்லாங்கு செய்யப்பட்டிருக்கிறார். அதற்கான நீதி வழங்கப்படாததும், அது ஒருவருக்கான சட்டப்பூர்வமான உரிமையாகப் பார்க்கப்படாததும் வாழ்வுரிமையாகப் பார்க்கப்படாத சமூகத்தில் சாவதற்கான உரிமையைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது.




மருத்துவ முடிவுகள் அருணாவின் இந்நிலையை, நிரந்தரத் தாவர நிலை என்று கூறுகிறது. காய்காய்கறியைப் போன்றதொரு தாவர உடலாய் அருணாவின் உடலை வைத்துக் கொண்டிருக்கும் நிலையை, பிங்கி விரானி கடுமையாக ஆட்சேபிக்கிறார். இந்நிலையை அருணா சுய உணர்வுடன் இருந்திருந்தால் அனுமதித்திருக்கவே மாட்டார். சுயமரியாதையுடன் வாழ விரும்பும் ஒருவர் இப்படி இலை தழையைப் போன்று வாழ்வதை, வாழ்க்கைக்கான கண்ணியமென்று கொள்ளக்கூடாது என்பது பிங்கி விரானியின் வாதம். இன்னொரு வாதம், மருத்துவமனையில் உள்ளவர்கள் அருணாவின் மீது காட்டும் அன்பை பிங்கிவிரானியின் கோரிக்கை, புறக்கணிப்பதாகும் என்று கூறுகிறது. மருத்துவமனையில் இருப்பவர்களே, பிங்கி விரானிக்கு எதிரானதொரு போராட்டத்தையும் நிகழ்த்தினர். பிறிதொரு வாதம், மதப்பூர்வமானதாயும், சம்பிரதாயமானதாயும் இருக்கிறது. அதாவது, கடவுள் அளித்த இந்த உடலுக்கு, மரணத்தை வழங்கும் உரிமை மனிதனுக்கு இல்லை என்கிறது, கத்தோலிக்க மதச் சிந்தனையோர் சபை. இந்துமதச் சிந்தனையாளரோ, இந்தியச்சமூகம் அடிப்படையில் உணர்ச்சிப் பூர்வமானதொரு சமூகம் என்றும் ஒவ்வொருவருடைய வாழ்வும் முற்பிறப்பின் வினையால் தோன்றுகிறது. ஆகவே, இந்த வாழ்க்கையை இவ்வண்ணமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்றனர். இவ்வாறு பலவாறான விவாதங்களை முன்வைத்து அருணாவின் சுமை வளர்ந்துகொண்டே இருக்கிறது.  கடவுள் கொடுத்த மனித உடலை வல்லாங்கு செய்வதற்கு மட்டும் மனிதனுக்கு உரிமை இருக்கிறதா? அல்லது, அருணாவை வல்லாங்கு செய்யும் உரிமத்தை முன்பிறப்பிலேயே அந்த வார்ட்பாய் பெற்றுவந்தாரா? இந்தக்கேள்விகள் நம் நெஞ்சில் எழாமல் இல்லை.



ஆனால், அருணா விஷயத்தில் முன்மொழியப்படும் கருணைக்கொலை வேறு. முதியவர்களை அன்புடன் பராமரித்துக்கொள்ள முடியாமல் அவர்கள் மீது செயல்படுத்தும் கருணைக் கொலை என்பது வேறு. இக்கருணைக்கொலை என்பதே பொருத்தமற்ற இரண்டு வேறுபட்ட நோக்கங்களால் உருவானதாக இருக்கிறது. கருணை என்றாலே அது கிழங்கு வகைகளில் ஒன்று என்றாகி விட்டது என்ற அர்த்தத்தில் கிண்டலடிப்பார் புதுமைப் பித்தன். கொலைகளில் இரண்டு வகை உண்டு என்கிறது பெளத்தம். அதாவது, கொலை செய்யவேண்டும் என்ற இச்சையில் கொல்கிறோமா, அல்லது தேவை கருதி கொலை செய்கிறோமா என்று புலால் உண்ணுதலையும் மனிதனின் அவசியங்களின் பொருட்டு உயிர்களைக் கொல்லுதலையும் தெளிவாக்குகிறார் புத்தர். கருணைக் கொலை என்பதை பொது நிலையில் வைத்து விவாதிப்பது மனித நாகரிகத்தின் கொச்சையான தன்மைகளைத் தான் வெளிப்படுத்தும் என்பதால், சம்பந்தப்பட்டவரின் வாழ்நிலை, வேதனை போன்றவற்றைக் கொண்டு தான் இதைத் தீர்மானிக்கவேண்டும். கருணையும் கொலையும் பொருத்தமற்ற தருணங்களில் வெளிப்படுத்தப்படுவதை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். 



தொடர்ந்து பெண்கள் மீது செயல்படுத்தப்பட்டு வரும் வல்லாங்கை நிறுத்துவதற்கான சமூக உபகரணங்களை நாம் கண்டறிந்தே ஆகவேண்டும். திரைப்படங்களில், தொடர்ந்து கதைகளாக்கப்படும் ஓர் ஆணின் பழிவாங்கும் உணர்வும், அது எப்படி வெற்றிகரமாக நிறைவேற்றப்படுகிறது என்பதும், அதை வெற்றிகரமாக நிறைவேற்றுபவரே கதாநாயகன் என்றும் வழங்கப்படுவதே சமூகத்தின் நலனுக்கு முற்றிலும் எதிரானதாகும். ஆக, இது ஒரு சாதாரண வாழ்வில் இயங்கும் ஆணின் மனநிலையையும் பீடித்து இருக்கிறது. தனக்கு எதிராகக் குரலோ மறுப்போ காட்டும் ஒரு பெண்ணை, முடக்குவதற்கு பாலியல் வன்முறை தான் உற்ற ஆயுதம் என்பது தொடர்ந்து ஆண்களுக்கு சமூகம் போதித்து வரும்பொழுது அருணாவின் கோமா நிலையும் அவளுக்கு நிகழ்ந்ததும் பெண்களுக்கு எல்லாம் எச்சரிக்கையைத்தரும் ஒரு தொடர் உருவகமாக ஆகி நிற்கிறது.





குட்டி ரேவதி

நன்றி: அரும்பு

ஆண்குறி மையப் புனைவைச் சிதைத்தப் பிரதிகள் - 1

இரா. மீனாட்சி: ஒவ்வோர் இறகும் ஒவ்வோர் பறவை


சுவரையே முட்டிக்கொண்டிராமல் சுவர்களுக்கு வெளியேயான இயல்பான சூழலுடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருக்கும் குரலாகக் கவிதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்பவர்கள் சிலரே. இயற்கையின் கருப்பொருள் எதுவும் இவர்கள் கவிதையில் கவித்துவம் பெற்று, வரிகளுக்கு இடையே அர்த்தம் பெறும். அம்மாதிரியான மொழியுறவை இவர்கள் தக்கவைத்துக் கொள்வதுடன், ஏனைய உறவு போன்றே இவ்வுறவையும் பேணி சிறப்பு அம்சங்களுடையதாக வளர்க்கின்றனர். அவ்வகையில், கவிதையைத் தன் அகக்குரலாக மாற்றிக்கொண்ட பெண்ணின் மொழி இரா.மீனாட்சியினுடையது.



ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதில் தன் முதல் தொகுப்பைப் பதிவு செய்திருக்கும் இரா.மீனாட்சியின் எழுத்தைப் பற்றி விவாதிப்பதில் இரு முக்கியமான விடயங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவரது சமகாலத்தில் உத்வேகமெடுத்திருந்த, ‘எழுத்து’ இயக்கத்தில் பங்கெடுத்துக்கொண்ட முதல் பெண் கவிஞர், முதலாவது! எழுபதில் எழுதத்தொடங்கி தனியாக இயங்கி, இன்று நூற்றுக்கணக்கான பெண் கவிஞர்கள் இயங்கும் காலத்தும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பது என்பது, இரண்டாமவது! அவர் எழுத்தில் இன்றைய பேசுபொருளாக்கியிருக்கும் உடல், பாலியல், பாலிமை போன்றவற்றை ஆய்ந்தறிவதற்கான வாய்ப்பை நான் இங்கு எடுத்துக் கொள்கிறேன். எம்மாதிரியான பெண்ணுடலை அவர் வரித்திருந்தார் என்பதைக் கண்டறியும் போது அக்காலமொட்டிய சில தெறிப்புகளும் நமக்கு வாய்க்கக்கூடும்.



முதலில் பெண்ணெழுத்து இப்படித்தான் உருவாகிறது. பெண்மையை தனது ஒரு பலமாக மாற்றிக்கொள்வது, அதனை உடலுக்குள் திடமான ஒரு பண்பாகக் கட்டமைத்துக் கொள்வது, பெண்மை என்று தான் நம்பும் சில குணநலன்களின் அதாவது, நளினம், மென்மை, அடக்கம், அச்சம், மடமை, பயிர்ப்பு போன்ற சில குணத்தொகுதிகளையேனும் உடலுக்குள் தொகுத்து வைத்துக்கொள்வது! அரவாணிகள் தம் உடல்களை அப்படித்தானே திருத்தியெழுதிக்கொள்கிறார்கள்! இதன் வழியாக உடலுக்கு ஒரு புதிய பாலியல் வெளியைப் பயிற்றுவிக்க முயல்கிறார்கள். மீண்டும் மீண்டும் அவ்வெளிக்குள் பயணிக்க விரும்புகிறார்கள். இப்படித்தான், ஆரம்பக்கட்ட பெண்நிலை வாதம் நமது புவியியல் சூழலில் தொடங்கியது. இதை சட்டை உரிக்கும் நிகழ்வாக, புற வளர்ச்சிக்கான ஓர் அடையாள நிகழ்வாகப்பார்க்கலாம்.
ஆனால், இது வெளிப்படையான பாலிமையை எங்குமே பேசத்துணியவில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இலக்கியத்துறையில் காலூன்றும் தனது முயற்சியில் சக ஆண் படைப்பாளிகளுக்கு இணையாகத் தானும் வெல்லவேண்டும் என்பதாய் இருக்கலாம். குடும்பம் பின்புலமாக எழுத்தை முன்வைக்கும்போது பாலிமை என்பதை ஒரு பேசு பொருளாக்கினால், அது முதலில் குலைப்பது அவரவர் குடும்பத்தையும் மண உறவையும் தாம். இது ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம். ஆகவே, சுய தணிக்கை செய்து கொண்டே இருப்பதும், மொழி வழியாக ஊக்கம் பெறும் போதெல்லாம் முளை விடும் இறக்கைகளைக் கத்தரித்து விடும் அவலமாகவும் இருக்கலாம். ஆனால், இலை மறை காய் மறையாக உடலின் வேட்கையை வார்த்தைகளில் ஒளித்து வைத்துப் பேச அவர்கள் தயங்கவே இல்லை. மேலும், ஒரு பொருளில் பெண் பயன்படுத்தும் சொல்லை அதே பொருளில் உள்வாங்கிக்கொள்ளும் உணர்வுக்கொம்புகளை இன்னும் ஆண்கள் வளர்த்துக்கொள்ளவில்லை தானே?



இவ்வாறு தான் முதன்முதலாக எழுத வந்த பெண் கவிஞர்களும் பெண்மை என்ற வரையறைக்குள்ளிருந்து முதலில் மொழியை வெளிப்படுத்திக்கொண்டார்கள். பின்பு தான், மொழியின் உடைப்பும் உடலின் தகர்ப்பும் நிகழ்ந்தன என்று சொல்லவேண்டும். இவ்விடத்தில், இரா.மீனாட்சியின் கவிதை செய்ததை விவாதிப்பது பொருத்தமான கருவாக இருக்கும் என்று நினைக்கிறேன். இயற்கையுடனான தன் கலப்பையும், மானுட உறவையும் ஓயாது பேசிவரும் மீனாட்சியின் கவிதைகள், பெண்மையின் வீறு கொண்ட கவிதைகளாக உருவாகியிருக்கின்றன.
‘எழுத்து’ இலக்கிய இயக்கத்தினுடனும், ‘சி.சு.செல்லப்பா’ போன்ற நவீன இலக்கிய முன்னணியினருடனும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்ற இரா.மீனாட்சி, நவீன இலக்கியப் பெண்ணெழுத்தின் தொடக்கமாகிறார். அப்பொழுது உருவாகியிருந்த நவீன கவிதையின் உத்வேகத்தைத் தானும் பயன்படுத்திக் கொள்கிறார். இன்று வரை ஓயாது கவிதையை தன் அகக்குரலுக்கான வடிவமாகத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து எழுதியும் வருகிறார்.
2002 –ம் ஆண்டு கவிஞர்கள் க்ருஷாங்கினியுடனும் மாலதி மைத்ரியுடனும் சென்று கவிஞர் இரா.மீனாட்சியைச் சந்தித்தேன். அவரது கவிதைகளை ஒரு மருங்கிலிருந்து மறு மறுங்கு வரை வாசிக்கும் அனுபவம் அதற்குப் பிறகு இக்கட்டுரை எழுதுவதற்காகவும் கிடைத்திருக்கிறது. தனது மொழியின் உள்ளீடாக இவருக்கேயான அழகியலும் நடைலயமும் உக்கிரம் நோக்கி நகரும் வாக்கிய மடிப்புகளும் கொண்டு எழுத்தில் இயங்குகிறார். கடந்த நான்காயிரம் வருட உலகக்கவிதை இயங்குதலைத் தொகுக்கும் முகமாக, அமெரிக்காவிலிருந்து வெளி வந்த கவிதைத் தொகுப்பில் இடம் பெற்ற இருபதாம் நூற்றாண்டின் ஒரே தமிழ்க்கவிதை இவருடையது.


உலகச்சந்தையில் விற்பனைக்குப் போகும் பிற மலர்களுடன் அத்தகுதியைப் பெறாத நெருஞ்சி மலரைத் தன் முதல் தொகுப்பிற்குத் தலைப்பாக்கி இரா. மீனாட்சியின் கவிதைகள் பகிரங்கமாக வெளிவந்தன. நவீனப்பெண்ணிய இலக்கியத்தில் இரா.மீனாட்சிக்கு இருக்கும் பங்கு முதன்மையானதாக இருக்கிறது. அதாவது, அவர் வழியாகத் தான் தமிழ்ப்பெண் கவிதையின் தடம் உயிர்ப்பெறுகிறது. அதுவரை, தமிழ்ப் பேராசிரியர்களின் கைகளில் மண்டிக்கிடந்த மரபுக்கவிதைகளிலிருந்து நவீனத்தை நோக்கி ஒட்டுமொத்தமுமாக பெண்கவிதைக்குத் திசை திருப்பித்தந்த பங்கு இவருக்கு உண்டு. என்றாலும், மரபுக்கவிதையின் நடை, சந்தம், சொல்லாட்சிகளிலிருந்து விடுபடாத தொகுப்பாகவே நெருஞ்சி உருவாகியிருக்கிறது. என்றாலும், கருப்பொருள் அளவில் மரபார்ந்த சிந்தனை அடுக்குகளிலிருந்தும் அழுத்தங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ளும் எல்லா முயற்சிகளையும் இரா. மீனாட்சி எடுத்துக்கொண்டார்.
சுடுபூக்கள் கவிதைத்தொகுப்பில், இப்படியான வரிகளுடைய காற்றோ காற்று எனும் கவிதை
’ஒவ்வோர் இறகும்
ஒவ்வோர் பறவை’





சங்கொலிப் பாதையில்
நான் ஒரு அற்பப் புழு
ஆகாசக்கைகள் என்னைத் தொட்டன.
நீவிய கையின் மந்திரமோ?
எனக்கும் சிறகுகள் முளைத்தன.
அலகால் அரிசியைக் கொத்தி
பாலையும் குடித்தேன்.
பம் பம் பம்பம்…
சங்கொலிப்பாதையில்
சங்கிலி உடைத்துப் பறக்கிறேன்
நானும் பறக்கிறேன்

(நெருஞ்சி கவிதைத்தொகுப்பு -1970)



சங்கொலிப்பாதியில் கவிதை தன் உடலுக்குள்ளிருந்து சிறகு விரிக்கும் அனுபவத்தை, உட்பொருளாக்கியிருக்கிறது. உடலுக்குள்ளிருந்து தீவிரமாக வெளியேறும் முனைப்பும் விட்டு விடுதலையாதலும் நிகழ்ந்திருக்கின்றன. இத்தகைய தன் முனைப்பை கூர்மையான மொழியாக்கவும் அனுபவமாக்கவும் முடியாமல் தவிக்கும் குரலையும் அவரே பதிவு செய்கிறார்.



எழினி
அவள் தானே வெளியேற
அவளே தடையாகி,
அவலத்துடிப்பு.
மென்குரலில் வெளியழைப்பு.
அவளுக்கோ அவலத்துடிப்பு
கழுத்து முடிச்சு பற்றுக்கோடா?
தடையுத்தரவு.
முள்வேலி.
கம்பிக்கயிறு கட்டுமானம்.

பூச்சிலை நெளிகிறது.
திரையாகி அலைகிறது.
துருப்பிடித்த
சன்னலுக்குத் தெரியுமா
சீலையின் தவிப்பு?
(நெருஞ்சி கவிதைத்தொகுப்பு -1970)



‘அக விடுதலை’யைத் தீவிரமாக முன் வைக்கும் கவிதை இயக்கம் சந்தித்த பிரச்சனைகளில் முதன்மையானது பற்றுக்கோடின்றி அலையும் அதன் கவித்துவ வேகம். அதாவது, சிந்தனைச் செழுமையுறாது என்ன தான், தீவிரமான இயக்கத்திற்குள் நம்மை உட்படுத்திக்கொண்டாலும் அது அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி வடிவம் பெறாது துவண்டு விழுந்திருக்கின்றது. இதை ஆண் எழுத்துடன் தொடர்புப்படுத்திப் பார்த்தோமானால் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளலாம். இத்தகைய அகவிடுதலைத் தத்துவத்தை இன்று வரை தம் எழுத்துகளில் சீரியதாக முன்வைத்துக்கொண்டிருக்கும் ஆண் படைப்பாளிகள், ‘இயற்கை’, ‘தத்துவம்’, ‘ஆன்மீகம்’, ‘அகவிடுதலை’ போன்றவை அடிப்படையான எந்தச் சிந்தனையையும் உட்வாங்கிக்கொண்டவையாக இல்லை. சித்தாந்தம் எதையும் தனக்குள் தக்க வைத்துக்கொள்ளாத இத்தகைய எழுச்சிகள் வெறுமனே உணர்வெழுச்சிகளாக ஓய்ந்துப் போகின்றன. உடலை வெறுங்கூடு என்று நோக்கும் அடிப்படையான மனோபாவம் தான் இயற்கையின் மூலமாகவும் தீரமான அடையாளமாகவும் உடலைப் பார்க்க இயலாத பலவீனமும் எந்த விடுதலையையும் சாத்தியப்படுத்தாமல் போகின்றன. குப்பையைக் கிளறுவதை அடிப்படைப் பணியாகக் கொண்டிருக்கும் கோழி, இறக்கைகள் தேவைப்படும் வானத்தை வேட்கையுடன் பார்ப்பது போலத்தான்!




ஆனால், மீனாட்சி இதற்கான சுவடுகளை, சங்கொலிப்பாதையில் கவிதையிலேயே, தனது முந்தைய கவிதையிலேயே வைத்திருப்பதையும் பாருங்கள்!. நீவிய கையின் மந்திரமோ? என்ற வரியே உள்ளீடற்ற அர்த்தத்துடன் ஏற்கெனவே பதிவாகி இருப்பதை இங்கு மீண்டும் இணைத்துப் புரிந்து கொள்வோம்.
எங்கும் வெளி
பெரிய வெளியில்
சிறிய வெளி என் வீடு
வீட்டிற்குள் என் உடம்பு
அங்கும் வெளிதான்.
வெளியில்
பரவச ஒளியின்
எல்லையில்லாத நாட்டியம்
(மறு பயணம் கவிதைத்தொகுப்பு, 1998)
இக்கவிதையிலும் விடுதலை என்பதை உடலுக்குள் வைத்துப் பேசும் சுயம் தொனிக்கிறது. வெட்டவெளி என்பதைத் தனக்கான ஆன்மீக வெளி என்று நோக்கினாலும், அதை அடைவதற்கான சிந்தனைத்தடமற்று கவிதைகள் தொடர்கின்றன. ஆனால், இவையெல்லாமே ஆண்களின் பேசுபொருளாக மட்டுமே இருந்திருக்கின்றன என்னும் கட்டத்தில் மீனாட்சிக்கும் இவ்வெளிக்குள் நுழைந்து பார்க்கும் தன் விழைவை முயன்றுபார்க்கும் மொழியாகத் தான் இக்கவிதையைப் பார்க்கிறேன்.




இராமர், கண்ணன், சீதை, இராவணன் போன்ற இதிகாசக் கதாபாத்திரங்களைத் தன் நிலையிலிருந்து தகர்த்துக்கொண்டே வருகிறார். புராணக்கதை மாந்தர்களை விமர்சிப்பதை ஆதிக்கப் பின்னணிப் பெண்கள், தொடர்ந்து செய்து வந்திருக்கின்றனர். கவிதையில் மட்டுமன்றி, இந்தியாவின் எத்திசையில் படைப்பாற்றலை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் எந்த ஒரு பெண்ணும் இதைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இதன் காரணம், அவர்களின் உடலும் விடுதலையும் எழுச்சியும் இக்கதை மாந்தர்கள் தம் கதாபாத்திரங்களுக்கு உள்ளிருந்து பெண்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை தான்! இவர்கள் தாம் இப்பெண்களை, தந்தையராகவும், கணவராகவும், சகோதரர்களாகவும், மகன்களாகவும் தொடர்ந்து வதைக்கின்றனர். இவ்வதையிலிருந்து வெளியேற இக்கதைமாந்தர்களாக மெய்மையில் தங்களை உருமாற்றிக்கொண்ட ஆண்களின் சிறைகளிலிருந்து வெளியேற விரும்பினர். தங்கள் நினைவுகளுக்குப் புகட்டப்பட்ட பிம்பங்களைத் தகர்க்கத் தொடங்கினர். ஆகவே, தம் சிந்தனையைத் தெளிவுபடுத்திக்கொள்ள ஒவ்வொரு வீட்டிலும் இக்கதைகளால் கட்டிப்போடப்பட்டிருக்கும் உடலை விடுவிக்க வேண்டியிருக்கிறது. பின், இம்மாதிரியான ஆண் பிம்பங்களையும், அவர்களுக்கு உடன்பட்ட பெண் பிம்பங்களையும் இவர்கள் தகர்க்க வேண்டியிருந்தது, இந்த அளவிற்கேனும் விடுதலையைப் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை.




பிற ஒடுக்கப்பட்ட பெண்களின் நினைவுகளில் இத்தகைய ஒடுக்குமுறைக்கான பிம்பங்கள் பதிவாவதில்லை. அவர்களின் பிம்பங்கள் ஆதிக்க மனிதர்களால் உருவானவை என்பதால், சீதை, இராமன், கண்ணன் போன்றவை எல்லாம் ஆதிக்க சாதி, இனப் பெண்களால் தாம் தகர்க்கப்படவேண்டும். நினைவை மொய்க்கும் இப்பிம்பங்களால் அவர்கள் உடல், கட்டுப்படுத்தப்படுவதை, சிதைக்கப்படுவதை அவர்களும் உணர்ந்திருக்கக்கூடும் இல்லையா?
மேற்கொண்ட பொருளில் உளைவுக்குள்ளாகும் மனநிலையைச் சொல்லும், மிகவும் புகழ்பெற்ற மீனாட்சியின் கவிதை,

மதுரை நாயகியே!

மதுரை நாயகியே!
மீனாட்சித்தாயே!
படியேறி
நடை தாண்டி
குளம் சுற்றி
கிளி பார்த்து
உன்னருகே ஓடிவரும்
உன்மகளை
உன்மகனே ஏ
வழிவம்பு செய்கின்றான்
கோயிலிலும் காப்பில்லை
உன் காலத்தில்-
அழகி நீ!
எப்படி உலாப்போனாய்?




(சுடு பூக்கள் கவிதைத்தொகுப்பு, 1978) இல் வெளியான இக்கவிதையும், அதே தொகுப்பில் இடம்பெற்ற ‘நாங்கள் நகரத்துக்குப்போகும் சின்னப்பெண்கள்’ எனும் சமூக யதார்த்தம் தொனிக்கும் கவிதையும் ஒரே மனநிலையில் இயங்குகின்றன. பெண்ணுடல் மீது இயங்கும் புற தாக்குதல்களை மையமிட்ட கவிதைகள் இவை.
……………………………………………………………………….
உள்ளே பார்த்தோம்.


எங்கள் மேலாடைகளைக் கிழித்து
தோல் பூச்சைத் துளைக்கின்ற
பூனைப் பார்வைகளை

பார்வைகளையே கைகளாக்கிக்
கைகளையே கொடுக்குகளாய்ச்
சக பிரயாணிகள் சுமந்திருப்பதைக்
காலங் கடந்தே
நாங்கள் பார்த்தோம்.




தொடக்கத்தில், பெண்கள் எழுத வந்த போது நேரடியான அவர்களின் வெளிப்பாடுகள் விமர்சனத்திற்குள்ளாயின. நாட்குறிப்புகள் தாம் பதிவு பெறுகின்றன என்றும் படைப்பூக்கம் இல்லா எழுத்துகள் என்றும் விமர்சனத்திற்குள்ளாயின. இவை ஆண், பெண் என இரு தரப்பினரிடமும் தாம் காணப்பட்டன என்றாலும், இதைச் சொல்லும் அதிகாரம் ஆண் படைப்பாளிகளிடம் தான் இருந்தன. இரா. மீனாட்சி, இந்த அரசியலையும் கையாளவேண்டியிருந்திருக்கும். இடது சாரி அரசியலுடன் வந்த படைப்பாளிகளையும், வானம்பாடி போன்ற இயக்கங்களையும் எதிர்கொள்வதற்கான அரசியல் பார்வையை அவர் முன்வைக்கவோ விவாதமாக்கவோ இல்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக அரசியல் வெளிப்பாட்டை தன் கவிதைகளில் அவர் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தாலும் கூர்மைப்படாத ஒன்றாகவே இருந்தது.


இவர்களுக்காக
……………………………………………………
………………………………………………………………

நீங்கள் தேன் வடிக்காமல்
செந்நீர் உகுத்தீர்கள்
அழவும் தெரியாமல்
அசுர விதைகளுக்கு மடி தந்தீர்கள்

புலிப் பொருளியலில்
போகப் பொருளானவர்களே!
உணர்ச்சி ஊர்களின்
மடைத் திறப்புகளே!
என்றைக்கு உடைத்தெறியப் போகிறீர்கள்
இந்த மானவேலிகளை?

பெண்களே
இவர்களுக்காக இன்னொரு முறை
அழாதீர்கள்

………………………………………………………………………………………..
(தீபாவளிப்பகல் கவிதைத் தொகுப்பு,1983)




இக்கவிதையில் அசுர விதைகளுக்கு மடிதந்தீர்கள் என்று மறைபொருளாகச்சாடுகிறார் மீனாட்சி. இம்மாதிரியான நேரடியான பிரச்சாரக்கவிதைகளில் இருக்கும் பிரச்சனைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவை ஒரு பொழுதும் பிரச்சனை எனப்படுவதன் ஆழத்திற்குக் கூட்டிச்செல்வதில்லை. ஆற்றின் மீதான பாலத்தில் நடக்கும் வசதியுடனும் கவனத்துடனும் இம்மாதிரியான கவிதைகளை எழுதுவதில் ஒரு சுகம் இருக்கிறது. அரசியல் அடையாளம் பெறுவதை, ஓர் அங்கீகாரமாக எண்ணிக்கொள்ளும் ஆபத்தும் இருக்கிறது.ஆனால், இம்மாதிரியான கவிதைகளால், எந்தப்பிரச்சனையும் மேலெழுந்த வாரியாகப் பேசப்படுகிறதே அன்றி அகஎழுச்சியை ஏற்படுத்துவதில்லை. சமூக அழுத்தம் பெற்ற விஷயங்களைப்புரட்டிப் போடுவதே இல்லை. இதற்கு ஓர் உதாரணமாய் ஒரு கவிதை:

நிழலாய் இருக்க விடு
உச்சி வெயில் போதில்
நிழல் பொருளுள் ஒடுக்கம்
நீ அந்த வெயில்
நிழல் நான்

வாழ்க்கைக் காலையில்
என்னை முன் நடத்து
சாயும் வேளையில்
பின் நிற்கிறேன்.

ஒளிக்காலத்தில்
நிழல் நிகழும்
இருட்டெனில் கருகும்.

உன் வழியில்
பகலைப் பார்க்க
எனக்கோர் ஆசை!




சுடுபூக்கள் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் இக்கவிதையில், மேற்சொல்லியிருக்கும் அதே மாதிரியான ஆன்மீக, தத்துவத் தேய்மானங்களைக் காணலாம். அதாவது, இக்கவிதையில் முன்னிலை பெறும் நீ என்பது பேசப்பட்டிருக்கும் பொருள் சார்ந்து ஓர் ஆணாகவோ, கடவுளாகவோ இருக்கலாம். அதற்குள் தன்னை ஒடுக்கிக் கொள்ளும் தீவிர இச்சையைத் தொடர்ச்சியாகத் தக்கவைத்துக்கொண்டே இருக்கிறது, இக்கவிதை. ஆனால், அத்தகைய ஆன்மீக, தத்துவச் சிந்தனையே எவ்வளவு போலியானதும் வெறுமையானதும் என்பது உண்மையான தத்துவப் பின்புலங்களிலிருந்தும் நெடிய ஆய்வுகளிலிருந்தும் வருபவர்களுக்குப் புரியும். இந்தப் பயணம் படைப்பவரையும் வாசகரையும் எங்குமே கொண்டு சேர்க்காத ஒரு வண்டியில் ஏற்றியது போன்றது இல்லையா? இது வைதீக சிந்தனையின் வேர்கள் நம் அடி மன ஆழங்களில் மண்டிக்கிடக்கும் விழிப்பு அற்று இருப்பதன் பிரதிபலிப்பு தான்!





ஆனால், எனக்குப் பிடித்த தொனியில் அணுகப்பட்ட சில கவிதைகளையும் மீனாட்சியின் கவிதைத்திசைகளில் கண்டெடுத்தேன். இவை பெண் மனவெளியில் சிக்கல் உள்ள பகுதிக்குத் துல்லியமாகச்சென்று, அதன் இழைகளை மொழிக்கு இழுத்து வருகிறது. பொதுவாக, நவீனப் பெண்மனம் இந்த அணுகுமுறைக்கு எளிதானது இல்லை. பல சமரசங்களையும் மீறித் தன் சுயத்தையும் கட்டுக்குலையாமல் வைத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. இந்நிலையில், அவள் அதற்காக என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கிறது, அதில் ஏற்படும் சங்கடங்கள் என்னென்ன என எல்லாவற்றையும் கவிதைக்கான நுண்ணிய மொழியில் கொண்டுவருவது என்பது சாத்தியம் தான் என இக்கவிதைகளை வாசிக்கும் போது உற்சாகமானேன். மீனாட்சியின் சில கவிதைகளில் மட்டுமே வாய்க்கும் நவீன உணர்வுகளை, அவரே தக்கவைத்துக் கொள்ளாமல் போய்விட்டாரே என்று என்னும் அளவில் அதற்குப் பின்பான கவிதைகள் வசனங்களாகி இருக்கின்றன. அதனாலேயே ஆழமான கருக்களங்களுக்குள் நுழைய முடியாத மனப்பிரமையும் அப்பிக்கொள்கிறது




பார்பரா என் தோழியே!

நீலக் கண்களில் நீளக்குறும்பு
கூரிய மூக்கில் கேலிப்புன்னகை
செம்பொன் முடியோ காற்றில் அலையும்
விரல்களில் அவசரம்
நடைதனில் கம்பீரம்
உன் பேச்சில் லாஸர் கற்றை.

நீ எப்போது தவித்தாய் தெரியுமா
பெண்ணே!
ஒரே ஒரு முறை
உன் முதல் காதல் அனுபவத்தை
முற்றிய நாளில் சொல்ல முயன்று
அளக்க நினைத்துத்
தோற்றாயே முன்னுரையில்!
பார்பாரா என் தோழியே!
தவிப்புமா தொற்று வியாதி?

(தீபாவளிப்பகல் கவிதைத் தொகுப்பு, 1983)







இதோ இன்னுமொரு கவிதையின் குறும்பகுதி:


அந்தரங்கவெளி

...................................................
நீர் குடிக்கத் தவிக்கின்ற சிறுபடகும்
கறையான் அரித்த துடுப்புகளும்
உப்புக்கரைசலில் எரியுண்ணும்
காயங்களும் தான் இங்கே துணை.
இவற்றோடு பயணப்படுகின்றேன்.
துக்கச் சுமைகளைத் தூக்கிவர
கூலி யாருமில்லை.
......................................................

மாலை மலர் விரிவது போல்
மெல்ல நடந்தாலும்...
கனவுகளுக்குள் இறங்கும்போது
கதவிடுக்கில் எட்டிப்பார்த்தாலும்....

பல்லாயிரர் கூடும் தேர்த்திருநாள் நெரிசலில்
ஒரு கணமேனும் ஊடுருவும்
பார்வை பட்டாலும்...
என்னை அறிந்து கொள்ளும் அந்த நீயா...

வயிற்றுக்கிரை இல்லாத
வீதி நாளில்
கதை சொல்லி வீரமுட்டி
விழிவியர்வை மாற்றினாயே

.................................................................

எல்லாம் போனபின்
உள்ளீடற்ற பின்னம்
நிழல் சின்னம்
மீதி நான்.

சோப்புக் குமிழிகளை ஊதுகிறேன்
வால் சேர்ந்த வஜ்ரப் பட்டங்களைப்
பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறேன்.

கண்ணாடித் தொட்டியில்
ஓயாது அலைகின்ற
உறங்காத
இளஞ்சிவப்பு மீன்களைப்
பார்த்துக் கொண்டேயிருக்கின்றேன்.

வாசல் வேப்பமரம் உதிர்க்கின்ற
பொன்பூக்களின்
சின்ன மழையில் நனைந்து கிடக்கின்றேன்.

கான்கிரீட் சுவர் குழைக்க
குவித்திருக்கும் மணல் முகட்டில்
வீடு கட்டக் கரண்டி பிடிக்கின்றேன்.

என்னைக் கடக்கின்ற நரைமேகங்களின்
விசித்திரச் தோற்றங்களி
மாற்றிச் சிவப்பாக்கித்
தூரிகையை கங்கையில் அலசுகின்றேன்.
மாடி மீது ஏறினாலும்
என்னைக் குனிந்து பார்த்துக் கெக்கலிக்கும்
தென்னங் கீற்றுகளைக் கிழிப்பதற்கு
கத்தியைச் சாணைப் பிடிக்கின்றேன்.

இப்போது
புதிதாக முன்னால் நட்டிருக்கும்
இரும்பு வேலிகளை வளைப்பதற்குப்
பழகிக்கொண்டிருக்கிறேன்.

இடது கண்ணில் வலது கண்ணை
அப்பி விட்டேன்.
இதயத்தைத் தனியே கயிற்றில்
கோர்த்துவிட்டேன்.

நம்பு
இன்னும் நான் சாகவில்லை
இருக்கின்றேன் உயிரோடு!

மற்றுமொரு கவிதையும்:

வித்யா
குளத்து நீரில் மீன்பிடிப்பவர்களே
ஆற்றங்கரைக் கொக்குகளே
நான் வித்தியாசமானவள்.

கணந்தொறும் கணந்தொறும்
கடலின் பாய்ச்சல்
மரத்தொட்டிலை
அலைக்கழிக்கும் வேகத்தில்
வலை போடவே விரும்புகிறேன்
நீங்கள் காத்திருத்தலையே
விரும்புகிறீர்கள்.

நான் புயலுக்குள் புயலாய்ப் போய்
மையத்தைத் தொட்டுப்பார்க்கிறேன்
நானொரு வித்யா.




இரா.மீனாட்சியின் உள்நோக்கமும் அவர் கொள்ள விரும்பும் நெடும்பயணத்தையும் சொல்லும், ‘உன்னை எதிர்கொள்ளும் முன்’ கவிதை அவரை வாசிக்கும் எவரையும் ஊக்கப்படுத்துவது. எதிரே வரும் அனுபவங்களுக்குத் தன்னைத் திறந்து கொடுப்பது. குறிப்பாக, ஒரு மனிதருக்கு தன் சமுத்திரத்தைத் திறந்து கொடுக்கும் அனுபவம் ஆணுக்கான ஒன்றாக மட்டுமே வகுக்கப்பட்டிருக்கும் சமூகச்சூழலில், ஒரு பெண் இதை முன்மொழிவதும், அம்மாதிரியான பயணத்திற்கும் அனுபவத்திற்கும் தன்னைத் தயார்செய்து கொள்வதும் குறிப்பிடத்தக்கது. உடல் வழியாக மட்டுமே அனுபவங்கள் சாத்தியம்!



உன்னை எதிர்கொள்ளும் முன்

வேற்றூரின் புன்னகைக்கு
மறுமொழி தந்து
சிப்பியும், மீன்முள்ளும்
காலிக்குப்பிகளும்
இடறிவிட்ட வீதிகளில்
‘மாப்சா’ சந்தைகளின்
அபூர்வ சேகரிப்பில்
திளைத்ததைப் போல்
உன்னை எதிர்கொள்ளுமுன்…
அன்பே!
பயணத்தில் இருக்கின்றேன்.
நீயே அனுபவமாய்
எதிர்கொள்ள வருகின்றேன்.



இரா.மீனாட்சி பற்றிய சிறுகுறிப்பு: 1970 –ல் எழுதத் தொடங்கிய இவர், நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப்பகல், மறு பயணம், வாசனைப்புல், உதயநகரிலிருந்து, கொடி விளக்கு ஆகிய கவிதைத்தொகுப்புகளைப் படைத்துள்ளார். பாண்டிச்சேரி ஆரோவில்லில் வாழ்ந்து வருகிறார். கிராம முன்னேற்றம், ஆசிரியப்பணி ஆகியவை இவரது பிற ஆளுமைகள்.





குட்டி ரேவதி


நன்றி:கூடு

ஒரு பெண்ணியவாதியாக இயங்குவதென்பது...








பெண்ணியம் எனும் இயக்கத்துறை ஒரு தீவைப் போலவே இருந்தது. பெண்ணுரிமைக்கான இயக்கங்கள் முளைவிட்ட தொடக்கத்தில் அதற்கான சமூகத் தேவையை உணராமல் அதை விமர்சித்துப் பேசவே ஆங்காங்கே குழுக்கள் எழும்பின. பெண்ணுரிமைக்காகப் போராடுவதை தனது முழுநேரப் பணியாக எடுத்துக் கொள்பவர்களும் அகதிகளைப் போலவே இருக்க நேர்ந்தது. எவரோடும் தொடர்புப் படுத்திக் கொள்ள முடியாமல், எவரோடும் பொருந்த முடியாமல் ஆனால் தாம் தமது பயணப் பாதையாக தேர்ந்தெடுத்துக் கொண்டதை அர்ப்பணிப்போடு எப்பொழுதும் போலவே தொடர நேர்ந்தது. உலகெங்கும் அங்கும் இங்குமாய் சிலர் ஓயாது இயங்கியதன் பேரிலேயே பெண்ணியம் என்பது ஓர் இயக்கமாகியது.



ஆனால் எல்லா பெண்களுக்கும் பொதுவானதொரு சாலையை பெண்ணியப் பாதையாக கட்டமைக்க முடிவதில்லை. ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையும் சமூகப் பின்புலமும் வெவ்வேறான அதிகார அடுக்கில் எழுப்பப் பட்டிருப்பதே அதற்குக் காரணமாகும். பெண்ணியத்தின் முழுப் பரிமாணம் என்பதே கூட பெண்ணியச் சிந்தனையை வேறுவேறு களங்களில் அதாவது, கலை, இலக்கியம், அரசியல், வரலாறு மற்றும் பண்பாடுகளில் நின்று இயக்கும் போது தான் சாத்தியம் . பணியிடங்களில் பெண்ணுக்கு விடுதலையின் சூத்திரங்களாய் சொல்லப் படுபவை, ‘இல்லத்தரசி’களாய் இருப்பவர்களின் விடுதலைக்குப் பொருந்தாமலும், உதவாமலும் போகலாம் என்பது என் தொடர்ந்த பணியில் நான் கண்டறிந்தவை. மேலும் பெண்ணின் விடுதலைக்கு அவள் கல்வியோ, பொருளாதார பலமோ கூட போதவில்லை. அவள் தன் ஆளுமையை கண்டறிந்து அதன் வழி செல்லவேண்டியிருக்கிறது. பெண்கள் பன்முகங்கள் எடுக்க வேண்டிய உலகில் பெண்ணின் ஆற்றாமைக்கும் அறியாமைக்கும் எவரும் பொறுப்பேற்க வேண்டிய அவசியமுமில்லை. அத்தகைய வாழ்க்கைப் பயணம் ஒரு தனிமைப் பயணமாக இருக்கும் என்பதிலும் மாற்றுக் கருத்துமில்லை. சமூகத்தின் அடுக்குகளின் இடுக்குகளில் வேரூன்றியிருக்கும் அதிகார முளைகளைப் பற்றி அறியாமல் பெண்ணுக்குப் புறவயமான தீர்வுகளை மட்டுமே வழங்கிவிடுவது, அவளுக்கு மட்டுமே கிட்டும் தற்காலிகமான பலனே அன்றி அது அவளொட்டிய சமூகத்திற்கான விடுதலையாக இருக்காது. ஆனால் இப்பொழுது அவள் வாழும் நிலத்தினுடன் அவள் வரலாற்றையும் பண்பாட்டையும் இணைத்துப் பார்க்கையில் அவள் மீதான ஒடுக்கு முறையின் வடிவங்களை மிகத் துல்லியமாகவும் எளிதாகவும் புரிந்து கொள்ள முடிகிறது.



பெண் இன்றைய காலத்தின் எல்லைகளை எந்த அளவுக்கு அனுபவிக்க அனுமதிக்கப் பட்டிருக்கிறாள் என்று கேள்வி எழுப்பும் அதே நேரத்தில் எவ்வாறெல்லாம் அவற்றைத் தொடர்வதற்கான பிரயத்தனங்களை அவளும் எடுக்கிறாள் என்பதும் முக்கியமான விஷயமாகிறது. அதற்கு ஆண்மைய எதிர்ப்பாளர்களாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஆணின் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் இருப்பையும் மட்டுமே ஊக்கப்படுத்தும் சமூக அலகுகளான திருமணம், மதம், குடும்பம், சாதி ஆகியவற்றையும் தொடர்ந்து எதிர்த்தலும் அவற்றின் இறுக்கத்தைத் தளர்த்தப் போராடுவதும் அவற்றை மறு கட்டமைப்பு செய்வதும் மிகமிக அவசியம். ஏனெனில் தன் சுய வாழ்க்கையும் கட்டுண்டு கிடக்கும் திருமணம், குடும்பம் இன்ன பிறவற்றிலிருந்து கொண்டே தான் அந்த சமூக அலகுகளை விமர்சிக்க வேண்டியிருக்கிறது. தொடக்கத்தில் ஆண்களைப் பட்டவர்த்தனமாக நேரடியாக எதிர்த்த பெண்ணியவாதிகளும் பின்பு ஆண்களோடு நிகர் நின்று போராடத் துணிந்தனர்.



ஆண்கள், பெண்களை விடவும் உயர்ந்தவர்கள் என்று நிரூபிக்க முனையும் போதெல்லாம் இயற்கையை விடவும் உயர்ந்தவர்கள் என்றும் நிரூபிக்க முயல்கிறார்கள். ஆகவே பெண்களே சூழலியல் போராளிகளாகவும் ஆனார்கள். இன்று பெரும்பாலான சூழலிய இயக்கங்கள் பெண்களால் தொடங்கப்பட்டு இயக்கப்படுபவை. அந்தந்த சூழலுக்கு ஏற்ற இயக்கங்களைக் கட்டமைப்பவர்களாக உலகெங்கும் இருப்பதும் பெண்களே. இவர்கள் இதை தங்களின் சொந்த, அன்றாட வாழ்க்கையுடன் தங்களின் குடும்பம், தனிப்பட்ட தனது இலட்சியம், தனது அலுவலகப் பணி என எல்லா இடங்களிலும் தனது ஆளுமையை செதுக்கிக் கொள்வதற்கும் தனது உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்கும் செய்கிறார்கள். இத்தகைய பிராந்திய அளவிலான உரிமைப் போராட்டங்களும் சிறிய அளவிலான கிளர்ச்சிகளுமே மிக அடிப்படையான பெண்ணுரிமைகளைப் பெறுவதற்கான வழிகளை ஏற்படுத்தித் தந்துள்ளன.



பெண்ணியவாதிகள் ஆண் வெறுப்பாளர்களாகப் பார்க்கப்பட்ட தொடக்கக் கால தொல்லைகளெல்லாம் உதிர்ந்து இன்று பெண்ணும் ஆணும் பொது நோக்கத்துடன் ஒரே தெருவில் நின்று போராடத் தலைப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமென்பது ஆணின் செழுமையான வாழ்க்கைக்கும் ஏற்றது என்ற புரிதல் ஏற்பட்டுள்ளது.

ஒரு பெண்ணியவாதியாக இயங்குவதென்பது,

‘தூக்கியெறியப்படாத ஒரு கேள்வி’*யுடன் தொடங்குகிறது. அதுமட்டுமன்றி,

சமூகத்தில் பலவிதமான பரிமாணங்களை தனக்கென நிலைநிறுத்த வேண்டியிருப்பது.

பொதுவெளியையும் அந்தரங்க வெளியையும் எப்பொழுதும் இணைத்தே அணுகுவது.

பெண் – ஆண் மனதில் இயங்கும் ஒடுக்குமுறைகளை, அடக்கு முறைகளைக் களையும் வண்ணம் சமூக அலகுகளை வடிவமைப்பது

சலிப்பூட்டும் நடுவாந்திரமான அழகியலுக்கு எதிரான அழகியலை உருவாக்கவேண்டியிருப்பது.

புவியியலுக்கு ஏற்ற பெண்ணுரிமைகளை சம்பாதிப்பதும் தன்னையொத்தோருக்குப் பெற்றுத் தருவதும்.

இடைவிடாமல் சுய சிந்தனையின் வழியில் அரசியலின் குறுக்கீடுகளற்று பயணிப்பது.

வரலாற்றை மறு வாசிப்பு செய்வது.

பண்பாடு என்பது மானுடத்தின் பண்புகளை மேன்மைப்படுத்துவதற்கே என்றறிந்து உழைப்பது.

தொடர்ந்து அறிவுத் துறையிலும் படைப்பாக்க வெளியிலும் பங்கெடுத்துக் கொண்டு தான் கண்டடைந்ததைப் பாரபட்சமற்று பகிர்ந்து கொள்வது.



* ஈழக்கவிஞர் சிவரமணியின் கவிதை வரி.






குட்டி ரேவதி