நம் குரல்

வசன கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வசன கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உடலுக்கே மண்





கூவிக் கூவிப் பெண்ணுடல் விற்கப்படும் தேசத்திலிருந்து வந்தவள் நான். பெண்ணென்ற என் ஒற்றை அடையாள முகமும் உனக்குப் போதாது என்றறிவேன். பிற அடையாளங்களும் உன்னால் வர்ணிக்கப்படுபவை. முலையின் அளவுகோல்கள், யோனியின் புனிதம், சருமத்தின் நிறம், வீடுறையும் தெரு, அப்பாவின் பூர்வீகம், என்னுடைய உடை நகை முரண் எல்லாமும். மண்ணை இயக்கும் துப்பாக்கிகளில் எதை நான் விரும்புகிறேன் என்ற அரசியலும். ‘விரைக்குறிகள்வடிவத்தில் தயாரிக்கப்பட்ட பொது நோக்குடையவை எல்லா ஆயுதங்களும். இதை அறியாதவள் அல்ல நான்.



பிரசவம் வளர்க்கிறேன் தினம் தினம் மண்ணைத் தின்று. மலம், மூத்திரம், உதிரம், விந்து நீர் சவைத்தூறிய மண் சுவைத்துத்தான் என்னுரிமைக்கருவைப் பேணுகிறேன். மண்ணுள் உறங்கும் என் அன்னையர், தந்தையர், மூதாதையர்களின் கொதிப்பான பிரக்ஞையால் என் பாதங்கள் கொப்புளிக்கின்றன. இப்படியாக மண்ணுக்கு அடியில் வேர்கொண்ட ரகசியங்களுடன் நீயறியாத சங்கேதங்களால் என்னால் பேசமுடியும். இது உனக்கு அதிர்ச்சியளிக்கலாம். யோனிக்குள் தம் அனுமதியின்றி நாக்கிறங்கிய அவமானத்தால் நாண்டுகொண்ட எம் தங்கையரும் அங்குதாம் உறங்குகின்றனர் என்பது உனக்குப் புதிய தகவல்.



என் கால்களை பதிந்தழுத்தி நடக்கும்பொழுது எலும்புகள் நொறுங்கும் சப்தங்களைக் கேட்கிறேன். வரலாற்றின் மாளிகைகளுக்குச் சல்லிகளானவை. ஆழம்வரை மண் சுமந்த உடல்பிதுங்கிக் குமிழிடும் உதிரச்சப்தமும். நெருப்புக்கு எரியூட்டப்படாமல் சூரியனுக்கு படுக்கையானவர்கள் உறங்கும் மண். வன்மம் சூப்பிய மாங்கொட்டைகளாய் எறியப்பட்ட யோனிகள் விருட்சங்களாய் எழும்பி நின்று கோடை வானிலையை மாற்றுகின்றன. நினைவுகளின் கைப்பாத்திகளில் நீர்ப்பாய்ச்சி வளர்க்கப்பட்ட மீன்குஞ்சுகளைப் போன்ற முலைகளோ சுடுகின்ற கரைக்கு ஏவப்பட்டதால் கண்விக்கித்து நிற்கின்றன. பாவம், மீன்களாகத் திட்டித்துவிடப்பட்டவை!



மண்ணை உண்டு வளரும் உடலில் பூக்கும் யோனிகளைத் தின்று வளர்கின்றன துப்பாக்கிக் குறிகள். படுத்தும் நின்றும் நிமிர்ந்தும் வான்நோக்கியும் விரைத்த அத்துப்பாக்கிகள் கண்டு கண்மூடிய எமதுடல்கள் மண்ணுக்குள் உறங்காது. உறங்கவே உறங்காது. பாதாளக்குகைகளாய் முனகும் கவிதைகளோ நம் குழந்தைகளுடையவை. பல தலைமுறைக் குழந்தைகள். இதழ்களுக்கிடையே நீவிர் ஆதுரமாய்ப் புகைத்துக் கற்பனைகளை எரிக்கும் சிகரெட் எனக்கென்னவோ யோனியின் மடல்களுக்கிடையே திணிக்கப்படும் துப்பாக்கி முனையையே நினைவூட்டும். இக்காட்சியை மட்டும் நினைவின் மின்னணுப் பலகையிலிருந்து நீக்கமுடிந்தால்...



இம்மண் எனது. உனது என்பதும் எனது. காதலனே, எனதுடலே நான். மண்ணில் வேர்களூன்றி நின்று கைகள் மலர்த்தும் தாவரமும் நான். மண்ணுக்கு மழை வேண்டும். மழையின் கூதிரில் குடைவிரித்து நிற்கும் வானம் நான். மண்ணுக்குச் சூரியன் வேண்டும். ஓயாத ஆலையென்ற எனதுடலால் உரக்கப்பாடும் விடுதலை யான். மண்ணுக்கு நான் வேண்டும். அடுக்கடுக்கான யோனிகளால் தலைமுறை உடலெனும் பூங்கொத்தேந்தி வரும் பெண் யான். உடல் மண்ணுக்கு இல்லை. என்னுடலுக்கே மண்.





குட்டி ரேவதி

மே 15 2010

(இக்கவிதை என் தோழி கோகிலவாணிக்குச் சமர்ப்பணம்)

மகத்தான அனுபவம்










இரவுகள் தாம் மகத்தான அனுபவத்துடன் வருகின்றன. மெலிந்த ஒருவரின் முத்தத்திற்கும் இரையாகாத இவ்வுடலை ஏனோ பெருங்காதலின் கடலில் நீந்தவிடுகின்றன. கனவுகளால் புடைத்த இருள்வெளியில் என் கற்பனைகளும் எல்லையிலாததாக ஆகின்றன. அவனை இதுவரை கண்டிலேன். அங்க அடையாளங்களே அறியாத போதும் உடலை வருடும் தளிரிலைகளாய்... வியர்வையூட்டும் உடலின் நெருக்கடியான இடங்களுக்கு குளிரளிக்கும் மென்மையான காற்றாய்... அவன் நினைவால் நிறையும் மதுக்குடமும் இரவு தான். வேறொரு காதலியை அவன் தீண்டுவானோ என சந்தேகம் கிளைக்காத வெளிநோக்கி மதர்த்தெழுந்து நிற்கிறது காலம். முள்ளடர்ந்த புதர்களாய் கண்கள் ஒன்றையொன்று நெருக்கிக்கொண்டிருக்கின்ற கண்டங்கள் கடந்த ஒரு பார்வையை சொற்களாக்கி இரையும் மின்னஞ்சல். கடலின் நுழைவாயிலில் கட்டப்பட்ட கலமாய் அலைந்து கொண்டிருந்தாலும் கடலுக்குள் பயணிக்காத தாபத்துடன் இரவைக் கடக்கின்றன எம்முடல்கள். வெளிறும் வானத்தைக் கனத்த இமைகளால் பார்க்கையில் வெற்றியின் அர்த்தமின்மைகளால் வெளிறிப்போகும் காலையின் முன் இரவு தன்னை ஒரு மகத்தான அனுபவம் என்கிறது.







குட்டி ரேவதி
நன்றி: ‘எதிர்முனை’ இலக்கியச் சிற்றிதழ்

தெரு விளக்கு







உடலைத் தெருவில் கிடத்திப் பார்ப்பதில் நிபுணன் அவன். எரியும் தெருக்கம்ப விளக்காக்கி அவன் புறப்பட்டுச்சென்றான் வழிநெடுக இருள் பரவ. ஆகவே அவனுடல் தந்த இன்பங்களையும் தொலைக்கமுடியாது அதன் நாவுகள் அந்த இன்பத்திற்கான தாகங்களால் நீள்கின்றன துடிக்கின்றன அலைகின்றன. நல்லவேளை பாறையாக இறுகிய சொற்கள் சில என்னிடமுமுண்டு. அவற்றின் வழியாக வெடித்துக்கொள்கிறேன். என் கண்களின் கிணறுகளில் சுடரும் நிலவை எங்கெங்கும் விரவிநின்ற இருளால் வளரச்செய்த இரவே என் தூக்கத்தால் ஒருபோதும் உன்னை இழக்கமாட்டேன். காதலை ஒரு தீராத நோய்க்கு இழுத்துச் செல்லும் திட்டத்தில் ஆழ்ந்திருக்கிறான் எனக் கண்டதும் என் இமைகள் சேராததாகிவிட்டன. என் உறுப்புகளின் வளர்ச்சியெல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. பொழுதுகளும் ஒன்றோடொன்று கலவாமல் தனித்த கதவுகளுடன் திறந்தன. நிந்திப்பது என்றால் எந்தக் குற்றத்திலிருந்து தொடர்வது யாருடையது முதலின் என்பதும் காலத்தின் கைப்பிடியிலிருந்து மணலைப் போல நழுவி மறைகிறது துல்லியமாக அறியமுடியாமல். பழுத்து வீழ்ந்த பின்னும் இலைகளின் உரத்தால் கால் ஊன்றி நிற்கும் மரத்தைப் போல தினவுற்று இருக்கும் பழையகாலங்களின் நிகழ்வுகள். அடர்ந்து செறிந்த மரங்களால் ஆன காடுபோல தெளிவற்ற வெளி அக்காலம். தெருவிளக்கென எரிந்து கொண்டிருக்கிறது நிலவு பகல் விரிந்த பின்னும்.




குட்டி ரேவதி

நன்றி: எதிர்முனை


வெப்பம்

வெயிலின் தடங்கள் அறைகளாகிச் சுவரறைந்த வீட்டில் இரு வேறு உடல்களாகித் தளும்பினோம். கட்டிலின் கீழ் மெல்லிய அழுத்தம் முனகுவதைச் சுவர்களால் காது பொத்திக் கொண்ட அறைகள். மீனாகி இயங்கினாய். எலும்புகளின் செங்கல்களால் தசைகளைப் பிணைத்தாய். நொறுங்கி அவை இடம்பெயர்ந்து கூவி இறக்கைகளை வீசி வெளியேறின ஜன்னல் வழியே. அறைகளை உடலென்று ஆக்கிய மாளிகை அது. தூண்களைப் பற்றி உத்திரமேறும் பார்வைகளின் தோட்டம். குருவிகள் கூடடைந்த கண்களும் நீருக்குள் பாசிகள் அலையும் குளமும் உனது. பசும்புல்வெளி மூர்ச்சையடைந்து களைத்திருந்த உனது முன்னுடல் எனக்குத் தீரமாகியது. நெஞ்சில் வளர்த்து வந்த என் தாலாட்டுப் பாடல்கள் அங்கே உன்னெஞ்சோடு முனகி அடங்கின. ஊடுருவிய மேகங்களை கோடையின் வெப்பம் உடலாகி இயங்கிய அறைகளின் தோல்மடிப்புகளைச் சுட்டது. சுட்டுக் கொண்டே இருந்தது. மெல்லிய கீறல் வழியாக வழிந்த உனது அருவியின் உக்கிரமோ உச்சி வரை மூழ்கடித்தது. உடலின் சமுத்திரம் தீராத அலைகளால் ஆர்ப்பரிப்பது என்று நீ முன்னமே சொல்லியிருந்ததால் கண்களைக் கலங்களாக்கி என் திசையைச் சேர்ந்தேன்.


குட்டி ரேவதி

நன்றி: உள்ளுறை

நானும் அவளும் வேறுவேறு


இன்று முழுக்க கோடையின் வியர்வையைப் போல அவனைத் தொடர்ந்தேன். அவன் நெற்றியெங்கிலும் துளிர்த்த வியர்வையின் பொன்துகள்கள் என் கண்களில் விழுந்து உறுத்திக்கொண்டே இருந்தன. தன்மீதே கருணையற்ற உழைப்பின் வெக்கை யாக்கையெங்கும் சூரியனாய் எரிந்து கொண்டிருக்கும் இந்நாட்களில் அவன் எனக்கு விந்துவின் நுரையாய் அடையாளம் பெறுவதே இல்லை. அவளின் குடை அவளைப் போன்றோருக்கு மட்டுமே நிழல் விரிக்குமாம். குடை பிடிக்க ஆள் வைத்துக்கொண்ட அதிகாரமும் பெற்றவள். நிழலை விலை பேசும் வேட்கையுடையவளாயும் இருக்கலாம். என் கைகளுக்குக் குடை பிடித்த வரலாறு இல்லை என்பதால் அப்படியானதொரு பொத்தல் குடையையும் தைத்துத் தந்தவனே தான் என் குடையிலும் ஒண்டிக்கொண்டான். சின்ன சின்ன சூரியன்களை சுமக்கத் தெரிந்த வானமாகிய குடையும் மழையின் நாரிழைகளை வியர்வையாக்கிய கோடையும் என்னையும் அவனையும் ஒருங்கே தெருவுக்கு அழைத்து வந்தன. ஒவ்வொரு கோடையும் நடந்து கொண்டே இருக்கிறோம் குடையும் நிழலுமாய்.

குட்டி ரேவதி

தேநீர்க்கோப்பை




கோழிகளின் கழுத்தைத் திருகித் திசையெங்கும் குருதி தெளித்த சடங்கின் பின்பானதொரு நம் அதிகாலையில் அதன் வரலாறு தொடங்குகிறது. முன்னிரவு முழுதும் உறக்கமற்றுப் போன மயக்கம் நிறைந்த கண்களில் சூடேற்றப் பருகப்படும் பானம் அது. கொதிக்கும் வெந்நீரின் தளதளப்பில் இலைகள் சுருண்டெழுந்ததைப் போல இரவு உயிர்கொண்ட வாழ்க்கை நமது. மலையின் கூதிருக்கு அடங்க மறுத்த நம் பெருங்கனவுகள் தாம் அவ்விலைகளுக்கு உதிரம் தந்தன. வெயிலின் ஒளி உத்திரங்கள் சரிந்த குன்றுகளின் மீது வண்ண இறகுகள் புடைத்த பறவைகளைப் போல அதிகாலை ஏகிச் சேர்ந்த நம்மை தேயிலைப் புதர்கள் இடுப்பை அணைத்துக் களித்தன. தளிரிலைகள் பனிப்பொழுதின் உதடுகளாகி நடுங்குவது கண்டு நாம் பதற்றமுற்றோம். மதிய வேளை மலையாகி அசந்தோம் ஆவியெழும் அப்புதர்கள் மீது. வானம் கண்ணில் நிறையவும் மேக மதலைகள் நம் உடல் மீது தவழவும். பருகத் தயாராய் இருக்கும் கொதி தேநீர் தளும்பும் கோப்பையாய் இருந்த மாலையொன்றில் மலையை விட்டிறங்கி பாலிதீன் இரவுக்குள் மீண்டும் குடிபுகுவோம்.


குட்டி ரேவதி

பெருநகரப் பொழுதுகள்




அவனது உடலிலிருந்து ஊறும் மானுடத்திற்கான பேருவகை சொல்லி மாளாதது. ஆகவே தான் அவன் இரவு ஒவ்வொன்றையும் ஒரு பெரு நகரமாக்குகிறேன். தூங்கும் நகரைத் துளாவி வரும் துணிவார்ந்த வாகனங்களில் பாய்கிறேன். ரகசியங்களின் அறைகளைச் சூறையாடுகிறேன். எனது பருவ முதிர்ச்சிகளை அவன் சுவைக்காத போதும் நகரம் விழாக்கோலம் பூண்டு கொண்டேதானிருக்கிறது. சமுத்திரத்தின் கரையில் இருக்கும் அந்நகரம் ஒரு பாய்மரக்கப்பலைப் போல எப்பொழுதும் காத்திருக்கிறது அதிகாலை நீரிறங்கும் பேரவாவுடன். அலைகளைப் பின் தள்ளி தீ கனலும் தொலை தூரப்பரப்பில் நீந்தித் திளைத்திட. பின் அவன் வனப்பையெல்லாம் தொண்டைக்குள் அதக்கிக் கொண்டு கிளர்ந்தெழுகிறது நகரின் இரவு. மின்விளக்குகளின் மங்கிய பிரகாசங்களூடே ஆள்தடமற்ற தார்ச்சலையில் குதிரைச் சப்தங்கள் மட்டுமே கேட்கின்றன. பேருவகையின் பயனாய் பின்னொரு நாள் அணையாத பகலாகி துயிலறுக்கும் போது அவனையும் அப்பெருநகராக்கி ஆளலாம்.




குட்டி ரேவதி

கானகம் உண்ணும் புலி

கானகத்தின் மீது ஏறும் சூரியன் நீட்டிய நிழற் கிளைகளில் உறங்குகிறது கானகப்புலி. கண்கள் தீங்கங்குகளாயும் அதன் நகர்வு நிழல் அலைகளாயும். புலியின் கண்கள் இலைகளாகி இலையின் சருகுகளாகிக் கானகத்துள் புயலாகி இரையும். நிகரற்ற வேட்கையுடன் கானகத்தின் மெளனத்தைக் கலைத்துப் பார்க்கும். அதன் வெளியெங்கும் வெயில் வெறிக்கும் பார்வையுடன் கானலாகிக் காத்திருக்கும். புலி அயராது துரத்தி அடித்துச் சாய்த்த மானைப் போல பகல் மூச்சிளைக்க மடியும். இரவின் முறையில் கானக எல்லை அழியும். இருளடர்ந்த கானகம் புலியாகி நகரும் வேளையே அந்தி என மிருகங்கள் சங்கேதங்களால் பரிமாறிக் கொள்ளும். புதராகி அமர்ந்த பொழுதும் புலியாகி எழுந்த பொழுதும் உயிரின் காற்றழுத்தம் மூச்சடைக்கும். புலி தின்ற கானகம் நான். கானகமாகி நின்ற புலியும் நான்.








குட்டி ரேவதி
நன்றி: ‘கல் குதிரை’

சேவலண்ணன் கதறுகிறார்





சேவலண்ணனுக்கு முட்டையிட்டு அடைகாக்கும் அவசியமுமில்லை : பெட்டையைப்போல் கூடித்திரியும் களிப்பையும் அறியார். பிரக்ஞையின் கூட்டிற்குள்ளிருந்து தினப்படி சாட்டையாலடிக்கும் சேவலண்ணனின் குரல், கனவில் நாவறுந்த கதறலுடையது. முட்டையின் கவர்ச்சியையும் பெட்டையின் விடியல் நோக்கிய வாழ்வையும் பொறாமையாய்க் கழிய மட்டுமே தெரியும். காலைதோறும் வலைத்தளங்களிலெல்லாம் பேதியாய் சேவலின் கழிவு. சேவலின் மகிழ்ச்சியற்ற வார்த்தைகள் சொருகிக்கொண்ட வெளி முட்காடென மாறும். பொழுது மாறிக்கூவும் புட்டத்திமிர் ஒரு வெற்று. ஆகவே முட்டைகளே வீணெண்றும் குஞ்சுகளை புறக்கணித்தும் அலைகின்றன. பொரிகின்றன மின்னொளியில் பிளாஸ்டிக் கோழிகள் ஒரே நிறக்கொண்டையுடனும் உடலுடனும்.


குட்டி ரேவதி

மழைச்சாலை



விரல் நடுக்கத்தில் நரம்பு அதிர மழை அவிழ்கிறது. மழை அறுக்க முயலும் வாகன ஓட்டமோ தெருவில் ஒரு நதியாகப் பாய்கிறது. அதில் கலக்காது மிதக்கும் மின்சார இரத்தம் ஒரு கலவரத்தை எழுப்பாது மயக்கத்தையூட்டுகிறது. என்ன சொல்ல முயன்றும் வார்த்தை அகப்படாத குளிரால் நீரின் கயிறு உடலைக்கட்டுகிறது. ஓங்கி விழுந்த சரடின் அடியை மண்டையில் வாங்கிக்கொண்டு பொறி கலங்கி எழுந்து நடப்பவரே போல் உடலை முன் சாய்த்து சாலையின் மழையை பின்கட்டி இழுத்துச்செல்கின்றனர் பாதசாரிகள். சூனியம் தழுவிய வெயிலின் பருவத்திலிருந்து அடுக்கு சிமெண்ட் மஞ்சரிகளை வானத்தின் கோலாகலம் நோக்கும் மொட்டை மாடிகளாக்குகின்றது. காரை தலைகீழாய் புரட்டும் நீரின் முரட்டுக்கரங்கள் தாம் சைக்கிளின் சக்கரக்கம்பிகளில் கூந்தல்மயிராய் சிக்கிக் கொள்கின்றன. எச்சில் ஒழுகும் கீழுதடுகளுடன் நீருக்கிள்ளிருந்து எழும்பி வருகின்றன எருது வகை வாகனங்கள். வர்க்கம் மறக்கும் பொழுதில் மழை ஒரு சூடான தேனீராய் மாறிவிடும் அழகைக்கொள்கிறது. பின் விடாது வருடிக்கொடுக்கும் ஒரு செல்ல நாயாயிற்று.

குட்டி ரேவதி