நம் குரல்

உடலுக்கே மண்

கூவிக் கூவிப் பெண்ணுடல் விற்கப்படும் தேசத்திலிருந்து வந்தவள் நான். பெண்ணென்ற என் ஒற்றை அடையாள முகமும் உனக்குப் போதாது என்றறிவேன். பிற அடையாளங்களும் உன்னால் வர்ணிக்கப்படுபவை. முலையின் அளவுகோல்கள், யோனியின் புனிதம், சருமத்தின் நிறம், வீடுறையும் தெரு, அப்பாவின் பூர்வீகம், என்னுடைய உடை நகை முரண் எல்லாமும். மண்ணை இயக்கும் துப்பாக்கிகளில் எதை நான் விரும்புகிறேன் என்ற அரசியலும். ‘விரைக்குறிகள்வடிவத்தில் தயாரிக்கப்பட்ட பொது நோக்குடையவை எல்லா ஆயுதங்களும். இதை அறியாதவள் அல்ல நான்.பிரசவம் வளர்க்கிறேன் தினம் தினம் மண்ணைத் தின்று. மலம், மூத்திரம், உதிரம், விந்து நீர் சவைத்தூறிய மண் சுவைத்துத்தான் என்னுரிமைக்கருவைப் பேணுகிறேன். மண்ணுள் உறங்கும் என் அன்னையர், தந்தையர், மூதாதையர்களின் கொதிப்பான பிரக்ஞையால் என் பாதங்கள் கொப்புளிக்கின்றன. இப்படியாக மண்ணுக்கு அடியில் வேர்கொண்ட ரகசியங்களுடன் நீயறியாத சங்கேதங்களால் என்னால் பேசமுடியும். இது உனக்கு அதிர்ச்சியளிக்கலாம். யோனிக்குள் தம் அனுமதியின்றி நாக்கிறங்கிய அவமானத்தால் நாண்டுகொண்ட எம் தங்கையரும் அங்குதாம் உறங்குகின்றனர் என்பது உனக்குப் புதிய தகவல்.என் கால்களை பதிந்தழுத்தி நடக்கும்பொழுது எலும்புகள் நொறுங்கும் சப்தங்களைக் கேட்கிறேன். வரலாற்றின் மாளிகைகளுக்குச் சல்லிகளானவை. ஆழம்வரை மண் சுமந்த உடல்பிதுங்கிக் குமிழிடும் உதிரச்சப்தமும். நெருப்புக்கு எரியூட்டப்படாமல் சூரியனுக்கு படுக்கையானவர்கள் உறங்கும் மண். வன்மம் சூப்பிய மாங்கொட்டைகளாய் எறியப்பட்ட யோனிகள் விருட்சங்களாய் எழும்பி நின்று கோடை வானிலையை மாற்றுகின்றன. நினைவுகளின் கைப்பாத்திகளில் நீர்ப்பாய்ச்சி வளர்க்கப்பட்ட மீன்குஞ்சுகளைப் போன்ற முலைகளோ சுடுகின்ற கரைக்கு ஏவப்பட்டதால் கண்விக்கித்து நிற்கின்றன. பாவம், மீன்களாகத் திட்டித்துவிடப்பட்டவை!மண்ணை உண்டு வளரும் உடலில் பூக்கும் யோனிகளைத் தின்று வளர்கின்றன துப்பாக்கிக் குறிகள். படுத்தும் நின்றும் நிமிர்ந்தும் வான்நோக்கியும் விரைத்த அத்துப்பாக்கிகள் கண்டு கண்மூடிய எமதுடல்கள் மண்ணுக்குள் உறங்காது. உறங்கவே உறங்காது. பாதாளக்குகைகளாய் முனகும் கவிதைகளோ நம் குழந்தைகளுடையவை. பல தலைமுறைக் குழந்தைகள். இதழ்களுக்கிடையே நீவிர் ஆதுரமாய்ப் புகைத்துக் கற்பனைகளை எரிக்கும் சிகரெட் எனக்கென்னவோ யோனியின் மடல்களுக்கிடையே திணிக்கப்படும் துப்பாக்கி முனையையே நினைவூட்டும். இக்காட்சியை மட்டும் நினைவின் மின்னணுப் பலகையிலிருந்து நீக்கமுடிந்தால்...இம்மண் எனது. உனது என்பதும் எனது. காதலனே, எனதுடலே நான். மண்ணில் வேர்களூன்றி நின்று கைகள் மலர்த்தும் தாவரமும் நான். மண்ணுக்கு மழை வேண்டும். மழையின் கூதிரில் குடைவிரித்து நிற்கும் வானம் நான். மண்ணுக்குச் சூரியன் வேண்டும். ஓயாத ஆலையென்ற எனதுடலால் உரக்கப்பாடும் விடுதலை யான். மண்ணுக்கு நான் வேண்டும். அடுக்கடுக்கான யோனிகளால் தலைமுறை உடலெனும் பூங்கொத்தேந்தி வரும் பெண் யான். உடல் மண்ணுக்கு இல்லை. என்னுடலுக்கே மண்.

குட்டி ரேவதி

மே 15 2010

(இக்கவிதை என் தோழி கோகிலவாணிக்குச் சமர்ப்பணம்)

1 கருத்து:

Shangaran சொன்னது…

காத்திரமான ஒரு படைப்பு. உங்கள் வார்த்தைகளின் சீற்றத்தில் வன்முறை வெட்கித் தலைகுனியட்டம்.

~Shangaran~