நம் குரல்

மகத்தான அனுபவம்


இரவுகள் தாம் மகத்தான அனுபவத்துடன் வருகின்றன. மெலிந்த ஒருவரின் முத்தத்திற்கும் இரையாகாத இவ்வுடலை ஏனோ பெருங்காதலின் கடலில் நீந்தவிடுகின்றன. கனவுகளால் புடைத்த இருள்வெளியில் என் கற்பனைகளும் எல்லையிலாததாக ஆகின்றன. அவனை இதுவரை கண்டிலேன். அங்க அடையாளங்களே அறியாத போதும் உடலை வருடும் தளிரிலைகளாய்... வியர்வையூட்டும் உடலின் நெருக்கடியான இடங்களுக்கு குளிரளிக்கும் மென்மையான காற்றாய்... அவன் நினைவால் நிறையும் மதுக்குடமும் இரவு தான். வேறொரு காதலியை அவன் தீண்டுவானோ என சந்தேகம் கிளைக்காத வெளிநோக்கி மதர்த்தெழுந்து நிற்கிறது காலம். முள்ளடர்ந்த புதர்களாய் கண்கள் ஒன்றையொன்று நெருக்கிக்கொண்டிருக்கின்ற கண்டங்கள் கடந்த ஒரு பார்வையை சொற்களாக்கி இரையும் மின்னஞ்சல். கடலின் நுழைவாயிலில் கட்டப்பட்ட கலமாய் அலைந்து கொண்டிருந்தாலும் கடலுக்குள் பயணிக்காத தாபத்துடன் இரவைக் கடக்கின்றன எம்முடல்கள். வெளிறும் வானத்தைக் கனத்த இமைகளால் பார்க்கையில் வெற்றியின் அர்த்தமின்மைகளால் வெளிறிப்போகும் காலையின் முன் இரவு தன்னை ஒரு மகத்தான அனுபவம் என்கிறது.குட்டி ரேவதி
நன்றி: ‘எதிர்முனை’ இலக்கியச் சிற்றிதழ்

3 கருத்துகள்:

கு. முத்துக்குமார் சொன்னது…

வெளிறும் வானத்தைக் கனத்த இமைகளால் பார்க்கையில் வெற்றியின் அர்த்தமின்மைகளால் வெளிறிப்போகும் காலையின் முன் இரவு தன்னை ஒரு மகத்தான அனுபவம் என்கிறது.

உண்மைதான்

இரவின் இருளே வெளிச்சம்

கு. முத்துக்குமார்

Muruganandan M.K. சொன்னது…

"சந்தேகம் கிளைக்காத வெளிநோக்கி மதர்த்தெழுந்து நிற்கிறது காலம்."
தமிழின் அழகு ஒவ்வொரு வரியிலும்...

குட்டி ரேவதி சொன்னது…

நண்பர் கு. முத்துக்குமாருக்கும் Dr.எம்.கே. முருகானந்தனுக்கும் என் நன்றிகள்!