நம் குரல்

புத்தகம் பேசுது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தகம் பேசுது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புத்தகங்கள் இன்னும் என்னை எங்கே அழைத்துச் செல்லப் போகின்றன?










புத்தகங்கள் நம்முடன் வாழ்வது என்று முடிவெடுத்துவிட்டால், அவை நம் இளம்பருவத்திலேயே நம்மைத் தொற்றிக் கொள்கின்றன என்று தான் நினைக்கிறேன். சாருண்ணிகளைப் போல நம்முடனேயே வாழ்வதில் அவை கொள்ளும் அதே களிப்பைத் தான் நானும் அடைந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். புத்தகங்கள், அறிவுஜீவித்தனம் மிக்க உயிரிகள். இன்னும் சொல்லப்போனால், மனித அறிவுஜீவிகளைப்போல் அல்லாமல் தான் எத்தகையதொரு வாக்குமூலங்களை சொல்கின்றனவோ அதிலிருந்து நழுவாமல், சமரசம் கொள்ளாமல் எப்பொழுதும் தம் நிலைப்பாட்டில் ஒற்றைக் காலில் நிற்கக்கூடியன.





என்னுடைய வாழ்க்கையிலும், எல்லோருக்கும் போலவே, அழுக்கடைந்த தெருநாய்க் குட்டிகளைப் போலவோ, அல்லது எவரோ நழுவ விட்ட காதல் கடிதத்தைப் போலவோ என்னை வந்து சேர்ந்திருக்கின்றன சில புத்தகங்கள். ஆனால், அவை வந்து சேரும் போதே ஓர் உறவின் அடித்தளத்தை என்னுள் அமைக்கும் அத்தனை ஏற்பாடுகளுடனும் தான் வந்து சேர்ந்திருக்கின்றன என்று நினைக்கிறேன். யாரோ ஒருவர் உங்களிடம் ஒரு புத்தகத்தைப் பற்றி விசாரிக்கலாம்! நீங்கள் சற்றும் எதிர்பாராத ஒரு கணத்தில் உங்களுக்கு ஒரு நூலைப் பரிசளிக்கலாம்! அல்லது, நீங்கள் நீண்ட நாளாக படிக்க விரும்பி, வாங்கும் வழியின்றி தவித்த நூல் உங்கள் கைக்கெட்டும் தூரத்தில் இருக்க நீங்கள் திருடியெடுத்து, உங்கள் பைக்குள் திணிக்க, அந்தக் குட்டிநாய்க் கத்தி குரல் காட்டிவிடக்கூடாதே என்ற பதைபதைப்புடன் நீங்கள் அள்ளிவரலாம்! முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை படித்தப் பின்னும், அதை உங்கள் கைப்பையிலிருந்து இறக்கமுடியாமல், பிரிய முடியாமல் ஒரு காமத்தை உங்கள் சுவாசத்திற்கு தொடர்ந்து அளித்துக் கொண்டே இருக்கலாம்! எந்த ஒரு நூலுமே வாழ்க்கைக்குள் நுழையும் போது, ஓர் உறவின் சீரிய தொடக்கத்தை நிகழ்த்தவே வருகின்றன என்பதை உணர, இன்றைய என் வயதொத்த ஆயுள் பிடித்திருக்கிறது!





நட்பில் பெருத்த நம்பிக்கை இன்று வரை ஏற்படவில்லை. காரணம், எதனுடனான தன் ஒப்பந்தத்தையும் எளிய சமரசங்களால் நண்பர்கள் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றபடிக் கலைத்துவிடுவது தான்! தன் சமரசமின்மையால், நம் நெஞ்சுக்குள், தம் உறவின் வழியாக நெருப்பில் தகிக்கும் ஓர் இரும்புக்கம்பியை, ஆழமாகப் பாய்ச்சும் தகுதி உள்ளவர்கள் தாம் நண்பர்கள் என்பது என் இலக்கணம்! ஆனால், புத்தகங்கள் கூட்டி வரும் மனிதர்கள், நம் மன இடுக்குகளில் ஓர் ஆலமரத்தின் விதையை எச்சமாய் இட்டுச்செல்கிறார்கள். பின் நீங்கள், அவர்கள் கொண்டு வந்த சாபமூறிய அந்தப் புத்தகங்கள் விரும்பிய ஆலமரத்தை உங்களுக்குள் சுமந்தபடி வளர்ப்பதற்குத் தயாராகிவிடுகிறீர்கள்!





நானும் என் நண்பரும், சென்னை வந்து இது வரை பத்து வீடுகளுக்கு மேல் எங்கள் புத்தகங்களைச் சுமந்து இடம்மாறியிருக்கிறோம்! ஒவ்வொரு முறை, வீடு மாறும்போது, அந்தப் புத்தகங்கள் மலைப்பையும் திகைப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன! எங்களின் ’எட்டுத் திக்கிலும் மதர்த்து எழுந்து நின்று’ (தேவதேவனின் வரி), அவை அமானுஷ்யமாய் எழுந்து நிற்கும் அந்தத் தருணங்களில், வீடுமுழுக்க அவை இறைந்து கிடக்கையில் மனம் கொள்ளும் பேதலிப்பு எந்த இலக்கியத்திலும் இடம் பெற்றிருக்கிறதா என்று தெரியவில்லை!





என் நண்பருக்கு, ஓர் அசாதாராண திறன் இருக்கிறது. எல்லா நூல்களையும் வகைப்படுத்தி அடுக்கி வைப்பதுடன், அவர் வெளியூர் சென்றிருக்கும் நாட்களிலோ அல்லது, வீட்டிற்கு வெளியே இருக்கும்போதோ ஒரு நூல் அவசரமாகத் தேவைப்பட்டால், எந்த அடுக்கில், எந்த வரிசையில் எந்த நிற அட்டையுடன், என்ன தன்மையான அட்டையுடன் அது இருக்கிறது என்பது வரை அவரால் சொல்லிவிடமுடியும்! நாங்கள் விரும்பிப் படித்த நூல்கள் மட்டுமே எங்கள் அறைகளில் நிறைந்திருக்கும்! அல்லாத நூல்களை, உடனே குப்பைத் தொட்டிகளில் போட அவரோ நானோ தயங்கியதே இல்லை! இது கூட, அவரின் நினைவுத்திறனுக்கு ஒரு காரணம்! அம்மாதிரியாக அடுக்கப்பட்ட நூல்களில், நீங்கள் தேடும் நூலை விரும்பும் போது உருவி எடுத்துப் படித்து, மகிழும் சுகம் போல் வேறேதும் இல்லை! இல்லையென்றால், இந்த சென்னை வாழ்க்கையில் என்னால் நிச்சயமாக இவ்வளவு கூட எழுதியிருக்க முடியாது என்பதே என் அபிப்ராயம்.





நல்ல புத்தகங்கள் என் வாழ்க்கையில் காதலைக் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன. புதிய உறவுக் கண்ணிகளை ஏற்படுத்துவதில் மூர்க்கமாய் பிடிவாதமாய் இருந்திருக்கின்றன. நூல்கள் பற்றிய கவிதைகள் என் தொகுப்புகளில் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டேயும் இருக்கின்றன! அவை, மழை நாள்களில் என் நூல்கள் கொள்ளும் குளிரையும் விறைப்பையும் குறித்த கவலையாகவே பெரும்பாலும் இருக்கும்! சென்னை போன்றதொரு நகரத்தில், நூலைப் பாதுகாக்கும் கவலை நம் எல்லாவிதமான இயல்புகளையும் புரட்டிப்போட்டுவிடுகிறது. புத்தகங்களின் மீதான கையாட்சியை, உடைமை அதிகாரத்தைப் பேணுவதே ஒரு மனநோய் தான் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை!




ஒவ்வொரு நூலும் அடர்த்தியான சிந்தனையின் எழுச்சியை மூச்சாய்க் கொண்டு அவ்விடம் உறைந்திருக்கின்றன. ஒவ்வொரு நூலும், அல்லது ஒரு குறிப்பிட்ட சிந்தனை அல்லது இயக்கம் சார்ந்த  சிந்தனைகளில் தீவிரமாய் உழலும்போது, அந்தக் குறிப்பிட்ட சிந்தனையை வலுவூட்டி மேற்கொண்டு நான் கயிறு பிடித்து ஏறும்படியான துணிவைத் தந்த நூல்கள் ஏராளம். இன்றும் அவற்றை, என் காதலனை நேசிப்பது போலவே நேசிக்கிறேன். இன்று தனிமனிதராய்க் கடந்து வந்த தூரத்தையும், ஏறிவந்த துயரமான மலைகளையும் திரும்பிப் பார்க்கையில் புத்தகங்கள் தாம் அவற்றைக் கடக்கக் கைப்பிடித்துக் கூட்டி வந்திருக்கின்றன என்பதை இப்போது உணரமுடிகிறது.



இந்தப் புத்தகங்கள் இன்னும் என்னை எங்கே அழைத்துச் செல்லப்போகின்றன என்ற ஆவலுடனும் புதிர்த்தன்மை நிறைந்த எதிர்பார்ப்புடனும் காத்திருக்கிறேன். வேறு எந்தத் திசையில் சென்றிருந்தாலும், நான் விரும்பாத என்னை அது உருவாக்கியிருக்கலாம்! அப்படி நூல்களிலிருந்து விலகிச் சென்றோர் அடைந்த திசைகள் அவர்களைக் கொடுமையான தனிமைக்கும், வாழ்க்கையின் சிறைக்கும் பழிவாங்கலின் வன்மத்திற்கும் கொண்டு சேர்த்திருக்கும் பட்சத்தில், அவர்களுக்குத் தேவையானதொரு நூல் கிடைத்திருப்பின் அவர்கள் இந்தக் கொடுஞ்சிறைகளிலிருந்தெல்லாம் வெளியே வந்திருக்கமுடியும் இல்லையா? ஒரு நண்பனை விட, உற்ற உறவாய் நூல்கள் ஆற்றுகின்ற பணியை வேறெவரும் செய்வதில்லை.






குட்டி ரேவதி


நன்றி: ’புத்தகம் பேசுது’

முதல் பிரவேசம் - 'கவிதையின் ஒற்றைக்கயிறு'






எழுத்துலகிற்குள் முதல் பிரவேசம் என்பது, முதல் தொகுப்பை வெளியிட்டதாக இருக்கமுடியாது. முதல் படைப்பு பெற்ற பிரசுரமாகத்தான் இருக்கமுடியும் என்று தோன்றுகிறது. ஏனெனில், தொகுப்புகளாய்ப் பதிப்பிப்பது என்பது சமீப காலங்களில் எவ்வளவு அதிகாரமும் வியாபாரமும் சார்ந்தது என்பதை நான் தெள்ளத்தெளிவாகவே உணர்ந்திருக்கிறேன். அதிலும், கவிதையை நூலாக வெளியிடுவதற்கும், அதை வைத்துத் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்வதற்குமென  நிறைய உத்திகளை எழுத்தாளர் கையாளவேண்டியது இருக்கலாம். அது ஒரு படைப்பாளியின் மனநிலைக்கு ஆரோக்கியமானது இல்லையே!






திருநெல்வேலியில், என்னுடைய கல்லூரிப்பருவம் அது. பாளையங்கோட்டையில், ஜங்ஷனில், டவுனில், ஹைகிரவுண்டில் என்று  இலக்கியம் தொடர்பான நிகழ்வுகள் எப்பொழுதும் ஏதேனும் நிகழ்ந்து கொண்டே இருக்கும். நான் வெறும் பார்வையாளராக மட்டுமே தொடர்ந்து
வனம்’ கவிதைத் தொகுப்பிற்கான திறனாய்வுக் கூட்டமொன்று சிறு  மொட்டைமாடிக் கூட்டமாய் நிகழ்ந்தது. அதில் முதல் முறையாக அந்நூலைப் பற்றிய சிறு கட்டுரையை எழுதி வாசித்தேன். இப்படியாகத் தான் கவிதையினுடான என் முடிச்சு விழுந்தது.






அத்தொகுப்பு, என் மொழியின் வெளி தேடி என்னை எனக்குள்ளேயே வேகமாய் உந்தித்தள்ளியது. கவிதை பற்றி அதுவரை இருந்த மதிப்பீடுகளை சிதிலம் செய்ததில் முக்கியமான பங்கை ஆற்றிய தொகுப்பு அது. அவரவர்க்கான மொழி உலகின் கதவுகள் வேறு வேறு என்பதை வெளிச்சப்படுத்திய தொகுப்பு. எழுதத்தொடங்கினேன். அப்பொழுது நான் பயின்று கொண்டிருந்த சித்தமருத்துவத்தின் பாடநூல்கள் எல்லாமும் வளமான சித்தர்கள் மொழியும் கருத்தும் ஊன்றிய நவீனக் கவிதையின் இன்னொரு செய்யுள் வடிவமாக விளங்கியதால், அதன் சொற்களும் கிளைச்சொற்களும் என்னுள் வேரூன்றின. தீவிரமாக எழுதத் தொடங்கினேன்.






அப்பொழுது ‘புது விசை’ இதழின் ஆசிரியராக இருந்த நண்பர், ச.தமிழ்ச்செல்வன், அவ்விதழுக்குச் சில கவிதைகள் அனுப்பும்படிக் கூறினார். அவ்விதழில் கொத்தாக என் கவிதைகள் பிரசுரமாயின. இன்றும் அவ்விதழின் அகண்ட பக்கங்களில் வெளியாகி இருந்த கவிதைகள் கண்களில் நினைவின் எழுச்சிகளாக எழுந்து நிற்கின்றன. அதையே எனக்கான முதன்மையான அங்கீகாரமாகக் கருதுகிறேன். அதற்குப் பின்பு, அங்கீகாரம் என்பது பெரும்பாலும் சுய மனித அதிகாரத்தினுடன்  தொடர்புடையதாக மாறிவிட்டதால் அதன் பின்பாக நிகழ்ந்த எதையுமே நான் அங்கீகாரமாகவோ நினைவு வைத்துக்கொள்வதற்கான விஷயமாகவோ கருதவில்லை.






முதல் தொகுப்பு என்பது எப்படி நிகழ்ந்தது என்பதை விட முதல் கவிதை பிரசுரம் தான் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் எழுதும் மனதிற்கு வீசமுடியும். கவிதை இலக்கியம் என்பது எந்த ஒரு சமூகத்திலுமே ஊசலாடும் ஓர் ஒற்றைக் கயிறு என்பதை நான் எழுத முயற்சித்த தொடக்கக் காலங்களிலேயே உணர்ந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது  மிகவும் முக்கியமான விஷயம். இந்தப் புரிதல் எந்தவோர் அதிகாரத்திற்கும் எதிரான திசையிலேயே என்னை பயணிக்கத் தூண்டியது.   அம்மாதிரியான ஆளுமைகளையே  நான் தொடர்ந்து சந்தித்தேன். அவர்களுடைய படைப்புகளையே தேடிப்படித்தேன். அதற்குப் பின்பு மலிவான, ரசம் குறைந்த படைப்புகளின் மீதான நாட்டம் குறைந்தது. இன்னும் சொல்லப்போனால், முற்றுமாகத் துண்டிக்கப்பட்டது. இந்த விஷயம் தான்,  சிற்றிதழ் வெளியில் தொடர்ந்து இயங்குவதற்கான ஆரோக்கியத்தை இன்றும் எனக்குக் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். மைய நீரோட்டத்திலிருந்தும், விளம்பரக்கூடாரங்களிலிருந்தும் என்னை விலகி நிற்கவும் சொல்கிறது!




கவிதை என்பது வரிகளாலான ஒற்றைக் கயிறு. அது ஒவ்வொருக்கும் ஒவ்வொரு மாதிரி திரிந்து திரிந்து முறுகி உருவாகிறது. அது அவரவர் இரத்தத்தாலும் உணர்ச்சிகளாலும் அவர்கள் பிறந்து வந்த சமூகச் சூழலாலும் வளர்க்கப்பட்ட முறைகளாலும் குழந்தைப்பருவ நினைவுகளாலும் ஆனதொரு கலவையாகத் தான் ஆகிவருகிறது. என்றாலும் அதன் மலினங்களைத் தன்னைத் தானே உதறிச் சிதறி, விட்டு விலகி, முறுக்கேற்றிக் கொள்வது மிக மிக அவசியமென பிரமிள் போன்ற படைப்பாளிகளின் படைப்புகளுக்கும், அவரைப்பற்றிக் கேள்விப்படும், நிரூபிக்கப்படும்  விடயங்களுக்கும் உள்ள இடைவெளி உணர்த்தியது.






நான் எழுத வந்தபொழுது, புனைவு எழுதுவதில் அம்பை தீவிரமான ஒரு படைப்பாளியாகவும் பெண்களின் மன எழுச்சிக்கு உகந்தவராகவும் இருந்தார். அவர் தவிர, சில பெண்கள் புதுக்கவிதையின் பொதுவெளியில் ஆண்களுடன் மல்லுக்கட்டிக்கொண்டு இருந்தனர். அது, நவீன இலக்கியத்தின் ‘செவ்விலக்கியக் காலக்கட்டம்’ போல வரைமுறையற்ற கடும் விதிகள் எழுத்திலும், உரையாடல்களுக்கு இடையேயும், வெளியேயும் இருந்து கொண்டே இருந்தன. ஆனால், என்னை ஈர்த்த படைப்பாளிகள்  எல்லோருமே, சமூகத்தின் ஒப்பனைகளைச் சூடிக் கொள்ள மறுத்தவர்களாக இருந்தனர். தங்களை விளம்பரக்கண்ணாடிகளால் எதிரொளிக்க விரும்பாதவர்களாக இருந்தனர்.





அவர்கள் தாம் பிறந்து வந்த குடும்ப மூலம், சாதி, பிறந்து வந்த பால்நிலை, இதன் அடையாளங்கள் இவற்றைத் துறந்தவர்கள். அல்லது, துறக்கத்தீவிரமான முயற்சியையும் பயிற்சியையும் எடுத்தவர்கள்.  பிறப்பு அடிப்படையிலான எல்லா அடையாளங்களையும் எழுத்தின் கயிறு, நம்மையே தன் சாட்டையால் அடித்து அடித்து தோல் உரித்துக் கொள்ளச் செய்யவேண்டும். இந்தச் செயல்முறைகளில் ஈடுபட்ட, தொடர்ந்து ஈடுபட்ட படைப்பாளிகளின் படைப்புகளைத் தேடித்தேடித் தின்றேன் என்று தான் சொல்லவேண்டும். படைப்பாளிகளின் இந்தச் செயல்முறை, அவர்கள் பிறந்து வந்த குடும்பம், பெற்றோர், சாதி, பால் நிலை, மன இயல்பு, சுபாவம் எல்லாவற்றிலிருந்தும் படைப்பாளியைப் பிரித்து அறுத்து வருவதாகவும், கசடுகளாலான மனித வாழ்க்கையிலிருந்து எவரையும் உய்யச் செய்வதான மன எழுச்சியைத் தன்னகத்தே  பெருக்குவதாகவும் இருக்கிறது. இதுவே கவிதையின் ஒற்றைக் கயிறு மீது என்னையும் தொடர்ந்து தலைநிமிர்ந்து நடக்கத் தூண்டுகிறது, ஒரு கழைக்கூத்தாடியைப் போல்!







குட்டி ரேவதி


நன்றி: புத்தகம் பேசுது