நம் குரல்

உடலை மொழியும் மரபு - 4



பெண்ணின் பாலியல் மொழி

உடலை மொழிதல் என்பது கரைவெட்டும் வேலையாக ஆகிவிட்டதோ என்று சிந்திக்கும் விதமாக பல நிகழ்வுகள் தமிழ்த்தளத்தில் நடந்தேறிவிட்டன. வாய்க்காலுக்கு சீராக நீர் கொண்டு செல்லும் மடையை வெட்டிக் கலைப்பதில் கிளுகிளுப்பும் அதிகாரப்பேரமும் நிறைந்திருந்தாலும் ரசிக்க ஏற்றதன்று. உடலை மொழிதல் புதிதும் அன்று. இலக்கிய வரலாற்றின் சரடைப் பிடித்து ஏறினால் அத்தகைய உடலை மொழிதல் என்பது எந்தக் காலத்திலும் துண்டிக்கப்படாமல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அது சுட்டிக்காட்டிய உடல் அசைவுகளும் அதற்கான சமூக இயக்கங்களும் தாம் வேறானவை. உடல் இன்று தோன்றியதில்லை. அதிலும் பெண்ணுடல் சொல்லுக்கும் மொழிக்கும் புதியதன்று. ஆனால் உடலென்பதை வெறும் சொல்லாகவும் மொழியாகவும் மட்டுமே பார்க்கப்படுவதில் நிறைய ஆபத்துகள் பெண் இனத்திற்கே இருக்கின்றன.


மரபுடன் இணைய முடியா கவிஞர்கள் தனிமையில் வாடுவதாய் எனக்குத் தோன்றும். ஆயிரமாயிரம் ஆண்டுகள் கவிதை மரபில் தன்னை இணைக்க முடியாமல் போவது என்பது ஓர் அறியாமையாகவும் அல்லது அப்படி இணைவதை மறுப்பதை விடுதலையாகவும் எண்ணுவது என்பது துணிவின்மையாகவும் தோன்றும். அது ஒரு நீளமான வெள்ளம் பெருக்கெடுக்கும் ஆறு. அதை முழு வீச்சுடன் நீச்சலடித்துக் கடந்து செல்லத் தேவைப்படும் பலம் என்பது சாதாரணமானது அன்று. மரபு என்பது யாப்பையும் வார்த்தைகளையும் கயிறு கட்டி இழுக்கும் மாய வித்தை மட்டுமே அன்று. காலந்தோறும் மானுடவாழ்க்கைக்கான விடுதலையை உய்த்தறிவதற்கான தனிச்சிறப்புமிக்க, முழுமையான வழியையும் அதற்கான வேட்கையையும் சுமந்து வருவது.


இன்றைய தேதியில் வகுப்புகளெடுப்பதற்காக பலமுறையும் எனக்கான அந்தரங்க ஊக்கத்தைப் பெறுவதற்காகவும் கவிதையின் வழியே பின்னோக்கிப் பயணிக்கும் வாய்ப்புகளை எடுத்துக்கொண்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் உடலை மொழிதல் என்பது பலருடைய கவிதைகளில் ஆண்-பெண் என்ற பேதமின்றி ஒரு பொதுவான வினையாகவே இருந்திருக்கிறது. அதற்கான இயல்பூக்கத்தை அவர்கள் புவியியலாலும் வரலாற்றாலும் ஏன் மொழியாலும் ஒன்றுபட்ட நம் இனத்தின் இரத்த ஓட்டத்திலிருந்தே பெற்றிருக்கவேண்டும். அதாவது இந்தக் குறிப்பிட்ட இனத்திற்கான பொதுமையான உணர்வுக் குவியல் என்ன என்பதை அந்தக் கவிதைக்குரல் தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்கிறது. தூய தமிழினம் என்ற அர்த்தத்தில் இதை நான் சொல்லவில்லை. அதை மீறியும் மொழியின் செழுமை வேர்விட்ட சிந்தனையிலும் அது மலர்த்திய உணர்ச்சிகளிலும் வெடித்த கவிதைகளின் வெள்ளப் பெருக்கு நம்மை ஈர்க்கிறது. அதனுள் பாய்ந்து குதித்து நீச்சலடிக்கத் தூண்டினாலும் நீருக்குள் விழுந்த பின்னர் மூச்சடக்கிச் செத்துப் போய்விடக்கூடாதே என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை.


உடலுடன் நெய்யப்பட்ட வார்த்தைகளை கவிதையாக்கிய பெருவெளியே நவீன தமிழ்க் கவிதையினது. உடலைக் கட்டிப்போட்ட சிந்தனைகளை மறுத்ததும் விட்டு விடுதலையாகிப் பறத்தலை ஊக்குவித்ததும். உடலை மையமாகச் சுழன்று வரும் கவிதைச் சுனை தான் நமது. இந்நிலையில் பாலிமை நறுக்கப்பட்ட பெண்ணுடலின் யோனி என்பது ஒரு பரந்த பிரதேசத்தைப் போன்றது. அதை ஒரு சிறு வார்த்தைக்குள் அடக்கமுடியாத படிக்கு வீறு கொண்ட எல்லைகளற்ற முள்வேலிகளற்ற வெளியாகப் பார்க்கலாம். அதை இன்னார் இன்னாருக்கென்ற அரசியலாக்கியதும் முகாந்திரங்களாக்கியதும் தாம் அது இறுக்கமாய்ச் சுருண்டு ஒரு தென்னங்காயாக்கிக் கொண்டது தன்னை. பின் நாயின் கையில் சிக்கிய தென்னம்பழம்! ஓடும் உடைக்கப்படாமல் கொப்பரையும் சுவைக்கப்படாமல்.


பொருளுக்கு வருவோம். இன்றும் என்னைக் காண வரும் நோயாளிகளிடம் நான் கூறுவதுண்டு. எந்த ஒரு பெண்ணும் தன் பாலுறுப்புகளை ஆரோக்கியமாகப் பேணுதல் வேண்டும் என்பது. ஒரு பெண்ணின் நெஞ்சுரமும் சிந்தனைத் தெளிவும் காதலும் கவின்திறனும் அவள் உடலில் பாயும் இயக்கு நீர் அல்லது நாளமில்லாச் சுரப்பிகளின் நொதிகளின் சீர்மையால் தாம். ஆனால் அப்படியான அறிவையும் அதைப் பெறுவதற்கான வாய்ப்பையும் அத்தகைய அறிவுநூல்களை வாசிக்க வாய்ப்புகள் அதிகம் கொண்ட பெண் மருத்துவர்களிடம் கூட நான் கண்டதில்லை. உடல், பாலிமை, கலவி போன்றவை பற்றிய கருத்தியல் வெளிப்பாடும் அவற்றின் ஆரோக்கியமின்மையும் அவரவர் உடல்நிலை பொருத்து வெளிப்படுகிறது என்பது மறுக்க முடியாதது. அதற்கான மருத்துவ முறைகளுக்கான வாய்ப்பும் வசதிகளும் அற்றது நமது தேசம். உடல் என்பது எங்குமே பெண்ணுக்குப் பேச்சுப் பொருள் அல்ல. அது ஓர் உயர்திணை விஷயமுமல்ல. இந்நிலையில் உடலை மொழிதல் என்பது கயிற்றில் நடப்பது போன்றது. கயிறு கட்டப்பட்டிருக்கும் முனைகளின் பலம் அறியாமல் நடக்கும் போது வெறும் சாகசமாகவே முடிந்து விடலாம்.


ஒவ்வொரு சொல்லும் சமூக அசைவுக்கான நெம்புகோலாக மாறியிருப்பதை சமூகவியலுக்குள் நுழைபவர்களால் உணரமுடியும். அப்படி மாற முடியாத சொற்கள் ஆணாதிக்க விட்டத்தில் நூலாம்படைகளைப் போல இன்னமும் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அப்படியான சில நூறு சொற்கள் சித்தர் தத்துவக் கலைக் களஞ்சியத்திலேயே இருக்கின்றன. அரும்பொருள் சொற்கள் அவை. உடலின் புதிர்களையும் அவற்றை விடுவிக்கும் பதங்களையும் ஒரே சொல்லில் கொண்டாளுபவை. இதே போல சங்க இலக்கியத்தில் உலவிய சொற்களுண்டு. பின் அவை காலம்காலந்தோறும் மழுங்கடிக்கப்படும் மனிதச் செயல்பாடுகளால் திறமிழந்து செத்து மடிந்தன. சமயம் வாய்க்கும் பொழுது அப்படியான சொற்களை உங்களின் பார்வைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறேன்.


குட்டி ரேவதி

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

”உடலில் பாயும் நாளமில்லாச் சுரப்பிகளின் நொதிகளின் சீர்மை” , எவ்வாறு பெண்ணின் உணர்வு பூர்வ வெளிப்பாடுகளைச் செதுக்கிகிறது என்ற விடயம் அபூர்வமான ஓர் அறிவுண்மை. அதுமாத்திரமன்றி, அது அவளுக்கு அழகையும், பூரிப்பையும் யாக்குமா என்ற கேள்வியும் மனதுள் எழுகிறது.