நம் குரல்

பெண்ணின் கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்ணின் கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பானுமதியின் உடைமை

முதல் சந்திப்பிலேயே என் கைகளை வந்து கோர்த்துக்கொண்டாள் பானுமதி. ஒரு வெளியூர்ப் பயணத்தின் போது தன் நண்பர் குழுவினருடன் வால்பாறை வந்திருந்தாள். அது எனக்குப் பணி நிமித்தமான பயணம் என்பதால் அவளிடம் நிறைய நேரம் செலவிட முடியவில்லை. மழை தூறத் தொடங்கியதும் நான் புகைப்படக் கருவிகளை அணைத்ததும் மீண்டும் என் அருகில் வந்து பேசத் தொடங்கினாள். அவள் கண்களில் இடையறாத ஒரு குறுகுறுப்பு ஒளிர்ந்து கொண்டேயிருந்தது கருத்த அவளின் தேகத்திற்கு பொலிவும் களையும் சேர்த்துக் கொண்டிருந்தது. ஜீன்ஸ் உடை அவளின் பெருத்த உடலுக்குச் சற்று பொருத்தமின்றி இருந்தாலும் தன் நடை மற்றும் பாவனைகளால் அந்த உடையைத் தனக்குப் பொருத்தமாக்கிக் கொண்டிருந்தாள்.


பொது இடங்களில் ஆண்கள் என்னை வசீகரிப்பதே இல்லை. மாறாக பெண்களின் உடல் மொழிகள் அவர்களின் குணச்சித்திரத்தை எடுத்து இயம்புபவையாக உள்ளன. சிறுமிகளோ கிழவிகளோ இச்சமூகம் தரும் தொடர்ந்த நெருக்கடியில் அவர்களின் இருப்பைப் பாந்தமாக வடிவமைத்துக் கொள்கின்றனர் என்று தோன்றும். அதிலும் அடித்தட்டுப் பெண்களுக்கு இது இன்னும் சவாலாக இருப்பதால் அவர்களின் குணச்சித்திரங்கள் எடுப்பானவையாகவும் கதைத்தன்மையும் புதிர்வெளிகளும் நிறைந்தவையாகவும் இருக்கின்றன. அவர்களின் மொழியும் அவற்றைத் துல்லியமாய் எடுத்தியம்பும் அழகும் ஈடுயிணையில்லாததாக இருக்கின்றன. பானுமதி, நான் நின்று கொண்டிருந்த தாழ்வாரத்திற்கு எதிர்த்திசையிலிருந்து சில கனத்த துளிகள் அவள் தலையை நனைக்க வந்து சேர்ந்தாள்.


‘ஒங்களுக்கு ஆட்சேபணையில்லன்னா ஒரு சிகரெடி பிடிச்சுக்கிறேனே?என்றாள். என் புன்னகையை அவள் நன்றியாக்கிப் புகைக்கத் தொடங்கினாள். சில நீண்ட நிமிடங்கள் இருவருமே பேசாமல் நின்று மழையின் சலசலப்பை அவதானிக்கத் தொடங்கியிருந்தோம். என்னை அடையாளம் கண்ட நிமிடத்திலிருந்து அவளிடம் தென்பட்ட ஒன்று, அவள் என்னிடம் சொல்ல விரும்பியதைச் சொல்லும் வரை என்னை விட்டு விலக மாட்டாள் என்று தோன்றியது. மழை சிறு தூறலாகியதும், புகைப்படக்கருவிகள் இன்ன பிற பொருட்களைப் பாதுகாக்க விரும்பி நாங்கள் தங்கியிருந்த விடுதிக்குத் திரும்பினோம். சில மீட்டர் தூரத்தில் தான் அறைகள் இருந்தன. பானுமதி, ‘நானும் ஒங்ககூட வருகிறேனே’, என்று கூறிவிட்டு எதிர்த்திசையில் அவளுக்காகக் காத்திருந்த தன் நண்பர்களுக்குக் கையசைத்து விட்டு என்னுடன் அறைக்கு ஓடிவந்தாள். அறையைச் சேரும் முன்னேயே மழை வலுத்திருந்தது.


என் தனித்த அறையில் ஆளுயர கண்ணாடி இருந்தது. அறையில் நுழைந்ததுமே அவளை அந்தக் கண்ணாடி ஆட்கொண்டது என்று தான் சொல்ல வேண்டும்.அந்த அறையில் அவளுடைய அசைவுகள் எல்லாமே அந்தக் கண்ணாடியைக் கருத்தில் கொண்டும் கனவில் கொண்டும்தாமிருந்தன. நான் உடைமாற்றிக் கொண்டு வரும்போதே அரை நிர்வாணத்தில் இருந்தாள். நனைந்த உடைகளை உலர வைக்கும் தருணம் போலும். பொதுவாகவே உடல் சார்ந்த என் பிரக்ஞைகள் ஆராயும் நோக்குக் கொண்டவை. உடல் மீதான கவர்ச்சி எனது மருத்துவ கல்விக்குப் பின் முற்றிலும் மாறிவிட்டது. அதன் நோய்த்தன்மைகள், மருத்துவச்சிக்கல்கள், நம் நாட்டின் மருத்துவத்தரம், பெண்களால் எளிதில் அனுபவிக்க முடியாத ஆரோக்கியம் என்று எனது புரிதல்கள் உடல் என்பதன் பாலிமை ஈர்ப்பை முற்றிலுமாகக் குலைத்துவிட்டன. பானுமதிக்கு என் இருப்பை அசைக்கும் நோக்கம் இல்லை என்பது அன்றைய நாள் முடிகையில் எனக்கு உறுதியானது. பானுமதியின் இயல்பே அப்படித்தான்.


இப்படித்தான் அவளுடைய உரையாடல் தொடங்கியது; ‘நிறைய ஆண்களோட நான் பழகிட்டேன். ஆனாலும் நான் விர்ஜின் தான். ஆம்பிளங்க, பொம்பிளங்க ஒடம்ப மதிக்கிறதுக்கு நாம இன்னும் கத்துக்கொடுக்கவே இல்ல. சமூகம் சொல்லித்தர்ற மாதிரி தான் அவங்க நம்ம ஒடம்புக்கிட்ட நடந்துக்கிறாங்க. மொத தொடுகையே அதுல பிரியம் இல்லாதத சொல்லும் போது எனக்கு எவ்வளவு தேவை இருந்தாலும் நான் அதுக்கு மேல சம்மதிக்கறதே இல்ல’. பெரும்பாலான பெண்கள் இப்படிப் பேசக் கூட வாய்ப்பில்லை தான். ஆனால் உடல் பற்றியும் அதனுடனான தனது மன ஓட்டம் பற்றியும் பானுமதியால் இயல்பாக உண்ணும் உணவைப் போலவே கண்ட காட்சியைப் போலவே பேசமுடியும். அன்று பகல் முழுக்க இரவு விடிய என்னுடன் பேசிக்கொண்டிருந்தாள். இத்தகைய நீண்ட உரையாடல் இரவைத் தின்றது இது தான் முதல் முறையென்று வேண்டும்.


அவள் ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி. அவ்வப்பொழுது இலக்கியங்களை வாசிப்பாள். அம்பையின் ‘வற்றும் ஏரியின் மீன்கள் வாசித்து விட்டு உடலற்ற நூலாக இருக்கிறது என்றாள். நான் அதை மறுத்தேன், ‘நாம் உடலற்றுத் தானே இருக்கிறோம், பானு என்றேன். ‘இல்லை, என் ஒடம்பப்ப் பத்தி எனக்கு நல்லா தெரியும். அதுக்குப் பசிக்கும்போது எப்படி சாப்பிடனும்னு நினைக்கிறேனோ காமத்தின் குரலுக்கும் காது கொடுக்கனும்னு நெனக்கிறேன். நெருங்கிற ஒவ்வொரு ஆம்பிளயும் தனிச்ச உடலோட தான் வராங்க. உடல்களுக்குப் பொதுத்தன்மங்கிறதே இல்லயோன்னு தோணுது. உடம்பப் பத்திய ஒரு நீள பயணமா தான் இந்த வாழ்க்கை. கொழந்தையிலிருந்து கிழவியாக வளர்றது வரைக்கும் ஒடம்போட இருக்குற ஒரு நீண்ட பயணம் என்று ஒரு விரிவுரையே நிகழ்த்தி விட்டாள். நான் அதை இன்னும் நுணுக்கமான விவாதத்திற்குக் கொண்டு செல்லத் தயாரானேன். மீண்டும் ஓர் இரவை முழுவதுமாய் விழுங்கும் விவாதமாக மாறி, ஒரே உடலின் இரு பக்க நியாயங்களைப் பற்றியதாக முடிந்தது. அம்பை எழுத்துக்குள் வைக்கும் உடலும் நவீனத்தின் ஒரு வடிவம் தான். பானு சொல்லும் உடலும் அதன் இன்னொரு பரிணாமம் தான்.



சென்ற வாரம் ஒரு நாள் இரவு ஒரு மணி இருக்கும். ‘நான் என் கன்னிமையை அனுபவிச்சுட்டேன் என்று போனில் கூவினாள். ‘அப்படின்னா..என்று அரைகுறைத் தூக்கத்தில் நான் வினவ, ‘நான் என் கன்னிமையை இழந்துட்டேன்னு சொன்னாத் தான் ஒங்களுக்குப் புரியுமா?என்று செல்லமாகக் கோபப்பட்டாள். ஒடம்புக்கான கனவு தான் இரவு போல. எனக்கு மகிழ்ச்சியாகத் தான் இருந்தது. அவளை நினைக்கும்போதெல்லாம் அருகே யாருமின்றியும் எனக்கு நானே சிரித்துக்கொள்வது வழக்கமாயிற்று. பானுமதிக்கு எப்பொழுதுமே உடல் ஒரு சவாலாகவும் அதைக் கையாளுவது ஒரு சாதனையாகவும் இருப்பது எனக்கு வியப்பாயில்லை.



குட்டி ரேவதி

அந்தத்தாய் ஒரு கொலை செய்தாள்




அந்தப் பெண்ணுக்கு முப்பது வயதுக்குக் குறைவாகத் தான் இருக்க வேண்டும். உடல் மெலிந்து இரத்த சோகையுடன் கண்களும் முகமும் வெளுத்து காணப்பட்டாள். நேற்று இரவு தான் தனது ஏழாவது குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறாள். இனி அவளால் ஓரடியும் எடுத்து வைக்க முடியாது என்னும் அளவிற்கு அவள் தரையில் கிடந்து இழுபட்ட நைந்த துணியைப் போல் இருந்தாள். அவள் கண்கள், கல் வீசினால் கேட்கமுடியாத கிணற்றின் ஆழத்தில் தளும்பும் நீர்மேட்டை ஒத்திருந்தன. முகவாய் சட்டென்று கண்டுணர முடியாத ஒரு மிருகத்தை ஒத்திருந்தது போலும் தோன்றியது. அவள் தன் வாயைத்திறந்து பேசுவதற்கான சக்தியை சேமிக்கவே இன்னும் ஒரு வாரம் எடுக்கும். அவளுக்குக் குடும்பக்கட்டுப்பாட்டு சிகிச்சை முறையை அளிப்பதென்றால் கூட அவளுக்கு நிறைய ஊட்டச்சத்தையும் ஓய்வையும் அளிக்க வேண்டியிருக்கும். அந்த இடைவெளிக்குள் மீண்டும் ஒரு குழந்தை உருவாகிவிடக் கூடாதே என்ற கவலையை நகைப்பாய் வெளிப்படுத்தினார் அந்த முதுநிலை மருத்துவர். ஆகவே மாறாக அவளின் கணவனுக்கு அந்தச் சிகிச்சையை அளிக்கும்படிக் கட்டளையிட்டார்.




நான்கு தொடர் ஆண் குழந்தைகளுக்குப் பின் மூன்றாவது பெண் குழந்தை நேற்றையது. இரண்டாவது பெண் குழந்தை பிறந்த மறு நாளே ஈரத்துணிகளை அந்தக் குழந்தையின் உடல் முழுவதும் அடுக்கடுக்காய் சுற்றி வைக்க அது வலிப்பு வந்து நுரை தள்ளி இறந்தது. நேற்று பிறந்த பெண் குழந்தை எந்த வித பணத்தொகையையும் பெற்றுக் கொள்ளாமல் ஒரு பணக்காரக்குடும்பத்திற்குத் தத்துக் கொடுக்கப்பட்டிருந்தது. சில வரிகளாலான ஒப்பந்தம் போதுமானதாயிருந்தது இருவர் தரப்பிலும். ஒரு நாள் கூட நிறைவெய்தாத அக்குழந்தை என்னவிதமான உலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும்? ஒவ்வொரு பிரசவத்திற்குப் பின்னும் மருத்துவர் அவளுக்குக் குடும்பக்கட்டுப்பாட்டை வலியுறுத்திய போது அவள் பிடிவாதமாக மறுத்திருக்கிறாள். அந்த நாட்களில் அவளின் கணவன் வேறு பெண்ணைத் தேடிப் போய்விட்டால்? கணவனும் அதையே ஆமோதித்தான். அவளால் முன்பைப் போல தனக்குத் தினமும் திருப்தி அளிக்க முடியாமல் போய்விட்டால்?



வறுமையும் அறியாமையும் ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றன. அந்தப் பெண் மீண்டும் மீண்டும் மயக்க நிலைக்குச் சென்று கொண்டிருந்தாள். அவளை விட்டு விலகி வந்தேன். சேலத்தின் கோடையினும் அந்தப் பெண்ணின் உடலில் படர்ந்திருந்த தாங்கவியலா வேதனையும் பலவீனமும் மரணத்துக்கு மிக அருகில் இருந்த அவளின் நினைவுகளும் கொதிப்பைத் தந்தன. மரணத்தை ஏந்தி இருக்கும் கோப்பை போல அவள் உடல் காட்சியாகியது. பின் வெளியே வந்தேன். மனோ தனது நண்பர்களுடன் காத்திருந்தான். பல கிலோமீட்டர் தூரம் நானும் அவனும் எந்தவித முனைப்பும் இன்றி கால்கள் ஓய நடந்தது சேலத்தின் மாலைத் தெருக்களை அலங்கரித்தது போல இருந்தது. மேற்கிலிருந்து எழும்பி வந்த கருநீலப் புகையைப் போன்ற மேகவிரவல் மழையாய் இறங்காமலேயே போயிற்று. இரவு இன்னும் அதிகமாய் வெக்கையாக இருக்கிறது. எந்தவொரு மரத்தின் ஒற்றையிலையும் மூச்சுவிடும் தன் அசைவைக் காட்டாமல் இறுக்கமாய் இருக்கிறது. முழு நிலவு மேகங்களுக்கிடையே வேகமாய் ஊர்கிறது, இவையெல்லாம் தனக்கு மிகவும் பழக்கம் தான் என்பதைப் போல. ஒருவேளை அந்தத் தாய் தன் வாழ்க்கையின் அவலம் அந்தக் குழந்தையின் வழியாய் பிரதிபலிப்பதை விரும்பாமல் தான் அதைக் கொலையைச் செய்திருப்பாளோ?




குட்டி ரேவதி

சரோஜா என்றொரு பெண்

சரோஜாவைப் பற்றி நிறைய எழுதலாம் என்றாலும் அவளைப் பற்றிய இந்த ஓர் அறிமுகமே போதுமானது. அவள் எனக்கு என்ன உறவு என்பது கூட முக்கியமில்லை. அவள் என் வயதொத்த ஒரு பெண் என்பது மட்டுமே அவளை அறிமுகப்படுத்தப் போதுமானது. சென்னையில் நானும் அவளும் தனியே சில வருடங்களைக் கழிப்பது என்று முடிவெடுத்தோம். நான் என் தொழில் நிமித்தமும் அவள் அவளின் கலை நிமித்தமும். அவள் ஒரு ரஷிய பாலே நடனக்காரி. ஐந்து வருடங்களுக்கு மேலாக அந்நடனத்தைக் கற்றுக் கொண்டதுடன் குழந்தைகளுக்கும் சிறுவர் சிறுமியருக்கும் சென்னையில் உள்ள ஒரு நடனப்பள்ளியில் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தாள். நடனத்தின் மீது அவளுக்கு இருந்த விருப்பும் ஈர்ப்பும் தீராதது என்பதை நான் அறிவேன்.


காலையில் அவள் எழுந்ததுமே பாவாடையை அள்ளி முழங்கால்களுக்குள் இடுக்கிக் கொண்டு நாற்காலியில் அமர்ந்து முந்திய நாள் வாங்கி வந்த ஆப்பிள் பழங்களைத் தின்னத் தொடங்குவாள். பல் துலக்குவது அன்றைய காலைக் கடனின் கடைசிப் பணியாக இருக்கும். சில ஆப்பிள்கள் உள்ளே இறங்கியதும் அன்று உடுத்த வேண்டிய ஆடைகளுக்கான தேர்வில் ஈடுபடுவாள். அதில் பீரோவில் இருக்கும் மொத்த துணியும் தரைக்கு வந்து அறையை நிரப்பியிருக்கும். பின் அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதற்குப் பொருத்தமான உள்ளாடைகளைத் தேடி எடுக்கும் போது பெரும்பாலும் அவை அழுக்காக இருப்பதில் ஆச்சரியமில்லை. அவற்றை சோப்பு நீரில் அலசி வீட்டின் பின்னாலிருக்கும் வாகை மரத்தின் கீழே கட்டப்பட்டிருக்கும் கொடியில் மிகுதியான வெயில் படும்படியாக உலரப் போட்டுவிட்டு வந்து டிவியின் முன்னமர்ந்து சில திரைப்படப் பாடல்களைக் கேட்கத் தொடங்குவாள். பார்ப்பாள். உற்சாகம் பீறிட்டு நடனமும் ஆடத் தொடங்குவாள். மற்றவரின் இருப்பு குறித்த பிரக்ஞையே அவளுக்குப் பெரும்பாலும் இருக்காது என்று தான் தோன்றும். அதற்குள் நான் புறப்பட்டு வெளியே வந்திருப்பேன்.


எனக்கு அவளைக் குறித்த கவலை மேலிட பத்து மணி வெயிலின் சாலையில் என் இரு சக்கர வண்டியினை ஓட்டத் தொடங்குவேன். நிறைய சம்பாதிப்பாள். எந்தப் பொறுப்பும் எடுத்துக் கொள்ள மாட்டாள். அவள் குடும்பத்திலிருந்து யாரேனும் தானே முன்வந்து அவளிடம் பேச முற்பட்டாலோ அவர்களுக்கு நிறைவளிக்கும் சில உற்சாகமான பதில்களை அளித்து விட்டு முடித்துக் கொள்வாள். இந்த உலகில் அவள் தனியாக வாழ்வதைப் போன்ற நிலையை முழுமையாக நிலைநிறுத்திக் கொள்பவள் போன்ற பிரமையும் மயக்கமும் அவளைச் சூழ்ந்திருக்கும். பின் அந்த நாளைய அலுவல்கள் என் கழுத்தை இறுக்க அவளை முற்றிலும் மறந்து போயிருப்பேன்.


வீட்டுக்கு களைப்புடனும் இரவு உணவுக்கு ஏதேனும் சமைக்க வேண்டுமென்ற திட்டத்துடனும் வாயிற் கதவைத் திறந்த ஒரு நாள் வரவேற்பறையில் ஐந்தாறு முயல்கள் ஒவ்வொன்றும் சில கேரட் துண்டுகளுடன் ஆங்காங்கே சிதறி ஓடின. நான் வீறிட்ட உணர்வில் இருந்தேன். என்ன நடந்திருக்கிறது என்று நானே யூகிப்பதற்கு சில நிமிடங்கள் எடுத்தன. சரோஜா மாலை நேரத்தில் வீட்டிற்கு அந்த முயல்களை வாங்கி வந்திருக்கிறாள். பசிக்குக் கொறிக்க கேரட் துண்டுகளையும் போட்டு விட்டு மீண்டும் வகுப்பெடுக்கப் போயிருப்பாள். அவள் வர இரவு பத்து மணிக்கு மேலாகும். அவள் வரும் வரை ஒன்றும் செய்ய ஓடாமல் அந்த முயல்குட்டிகளைப் பார்த்த வண்ணமே கழித்தேன். முயல் குட்டிகள் ஏற்படுத்தும் கவிச்சை அந்த அறையை நிறைத்திருந்தது. ஜன்னல் கதவுகளைத் திறக்கவும் பயமாக இருந்தது. ஏற்கெனவே வீட்டுச் சொந்தக்காரிக்கு எங்கள் மீது ஒரு ஜாக்கிரதை உணர்வும் தீவிரக் கண்காணிப்பும் இருந்தது. இரு பெண்கள் தனியே வாழ்வது அவளுக்கு எப்பொழுதுமே கேள்விக்குறியான விஷயமாகவும் சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் எங்களைத் துருவித் துருவிக் குடைந்து எங்கள் அன்றாடப் பணிகளை அறிந்து கொள்வதும் அந்த அம்மாவுக்கு கைவந்த கலையாக இருந்தது. சிறிது நேரம் என்னை உற்றுப் பார்த்த முயல்குட்டிகள் பின்பு ஏதோ அவற்றின் இடத்தில் நான் ஒண்ட வந்த்து போல என்னைப் பொருட்படுத்தாது கேரட்டைக் கொறித்துக் கொண்டும் ஒன்றையொன்று கொஞ்சிக்கொண்டும் இருந்தன. எனக்கு எரிச்சலாகவும் அசெளகரியமாகவும் இருந்தது. என் மனதிலிருந்து அவற்றின் நினைப்பை உதறி விட்டுப் பணியில் ஈடுபட முடியும் என்று தோன்றவில்லை. அன்றைய நாளின் பணிச்சுமை கூடியதாயும் இன்னும் முடியாததாயும் உணர்ந்தேன்.


இம்மாதிரியான வளர்ப்புப் பிராணிகளைப் பராமரிப்பதற்கான பக்குவம் எனக்கு எப்பொழுதுமே இருந்ததில்லை. நினைத்த பொழுது நினைத்த ஊருக்குக் கிளம்பிச் செல்லும் பழக்கம் இருந்ததுடன் நான் அப்படி வாழவே மிகவும் விருப்பமுடையவளாக இருந்தேன். இதற்கிடையில் என்னால் இம்மாதிரியான பிராணிகளை கவனிப்பதென்பதோ ஏன் ஒரு தொட்டிச் செடியை வளர்ப்பதென்பதோ கூட மிகவும் சிரம்மாமன விஷயமாக இருந்தது. சரோஜாவின் நிலை இன்னும் மோசம். காலை பத்து மணிக்குக் கிளம்பிச்சென்றாளானால் இரவு பத்து மணிக்கு மேல் தான் வருவாள். இந்நிலையில் எதற்கு இம்மாதிரி வேண்டாததையெல்லாம் தலையில் இழுத்துப் போட்டுக் கொள்கிறாள் என்று என் எரிச்சல் பொங்கியது.


நானும் அவளும் அதிகமாக உரையாடிக்கொள்ள நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தோம். சனி, ஞாயிறுகளில் கூட தோழிகளைப் பார்க்கப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு மாலையில் கிளம்பிப் போய் இரவில் நடுநிசியில் ஆட்டோவில் வந்து இறங்குவாள். அக்கறையின் பேரில் அவளிடம் ஏதாவது கேட்டால் கூட என்ன பதில் கிடைக்கும் என்பதை நான் அறிந்திருந்தேன். என்னை அவள் மதித்தாலும் அவள் விஷயங்களில் யார் மூக்கை நுழைப்பதையும் அவள் விரும்பியதே இல்லை.





ஒரு முறை செஞ்சிக்கோட்டைக்கு இருவரும் சுற்றுலா செல்லலாம் என்று கிளம்பிச் சென்றோம். போய்ச் சேரும் வரை பேருந்தில் தூங்கிக் கொண்டே வந்தாள். இறங்கியதுமே ஒரு ஹோட்டலைத் தேடி உணவை முடித்துக் கொண்டோம். பின் செஞ்சிக்கோட்டையின் அடிவாரத்தில் இருந்தப் பெரிய புளிய மரத்தினடியில் பாறைகளில் தலை சாய்த்து உறங்கிப் போனாள். அவள் தூக்கம் விழிக்கும் வரை நான் மரத்தினூடான வானத்தை அளந்து கொண்டிருந்தான். பின் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு எழுந்ததும் பசிக்கிறது என்றாள். உணவகம் சற்று சொலைவில் இருந்ததால் நடப்பதற்கு மாச்சப்பட்டுக் கொண்டு அங்கேயே அருகில் கிடைத்த மாங்காய்த் துண்டுகளை வாங்கிக் கடித்தாள்.


மென்று விழுங்கியவாறே, ‘காதலைப் பத்தி நீ என்ன நெனைக்கிற?’
‘யாரப்பத்தியாவது நெனக்குறதுன்னா நெனைக்கலாம். காதலைப் பத்தி என்ன நெனைக்குறது?’.
‘’கடிக்காத....என்ன சொல்லு?’ என்றாள்.
‘இன்னும் வரல எனக்கு. அதுக்கு நேரமே இல்லாம சந்தர்ப்பமே இல்லாம இருக்கே’
‘எனக்கு வந்துருச்சு போல இருக்கு’
‘யார் மேல?’
‘நேத்து நானும் அவரும் ரிஜிஸ்டர் பண்ணிக்கிட்டோம்’ என்றாள்.


எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. இதையெல்லாம் அறிந்து கொள்ளாமல் அல்லது அவளும் அதைப் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தது எனக்கு ஒரு வித ஏமாற்றத்தைத் தந்த்து.




நான் வீட்டு வாசலுக்கு வந்து வீட்டின் முன் நீளும் தெருவின் முனை வரை வந்து அவள் வருகிறாளா என்று காத்திருந்தேன். அந்தத் தெரு வெறிச்சோடி சில நாய்கள் ஆங்காங்கே நடுத்தெருவில் அயர்ந்து கிடந்தன. எனது அணக்கத்தில் என்னை நிமிர்ந்து பார்த்து விட்டு ’நீதானா?’ என்ற அர்த்தத்தில் மீண்டும் தரைக்கு தலையைக் கிடத்தின. அந்தத் தெருவில் எல்லோருக்கும் சரோஜா மிகவும் பிரசித்தம். எவ்வளவு தாமதமாக வந்தாலும் எந்த வீட்டின் உள்ளிருந்தோ குரல் கேட்கும், ‘என்ன சரோஜா? இப்பத் தான் வர்றியா? ஒரு வாய் சாப்பிட்டுப் போ?’, என்று. நாய்கள் வாலை ஆட்டி அவள் பின்னால் வரும். மிக நிச்சயமாய் ஒரு பாக்கெட் பிஸ்கெட் வாங்கி வருவாள் என்று அவை அறிந்திருக்கும். இன்னும் வரவில்லை. எனக்குக் கவலை மேலிட்டது. அந்தத் தெருவின் வளைவைக் கடந்து அடுத்த தெருவின் தொடக்கத்திற்கு வந்திருந்தேன். ‘மாம்பூவே, சிறு மைனாவே, மச்சானின் பச்சைக்கிளி’ என்று கொஞ்சம் அதிகமான குரலுடன் பாடிக்கொண்டே வந்தாள். இருட்டில் அவள் குரல் மட்டும் கேட்டதே அன்றி அடையாளம் தெரியவில்லை. பாடல் தொடர்ந்தது. மெல்ல குரல் அருகில் கேட்டது. அவள் கையில் ஒரு கூண்டு கிளியுடன் ஆடிக்கொண்டிருந்த்து. அதைப் பார்த்ததும் எனக்கு சிரிப்பு முட்டிக் கொண்டுவந்த்து.




தோன்றுவதையெல்லாம் செய்து பார்ப்பதில் அவளுக்கு நிகர் அவள் தான். அவை ஒரு பொழுதும் சாகசங்களாகத் தோன்றியதேயில்லை. அவள் சூழலுடன் ஒரு விதமான கிறக்கம் கசியும், உண்மை ஊற்றெடுக்கும் உறவை மட்டுமே தக்கவைத்துக் கொண்டிருந்தாள். அவளை யாருமே கடிந்து ஒரு வார்த்தைப் பேசமுடியாத அளவுக்கு பிரியத்தையும் அதற்கான நேர்மைகளையும் வைத்திருந்தாள். தனிமையுடனான இயற்கையின் சம்பந்தங்களையும் அவள் கற்றுத் தேர்ந்திருந்தாள். அது புறவயமான வெளிப்பாடாக இல்லாமல் அவளது ஆளுமையின் உடையாக மாறியிருந்தது. சமூகத்தின் சட்டைகளைக் கழற்றி விடுகிறாளோ என்று தோன்றும் அளவிற்கு அசாத்திய இருப்பாக அவள் வாழ்ந்து கொண்டிருந்தாள்.




திருமணத்திற்குப் பின் சில வருடங்கள் கழிந்து தோளில் குழந்தையுடன் கொட்டும் மழை, அவள் குழந்தையின் மீது போர்த்தியிருந்த துண்டை நனைத்திருந்ததுடன் என் வீட்டு வாயில் வந்து நின்றாள்.
‘ஒன்னோட கொஞ்ச நாள் வந்து தங்கிக்கலாமா?’ என்றாள்.


நான் பதில் சொல்லும் முன்பே என் கைகள் அவள் குழந்தையை வாங்கிக் கொள்ள நீண்டன. அவளையும் இந்த வாழ்க்கை பரிசோதனை செய்யத் தொடங்கிவிட்டது என்பது உறுதியாயிற்று.






குட்டி ரேவதி