நம் குரல்

361 டிகிரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
361 டிகிரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

361 டிகிரி இதழில் வெளியான என் கவிதைகள்



பொருள் ஊடகக் கவிதைகள்

1.  துப்பாக்கியின் இரும்புக்கால்கள்

அவர்கள் தம் துப்பாக்கியின் இரும்புக்கால்களால்
என் மீதங்களை எட்டி உதைத்து
இன்னும் என்னுயிர் மிஞ்சியிருக்கிறதோ
எனப் பரிசோதித்தப் பின்னும்
என் செவிகளில் அவர்கள் சொற்கள்
எதிரொலிக்கக் கேட்டேன்
கிணற்றில் விழுந்த கல் போல்
எங்கோ இருட்டுக்குள் துலங்கிக் கிடந்தது
ஏற்கெனவே மூளையைத் தாக்கியிருந்த ரவை
ஆமாம், சொற்களுக்கு வருவோம்!
எறிகற்கள் பூமி அதிர விழுந்தது போல
என் நனவிலியை உலுக்கி அடங்கின
அச்சொற்களின் திரட்சி
அவர்கள் இன்னுமொரு முறை
இரும்புக்குறிகளின் விசையழுத்தினால்
பீறிடும் ரவைகளைத்தாம் ஒத்திருந்தது
அகராதியின் அத்தனைச் சொற்களும்
அந்த இறுதிக்கணங்களில்தாம் உருவாகின்றன
என்றறிந்தேன்
அவை என் அற்புதமான உயிர் உறுப்புகளின் மீது
கவணெழுந்த கற்கள் போல் மோதி
அவை உயிர்தாங்கிக் கடந்து வந்த
எண்ணாயிரம் யோனிகளையும் அவை முகிழ்த்த
முலைகளையும்  நினைவுபடுத்தின
இன்னும் இப்பொழுதும் விழித்திருக்கும் நனவிலியை
அணைப்பதற்கு இன்னொரு ரவை அனுப்புங்கள்
என்று குரலெழுப்ப இயலாதபடிக்கு
எப்பொழுதோ என் உயிர் அடங்கியிருந்தது
தோழர்களே!
 




















2. பொத்தான்கள்

காதுகளின் துளைக்குள் பொருந்திய பொத்தான்கள்
ஒளி தெறிக்க மின்னுகின்றன
நீந்திய நிலையில் வடிவில் உறைந்து போன தங்கமீன்
சிகரெட்டுகளின் முன்முனைகளைப் போல கனல்கின்றன
எப்பொழுதில் பொத்தான் என்று அவன் கிள்ளி விளையாடும்
என்னுணர்ச்சி முலைக்காம்பாய் துருத்தியெழுகிறது
என்பதும் கண்டறியப்படாத அரசியல் பகடி
ஏதோ டிஸைனர் கணவான் பெண்ணின் முலைக்குமிழ்களை
ஆண் சட்டையின் மார்பில் பொத்தானாக்கி
அவளையே அணியச் செய்தான்
சட்டையின் பின்னே பூக்கத் தயாராயிருக்கும்
முலையின் மொக்குகளோ கூசிக்குறுகி
போலிமையின் வடுவாகிப் பொத்தான்களாயின
மது பகிரும் வேளையில் நீலத்தீயுடைய
அப்பெண்ணின் கண்கள் விலையுயர்ந்த வைரப்பொத்தான்களாய்
மங்கிய மின்சார ஒளி பரவிய அறையில் துலங்கின
சமையலறைப் பெண்கள் தம் பொத்தான்களை
கேஸ் ஸ்டவ் எரிய வைக்கும்
திருகுப்பொத்தான்களாக்கி  வைத்திருக்கின்றனர்
பஸ்ஸில்  ஏறிப்  பலவேலைக்குப் போகும் பெண்கள்
ஆயத்தப் பொத்தான்களை
ஆங்காங்கே மறைத்து வைத்திருக்கின்றனர்
உயிரோடு உயிர் இணைக்கும் கொப்பூழ் பொத்தானை உருவாக்க
தாயின் உடலிலிருந்து துண்டிக்கப்பட்டவளின் பொத்தான்
கிளைட்டோரிஸ் = பெண்முளையாகி இருக்கிறது
எவனொருவன் ஏது செய்தலுக்கும் வாகாய்
நான் என் பொத்தானை எங்கு வைத்திருக்கிறேன்
அவன் கண்டறிந்து சொன்னபோது
உடலின் துருத்தல்கள் எல்லாம் பொத்தான்களாய் எழுந்து நின்றன.












3. இசையடங்கிய ஏரி

செங்குருதி கசிந்து நதியாகா நாட்களில்
உடலுக்குள் விரிகிறது
இரத்தத்தின் ஏரி
உணர்ச்சிகளை பெருங்கயிற்றால் இறுகக்கட்டியதைப் போல
இரத்த நாளங்களில்  அதன் பேரிசைக்கோர்வை
அடங்கிப் போயிருக்கிறது
கூச்சல்கள் எனக்குமட்டுமாய்
மூலை முடுக்குகளில்  எலும்புகளின் கணுக்களில்
கடைக்கண்களில் வளைவு சுருண்ட இடுக்குகளில்
அலையடிக்காத கடலைப்போல முனகுகின்றன
சூன்யம் கவ்விய ஆகாயத்தை உடுத்திய
வேட்கையுற்ற மிருகமாய் அது
மூச்சடக்கிக் காத்திருக்கிறது 
திறந்து விடுகிறேன்  உடலை
செங்குதியின் பேராற்றை
சிறிய சிட்டுக்குருவிகள் பேராயிரம்
உடலைக் கிழித்துக்கொண்டு
பறந்து செல்கின்றன.
முழக்கத்தின் பேரதிர்வை கேட்டிலையோ எவரும்?
















  

4. கருப்பையின் சிறகுகள்

இரு புறமும் நீள விரிந்த இறக்கைகளுடன்
பூக்களை அலகில் ஏந்திப்பறந்த நிலையில் 
என் தாழிக்குள் வளர்ந்து வரும் அப்பறவை
உடலின் வீதியில்
சிறகடித்து உயரே எழுப்பும் பணி எனதானது
எழுந்து பறக்கையில்
கைகால்கள் விடைத்து நிற்க
வர்ணங்களின் புழுதியை எழுப்பும்
உடலெங்கும்
அதன் மண்டலம் எனைச் சூழ்ந்திருக்க
வானத்தைத் தன் நெடுஞ்சாலையாக்கி
விசையுற்ற அம்பைப் போல எனை இயக்கும்
மரங்களின் உச்சிகளில் அதன் சினைகளை
இறக்கும் போது நிலவு பிறந்து சிரிக்கும்
தேசங்களின் கனவுத் திரட்சிகளைக் கருக்கொண்ட
அதன் கூவல் நித்தம் நித்தம்
என் பருவகாலங்களை அலங்கரிக்கும்
நீலம் சூழ்ந்த அதன் கண்கள்
ஒரு மீனுக்குக் கடலைத் தந்தது.
 






குட்டி ரேவதி

நன்றி: 361 டிகிரி 

361 டிகிரி இலக்கியச்சிற்றிதழ் வெளியீட்டு விழா





கணையாழி, கல்குதிரை போன்ற இதழ்களின் புத்துருவாக்கத்தைத் தொடர்ந்து, 361 டிகிரி இதழ் உருவாக்கம் பெற்றிருக்கிறது. இவ்விதழின்  வெளியீட்டு விழா டிஸ்கவரி பேலஸ் புத்தகக்கடையில், இன்று மாலை நடைபெற்றது. இதழை, நரனும் நிலா ரசிகனும் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். உருவாக்கத்திற்கும், வடிவமைப்பிற்கும் அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. குறிப்பாக, கவிதைகளை நெருக்கித்தள்ளிப்போட்டு பக்கங்களை நிரப்பாமல் கவிதைகளுக்கு இடையே சுவாசிப்பதற்கும் இடைவெளிவிட்டிருக்கிறார்கள். நிறைய கவிதை ஆக்கங்கள் இடம்பெற்றிருப்பது இதழின் சிறப்பு. நேர்த்தியும் அழகும் மிக்கதொரு இதழாக வெளிவந்திருக்கிறது. அட்டைப்படங்களை ரோஹிணி மணி வரைந்திருக்கிறார். பார்வையை இழுக்கும் திரட்சியான கரித்துண்டால் வரைந்த ஓவியங்களாய் இருக்கின்றன. அவருடன் சில நிமிடங்கள் உரையாடுவதற்கான சந்தர்ப்பமும் கிடைத்தது. அது அவர் ஓவியங்களின் பின்னிருக்கும் அவரது சிந்தனைகளைத் தெளிவுபடுத்துவதாகவும் இருந்தது.



வெளியீட்டிற்குப் பின்பு கட்டுரைகளாகவும் உரைகளாகவும் கருத்துகள் வழங்கப்பட்டன. உரைகள் பெரும்பாலும் சிற்றிதழ்கள் பற்றியும் பெண் / ஆண் படைப்பாளிகளின் கருப்பொருள் பேதம் பற்றியும் இருந்தன. கவிதா முரளிதரன் தனது கருத்துகளை நிதானமானதொரு தொனியில் எழுதி வந்து வழங்கினார்.  அஜயன் பாலா, நிலவும் அரசியல் நெருக்கடிகளை இலக்கியவாதிகளின் படைப்புகளுடன் தொடர்புபடுத்திப் பேசினார். மற்றும் அய்யப்ப மாதவன்(இதழ் படைப்புகள் குறித்த விமர்சனம்), நேசமித்ரன்(இதழ் குறித்த திறனாய்வு), லக்ஷ்மி சரவணக்குமார் (சிற்றிதழ் பிடிவாதம் மீதான விமர்சனம்) ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.  







விழாவில் வலைப்பதிவர்களே பெரும்பாலும் கலந்து கொண்டது, சமூக வலைத் தொடர்புவடிவத்தின் தீவிரத்தை உணரத்தியது. இன்றும், சிற்றிதழுக்கான தேவை இருப்பதும், சிற்றிதழ் இயக்கம் இல்லாமல் போகையில் எழுத வருபவர்கள் தொடர்ந்து இயங்குவதற்கு வெளி இன்றி தனித்து விடப்படுவதும் குறித்து விழாவின் தொடக்கத்தில் நரன் உரையாற்றியதையும், மேற்குறிப்பிட்ட விஷயத்தையும் இணைத்துப் புரிந்து கொள்ளமுடிந்தது.  நிறைய படைப்பாளிகளின் ஆக்கங்களுடன் வருவது தான் இதழின் நோக்கம் என்பதற்கு நரன் அழுத்தம் கொடுத்தார். ”பெண் கவிஞர்” என்ற அடையாள வரம்புகள் அழிந்திருப்பதை இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுகையில் உணர்ந்தேன்.



முழுமையும் இச்சீரிய இதழ்கள், உருவாக்குபவர்களின் கருத்தாக்க வடிவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆக்கங்களுடனேயே உருவெடுக்கும். தொடர்ந்து வெளிவருகையில் அத்தகைய கருத்தாக்கத்தின் திசையை நோக்கியே பயணிக்கும். என்றாலும், 361 டிகிரி போன்ற இதழ்கள், தற்கால அரசியல் வெளியின் நுண்ணிய இடைவெளிகளையும் பேசும் இலக்கிய படைப்புகளுடன் வரவேண்டும் என்பது என் விருப்பம். இன்னும் தற்காலக்கவிதைகள், கவிதையியல் குறித்த தொடர் விவாதங்களுக்கான பக்கங்களையும் திறந்து வைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி.  இவ்விதழுக்கு எவரும் படைப்புகளை அனுப்பிவைக்கலாம் என்று 361 டிகிரி இலக்கியச் சிற்றிதழ் குழு கூறுகிறது. தொடர்புக்கு: 361degreelittlemagazine@gmail.com





விழாவின் புகைப்படங்களுக்கு: https://picasaweb.google.com/onthemove31/361Release?authkey=Gv1sRgCOeGvbf6irPdaw#





குட்டி ரேவதி

தலை










நிறுவன மரத்தின் மண்டையில் ஏறியமர்ந்து
ஓலைச்சீற்றம் கொண்டவர்கள்
குரலெடுத்துக் கரைந்தபோது
மதிய வெயிலின் விறகுக்கட்டைகள்
கீற்றுகளைச் சுள்ளென்று எரித்துக்கொண்டிருந்தன
மனிதச் சலனங்கள் அழிந்து
வெட்டவெளியெங்கும் கானல்வெளிக்காட்சி
மரத்தின் ஒற்றை ஓலை வீழ்தலையும்
பெரும் விபத்தாய்க் கருதி
அவை அழுது ஓய்ந்த அம்மதியத்தில்
வேறெந்த மரமும் தலை திருப்பவில்லை அத்தோப்பில்
உயரத்தில் இருந்து கரைந்தாலே உசத்தியென்று
பின் வந்து மானுடக் காகங்களும் கரைந்தன
கத்திக் கத்திக் கரைந்தன
தரையிலிருந்து எம்பி எழும்பிக் குதித்து
சொற்கள் வற்றக் கத்தின
மரங்களின் மீது ஏணி சாய்த்து ஏறியமர்ந்த
சம்பவத்தைக் கண்டிராதோர் எல்லோரும்
காகங்களாய் மாறிக் கரைந்தனர்
எச்சில் பண்டங்கள் இறைக்கப்பட்ட வீதிகள் நோக்கிக்
காகங்கள் விரைந்தெழுந்து பறந்த போது
ஓலைகளெல்லாம் அடர்ந்து வீழ்ந்து
மரத்தின் மண்டை தரையில் உருண்டது
முண்டமாய் மெய்யுருவம் கொண்டு
கொளுத்தும் வெயிலில்
வானோக்கி வீணே நின்றது மொட்டை மரம்
ஒற்றையாய்.




குட்டி ரேவதி
நன்றி: 361 டிகிரி இலக்கியச் சிற்றிதழ்