நம் குரல்

4 மாதங்கள் 3 வாரங்கள் 2 நாட்கள்


ருமேனிய திரைப்படம்4 மாதங்கள் 3 வாரங்கள் 2 நாட்கள் என்றொரு திரைப்படம். பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரே அறையில் வசிக்கும் இரு தோழியருக்கு இடையில் நடக்கும் கதை. கதை என்பது ஒரே நாளின் பகலில் தொடங்கி இரவில் முடிந்து விடுகிறது. கபிதாவின் கருவைக்கலைக்க அவளின் தோழியான ஒடிலியா ஒத்துழைப்பதும் அதற்காக நிறைய ஏற்பாடுகளைச் செய்வதுமென தொடங்குகிறது கதை. 1987 ன் ருமேனியாவில் கருக்கலைப்பு என்பது சட்ட விரோதமான செயல். அந்நிலையில் எவருக்கும் தெரியாமல் இந்த நடவடிக்கையில் இறங்கிய தோழியரைப் பதற்றமும் பயமும் தொற்றிக்கொள்கின்றன. கருக்கலைப்பு செய்வதற்கான தொகையையும் இவர்களால் சமாளிக்க இயலாமல் ஒடிலியா அவளின் காதலனிடம் கடன் வாங்குகிறாள். மேலும் அன்றைய ஒரு நாள் ஹோட்டலில் தங்குவதற்கான பொருள் தேவையையும் பணத்தேவையையும் மற்றவர்களிடமிருந்து பெறுகின்றனர். இவ்வாறான சட்டத்திற்குப் புறம்பாக கருக்கலைப்பு செய்யும் ஓர் ஆளையும் நியமித்துக் கொள்கின்றனர். அவன், கபிதா கருவுற்றிருக்கும் காலம் தோழிகள் கூறியது போல 3 மாதங்கள் இல்லை, 4 மாதங்கள் 3 வாரங்கள் 2 நாட்கள் என்ற உண்மையைக் கண்டறிகிறான். அந்நிலையில் கருக்கலைப்பு செய்வது அபாயகரமானது என்று பின்வாங்குகிறான். அவன் கேட்கும் தொகையைக் கொடுப்பதாகக் கூறி அவனைச் சமாதானம் செய்கின்றனர். பின் அவன் கருக்கலைப்பிற்கான ஏற்பாட்டில் இறங்குகிறான். மருந்தூட்டப்பட்ட சலாகை ஒன்றை அவளின் கருவாய்க்குள் செலுத்தி, கரு வெளிப்படும் உணர்வு ஏற்படும் வரை அசையக்கூடாது என்று கூறிவிட்டுச் செல்கிறான்.இதற்கிடையில் ஒடிலியா அவளது காதலனுடைய அம்மாவின் பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொள்வதாக உறுதியளித்திருக்கிறாள். ஆகவே கபிதாவை ஹோட்டல் அறையில் விட்டுவிட்டுச் செல்கிறாள். பிறந்த நாள் விழாவில் முழுமனதுடன் அவளால் கலந்துகொள்ள முடியவில்லை. அரைகுறை மனதுடன் ஈடுபடுகிறாள். மேலும் அந்த நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்கள் மருத்துவர்களாய் இருக்கின்றனர். அவர்களின் உரையாடல் வேறு ஒடிலியாவைத் துன்புறுத்துகிறது. அங்கிருந்து கபிதாவினைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறாள். இயலவில்லை. அவசரமாக ஹோட்டல் அறைக்குத் திரும்புகிறாள். அங்கு கபிதாவின் கரு வெளிப்பட்ட நிலையில் சுருண்டு படுத்திருக்கிறாள். பின் ஒடிலியா சிதைக்கப்பட்ட கருவை ஒரு துணியில் சுருட்டி எடுத்துக்கொண்டு தனது பையில் எடுத்துச் சென்று அப்புறப்படுத்துகிறாள். ஹோட்டலுக்குத் திரும்பும் ஒடிலியாவிடம் கபிதா கருவை என்ன செய்தாய் என்று கேட்கும்போது, ‘இனி நாம் அதைப் பற்றி எதுவுமே பேசிக்கொள்ளவேண்டாம் என்று கூறுவதுடன் படம் முடிகிறது.


இப்படம் ஒரு நேர்க்கோட்டுக்கதை. காமிராவைக் கையில் தூக்கிச் சுமந்து நகரும் தன்மையுடன் படம் பிடிக்கப்பட்ட காட்சியமைப்பு. எந்த வகையிலும் நேரடியாகத் தொனிக்காமல் அரசியலின் நுணுக்கமான சமூக ஊடாட்டங்களை விவரிக்கும் திரைக்கதை. நீள நீளக்காட்சிகள். இயல்பான உரையாடல். இதுவரையிலும் வேறு எந்தத் திரைப்படத்திலும் இத்தகைய உரையாடலைப் பார்த்ததில்லை, திரைக்கதையில் இணைத்தது இல்லை எனும் அளவிற்கு இயல்பான மிகை இல்லாத ரகசியமாகப் பதிவுசெய்யப்பட்டதைப் போன்ற உரையாடல்கள். நமது தமிழ்ப்படங்களில் என்றால் ‘வசனம்என்று டைட்டில் கார்டு போடுவோமே அது தான். சட்டத்திற்குப் புறம்பான ஆனால் மனித வாழ்விற்கு இயைபான ஒரு விஷயத்தை இரு பெண்கள் கையாள்வதில் உள்ள அச்சம் நிறைந்த பார்வையும் அவலத்தின் கடைநிலைக்கும் தம்மைக் கொண்டு செல்ல நேர்வதும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் கனிவும் கதையோடு நெய்யப்பட்டிருக்கிறது. மேலும் ஒடிலியா கபிதாவின் இடத்தில் தன்னை வைத்துப் பார்க்க நேர்வதும் அதற்கான மனித அறமும் தான் அவளை கபிதாவுக்கு ஆதரவாக இருக்கத் தூண்டுகிறது. இதை ஒடிலியா தனது காதலனுடான உரையாடலில் விவரிக்கிறாள். தான் கருவுற்றிருந்தால் அவன் என்ன செய்யக் கூடும் என்பதை விவாதமாக்குகிறாள்.


1987- ல் ருமேனிய கம்யூனிச கட்சியின் ஜனாதிபதியாக இருந்த நிகோலே செயுஸெஸ்குவின் ஆட்சியில் இருந்த அடக்குமுறையின் நுட்பமான பிரதிபலிப்பு தான் இப்படம் என்கிறார் இத்திரைப்படத்தின் இயக்குநர் கிறிஸ்டியன் முங்கியு. இந்தக் கதை யாரோ என்றோ இயக்குநரிடம் பகிர்ந்து கொண்ட ஒரு கதையின் இழை தான். மேலும் முடிவெடுக்கும் தருணங்களில் எல்லாம் மனிதர்கள் நடைமுறைக்கொத்த, தர்க்கப்பூர்வமான முடிவெடுப்பதில்லை என்பதையும் உச்சபட்சமாகவும் உடனடியாகவும் மனிதர்கள் என்ன செய்யக்கூடும் என்பதையும் மனதில் வைத்தே இக்கதை வடிவத்தைத் தேர்ந்தெடுத்தேன். இத்தகைய மனிதத்தன்மை தான் புனைவுக்கு வழிவகுக்கிறது என்கிறார். தீவிர கம்யூனிச அரசின் கீழ் செயல்பாட்டில் இருந்த கருக்கலைப்பு தடை என்பதன் விளைவுகள் நுட்பமில்லாமல் இருந்ததையும் அதே சமயம் அது சமூகத்தில் மறைமுகமான அச்சத்தை விளைவித்துக் கொண்டிருந்ததையும் கதையாக்க விழைந்திருக்கிறார். அது போலவே அவ்வாறான கருக்கலைப்பு இன்ன பிற சம்பந்தப்பட்ட விஷயங்களில் மனிதர்கள் அறம்சார்ந்த கேள்வியற்றவர்களாய் இருந்தது அதிகாரிகளிடமிருந்து தப்பிப்பதற்கு ஏதுவாக இருந்ததே அன்றி பிரச்சனைகள் தீர்க்கவில்லை. 2007 ம் ஆண்டின் கேன் திரைப்படவிழாவில், ‘தங்கப்பனைவிருதை வென்ற இப்படம் ருமேனிய சினிமாவின் புதிய அலை என எல்லா விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது. பார்வையாளர்களையும் திரைக்கதைக்கு உள்ளே இழுக்கும் நுட்பமான திரைக்கதை வடிவம் இவரது சிறப்புத்தன்மை எனப்படுகிறது. திரைப்படத்தின் கடைசிக்காட்சியில் ஒடிலியா தனது முகபாவனைகளுக்கிடையே பார்வையாளர்களை நோக்கித் திரும்புவதுடன் படம் முடிகிறது. அந்தக் கணத்தில் பார்வையாளர்கள் எல்லோருமே திரைக்கதைக்குள் வாரி உள்ளிழுக்கப்பட்டுவிடுகின்றனர். இது சினிமாவிற்கு முற்றிலும் புதிது.குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: